Showing posts with label XIII Mystery. Show all posts
Showing posts with label XIII Mystery. Show all posts

Saturday, September 13, 2014

ஏறக்குறைய ஒரு புனிதன்


ஜானதிபதி வாலி ஷெரிடானிடம் இருந்து பதக்கமும், ராணுவத்தில் பதவி உயர்வும் பெறும் Betty  யை சிறப்பு ராணுவ நடவடிக்கை ஒன்றிற்காக சான் மிகுவெலுக்கு வரும்படி பணிக்கிறார் ஜெனரல் காரிங்டன். சான் மிகுவெலுக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்யும் விமானம் கடத்தப்படுகிறது ... அடர் காடுகளிற்குள் SPADS விசேட அதிரடிப்படை பிரிவிலிருந்து விலகிச்சென்ற ராணுவத்தினர் கைகளில் பணயக்கைதிகள் ஆகிறார்கள் ஜெனரல் காரிங்டன் குழுவினர் ...

Betty யின் பெயரை தமிழில் எழுதுவதை போல ஒரு இம்சை இல்லை. ஒன்று பெட்டி அல்லது வெட்டி என்று எழுத வேண்டும். பெட்டி நாயகியின் பெயர் என்றால் வெட்டி என XIII - Mystery - Betty Barnowsky  ஆல்பத்திற்கு பெயரை வைக்கலாம். XIII மிஸ்டரி கதைவரிசையின் இந்த ஏழாவது ஆல்பத்தின் கதையை Joel Callède ம், சித்திரங்களை Sylvain Vallée ம் உருவாக்கியுள்ளார்கள்.

ஜனாதிபதியிடமிருந்து அசாத்திய வீரச்செயல்களிற்கான பதக்கம், அதன்பின்பாக ராணுவத்திடமிருந்து வரும் பதவியுயர்வு அதன் கூடவே வரும் அதிரடி நடவடிக்கைக்கான அழைப்பு என ஆரம்பமாகும் கதை, Betty க்கும் அவள் சகோதரிக்குமிடையில் இருக்கும் முறுகிய உறவையும் காட்டுகிறது. ஏன் அந்த இணக்கமற்ற சகோதர உறவு காட்டப்படுகிறது என்பதை வாசிப்பின் முடிவில் கேள்வியாக்கினால் Betty க்கு ஆதரவாக அன்பாக யாரும் இல்லை, அவள் தோள்சாய ஒரு இடமில்லை என்பதை வாசகர்களுக்கு சொல்லவே என்பதை தவிர வேறு விடை கிடைக்கவில்லை. அதிரடி நடவடிக்கைக்கு செல்லும் முன்பாக Betty தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறாள்.

கருக்கலைப்பு என்பது Betty க்கு புதிதானது அல்ல. அதன் மூலம் அவமானங்களை அவள் வாழ்வில் சந்தித்து கடந்தே வந்திருக்கிறாள். கையில் ஒரு டாலர்கூட இல்லாது வீதிவீதியாக அவள் அலையும் ந்யூயார்க்கின் பனிவிழும் ஒரு இரவிலேயே அவள் ராணுவத்தில் இணைந்து கொள்வது எனும் முடிவிற்கு வருகிறாள். தற்கொலைக்கு பதிலாக அவள் ராணுவத்தை தெரிவு செய்து கொள்கிறாள். குடும்பமும், சமூகமும் அவளுக்கு வழங்க முடியாத ஒன்றை அவள் ராணுவத்தில் பெற்று கொள்கிறாள். அல்லது அவ்வாறான ஒரு பிரமையை அவள் தன்னுள் உருவாக்கி கொள்கிறாள். பெண்ணாக வெளியுலகில் ஒரு வாழ்வை அவளால் உறுதியாக அடையாளப்படுத்த  முடியாது போனாலும் ராணுவத்தில் பதவிகளின் உச்சங்களை தொட்டு அமரும் ஒரு வாழ்க்கை அவள் முன் இருக்கவே செய்கிறது. ஆனால் ராணுவத்தின் இன்னொரு முகத்தையும் அவள் காணும் வாய்ப்பு தென்னமரிக்க அடர்காடுகளில் அவள் அதிரடி நடவடிக்கைகளில்  முன்பு இயங்கியபோதும் பின் பணயக்கைதியாக இருக்கும்போது கிடைக்கவே செய்கிறது. ஆனால் தாய்மை என்பது பெண்களிற்கு உணரச்செய்வது வேறொன்று. அதன் அர்த்தத்தை கதையில் மேஜர் ஜோன்ஸ்,  மூன்றுமுறை கருக்களை கலைத்த அனுபவம் கொண்ட Betty க்கு அடையாளம் காட்டுகிறாள். ஜோன்ஸ் தன் வயிற்றில் பட்ட காயம் ஒன்று அவள் என்றுமே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவளாக அவளை ஆக்கிவிடுகிறது என்பதை ஜோன்ஸ் தெரியப்படுத்தும்போது தன் கருவை கலைக்ககூடாது என்பதில் Betty உறுதியாகி விடுகிறாள்.

ஆகவே உணர்ச்சிகரமான இந்த சூழ்நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். கருவுற்ற ஒரு இளம்பெண், அடர்காடுகளில் தறிகெட்டு வாழும் முரட்டு மனிதர்கள் கையில் பணயக்கைதியாக! எப்படி அவள் அவர்கள் பிடியில் இருந்து தப்ப போகிறாள்? தன் கருவை அவள் எப்படி இவ்வகையான சூழலில் காப்பாற்ற போகிறாள்? இந்தக் கேள்விகளுக்கு கதாசிரியர் ஜொயெல் காலெட்டின்  கதை சொல்லும் பதில்கள் ஆழமும், அர்த்தமும் நீர்த்து போனவையாக உள்ளன. மிக உணர்ச்சிகரமாகவும், மனதை தொட்டுவிடும் வகையிலும் உருவாக்கியிருக்க வேண்டிய கதையை முரட்டு மூடர்கள் மத்தியில் அகப்பட்ட இளம்பெண்ணின் தத்தளிப்பு என்பதாக, அசட்டுத்தனமான சம்பவகோர்வைகளுடன் கதாசிரியர் வழங்கி இருக்கிறார்.

Betty யின் கருவுக்கு காரணமானவர் யார் என்பதை நண்பர்கள் இலகுவில் ஊகித்து விடலாம்.  XIII தொடரில் அதிக பெண்களை புணர்ந்தவர் யாரோ அவரே அக்கருவின் பிரம்மன். அதுகுறித்து கண்டிப்பாக அவருக்கு நினைவில் ஏதும் இல்லை. அவரின் அந்த நினைவாற்றல் மிகவும் பிரசித்தமானது என்பதை இங்கு சொல்லும் அவசியம் உண்டு. ஆனால் Betty ன் மனம் அவள் கருவுற்ற செய்தியை அறியுமுன் நாடும் உள்ளம் Armand de Preseau உடையதாக சொல்லப்படுகிறது. ஒரு இரவே அவன் மாளிகையில் தங்கினாலும் ஆர்மாண்ட் அவள்மீது பதித்த அந்த கனிவான பார்வையின் பின் அவள் உணர்ந்ததும், மெல்ல நடக்கும் தயக்கத்தின் மயக்கத்தில் புரிந்ததும் என்ன? எவ்வாறு அவள் தன் புகலிடத்தின் முகவரியை முன்னுணர்ந்தாள். அவள் விழிகள் இதயத்தின் ஆழங்களில் நீந்தும் உணர்வுகளை ஆழச்சென்று காணும் ஆற்றல் கொண்டவையா. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் சில்வெய்ன் வலே வரைந்திருக்கும் Bettyn விழிகளே இதற்கான பதில். அதே சமயம் கதையின் சித்திரங்கள் முழுதும் அதகளம் என்றும் இங்கு எழுதிவிட முடியாது.

ஜெனரல் காரிங்டன் பெண்டகனின் முக்கிய அதிகாரி. அவரை கடத்தி பணயக்கைதியாக்கி அமெரிக்க அரசிடமிருந்து சில விடயங்களை பெற்றுக்கொள்ள விழைபவர்கள் எப்படியான புத்திசாலிகளாக இருக்க வேண்டும். ஆனால் தென்னமரிக்காவின் அடர்காடுகளில் SPADS ஐ விட்டு விலகி வந்து ஆட்சிகவிழ்ப்பில் பங்கேற்றவர்களாக காட்டப்படும் ராணுவத்தினரிடம் புத்திசாலித்தனத்தை தவிர பாக்கி எல்லாமும் இருக்க்கிறது. குரூரம், வெறி, வக்கிரம், வன்முறை என பட்டியலிட்டால் இவற்றை எல்லாம் விஞ்சி செல்லும் முட்டாள்தனமே அவர்களிடம் கதையில் வீர்யமாக எழுந்து நிற்கிறது... இப்படியான முட்டாள்களிடமிருந்து தப்பி செல்லாவிடில் காரிங்டன் ஜெனரலாக இருந்து என்ன பயன் ஆனால் தப்பி செல்லும் முறைகளும் அதற்கான சந்தர்பங்களும், Betty ன் இளவயிறு குறிவைத்து தாக்கப்படும் தருணங்களும் கதையை ஒரு மட்டமான நாடகச்சுவைக்குள் மூழ்க வைக்கின்றன...

