Sunday, May 12, 2013

காவலர்களின் காலன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 10

 எ நவஹோ சிக்ஸ்பேக் சிப்பெண்டெல் டெக்ஸ் குங்ஃபூ !

ஆக்‌ஷன் மசாலா அதிரடிக் காமிக்ஸ் கதையொன்றின் ஆரம்ப பக்கங்கள் அதன் வாசகர்களின் வாலிபவாசம் இழக்காத நரம்புகளை சூடேற்றும் வகையில் அமைந்திருப்பதென்பது அக்கதைக்கு வலிமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக அமையும். அதுவும் அந்தக் கதையின் நாயகன் கதையில் தன் அறிமுகத்தை நிகழ்த்தும் தருணமானது அக்கதையின் சூடுபறக்கும் ஓட்டத்தோடு பொருந்திக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கையில் அந்த நாயக அறிமுகமானது கதைக்களத்தை மேலும் சூடேற்றி விடுவதாக இருக்கும். Les Justiciers de VEGAS எனத் தலைப்பிடப்பட்ட, டெக்ஸ் n°601, n°602 மாத இதழ்களின் சிறப்பு தொகுப்பானது நவஹோ திலகம் டெக்ஸிற்கு சிறப்பானதொரு நாயக அறிமுகத்தினை டெக்ஸ் ரசிகர்கள் பரவசமாகி விசில் அடிக்கும் வண்ணமாக தன்னில் தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையல்ல.
கதை ஆரம்பமாவது மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகோ எனும் சிறுகிராமத்தின் விடுதியொன்றில். வறள்நில சுடுகாற்று நகோவின் உயிரற்ற தெருக்களினூடு அனலாய் சுழன்று கொண்டிருக்க, அந்த உயிரற்ற தன்மையை உயிர்க்க வைப்பது போல வெடிக்கும் துப்பாக்கி ஓசை. விடுதியினுள்ளே வெடித்த தோட்டாவின் புகையை இன்னும் பிரியாத துப்பாக்கியுடன் ஒரு மனிதன். விடுதியின் தரையில் உயிரைப் பிரிந்தவனாக ஒருவன். இச்சூழ்நிலை விதைப்பில் உடன் அறுவடையான பயத்தில் உறைந்துபோன இரு சிறுவர்கள். இவற்றை வேடிக்கையுடன் பார்க்கும், மரணத்தையும், மற்றவற்றையும் துச்சமென மதிக்கும் இன்னும் இருவர். விடுதியில் இந்த மூன்று கேடிகளின் பிரசன்னமும் அச்சத்தினதும், ஆபத்தினதும், பதட்டத்தினதும் சுவாசங்களின் நாடித்துடிப்பாக அதிர்கின்றன. அடுத்த நொடியில் என்ன கேடு நடக்கும் எனும் பரபரப்பில் நனைந்த தீமையின் பிரகாசத்தின் முன் கையறு நிலையில் அல்லாடும் அறம். மீண்டும் வெடிக்கும் தோட்டாவொன்றின் முத்தத்தில் தன் கன்னிமையை இழக்கும் டெகிலா புட்டி, தோட்டா வாசத்தில் தன் வாடையை கலந்து விடுதியில் கனக்கிறது. இவ்வாறாக தீமையின் நர்த்தன  சித்திரமொன்றினை அவ்விடுதியின் நடுவில் தன் தேர்ந்த கதைசொல்லல் வழியாக வாசக மனதில் பதிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Mauro Boselli.
உண்ட உணவானது திருப்தியானதாக இல்லை என்பதற்கு பதிலாக விடுதி உரிமையாளனின் உயிரை சன்மானமாக எடுத்துக் கொண்டவனையும், அவன் தோழர்களையும் பதட்டம் ததும்பும் சூழ்நிலை ஒன்றின் துடிப்போடு வாசகர்களிடம் எடுத்து வருகிறார் பொசெலி. அடுத்து என்ன நடக்கும், இந்த கேடிகளின் நகர்வு என்னவாக இருக்கும் எனும் கேள்விகள் வாசகர்களிடம் வியப்பாக எழும் நிலையில், எம்மை அசைக்க இக்கணத்தில் இவ்விடத்தில் எவரும் இல்லை என அம்மூன்று கேடிகளும் எண்ணுவதான உணர்வு வாசகனை வந்தடையும் நிலையில்.. அத்தருணத்தில்… அந்நொடியில்… அதிர்வுகள் வெடிநிலையில் துள்ளும் அக்கணத்தில்… அறமும், நீதியும், சத்தியமும் ஸ்தலத்தில் குற்றுயிராக துடிக்கும் அப்பொழுதில்… அவ்விடுதிக்குள் திரை விலக்கி புயலாய் நுழைகிறான் ஒரு மனிதன்… அவன்?!
