Showing posts with label Ralph Meyer. Show all posts
Showing posts with label Ralph Meyer. Show all posts

Thursday, February 12, 2009

மை நேம் இஸ் மங்கூஸ்ட்

வணக்கம் என் அன்புக்கினிய நண்பர்களே. சென்ற பதிவாகிய மின்னலெனக் கொல், மற்றும் ஒர் ஜாலி முயற்சியான கழுத்திற்கு ஒரு கயிறு என்பவற்றிற்கு நீங்கள் வழங்கிய ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கான எதிரொலியை அப்பதிவுகளிற்கான கருத்துப் பெட்டியில் நீங்கள் படிக்கலாம்.
உலகமெல்லாம் பிப் 14ல் கொண்டாடப்படும் காதலர் தினத்தை, தங்கள் அன்புள்ளங்களோடு கொண்டாடப்போகும் ஜோடிகளிற்கும், காமிக்ஸ்ஸை மட்டுமே காதலிப்போம் குட்டிகள் அப்புறமே எனக் கர்ஜிக்கும் இளம் சிங்கங்களிற்கும் என் காமிக்ஸ் காதலர் தின நல்வாழ்த்துக்கள். ஒர் நல்லகாதலி, நல்ல ஒர் காமிக்ஸ் போன்றவளே, காமிரேட்டுகள் இரண்டையும் பாதுகாப்பதில் கில்லாடிகள் என்பதை யாம் அறிவோம். காமிக்ஸ் வலையுலக நிகழ்வுகளை சுருக்கமாக பார்ப்போம்.

பிகில்ஸ்,ரகர் பாய்ஸ் என ஒரே பதிவில் 2 சினிபுக் ஆல்பங்களைப் பற்றி அருமையாக எழுதியுள்ளார் நண்பர் ரஃபிக்.
வெளியூரில் ஜாலியாக டைம் பாஸ் பண்ணிவிட்டு, காமிக்ஸ் உலக செய்திகளை அதே சூட்டுடன் வழங்கியிருக்கிறார் பதிவுச்சூறாவளி விஸ்வா.
சபாஷ் போடவைக்கும் சிஸ்கோ கிட் பதிவை இட்டார் அன்பர் ககொககூ, ஆவிகள் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டன. செமரகளைதான்.
விளம்பரம் வந்து 12 நாட்களிற்குள் ஒர் பக்கா பதிவை தயார் பண்ணி, லயன் குடும்ப காமிக்ஸ்களே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் அப்புத்தகத்தை புரமோட் செய்து இட்டார் தலைவர் ஒரு பதிவு,அது விண்வெளிக் கொள்ளையரையே அடிமையாக்கிடும் நிகழ்வு.
இனி உங்களிற்கு அறிமுகமே தேவையற்ற ஒருவனின் கதையை பார்ப்போம்.


XIII-MYSTERY (LA MANGOUSTE- RALPH MEYER & XAVIER DORISON )

8 ஒக்டோபர் 1947, பெர்லினின் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் XIIIல் உங்களிற்கு நன்கு அறிமுகமான அந்தக் கொலைஞனின் கதை ஆரம்பமாகிறது. தச்சுப்பட்டறை ஒன்றில் தச்சன் வேபரும் (WEBER) அவன் வளர்ப்பு மகன் சிரெயினரும்(SCHREINER) வேலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கதவைத்திறந்து உள்ளே நுழையும் மூன்று ரஷ்ய சோல்தாக்கள் பணம் கேட்டு வேபரை அடித்து துன்புறுத்துகிறார்கள். சிறுவன் சிரெயினர் ஒர் மூலையில் தூக்கி வீசப்படுகிறான். தச்சுப்பட்டறை அடித்து நொருக்கப்படுகிறது. இதே சமயத்தில் பட்டறையின் உள்ளே நுழையும் கென்ஸ் (HANS) அந்த மூன்று ரஷ்ய வீரர்களையும் மிக எளிதாக கொன்று போட்டு விடுகிறான். கென்ஸை பார்க்கும் தன் வளர்ப்பு தந்தையின் கண்களில் தெரியும் ஈரமான நன்றியும், மதிப்பும் சிறுவன் சிரெயினரின் மனதில் விதையெனப் பதிகிறது. தன் வளர்ப்புத் தந்தையை இதனைவிட நூறுமடங்கு மகிழ்ச்சியுற வைப்பேன் என தன்னுள் தீர்மானம் கொள்கிறான் சிறுவன் சிரெயினர்.

