Thursday, April 9, 2009

கார்த்தாகோ

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு முதலில் உங்களிற்கு என் நன்றிகள். தோழர், எழுத்து எரிமலை ஜோஸ் சான் அவர்களின் காவியத் தொடரிற்கு அன்பர்களின் ஆதரவு பிரமிக்க வைக்கிறது. அனைத்துப் பதிவுகளிலும் நீங்கள் பதிந்து சென்ற கருத்துக்களிற்கான பதில் கருத்துக்களை, அப் பதிவுகளின் கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம். எம் அன்பு நண்பர்களின் காமிக்ஸ் வலைப் பூக்கள் பற்றி பார்ப்போம்.

சிறுவர் மலர் நாயகர்கள் குறித்து ஒர் சிறப்பான பதிவை இட்டிருக்கிறார் நண்பர் லக்கி லிமட். பரட்டைத் தலை ராசாவின் ஒர் பக்க கிறிஸ்மஸ் புடிங் சாகசம் அருமையாக உள்ளது.

நண்பர்களின் மனதில், அவர்களின் சிறு வயது ஞாபகங்களை மீண்டும் அலை அடிக்க வைத்திருக்கிறார் நண்பர் விஸ்வா.விளம்பரங்கள் மூலம் ஒர் காலப் பின்னோட்டம். அருமையான பதிவு . தஞ்சாவூர் குமரேசன் கேட்டிருக்கும் சந்தேகம் சூப்பரோ சூப்பர்.

மேத்தா காமிக்ஸில் வெளியான ரத்த பூதம் எனும் தொடர் பற்றியும், அதன் மூலங்கள் பற்றியும் தனக்கே உரிய பாணியில் இனிய பதிவொன்றினை சிறப்பாக இட்டிருக்கிறார் நண்பர் ரஃபிக், வழமை போன்றே நாளிற்கு நாள் பதிவில் படங்களும், தகவல்களும் அப்டேட் ஆகின்றன. அவர் ஒர் அப்டேட் அரசு.

வித்யார்த்தி மித்ரன் எனும் காமிக்ஸ் இதழில் வெளியான கானகக் காதலன் டார்சானின் ஒர் கதையினை சிறப்பான ஸ்கேன்களுடன் வெளியிட்டு இருக்கிறார் நண்பர் புலா சுலாகி. அந்த இதழ் ஒர் பொக்கிஷம் சந்தேகமேயில்லை.

சிறு வயது முதலே ஆழ் கடல் என் ஆர்வத்தை தூண்டுவதாகவே இருந்து வருகிறது. ஆழ்கடல் சம்பந்தமான கதைகள், விபரணங்கள், திரைப்படங்கள் என்பன என்னை எப்போதும் கவர்ந்திழுப்பவை. சிறு வயதில் நான் பார்த்த THE DEEP எனும் திரைப்படம் என் மனதில் சிறு ஞாபகமாய் இன்றும் இருக்கிறது, அதன் பின் என்னைக் கவர்ந்த திரைப்படம் ஜேம்ஸ் கமரொனின்THE ABYSS ஆகும். காப்டன் குஸ்டோவின் ஆழ்கடல் விபரணங்களை மறக்கத் தான் முடியுமா. அவர் குழுவில் சேர்ந்து கொள்ளக் கூட கனவு கண்டிருக்கிறேன்[ பள்ளி நாட்களில்]. எனவே இக் காமிக்ஸ் கதையை நான் ரசிப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. படித்து முடித்ததும் பதிவாகவும் நண்பர்களிற்கு வழங்கி விட்டேன். இனி கதைக்குள் செல்வோம்.1993. தென்பசுபிக், டொங்கா கடலடிக் குழி, அருங்குள்டா கடலடிப்பாறைத் திட்டுக்கள்.

சமுத்திரத்தின் ஆழத்தில் ராட்சதர்களாய் நிற்கும் கற்பாறை மலைத்திட்டுக்களின் மேல், துளையிடும் எந்திரத்தின் துணையுடன், பாறைகளில் துளையிட்டுக் கொண்டிருக்கிறது கார்த்தாகோ பெற்றோலியக் கம்பனியின் சண்டமரியா அணி. சமுத்திரத்தின் ஆழத்தின் இருளில், எந்திரத்திலும், அணியின் 3 உறுப்பினர்களின் தலைக்கவசங்களிலும் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளில் இருந்து நீந்தும் ஒளி, அவர்களை கடலடி மின்மினிகளாக ஒளிரச்செய்கின்றது. இடையிடையே தம் அழகு காட்டி நீந்திச் செல்கின்றன சில மீன் கூட்டங்கள். மின்சார துண்டிப்பினால் துளை போடும் எந்திரம் செயலற்று விட அதனைச் சரி பார்க்கிறது மூவரணி. அணியின் தலைவன் நைட், கட்டுப்பாட்டு அறையிலிருந்து , சமுத்திரத்தின் ஆழத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை, அவர்களின் தலைக்கவசங்களினுள் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கருவி வழியாக தொடர்பு கொள்கிறான். வேலை தாமதமாகிறது எனவும், 25 மீற்றர் ஆழம் ஒர் பாறையில் தோண்டி முடித்தாலும் இன்னமும் அவர்கள் செய்ய வேண்டிய 3 மணி நேர வேலையுடன் சேர்த்துக் கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் படியாகவும் கேட்டுக் கொள்கிறான். கார்த்தாகோ கம்பனியைத் திட்டியபடியே நைட்டின் வேண்டுகோளிற்கு சம்மதிக்கிறார்கள் சண்டமரியா அணியினர். பாறை கடினமாக இருப்பதால் துளையிடும் எந்திரத்தினை அதன் முழு விசையில் முடுக்கி விடச் சொல்கிறான் நைட். இதனை அடுத்து துளையிடும் எந்திரத்தின் வேகம் நிமிடத்திற்கு 20000 சுற்றுகளாக உயர்த்தப்படுகிறது. எந்திரத்தின் வேகம் அதிகரிக்க, துளையிடப்படும் பாறையிலிருந்து கிளம்பும் துகள்கள் மூவரணியைச் சூழ்கிறது. தீடிரென ஏற்பட்ட ஒர் பெரிய அதிர்வுடன் கூடிய அதிர்ச்சியால் எந்திரத்தின் துளையிடும் பகுதியின் அருகில் இயங்கிக் கொண்டிருந்த இருவரும் சற்று விலக்கி தள்ளப்பட, எந்திரத்தினை இயக்குபவன் அதனை நிறுத்திவிடுகிறான். துளையிடும் முனைப்பகுதி சேதமாகி விட்டதா என்பதனை அறியவேண்டி அதனை வெளியில் எடுத்துப் பரிசோதிக்கும் அணி, துளையிடும் முனைப்பகுதி எவ்வித சேதமுமின்றி இருப்பதைக் காண்கிறார்கள். துளையிடும் எந்திரத்தின் முனை கடினமானப் பாறையின் பகுதியைத் தாண்டி ஒர் வெளியில் சுழன்றதால் அதிர்ச்சியும், ஆட்டமும் ஏற்பட்டிருக்கலாம் என நைட் கருத்து தெரிவிக்கிறான். 25 மீற்றர் ஆழம் தோண்டப்பட்ட பாறையினுள் இறங்கி எந்திரத்தின் முனை முடிவடைந்த இடத்தைப் பார்த்து விடுவது என தீர்மானித்து, பாறையினுள் கீழே இறங்க ஆரம்பிக்கிறது சண்டமரியா அணி. துளையிடும் முனை முடிவடைந்த இடத்தை நெருங்கும் அவர்கள் முன்னால் விரிகிறது ஒர் இருண்ட கடலடிக் குகை. குகையின் இருளில் அணியினரிற்கு கண்களில் எதுவும் தெரியவில்லை என்பதால் குகையின் பரிமாணத்தை அறிய வேண்டி ஒளிக்குண்டு ஒன்றை மேல் நோக்கி சுடுகிறான் ஒருவன். அந்த ஒளிக் குண்டு 100மீற்றர் உயரம் மேல் நோக்கி சென்றும் குகையின் மேற்பகுதி கண்ணிற்கு தெரியவில்லை என்பதினால் குகையின் அளவு மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதனை ஊகிக்கிறார்கள் அணியினர். மேலிருந்து கீழே விழும் ஒளிக்குண்டின் பிரகாசத்தில் குகையின் அடிப்பகுதியானது ஒரு பத்து மீற்றர்களிற்குள் இருக்ககூடும் எனவும் கணிக்கும் அணியினர், குகையின் நீளம் எவ்வளவாக இருக்கும் என்பதை அறிய வேண்டி குகையினுள் நீந்த ஆரம்பிக்கிறார்கள், சிறிது தூரம் நீந்திய பின் அவர்களின் முன்னால் முழு வெண்மையான ஒர் சிறிய மீன் நீந்திச் செல்கிறது. அம்மீனைப் பிடிப்பதற்காக தன் கரங்களை அதன் அருகே மெதுவாக கொண்டு செல்கிறான் ஒருவன். கண்ணிமைப்பதிலும் குறைவான நேரத்தில் அவன் உடல் மறைந்து விட, துண்டிக்கப்பட்ட கரம் ரத்தம் கசிய குகையின் அடித்தளத்தில் விழுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியில் விறைத்துப் போய்விடும் எஞ்சியுள்ள இருவரின் பின்னாலும் இருளாகப் படர்கிறது ஒர் பிரம்மாண்டமான உருவம். அதன் பற்களின் கூர்மைகளிற்கிடையில் சதையும், ரத்தமும் கசிந்து கொண்டிருக்கிறது. குகை நீரில் குமிழிகளும், ரத்தமும் கலக்க ஆரம்பிக்கின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று குகையின் தரையை வந்தடைகிறது. வெள்ளை மீன் தூரத்தில் ஒடி மறைகின்றது. சிலிண்டரிலிருந்து வெளியேறும் குமிழ்கள் தோண்டப்பட்டுள்ள துளையை நோக்கி மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

