Thursday, May 9, 2013

மனோவசியன்

ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் தம் பிரதான இழையான குற்றம் அதன் மீதான விசாரணை நடவடிக்கைகள் என்பவற்றுடன் கூடவே கதை நடைபெறும் சமூகத்தின் மீதான அழுத்தமான பார்வைகளையும் முன் வைப்பவைகளாக இருப்பது அவற்றின் சிறப்பு தன்மை எனக் கூறப்படுகிறது. இது உண்மையானதுதான். Lars Kepler ஜோடி எழுதியிருக்கும் The Hypnotist கதை, சுவீடிய சமூகம் தொடர்பாக எனக்கு வழங்கியிருக்கும் பார்வையை இங்கு சிறிது பார்க்கலாம்!!

- சுவீடியர்களிற்கு பிடித்தமான பானம் சூடான காப்பி, எப்போதும் காப்பி அருந்த அவர்களிற்கு பிடித்திருக்கிறது. கொலை, உடலுறவு, சச்சரவு போன்றவற்றிற்கு பின்பாக எல்லாம் காப்பி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சுவிடியர்களின் வாழ்க்கையில் காப்பி வகிக்கும் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
- காலையுணவாக சாண்ட்விச் பெரும்பாலும் உண்ணப்படுகிறது சாண்ட்விச்சுடன் துணையாக காப்பி இணைந்து கொள்கிறது
- டிசம்பர் மாதத்தில் சுவீடனில் கடும் குளிரும், பனி வீழ்ச்சியும் இருக்கிறது
- ஆண்கள் திருமணத்தின் பின் வேறு பெண்களுடன் உடலுறவு கொள்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்
- பெண்களும் ஆண்கள் இழைத்த துரோகத்திற்காக கணவர்களை தவிர்த்த வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள்
- திருமணமான ஆண் என்பது தெரிந்தாலும் சில இளம் பெண்கள் தம் காதலில் வெற்றி கொள்ள சகல வழிகளையும் கையாளுவார்கள்.... உடலுறவு உட்பட
- சுவீடிய சமுகத்தில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மிகுந்திருக்கிறது
- பெண்களை ஆண்கள் தமக்கு சரிநிகராக கருதுவதிலும் சிக்கல் இருக்கிறது
- உளநல சிக்கல் கொண்டவர்கள் ஆற்றும் செயல்கள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது
- சிறுவர் துஷ்பிரயோகம் கணிசமான அளவில் காணப்படுகிறது, இது சந்ததி சந்ததியாக தொடரும் ஒரு விடயம் போல் உணர்த்தப்படுகிறது
- சுவீடிய இளம் தலைமுறை தறிகெட்ட ஒன்றாக உருவாகி வருகிறது, அது எதையும், எவரையும் மதிப்பது இல்லை
- நாஸி தத்துவத்தை மதிப்பவர்கள் இன்னம் இருக்கிறார்கள்
- சுவீடிய பொதுநலத்துறைகளிலும் மூடிமறைப்பு சர்ச்சைகள் உண்டு
- சுவீடிய காவல்துறை செயற்திறன் நலிந்த ஒரு துறையாகும் 