திருப்பங்கள் என்ற பெயரில் இக்கதையில் வருவது எல்லாம் திருப்பங்கள் என்றால் திருப்பங்களிற்கு என்ன பெயர் சொல்வதாம்?! கதையில் வரும் ஒரே மனதைதொடும் மனிதர் ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே. ரகசியங்கள் அறியாது அன்பு செய்பவன் காதலன். ரகசியங்கள் அறிந்து அன்பு செய்பவன் ஏறக்குறைய புனிதன். ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே Betty தன் வாழ்வில் கண்ட அற்புதம். XIII Mystery கதை வரிசையில் மீண்டும் ஒரு மொக்கை.

Saturday, February 2, 2013

நரிகளின் ஜதி

அமெரிக்க மண்ணில் ரகசியமாக இயங்கிவரும் மொஸாட் உளவாளியான Dovev யார் என்பதைக் கண்டறிந்து மடக்கும் சிஐஏ யின் நடவடிக்கையில், ஜனாதிபதி வில்லியம் ஷெரீடான் தரும் அழுத்தத்தினால் இணைந்து கொள்கிறார் காலனல் ஏமஸ்……
XIII தொடரினை ஆர்வமுடன் படித்த வாசகர்களிற்கு அக்கதையில் இடம்பெறும் பாத்திரங்களில் ஏதேனும் ஒன்றாவது அவர்களின் அபிமானத்திற்குரியதாக இருந்திட வாய்ப்புகள் உண்டு. மயக்கும் விழியாள் மேஜர் ஜோன்ஸ் ரசிகர்கள், கவர்ச்சிக் கன்னி ஜெசிக்கா மார்ட்டின் ரசிகர்கள், இரும்புப் பெண் இரீனா ரசிகர்கள் என வாசகர்கள் அவரவர் ருசிக்கும், சுவைக்கும், ஏகாந்தத்திற்கும் ஏற்றவாறு தங்கள் அபிமானங்களை வரித்துக் கொண்டிருக்கலாம். ஏன் தன் கட்டு மஸ்தான இரும்புடலில் பச்சை குத்திய மறதித் திலகம் மக்லேன் அங்கிளிற்கும் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். மக்லேனிற்கே இருக்கும்போது கனவான் தொனி கொண்ட பெரியமனிதர் ஏமஸிற்கு ரசிகர்கள் இருக்கமாட்டார்களா எனும் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது XIII Mystery கதைவரிசையில் நான்காவது ஆல்பமான Colonel Amos.
பிரதான கதை வரிசையாகிய XIII ல் காலனல் ஏமஸ் குறித்து மேலோட்டபாணியில் கூறப்பட்ட தகவல்களை சற்று விரிவாகவும், அக்கதை வரிசையின் வழியாக ஒருவர் அறிந்திருக்க முடியாத ஏமஸ் குறித்த சில ரகசியங்களையும் விபரிக்க விழைகிறது கதாசிரியர் Didier Alcante உருவாக்கியிருக்கும் இக்கதை. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் தனக்கென ஒரு தனிப்பாணியை பிரபலமாக்கிய சித்திரக் கலைஞரான Fançois Boucq.
இஸ்ரேலிய உளவாளி டொவெவை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள முதலில் மறுக்கும் ஏமஸ், பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஒன்றை பொறுப்பாக நடாத்தி வருபவர்.  Frank Giordino [CIA], Heideger [NSA] ஆகியோர் கேட்டுக் கொண்டும் இஸ்ரேலிய உளவாளியை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள மறுக்கும் காலனல் ஏமஸ் பின் ஜனாதிபதியின் கட்டளையின்கீழ் இந்நடவடிக்கைகளில் தான் விதிக்கும் நிபந்தனைகள் சிலவற்றுடன் இணைந்து கொள்கிறார். இந்த தருணத்திலிருந்து கதை இரு தளங்களில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது எனலாம். ஒரு தளத்தில் காலனல் ஏமஸின் தொழில்சார் வாழ்க்கை அலசப்படுகிறது. காலனல் ஏமஸின் கடந்தகாலம் குறித்த சுருக்கமான ஆனால் தகவல் விரிவான பகுதியும், அமெரிக்க மண்ணில் இயங்கும் இஸ்ரேலிய உளவாளி யார் என்பதை கண்டறிய காலனல் ஏமஸ் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் இத்தளத்தில் கூறப்படுகிறது. மற்றய தளம் ஏமஸ் சாலமோனின் தனிப்பட்ட வாழ்வு, அதில் அவரிற்கு இருந்திருக்ககூடிய சில உறவுகள் என்பதை கதையில் வடிக்கிறது.
இருப்பினும் தொழில்சார் தளத்தில் காலனல் ஏமஸ், இஸ்ரேலிய உளவாளியை மடக்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் காணப்படும் அபத்தங்கள் ஒரு சாதாரண வாசகனைக்கூட விழிகளை விரிய வைக்கும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. ஏன் கதையில் இப்படியான சம்பவக்கோர்வைகள்? அதுவும் மொஸாட்டை முட்டாள்களாக சித்தரிக்கும் வகையில் என கேள்விகள் கதைச் சம்பவங்களின் சித்தரிப்புக்களுடன் கூடவே எழும்… இக்கேள்விகள் கதாசிரியர் டிடியர் அல்காண்ட் ஏன் இப்படி மலிவான ஒரு கதையை உருவாக்கினார் எனும் சீற்றத்தையும் கதையை அதன் இறுதிப்பக்கங்களை நெருங்கும்வரை உருவாக்கி கொண்டேயிருக்கும். இக்கேள்விகள், சீற்றம் போன்றன கதையின் இறுதிப்பக்கங்களால் துடைத்து நீக்கப்பட்டு விடுகின்றன.
colamoஇஸ்ரேலிய ராணுவத்தில் சாதாரண ஒரு கேப்டனாக ஆரம்பித்து பின் மொஸாட்டின் உருவாக்கத்தில் பங்காற்றிய காலனல் ஏமஸ், ஏன் இஸ்ரேலை விட்டு விலகி அமெரிக்கா வருகிறார், இஸ்ரேல் மற்றும் மொஸாட் மீது அவர் கொண்ட வெறுப்பிற்கான காரணங்கள் என்ன, சிஐஏல் அவர் எவ்வாறு இணைந்தார், அமெரிக்க மண்ணில் அவர் கண்ட சிக்கல்கள் என்ன என காலனல் ஏமஸின் தொழில்சார் தளம் விறுவிறுப்பான நகர்வைக் கொண்ட ஒன்று. நீளும் இத்தளம் இஸ்ரேலிய உளவாளியின் அடையாளத்தை காலனல் ஏமஸும், பிராங் ஜியோர்டினோவும் வெளிக்கொணர்வதோடு முடிவடைகிறது. இக்கதையின் முடிவு வித்தியாசமானதோ அல்லது புதிதானதோ என்று கூறப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. உளவாளிகள் சம்பந்தமான நாவல்களில் இதைப்போன்ற முடிச்சவிழல்களை ஏற்கனவே கண்டிருக்கும் அனுபவம் அல்காண்டின் முடிவை சாதாரணமான ஒன்றாக அல்லது ஊகிக்ககூடிய வாசகன் ஒருவனின் சரியான ஊகமாகவே மாற்றியடிக்கிறது எனலாம்.
ஏமஸின் தனிப்பட்ட வாழ்கை விபரிக்கப்படும் தளத்தில் அவர் Kira எனும் பெண்ணுடன் கொண்டிருந்த உறவானது எவ்வகையில் முடிவுறுகிறது, அவ்வுறவு ஏமஸின் வாழ்க்கையில் அளித்திடக்கூடிய நீட்சிகள் என்ன, உணர்வுகளிற்கு சில தருணங்களிலாவது அடங்கிடும் ஒரு மனிதன் எனும் வகையில் ஏமஸ் என்பவனில் ஒளிந்திருக்ககூடிய ஒரு நெகிழ்வான பக்கம் எப்படியானது என்பவை கூறப்படுகின்றன. இத்தளத்தில் காணப்படும் ஆழமற்ற தன்மை…. இதை கதாசிரியர் இத்தளத்தை பின்தள்ளுவதற்காக விரும்பியே செய்திருக்கலாம்… உணர்வுபூர்வமாக இத்தளத்தின் நிகழ்வுகளோடு ஒன்றவிடாதபடி செய்துவிடுகிறது. கதையில் ஏமஸிற்கு வழங்கப்படும் நெகிழ்ச்சியான தருணங்கள் நெகிழவைப்பதான உணர்வுகள் எதையும் மனதில் உருவாக்கவில்லை. இதனாலேயே ஏமஸ் எனும் மனிதன் ஆழமாக விதைக்கப்படாமல் போகிறான். இருப்பினும் XIII பிரதான தொடரில் இடம்பெறும் ஒரு முக்கிய பாத்திரத்திற்கும் காலனல் ஏமஸிற்கும் இடையில் இருக்ககூடிய ஒரு மர்மம் கதையின் இறுதிப்பக்கத்தில் காட்டப்படுகிறது. இம்மர்மம் இக்கதையை பொறுத்தவரையில் எந்தவிதமான அதிர்வையும் எழுப்பிடவில்லை சிறு ஆச்சர்யத்தை மட்டும் தருகிறது எனலாம்.
பிராங் ஜியோர்டினோவின் புத்திசாலித்தனத்திற்கு தான் சளைத்தவன் அல்ல என்பதை ஏமஸ் நிரூபிக்கும் வகையில் கதை நிறைவுபெறுகிறது. நரிகளின் பரதத்தில் நரிகளே ஜதிகளையும் இசைக்கின்றன. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் பிரான்சுவா புக் அவர்களின் சித்திரங்கள் கதையை தாண்டி வியக்கும் வண்ணம் எதையும் சித்திரித்திடவில்லை. புக்கின் பாணிக்கு பழகிய நண்பர்கள் இச்சித்திரங்களையும் ரசிக்கலாம். இக்கதையைவிட Bouncer ல் அவர் சித்திரங்கள் ரசிக்கும்படி உள்ளது என்பது என் கருத்து. அதிகம் அதிர்ந்திடாத ஏமஸின் அதிரடிப் பக்கம் எனும் வகையில் XIII மிஸ்டரி கதை வரிசையில் வந்த குறிப்பிடத்தக்க கதையான La Mngouste உடன் Colonel Amos ம் தன்னை இணைத்துக் கொள்கிறது.

