1927ல் ஹாலிவூட் ஊமைப்படங்களில் மிகப்பிரபலமான நாயகனாக திகழ்கிறான் ஜார்ஜ் வலண்டைன். சினிமா எனும் கலைக்கு இன்றியமையாத துணையான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி Talkies எனப்பட்ட பேசும் படங்களை நோக்கி முன்னேற ஆரம்பிக்கையில் அந்தப் பாதையில் தன் பாதங்கள் படாது கலை செய்ய விரும்புகிறான் ஜார்ஜ் வலண்டைன். இதேவேளையில் அவனுடன் ஒரு படத்தில் துணைப்பாத்திரமாக நடித்து அவன் மனதை சலனகலனம் செய்த பெண்ணான பெப்பி மில்லர், பேசும் படங்களில் மிகப்பிரபலமான நாயகியாக உருவாக ஆரம்பிக்கிறாள்…..
The Artist திரைப்படத்தின் ஆரம்பம், ஒரு ஒற்றன் சிறையிலிருந்து தப்பிக்கும் சாகசத்துடன் ஆரம்பமாகிறது. அந்த ஒற்றனின் சாகசம் The Russian Affaire எனும் திரைப்படத்தின் இறுதித் தருணமாக அமைகிறது. அத்திரைப்படத்தை வெள்ளையும் கறுப்புமாக ஆடம்பர ஆடையணிந்த ஆடவரும் பெண்டிரும் கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கின் திரையின் முன்பாக ஒரு ஆர்கெஸ்ட்ரா திரைப்படத்திற்கான பின்னணி இசையை நேரடியாக இசைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது. 1927களில் காட்சிகளுடன் இசை கோர்த்துக் கொள்ளாத திரைப் படைப்பொன்றினை அந்த அரங்கில் ரசிகர்கள் ரசித்து மகிழும் தருணத்தை இக்கால ரசிகர்களிடம் கொண்டு வருகிறார் திரைப்படத்தின் இயக்குனரான Michel Hazanavicius. ஒரே ஒரு வித்தியாசம். எமக்கு முன்பாக இசைக்குழு இல்லை என்பதுதான். பேசும் படங்கள் திரையுலகை புரட்டிப்போட்டு ஆட்சியை கைப்பற்றும் முன்பாக சினிமாதுறையை கலக்கிய ஊமைப்படங்கள் பாணியில் கறுப்பு வெள்ளையில், நடிகர்கள் வாய் அசைவின் பின்பாக கறுப்பான திரையில் தோன்றும் வெள்ளை நிற வசனங்களுடனும், பிரகாசமான ஒளி அமைப்புக்களுடனும் நகைச்சுவையாக ஆரம்பிக்கிறது திரைப்படம். ஊமைப்படங்களிற்கு தற்கால பிரெஞ்சு இயக்குனர் ஒருவர் வழங்கியிருக்கும் கவுரமாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.
இயக்குனர் மிசேல் ஹசானாவிசியுஸிற்கு பிரபலத்தை பெற்றுத்தந்தது அவர் இயக்கிய OSS 117 திரைப்படங்கள்தான். ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் OSS 117. அப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரெஞ்சு நடிகர் Jean Dujardin. முதல் பாகம் பெரு வெற்றி பெற்று இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வசூல் கண்டது. இந்த திரைப்படத்தில் ஜார்ஜ் வலண்டைன் எனும் ஊமைப்பட நாயகனாக பாத்திரமேற்றிருப்பவரும் அவரே. நகைச்சுவையை வெளிப்படுத்தும் கலைஞராக அறிமுகமான ஜான் டுஜார்டானிற்கு இத்திரைப்படத்தின் கலகலப்பான ஆரம்பக் காட்சி நிகழ்வுகள் இலகுவாக கைவந்திருக்க வேண்டும். மிகவும் அனாசயமாக அப்பகுதிகளை ரசிகனை மென்சிரிப்புடன் கடந்து செல்ல வைக்கிறது அவரின் திறமை. ஊமைப்படம் என்பதால் முகபாவனைகளும், உடல் அசைவுகளும்கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையவேண்டும் என்பதற்காக அவர் முகமும் உடலும் திறமையுடன் இழைகோர்த்து சென்றிருக்கிறது.