லார்ஸ் கெப்லர் மற்றும் ஸ்காண்டிநேவிய குற்றப்புனை நாவலாசியர்களின் படைப்புக்களின் வாசிப்பின் முடிவில் சுவீடிய சமூகமும் பிற சமூகங்களைப் போலவே நலமற்ற ஒரு சமூகம் என்பதை ஒருவர் தெளிவாக உணரலாம். இவ்வகையான ஸ்காண்டினேவிய குற்றப்புனைகள் தவறாது தம்மில் கொண்டிருக்கும்  ஒரு பிம்ப சமூகத்தின் பார்வை என்பது வாசகனிற்கு என்ன புது அனுபவத்தை படைப்பின் வாசிப்பில் வழங்கிட முடியும் என்பதை நான் இங்கு ஒரு கேள்வியாக்குகிறேன். மேற்கூறிய அல்லது நான் தவறவிட்ட,சமூகம் மீதான பார்வைக் கூறுகள் இதே வடிவிலோ அல்லது பிற வடிவிலோ உலகெங்கும் உள்ள சமூகங்களில் பரவியே இருக்கிறது. ஸ்காண்டிநேவியாவிலும் இவை உள்ளன என்பதை ஒரு அல்லது இரு படைப்புக்கள் வழி சொல்லி ஓய்ந்தால் போதாது என்று ஸ்காண்டிநேவியப் குற்றப்புனைகள் பெரும்பாலும் தம் சமூகத்தின் அவலங்களை தாம் சொல்ல வந்த குற்ற புலனாய்வைவிட பிடிவாதமாக அதிகம் பேசுகின்றன,  அந்த சமூக அவலங்கள் அவற்றின் பொது தன்மையாக உருப்பெறுகின்றன, தொடர் வாசிப்பின்போது சலிப்பின் காரணிகளாக மாற்றம் கொள்கின்றன, ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் இன்று கண்டிருக்ககூடிய தற்காலிகமான அசாத்திய பிரபலத்தை அர்த்தமற்றது என உணரச் செய்கின்றன. 
த ஹிப்னோடிஸ்ட் கதையின் சாரத்தை, மனோவசியம் மூலம் தன் வாழ்க்கையில் பலவற்றை இழந்த ஒருவனிற்கு பத்து வருடங்களிற்கு பின்பாக அதே மனோவசியம்  மீண்டும் வெல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது என நான் சொல்வேன். இதை 600 பக்கங்களிற்கு மேல் எடுத்து சொல்வதற்கு துணையாக ஒரு குற்றம். ஆனால் இங்கு குற்றம் அது சார்ந்த விசாரணை போன்றவற்றை தனியே பிரித்து எடுத்தால் அவற்றை ஒரு 150 பக்கத்திற்குள் அடக்கி விடலாம். எ க்ரைம் நாவல் வகையறா நாவல் போல அது இருக்கும். ஆனால் லார்ஸ் கெப்லர் ஜோடி ஸ்காண்டிநேவிய குற்றப்புனை பராம்பரியத்தை பேணுவதற்காக வெகு சிரமப்பட்டு 450 பக்கங்களை வியர்வை சிந்தி எழுதியிருக்கிறார்கள். 
கதையின் பிரதான காவல் துறை அதிகாரி பாத்திரம் ஜூனா லினா. இவர் குற்ற விவகாரங்களை கையில் எடுத்தால் அவற்றினை தீர்க்காது ஓய மாட்டார். தேசிய குற்றப் புலனாய்வு பிரிவில் இவர் உள்ளுணர்வு தீர்த்து வைத்தது போல வேறு எதுவும் குற்ற விவகாரங்களை தீர்த்து வைத்தது இல்லை. இதை இங்கு நீங்கள் படிக்கும்போது ஒரு அதிரடியான அதிகாரியாக அவரை உருப்படுத்திக் கொண்டால் அது தவறு. ஜூனா லினா அதிராத ஒரு பாத்திரம், அவர் ஊகங்களும் சரி உள்ளுணர்வு வழி அவர் காணும் முடிவுகளும் சரி புல்லரிக்க வைக்கிறது. மன்னிக்கவும் ஜன்னலை மூடாது நாவலைப் படித்ததால் வந்த விளைவது. ஜூனா லினாவினால் அல்ல.
கிழிச்சீங்க !!