jv1நான் இதுவரை படித்த டெக்ஸ் கதைகளில், இக்கதையில் உள்ளதுபோல சூடான டெக்ஸின் அறிமுகத்தை நான் கண்டது இல்லை என்பேன். எண்ட்ரி என்றால் எண்ட்ரி அப்படி ஒரு எண்ட்ரி. உங்கள் வீட்டு எண்ட்ரியா, எங்கள் வீட்டு எண்ட்ரியா, இல்லை இல்லை எமன் வீட்டு எண்ட்ரி என்பேன். மனிதர் விஷ்க் என்று மறைப்பு சீலை ஒன்றை ஒதுக்கி விட்டு விடுதி உள்ளே நுழைவார் பாருங்கள், பரட்டைக்கு ஒன் த ஸ்பாட் பேதி உறுதி. கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட முதிய நவஹோ தம்பதிகளின் மரணத்திற்காக நீதி வேண்டி மெக்ஸிக்கோ எல்லையை மீறும் டெக்ஸ், அந்த சிறுவிடுதியில் பேசும் வசனங்களும், தரும் பதிலடிகளும், கதையின் தனித்துவமான பாணி கொண்ட ஓவியரான Corrado Mastantuono  அவரிற்கு வழங்கியிருக்கும் உடல் மொழியும், எந்த எச்சரிக்கையுமில்லாது வெடிக்கும் ஒரு வெடிகுண்டு போல வெடிக்கும் அந்த மோதலும்…. டெக்ஸ் கதைகளில் சூடான டெக்ஸ் எண்ட்ரிகளை பட்டியலிட்டால் இக்கதையும் அப்பட்டியலில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கதையின் ஆரம்பத்தில் டெக்ஸ், கிட், டைகர் ஜாக் ஆகியோரே கதைக்களத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பார்கள். கார்சன் கதையில் உடனடியாக அறிமுகமாகி விடுவது இல்லை. கிராமத்தில் நடந்து முடியும் மோதலின் பின்பாக கேடிகளின் உடமைகளின் மத்தியில் நீயு மெக்ஸிக்கோவை சேர்ந்த வங்கி ஒன்றின் பணமுடிப்புக்களை கண்டு கொள்ளும் டெக்ஸ் & கோ, அது குறித்த மேலதிக தகவல்களை அறிவதற்காக நீயு மெக்ஸிக்கோ நோக்கி தம் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
நீயு மெக்ஸிக்கோவை வந்தடைந்த பின்பாக அந்நகர ஷெரீஃப்புடனான உரையாடலின் வழியாக, அங்கு இடம்பெற்ற வங்கிக் கொள்ளை குறித்தும், அதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிலரது பிரத்தியேக அடையாளங்கள் குறித்தும் டெக்ஸ் அறிந்து கொள்கிறார். ஆனால் வெகாஸ் நகரின் நீதியின் காவலர்கள் வங்கிக் கொள்ளையர்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர்களில் எஞ்சியிருக்ககூடியவன் ஒருவனே எனவும் மேலதிக தகவல்களை டெக்ஸிற்கு வழங்குகிறார் நீயு மெக்ஸிக்கோவின் ஷெரீஃப். இந்நிலையில் வெகாஸ் நகரின் காவலர்கள் யார் எனக் கேட்டறிந்து கொள்ளும் டெக்ஸ் அவர்களை நேரில் சென்று காண்பது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இப்பகுதியில் குற்றங்கள் நிறைந்து, அமைதியே செத்துப் போயிருந்த நகரமான வெகாஸை எவ்வாறு தம் அதிரடி நடவடிக்கைகளால் அமைதிப் பூங்காவாக நீதியின் காவலர்கள் மாற்றினார்கள் எனும் விபரிப்பின் வழி அந்த நீதிக்காவலர் பாத்திரங்களை வாசகர் மனதில் புகுத்த ஆரம்பிக்கிறார் கதாசிரியர் பொசெலி.