Thursday, January 17, 2013

முகம் தந்தவன் காதல்

முதல் காதலியின் முகத்தை மறப்பது மிக இலகுவானது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை, அந்தப் பொறுப்பை அயர்வற்ற கால்களுடன் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் தன் கைகளில் எடுத்துக் கொண்டுவிடும். ஆனால் ஜேசன் மக்லேனோ அல்லது XIII கதைவரிசையின் வாசகர்களோ ஸ்டீவ் ரோலண்டின் முகத்தை மறப்பது அந்தளவிற்கு இலகுவானதாக இருக்காது. ஏனெனில் மக்லேனின் முகத்தை நாம் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அதில் நாம் காண்பது ஸ்டீவ் ரோலண்டையே. இந்த விடயத்தை மிக இலகுடன் வரித்துக்கொண்ட அசட்டையுடன் நாம் மறந்து செல்ல பழகியிருக்கிறோம். அதேபோல் இன்று காமிக்ஸ் வாசகர் மத்தியில் பிரபலமாகிய XIII பச்சையை தன்னுடலில் முதலில் பதித்து சுமந்து வீழ்ந்தவனும் ஸ்டீவ் ரோலண்ட்தான். அதனாலேயே இன்று XIII எனும் பச்சை காமிக்ஸ் அட்டைகளில் தோன்றும் இடங்களில் எல்லாம் அவனுடைய அரூபப்புன்னகை  பின்னணியில் தன்னை விழியறியா மச்சமாக பதித்து நிற்கிறது. XIII க்கு முகம் தந்தவன் கதையையே XIII மிஸ்டரி கதைவரிசையின் ஐந்தாம் ஆல்பமும் விபரிக்கிறது.
ஜனாதிபதி வில்லியம் ஷெரீடானின் வரவை எதிர்பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அருகில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் ஏதோவொன்றின் ஏதோவொரு அறையின் காற்றுவாசலை திறந்து அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொலையிலக்கு துப்பாக்கியை தீவிரமான முகத்துடன் வெளியே எடுக்கும் ஸ்டீவ் ரோலண்ட். அவன் மனதின் முனுமுனுப்பாக ஸ்டீவ், என்றாவது ஒரு நாள் நீ சரித்திரத்தில் இடம்பிடிப்பாய் என அவன் தாய் அவனிற்கு உரைத்த சொற்களின் உச்சாடனம். அங்கிருந்து காலத்தில் பின்னோக்கி பாயும் கதை என்பதாக ஸ்டீவ் ரோலண்ட் கதையை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இழையாக சலிப்பின்றி சொல்கிறார் கதாசிரியர் Fabien Nury. இக்கதைக்கான சித்திரங்களை வழங்கியிருக்கிறார் Richard Guérineu.
காலத்தின் பின்னோக்கிய பார்வையில் சவுத்பர்க் எனும் புறநகரொன்றில் வாழும் வசதியான குடும்பம் ஒன்றின் வாரிசாக அறிமுகமாகிறான் பதினான்கு வயதின் முடிவை எட்டிக் கொண்டிருக்கும் ரோலண்ட். அவன் தாய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவளாக இருக்கிறாள். அவன் தந்தை தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் பிடிக்குள் தன்னை அடிமையாக்கி கொண்டவராக இருக்கிறார். தன் தாயை அதிகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மகனாக சித்தரிக்கப்படும் ரோலண்ட், தன் தந்தை மீது கொண்ட ஆதர்சத்தாலும், அவன்மீது அவர் ஓயாது திணிக்கும் தீவிர இனவெறி மற்றும் வலதுசாரிக் கருத்துக்களாலும் இனவெறி ஊட்டப்பட்டு வளர்ந்த ஒருவனாக இருக்கிறான்.
கறுப்பினத்தவர் மீது ஸ்டீவ் ரோலண்ட் கொண்ட வெறுப்பானது அவனுடன் அவனுள் கூடவே வளர்ந்து வரும் ஒன்றாக கதையில் கூறப்படுகிறது. கறுப்பினத்தவர்களிற்கு வழங்கப்படக்கூடிய ஒரே நீதி வன்முறை மாத்திரமே எனும் மந்திரத்தின் ஓயா உச்சாடனன் அவன். கல்லூரி நாட்களில்கூட விளையாட்டுப் போட்டிகளில் கறுப்பினத்தவர்களிடம் தோற்றுப் போவதை அவன் விரும்புவது இல்லை. அனைத்திலும் அவன் முதல்வனாக இருக்க வேண்டும் இரண்டாமிடம் என ஒன்று இல்லை,  அது ஒன்றுமேயில்லை என்பது அவன் வாழ்க்கையின் உயிர்வரி. தன் வீழ்ச்சியின் உறுதியின் புலர்தலில்கூட அவனிற்கு துணைவருவது இந்த உயிர்வரிகள்தான் ஆனால் அவ்வரிகள் அவன் முதல்வன் இல்லை என்பதையே அவனிற்கு உணர்த்தி நகர்கின்றன. கதையின் இறுதிவரை தான் இளமையில் கொண்ட கருத்துக்களில் இருந்து மாற்றம் கொள்ளாத ஒருவனாகவே ஸ்டீவ் ரோலண்ட் இருக்கிறான். தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனும் தீவிர முனைப்பில் அவன் கதை நெடுக நிகழ்த்துவது இனவாதத்தின் வன்கவிதைகளையே. தன் கல்லூரி நாட்களில் சகோதரத்துவம் எனும் குழுவுடன் இணைந்து இனவாதப் போராட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ் ரோலண்ட். இந்த சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வருங்கால மனைவியான கிம் காரிங்டனையும் சந்திந்துக் கொள்கிறான்.
srஸ்டீவ் ரோலண்டின் தந்தை தன் சிந்தாந்தங்களின் நீட்சிக்காக எவ்வாறு அவனை பயன்படுத்திக் கொண்டாரோ அவ்வாறே தன் ரகசிய திட்டங்களிற்காக அவனை கிம் பயன்படுத்திக் கொள்கிறாள். ஸ்டீவின் பலவீனங்களை அவள் தவளையொன்றின் குறிதவறா நாக்குப்போல பற்றியிழுத்து தன் வலையினுள் அவனை அவனறியாவண்ணம் திசைப்படுத்திச் செல்கிறாள். ஏறக்குறைய அவன் முடிவினையும் அவளே முன்னெழுதி வைத்தாள் என்றுகூட கூறிடலாம். ஏனெனில் கிம், மங்கூஸை பரிந்துரைத்து சதியினுள் நுழைக்க அவள் தன் கணவனான ஸ்டீவ் மனநிலைமீது கொண்ட ஐயமும் ஒரு காரணமாகும். ஸ்டீவ்மீது கிம் கொண்ட காதல் இலகுவாக துடைத்துவிடக்கூடிய ஒரு அரிதாரப்படலம். ஸ்டீவுடன் இருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவள் அதை பூசிக்கொள்ள வேண்டியது ஒரு கட்டாயம். தனது மகன் குறித்த அக்கறை அவள் பூசும் அந்தப் பூச்சை நியாயப்படுத்துவதாக காட்ட விழைகிறது. இருப்பினும் ஸ்டிவ் குறித்த தன் எண்ணங்களை அவனுடன் தீவிரமான தருணமொன்றில் நேர்மையுடன் அவள் பகிரவே செய்கிறாள். இந்த தருணமே கதையில் வாசகனை நெகிழ வைக்கும் பகுதியாகவும், சாதாரணமாக கடந்து செல்லககூடிய ஒரு அதிரடிக் கதையை அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதாக மாற்றிவிடுவதாகவும் இருக்கிறது. அது போலவே தன் வாழ்க்கையில் எங்கும் எப்போதும் பிறரால் பயன்படுத்திக் கொள்ளப்படும் மனிதனாகவும், தீவிர இனவெறியனாகவும் இருக்கும் ஸ்டீவ் ரோலண்ட் குறித்த ஒரு பண்பையும் அது அறிந்து கொள்ளச் செய்கிறது.
ஸ்டீவ் ரோலண்ட் என்னதான் ஒரு பாதகனாக இருந்தாலும், தன் மனைவியான கிம் அவன் வாழ்வில் இழைத்தது எல்லாம் துரோகம் என்பதை அவள் கூறி அவன் அறிந்தாலும், அவள்மீது அவன் கொண்ட அந்த முதல் காதலை அவன் இழப்பதேயில்லை. கிம்மின் சொற்கள் அவன் உயிரைப் பறித்த பின்பாகவும் கூட அவள்மீது அவன் கொண்ட காதலின் ஒளியில் மலர்ந்திட விழையும் மலரிதழ்மனம் அவனது. கிம் தன்னை பயன்படுத்தியிருந்தாலும்கூட, தன்னை நேசிக்கவேயில்லை முற்றாக வெறுக்கிறாள் என்பதை தெரிந்தபின்பாகவும்கூட அவள் என்றும் நலமாக இருக்க வேண்டும் என மனதார விரும்புபவன் அவன். கிம் மீது அவன் கொண்ட காதலிற்கு அவனுடைய இறுதி மூச்சுவரை உண்மையாக இருந்த ஸ்டீவ் ரோலண்ட், அந்த அரிதாரக் காதலின் கரங்களின் அணைப்பினிலேயே இறந்தும் போகிறான். அவன் இறந்து புதைக்கப்பட்டாலும், அன்பினில் சாந்திபெறா ஆவியென அவன் முகம் நடமாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகத்தில் அவன் கொண்டிருந்த உண்மையான காதலும் அரூபமான மச்சமாகவே புன்னைகத்து மறைகிறது. ஸ்டீவ் ரோலண்ட் சரித்திரத்தில் இடம்பிடிக்கவே செய்கிறான்……. காதலின்.