கதையின் முடிவில் தான் தொலைத்து விட்ட, தொலைத்து கொண்டிருக்கும் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நிலைக்கு வரும் ஹிப்னாட்டிஸ்டாக எரிக் மரியா பர்க். இவரின் வாழ்க்கையை சுற்றியே பெரிதும் கதை உலாவரும். இப்பாத்திரத்தின் மீது வாசகர்கள் பிடிப்பொன்றை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் வாழ்க்கையின் மீது சோகரசம் ததும்புமாறு கதாசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமையற்ற இல்லறம், வியாதி கொண்ட ஒரு மகன், பேர் கெட்டுப் போன ஒரு தொழில் என எரிக் வாழ்க்கை சோகமோ சோகம். எரிக் இவற்றை எல்லாம் வெல்ல காப்பி அருந்துகிறார். நிறைய மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். மது அருந்துகிறார். மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாத்திரைகள் போடும் ஒரு பாத்திரம் குற்றப்புனைவில் எனக்கு இதுவே முதல் முறை. ஆனாலும் எரிக் தெளிவான நிலையிலேயே கதையில் நடமாடுகிறார்.
எரிக்கின் குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் சொன்னால் சலிப்பு ஏற்பட்டு இது ஒரு சமூகப்புனையாக ஆகிவிடும் அதில் சர்வதேச லெவலில் ரமணிசந்திரனுடன் போட்டி போட முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்ததால் கதையின் ஆரம்பத்தில் ஒரு கொலை, அதன் விசாரணைகள், அதனை தொடரும் ஆட்கடத்தல் என்பன வழியாக வந்து சேரும் எரிக் மரியா பெர்க் வாழ்வில் பத்து வருடங்களிற்கு முன்பாக நடந்த ஒரு சோகம், அதன் பின்பிருக்கும் மர்மம் போன்றவற்றையும் கதை தன்னில் கொண்டிருக்கிறது. பிரதான கொலைகளிற்கு காரணம் யார் என அறிந்த பின்னும், அந்தக் கொலையாளியின் உடல் நிலை இவ்வாறாக இருக்கிறது என்பது தெரிந்தபின்னும் வாசகன், லார்ஸ் கெப்லர் படைத்திருக்கும் அந்தக் கொலையாளி அவனுடைய அந்த உடல் நிலையுடன் ஆற்றும் செயல்களை நம்ப முடியும் எனில், இந்த நாவல் சுவீடனில் மட்டுமல்லாது சர்வதேசம் எங்கும் இதன் அட்டை பீற்றிக் கொள்வது போல விற்பனையில் கொடி கட்டிப் பறக்க முடியும் எனில், உலகெங்கும் தரமற்ற படைப்புக்களை வாசித்து புகழும் கலாச்சாரம் வேரூன்றி விருட்சமாகி நிற்கிறது என்பதை தவிர வேறு காரணங்கள் இருக்கவே வழியில்லை. இவ்வகையான படைப்புக்கள் விற்பனை உச்சத்தை தொடக் காரணம் மந்தைமேய்ச்சல் வாசிப்பு பழக்கமேயன்றி வேறல்ல.
இந்தக் கதையில் லார்ஸ் கெப்லர் ஜோடியால் ஆழமாக அலசப்பட்டது எது என ஒரு கணம் சிந்தித்தால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் இத்தனை வரவேண்டும் என்பதாகவே இருக்கும். மனோவசியமும் சரி, உளநலப்பிறழ்வுகளும் சரி, குற்றங்களும் சரி, பாத்திரப் படைப்பும் ஏன் கதை சொல்லும் முறையும் சரி சூவிடன் ஏரியொன்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் பனிப்பாளத்தின் ஆழத்தை ஒத்த உறை நிலையிலேயே உள்ளன. லார்ஸ் கெப்லரின் எழுத்துக்கள் இவ்வளவு மோசமாக உள்ளதா அல்லது மொழிபெயர்ப்பாளர் இவ்வளவு மோசமாக மொழிபெயர்த்திருக்கிறாரா என்பதை இக்கதாசிரியர்களின் ஏனைய படைப்புக்களை படித்த நல்ல உள்ளங்கள் மட்டுமே அறியும். நான் அந்த சாகசத்தில் இறங்கப் போவது இல்லை.

6 comments: