
தன் தாயின் மரணத்தின் பின், அவள் விட்டுச் சென்ற சொத்துக்களிற்காக ஆசைப்படும் தன் வளர்ப்பு தந்தையால் மனநலம் குன்றியோர்க்கான விடுதி ஒன்றில் சேர்க்கப்படும் ஒரு இளம் பெண், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்குகிறாள்….
300 திரைப்படத்தின் வெற்றியின் பின்பாக இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டிவிடுவதில் தோற்றதில்லை. அவரின் சமீபத்திய திரைப்படமான Sucker Punch ம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி விட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் எதிர்பாராத குத்து மூலம் நாக் அவுட் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் திலகம் ஸாக் ஸ்னெய்டர் அவர்கள்.
தனக்கு எதிராக மனநலம் குன்றியோர் விடுதியில் ஒரு சதி நிகழப்போகிறது என்பதை அறியும் இளம் பெண்னான பேபி டால், அங்கிருந்து தப்பித்து செல்ல எடுக்கும் முயற்சிகளை இரு வேறு கற்பனை அடுக்குகளில் திரையில் அடுக்குகிறார் இயக்குனர். யதார்த்தம் என்பதற்கு அல்லது உண்மையான நிகழ்வு என்பதற்கு மெலிதான ஸாடோ மாச்சோ அலங்காரப் பூச்சு பூசி, வீடியோ விளையாட்டுகளை விஞ்சிவிடும் வகையிலான அபத்த ஆக்ஷன்களையும்--- கற்பனையே என்றாலும் கூட--- திரையரங்கில் மென்மையான பூமி அதிர்ச்சி ஒன்றின் உணர்வை வழங்கக் கூடிய இசையையும் அதனுடன் கோர்த்து, தன் வழமையான மென்னசைவு ஆக்ஷன்களையும் கலந்து அடுக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஆனால் யதார்தத்தினை கற்பனையின் மூலம் அழகூட்டல் என்பது எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்த விளைவுகளை வழங்கி விடுவதில்லை. உலக யுத்தக் காலம், மத்திய காலம், எதிர்காலம், ஜப்பானிய பூதகணங்களின் காலம் என ரசிகர்களை வெவ்வேறு காலப்பகுதிகளில் ஆக்ஷன் விருந்துக்காகவும், சஸ்பென்ஸிற்காகவும் இட்டுச் செல்ல விரும்பிய இயக்குனரின் முயற்சியானது திரைப்படத்தின் இளம் நாயகிகளைப் போலவே அயர்ச்சியையும், களைப்பையும் உருவாக்குகிறது. அந்த இளம் நாயகிகள் போலவே ஸாக் ஸ்னெய்டரின் இப்படைப்பும் விரைவில் கவர்ச்சியை இழந்து ரசிகனை சலிப்பின் உச்சத்தில் நெளிய வைக்கிறது. பயங்கரமான ஆக்ஷன்களை புரியும் இளம் நாயகிகளின் முகபாவங்களையும் நடிப்பையும் உடல்மொழியையும்!! பார்த்து அழுவதா சிரிப்பதா அல்லது தலையை முன்னால் இருக்கும் ரசிகனுடன் மோதுவதா எனும் நிலை உருவாகிறது.
மொத்தத்தில் ஸாக் ஸ்னெய்டரிற்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்களை எல்லாம் அழித்து விடும் அளவில் குத்தாட்டம் போடுகிறது Sucker Punch. திரைப்படத்தில் குட்டைக் கால்சட்டைகள், பாவாடைகளுடன் வரும் நாயகிகளையும் சேர்த்து இத்திரைப்படம் ஒரு கொடூரமான வன்கனவாகவே திரையில் உருப்பெறுகிறது. மொக்கை எனும் சொல்லிற்கு இத்திரைப்படம் அட்டகாசம் எனும் அர்த்தத்தை வழங்குவதில் பெரு வெற்றி கொள்கிறது.
ட்ரெய்லர் [இதுவே போதும்]