ஆனால் ஜான் டுஜார்டான் ஏற்றிருக்கும் ஜார்ஜ் வாலன்டைன் பாத்திரம் கலகலப்பை மட்டுமே கொண்ட ஒன்றல்ல. மனைவியை புரிந்து கொள்ளவியலாத ஒரு கணவனாக, தன் காதலை வெளிப்படுத்த முடியாத ஒரு காதலனாக, பேசும் படங்களின் முன் தன் பெருமையை இழக்க விரும்பாத பிடிவாதமான கர்வம் கொண்ட ஒரு கலைஞனாக, மனித நேயத்தின் ஒரு சில வரிகளாவது ஓடும் ஒரு மனிதனாக, பேசும் சினிமாவின் வெற்றியால் யாவற்றையும் இழந்து நொடிந்து போகும் ஒருவனாக அப்பாத்திரம் பல அடுக்குகளை கொண்டிருக்கிறது. மிகை நடிப்பு, மிகையுணர்வு வெளிப்படுத்தல் என அடையாளப்படுத்தக்கூடிய வகையில் ஒரு ஐந்து வருடகால வாழ்க்கையை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜான் டுஜார்டான். ஆனால் அவரின் இவ்வகையான நடிப்பைவிட லக்கி லூக் எனப்படும் கவ்பாய் பாத்திரமே எனக்கு பிடித்திருக்கிறது. இவ்வகையான நடிப்பை தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்து பழகிப்போனதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கேன்ஸ் அவரின் இப்பாத்திரத்திற்கு சிறந்த நடிகரிற்கான விருதை வழங்கி கவுரவித்ததையும் இங்கு நான் எழுதியாக வேண்டி இருக்கிறது.
ஜார்ஜ் வாலண்டைனினால் திரைப்படங்களில் துணை நடிகையாக தன் தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் பாத்திரம் பெப்பி மில்லர். அவர்கள் இருவரும் முதலில் சந்திக்கும் நிகழ்ச்சியே பெப்பி மில்லரின் போட்டோவை தினசரி ஒன்றின் முதல் பக்கத்தில் வர வைத்து விடுகிறது. அதன் வழியே ஆரம்பமாகும் பெப்பி மில்லரின் சினிமா வாழ்க்கையின் புகழும் வெற்றியும், ஜார்ஜ் வாலண்டைனின் வீழ்ச்சியும் திரைப்படத்தில் ஒருங்கே பயணிக்கின்றன. நடனத்தில் ஆரம்பமாகும் அவர்கள் கலைப்பயணம், அருமையான ஒரு நடனத்துடனேயே நிறைவு பெறுவது அழகான பொருத்தம்.
ஜார்ஜ் வாலண்டைனிற்கான தன் காதலை வெளிப்படுத்தாதவாறு அவன் நலனை பேணி அவனை மீட்டெடுக்க விழையும் பெப்பி மில்லர், அவன் தோல்விகள் ஒவ்வொன்றிலும் அவனிற்காக வருந்துபவளாக இருக்கிறாள். அவன் கலை மீதும் அவன் மீதும் அவள் கொண்ட பற்றை அவள் ஒரு போதும் இழப்பதேயில்லை. வெற்றியின் களிப்பில் அவள் வார்த்தைகளில் சறுக்கி விட்டபோதும் வீழ்ந்து விட்ட ஜார்ஜ் வாலன்டைனிற்கு அது வலிக்ககூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறாள். படத்தின் இயக்குனரின் வாழ்க்கை துணையான நடிகை Bérénice Bejo சிறப்பாக தன் வேடத்தை ஆற்றியிருக்கிறார். ஜார்ஜ்ஜும், பெப்பியும் ஆடும் நடனம் அழகானது. திரை இசையும் இனிமையானது. ரசிகர்களின் உணர்வுகளை உருக்க வேண்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்குமேயாயின் கொளுத்தி வைக்கப்படாத மெழுகுவர்த்திகூட சில சமயங்களில் உருகிப்போகும் அளவு உருக்கமான சம்பவக் கோர்வைகளிற்கு கதையில் பஞ்சம் என்பதே இல்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகிறது.
ஆனால் இவ்வகையான காதல் கதைகளை ஏற்கனவே பார்த்து விட்ட ஒரு உணர்வு மேலோங்கி செல்வதை தடுக்க முடியாமல் இருக்கிறது. வழமையாக பார்த்து பழகிய காட்சிகள் வேறு ரூபத்தில் வந்துவிட்டது போல ஒரு பிரமை கண்ணாடி மீது வழுகிச்செல்லும் நீர்துளியாக நழுவுகிறது. ஒரு வருடம் சம்பளம் தராவிடிலும் விசுவாசமாக வேலை பார்க்கும் கார் சாரதி, காதலிற்காக காதலன் அறியாது அவனிற்கு உதவிகள் செய்யும் ஒரு பெண், முன்னாள் நட்புகள் கைவிட நொடிந்து தனியனாகப் போகும் ஒரு முன்னாள் பிரபலத்தின் சோக சரிதம் என பல திக்குகளிலும் பார்த்த நினைவுகள் கண்சிமிட்டுகின்றன. இருப்பினும் பார்த்து ரசித்திட அருமையான மனதைத் தொடும் நுட்பமான காட்சி தருணங்கள் படத்தில் உண்டு. மிகையான பாராட்டுக்களிற்கும், எதிர்பார்ப்புக்களிற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு நல்ல படம். மகோன்னத படம் அல்ல. அல்லது ஊமைப்படக் கலைஞன் பேச மறுத்தது போலவே படமும் என்னுடன் பேசமறுத்து விட்டது போலும். [** ]
ட்ரெய்லர்
நண்பர் ராஜ் செந்தில்குமார், நேர வசதிக்கமைய உங்கள் பக்கத்திற்கு வருவேன்....
ReplyDeleteமௌனத்தின் வலி. :)
ReplyDelete