Sunday, December 5, 2010

ஜோன்ஸு குட்டி


XIII மிஸ்டரி காமிக்ஸ் கதை வரிசையின் மூன்றாவது ஆல்பத்தின் அட்டைப்படத்தையும், அதன் தலைப்பையும் காணும் XIII ரசிகர்கள், இந்த ஆல்பமானது கனவு+ கவர்ச்சி சிட்டு மேஜர் ஜோன்ஸின் கதையை கூறுவதாக எண்ணிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. நானும் அவ்வாறே எண்ணி வியந்தேன். ஏனெனில் கடந்த ஆல்பமான இரினாவில், அடுத்த கதை ஜோன்ஸ் குறித்தது என்று இருக்கவில்லை.

ஆல்பத்தின் ஆரம்ப பக்கங்களை செக்ஸ்பீர் தாடிவைத்த ஆடு மேய்வதுபோல் மேய்ந்தாலும்கூட, மேஜர் ஜோன்ஸ் ஒரு சிறுமியாக தன் அண்ணன் மார்க்கஸுடன் கறுப்பின மக்கள் அடர்ந்து வாழும் புறநகர்ப் பகுதியொன்றின் சீர்கெட்ட தெருக்களில் நடமாடுவதையே அங்கு காணமுடியும்.

ஆனால் Little Jones எனத் தலைப்பிடப்பட்ட இந்த ஆல்பம் பிரதானமாக James Elroy Wittaker குறித்தே பேசுகிறது. அதேவேளையில் அது சிறுமி ஜோன்ஸின் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியையும் முன்வைக்கிறது. விட்டேக்கரின் வாழ்வின் இப்பகுதியில் நடைபெறும் சம்பவங்களின் ஒரு சாட்சியாக சிறுமி ஜோன்ஸ், விட்டேக்கரை நிழல்போல் தொடர்வதை கதையில் காணக்கூடியதாக இருக்கிறது.

அனாதைகளான ஜோன்ஸும் அவன் சகோதரன் மார்கஸும் பொலிசாரால் துரத்தப்படும் ஆரம்ப பக்கங்களிலேயே, கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்களிற்கிடையிலனான பரஸ்பர இனத்துவேஷமானது காட்சிகள் வழியாகவும், உரையாடல்கள் வழியாகவும் கதையில் கூறப்பட்டு விடுகிறது. கதை 1960களில் இடம்பெறுகிறது. பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் காயப்படும் ஜோன்ஸ், அவ்வழியாக காரில் வரும் கறுப்பின ராணுவ அதிகாரி ஒருவரால் பாதுகாப்பாக அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, காயத்திற்கு சிகிச்சையும், பசிக்கு உணவும் அளிக்கப்படுகிறாள். அந்த இளம் ராணுவ அதிகாரி வேறுயாருமல்ல, மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர்தான் அவர்.

lj1 ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தாலும்கூட வெள்ளையர்களின் இனத்துவேஷக் கிண்டல்களிலிருந்து அவரிற்கு விலக்கு அளிக்கப்படுவதில்லை. வயதான தாய், சகோதரி ஏஞ்சலா, சகோதரன் ஃபீனிக்ஸ் என்பவர்களை கொண்ட சிறிய குடும்பம் விட்டேக்கரினுடையது. விட்டேக்கரின் தந்தையாக கதையில் காட்டப்படுபவர் மார்ட்டின் கால்வின் X என்பவராவார். மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் X ஆகியோரின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாத்திரம், கறுப்பின மக்களின் நியாயமான உரிமைகளிற்காக அமைதி வழியில் போராடி கொலை செய்யப்பட்ட மதிப்புமிகு தலைவராக கதையோட்டத்தில் சித்தரிக்கப்படுகிறது. இது போதாது என்று “நான் ஒரு கனவு கண்டேன்” எனும் சொற்றொடரும் விட்டேக்கரின் தந்தையின் புகழ் பெற்ற கூற்றாக கதையில் இடம்பிடித்திருக்கிறது.

தாயினால் மிகவும் அன்பு செய்யப்படும் விட்டேக்கர், தன் சகோதரி ஏஞ்சலாவின் கோபத்திற்குள்ளாகி இருப்பவனாக காட்டப்படுகிறான். இதற்கு காரணம், விட்டேக்கர் தன் தந்தையின் வழியில் கறுப்பின மக்களிற்காக போராடாமல் வெள்ளை தேசியத்தின் தேசபக்தி கொடியை தூக்கச் சென்றதே.

Black Panthers எனும் கறுப்பின தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து, கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு விட்டேகரை கேட்கிறாள் ஏஞ்சலா. ஆனால் ப்ளாக் பன்தர்களின் வன்முறைச் சித்தாந்ததிலும், நடவடிக்கைகளிலும் வெறுப்புற்ற விட்டேக்கர், ஏஞ்சலாவின் வேண்டுகோளை முதலில் மறுத்து விடுகிறான். ஆனால் இதே விட்டேக்கர், ப்ளாக் பன்தர்களின் தலைவனான Booby Snake [பாம்பு பாபி], வன்முறை வழிகளை கைவிடுவதாக வாக்குறுதி அளித்ததும் கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல சம்மதிப்பவனாக கதையின் பிறிதொரு பகுதி ஆச்சர்யப்படுத்துகிறது.

விட்டேக்கரின் தம்பியான ஃபீனிக்ஸ், தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். விட்டேக்கரைப் போலவே உயரிய பதக்கங்களை வென்று, பிறர் மதிக்கும் திறமையான ராணுவ அதிகாரியாக ஆகிவிட வேண்டுமென்பது அவன் ஆசை. ஆனால் அமெரிக்க ராணுவத்தின் இனத்துவேஷத்திற்கு அவன் பலியாகிவிடுகிறான். தன் மீதான கிண்டல்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஃபீனிக்ஸ், ஒரு வெள்ளையின ராணுவ அதிகாரியை தாக்கிவிடுகிறான். இதனால் அவன் அமெரிக்க ராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுகிறான். இந்த தோல்வியும் தன் சகோதரனின் வெற்றியும் அவனை அழுத்துகிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தன் வாழ்வையும் தன் சகோதரன் வாழ்வையும் ஒப்பிட்டு மருகி வாழ்கிறான் அவன். வாழ்வின் புன்னகைக்கும் பக்கத்தில் இடம்பெற வாய்ப்பும் அதன்கூடவே வரும் அதிர்ஷ்டமும் இன்றியமையாதது என்பதை ஃபீனிக்ஸ் பாத்திரம் கதையோட்டத்தில் மெலிதாக உணர்திக்கொண்டே செல்கிறது.

lj2 வியட்நாமில் போரிட்ட விட்டேக்கர், அங்கு அவன் ஆற்றிய தீரச் செயல்களிற்காக உயரிய மதிப்பிற்குரிய பதக்கங்களை வென்ற ஒரு கறுப்பின அதிகாரியாக சித்தரிக்கப்படுகிறான். விட்டேக்கர் தன் இனத்தையே வெறுக்கும் ஒருவனாகவும், வெள்ளையர்கள் விரும்பும் கறுப்பினத்தவனாக இருப்பவனாகவும், அவர்களின் பிருஷ்டதுளைகளை நக்குபவனாகவும் கதையோட்டத்தில் பிற கதை மாந்தர்களால் குற்றம் சாட்டப்படுகிறான். போர் முனையில் கறுப்பின இளைஞர்கள் அதிகம் பலியானது வெள்ளை முதலாளித்துவ யுக்தி என்பதும், கறுப்பின மக்களின் வறுமையே அந்த சமூக இளைஞர்களை அமெரிக்க ராணுவத்தில் அதிகம் இணைந்து கொள்ள தூண்டியது என்பதும் ப்ளாக் பன்தர் குழுவின் கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன.