1951, சிரெயினரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறான் வேபர். அமெரிக்காவில் சரியான வேலை அமையாது சிரமப்படுகிறான் சிரெயினர். இந்நிலையில் அவனை தொடர்பு கொள்ளும் வேபர் தன்னை ரஷ்ய பொலிசார் கொலைக் குற்றத்திற்காக கைது செய்த தகவலை தெரிவிக்கிறான். தன்னை காப்பாற்ற வேண்டின் நிறையப்பணம் லஞ்சமாக கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறி அழுகிறான்.

வேறு வழி தெரியாத சிரெயினர், பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அமெரிக்காவில் கென்ஸ் இருப்பதை தெரிந்து கொள்கிறான். அவனை தேடிச்சென்று, தன் நிலையை அவனிடம் விளக்கி அவனிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறான். தன் இயலா நிலயை சிரெயினரிடம் எடுத்துரைக்கிறான் கென்ஸ். வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில் கென்ஸின் ‘தொழிலை’’யாவது தனக்கு கற்றுத்தருமாறு அவனிடம் வேண்டுகிறான் சிரெயினர். பல்கொலைநுட்ப கல்வி ஆரம்பமாகிறது.

மிகக் கடுமையான பயிற்சிகள், அறிவுரைகள், தன் தனிக்கவனிப்பின் மூலம் சிரெயினரின் ஆழத்திலிருந்த ஒர் பக்குவமான கொலைகாரனிற்கு உயிர் கொடுக்கிறான் கென்ஸ். கென்ஸின் அறிவுரை ஒன்றைப் பார்ப்போம்.
`` விப்பர் பாம்பு மனிதனை விட வேகமானது அல்ல. அளவிலும், வலிமையிலும் சிறியது, சிறிதளவு அபாயகரமானது. ஆனால் அது எங்கள் மேல் கொண்டுள்ள பலத்திற்கு காரணத்தை ஒரு சொல்லில் கூறினால்=பயம். இரைக்கும், வேட்டையாடுபவனிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இது ஒன்றுதான். உன் பயத்தை ஒழி, அதை உன் மனதிலிருந்து இல்லாததாக்கு, எந்த பாம்பும் உன்னை தீண்டாது. முடியாது. எனக்கு கிடைத்தது போன்று உனக்கும் மங்கூஸ்ட் என்ற பெயர் கிடைக்கும்’’ [பக்.25]

பயிற்சிகள் முடிவடைகின்றன, சிரெய்னரின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன, முதல் ஒப்பந்தக் கொலைக்காக லாகோஸ் செல்கிறான் அவன், அதில் வெற்றியும் காண்கிறான். அமெரிக்காவிற்கு திரும்பும் அவனிற்கு அதற்கான பணம் கிடைக்கிறது. லஞ்சம் கொடுத்தும் வேபரை விடுவிக்க முடியாமல் போய்விட, கென்ஸை தன்னுடன் பெயரளவில் இணைந்து பணியாற்றும்படி கேட்கிறான் அவன். டெய்லி போஸ்ட் எனும் தினசரியில் கென்ஸின் வாடிக்கையாளர்கள், அவன் திறமை பற்றி கேள்வியுற்றவர்கள் ஒர்`` மங்கூஸ்ட்’’ தேவை என விளம்பரம் செய்கிறார்கள். அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஒப்பந்தக் கொலைகளை நிறைவேற்றுகிறான் மங்கூஸ்ட். பணம் கொட்டுகிறது, அவன் வாழ்க்கை முறையும் மாறுகிறது. வாழ்வின் சிறப்பானவற்றையெல்லாம் அனுபவிக்கிறான் மங்கூஸ்ட். காலம் ஓடுகிறது தனிமை அவனைக்கொல்ல ஆரம்பிக்கிறது, வசதியான வாழ்வின் சுவைகளிலிருந்து விடுபட ஆரம்பிக்கின்றான் மங்கூஸ்ட். இந்நிலையில் அவன் வாழ்வின் ஓட்டத்தை நிரந்தரமாக மாற்றப்போகும் ஒர் மாபெரும் ஒப்பந்தம் அவனை வந்தடைகிறது.

அது என்ன ஒப்பந்தம்? ஒப்பந்தத்தை மங்கூஸ்ட் நிறைவேற்றினானா? அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன? ஏஜண்ட் XIII மீது ஏன் இவ்வளவு வெறிகொண்டவனாக மங்கூஸ்ட் இருக்கிறான் என்பதை மீதிப்பக்கங்களில் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிப்பக்கம் வரை, ஒர் தேர்ந்த கொலையாளியின் நுட்பமும்,வேகமும் நிறைந்த அசைவுகள் போன்று தொய்வே ஏற்படாது பாய்ந்து செல்லும் கதையமைப்பு, அதனைக் கொலையாளியின் மொழியில் சொன்ன விதம், வில்லியம் வான்சின் சித்திர அமைப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, புது ரத்தம் பாய்ச்சப்பட்ட சித்திரங்கள் என வெற்றிக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் கதாசிரியர் சேவியர் டாரிசனும், சித்திரக்காரர் ரல்ஃப் மெய்ரும். பக்கங்களை, பணம் எண்ணும் இயந்திரத்தின் வேகத்தில் திருப்ப வைக்கும், கதையின் சிறப்பான எடிட்டிங்குக்கு காரணமான டார்கோட் அணியினரை பாராட்டியே ஆக வேண்டும். கென்ஸ், சிரெய்னரிற்கு வழங்கும் பாடங்களும், பயிற்சிகளும் அபாரம். தான் நேசிக்கும் இரு தகப்பன் பிம்பங்களிற்காக தன்னை தொலைக்கும் மங்கூஸ்ட் பாத்திரம் அருமை.

மொத்தத்தில் XIII ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஆல்பம் இதுவாகும். மெய்ரும், டாரிசனும் பிரெஞ்சுக்காரர்கள். டாரிசன்,1972ம் ஆண்டில் பிறந்தவர். வர்த்தகத்துறையில் கல்வி. பின்பு BARCLAYS CORPல் வேலை. இவரது கதைகளான THE THIRD TESTAMENT, SANCTUARY என்பன ரசிகர்கள் மத்தியில் இவரிற்குரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவையாகும். மெய்யர், பிறந்தது 1971ல். இளம் வயதில் பிங்-பாங் சாம்பியனாக வேண்டுமென கனவு கண்டவர், பின் பெற்றோரின் சொல்லிற்கேற்ப கலைத்துறையில் காலடி வைத்தவர். TOME, எனும் கதாசிரியருடன் இணைந்து இவர் பணியாற்றிய BERCEUSE MURDERS கதை நல்ல வரவேற்பை பெற்றது. டாரிசன்,மெய்யர், இருவரும் இணைந்து பணியாற்றியது இதுவே முதல் முறை. [கலக்கீட்டிங்கப்பு]













XIII பிரதான தொடர் முடிவடையவில்லை. அதற்கு தற்காலிக ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. வான் ஹாமும், வில்லியம் வான்ஸும் இன்னொரு கதைத்தொடரை ஆரம்பிக்க விருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் வான் ஹாம் சற்று இளைப்பாற விரும்பியதால், உடனடியாக அத்தொடர் வருவதற்குரிய சாத்தியங்கள் குறைவே அதற்கு ஈடாக வந்ததே XIII -MYSTERY தொடர்.

- XIII ன் பிரதான தொடரில் அறிமுகமாகிய உபபாத்திரங்களின் பெயரில், பாத்திரத்திற்கு ஒன்றென 54 பக்கங்கள் கொண்டஆல்பங்கள்.[ அடுத்து வருவது இரினா(IRINA)]

- XIII ன் பிரதான கதையுடன் தொடர்புடைய, ஆனால் நாங்கள் இன்னும் அறியாத மர்மங்கள்.

- கதைக்கு கதை, புதிய கதாசிரியர் அவருடன் முதல் முறையாக பணியாற்றும் சித்திரக்காரர்.

நண்பர்களே, ஆட்டம் முடியவில்லை XIII தொடர்கிறது.

ஆல்பத்தின் தரம் *****
மங்கூஸ்டின் கதையை ஒரளவு தெரிந்து கொண்ட பின் இதுவரை நீங்கள் படித்த XIII தொடரில் நீங்கள் கண்ட மங்கூஸ்டின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன? இனிவரப்போகும் கதைகளில் மங்கூஸ்ட் பாத்திரத்தின் மீதான உங்கள் பார்வை எவ்வாறு இருக்கும்?இவற்றைக் குறித்தும்,பதிவைப்பற்றியும் உங்கள் மேன்மையான கருத்துக்களை பதிந்து செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்வலர்களிற்கு

ஆல்பதின் சில பக்கங்கள்.

ட்ரெயிலர்