2007, பிரான்ஸ், சரான் அணைக்கட்டு.

பனி மூடிய சிகரங்களைக் கொண்ட மலைகள், சுவர்கள் என நிற்க, விரிந்து கிடக்கிறது அவிரொன் ஏரி. அவிரொன் ஏரியின் ஆழத்தில், ஒர் சிறிய நீர்முழ்கியின் உதவியுடன் ஆய்வை மேற்கொண்டு விட்டு, நீரை விட்டு வெளியேறும் கிம் மகிழ்சியால் துள்ளுகிறாள். தன் துணைவன் மார்ட்டினை தழுவிக் கொள்ளுகிறாள். காப்டன் பெர்ட்ராண்ட் கூறியது சரியே எனக் கூறும் கிம், ஏரியின் உயிர்ச்சூழல் ஒர் அதிசயம் என்கிறாள். இனங்களின் கூர்ப்பு வீதம் உயர்வாக இருக்கும் என பெர்ட்ராண்ட் கூறிய போது, அவனை ஒர் பைத்தியம் என பிறர் எள்ளி நகையாடியதையும் நினைவு கூர்கிறாள். ஏரியின் ஆழத்தின் பலமான நீரோட்டம் தங்களை நிரந்தரமாக ஏரியின் அடியிலேயே புதைத்திருக்கும் என்கிறான் மார்ட்டின். ஒரு மீற்றர் நீளத்திற்கு வளர்ச்சி அடந்துள்ள நன்னீர் சிங்க இறால்கள் [CrayFish], மூன்றரை மீற்றர் வரை நீளமான ஊளா மீன்கள்[Pike] என ஏரியில் அசாத்திய வளர்ச்சி கண்டுள்ள உயிரினங்கள் பற்றி வியக்கும் கிம்மிடம், தாங்கள் இவ்வகையான ஆய்வுகளினால் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இயங்குவதாகவும், அப்படி ஒர் தியாகத்திற்கு இத்தொழில் தகுதியானதா என தனக்குஒர் ஐயம் உண்டு எனவும் தெரிவிக்கிறான் மார்ட்டின். இவ்வாறாக உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் தீடிரென கிம்மிற்கு தன் மகள் லூ பற்றி ஞாபகம் வர அவளைத் தேட ஆரம்பிக்கிறாள். லூ ஏரிக்கரையினருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக கிம்முடன் பணியாற்றும் லொக் தெரிவிக்கிறான். ஏரிக்கரையை நோக்கி ஓடும் கிம் , லூ ஏரி நீரிலிருந்து வெளியேறுவதைக் கண்டு கொள்கிறாள். ஒடிச்சென்று அவளைத் தன் கரங்களில் அணைத்துக் கொள்ளும் கிம் ஏரியின் அபாயங்கள் பற்றி லூவிற்கு எச்சரிக்கிறாள். மறுபடியும் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறி அவளைத் தழுவிக் கொள்கிறாள். லூ, கிம்ம்மிடம் தான் ஏரி நீரில் மூழ்கிய போது ராட்சத ஊளா மீன்களைக் கண்டதாகத் தெரிவிக்கிறாள். இதனைக் கேட்கும் மார்ட்டின் திகைத்துப் போகிறான். கிம்மும், அவனும் நீரில் மூழ்கியபோது அவர்கள் கண்களில் தென்பட்ட முதல் ஊளா, ஏரியின் ஐம்பது மீற்றர் ஆழத்தில் காணப்பட்டது என்பதனைக் கூறி வியக்கும் அவன், லூ ஊளா மீன்கள் பற்றி தெரிந்து கொண்டதையிட்டு ஆச்சர்யமும், திகைப்பும் கொள்கிறான். அப்போது ஏரியின் அமைதியைக் கிழித்துக் கொண்டுஅவர்கள் காதுகளில் விழும் மோட்டார்களின் சத்தத்தினால் வியப்புறுகிறது கிம் குழு. அவர்கள் இருந்த பகுதி நோக்கி சீறி வருகின்றன சில பனிச்சறுக்கு மோட்டார்கள். ஓட்டத்தை நிறுத்திய மோட்டார் ஒன்றிலிருந்து இறங்குகிறான் ஃபால்கோ. தான் அடோம் அமைப்பைச் சேர்ந்தவன் எனவும், கிம் குழுவினரின் ஆர்வத்தினை தூண்டக்கூடிய விடயம் ஒன்று தன்னிடம் இருப்பதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் அவன்.

அடோம், க்ரீன் பீஸின் ஒர் ரகசியக் கிளை. தனி நபர்களிடமிருந்தும் எங்களிற்கு நிதி கிடைக்கப் பெறுகிறது. களத்தில் நேரடியாக நடவடிக்கைகளில் இறங்கும் எங்கள் செயல்கள் பொதுமக்களின் பார்வையில் நல்ல அபிப்பிராயங்களை பெறுவது இல்லை. ஆனால் நாங்கள் அரசுகளிற்கு எதிராகவும், பல தொழில் நிறுவனங்களிற்கு எதிராகவும், நாம் வாழும் பூமியை மேலும் அழிவிலிருந்து காப்பாற்ற போராட வேண்டியிருக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் கிம் குழுவினரிற்கு அடோம் குறித்து சுருக்கமான விளக்கம் தருகிறான் ஃபால்கோ. அடோமிற்கும் தனக்கும் எவ் வகையில் தொடர்பு உண்டு என கேட்கும் கிம்மிடம் அவள் கணணியைத் திறக்கச் சொல்கிறான். கணணியின், உயிர்பெற்ற திரையில் தன் வாயை அகலமாகத் திறந்தபடி உள்ள ஒர் ராட்சத சுறாவின் படம் தெரிகிறது. தன் கணணியிலுள்ள ஒர் மென்பொருளின் உதவியுடன், சுறாவின் தாடையின் அகலத்தினைக் கொண்டு , சுறாவின் நீளத்தினைக் கணிக்கிறாள் கிம். அது 22 மீற்றர் நீளமுடைய சுறா என்பதினை அறியும் போது அதனை நம்ப முடியாதவளாக, கடலில் உயிர் வாழக் கூடிய எந்த சுறா இனமும் இவ் வளர்த்தியை எட்ட முடியாது என்கிறாள்.