வியட்நாம் போரில் விட்டேக்கரால் காப்பாற்றப்பட்ட ஜெனரல் பேட்டின் மகளான ஷரோன் மீது விட்டேக்கரிற்கு இன்னமும் காதல் இருக்கிறது. சரோனும் அவனை தன் மனதில் இன்னமும் நேசிக்கிறாள். ஆனால் ஷரோன் திரைப்பட இயக்குனர் நார்மன் பால்டான்ஸ்கியை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறாள். சர்ச்சைக்குரிய இயக்குனரான நார்மன் பால்டான்ஸ்கி, கறுப்பின புரட்சிக்குழுவான ப்ளாக் பன்தரை மையமாக கொண்டு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஷரோன் தேர்வாகி இருக்கிறாள். இந்நிலையில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஷரோன் பேட்டின் உடல் அவள் வீட்டில் கண்டுபிடிக்கப்படுகிறது..

இக்கொலையை உண்மையில் செய்தது யார்? அதற்கான காரணம் என்ன ? இக்கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது யார்? இக்கொலையின் பின் மறைந்திருக்கும் சதித்திட்டம் என்ன ? அதன் சூத்திரதாரிகள் யார் ? மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், கறுப்பின மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பானா இல்லை வெள்ளை அதிகாரத்தின் சதியை எதிர்த்துப் போராடுவானா? இவற்றிற்கான விடைகளையெல்லாம் விறுவிறுப்பாகவும் சீரான வேகத்துடனும் கூறிச் செல்கிறது இக்காமிக்ஸின் கதாசிரியர் Yann le Pennetier வழங்கியிருக்கும் சிறப்பான கதை.

சர்ச்சைக்குரிய இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியை நண்பர்கள் அறியாமல் இருக்க வாய்புக்கள் இல்லை. அவரிற்கு Sharon Tate எனும் மனைவி இருந்தார். வளர்ந்து வரும் நடிகையாக இருந்த அவர் 1969ல் தன் வீட்டில் சில நண்பர்களுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கதாசிரியர் இயான் தகுந்த முறையில் கற்பனை கலந்து கதையில் இணைத்திருக்கிறார். மேலும் கதையில் வரும் இயக்குனர் நார்மன் பொல்டான்ஸிக்கும் நிஜ இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கிக்கும் உருவத்திலும் சரி, செயல்களிலும் சரி ஒற்றுமைகள் அதிகமாகவே உள்ளன. நிஜ சம்பவங்களையும், பாத்திரங்களையும் கற்பனை கலந்து கதையில் இணைத்தன் மூலம் XIII ன் மரபான கதை சொல்லல் முறையிலிருந்து விலகி புதிய பாதைக்கு தன் கதையை இட்டுச் சென்றிருக்கிறார் கதாசிரியர் இயான்.

lj3 காரிங்டன், மங்கூஸ், ஜியோர்டினோ என XIII ன் பிரபல பாத்திரங்கள் கதையில் கவுரவ வேடங்களில் [ நட்பிற்காக] இடம் பிடித்திருக்கிறார்கள். கதையின் இறுதியில் வரும் அந்த இரு அட்டகாசமான திருப்பங்களும் கதையின் மிகப் பெரிய பலமாக அமைந்து விடுகின்றன. அதில் ஒரு திருப்பத்தின் பின்பாக விட்டேக்கரை நாம் பார்க்கும் பார்வையே வேறாக இருக்கும். அந்த திருப்பத்தை XIII தனமான ஒரு திருப்பமாக நிச்சயம் வகைப்படுத்த முடியும். அந்த விதத்தில் ஜான் வான் ஹாமிற்கு சிறிது கிச்சு கிச்சு காட்டியிருக்கிறார் இயான்.

அதேபோல் ஜோன்ஸின் உண்மையான பெயர் என்ன என்பதை அறியும் தருணமும் அருமையே. ஜோன்ஸின் உண்மையான பெயரிற்கு பொருத்தமானவள்தான் அவள். அவள் பெயர் ஒரு கவிதையாக அந்த தருணத்தில் ஒலிக்கும்.சிறுமியாக இருக்கும்போதே ஆண்களின் ஆணாதிக்க கருத்துக்களை எதிர்க்கும் ஒருத்தியாகவும், ராணுவத்தில் சேர விரும்புபவளாகவும், தன் சுற்றுப்புறத்தை கூர்ந்து அவதானித்து தகவல்களை கிரகிக்கும் இயல்பு கொண்டவளாகவும் ஜோன்ஸ் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ப்ளாக் பன்தர் போஸ்டரை பின்னணியாகக் கொண்டு விரல்களை துப்பாகியாக்கி சிரிக்கும் அட்டைப்பட ஜோன்ஸை பாருங்கள். ஒரு ஆபத்தான அழகி உருவாகிறாள் என்பதற்கு சான்றல்லவா அது.

கதையின் சில பக்கங்களில் வரும் சித்திரங்கள் இக்கதை வளர்ந்தவர்களிற்கானது என்று நிரூபிக்கிறது. ஓவியர் எரிக் ஹெனானோவின் சித்திரங்கள் கதைக்கு சிறப்பாக துணை நிற்கின்றன. இருப்பினும் அவர் அடக்கி வாசித்திருப்பதாக எழும் உணர்வை அடக்க முடியவில்லை. ஹெனானோவின் சித்திரத்திறமையை நாம் கார்த்தகாவோவில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த தரம் இக்கதையில் இல்லை என்பதே உண்மை. வில்லியம் வான்ஸின் சித்திரங்களை வேறு யாரும் தாண்டி சென்று விடக்கூடாது என்பது XIII மிஸ்டரி கதைவரிசையின் எழுதப்படாத நியதியாக இருக்கும் போல் தெரிகிறது.

விட்டேக்கரின் வாழ்க்கையினூடாக நிழல்போல் நகர்ந்து அனாதையாக விடப்படும் சிறுமியான ஜோன்ஸை, காரிங்டன் தத்தெடுத்து ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அழைத்து செல்வதோடு ஜோன்ஸுடன் ஆரம்பித்த விட்டேக்கரின் கதை ஜோன்ஸுடன் ஒரு முடிவிற்கு வருகிறது.

தேசப்பற்று, இனப்பற்று, காதல், பாசம், சதி, அளவான ஆக்‌ஷன், அதிர வைக்கும் முடிவுகள் என இதுவரை வந்த XIII மிஸ்டரி கதைகளில் சிறப்பான இடத்தை எட்டிப் பிடிக்கிறது லிட்டில் ஜோன்ஸ். ஆனால் அட்டைப்படமும், தலைப்பும் விட்டேக்கரை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஜோன்ஸ் பாத்திரத்தை பயன்படுத்தி அதிக ஆல்பங்களை விற்றுத்தள்ள பதிப்பகம் உபயோகித்திருக்கும் ஒரு வணிக யுக்தி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கரின் கதையை பிரதானமாக கூறும் இக்காமிக்ஸ் ஆல்பத்தின் அட்டையில் அவர் பெயரும், உருவமும் இல்லாதது பொருத்தமற்ற ஒன்றாகவே எனக்கு தெரிகிறது. இல்லை அதிலும் கூட ஏதேனும் மர்மத்தை பதிப்பகத்தார் வைத்திருக்கிறார்களா என்பது கடவுளிற்கே இருட்டான ஒன்றுதான். [***]

Friday, April 23, 2010

இருளே என் பெயர் இரினா


13049_167674563396_89262728396_2619981_6052789_n வெண்பனி, அளவெடுத்து போர்வை தைத்து பெலரூஸின் அந்தக் கிராமப்புறத்தை போர்த்தியிருந்தது. காமம் கொண்ட காதலன் போல், இரவு பிடிவாதமாக அப்போர்வையின் மீது படிந்திருந்தது. கிராமத்திலிருக்கும் அந்த அனாதை விடுதியின் விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டிருக்கின்றன. பெண்களிற்கான அந்த விடுதியின் படுக்கை மண்டபத்தினுள், தன் கையில் ஒரு டார்ச் விளக்குடன் நுழைகிறாள் விடுதியைக் காவல் காக்கும் பெண்.

மண்டபத்தில் நீண்டு கிடக்கின்றன படுக்கைகள். அனாதையான எதிர்காலங்கள் அவற்றின்மேல் தம்மை மறந்து துயில் கொண்டிருக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் இரினா மற்றும் யூலியா ஆகிய இரு இளம் பெண்களையும் அவர்களின் உறக்கத்திலிருந்து எழுப்பும் விடுதியின் காவற்காரி, அவர்களைத் தனியே அழைத்துச் செல்கிறாள்.

அனாதை விடுதியில் சுகாதர விதிமுறைகள் எவ்வாறு பேணப்படுகின்றன எனபது குறித்து, திடீர் சோதனையிட மொஸ்கோவிலிருந்து வந்திருக்கும் அதிகாரி ஒருவன், இந்த நள்ளிரவிலும் அவர்களைத் தனித் தனியே சோதனையிடப் போகிறான் என்பதை டார்ச் லைட்டின் வீர்யமற்ற பிரகாசத்தில் இளம் பெண்களிற்கு விளக்குகிறாள் அனாதை விடுதியின் காவற்காரி.

முதலாவதாக யூலியாவை அதிகாரி பரிசோதிப்பதற்காக அவனிருக்கும் அறைக்கு இட்டுச் செல்கிறாள் காவற்காரி. தனது ஆருயிர் தோழியை எதிர்பார்த்து இருளில் காத்திருக்கிறாள் இரினா. யூலியாவின் இதழ்களின் சுவை இரினாவில் விழித்திருந்தது.

சில மணித்துளிகளின் பின் யூலியாவும், காவற்காரியும் இருளில் காத்திருந்த இரினாவை நெருங்கி வருகிறார்கள். தனது தோழி யூலியா மடங்கியவாறே நடந்து வருவதையும், அவள் முகத்தில் ஓடும், வலியின் விகாரமான கோடுகளையும் அவதானித்து விடுகிறாள் இரினா.

iri1 விடுதியின் காவற்காரி இரினாவை மறு பேச்சு பேசாது உடனடியாக படுக்கை மண்டபத்திற்கு திரும்ப உத்தரவு தருகிறாள். இரினாவோ யூலியாவிற்கு என்ன நிகழ்ந்தது என்று அக்கறையுடன் விசாரிக்க, யூலியாவின் உடல் நிலை திடீரென சீர் கெட்டு விட்டது எனப் பதில் தருகிறாள் காவற்காரி. இரினாவை உடனடியாகப் படுக்கைக்கு திரும்பச் சொல்லும் காவற்காரி யூலியாவை விடுதியின் சிகிச்சைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறாள்.

காவற்காரி, யூலியாவுடன் சிகிச்சைப் பிரிவை நோக்கி மறைந்ததும், யூலியாவை சோதனையிட்ட அறையை நோக்கி மெதுவாக நகர்கிறாள் இரினா. அந்த அறையை நெருங்கும் அவள், அங்கு ஒரு அதிகாரி தன் கத்தியையும், தரையில் சிந்தியிருந்த ரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். சிறிது நேரத்தில் அந்த அதிகாரி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறி விட, அறையினுள் நுழையும் இரினா தரையில் ஊறியிருந்த ரத்த வாடையை முகர்கிறாள், கீழே வீழ்ந்திருந்த ஒரு சிகப்பு நட்சத்திரப் பதக்கத்தையும் கண்டெடுக்கிறாள்.

மறுநாள் காலை, யூலியா அந்த அனாதை விடுதியிலிருந்து தடயம் ஏதுமின்றி காணமல் போயிருக்கிறாள். அனாதை விடுதிக் காவற்காரியை தன் தோழி பற்றிய கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள் இரினா. ஆத்திரமுறும் காவற்காரி இரினாவை அடித்து, மிரட்டுகிறாள்.

தன் உயிர்த் தோழியின் மறைவிற்காக மனம் வருந்தும் இரினா, பரிசோதனையின்போது யூலியா அதிகாரியால் சேதமாக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறாள். காயமுற்றிருந்த யூலியா பின்பு சிகிச்சைப் பிரிவில் இறந்திருக்க வேண்டும் எனும் முடிவிற்கு வரும் இரினா, பெயர் தெரியாத அந்த அதிகாரியை, அவன் யாராகவிருந்தாலும், அவன் எங்கேயிருந்தாலும் அவன் உயிரைத் தானே பறிப்பேன் என சபதமிடுகிறாள். அந்த அதிகாரியின் முகத்தை தன் மனதில் பதித்துக் கொள்கிறாள். சில நாட்களின் பின் அந்த அனாதை விடுதியிலிருந்து தப்பிச் செல்லுகிறாள். அவள் வாழ்வே அவளிடமிருந்து தப்பிச் செல்லப் போகிறது என்பதை அறியாமல்.

iri2 அனாதையான ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழும் உலகை விட சிறந்த நரகம் வேறேதுமில்லை. Minsk எனும் சிறு நகர் ஒன்றிற்குள் நுழையும் இரினா, உண்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் வீடுகளில் திருடுகிறாள். மூதாட்டிகளை அடித்து, நொருக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கிறாள். ஆனால் இரினா அந்நகரில் நுழைந்ததிலிலிருந்து ஒரு குழு அவள் நடவடிக்கைகளை தொடர்ந்து வேவு பார்த்து வருகிறது.

ஒரு சமயம் வீடொன்றில் திருடி விட்டுத் திரும்பும் இரினா இந்தக் குழுவிடம் மாட்டிக் கொள்கிறாள். அவர்களிடமிருந்து முரட்டுத்தனமாக தப்பிக்க முயலும் இரினாவை அடிகளால் பின்னி எடுக்கிறார்கள் அக்குழுவினர். அவர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காதிருக்கிறாள் இரினா. அவளின் உறுதி அக்குழுவினரை அசத்தியிருக்க வேண்டும். இரினாவிற்கான புதைகுழியை இரினாவையே தோண்டச் சொல்கிறார்கள் அவர்கள்.

பனி உறைந்த நிலம், காதலைப் புறக்கணித்த பெண்களின் மனங்களை விடக் கடினமானது. அந்த நிலத்தில் புதைகுழியை தோண்ட முடியாது தினறுகிறாள் இரினா. அந்த வேளையிலும், துப்பாக்கி தன் உயிரைக் குறி வைத்தபோதும், அக்குழுவினரின் கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை அவள். உயிரே போனாலும் சரி, தன் வாழ்க்கையில் மீண்டும் அந்த அனாதை விடுதிக்கு திரும்ப மாட்டேன் என உறுதியுடன் பேசுகிறாள் இரினா. அவளின் அந்த உறுதிதான் அவள் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவளைக் கொல்லப் போவதாக மிரட்டிய அக்குழுதான் அவளை KGB யில் கொண்டுபோய் சேர்த்தது.

அந்தக் குழுவானது Minsk நகரில் இரினாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்தது. நூறு வீதம் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டிய ஒர் சூழலில், எவ்வாறு அவள் தன்னைக் காத்துக் கொள்கிறாள், உயிர் வாழப் போராடுகிறாள், அவளது திறமைகள், அவளது தவறுகள் என யாவும் அக்குழுவால் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இரினாவிடம் அவர்களிற்கு மிகவும் பிடித்திருந்தது என்னவெனில், உயிர் தப்ப வேறு வழிகள் ஏதும் இல்லாத வேளையில், மரணத்தை மட்டுமே அவள் உறுதியாக எதிர் கொள்ளத் துணிந்தாள் எனும் அந்தத் தகுதிதான்.

KGB யில் இரினா பெறும் பயிற்சிகள், அதிகாரத்தின் கட்டளைகளிற்கு மறுபேச்சு ஏதும் பேசாது அடி பணியும் ஒரு தேர்ந்த கொலை எந்திரமாக அவளை வார்த்து எடுக்கிறது. KGBல் தான் பெற்ற பயிற்சிகளையும், தன் கவர்ச்சியையும் உபயோகித்து, அனாதை விடுதிக்கு நள்ளிரவில் விஜயம் செய்த அதிகாரி யார் என்பதை இரினா கண்டு பிடித்து விடுகிறாள். அந்த அதிகாரியின் பெயர் வசிலி இவானென்கோ. KGBன் உயர் மட்ட அதிகாரிகளுடன் நெருக்கம் கொண்டவன். KGBல் அவள் இணைந்ததிற்கு ஒர் புதிய அர்த்தம் கிடைத்து இருப்பதை இரினா உணர்ந்து கொள்கிறாள். இப்போது வாழ்வில் அவளிற்கு தேவையானது ஒன்று மட்டுமே, அது வசிலி இவானென்கோவின் ரத்தம்….

iri3 12 வருடங்களின் பின் இரினா எவ்வாறு வசிலி இவானென்கோவை நீயூயார்க்கில் வைத்து பழிவாங்குகிறாள் என்பதை விபரித்து செல்கிறது தொடரும் கதை. ஜெசிக்காவை KGBன் பக்கம் இழுப்பதற்காக இரினா, ஜெசிக்காவுடன் ஆடும் காதல் நாடகம், கேணல் ஏமஸை கொலை செய்யும் முயற்சி, மங்கூஸ்ட்டுடனான அறிமுகம் என XIII காமிக்ஸ் தொடரின் பிரபல பாத்திரங்களை கதைக் களத்திற்குள் புகுத்தியிருக்கிறார் கதாசிரியர் Corbeyran. கதாசிரியர் கோர்பேரான் எழுதிய ஒரு காமிக்ஸ் தொடர் குறித்து இரவுப் பறவையின் கானம் பதிவில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஜிவ்வென வேக விமானம் போல் பறக்க வேண்டிய கதை, மழையில் நனைந்த புறாவாக தத்துகிறது. கதையின் ஆரம்பத்தில் இருந்த வேகம் கதையின் ஓட்டத்தில் காணமல் போய்விடுகிறது. இரினா, இவானென்கோவிற்கு நெருங்கிய KGBன் குறிப்பிடத்தக்க அதிகாரியான விளாடிமீரை சந்தித்தல், விளாடிமீர் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தும் அவனைத் திருமணம் செய்தல், ஜெசிக்காவுடனான முதல் சந்திப்பிலேயே அவளை இரினா தன் காதல் வலையில் வீழ்த்தல், அமெரிக்காவில் KGBக்காக இரினா ஆற்றும் கொலைகள் போன்ற சம்பவங்கள் யாவும், கதையில் தட்டில் வைத்து இரினாவிற்கு வாய்ப்புக்களும்,அதிர்ஷ்டங்களும் பரிமாறப்படும் எளிமையான உணர்வை வழங்குகின்றன. இவற்றை போராடி அடைந்தால் அல்லவா வாசகனிற்கு இரினா பாத்திரம் மறக்க முடியாத ஒன்றாகவிருந்திருக்கும். அதிலும் KGB அதிகாரி இவானென்கோ, ஜெசிக்காவை சந்தித்த இரு மணி நேரத்திலேயே, அவளுடன் காதல் செய்வதற்காக ஒரு மூன்றாம்தர ஹோட்டலிற்கு ஓடி வருவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