கதாசிரியர் பொசெலியின் கதைகளில் என்னைக் கவரும் அம்சம் என்னவெனில் அவர் தன் கதைகளின் எதிர் நாயகர்களை சோப்ளாங்கிகளாக சித்தரிப்பது இல்லை என்பதுதான். திறமை மிக்கவர்களாகவும், தந்திரங்களில் தேர்ந்தவர்களாகவும், டெக்ஸ் எனும் நாயக பிம்பத்தின் விரைப்பைகளை தம் கைகளில் இறுக்கி சவால் விடுபவர்களாகவும் பொசெலி தன் எதிர்நாயகர்களை உருவாக்குவார். இவ்வகையான எதிர்நாயக உருவாக்கத்தின் வழியாக கதையில் வாசகர்களிடம் அவர் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இக்கதையிலும் தன் பாணியிலிருந்து சற்றும் விலகிடாது கதையின் எதிர்நாயகர்களாக மாறிடப்போகும் வெகாஸின் நீதிக்காவலர்கள் பற்றிய சித்திரத்தை சிறப்பான ஒன்றாக தீட்டுகிறார் கதாசிரியர் பொசெலி.
jv2அதற்காக அவர் இரு இழைகளை தன் கதைசொல்லலினூடு ஓட விட்டிருப்பார். ஒன்று, கதையின் முதல் பாகத்தில் கார்சனிற்கு பதிலாக புலம்பும் பணியை எடுத்துக் கொள்ளும் கிட், வங்கிக் கொள்ளையர்கள் எல்லாம் ஏறக்குறைய பரலோகம் சென்றுவிட்ட நிலையில் நாம் ஏன் வெகாஸிற்கு வீணாக செல்ல வேண்டும் எனக் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ் சொல்லும் பதிலும், கதையும். இரண்டாவது வழிப்பறிக் கொள்ளை சம்பவம் ஒன்றில் உயிர்பிழைக்கும் வெல்ஸ் பார்கோ கம்பனி ஊழியனான மலோரி, வெகாஸ் நகரின் நீதிக்காவலர்களின் விசாரணையின் முடிவில் ஐயமுற்று நடாத்தும் விசாரணை.
இந்த இரு இழைவிபரிப்பின் மத்தியில் கதையின் எதிர்நாயகர்களின் திறமைகள், குணாதிசயங்கள் குறித்தும், அவர்கள் வெகாஸின் நீதிக்காவலர்களாக இருந்தாலும் அதனை ஒரு கவசமாக கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் நிழலான நடவடிக்கைகளுடனான அவர்கள் தொடர்புகளையும் சிறுகச் சிறுக கதையில் கொணர ஆரம்பிக்கிறார் பொசெலி. இந்த உத்தி வழியாக கதையில் கொள்ளையர்கள் யார் எனும் மர்மம் நீங்கிவிட, மிகவும் தந்திரமான, நீதிக்காவலர்கள் எனும் பெயரின் துணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வெற்றிகரமாக நிகழ்த்தும் ஒரு குழுவை டெக்ஸ் & கோ எதிர்கொள்ளப் போகிறது எனும் பரபரப்பை பொசெலி வாசகர்களிடம் எளிதாக கடத்தி விடுகிறார்.
தலைமைப் பண்பும், தந்திரமும், வாழ்வின் இன்பங்களில் நுண்ணிய சுவையும் கொண்ட  நீதிபதியான Hoodoo Brown. வளைந்து கொடுக்காத உறுதியான ஷெரீஃபான Mysterious Dave, இவர்களின் உதவியாளர்கள் என டெக்ஸ் குழுவினர் முகம் கொடுக்கப் போகும் எதிராளிகள் சிறப்பான ஒரு எதிர்நாயகக் கலவை எனலாம். ப்ரவுனும் சரி, டேவும் சரி அமெரிக்க வரலாற்றில் தம் தடம் விட்டு சென்ற நிஜப் பாத்திரங்கள் ஆவார்கள். பொசெலி அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தன் கதையுருவாக்கத்தில் தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக எதிர்நாயகர்கள் குறித்த தகவல்களை வாசகர்கள் உள்வாங்கிய நிலையில்தான் புலம்பல் மகாராஜான், வெள்ளிச்சிகையான் கிட் கார்சனின் அறிமுகம் கதையில் நிகழும். டெக்ஸின் அறிமுகத்திற்கு குறைவான அறிமுகமல்ல அது. நீதிக்காவலர்கள் எனும் போர்வையில் குற்ற ராஜாங்கம் நடத்தும் கொடியவர்களின் எல்லைக்குள் முதலில் காலடி எடுத்து வைப்பது கார்சனே, டெக்ஸ் அல்ல. அதற்கு தக்கவாறு அந்த தருணத்தில் சூட்டையும் ஏற்ற பொசெலி தவறவில்லை.
டெக்ஸ் சிக்ஸ்பேக்
அதேபோல கதையில் கார்சன் நிகழ்த்தும் அதிரடிகள் அபாரமானது. கார்சன் மேல் பொசெலிக்கு தனிப்பிரியம் இருக்க வேண்டும். கார்சனின் கடந்த காலம் போலவே இக்கதையிலும் கார்சனின் பாத்திரப்படைப்பானது டெக்ஸை விட சிறப்பான ஒன்றாக உணர்ந்து கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. அதுவும் கார்சன் தனியே நடத்தும் அந்த அதிரடி துப்பாக்கி மோதல் மிகச் சிறப்பாக இருக்கிறது. நான் முன்னமே எழுதியது போல மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்கள் சண்டைக்காட்சிகளிற்கு விறுவிறுப்பையும், உயிர்ப்பையும், பரபரப்பையும் சிறப்பாக வழங்குபவை. இக்கதையின் சண்டைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல.
கதையின் இரண்டாம் பாகத்தில் டெக்ஸ் குழுவும் வெகாஸிற்குள் நுழைய, விசாரணைகளை ஆரம்பிக்க, எதிர்நாயகர்கள் தந்திரமாக தம் ஆட்டத்தை ஆரம்பிக்க என டெக்ஸ் ரசிகர்களிற்கு ஏமாற்றம் அளிக்காத விருந்து ஒன்று அங்கு தன்னை பந்தி விரிக்கிறது. நிஜ வரலாற்றில் ப்ரவுன், டேவ் இருவரினதும் முடிவுகள் அவர்களிற்கு பெருமை தரக்கூடியவையாக இல்லாவிடிலும் கதாசிரியர் பொசெலி இங்கு அவர்கள் இருவரிற்கும் கவுரமான முடிவுகளை வழங்குகிறார். நிஜத்தில் வாழ்ந்திருந்த தன் எதிர் நாயகர்களிற்கு அவர் தன் கற்பனை முடிவு வழியாகவேனும் சிறிது ஆறுதலை தர முயன்றிருக்கிறார்.
டெக்ஸ் லாஜிக் மட்டுமே பொருந்திப் போகும் கதையிது. எனவே வேறு தர்க்கங்களை இக்கதையில் நாம் பொருத்திப் பார்த்தல் முடியாது. அது கதையை ரசிக்கவும் வைக்காது. ஓவியர் மாஸ்டாண்ட்யூனோ டெக்ஸையும், கார்சனையும் இளமையாக வரைந்திருக்கும் விதம் கதைக்கு தனி இளமையை வழங்கிவிடுகிறது. இவ்வளவு இளமையுடன் வேறு கதைகளில் நான் டெக்ஸையும் கார்சனையும் தரிசித்தது கிடையாது எனலாம். வழமையாக தீர்க்கமான கோடுகளுடன் தெளிவான சித்திரங்களை வழங்கும் மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்களில் கிறுக்கல்தன்மையை வாசகர்கள் உணரலாம். ஆனால் அவரின் இந்தப் பாணியையும் நான் மிகவும் ரசித்தேன். அதிகம் ஏமாற்றாத டெக்ஸின் ஆக்சன் என்பதற்காகவும் தன் மகனான கிட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர் காட்டும் சிக்ஸ் பேக்கிற்காகவும் தவறாது படிக்க வேண்டிய டெக்ஸ் சாகசங்களில் ஒன்று இது என்பேன்.

17 comments:

 1. // பரட்டைக்கு ஒன் த ஸ்பாட் பேதி உறுதி.// பரட்டை என்றுமே பயந்தது இல்லை.

  ReplyDelete

 2. //தொப்பி வச்சவன் எல்லாம் ஹீரோவாகிட முடியாது//


  // மாக்கான் டைகரோட நல்லாவே இருக்கு //

  எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்கிறிங்க

  நல்லாத்தான் இருக்கு :)

  ReplyDelete
  Replies
  1. பரட்டை ய எல்லாம் நான் கண்ண்டுக்கிறதே இல்ல, பாலவனத்தில சுத்துற பெருச்சாளிகளில் பத்தோடு பதினொன்னா பரட்டை :))

   Delete
 3. டெக்ஸின் மிகச் சாதாரணமான கதைகளில் ஒன்று இது என்பேன். மோசமில்லை, வழக்கமான லாஜிக் இல்லாத டெக்ஸ் கதை என்பதைத் தவிர்த்து இதைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. டெக்ஸின் என்ட்ரி குறித்து சொல்லியிருக்கிறீர். ஆர்ப்பாட்டமான ஆரம்பம் என்பது உண்மை தான். ஆனால் அருமையான ஒன்றல்ல. அட்சரம் பிசகாத டெக்ஸ் மசாலா அறிமுகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். பொசெலிக்கு கார்சன் மீது ஒரு சாப்ட் கார்னர் உண்டுதான் போல. ஆனால் இந்தக் கதை எந்த வகையிலும் "கார்சனின் கடந்த காலத்துக்கு" ஈடாக முடியாது. அதில் இருந்த எதிரிகளும், அவர்களுடைய பாத்திரப் படைப்பும் அருமையானவை. இந்தக் கதையின் வில்லன்கள் அதற்கு எந்த வகையிலும் ஈடு இல்லை என்றே சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸின் கதைகள் பெரும்பான்மையானவை சாதாரணமவையே. இது எனக்கு பிடித்திருந்தது. அவ்வளவே. டெக்ஸில் காவியம் என்பது அரிதான ஒன்று என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அல்லவா :P

   Delete
 4. அருனையான பதிவு... டெக்ஸ் கதை என்பது ரஜினி படம் மாதிரி லாஜிக் எப்பவுமே பாக்க ௯டாது... கதையின் ஆரம்பம் தஊக்கலான ஒன்று தான்.. கார்சனின் கடந்த காலம் வில்லன்களோடு இவர்களை compare பண்ண முடியாது ஆனால் இவர்களும் சளைத்தவர்கள் இல்லை... அருமையான பதிவு நண்பரே.. உங்கள் தமிழாக்கம் எப்பவுமே ரசிக்கும்படி உள்ளது.. சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம், லாஜிக் எனும் சொல்லுடன் டெக்ஸ் பக்கம் செல்லவே முடியாது. பத்தடி தூரத்தில் நிற்கும் பத்துபேரை பட் பட் என சுட்டு வீழ்த்துவார் டெக்ஸ், ஆனால் அவர்களின் தோட்டாக்கள் டெக்ஸை அதிகம் போனால் சிராய்க்குமே தவிர வேறு எதுவும் செய்திடாது. இதை மனதில் ஆழமாக நீருற்றி உணர்ந்திருந்தாலே டெக்ஸ் கதைகளை ரசிக்க முடியும். இல்லையேல் ம்ஹூம் :))

   Delete
 5. ஒரு சிறிய உதவி..

  மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

  படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

  http://kannimaralibrary.co.in/power9/
  http://kannimaralibrary.co.in/power8/
  http://kannimaralibrary.co.in/power7/
  http://kannimaralibrary.co.in/power6/
  http://kannimaralibrary.co.in/power5/
  http://kannimaralibrary.co.in/power4/
  http://kannimaralibrary.co.in/power3/
  http://kannimaralibrary.co.in/power2/
  http://kannimaralibrary.co.in/power1/

  நன்றி,
  வினோத்.

  ReplyDelete
 6. Superb story. அருமையான விமர்சனம் & எழுத்து நடை. நீங்கள் ஏன், டெக்ஸ்வில்லர் கதைகளை முழுமையாக மொழி பெயர்க்ககூடாது?

  // ... இதுவரை படித்த டெக்ஸ் கதைகளில், இக்கதையில் உள்ளதுபோல சூடான டெக்ஸின் அறிமுகத்தை நான் கண்டது இல்லை என்பேன். எண்ட்ரி என்றால் எண்ட்ரி அப்படி ஒரு எண்ட்ரி. உங்கள் வீட்டு எண்ட்ரியா, எங்கள் வீட்டு எண்ட்ரியா, இல்லை இல்லை எமன் வீட்டு எண்ட்ரி என்பேன். மனிதர் விஷ்க் என்று மறைப்பு சீலை ஒன்றை ஒதுக்கி விட்டு விடுதி உள்ளே நுழைவார் பாருங்கள், பரட்டைக்கு ஒன் த ஸ்பாட் பேதி உறுதி. ..//

  நெத்தியடி! :)

  ReplyDelete
  Replies
  1. மொழிபெயர்க்கலாம் ஆனால் உரிமைகள் இல்லையே :))

   Delete
 7. Superb story.thanks to tanim i could able to read this in english.such an action story and the way u have ecplained is even more superb.

  ReplyDelete
  Replies
  1. தனிம் நிறைய நன்றிகள் சொல்லப்படவேண்டியவரே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

   Delete
 8. பரோட்டா சால்னா, கண்ணுக்குட்டி பிரியாணி.... ம்ம்ம்... எவ்வளவு வன்முறை :P

  // கதையின் தனித்துவமான பாணி கொண்ட ஓவியரான Corrado Mastantuono அவரிற்கு வழங்கியிருக்கும் உடல் மொழியும் .. //

  காதலர் ஏதாவது மாடலிங் செய்து ஓவியருக்கு உதவினாரா என்ன ????

  பி.கு.: Six Packs தொடர்பான Internet Meme ஒன்று நினைவிற்கு வந்தது.

  "My Six Pack is shielded by Protective Muscles"

  ReplyDelete
  Replies
  1. என் சிக்ஸ்பேக் மாதிரி யாருக்கும் வராது ரஃபிக் :)) வெஸ்டெர்னாலே வன்முறைதானே ரஃபிக், நரை, சிரை, புகை, பகை என்றெல்லாம் எழுத எனக்கு ஆற்றல் இல்லையே என நான் தனிமையில் அழுவது யாரிற்குத் தெரியும் :P

   Delete
  2. அந்த ஆற்றல் உங்களுக்கு கிடைக்காமலே போகட்டும்... எதற்கும் சிவகாசியில் இருந்து வரும் மஞ்சள் பத்திரிக்கைகளை நுகராமல் இரும்... :P

   Delete