அவளிற்கு பதிலளிக்கும் ஃபால்கோ, கார்த்தாகோ பெட்ரோலியக் கம்பனியில் பணியாற்றிய அடோமின் ஒற்றர்களால் கம்பனியின் ரகசிய ஆவணங்களிலிருந்து திருடப்பட்டது அந்த போட்டோ. 1993ல் அப் போட்டோ எடுக்கப்பட்டது, 14 வருடங்களிற்கு மேலாக கார்த்தாகோ முன்வரலாற்றுக்[Prehistoric] காலத்தை சேர்ந்த ஒர் ஆழ்கடலடிக் குகையின் இருப்பை உலகின் கண்களில் இருந்து மறைத்து வருகிறது. அக்கடலடிக் குகையினுள் எடுக்கப்பட்டதே இந்த ராட்சத சுறாவின் போட்டோ. கார்த்தாகோவின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. கடந்த இருபது வருட காலமாக அதன் பங்குகளின் விலை இறங்கு முகமாகவே உள்ளது. இந்நிலையில் முன்வரலாற்றுக் கடலடிக் குகை காணப்படும் செடெனா பெட்ரோலிய தளத்தையும் கார்த்தாகோ இயக்க முடியாது போனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என விளக்குகிறான்.

பற்களின் தன்மையையும், சுறாவின் அளவையும் வைத்துப் பார்க்கையில் வெள்ளைச் சுறாவின் மூதாதையான MEGALODON வகையை சேர்ந்ததாக ராட்சத சுறா இருக்ககூடும் எனவும், 5.3 மில்லியன் வருடங்களின் முன்பாக ஏற்பட்ட சமுத்திரங்களின் வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக உருவான பனி ஊழிக் காலகட்ட பகுதியில் அவ்வினம் முற்றாக அழிந்து போனதாகவும் கூறுகிறாள் கிம். மெகாலோடொன்கள் அழிவு குறித்த இத்தகவல் பிழையானது எனவும், பதினைந்து வருடங்களிற்கு மேலாக தங்களிடம் அதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கிறான் ஃபால்கோ. ஜுராவில் [JURA] 1991ல் கண்டுபிடிக்கப்பட்ட பனி ஊழிக்கால மம்மி ஒன்றின் மீதிருந்து எடுக்கப்பட்ட மெகாலோடொனின் பல்லில் நிகழ்த்தப்பட்ட கார்பன்14 பகுப்பாய்வு தரும் முடிவுகளை பார்க்க சொல்கிறான். அம்முடிவுகளைப் பார்வையிடும் கிம், அந்தப் பல் 1.8 மில்லியன் வருடங்கள் வயதுடையது எனக்கண்டு ஆச்சரியப்படுகிறாள். மம்மியும், மெகாலோடொனின் பல்லும் தற்போது ஆஸ்திரியாவைச் சேர்ந்த செல்வந்தன் கார்பாட் கிழவனின் மாளிகையில் உள்ளது எனத் தெரிவிக்கிறான் ஃபால்கோ. அருங்குள்டா பாறைத்திட்டு வலயத்தில், முன் வரலாற்றுக் குகையில் யாரும் இனி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாதவாறு கார்த்தாகோ அப்பிரதேசத்தினைக் கண்காணிக்கிறது. ஆனால் இக்குகை தனிமைப்பட்டுவிடவில்லை, இக்குகையுடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய வேறு சில ஆழ்கடல் குகைகள் உள்ளன. ஒர் சிறிய நீர் மூழ்கி, மற்றும் ஒர் நீரில் மூழ்குபவர்கள் அணி எங்களிற்காக போர்த்துனா எரிமலைத்தீவில் காத்திருக்கிறது என்கிறான் ஃபால்கோ.

கார்பாட் மாளிகை, ருமேனியா.
மலைகளின் உச்சியில், கழுகுக் கூடொன்றைப் போல் எழுந்து நிற்கிறது அம்மாளிகை. மாளிகையின் உள்ளே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆதிகால விலங்குகளின் எலும்புருவங்களை பார்வையிட்டவாறே நடந்து செல்கிறான் லண்டன் டொனவான். டொனவான் தாமதமாக வந்ததாக சற்று விசனப்படும் கார்பாட் கிழவன், ஒர் கண்ணாடிப் பெட்டியினுள், தானியங்கி சக்கர நாற்காலி வண்டி ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான். அவனால் நடக்க முடியாது என்பது தெளிவாகிறது. அவன் மூக்கின் ஒர் துவாரத்தில் ஒர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. கிழவனிற்கு வயது அதிகம் தான். இருந்தாலும் கிழவன் கடலின் பெருமை பற்றி உற்சாகமாக பேசுகிறான். "டொனவான், காலம் தோன்றிய காலம் முதல் மனிதன் சமுத்திரங்களின் ஆழத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன என்பதை அறிய ஆவலாயிருக்கிறான் சமுத்திரங்களின் ஆழத்தின் 5% மட்டுமே அவனால் ஆராயப்படமுடிகிறது. ஒவ்வொர் பத்து வருடத்திலும் இப்பகுதியில் நாம் இதுவரை அறிந்திராத உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன, எனவே மிகுதியுள்ள 95%ல் நாம் என்னென்ன அதிசயங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை சற்று எண்ணிப்பார். கடல் பிரம்மாண்டமானது. மனித குலத்திற்கு அது பிரம்மாண்டமானது. தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டால் கூட கடலின் ஒர் சிறிய பகுதியையே அவர்களால் ஆராய முடியும். பூமியில் உள்ள காடுகள் போலவே, கடலிலும் உண்மைகள், விஞ்ஞானக் கதாசிரியர்கள் கற்பனையாக எழுதியுள்ளதை விட ஆச்சர்யத்தை தருவதாக அமையும் ". கிழவனின் இயற்கை வரலாற்று உரைக்கு நன்றி தெரிவிக்கும் டொனவான், கிழவன் தன்னை மாளிகைக்கு வரவழைத்த காரணத்தினைக் கேட்கிறான். டொனவான் தனக்காக ஒர் மெகாலோடொனைப் பிடித்து தர வேண்டும் என்கிறான் கிழவன்.

போர்த்துனா எரிமலைத்தீவை வந்தடைகிறது கிம்+ஃபால்கோ குழு. பிரான்சுவா தூர்னோ எனும் புவியியலாளன் எரிமலைத்தீவுகளின் தோற்றம் பற்றியும், போர்த்துனா தீவின் கடலின் ஆழத்திலுள்ள குகைகளிற்கும், கார்த்தாகோவின் சண்டமரியா அணியினர் கண்டுபிடித்த குகைக்குமிடையில் தொடர்பு இருப்பதையும் விளக்குகிறான். எனவே பெரும்பாலான உயிரினங்கள், குறிப்பாக ராட்சத உயிரினங்கள் போர்த்துனா தீவின் கடல்நீரின் ஆழத்தில் வாழக்கூடிய சாத்தியங்களையும் விபரிக்கிறான். தாங்கள் நீரில் மூழ்கித்தேட வேண்டியது மெகாலோடொன்களையா என வினவுகிறாள் கிம்.
ஆம் எனப் பதிலளிக்கிறான் ஃபால்கோ.

சிட்னியில் அமைந்துள்ள கார்த்தாகோவின் தலைமையகத்தில் , கம்பனியின் முக்கிய பங்குதாரர்களின் அவசரக்கூட்டம் ஒன்றைக் கூட்டுகிறான் அதன் இயக்குனனான டக்ளஸ். அடோம் அமைப்பு பற்றி அவர்களிடம் விளக்கும் அவன், சுறாவின் போட்டோ மற்றும் கடலடிக்குகையின் இருப்பு பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்தால் செடெனா தளத்தை இயக்க முடியாது போகும் எனவும், இதனால் கம்பனிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவிக்கிறான். அடோமை ஒழித்துக்கட்ட தான் சில சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் கூறும் டக்ளசின் முடிவுக்கு பங்குதாரர்கள் தங்கள் சம்மதத்தினை தருகிறார்கள்.

ரஷ்யாவின் லப்டெவ் கடலில் நீண்ட பயணத்திற்கு தயாரான நிலையிலுள்ள நீர்மூழ்கியில் தன் சக்கர நாற்காலியுடன் நுழைகிறான் கார்பாட் கிழவன். அவனுடன் விரைவில் இணைந்து கொள்வதாகக் கூறி, காமாண்டோ வீரர்களுடன் தனக்காக காத்து நிற்கும் ஹெலிகாப்டரில் ஏறுகிறான் டொனவான்.

போர்துனா தீவின் கடல்நீரின் ஆழத்தினுள்ளே ஓளியைப் பாய்ச்சியவாறே சென்று கொண்டிருக்கிறது கிம், ஃபால்கோ குழுவினரின் சிறிய நீர் மூழ்கி. 300 மீற்றர் ஆழத்தில் நீர்மூழ்கியின் ஒர் பாட்டரி செயலிழந்துவிட, சிறிது தடுமாறுகிறது நீர்மூழ்கி. தன் திறமையால் நீர்மூழ்கியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான் கசின்ஸ்கி. 550 மீற்றர் ஆழத்தில் கடலடி மலைப்பாறைகள் அருகே பயணிக்கிறது நீர்மூழ்கி. எந்தவோரு புதிய உயிரினமும் அவர்கள் கண்களிற்கு தட்டுப்படவில்லை. நீர்மூழ்கியின் வட்டமான கண்ணாடி வழி வெளியே பார்கும் கிம், அங்கு காணப்படும் கடற்பஞ்சு வகைகளின் அளவும், நிறங்களும் வழமைக்கு மாறானவை எனத்தெரிவிக்கிறாள். தாங்கள் சரியான பாதையிலேயே சென்று கொண்டிருப்பதாகக் கூறி தன் அணியினை ஊக்கப்படுத்துகிறாள். சிறிது நேரத்தில் இரண்டாகப் பிளந்த ஒர் கடலடி எரிமலையின் வாய்ப்பகுதியினூடாக பயணிக்கிறது நீர்மூழ்கி. கண்ணாடி வழி வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் கிம்மின் கண்கள் ஆச்சர்யத்தாலும், திகிலாலும் விரிகிறது. நீர் முழ்கியை நோக்கி வேகமாக, வெகுவேகமாக நீந்தி வந்து கொண்டிருக்கிறது ஒர் ராட்சத உருவம்...

பிறகு நடந்தது என்ன என்பது விறு விறு விறு.... CARTHAGO எனும் இவ்வால்பம் 2007ல் வெளியானது. இக் கதைத் தொடரில் மொத்தமாக எட்டு ஆல்பங்கள் வெளியாக உள்ளது. 2009 பிப்ரவரியில் இதன் இரண்டாவது ஆல்பம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

கி.மு க்கு 24 மில்லியன் வருடங்கள் முன்பாக சமுத்திரத்தின் ஆழத்தில், திமிங்கலங்களை மெகாலோடொன் ஒன்று வேட்டையாடும் ஆரம்பக் காட்சி முதல். 2007ல் பிரான்சின் மேற்குகரை கடல் ஓரங்களில் கூட்டமாக கரை ஒதுங்கி மரணமடையும் திமிங்கலங்கள் வரை விறுவிறுப்பான தகவல்களையும்,வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் மர்மங்களையும் உள்ளடக்கி இருக்கிறது இந்த சூழலியல் த்ரில்லர்.

காப்டன் பெர்ட்டராண்ட் உலகிற்கு தெரியாது மறைத்து வைத்துள்ள ரகசியம், சிறுமி லூவில் புதைந்துள்ள ஒர் மர்மம், என்ன காரணத்திற்காக அடோமும் ,கார்பாட்டும் மெகாலோடொனைத் தேடுகிறார்கள், ஆஸ்திரேலிய ஆதி குடிகள் உலகத்தின் முடிவை எதிர்பார்ப்பது ஏன், இக்கண்டுபிடிப்பால் மனித குலத்திற்கு ஏற்படப்போகும் விளைவுகள் என்ன, இவ்வகையான கேள்விகளிற்கு இனி வரும் ஆல்பங்களே விடை தரும் என்கையில் இக்கதையின் தொடர்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு பற்றி ரசிகர்களிற்கு கூறத்தேவையில்லை.

மர்ம முடிச்சுக்கள், மற்றும் சுவையான தகவல்கள் தெளிவான கதைசொல்லல் என விறுவிறுப்பான கதையை தந்திருப்பவர் CHRISTOPHE BEC.1969ல் பிரான்சின் ரொடெஸ் எனும் ஊரில் பிறந்தவர். 11 வயதிலேயே விளையாட்டாக 46 பக்க ஆல்பங்களை உருவாக்கியவர். ஜான் ஜிரோட்டின் ஓவியப் பாணியால் உந்தப்பட்டவர். ஆரம்பத்தில் பல கதைகளிற்கு சித்திரக்காரராகப் பணியாற்றியவர். சேவியர் டாரிசன் கதை எழுத இவர் சித்திரம் வரைந்தSANCTUAIRE எனும் ஆல்பம் வெற்றிக்கதவை இவரிற்கு சலாம் போட்டு திறந்து விட்டது. அக்கதையில் சில அமெரிக்க நடிகர்களின் சாயலில் கதையின் முக்கிய பாத்திரங்களை பெக் வரைந்திருப்பார். இக் கதை மூன்று ஆல்பங்களாக வெளியாகியது. முதலாவது ஆல்பம் இதுவரை 10 பதிப்புக்கள் கண்டு விட்டது. இக்கதையின் மொத்த பிரதிகளின் விற்பனை 150 000 தை தாண்டி சாதனை படைத்தது. DC காமிக்ஸ் SANCTUM எனும் பெயரில் இக்கதையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இக்கதையின் முடிவு எனக்கு திருப்தி தராதது ஆகும்.சுட்டிகளைப் பயன்படுத்தி பெக்கின் சித்திரங்களை தவறாது பாருங்கள்.பெக் தன் முதல் கதையை 2004ல், டிஸ்னியில் பணியாற்றிய இத்தாலிய சித்திரக்காரரான PAOLO MOTTURA சித்திரங்களினை வரைய, CAREME எனும் பெயரில் வெளியிட்டார். இன்று ஒர் சுறுசுறுப்பான காமிக்ஸ் கலைஞராக தன் வாழ்கையை கொண்டு செல்கிறார் பெக்.

