Saturday, March 9, 2013

தாக்குதல் தருணம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 9

அரிசோனாவிலுள்ள சிறு நகரமான சியரா விஸ்டாவின் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து கைதிகளை நீதிவிசாரணைக்காக ஃபீனிக்ஸ் எனும் இடத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு டெக்ஸ் தலைமையில் செயற்படும் ரேஞ்சர்களின் குழுவிடம் கையளிக்கப்படுகிறது. கைதிகளை ஃபீனிக்ஸ் நகர் நோக்கி பாதுகாப்புடன் இட்டுச் செல்லும் டெக்ஸ் குழுவினர் வழியில் எதிர்பாராதவிதமாக தாக்கப்படுகிறார்கள். டெக்ஸை தவிர மீதி ரேஞ்சர்கள் மரணத்தை தழுவ, ஐந்து கைதிகளையும் ரேஞ்சர்களின் பாதுகாப்பிலிருந்து மீட்டுச் செல்கிறது அந்த மர்மக்குழு. தன் எதிரிகளை நரகத்தின் குகைகள் வரை விடாது தேடிச்சென்று நீதி வழங்கும் டெக்ஸ், விசாரணைக் கைதிகளையும் அவர்களை மீட்டுச் சென்றவர்களையும் தேடிச்செல்லும் ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பிக்கிறார்…….
மாட்டுத்தோலை விட வலிதான மாமிசத்திற்கும், சூடான பீரிற்கும் பிரபலமான நகரம்தான் சியரா விஸ்டா. வெம்புழுதியின் உறைநிலமான அந்நகரின் சிறைக்கு டெக்ஸ் வந்து சேரும் தருணம் முதலே அவர் பாதுகாவலில் எடுத்து செல்லப்படவேண்டிய கைதிகளின் குணாதிசயங்களை TEX MAXI n° 15 ஆக வெளியாகியிருக்கும் L’Or du Massacre கதையில் விபரிக்க ஆரம்பித்து விடுகிறார் டெக்ஸ் கதைகளின் குறிப்பிடத்தக்க கதாசிரியரான அண்டோனியோ செகுரா. கைதிகள் யார், அவர்கள் செய்த குற்றம் என்ன, சிறையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் போன்றவை வழியே தல டெக்ஸிற்கு கதையில் அவர்கள் தரப்போகும் தலைவலிக்கோலத்தின் ஆரம்ப வளைகோடுகள் அந்தப் பக்கங்களிலேயே எழுதப்பட்டு விடுகின்றன. கைதிகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்ட வாசகர்களும் ஆகா அடிதூள்பறக்கும் கதையாக அல்லவா இது இருக்கப்போகிறது எனும் ஆவலில் பக்கங்களை திருப்ப தவறமாட்டார்கள்.
மிகவும் கடுமையான தாக்குதல் ஒன்றில் தன் காவலில் வந்த கைதிகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் இழந்து நிற்கும் டெக்ஸின் மனதில் எழும் கேள்விகள் எதற்காக இந்த தாக்குதல்? யார் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடாத்தி இருப்பார்கள்? ஐந்து கைதிகளில் இத்தாக்குதலோடு தொடர்புள்ளவர்கள் யார்? என நீளுகின்றன. இக்கேள்விகளிற்கு உடனடியாக விடை தருவதற்கு பதிலாக கைதிகளை மீட்டுச் சென்ற குழு ஒரு கைதியை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு ஏனைய நால்வரையும் திசைக்கொருவராக தம்மை தொடரக்கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டி விடுகிறது. இங்கு வாசகர்களிற்கும் தாக்குதல் நடாத்திய குழுவிடம் தங்கிவிடும் கைதியின் அடையாளத்தை அறியத்தராவகையில் கதையின் மர்ம இழையின் வலிமையை சற்றே உறுதியானதாக்குகிறார் செகுரா. இதனால் டெக்ஸ் மட்டும் அல்லாது வாசகனும் டெக்ஸின் விசாரணைகள் இட்டு வரும் தகவல்களிற்காக வேகமாக கதையின் பக்கங்களினூடாக பயணிப்பவன் ஆகிறான். இந்தக் கதையில் டெக்ஸின் வழமையான சகபாடிகள் யாரும் கிடையாது. டெக்ஸ், டெக்ஸ் மட்டுமே. மொத்த அதிரடிக்குத்தகையும் டெக்ஸ் கரங்களில். மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், கணவாய்கள், வெள்ளம் அதிசீற்றத்துடன் நடக்கும் ஆறுகள், அடித்துக் கொட்டும் பெருநிலமழை, உயிரைக் காயவைக்கும் சூரியன் என அவரின் தனித்த பயணம் இவை யாவற்றினூடாகவும் நீதியை நிலைநாட்டுவதில் பிடிவாதம் கொண்ட ரேஞ்சர் ஒருவனின் தேடலாக அமைந்துவிடுகிறது.
lor du m 1தன் குழுவின்மீதான தாக்குதலின் பின்பாக சியரா விஸ்டா திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்து கைதிகள் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்கிறார். சியரா விஸ்டா நகரின் பத்திரிகையாளரான நோர்ட்டனுடன் அவர் கைதிகளில் இத்தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடியவன் யார் என தரவுகளை வைத்து கணிக்கவும் செய்கிறார் இருப்பினும் அத்தரவுகள் வழி அவர் அடையும் விடையை விலக்கிவைத்து மனிதசாட்சியம் ஒன்றினதும் தன் உள்ளுணர்வின் மீதான நம்பிக்கையிலும் கைதிகளில் ஒருவனான Black Puma எனும் அப்பாச்சி செவ்விந்தியன் தஞ்சம் தேடியிருக்ககூடிய அவன் மக்கள் வாழும் குடியிருப்பை நோக்கி அவர் பயணிக்கிறார்.

