எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வலைத்தளத்தில் சமீபத்தில் தான் படித்த மிக சுவாரஸ்யமான ஐந்து வலைப் பக்கங்களை தந்துள்ளார். அவற்றில் ஒன்றாக கனவுகளின் காதலன் வலைப்பூவும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பற்றி அறிந்த நண்பர்களிற்கு என் மகிழ்ச்சி எவ்வகையானதாகவிருக்கும் என்பதனைக் கூறத்தேவையில்லை.
நவீன தமிழ் இலக்கியம், சினிமா, நாடகம், குறும்படங்கள் என பல தளங்களில் செயற்படுபவர் அவர். தன் வசீகரிக்கும் எழுத்துக்களால் வாசகனின் அருகில் வந்து விடுபவர். சிறு வயது முதலே காமிக்ஸ் புத்தகங்களிற்கு ரசிகராகவும் அவர் இருக்கிறார். அவர் வலைத்தளத்தில் அவர் காமிக்ஸ் பற்றி எழுதியும் கூட இருக்கிறார். காமிக்ஸ் கதை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆசையும் அவரிடத்தில் இருக்கிறது.
கனவுகளின் காதலனை அவர் படித்திருக்கிறார் என்பதே போதும் என்ற போது, அதனை தன் வலைத்தளத்தில் சிறப்பான பக்கம் என பரிந்துரை செய்ததை நான் ஒர் அற்புதம் என்பேன்.
என் வலைப்பூவிற்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு நண்பர்களிற்கும், மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கட்கும் என் அன்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கையில் காமிக்ஸுடன் எஸ்ரா அவர்கள் இருக்கும் இந்தப் படம் இளம் காளை விஸ்வா அவர்களினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விஸ்வா ஒழுங்கு செய்திருந்த காமிக்ஸ் வாசகர்கள் ஒன்று கூடல் ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருக்கிறார் எஸ்ரா அவர்கள். விஸ்வாவிற்கு என் நன்றிகள்.
தன் பாட்டியின் உடல் நலம் சீர்குலைந்ததன் காரணமாக அவள் அருகில் சிறிது காலம் தங்கியிருக்க விரும்பும் தன் தாயுடன் டோக்கியோவிலிருந்து ஒர் சிறிய நகரத்திற்கு வந்து சேர்கிறான் சிறுவன் சுகே.
நகரிலிருக்கும் சிறு பள்ளியில் மாணவனாக இணைந்து கொள்ளும் சுகே, அவன் வகுப்பு மாணவர்கள் முன் தன்னை அறிமுகம் செய்து கொள்கையில், தான் சிறு வயதிலிருந்தே பியானோ கற்பதாக கூறுகிறான்.
புதிய வரவான சுகேயை சீண்ட விரும்பும் வகுப்பு மாணவர்கள், பள்ளியின் அருகிலுள்ள காட்டில் அனாதரவாக விடப்பட்டிருக்கும் பியானோவினை அவனால் இசைக்க முடியுமா எனக்கேட்டு தொந்தரவு தருகிறார்கள். அப்பியானோ யார் வாசித்தாலும் இசையைத் தருவதில்லை எனவே நீ முயன்று பார் என்று அவனைத் தூண்டுகிறார்கள்.
இவ்வேளையில் அங்கு வரும் கய் எனும் சிறுவன் சுகேயை சக மாணவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான். காட்டின் மத்தியிலுள்ள பியானோவை தான் வாசிப்பதாகவும், அது நன்றாக இசையை வழங்கக் கூடிய ஒர் பியானோ என்றும் அவன் தெரிவிக்கிறான்.
பள்ளியில் அன்றைய வகுப்புகள் முடிவடைந்ததும் சுகேயை அருகிலிருக்கும் காட்டினுள் அழைத்து செல்கிறான் கய். பியானோ இருக்கும் இடத்திற்கு சுகேயை இட்டுச் செல்லும் கய், காட்டின் மத்தியில், தனிமையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் ஒர் பியானோவை அவனிற்கு காட்டுகிறான்.
அப் பியானோவைக் கண்டு மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் ஒருங்கே கொள்ளும் சுகே, அதனை இசைக்க விரும்புகிறான். பியானோவின் முன் அமர்ந்து தன் விரல்களால் அதனை இசைக்க முற்படுகையில் பியானோ இசைக்க மறுக்கிறது.
இதனால் சற்றுக் குழப்பமுறும் கய், தான் முயன்று பார்ப்பதாகக் கூறி பியானோ முன்னமர்கிறான். அவன் விரல்கள் பியானோ மீது பட்டது தான் தாமதம், அவனை ஒர் மாயசக்தி அரவணைத்தது போன்ற ஒர் மயக்கத்தில் அப் பியானோவை அவன் வாசிக்க, பியானோவும் இனிய இசையை வழங்குகிறது. தான் கேட்கும் இசையில் மயங்கி, தன் நெஞ்சில் கைகளை வைத்துக் கொள்கிறான் சுகே.