தன் தோழி யூலியா போலவே தோற்றம் கொண்டவள் ஜெசிக்கா என்பதால்தான் அவள் மேல் இரினா கூடுதலான ஈர்ப்பு உடையவளாக இருக்கிறாள் என்று கதையில் கூறப்படுகிறது. ஆனால் இந்த உறவை வலுவாக்கும் உணர்வுகள் சிறப்பாக கதையில் வெளிப்படவில்லை என்பதால் அந்த உறவு நாடகம் எனும் நிலையிலேயே நின்று விடுகிறது. கதையில் இரினா குறித்து மங்கூஸ்ட் எவ்விதம் தெரிந்து கொண்டான் என்பதற்குரிய எந்தக் காரணங்களும் வழங்கப்படவில்லை. வாசகர்கள் பக்கங்களை பிறாண்டிக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி.

iri4 கேணல் ஏமஸ் கொலை முயற்சியும், அதன் பின்னே இருக்கும் KGBன் சதியும் உண்மையிலேயே ஒரு அமெச்சூர் நாடகம் பார்த்த உணர்வை வழங்கும் தரத்தில் இருக்கிறது. இவ்வகையான ஒரு நொளாநொளா கதை சொல்லலால், XIIIன் மிக முக்கிய வில்லியான இரினா பாத்திரத்தை வாசகர்கள் மனதில் உறுதியாக ஊன்றக் கிடைத்த வாய்ப்பை அநியாயத்திற்கும் தவற விட்டிருக்கிறார் கதாசிரியர்.

இரினா தங்கியிருந்த அனாதை விடுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை வாசகர்கள் அறியும் போது, இரினா மேல் இரக்கப்படுவதற்குப் பதிலாக அட போங்கய்யா என்று சொல்ல வைத்து விடுகிறது விறுவிறுப்பற்ற கதையோட்டம். மங்கூஸ்ட் கதையில் இருந்த அந்த விறுவிறுப்பு, மங்கூஸ்ட் பாத்திரத்திற்கு அக்கதையின் கதாசிரியர் சேவியர் டாரிசன் வழங்கியிருந்த புதிய பரிமாணம் போன்ற அம்சங்கள் இந்தக் கதையில் உயிரற்று மிதக்கிறது.

கதைக்கு சிறப்பான சித்திரங்களை வரைந்திருப்பவர் Philippe Berthet. கதை நெடுகிலும் மயக்கமான ஒரு இருள் மறைந்திருக்குமாற்போல் சித்திரங்களை வழங்கியிருக்கிறார் அவர். பனி படர்ந்த பெலரூஸ், வசந்தகால அமெரிக்கா, வான்ஸிற்கு இஷ்டமான மழைக்காட்சி என்று தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஓவியக் கலைஞர் பிலிப் பேர்த்தே.

சித்திரங்களில் அவர் காட்டியிருக்கும் ஒளி விளையாட்டுக்கள் அருமை. இளைமைப் பருவ இரினாவின் அழகை அவர் அழகாக வடித்திருக்கிறார். இரினாவினதும், ஜெசிக்காவினதும் இளமை அழகுகள் வாசகர்களிற்கு தாராளமாக அள்ளி வழங்கப்படுகிறது. வான்ஸ் உருவாக்கிய இரினாவைத் தழுவி, ஒரு புதிய, இளமையான இரினாவை வாசகர்களிற்கு தருவதில் பேர்த்தே வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் காமிக்ஸ் ஆல்பத்தை காப்பாற்றுவதில் பேர்த்தேயின் சித்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையல்ல.

XIII மிஸ்டரியின் இரண்டாவது ஆல்பமாகிய இரினா, வான்ஹாம் உருவாக்கிய இரினாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. பணத்தை அள்ளுவதற்காக மட்டுமே தொடரை நீட்டினால், இவ்வகையான விளைவுகள் தவிர்க்க முடியாத ஒன்றே. தன்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும் இருளில் நின்றவாறே எங்களைப் பார்த்து கவர்சியாகப் புன்னகைக்கிறாள் அழகி இரினா. அவளைச் சூழ்ந்திருக்கும் அந்த இருள் நீங்கப் போவதில்லை. வான்ஹாம் உருவாக்கிய இரினா மட்டுமே எங்கள் மனதில் நிலைத்திருப்பாள். இருள் மாறாமலே. [*]

Thursday, February 12, 2009

மை நேம் இஸ் மங்கூஸ்ட்

வணக்கம் என் அன்புக்கினிய நண்பர்களே. சென்ற பதிவாகிய மின்னலெனக் கொல், மற்றும் ஒர் ஜாலி முயற்சியான கழுத்திற்கு ஒரு கயிறு என்பவற்றிற்கு நீங்கள் வழங்கிய ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கான எதிரொலியை அப்பதிவுகளிற்கான கருத்துப் பெட்டியில் நீங்கள் படிக்கலாம்.
உலகமெல்லாம் பிப் 14ல் கொண்டாடப்படும் காதலர் தினத்தை, தங்கள் அன்புள்ளங்களோடு கொண்டாடப்போகும் ஜோடிகளிற்கும், காமிக்ஸ்ஸை மட்டுமே காதலிப்போம் குட்டிகள் அப்புறமே எனக் கர்ஜிக்கும் இளம் சிங்கங்களிற்கும் என் காமிக்ஸ் காதலர் தின நல்வாழ்த்துக்கள். ஒர் நல்லகாதலி, நல்ல ஒர் காமிக்ஸ் போன்றவளே, காமிரேட்டுகள் இரண்டையும் பாதுகாப்பதில் கில்லாடிகள் என்பதை யாம் அறிவோம். காமிக்ஸ் வலையுலக நிகழ்வுகளை சுருக்கமாக பார்ப்போம்.

பிகில்ஸ்,ரகர் பாய்ஸ் என ஒரே பதிவில் 2 சினிபுக் ஆல்பங்களைப் பற்றி அருமையாக எழுதியுள்ளார் நண்பர் ரஃபிக்.
வெளியூரில் ஜாலியாக டைம் பாஸ் பண்ணிவிட்டு, காமிக்ஸ் உலக செய்திகளை அதே சூட்டுடன் வழங்கியிருக்கிறார் பதிவுச்சூறாவளி விஸ்வா.
சபாஷ் போடவைக்கும் சிஸ்கோ கிட் பதிவை இட்டார் அன்பர் ககொககூ, ஆவிகள் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டன. செமரகளைதான்.
விளம்பரம் வந்து 12 நாட்களிற்குள் ஒர் பக்கா பதிவை தயார் பண்ணி, லயன் குடும்ப காமிக்ஸ்களே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் அப்புத்தகத்தை புரமோட் செய்து இட்டார் தலைவர் ஒரு பதிவு,அது விண்வெளிக் கொள்ளையரையே அடிமையாக்கிடும் நிகழ்வு.
இனி உங்களிற்கு அறிமுகமே தேவையற்ற ஒருவனின் கதையை பார்ப்போம்.


XIII-MYSTERY (LA MANGOUSTE- RALPH MEYER & XAVIER DORISON )

8 ஒக்டோபர் 1947, பெர்லினின் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் XIIIல் உங்களிற்கு நன்கு அறிமுகமான அந்தக் கொலைஞனின் கதை ஆரம்பமாகிறது. தச்சுப்பட்டறை ஒன்றில் தச்சன் வேபரும் (WEBER) அவன் வளர்ப்பு மகன் சிரெயினரும்(SCHREINER) வேலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கதவைத்திறந்து உள்ளே நுழையும் மூன்று ரஷ்ய சோல்தாக்கள் பணம் கேட்டு வேபரை அடித்து துன்புறுத்துகிறார்கள். சிறுவன் சிரெயினர் ஒர் மூலையில் தூக்கி வீசப்படுகிறான். தச்சுப்பட்டறை அடித்து நொருக்கப்படுகிறது. இதே சமயத்தில் பட்டறையின் உள்ளே நுழையும் கென்ஸ் (HANS) அந்த மூன்று ரஷ்ய வீரர்களையும் மிக எளிதாக கொன்று போட்டு விடுகிறான். கென்ஸை பார்க்கும் தன் வளர்ப்பு தந்தையின் கண்களில் தெரியும் ஈரமான நன்றியும், மதிப்பும் சிறுவன் சிரெயினரின் மனதில் விதையெனப் பதிகிறது. தன் வளர்ப்புத் தந்தையை இதனைவிட நூறுமடங்கு மகிழ்ச்சியுற வைப்பேன் என தன்னுள் தீர்மானம் கொள்கிறான் சிறுவன் சிரெயினர்.