சான் கார்லோஸிலிருக்கும் செவ்விந்திய குடியிருப்பின் ஏஜெண்டான சாமுவேல் க்ளோவரைக் கொலை செய்ய முயற்சித்தமைக்காக கைது செய்யப்பட்டவன் ப்ளாக் புமா. அவன் இனமக்கள் குடியிருக்கும் பகுதியினுள் சில கிறிஸ்தவ துறவிகளின் உதவியின் மூலமே டெக்ஸால் எந்த சிக்கலுமின்றி நுழைய முடிகிறது. இங்கு ஒரு கிறிஸ்தவ துறவி, பூர்வகுடி சித்தர்கள் மீது கொண்டிருக்கும் பார்வை கிறிஸ்தவ அதிகாரபீடம் அந்நாளில் அவர்கள்மீது கொண்டிருந்த பார்வைக்கு முரணான ஒன்றாக காட்டப்படுகிறது. செவ்விந்திய மதகுருவான பியர் ஃபீட் மதிக்கத்தக்க ஒரு ஞானி என்பதாகவே அந்தக் கிறிஸ்தவ துறவி எண்ணுகிறார். இவ்வகையான ஒரு பார்வையை இற்றைக்கு ஐம்பது வருடங்களிற்கு முன்பாக இத்தாலியில் வெளிவரும் ஒரு வெகுஜனக் காமிக்ஸ் கதையில் கூறிட இயலுமா என நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்றைய நிலையில் செகுரா, கிறிஸ்தவ மதம் பூர்வகுடிகள் மீது சிலுவையாக இறக்கிய ஒரு பார்வையிலிருந்து முரண்பட்ட துறவிகளும் இருந்தார்கள் என்பதைக் காட்ட இங்கு விழைந்திருக்கலாம்.