கய் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவன், பியானோவை முறையாக கற்காதவன் என்பதை சுகே அறிந்து கொள்ளும் போது அது அவனை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது. சிறுவன் கய்யை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் சுகே.
சுகேயின் தந்தை ஒர் பிரபல பியனோக் கலைஞர். சுகேயின் தந்தையைப் போலவே அவன் ஒர் நாடு போற்றும் கலைஞனாக உருவாக வேண்டுமென்பது அவன் தாயின் அவா.
கய்யை தன் பாட்டியின் வீட்டிலிருக்கும் பியானோவை இசைக்க சொல்லி கேட்கிறான் சுகே. ஆனால் அப் பியானோவை முறைப்படி இசைக்க முடியாது கர்ணகடூரமான இசையை ஒலிக்க செய்கிறான் கய்.
கய் முறைப்படி பியானோவை இசைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறான் சுகே. பியானோ தனக்கு ஒர் விளையாட்டு, மேலும் அதனைக் கற்றுக் கொள்ளுமளவிற்கு தான் வசதி படைத்தவன் அல்ல என்று கூறும் கய், சுகே அவனிற்கு பியானோ கற்றுத் தர முன் வந்த போதும் அதனைப் பிடிவாதமாக மறுத்து விடுகிறான்.
சிறுவர்களின் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிகிறான் அஜினோ. சுகேயின் தாய் மூலமாக அஜினோ ஒர் காலத்தில் ஜப்பானின் மிகவும் பிரபலமான ஒர் பியானோக் கலைஞனாக இருந்ததை சிறுவர்கள் இருவரும் அறிந்து கொள்கிறார்கள்.
அஜினோவைத் தன் மகனுடன் காணச்செல்லும் சுகேயின் தாய், சுகேவிற்கு அஜினோ பியானோ கற்பித்து தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறாள். தான் முன்பை போல் பியானோ வாசிக்க கூடிய நிலையில் இல்லை என்று கூறும் அஜினோ, அவள் வேண்டுகோளை மறுத்து விடுகிறான். அஜினோவிடமிருந்து விடைபெறும் முன், கய் காட்டிலுள்ள பியானோவை பிரமாதமாக வாசிக்கிறான் என்பதை அஜினோவிடம் தெரிவிக்கிறான் சுகே. அஜினோவின் புருவங்கள் உயர்கின்றன.
அஜினோவிற்கு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றினால் அவன் இடது கை முன்பு போல் இயங்க முடியாத நிலையில் அஜினோவின் பியானோக் கலைஞன் வாழ்க்கை உடைந்து போனது. அஜினோவிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பியானோவைக் கூட அவன் விற்று விடுகிறான். அப் பியானோவை வாங்கிய கபாரே மூடு விழாக் கண்டதால், அந்தப் பியானோவை கபாரேக்காரர்கள் காட்டில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.
பள்ளியின் அருகிலிருக்கும் காட்டின் மத்தியில் மெளனமாக அமர்ந்திருப்பது அவனுடைய பியானோ என்பதை அஜினோ அறிவான். அவன் இசைத்தாலும் அப்பியானோ இசை தருவதில்லை. இப்போது கய் அதனை வாசிக்கிறான் என்பது அவனிற்கு பெரும் ஆச்சர்யத்தை தருகிறது.
அன்றிரவு காட்டில் தன் பியானோவை தேடிச்செல்கிறான் அஜினோ. நிலவின் குளிர் ஒளி காட்டை நனைக்க, பியானோவினை அற்புதமாக கய் இசைப்பதை அவன் கண்டு கொள்கிறான். காடு முழுவதும் அந்த இசையை மயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இசை தரும் பரவசம் அஜினோவின் கண்களில் ஊற்றாக வழிய, இசையை ரசித்துக் கேட்கிறான் அஜினோ.
கய் வாசிப்பதை நிறுத்தியதும் அவனை நெருங்கும் அஜினோ, எவ்வாறு கய் இப்படி பியானோ வாசிக்க கற்றுக் கொண்டான் என வினவ, சிறு வயது முதலே இந்தப் பியானோவுடன் விளையாடுவது தான் தன் பொழுது போக்கு என்கிறான் கய். அஜினோ, கய்க்கு தான் பியானோ கற்றுத் தருவதாக கூறுகிறான். ஆனால் கய்யோ என்னால் பியானோ கற்க முடியாது எனக் கூறி ஓடி விடுகிறான்.
பள்ளியில் ஒரு நாள் கய்யிற்கு BEETHOVAN, MOZART, CHOPIN, MENDELSHON ஆகியோரின் இசை வடிவங்களை இசைத்துக் காட்டுகிறான் அஜினோ. கய்யிற்கு இது வரை தெரிந்திராத இப் புதிய இசை வடிவங்கள் ஆச்சர்யத்தையும் அவற்றை உடனே இசைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் உண்டாக்குகின்றன.
காட்டிலுள்ள பியானோவில் அன்றிரவு இவ்விசை வடிவங்களை இசைக்க முயல்கிறான் கய். CHOPINன் “PETIT CHIEN” எனும் இசை வடிவம் மட்டும் அவனிற்கு வரவே மாட்டேன் என்கிறது.
அஜினோவைக் காணச் செல்லும் கய், தனக்கு CHOPINன் இசையை வாசிக்க கற்றுத் தர சொல்கிறான். மிக மகிழ்ச்சியுடன் ஒர் சாதாரணப் பியானோவில் கய்க்கு பியானோ கற்றுத்தர ஆரம்பிக்கிறான் அஜினோ.
சிறிது கால பயிற்சியின் பின், நிலவு பொழியும் ஒர் இரவில், கூரையில் பதித்திருந்த கண்ணாடி ஜன்னல் ஊடாக வழியும் நிலவின் கதிர்களில் ஊறியவாறே மெய்மறந்து CHOPINன் இசை வடிவத்தை பியானோவில் இசைக்கிறான் கய். அவனை மெளனமாக பார்த்து ரசிக்கும் அஜினோ, அவன் CHOPINன் இசை வடிவத்தைக் கற்றுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறான்.
அஜினோவிற்கு பதிலுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறான் சிறுவன் கய். ஜப்பானின் தேசிய பியானோப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக நடைபெறும் வட்டார தெரிவுப் போட்டியில் கய் கலந்து கொள்ளல் வேண்டும் என கேட்கிறான் அஜினோ. முதலில் மறுத்தாலும் பின்பு அஜினோவிற்காக போட்டியில் பங்கு கொள்ள சம்மதம் தருகிறான் கய்.
இதே போட்டிக்காக, இரவு பகல் பாராது தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் கய்யின் அன்பு நண்பன் சுகே…..
எந்தவிதமான மிகைப்படுத்தல்களும் இன்றி, வேறுபட்ட இரு சிறுவர்களிற்கு இடையில் மலரும் நட்பை, அவர்கள் இருவரிற்கும் பொதுவாக உள்ள பியானோவைச் சுற்றி மென்மையாகப் பின்னியிருக்கிறார்கள். இரு சிறுவர்களின் நட்பும், அவர்களிற்கிடையில் தோன்றும் ஆரோக்யமான போட்டியும், தன்னை விட மற்றவன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணும் அவர்கள் மனமும் பளிங்கு.
காட்சிகள் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பேசும் மிருகங்களோ, மரங்களோ படத்தில் இல்லை. அசர அடிக்கும் சித்திரங்களும் கிடையாது, ஆனால் கதை எங்களை இசை போல் மயக்கி தன்னுடன் எடுத்துச் செல்கிறது. படத்தில் இடம் பெறும் பியானோ இசை செவிக்கும், உள்ளத்திற்கும் இதமாக அமைகிறது.
சுகே, கய்யிடம் பியானோ என்பது தனக்கு ஒர் சாபம், பியானோவால் தான் இழந்தது அதிகம் என மனம் திறக்கும் கட்டம் நெகிழ வைக்கும். கய்யை மொசர்டின் ஆவிகள் கோஷ்டி கலாய்ப்பது, இறுதிப் போட்டியில் கய் சிறுமி டாகாகோவை உற்சாகப்படுத்தும் காட்சிகள் என்பன கலகல. இறுதிப் போட்டிக் காட்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. இசை, காட்சியமைப்பு என நெகிழ வைத்து விடுகிறது முடிவு.
MAKATO ISSHIKI என்பவரின் மங்கா படைப்பாகிய “PIANO NO MORI” கதையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கி இருப்பவர் MASAYUKI KOJIMA. இசையமைத்திருப்பவர் KEISUKE SHINOHARA. பியானோ இசை வடிவங்களை பிரபல பியானோக் கலைஞர் VLADIMIR ASKHENAZY இசைத்திருக்கிறார்.
“உன்னை மட்டும் நான் சந்தித்திராவிடில் நான் பியானோவை வெறுத்திருப்பேன்” என்ற சுகேயின் வரிகளுடன் முடிவடைகிறது படம். மிகவும் அர்த்தமுள்ள வரிகள் இவை. பொறுமையுடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
பிரெஞ்சு ட்ரெய்லர்
இசையை ரசிக்க
