Saturday, December 10, 2011

காமத்தின்முன் கீழ்விழல்


காமம் எனும் அடிப்படையான மனித இச்சை குறித்த உங்கள் நேர்மையான பார்வைதான் என்ன? நாம் வாழும் சமூகம் கொண்டுள்ள மதிப்பீடுகளிற்கு அஞ்சி, ஒருவரின் பாலியல் இச்சை என்பதானது மறைத்து வைக்கப்படவேண்டிய ஒன்றாகிறதா? தீராப்பசிபோல தீராத காமம் என்பது இயல்பானதா இல்லை இயல்பை மீறியதா? பாலியல் இச்சை என்பது அடக்கப்படவேண்டிய ஒன்றா அல்லது அணையற்ற வெள்ளத்தினுள் முங்குதல்போல் அனுபவித்து தீரவேண்டி முடியாமல்போகும் ஒன்றா? நீடிக்கும் உறவுகள் மீது நம்பிக்கையற்ற ஆணொருவன் தன் உடலின் பசியை ஆற்றுவதென்பது உங்கள் பார்வையில் எவ்வகையில் மொழிபெயர்க்கப்படுகிறது? இவ்வாறாக தன் உடலின் இச்சையை கட்டுப்படுத்த இயலாத மனிதனொருவனின் அந்தரங்கம் என்பது பொதுவெளியில் சித்திரமாக்கப்படும்போது அதன் பெயர் அவமானம் என விழிக்கப்படுமா? சமூகம் அவமானம் என்பதை அந்த ஆண் உணர்தல் நியாயமானதா? தன்னைப்போலவே பிறிதொரு ஆளுமைமீது இவ்வகையான ஒரு மனிதன் கொண்டிருக்ககூடிய பார்வைதான் என்ன? சமூகத்தின் முன்பாகவும், நாம் போற்றிடும் கலாச்சாரங்கள், பண்பாடுகள் முன்பாகவும் நாம் மேற்கூறிய கேள்விகளிற்கு அளித்திடும் நேர்மையான பதில்கள் எம்மை அவமானம் கொள்ள செய்யுமா இல்லை விழுமியங்களை போற்றியொழுகும் மனிதர்களின் அவமானம் நிறைந்த பார்வையை நாம் எம்மீது சுமந்துகொள்ள வைக்குமா? முடிவேயற்று நீண்டு செல்லக்கூடிய கேள்விகளைப் போலவே பார்ப்பவன் மனதில் சிந்தனைகளை எழுப்பி உக்கிரமாக மோதுகிறது இயக்குனர் Steve Mcqueen இயக்கியிருக்கும் Shame திரைப்படம்.

பிராண்டன் எனும் மனிதனின் அடக்க இயலா காமத்தை மையமாக கொண்டு அவனைச்சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதும், பிராண்டன் மீதும் காமம் அணிந்திருக்கக்கூடிய வெவ்வெறு கவுரவமான முகமூடிகளை கிழித்துக் போட்டுக் கொண்டேயிருக்கிறது கதை. ஒவ்வொரு முகமூடியின் வீழ்வின் பின்பாகவும் காமம் கிண்டலுடன் மனிதர்களை பார்த்து சிரித்துக் கொண்டே முன்னகர்ந்து செல்கிறது. பெண்ணுடனான உடலுறவோ, சுய இன்பமோ, போர்னோ தளங்களோ, பாலியல் தொடர்பாடல்களோ இல்லாமல் தன் வாழ்க்கையை கழிக்க முடியாத பிராண்டனின் ஆவேசம் அவன் இச்சையில் சக்தியாக மறுவுரு எடுத்து அவனை அக்கினியாக எரித்துக் கொல்கிறது. தன் இச்சை மீது அவன் கொண்டுள்ள குற்றவுணர்வானது தன் காமம் குறித்து எவரும் அறிந்திடக்கூடாது என்பதில் பிடிவாதமாக உருமாறியிருக்கிறது எனவேதான் அவன் பணியிடத்தின் கழிவறையில் சுய இன்பத்தில் ஈடுபடும் முன்பாககூட கழிவறையிருக்கையை சுத்தமாக துடைத்து போடுவதில் அவதானமாக இருக்கிறான்.

அவனது குடியிருப்பின் மறைவிடங்களில் அவனின் இச்சையின் அந்தரங்கங்கள் ஒளிந்திருக்கின்றன. அவனைத் தேடிவரும் விலைமாதுவின் சிறு அசைவிலும் தன் இச்சையின் தணிக்கவியலா தாகத்தை தணிக்க வழி தேடுகிறான் பிராண்டன். அவன் தினந்தோறும் புணர்ந்தெழும்போதும் தொலைபேசியின் பதில்விடு கருவியில் அவன் சகோதரியின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தொலைபேசியை எடுத்து தன்னுடன் உரையாடு என அதில் அவன் சகோதரி சிஸ்ஸியின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிஸ்ஸியின் அழைப்புகளிற்கு அவன் பதில் அளிப்பதில்லை. தன் சகோதரியின் தகவல் குறித்த எந்த சலனமுமின்றி தன் வாழ்க்கையை தொடர்கிறான் பிராண்டன். இவ்வாறான நிலையில் அவன் குடியிருப்பிற்கே வந்து சேர்ந்துவிடுகிறாள் சிஸ்ஸி. தன் காமத்தை பொத்தி வைத்த அந்தரங்ககூட்டில் ஆக்கிரமிப்பான ஒன்றாக இதை உணர்கிறான் பிராண்டன். இதனாலேயே பின்பு தன் சகோதரியுடன் கடினாமன சொற்களை அவன் பரிமாறிக் கொள்கிறான். காமத்தின் முன்பாக ரத்த உறவுகூட தூக்கியெறியப்படும் கணம் சற்றும் அதிர்ச்சி தருவதாக இல்லை. பிராண்டன் கூறுவதில் என்ன தவறு இருக்கமுடியும் என்றே முடிவிற்கு வரமுடிகிறது.

shame-2011-12016-286421857சிஸ்ஸி தன் காதலனுடன் உறவை சிக்கலாக்கி கொண்டே பிராண்டனின் குடியிருப்பிற்கு வந்து சேர்கிறாள். பிராண்டன் காதுகளில் விழுமாறே அவள் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன் காதலனை தொலைபேசியில் இரஞ்சுகிறாள். பாடகியான அவள் பாடும் பாடலில் துணையொன்றிற்கான ஏக்கம் கலந்தே ஒலிக்கிறது. துணையொன்றுடன் இணைந்து வாழும் வாழ்க்கை ஒன்றின் மீதான கனவுகள் அவள் பாடலில் ஏக்கமான குரலாக ஒலித்து ஒழுகுகிறது. அப்பாடலை தன் தோல்வியாகவும் தன் சகோதரி மீது கொண்டுள்ள அன்பாகவும் உள்ளெடுக்கும் பிராண்டன் விழிகளில் கண்ணீர் வழிகிறது. ஆனால் பார்வையாளன் முகத்தில் எதிர்பாராமல் அறைவதுபோல் பிராண்டனின் முதலாளியான டேவிட்டுடன் அன்றிரவே உடலுறவு கொள்கிறாள் சிஸ்ஸி. இதை பிராண்டனால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. அவன் அறையில் அவர்கள் உறவுகொள்ள ஆரம்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அவன் தெருவில் இறங்கி ஓட்டப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறான். தினந்தோறும் காமத்திற்கு வடி இல்லாது உறங்கமுடியாத ஒருவன் பிறர் காம இச்சை முன்பாக குறிப்பாக அவன் சகோதரியின் காம இச்சை முன்பாக படும் அவமானம் அதிர வைக்கிறது. ஓடி முடிந்து களைத்து வீடு வந்து உறங்கச் செல்லும் அவனை அன்புடன் அணைக்கும் சிஸ்ஸியுடன் அவன் சீறும் சீற்றம் அவன் தன்னுள் கொண்டு வாழும் அவமானத்தின் தாண்டவப் பரிமாணம்.

பிராண்டனின் முதலாளியான டேவிட் மணமானவன். குழந்தையும் உண்டு. சிஸ்ஸியைக் கண்ட அரைமணிநேரத்தில் தன் குடும்பத்தையே மறந்து உடலுறவிற்கு தயாராகிவிட்ட அவன் பிராண்டனின் கணிணியிலிருந்த போர்னோ சரக்குகளை குறித்து ஒரு நீதிமான்போல் பேசுகிறான். காமம் என்பது தனக்குரிய தேவை எனும்போது அது குறித்த எந்த அருவருப்போ அல்லது அறமீறல்கள் குறித்த பிரங்ஞையோ மனிதரிடமிருந்து காணமல் போய்விடுகிறது என்பது வியப்பளிப்பாதாக இல்லையா. இதே வியப்புடன்தான் டேவிட்டின் அலுவலக அறையை விட்டு அவன் உரையாடலை பாதியில் விட்டு செல்கிறான் பிராண்டன். கணிணிக்குள் ஒளிந்திருக்கும் காமத்தினை கண்டுகொள்ள முடிகிறது மனதினுள் ஒளிந்திருக்கும் காமத்தை கண்டுகொள்ளத்தான் வழி இல்லையோ. தன் காமம் வடிந்த மனிதம் என்ன வேடமும் அணிந்திட தயக்கம் கொள்வதேயில்லை.

தான் சுய இன்பம் செய்வதை சிஸ்ஸி தற்செயலாக பார்த்துவிடுவதனால் தன்னை மாற்றிக் கொள்ள முயல்கிறான் பிராண்டன் ஆனால் அவன் இயல்பு அவனை விட்டு நீங்குவதாக இல்லை. நீடிக்ககூடிய உறவொன்றிற்காக முனையும் அவன், அலுவலகலத்தில் பணிபுரியும் சகாவான மரியானுடன் உறவுகொள்ள முனைகிறான். ஆனால் அவனால்அவளுடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை. அவள் உடலின் முன்பாக அவன் காமம் செயலிழந்து நிற்கிறது. நீடித்து நிற்கும் உற்வொன்றின் மீதான சந்தேகம் அவன் உணர்ச்சியை நீர்த்துவிடச்செய்கிறது. அவளை ஹோட்டல் ரூமிலிருந்து அனுப்பி வைக்கும் பிராண்டன், தான் மரியானை உணவுவிடுதியொன்றில் சந்திக்கும் முன்பாக தெருவில் உலாச்சென்றபோது கண்ட ஒரு உடலுறவு நிலையை ஒரு விலைமாதுவுடன் நிகழ்த்தி தன் காமத்தை வடித்துக் கொள்கிறான். மேற்குறிப்பிட்ட உணவு விடுதிச் சந்திப்பில், நீடிக்கும் உறவு ஒன்றிற்கான தேடலின் வடிவாக மாரியானும், உடல் இச்சையை ஆற்றிக்கொள்ள புதிய உடல்களை ஓயாது தேடும் காமத்தின் வடிவாக பிராண்டனும், இவ்வகையான தேடல்களினூடே எந்தவித லஜ்ஜையுமின்றி நகர்ந்து செல்லும் வாழ்க்கையின் வடிவமாக உணவுவிடுதிப் பரிசாரகனும் தோன்றுகிறார்கள்.

டேவிட் தன் விரலில் திருமண மோதிரம் அணிந்திருந்தை நீ அவதானிக்கவில்லையா என சிஸ்ஸியிடம் கோபம் கொள்வான் பிராண்டான், ஆனால் இதே பிராண்டன் கையில் திருமண மோதிரம் அணிந்த ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து செல்ல தயங்குவதில்லை. அவன் ஆளுமையின் முரண்தன்மையை திரைப்படம் நெடுகிலும் ஒரு ரசிகன் அவதானித்திட முடியும். தன் இயல்பை கட்டுப்படுத்த முடியாதவனாக அவன் இச்சையை தீர்ப்பதற்காக அவன் அலைந்து சென்று கொண்டேயிருக்கிறான். அதற்காக அவன் அவமானங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கிறான். இச்சை அவனை விடுதலை ஆக்க ஆக்க அவனுள் நுழையும் அவமானம் அவனை குறுக வைத்துக் கொண்டே செல்கிறது. காமம் எனும் பெரும்சக்தியின் முன்பாக வெற்றி பெறவியலாத பெரும்பாலான சாதாரண மனிதர்களைப் போன்றே அவனும் அதன்முன்பாக மண்டியிட்டுக் கொள்கிறான். ஆனால் சிஸ்ஸியோ தீவிரமான ஒரு முடிவை தேடிச்செல்கிறாள். விரலில் திருமண மோதிரம் அணிந்த அதே பெண்ணை மீண்டும் அவன் ரயிலில் காண்கிறான். அவளும் அவனை அழைப்புடன் பார்க்கிறாள். பிராண்டன் காமத்தை வெல்வானா என்பதற்கு விடையில்லை. காமத்தை வென்றவன் என்று யாருமில்லை. மிகவும் உக்கிரமான இப்படம் ரசிகனின் உள்ளத்தை சற்று ஆட்டிப்பார்த்துதான் விடுகிறது. பிராண்டன் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் Michael Fassbender, அவரின் சகோதரி சிஸ்ஸியாக வேடமேற்றிருக்கும் நடிகை Carey Mulligan ஆகியோர் மிகவும் அருமையாக நடித்து சென்றிருக்கிறார்கள். திரைப்படத்தின் இசை காமத்தின் வேகத்தையும், இன்பத்தையும், தந்திரத்தையும், வலியையும், அவமானத்தையும் ஒலிக்க விடுகிறது. அதிர்ச்சியும் நேர்மையுமான இப்படைப்பை பக்குவமான உள்ளங்கள் பார்த்து ரசிக்கலாம். [***]

ட்ரெய்லர்

12 comments:

  1. படத்தின் ட்ரைலர் மிகவும் அருமையாக இருந்தது....உங்கள் விமர்சனத்தை பார்க்கும் போது படம் உணர்ச்சிகளின் குவியல் போல் தெரிகிறது...படம் பார்த்து விட்டு வந்து என்னுடைய கருத்தை சொல்கிறேன்...
    நன்றி....