1951, சிரெயினரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறான் வேபர். அமெரிக்காவில் சரியான வேலை அமையாது சிரமப்படுகிறான் சிரெயினர். இந்நிலையில் அவனை தொடர்பு கொள்ளும் வேபர் தன்னை ரஷ்ய பொலிசார் கொலைக் குற்றத்திற்காக கைது செய்த தகவலை தெரிவிக்கிறான். தன்னை காப்பாற்ற வேண்டின் நிறையப்பணம் லஞ்சமாக கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறி அழுகிறான்.

வேறு வழி தெரியாத சிரெயினர், பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அமெரிக்காவில் கென்ஸ் இருப்பதை தெரிந்து கொள்கிறான். அவனை தேடிச்சென்று, தன் நிலையை அவனிடம் விளக்கி அவனிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறான். தன் இயலா நிலயை சிரெயினரிடம் எடுத்துரைக்கிறான் கென்ஸ். வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில் கென்ஸின்தொழிலை’’யாவது தனக்கு கற்றுத்தருமாறு அவனிடம் வேண்டுகிறான் சிரெயினர். பல்கொலைநுட்ப கல்வி ஆரம்பமாகிறது.

மிகக் கடுமையான பயிற்சிகள், அறிவுரைகள், தன் தனிக்கவனிப்பின் மூலம் சிரெயினரின் ஆழத்திலிருந்த ஒர் பக்குவமான கொலைகாரனிற்கு உயிர் கொடுக்கிறான் கென்ஸ். கென்ஸின் அறிவுரை ஒன்றைப் பார்ப்போம்.
`` விப்பர் பாம்பு மனிதனை விட வேகமானது அல்ல. அளவிலும், வலிமையிலும் சிறியது, சிறிதளவு அபாயகரமானது. ஆனால் அது எங்கள் மேல் கொண்டுள்ள பலத்திற்கு காரணத்தை ஒரு சொல்லில் கூறினால்=பயம். இரைக்கும், வேட்டையாடுபவனிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இது ஒன்றுதான். உன் பயத்தை ஒழி, அதை உன் மனதிலிருந்து இல்லாததாக்கு, எந்த பாம்பும் உன்னை தீண்டாது. முடியாது. எனக்கு கிடைத்தது போன்று உனக்கும் மங்கூஸ்ட் என்ற பெயர் கிடைக்கும்’’ [பக்.25]

யிற்சிகள் முடிவடைகின்றன, சிரெய்னரின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன, முதல் ஒப்பந்தக் கொலைக்காக லாகோஸ் செல்கிறான் அவன், அதில் வெற்றியும் காண்கிறான். அமெரிக்காவிற்கு திரும்பும் அவனிற்கு அதற்கான பணம் கிடைக்கிறது. லஞ்சம் கொடுத்தும் வேபரை விடுவிக்க முடியாமல் போய்விட, கென்ஸை தன்னுடன் பெயரளவில் இணைந்து பணியாற்றும்படி கேட்கிறான் அவன். டெய்லி போஸ்ட் எனும் தினசரியில் கென்ஸின் வாடிக்கையாளர்கள், அவன் திறமை பற்றி கேள்வியுற்றவர்கள் ஒர்`` மங்கூஸ்ட்’’ தேவை என விளம்பரம் செய்கிறார்கள். அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஒப்பந்தக் கொலைகளை நிறைவேற்றுகிறான் மங்கூஸ்ட். பணம் கொட்டுகிறது, அவன் வாழ்க்கை முறையும் மாறுகிறது. வாழ்வின் சிறப்பானவற்றையெல்லாம் அனுபவிக்கிறான் மங்கூஸ்ட். காலம் ஓடுகிறது தனிமை அவனைக்கொல்ல ஆரம்பிக்கிறது, வசதியான வாழ்வின் சுவைகளிலிருந்து விடுபட ஆரம்பிக்கின்றான் மங்கூஸ்ட். இந்நிலையில் அவன் வாழ்வின் ஓட்டத்தை நிரந்தரமாக மாற்றப்போகும் ஒர் மாபெரும் ஒப்பந்தம் அவனை வந்தடைகிறது.

து என்ன ஒப்பந்தம்? ஒப்பந்தத்தை மங்கூஸ்ட் நிறைவேற்றினானா? அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன? ஏஜண்ட் XIII மீது ஏன் இவ்வளவு வெறிகொண்டவனாக மங்கூஸ்ட் இருக்கிறான் என்பதை மீதிப்பக்கங்களில் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிப்பக்கம் வரை, ஒர் தேர்ந்த கொலையாளியின் நுட்பமும்,வேகமும் நிறைந்த அசைவுகள் போன்று தொய்வே ஏற்படாது பாய்ந்து செல்லும் கதையமைப்பு, அதனைக் கொலையாளியின் மொழியில் சொன்ன விதம், வில்லியம் வான்சின் சித்திர அமைப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, புது ரத்தம் பாய்ச்சப்பட்ட சித்திரங்கள் என வெற்றிக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் கதாசிரியர் சேவியர் டாரிசனும், சித்திரக்காரர் ரல்ஃப் மெய்ரும். பக்கங்களை, பணம் எண்ணும் இயந்திரத்தின் வேகத்தில் திருப்ப வைக்கும், கதையின் சிறப்பான எடிட்டிங்குக்கு காரணமான டார்கோட் அணியினரை பாராட்டியே ஆக வேண்டும். கென்ஸ், சிரெய்னரிற்கு வழங்கும் பாடங்களும், பயிற்சிகளும் அபாரம். தான் நேசிக்கும் இரு தகப்பன் பிம்பங்களிற்காக தன்னை தொலைக்கும் மங்கூஸ்ட் பாத்திரம் அருமை.

மொத்தத்தில் XIII ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஆல்பம் இதுவாகும். மெய்ரும், டாரிசனும் பிரெஞ்சுக்காரர்கள். டாரிசன்,1972ம் ஆண்டில் பிறந்தவர். வர்த்தகத்துறையில் கல்வி. பின்பு BARCLAYS CORPல் வேலை. இவரது கதைகளான THE THIRD TESTAMENT, SANCTUARY என்பன ரசிகர்கள் மத்தியில் இவரிற்குரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவையாகும். மெய்யர், பிறந்தது 1971ல். இளம் வயதில் பிங்-பாங் சாம்பியனாக வேண்டுமென கனவு கண்டவர், பின் பெற்றோரின் சொல்லிற்கேற்ப கலைத்துறையில் காலடி வைத்தவர். TOME, எனும் கதாசிரியருடன் இணைந்து இவர் பணியாற்றிய BERCEUSE MURDERS கதை நல்ல வரவேற்பை பெற்றது. டாரிசன்,மெய்யர், இருவரும் இணைந்து பணியாற்றியது இதுவே முதல் முறை. [கலக்கீட்டிங்கப்பு]













XIII பிரதான தொடர் முடிவடையவில்லை. அதற்கு தற்காலிக ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. வான் ஹாமும், வில்லியம் வான்ஸும் இன்னொரு கதைத்தொடரை ஆரம்பிக்க விருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் வான் ஹாம் சற்று இளைப்பாற விரும்பியதால், உடனடியாக அத்தொடர் வருவதற்குரிய சாத்தியங்கள் குறைவே அதற்கு ஈடாக வந்ததே XIII -MYSTERY தொடர்.

- XIII ன் பிரதான தொடரில் அறிமுகமாகிய உபபாத்திரங்களின் பெயரில், பாத்திரத்திற்கு ஒன்றென 54 பக்கங்கள் கொண்டஆல்பங்கள்.[ அடுத்து வருவது இரினா(IRINA)]

- XIII ன் பிரதான கதையுடன் தொடர்புடைய, ஆனால் நாங்கள் இன்னும் அறியாத மர்மங்கள்.

- கதைக்கு கதை, புதிய கதாசிரியர் அவருடன் முதல் முறையாக பணியாற்றும் சித்திரக்காரர்.

நண்பர்களே, ஆட்டம் முடியவில்லை XIII தொடர்கிறது.

ஆல்பத்தின் தரம் *****
மங்கூஸ்டின் கதையை ஒரளவு தெரிந்து கொண்ட பின் இதுவரை நீங்கள் படித்த XIII தொடரில் நீங்கள் கண்ட மங்கூஸ்டின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன? இனிவரப்போகும் கதைகளில் மங்கூஸ்ட் பாத்திரத்தின் மீதான உங்கள் பார்வை எவ்வாறு இருக்கும்?இவற்றைக் குறித்தும்,பதிவைப்பற்றியும் உங்கள் மேன்மையான கருத்துக்களை பதிந்து செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்வலர்களிற்கு

ஆல்பதின் சில பக்கங்கள்.

ட்ரெயிலர்