செவ்விந்தியக் குடியிருப்பில் தன் விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்பாகவே அங்கு வாழும் செவ்விந்தியர்களின் அவலநிலையும், அவர்களில் வாழ்ந்திருக்கும் வெறுப்பும் டெக்ஸால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. அம்மக்களிற்காக ஒரு கணமேனும் நிஜமாக வருந்தும் டெக்ஸாக அவரை அங்கு அந்தக் கணத்தில் ஒருவர் காணமுடியும். செகுராவின் கதைசொல்லும் அம்சங்களில் இது ஒன்று எனலாம். வழமையாக மதிக்கப்படாத உணர்வுகள் குறித்த கண்ணியமான வரி ஒன்று அவர் கதைகளில் எங்காவது ஒரு முடுக்கில் அமைந்து இருக்கும். வெள்ளையினம் கட்டுவித்த எதிரான பிம்பங்கள் சிலவற்றையேனும் அவரின் அந்த வரிகள் இந்தக் கதைகளிலாவது பொய்யெனெக் காட்டக்கூடும். டெக்ஸ் தொடரும் தன் விசாரணைகளில் ப்ளாக் புமா கைது செய்யப்பட்டதன் பின்னணியிலிருக்கும் உண்மைகளை அறிகிறார். நீதியை தன் பாணியில் நிலைநாட்டவும் முயல்கிறார். கதையின் இப்பகுதியில் முக்கியமான ஒரு மனிதனின் இறப்பு குதிரைகளின் காலடியிலிருந்து பிறக்கும். அந்த இறப்பின் பின்னிருக்கும் தர்மத்தை இலகுவில் உதறி சென்றிட முடியாது. விலங்குகளும் ஆத்மாக்களே எனும் எண்ணம் கொண்ட நிலத்தில் நிகழும் அந்த நிகழ்வில் அதிக ஆச்சர்யத்தை நாம் கண்டிட முடியாது. செகுரா இங்கும் கதை நிகழும் மண்ணிலிருக்கும் ஒரு நம்பிக்கையின் வழியாக தீமைகளிற்கு எதிரான தீர்ப்பை எழுதுகிறார். டெக்ஸ் அதற்கு சாட்சியமாக இருக்கிறார். ப்ளாக் புமாவிடம் தன் கேள்விகளை கேட்டு அதற்கு அவன் தரும் பதில்களை பெற்றுக் கொண்ட பின்பாக அவரின் அடுத்த இலக்கு செடோனா எனும் நகராக இருக்கிறது.

lor du m 2சியரா விஸ்டா சிறையிலிருந்த ஐந்து கைதிகளில் ஒருவனான ஹூவான் அலமீடா அந்த நகரின் வங்கியின் இயக்குனராக இருந்தவன். அதே வங்கியின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி மாட்டிக் கொண்டவன். அப்படியான ஒரு மனிதன்மீது அந்நகர மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எப்படியாக இருக்கும் என்பது நகரில் டெக்ஸ் நுழைந்து அலமீடாவின் வீடு எங்கே என கேட்கும்போதே தெளிவாக கதையில் விபரிக்கப்படுகிறது. ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்தவனிற்கு உலகெங்கும் ஒரே மரியாதைதான். இங்கு டெக்ஸ் அலமீடாவின் மனைவியிடமும், அவள் சகோதரனிடமுமே உரையாட முடிகிறது விசாரணையின் முடிவு அவரிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஆனால் விசாரணை என்பது எப்போதுமே திருப்தியான விடைகளின் வதிவிடமும் இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் வழியில் டெக்ஸ், பத்திரிகையாளனான நோர்ட்டன் தனக்காக வெளியிட்டிருக்கும் முக்கியமான ஒரு தகவலை அறிந்து கொண்டு தன் தேடலை Safford நகர் நோக்கி திசை திருப்புகிறார்.

சஃபோர்ட் நகரில் தங்கம் தேடி செல்வம் சேர்க்கும் மனித வாழ்வின் அவலநிலையை சுருக்கமாக ஆனால் சிறப்பாக எழுதுகிறார் செகுரா. வல்லவர்கள் வைத்ததே சட்டம், நினைத்தவுடன் அரங்கேற்றப்படும் தூக்கு தண்டனைகள், திருட்டு, மோசடி என பூலோக பாவபூமி ஒன்றின் வருத்தமான நிலமது. தங்கம் தேடி செல்வந்தர்களாக வேண்டும் என எண்ணம் கொண்ட மனிதர்களை ஏமாற்ற செய்யப்படும் தந்திரங்கள், அதில் தம்மை வீழ்த்தி தம் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் நரகமாக்கிடும் மனிதர்கள் வாழ்வு தங்கத்தைபோல பிரகாசமானதாக இருந்திருக்கவில்லை. கதையின் இப்பகுதியில் உப்பு நிரப்பிய தோட்டா என்பது உபயோகிக்கப்படும். மனிதரைக் கொல்லாது கொடிய வலியை தரக்கூடிய இத்தோட்டா வகை இருந்தது என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். கதையின் இப்பகுதியில் டெக்ஸின் தந்திரங்கள், அடிதடிகள், துப்பாக்கி பாவனைகள் எல்லாம் அவருடைய ஆக்‌ஷன் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் வகையில் இருக்கும். சஃபோர்டில் அவர் தன்னிடமிருந்து மீட்கப்பட்ட டிக் கிராமர் எனும் கைதியை விசாரிக்க முயல்கிறார். போலி தங்க சுரங்க உரிமைகளை விற்று மாட்டிக் கொண்ட வேளையில் ஷெரீஃபை கொலை செய்ததிற்காக கைது செய்யப்பட்டவன் டிக் கிராமர். அவனிடம் டெக்ஸ் விசாரணை நடாத்தும்போது பெரும்பாலும் அவர் துப்பாக்கியே பேசுகிறது. அவர் தேடிய கேள்விக்கான விடை கிடைக்காத நிலையிலேயே சஃஃபோர்டை விட்டு விலகுகிறார் அவர்.

lor du m 3மீண்டும் சியரா விஸ்டா செல்லும் வழியில் செவ்விந்தியர்களிற்கு பயந்து மறைந்திருக்கும் ஒரு குடும்பத்தை பாதுகாப்பாக கிறிஸ்தவ துறவிகள் மடம் ஒன்றில் கொண்டு சேர்க்கிறார். அங்கு அவர் தன்னிடம் இருந்து மீட்கப்பட்ட கைதிகளில் ஒருவனான அல்பேர்ட் டெக்கர் மீண்டும் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டதை தெரிந்து கொள்கிறார். டெக்கரையும் அவன் கும்பலையும் தேடிச்செல்லும் ஷெரீஃப் குழுவினரோடு தன்னையும் டெக்ஸ் இணைத்துக் கொள்கிறார். டெக்கரிடம் இருந்தும் டெக்ஸ் தன் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்வது இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்தாவது கைதியான பால் லாருயூ குறித்த ஒரு அதிர்ச்சி தரும் தகவலை அறிந்து கொள்கிறார்.. மொத்தத்தில் டெக்ஸின் கேள்விகளிற்கு அவர் விசாரணையும் தேடலும் விடையளிப்பது இல்லை. அப்படியானால் யார் கைதிகளை மீட்டது? எதற்காக? …. மீதியிருக்கும் பக்கங்களில் இதற்கான விடையை வாசகர்களிற்கு தருகிறார் கதாசிரியர் செகுரா.

செகுராவின் மர்ம முடிச்சு சுவாரஸ்யமானது ஆனால் தேர்ந்த வாசகன் ஒருவன் ஏன் இப்பெயர் டெக்ஸின் விசாரணைகளில் இரு இடங்களில் வருகிறது எனும் ஒரு கேள்வியை எழுப்பும் பட்சத்தில் சுவாரஸ்யம் பணால் ஆகிவிடும். ஐந்து கைதிகளின் வாழ்வின் சிறு கூறுகளை டெக்ஸின் விசாரணை வழி சுவையுடன் சலிப்பில்லாமல் எடுத்து வரும் கதை அதன் இறுதிப்பகுதியில் அதன் வீர்யத்தை சற்று இழந்தும் விடுகிறது. டெக்ஸ் மேக்ஸி கதைகளில் மிகச்சிறிய கதை இது எனலாம். 303 பக்கங்கள்தான். வேகமாக வந்து முடியும் இறுதிப்பகுதி, யார் குற்றவாளி எனும் விடை, அக்குற்றவாளியின் வழமையான வில்லத்தனங்கள் போன்றன கதை உருவாக்கி வைத்த எதிர்பார்ப்பை பூரணமாக்க தவறி விடுகின்றன. கதையின் ஓவியர் எனக்கு மிகவும் பிடித்தமானவரான ஹோசே ஒர்ட்டிஸ். கதையின் சில பகுதிகளில் தீர்க்கமற்ற கோட்டு சித்திரங்களின் தீவிரமான எல்லையை தொட்டு விடுவது என அவர் தீர்மானம் கொண்டிருக்கிறார். சில பகுதிகளில் சித்திரங்கள் பூர்த்தியாகாத நிலையிலேயே அச்சிற்கு வந்து விட்டனவோ எனும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது எனினும் ஓர்ட்டிஸின் சித்திரங்களை வெறுக்க முடியாது. கதாசிரியர் அண்டோனியோ செகுரா எழுதிய இறுதி டெக்ஸ் கதை இது. 2012 ஜனவரியில் அவர் காலமாகிவிட்டார். டெக்ஸின் கதைகளிற்கு இது ஒரு பேரிழப்பே என்பது செகுராவின் கதைகளின் ரசிகர்களிற்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று. கதையில் சஃபோர்டில் நடக்கும் துப்பாக்கி மோதலின்போது ஒரு வசனம் வரும் அது டெக்ஸிற்கு மட்டும் அல்ல செகுராவிற்கும் பொருந்தும்….. டேய் இவன் மனுஷன் இல்லேடா…. மிசின் கன்னுடா !!!!

13 comments:

  1. ME THE FIRST...

    படித்து விட்டு வருகிறேன்!

    ReplyDelete
  2. //உப்பு நிரப்பிய தோட்டா என்பது உபயோகிக்கப்படும். மனிதரைக் கொல்லாது கொடிய வலியை தரக்கூடிய இத்தோட்டா வகை இருந்தது என்பதே எனக்கு ஆச்சர்யம்தான்.//

    எனக்கும் இது புதிய தகவல்!

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் கதைல நிறைய தகவல் இருக்கும்... ஆனா நாமதான் கண்டுக்கிறது இல்ல... செம ஸ்பீடா வாசிக்கிறதுல அவற்றை விட்டுருவோம் :)

      Delete
  3. ஏதோ டி. ராஜேந்தர் & சிம்பு திரைப்படம் பார்த்தவுடன் மொழிபெயர்க்கபட்டது போல் உள்ளது:)

    ஏய்.. டண்டணக்கா.. டணக்குனக்கா :)

    ReplyDelete
  4. "வெம்புழுதியின் உறைநிலமான அந்நகரின் " ப்பா தமிழுய்யா இது! இதான்யா தமிழ்! அருமையான பதிவு நண்பரே! கலக்குகிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. இது எதுவுமே இல்லை நண்பரே..... :)

      Delete
  5. சிறப்பான விமர்சனம்.

    உங்களுக்கே உரிய பாணியில் கதையினை கூறி உள்ளீர்கள்.

    பல நுண்ணிய தகவல்களை இடைபுகுத்தி நீங்கள் சொல்லி இருக்கும் விதம் அருமை.

    கதாசிரியரின் நிலையில் நீங்கள் கதையினை கூறி உள்ளீர்கள்.

    படிக்க இப்பொழுதே மிகவும் ஆர்வமாக உள்ளது.

    ஆங்கிலத்தில் tanim ஏற்பாடு செய்தால் தான் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. Tanim செய்தால் நல்லது.... சுவையாக இருக்கும் :)

      Delete
  6. டெக்ஸ் வில்லர் புதிய சித்திரங்களில் சிறப்பாக வந்திருக்கிறது. அந்நிலத்தில் பல தொன்மங்கள் இருப்பதால், நிறைய கதைக்களன்களுடன் கதைகள் வெளிக் கொண்டு வரலாம். ஆனால், நண்பரே, அனைத்துமே நன்றாக இருக்கும் என நம்ப இயலாது, இல்லையா? வார்னருக்கு பேட் மேன் போல டெக்ஸ் வில்லரும் ஒரு பொக்கிஷ சுரங்கம். சிறப்பான பதிவு. மோசமான கதைகளையும் பதிவிடுங்கள். அவற்றையும் அடையாளம் காட்ட வேண்டியது முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. நான் படிக்கும் டெக்ஸ் கதைகளை இங்கு பதிவிட்டு விடுவேன் நண்பரே... :)

      Delete