ஆல்பத்தின் பக்கங்கள் முழுவதிலும் எங்களை வியக்க வைக்கும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருப்பவர் ERIC HENNINOT. கடலடிக் காட்சிகளிலும், ராட்சத விலங்குகள் தோன்றும் காட்சிகளிலும், குறிப்பாக பிளவுண்ட எரிமலையின் வாயினூடாக நீர்மூழ்கி செல்லும் காட்சியிலும் அந்தந்த தருணங்களில் எம்மை ஆழ்த்தி விடுகிறார் ஓவியர். மெகாலோடொன் வரும் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம் திகில் உத்தரவாதம். கெனானோ பிரான்சின் ருவென் எனும் நகரில் 1974ல் பிறந்தவர். கணிதத் துறையில் உயர்படிப்பு. ஓவியத்தினால் மட்டும் வாழ்க்கை நடத்த முடியாது என அஞ்சி பொறியியல் துறைக்கு வந்தவர். 2004ல் STEPHANE BETBEDER கதையெழுத ALISTER KAYNE எனும் தொடர் இவர் சித்திரங்களோடு வெளியாகியது. இன்று கார்த்தாகோவின் முதலாம் ஆல்பம் வழியாக தன்னை ஒர் வளர்ந்து வரும் நம்பிக்கையாக நிலை நிறுத்திக் கொண்டார் கெனானோ. சித்திரங்களிற்கு சிறந்த முறையில் வண்ணமளித்துதிருப்பவர் DELPHINE RIEU. சூழ்நிலைக்கு தகுந்த யாதார்த்தமான வண்ணத் தெரிவுகளிற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

முதல் ஆல்பத்தில் உள்ள விறுவிறுப்பு, சித்திரங்களின் தரம், விஞ்ஞானம் எனும் பெயரில் தலையைக் கிறுகிறுக்க வைக்காத கதை சொல்லல், வரும் ஆல்பங்களிலும் தொடர்ந்தால் கார்த்தாகோ கதை தொடர் நிச்சயம் வெற்றியடையும்.
ஆல்பத்தின் தரம் *****
நண்பர்களே பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆர்வலர்களிற்கு

18 comments:

 1. கனவுகளின் காதலனே,

  வழமை போல நானே மீ த பஸ்ட்.

  அருமையான பதிவு. கடலும் , கடல் சார்ந்த இடங்களும் (நெய்தல்?) என்ற வரைமுறையை மைய்யமாக கொண்ட கதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

  பல வருடங்களுக்கு முன்பு முத்து காமிக்ஸ் கதையில் வந்த "ஆழ்கடல் மயானம்" என்ற கதை நினைவுள்ளதா? இல்லை என்றால் சிறிது வெயிட் செய்யுங்கள்.

  பதிவு ரெடி ஆகி விட்டது. அடுத்த வாரம் வரும். அதுவும் ஆழ்கடலை சார்ந்து தமிழில் வந்த அற்புதமான கதைகளில் ஒன்று.

  அந்த கடசியில் வரும் ஒரு குறிப்பிட்ட கட்டம் தமிழ் காமிக்ஸ் கதைகளின் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்றாகும் (டாப் டென் போல).

  இப்போது கதைக்கு வருவோம்.

  அந்த கிழவன் கூறுவது முற்றிலும் சரி. கேப்டன் நெமோ'வும் இதனையே கூறியதாக நினைவு.

  பங்குதாரர்கள் சட்ட விரோத முடிவு எடுப்பது கார்பரேட் கம்பெனிகளில் சகஜமான ஒன்று ஆகி விட்டது. இந்தியாவிலும் இது பரவி வருவது கவலைக்குரிய விஷயம்.

  22 மீட்டர் சுறா? நம்ப வேண்டியது தான். (கிழவன் கூறுவதை நினைவு கொள்ளுங்கள்)

  இந்தக் கதையின் ஆரம்பக் காட்சி ஹூக் ஜா கதையின் ஆரம்பக் காட்சியை நினைவு படுத்துகிறது (ஆக்ஷன் காமிக்ஸ்).

  பதிவுக்கு நன்றி.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 2. இளம் சிட்டுக்களின் கனவை அழகாக்கும் மன்மத மைனா விஸ்வா,

  முதன்மைக் கருத்துக்களிற்கு முதலில் நன்றிகள், ஆக்‌ஷன் காமிக்ஸ் Hook Jaw, Jules vernesன் Twenty Thousand Leagues under the seaன் காப்டன் நெமோ,என உங்கள் பங்கிற்கு நீங்கள் சுழி ஓடியிருக்கிறீர்கள். நாமிருவரும் சேர்ந்து மொபி டிக் எனும் நீர் மூழ்கியில் சில சிட்டுக்களையும் சேர்த்துக் கொண்டு கடல் மூழ்குவோமா. நீங்கள் தான் காப்டன்.

  ஆழ்கடல் மயானம் எனும் தலைப்பே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. தயவு செய்து பதிவை விரைவில் இடுங்கள்.

  கூக் ஜா, மற்றும் காப்டன் நெமோவிற்கான சுட்டிகள் கீழே உள்ளன நண்பர்கள் பயன் பெறுக. நன்றி மன்மத மைனா விஸ்வா.
  http://en.wikipedia.org/wiki/Twenty_Thousand_Leagues_Under_the_Sea
  http://www.thoseweleftbehind.co.uk/2008_06_01_archive.html

  ReplyDelete
 3. கனவுகளின் காதலனே,

  உங்கள் திட்டம் எனக்கு புரிகிறது.

  நான் கப்பலை ஓட்டும்போது நீங்கள் சிட்டுக்களை ஓட்ட திட்டமா?

  என்ன கொடுமை சார் இது?

  இந்த போங்கு ஆட்டத்திற்கு நான் வரலை.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 4. அபச்சாரம்,அபச்சாரம். காப்டனை ஒதுக்கி விட்டு நான் சிட்டுக்களை ஒட்ட மாட்டேன். இங்கு நாங்கள் ஒர் அணியாக செயல்படுவோம் என உறுதி அளிக்கிறேன். வயக்கரா தாத்தா வேண்டுமானல் நீர் முழ்கியை ஓட்டட்டும்.

  ReplyDelete
 5. காதலரே, உங்கள் தனித்துவமான பதிவொன்றோடு இந்த வாரத்தையும் சிறப்பித்து விட்டீர்கள். ஜேம்ஸ் காம்ரூன் இயக்கிய அபீஸ் படம் எனக்கும் மிக பிடித்தமான ஒன்று. வழக்கமாக அன்னிய உயிர்களை தேடி வின்வெளியிலும், கண்டங்களிலும், மட்டுமே ஏன் பயணப்படுகிறார்கள், இங்கு பூமியிலேயே நம் கடல் ஆழத்தினை இது வரையில் யாரும் அறியா உயிரினங்கள் இருக்கலாம் என்று ஏன் ஆராயவில்லை, என்று சின்ன வயதில் சரித்திரங்களை பற்றி படிக்கும் போது நான் யோசித்திருககிறேன். விண்ணில் பறக்க எண்ணும் மனிதனின் விருப்பம் ஒரு வேளை விண்வெளி தேடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கும் என்று பிற்காலத்தில் அதற்கு காரணம் கற்பித்து கொண்டேன். அவ்வேளையில் நான் பார்த்த படம் இந்த அபீஸ். ஆழ்கடல் உயிரினங்கள் மனித வர்கத்தின் கொடுஞ்செயல்களால் பொங்கி எழும் கட்டத்தையும், கூடவே ஒரு மெல்லிய காதலையும் சரி விகிதத்தில் கலந்து கேமரூன் கலக்கியிருந்தார். அந்த படத்தை நீங்களும் ரசித்தீர்கள் என்று சொன்னதும், என் ரசிப்புத்தன்மை ஜனரஞ்சகமான ஒன்று தான் என்று உள்ளில் ஏற்பட்ட சந்தோசத்தையே தெரிவிக்கவே இந்த முண்ணோட்ட பிண்ணூட்டம்.

  சரி இனி பதிவை பற்றி பார்ப்போம்.... ஆழ்கடல் பற்றியது ஆயிற்றே..... ஆழ்ந்தே விமர்சிக்கிறேன்.

  // சமுத்திரத்தின் ஆழத்தில் ராட்சதர்களாய் நிற்கும் கற்பாறை மலைத்திட்டுக்களின் மேல் //
  ஆரம்ப வரிகளிளே சூப்பர் துவக்கம். கவிதை பதிவுக்கு காதலருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

  // அடோம், க்ரீன் பீஸின் ஒர் ரகசியக் கிளை //
  க்ரீன் பீஸ் அமைப்பை பகிரங்கமாக இப்படி கதையில் உபயோகித்து இருப்பதை அவர்கள் அனுமதிப்பார்களா என்ன ?

  // 22 மீற்றர் நீளமுடைய சுறா //
  காதில் சரியாக பூ சுற்றும் விடயம் போல இருக்கிறது. சுறாக்கள் பெரும்பாலும் ஆக்ரோஷமான மற்றும் வேகமான பிராணிகள். அவற்றின் ஆக்ரோஷ வேட்டை பாணிக்கு இவ்வளவு பெரிய உடல் வாகு, சோம்பலையே கொடுக்கும் என்பதால், பரிணாம வளர்ச்சியிலும் தற்போதைய சூடான, அதிக உப்பு சேர்ந்த கடல்களில் சாத்தியபட முடியாதே விஷயமே. உதாரணத்துக்கு திமிங்கலம். ஆனால், நிலத்தில் டைனோசார் போன்ற மிருகங்கள் உலிவிய போது, கதாசிரியர் கொடுத்து இருக்கும் முந்தைய கால சுறா, சற்று ஒத்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் தான்.

  ஆனாலும் கதையில் நான் ஏதோ அபீஸ் படம் போன்று வித்தியாசமான நீர் வாழ் மிருகங்களை பற்றி கூறி இருப்பர் என்று நினைத்தேன். கதாசிரியர் சுறா என்ற தெரிந்த பிராணியுடன் கதையை கொண்டு சென்று சப்பென்றாக்கி விட்டார்.

  // கடந்த இருபது வருட காலமாக அதன் பங்குகளின் விலை இறங்கு முகமாகவே உள்ளது //
  சுமார் பத்து வருட கால இடைவேளிகப்புறம் எதற்கு இந்த ஆராய்வு என்பதற்கு கதாசிரியர் கொடுத்த விளக்கம் சூப்பர் ரகம். நிகழ் கால பெரிய ஸ்தாபனங்களின் கடல் வாழ் உயிர்களை பற்றிய உதாசினப்போக்கை சறியாக பிரதிபலிக்கிறது. சமீபத்திய் டாடா நானோ, ஆலிவ் ஆமைகள் கதையை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

  // இக் கதைத் தொடரில் மொத்தமாக எட்டு ஆல்பங்கள் வெளியாக உள்ளது. //
  இந்த சுறாவை வைத்து எட்டு ஆல்பங்களுக்கு இழுக்க என்ன உள்ளது. வேறு ஒன்றும் புதிய விஷயம் அறிமுகபடுத்த கதையில் வாய்ப்புகள் இல்லையே.என்று எண்ணி இருந்ததற்கு தங்கள் முடிவுரை பதிலலித்துள்ளது. பூமி வாழ் உயிரினங்களின் முடிவை இக்கண்டுபிடிப்புடன் முடிச்சுப்போட்டு கதாசிரியர் அருமையாக கொண்டு செல்ல போகிறார் என்று நினைக்கிறேன்.

  ஓவியராக இருந்து கதாசிரியர் அவதாரம் எடுத்து இருக்கும் கிரிஸ்டோபர், அந்த அனுபவத்தின் வாயிலாக அவர் காட்சி அமைப்புகளை ஹென்னினோட்டிடம் சிறப்பான முறையில் விவரித்திருக்க முடியும் என்பதை, அதற்கு பிரதிபலனாக வெளியான அருமையான சித்திர ஓட்டங்கள் விவரிக்கிறது.

  குறிப்பாக நீங்கள் கொடுத்த அந்த எரிமலை வாய் பயண படம் எவ்வளவு சிறத்தையுடன் செதுக்கபட்டிருக்கிறது என்பது பிரம்மாண்டமாக வெளிபடுகிறது. காதலரிடமே நான்கு ஸ்டார் ரேட்டிங் பெற்றால் சும்மாவா.

  கதையை படிக்கும் ஆவல் பெருகி விட்டது, ஆங்கில மொழியில் சினிபுக் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம். ப்ரெஞ்சு மொழியில் இத்தகையை சித்திர பொக்கிஷங்களை முன்பே படிக்க உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி பொறாமை கொள்வதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும். :) பள்ளி காலத்தில் ஒழுங்காக பிரெஞ்சு மொழி பயிலாமல் ஆரம்பித்திலேயே விட்டதை எண்ணி இப்போது வேதனை கொள்ள செய்கிறீர்கள் :)

  கூடவே நீங்கள் கூறிய டீப் படத்தை இன்னும் பார்க்கவில்லை.... அறிமுகபடுத்தியதற்கு நன்றி... தேடி பார்த்து விடுகிறேன்.


  ஆமாம் வாரா வாரம் வெள்ளியன்று நீங்கள் பதிவிடுவது தான் வழக்கம் என்றாலும், வியாழன் இரவிலே இட்டு விடுவிர்களா என்ன? ஏனென்றால் உங்கள் பதிவை ரசித்து படிக்க வார இறுதியில் வீட்டில் இருந்து செய்வதே எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. ஆனால், நான் கருத்திடுமுன் உங்கள் கருத்து பெட்டி மற்ற ரசிகர்களாள் மொய்க்கபட்டு விடுவதால், நான் கடைசியோ என்ற எண்ணம் வர செய்வதினால் தான் :)

  கூடவே ஒரு வேண்டுகோள் பெரிய பத்திகளை 2,3 ஆக பிரித்து இட்டீகள் என்றால், படிக்கும் போது வரிகளை தொலைத்து விடாமல் தொடர முடியும். நான் முன் கூறியது போல, எழுத்துகள் அதிகம் இருக்கும் இடத்தை பார்க்கும் போது என்னுடைய பள்ளி கால பாட புத்தகங்கள் மனதில் வந்து பயமுறுத்துவதே காரணம். நாவல்களிள் இருந்து நான் ஒதுங்கி இருப்பது இதனால் தான் என்று சொல்லவும் வேண்டுமா.... :)

  தொடருங்கள் ஒரு தனித்துவத்தை.

  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 6. ரகசிய கசனோவா ரஃபிக் அவர்களே,

  கமரொனின் படங்களில் மறக்க முடியாதது Abyss திரைப்படம். ஞாயிறு தினமொன்றில் நண்பர்கள் குழுவாக செல்லவிருந்து, பின்பு நண்பர்கள் கழன்று விட நான் மட்டும் தனியே சென்று பார்த்த படம். கொழும்பில் சிட்டுக்கள் வந்து தங்கும் கூடான மஜெஸ்டிக் சிட்டியின் அருகே உள்ள மஜெஸ்டிக் தியேட்டரில் 4 தடவை இப் படத்தினை பார்த்திருக்கிறேன்[1990களில்]. அக் காலத்தில் அப் படத்தில் இருந்த ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளின் பாதிப்பை என்னவென்று சொல்வது. இன்றும் அப் படத்தை முழுமையாக பார்க்க நான் தயார்.

  க்ரீன் பீஸ் அமைப்பை கதாசிரியர் பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் நாவல் அந்த அமைப்பிற்கு சார்பான கருத்துக்களை கொண்டிருப்பதால்- அப்படி இல்லாவிடிலும் கூட- அவர்கள் அதை அனுமதிப்பார்கள். சூழலியல் பயங்கரவாதம் இங்கே ஆரம்பமாகி விட்டது.

  ஆகா ரஃபிக், சஸ்பென்ஸே அதுதான், காப்டன் பெர்ட்ராண்ட் எங்கள் கண்களிலிருந்து மறைத்து வைக்கும் ரகசியம் தான் என்ன? அவர் ஆழ்கடலில் மூழ்கி பதிவு செய்திருக்கும் ஒளி நாடாவை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்திருக்கிறார். அவர் படம் பிடித்த உயிரினம் என்னவாகவிருக்கலாம் என்பது மிக முக்கியமான மர்மங்களில் ஒன்று,கதாசிரியர் சொதப்ப மாட்டார் என்றே நினைக்கிறேன்.

  டாடா + ஆமைகள் பற்றி படிக்கவில்லை ஆனால் தேடிப் பார்த்து கொள்கிறேன்.

  2ம் ஆல்பத்திலும் புதிய முடிச்சுக்களை கதாசிரியர் தந்திருக்கிறார் என்கிறார்கள், கதையைப் படித்தவர்கள். சினி புக் இக் கதையை மட்டுமல்ல நான் பதிவிடும் எல்லாக் கதைகளையும் ஆங்கிலத்தில் வெளியிட வேண்டுமென்பதே என் ஆவல். தயை கூர்ந்து பதிவிலுள்ள சுட்டிகளை உபயோகித்து ஏனைய பக்கங்களையும் உங்கள் நேர வசதிக்கேற்ப கண்டு களியுங்கள்.

  ரஃபிக், சில நாட்கள் ஒய்வு எடுத்துக் கொண்டிருப்பதால் மட்டுமே பதிவுகளை காலை வேளையில் இடுகிறேன். இல்லையேல் வியாழன் இரவுதான். பிரென்ஞ்சு மொழியை கால அவகாசம் உண்டெனில் நீங்கள் இப்போதும் கற்றுக் கொள்ளலாம். இதில் என்ன தயக்கம். கருத்துப் பெட்டி மற்ற ரசிகர்களால் மொய்க்கப் பட்டிருக்கிறதா, விஸ்வாவும், நீங்களும் மட்டுமே கருத்துக்களை பதிந்திருக்கிறீர்கள்.

  நிச்சயமாக பெரிய பந்திகளை பிரித்து இட முயல்கிறேன். புத்தகப் பிரியனாக நான் இருப்பதால் தான் ஒர் பந்தியினுள், அப் பந்திக்குரிய விபரங்களை அடக்க முயல்கிறேன். மேலும் நண்பர்களிற்கு கதையைப் பற்றிய அறிமுகம் நன்றாக அமைய வேண்டியே சற்று நீண்ட பதிவுகள்.

  விரிவான கருத்துக்களிற்கு நன்றி ரஃபிக். பதிவுத் திருவிழா முடியவில்லை.உங்கள் வலைப்பூவில் கூட புதிதாக ஒர் சுறா வந்திருக்கிறதே. மெகாலொடொனின் உறவினரா.

  ReplyDelete
 7. ஆலிவ் ரைட்லி ஆமைகளும் டாடாவும். நன்றி ரகசிய கசனோவா ரஃபிக். நண்பர்கள் பயன் பெறுக.

  http://www.youtube.com/watch?v=GOvk2pxaqy0
  http://greenpeace.in/turtle/

  ReplyDelete
 8. காதலரே,

  நான் பெரிய பத்திகள் என்று சொன்னது, பதிவை பிரித்து போட அல்ல. ஒரு புத்தகத்திற்கு ஒரு பதிவு என்ற தங்களுடைய பாணி சிறப்பான ஒன்றே, அதையே தான் நானும் காமிக்கியலில் செயல்படுத்துகிறேனே.

  மாறாக, நான் பத்திகள் என்று குறிப்பிட்டது இதே பதிவில் உள்ள பாராக்களை (Paragraph). சைஸில் அதிகமாக உள்ள பத்திகளை, 3 அல்லது 4 வரிகளுக்கு மேல் ஒரு பாரா என்று பிரித்தீர்கள் என்றால்,படிக்க ஏதுவாக இருக்கும். கூடவே படங்களை சற்று அதிகமாக நீங்கள் தெளித்தால் இன்னும் சிறப்பு. நீங்கள் அளித்த அனைத்து சுட்டிகளையும் படித்தேன். கூடவே படங்களை ரசித்தேன். ஓவியரின் ஆழ் கடல் வரைவு பாணியை என்னவென்று சொல்வது. கூடவே நீங்கள் அளித்த விக்கி லிங் மூலம் சில தெரியாத விஷயங்களை கூட புரிந்து கொண்டேன். உதாரணம் மெகாலொடொன். என் பதிவில் வரும் சுறா அதற்கு எல்லாம் கொசு மாதிரி ஆயிற்றே.

  நான் இயல்பாக வெள்ளி இரவிலோ, இல்லை சனி காலையிலோ தான் பதிவுகள் படித்து பிண்ணூட்டம் இடுவது வழக்கம். ஆனால், நீங்கள் முன்பே பதிவு இட்டு விட்டால் நான் படிப்பதற்குள் அங்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே மொய்த்து போய் இருக்கும் என்பதையே அப்படி கூறினேன். அதை தவிர்க்கவே நீங்கள் பதிவு இட்ட வுடன் இந்த சுட சுட பிண்ணூட்டம் இப்போது மட்டும். பதிவு திருவிழா வேறு இன்னும் பாக்கி இருக்கிறது என்று கூறி சந்தோஷ படுத்துகிறீர்கள். ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

  டாடா நானோ, ஆலிவ் ஆமைகள் கதை மிகவும் சோகமான ஒன்றே.. சீக்கிரத்தில் அதற்கு நல்ல செய்தி வரும் என்று நினைக்கிறேன்.

  ஆமாம் அது என்ன கசனோவா.... காசினோ சம்பந்தமா.... என் அறிவுக்கு புலபடவில்லை.

  ReplyDelete
 9. ரஃபிக், CASANOVA வெனிஸைச் சேர்ந்த ஒர் காதல் மன்னன். வயக்கரா தாத்தாவெல்லாம் அவரிற்கு முன்னால் வெறும் தூசு. நீங்கள் கூறியவாறே சிறிய பந்திகளையும், அதிக படங்களையும் தர முயற்சி செய்கிறேன். மீண்டும் வந்து கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி ரகசிய கசனோவா.

  ReplyDelete
 10. நண்பரே,

  கடல் சார்ந்த சாகசங்களை இவ்வளவு அழகாக யாரும் வரைந்ததில்லை. இந்த சித்திர நெடுந்தொடரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  அபிஸ் - சிறந்த திரைப்படம். வேற்றுக் கிரக வாசிகள் பூமியின் நலனுக்காக பாடுபடுவதாக காண்பிப்பார்கள். Ed Harris எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர்.

  கதாநாயகனாக நடிப்பதற்கு தலையின் வெளியே மட்டும் நிறைய இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளேயும் இருக்கவேண்டும்.

  கடல் சாகசங்களால்தான் மேற்கத்திய நாடுகள் இப்போது பொருளாதார ரீதியில் மிகுந்த வளர்ச்சியடைந்து இருக்கின்றன. சோழர்கள் காலத்தில் தமிழர்களும் சில பல சாகசங்கள் செய்தார்கள். சீனர்களும் செய்தார்கள். உள்நாட்டில் நீடித்த ஆட்சி இன்மையால் அந்த சாகசங்கள் வீண் போய்விட்டன.

  நம்மை பொறுத்த வரையில் மராட்டா, மொகலாயர், சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தோம்.

  சீனாவிலோ மிங்,கிங், சிங் :) போன்ற குழுக்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தன. நம்முடைய ஆளும் இந்த மாதிரி சாகசங்கள் எல்லாம் வெளி நாடுகளில்போய் செய்திருக்கிறார்கள். நிறைய பதிவுகள் காணமலே போய்விட்டன.

  ரபீக்தான் காசநோவா வா? அவரின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த வரி காதலை சொல்ல வார்த்தைகளை பயன்படுத்துகிறவன் முட்டாள்.

  சாண்டியல்யனின் சரித்திர புதினங்களை சிறு வயதில் விரும்பி படித்திருக்கிறேன். இப்போது திரும்பி பார்க்கும்போது மெல்லிய சரித்திர கோட்டில் ஒரு கற்பனைக் கதையை கட்டியிருக்கிறார் என தோன்றுகிறது.

  ஆங்கிலத்தில் இந்த ஆல்பங்கள் வெளிவந்தால் உடன் அப்டேட் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

  இந்த நல்ல பதிவினை தந்த வருங்கால ப்ரென்ஞ் ஜனாதிபதியும், கர்லாவின் உடன் பிறவா சகோதரருமான கனவுகளின் காதலனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 11. மஞ்சள் அழகியின் மனதை வென்ற ஜோஸ் அவர்களே,abyss க்கு ஒர் ரசிகர் கூட்டமே இருக்கிறது என்பது மகிழ்வு தரும் விடயம்.