    ReplyDelete
  2. http://kanuvukalinkathalan.blogspot.com/2009/10/xiii.html

    அன்பு நண்பரே, இந்த முகவரியில் இரத்தப்படலத்தின் படங்களை தமிழில் வண்ணத்தில் இணைத்திருக்கிறீர்கள், அது எங்கே கிடைக்கும் என்று எனக்கு மெயில் அனுப்புவீர்களா? aadava@gmail.com

    ReplyDelete
  3. இறைவன் தொழில்களில் ஒன்று மறைத்தல்.
    காமம் எனும் அடிப்படையான மனித இச்சையும் சில காலம் மறைத்து வைக்கப்படுகிறது. தீராத காமம் என்பதும் இயல்பானது அணையற்ற வெள்ளத்தினுள் முங்குதல்போல் அனுபவித்து தீரவேண்டியது அந்தரங்கம் என்பது பொதுவெளியில் சித்திரமாக்கப்படும்போது அதன் பெயர் அவமானம்தான். உங்கள் விமர்சனத்தை பார்க்கும் போது படம் உணர்ச்சிகளின் குவியல் போல் தெரிகிறது. படம் பார்க்கவில்லை

    ReplyDelete
  4. காமம் குறித்தான எனது அனேக அனுமானங்களை உங்களது விமரிசனம் பிரதிபலித்ததாக உணர்கிறேன்... காமம் இப்படி ஓர் அநாகரீகமான தளத்தில் வீற்றிருக்க வேண்டிய அவஸ்தை.. என்ன தான் அது ஓர் மனிதனின் இயல்பான உணர்வாயினும் மற்ற எந்த உணர்வைக் காட்டிலும் மூடி மறைக்கவேண்டிய அவசரம் அவசியப்பட்டு விடுகிறது... ஓர் வேசி கூட பொது இடமென்றால், ஓர் ஆடவனின் ஸ்பரிசத்தை புறக்கணித்து சற்று விலகி நிற்க வேண்டிய.... செயற்கையான நிர்ப்பந்தத்திலாவது நடிக்க வேண்டிய ஓர் தன்மையில் காமம் இருக்கிறது... நான்கு சுவர்களுக்கு மத்தியில் மாத்திரமே அது சுதந்திரமாகவும் சுகமாகவும் இருவரிலும் ஊடுருவி இயங்க முடிகிறது... சிலர் இங்கிதமற்று இவைகளினின்று விலகிப்போய் நாய் மாதிரி பொதுவில் செயல்படத் துணியும் பட்சத்தில், அதை கவனிக்கிற ஓர் சபலிஷ்டு கூட அதனை ஓர் குற்றமாகக் கருதுகிற பாங்கில் தான் காமம் இருக்கிறதென்பது வினோதமே...
    மிக அசந்தர்ப்பமாக உங்கள் பிலாகினை பார்க்க நேர்ந்தது...
    tiruppurtvsundar.blogspot.com
    இது என்னுடைய பிளாகின் முகவரி... கவிதைகள் என்று சிலவற்றை கிறுக்குவேன் அவ்வப்போது.. தாங்களும் படித்து பின்னூட்டம் போடுவீராயின் மிக மகிழ்வேன்..

    நன்றி..
    சுந்தரவடிவேலு..

    ReplyDelete
  5. நண்பர் ராஜ், கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஆதவா, அது நான் மொழிபெயர்த்த பக்கங்கள் ஆகும். தமிழில் கறுப்பு வெள்ளையில் மொத்த தொகுப்பாக லயன் வெளியிட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

    நண்பர் நடராஜன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சுந்தரவடிவேலு, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.. நேர வசதிக்கேற்ப தங்கள் பக்கத்திற்கு வந்துவிடுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  6. கலக்குங்கள் காதலரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. படிக்கிறவங்களிற்கு கலக்காம இருந்தா போதாதா நண்பர் சிபி :)

      Delete
  7. Nanbare, intha cinema enge kidaikkum enbathai thayau seythu koora mudiuma? Inge saudi yil dvd vaanga mudiyaathu. torrent link kidaithaal nalam. mikka nandri.

    Amjath

    asariiri@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன்... அவர் பதில் அளித்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்...

      Delete
  8. அருமையான விமர்சனம்

    ReplyDelete
  9. பாஸ் செம படம்....நேத்து தான் பார்த்தேன்.....சும்மா சொல்ல கூடாது,கிளைமாக்ஸ் காட்சிகள் ரொம்பவே நல்லா இருந்து....

    ReplyDelete