  சாண்டில்யனின் கடல் புறா தமிழ் நாவல்களில் கடல் சாகசத்தை முன்படுத்திய வரலாற்று நவீனம். சாண்டில்யனின் நாவல்களிலேயே எனக்குப் பிடித்த நாவலும் அதே. மஞ்சள் அழகி, அரபு நாட்டு அமீர், கூல வாணிகன் சீனக் கடற்கொள்ளையன் என பின்னியிருப்பார் அவர். ஆனால் வரலாறு என்பது அவர் கதைகளில் ஒர் இழை மட்டுமே.

  உண்மைதான் தமிழ் வரலாற்று ஆவணங்கள் அரிதாகவே உள்ளன.

  காசநோவாவின் அற்புதமான வரிகளை தந்ததிற்கு நன்றிகள். அதையே செயற்படுத்தவும் முயல்வோம்!!!

  ஆங்கிலத்தில் வந்தவுடன் அப்டேட் செய்கிறேன். கர்லா தன் கூடப் பிறவா அண்ணன் ஜோஸிடம் நலம் விசாரிக்க கூறினார். பிரென்சு ஜனாதிபதியாவது என் நோக்கம் அல்ல, ஜே கே ரித்திஷின் படத்திற்கு கதை எழுதுவதே என் குறிக்கோள் என்பதனை இத்தால் எல்லா வாசகக் கண்மணிகளிற்கும் அறியத் தருகிறேன்.

  ReplyDelete
 12. காசனோவா என்ற பெயருக்கு பின் இவ்வளவு கதைகளா.... சரி காதலருக்கும், கவிஞருக்கும் தெரியும் விஷயங்களுக்கு நான் போட்டி போடலாகாது. அப்பெயருக்கு அம்மாஞ்சியான நான் ஏற்றவன்தானா... அழகான பெண்களை ஓர பார்வையில் நோட்டம் இட மட்டுமே இது வரை எத்தனித்துள்ளேன்.... வயக்கரா தாத்தா பரிச்சயம் முன்னயே கிடைத்திருக்க கூடாதா....

  சேர சோழ பாண்டிய மன்னர்களின் கடல் கடந்து சென்ற போரினை பற்றி படித்திருக்கிறேன். அப்படி இல்லாமலா கம்போடியா வரை சென்ற அங்கோர் வாட் என்று காலத்தில் இன்றும் நிலைத்து நிற்கும் கோவில் கட்டிடங்களை எழுப்பினர். என்ன அதற்கு பிறகு நண்பர் ஜோஷ் கூறியது போல உள்நாட்டு போரில் சண்டை இடவே அவர்கள் நேரம் சரியாக போய் கடைசியல் மக்கி மண்ணோடு கலந்து விட்டனர்.

  அபீஸ் படத்தை காதலர் போல சிட்டுகள் குழு சேர தியேட்டரில் பார்த்த அனுபவம் இல்லை, அப்போது நான் பால் மனம் மாறாத பாலகன் இல்லையா (உண்மையா தாங்க சொல்றேன்)...

  பிற்பாடு ஸ்டார் மூவிஸிலும், அதற்கு அப்புறம் விரிவாக்கப்பட்ட குறுந்தகடிலும் பார்த்தது தான். அதிலேயே அந்த பிரம்மாண்டம் தெரிந்ததென்றால், தியேட்டரில் பார்த்த காதலர் எந்தவித அனுபவத்தை உணர்ந்திருப்பார் என்று கற்பனை பண்ணி பார்க்க முடிகிறது.

  ஜே கே ரித்திஷ் காதலருக்கும் கண் காட்டுவார் என்று நம்புவோமாக.... திரைப்படத்திற்கு மட்டும்.

  ReplyDelete
 13. ரஃபிக் சிட்டுக்களுடன் நான் சென்றிருந்தால் நான் படத்தையா பாத்திருப்பேன்!!!

  ReplyDelete
 14. நன்றாக போய் கொண்டிருந்த கதையை பாதிலேயே முடித்து விட்டிடீர்களே கனவுகளின் காதலனே .கதையை நன்றாக விறுவிறுப்பு குறையாமல் எடுத்துரைதீர்கள். மீதீ கதை எப்போது ? என் பதிவை பற்றி உங்கள் பதிவில் லிங்க் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி .

  லக்கி லிமட் - Lucky Limat

  ReplyDelete
 15. காதலரே, அதை குறிக்கதான் நான் இப்படி பதிந்தேன்.

  // எந்தவித அனுபவத்தை உணர்ந்திருப்பார் என்று கற்பனை பண்ணி பார்க்க முடிகிறது //

  இரு பொருளும் கொள்ளலாம். நாங்க எல்லாம் பாக்யராஜ் படம் பார்த்து வளர்ந்தவங்களாச்சே....:)


  கூடவெ, லக்கி பதிந்த பின்தான் குறிப்பிட மறந்தது நியாபகம் வந்தது. என் பதிவிற்கும் சுட்டி அமைத்தமைக்கு நன்றி காதலரே. நல்ல வேளை, மக்கள் சாதாரணமாக அதிகம் பதியும் நபர்களை "பதிவு பூதம்" என்று கூறுவார்கள். நீங்களும் ரைம்மிங்காக இருக்கட்டும் என்று "அப்டேட் அரக்கன்" என்று சொல்லாமால் மானத்தை காப்பாற்றி விட்டீர்கள்.

  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 16. நண்பர் லக்கி லிமட்,

  கதையை முழுவதுமாகக் கூறி விட்டால், பின்பு அதனைப் படிக்கும் சந்தர்ப்பம் உங்களிற்கு வாய்க்கும் போது அதில் சஸ்பென்ஸ் சுவை இருக்காது என்பதற்காகவே நான் கதைகளை முழுமையாக தருவதில்லை. உங்கள் வருகைக்கும் கருத்தினை பதிந்து சென்றமைக்கும் நன்றி. லக்கி லூக் தான் உங்கள் அபிமான நாயகரா.

  ரஃபிக், பாக்யராஜ் படங்களில் வரும் முருங்கைக்காய் எனக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று, அவர் ஒர் படத்தில் அதனை ஜாலிக்காக உபயோகப்படுத்தியதிலிருந்து, அதனை உண்ணும் போது அவர் ஞாபகம் எட்டிப் பார்க்கும். டார்லிங் டார்லிங் எனும் படத்தில் அவர் அப்பாவாக வரும் நடிகர் செய்யும் அழும்புகள் அட்டகாசமாக இருக்கும்.
  மீண்டும் வந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 17. நீங்கள் நினைத்தது சரி தான் கனவுகளின் காதலனே ! என் அபிமான நாயகன் லக்கி லூக் தான் நண்பரே சிறு வயதில் முதன் முதலில் லக்கி லுக்கின் 'பயங்கர பொடியன் பில்லி ' படித்தேன் அதில் இருந்து லக்கி லுக்கின் ரசிகனாகி விட்டேன். அடுத்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது 'பூம் பூம் படலம் ' என்னை மிகவும் கவர்ந்தது . தினமும் படித்து கொண்டே இருப்பேன். லக்கி லுக்கின் கதைகளில் மிகவும் பிடித்தது . பின் எப்படியோ அந்த காமிக்ஸ் தொலைந்து விட்டது . எவ்வளவு முயன்றும் அடுத்து கிடைக்கவில்லை .அதன் ஆங்கில பதிப்பும் வரவில்லை. இப்போது 'பூம் பூம் படலம்' பிரெஞ்சு பதிப்பை டவுன்லோட் செய்து படங்களை மட்டும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன் .

  Lucky Limat

  ReplyDelete
 18. நண்பர் லக்கி லிமட், நீங்கள் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் அவரிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். டார்கோட் குழுமத்தின் வெளியீடுகளில் அதிகம் விற்பனையாவது லக்கி லூக் கதைகளே.

  ReplyDelete