Sunday, February 17, 2013

பனிநிலத்தின் துராத்மா

வதனமோ சந்த்ரபிம்பமோ - 8 

இலையுதிர் காலத்தின் ஆரம்பம் இலைகளின் அந்திமத்தின் உதயம். தம் உயிரின் அசைவென இருந்த இலைகளை உதிர்க்ககூடிய விருட்சங்கள் தம்மை புதியதொரு துளிர்ப்பின் முன்பான தியானத்தினுள் ஆழ்த்திட அடங்கிடும் பருவம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியினுள் அமைந்திருக்கும் Salish செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே ஒடிச்செல்லும் அந்த ஆற்றில் இலையுதிர்காலத்தின் குளிர்காற்று தன் கோலங்களை கண்ணறியா விரல்களால் வரைந்து ஓடிச் செல்கிறது. காலம் போல ஆறும் தன்னைச் சுற்றியவை குறித்த பிரக்ஞையற்று தன் வழியில் வழுகி ஒடுகிறது. அதன் ஓட்டத்தில் தன்னை இழந்து மிதந்து வருகிறது ஒரு சிறுபடகு. ஆற்றின் ஓட்டமும், காற்றின் ஸ்பரிசமும் அப்படகை செவ்விந்தியக் குடியிருப்பின் கரைகளில் ஒதுங்க செய்கிறது. கரையொதுங்கிய சிறுபடகில் கிடக்கிறது ஒரு வெள்ளை மனிதனின் உடல். அம்மனிதனின் உடலை ஆராயும் பூர்வகுடிகளின் மதகுரு  கடிதம் ஒன்றைக் கண்டு கொள்கிறார். அக்கடிதம் ஜிம் பிராண்டன் எனும் கனேடிய குதிரைப் பொலிஸ் அதிகாரிக்கு முகவரி இடப்பட்டு இருக்கிறது. பூர்வகுடி மதகுரு வெள்ளை மனிதனின் சடலத்தையும், கடிதத்தையும் செண்ட் ஜான் கோட்டையில் கொண்டு சேர்க்கிறார்…
dtso1வாசகனை தன் முதல் பக்கத்திலேயே கதை நிகழும் பிரதேசத்திற்குள் இட்டுச் செல்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். ஆனால் TEX MAXI n° 5 ஆக வெளியாகி இருக்கும் Dans les Territoires du Nord-Ouest கதையின் ஓவியர் Alfonso Font அதை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். தெளிவான நீர் கொண்ட ஏரியொன்றின் அருகில் அமைந்திருக்கும் சலிஷ் இன இந்தியர்களின் சிறுகிராமம். கிராமத்தின் பின்னணியில் இருக்கும் காடுகள். அக்காட்டில் உள்ள மரங்கள். அவற்றில் இல்லாது இருக்கும் இலைகள். நீண்ட தொலைவில் இருக்கும் பனிபூத்த மலைகள். அவற்றின் மேலாக உஷ்ன வலயம் நோக்கி வலசை பறக்கும் பறவை இனங்கள். சலிஷ்களின் தங்குமிடங்களிலிருந்து மேல் கிளம்பும் புகை. சலிஷ்களின் குலச்சின்ன நடுமரங்கள், அவர்களின் செதுக்கு மரச்சிற்ப வேலைப்பாட்டழகுகள். ஏரியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிறு படகுகள். ஏரியின் தொலைவில் மிதந்து வரும் ஒரு படகு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவம் கொண்ட வாசகன் கண்களின் வழியே ஆன்மாவில் நுழையும் இலையுதிர்காலத்தின் உதிரழகு. ஸ்பெயின் நாட்டவரான அல்போன்சோ ஃபொண்ட் தனது சித்திரங்களில் ஏராளமான தகவல்களை தருவதில் நாட்டம் உடையவர். டெக்ஸின் இக்கதையிலும் அவர் அதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. செயிண்ட் ஜான் கோட்டையின் அதிகாரி மேஜர் டிக்கின்ஸின் அலுவலகத்தை அவர் தன் சித்திரத்தால் விபரிக்கும் விதம் அபாரமானது. சிறு சிறு பொருட்களையும் விடாது தன் சித்திரத்தினுள் சேர்த்துக் கொண்டு ஒரு சித்திரம் விபரிக்க விரும்பும் ஸ்தலத்தை அவர் பூரணமாக்கும் திறன் நின்றுபார்த்து நிதானமாக ரசித்துப் பின் கடந்து செல்ல வேண்டிய தன்மையை தன்னில் கொண்டிருக்கிறது.
அலாஸ்காவில் அமைந்திருக்கும் நகரான SKAGWAY க்கு டெக்ஸும், கார்சனும் வந்து சேரும்போது செயிண்ட் ஜான் கோட்டைக்கு விஜயம் செய்த கனேடிய பொலிஸ் அதிகாரி ஜிம் பிராண்டன், பின் எந்த தகவலுமின்றி மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருக்கிறது. டெக்ஸையும், கார்சனையும் மறைந்துபோன அதிகாரியான பிராண்டனை கண்டுபிடித்து தரவே அங்கு வரவழைக்கிறான் அவர்களின் நண்பனான ஃபட் ஜான். கனேடிய குதிரைப் பொலிஸ், பிராண்டன் தன் பதவியை விட்டு சொல்லாது ஓடி விட்டான் எனக் கணிக்கிறது. ஆனால் பிராண்டனை நன்கறிந்த ரேஞ்சர்களான டெக்ஸும், கார்சனும் அதை நம்ப தயாராக இல்லை. எனவே பிராண்டன் சென்ற திசையில் பயணித்து அவனை தேடுவது எனும் முடிவிற்கு அவர்கள் ஃபட் ஜானுடன் உடன்படுகிறார்கள். இதற்காக அவர்கள் அலாஸ்கா எல்லையை தாண்டி பனிநிலமான கனேடிய வடமேற்கு பிரதேசத்தினுள் பயணித்தாக வேண்டியிருக்கிறது.
இக்கதையில் குதிரைகளை நாம் அதிகம் காண முடியாது. பிராண்டன் செயிண்ட் ஜான் கோட்டைக்கு வரும் நிகழ்வுகளுடன் கதையில் குதிரைகளும் காணாமல் போய்விடுகின்றன. கவ்பாய் கதாநாயகர் ஒருவர் குதிரையின்றி கொண்டெடுக்கும் சாகசம் என்பது ஒரு சிறு முரண்நகைதான். ஆனால் கதை இடம்பெறும் பகுதியில் பயணத்திற்கு நாய்களால் இழுத்து செல்லப்படும் இழுவை சறுக்கு வண்டிகளே பயன்படுத்தப்படும் குதிரைகள் அல்ல என்பது எதார்த்தம். குதிரையில் ஏறி சாகசம் செய்த நம் டெக்ஸும், கார்சனும் இழுவை வண்டியில் சாகசம் செய்ய கிளம்பும் அழகோ அழகு! அதிலும் தன் உடலில் இருக்கும் அனைத்து என்புகளிற்கும் உதிரிக்கட்டு இட்டு கட்டி வைத்திருக்கும் கார்சனிற்கு இவ்வகையான பயணமுறை எவ்வளவு சந்துஷ்டியை அளிக்கும் என்பது தெளிவு. டெக்ஸ் அண்ட் கோ பயணிக்கும் வழியும் இலகுவான வழியல்ல, உறுதியான மனமும், தேர்ந்த அனுபவமும் கொண்ட வழிகாட்டிகளால் மட்டுமே அவ்வழியால் அபாயங்களை தவிர்த்து பயணிக்க முடியும். எனவே ஃபட் ஜானின் பரிந்துரையின் வழியாக கேத்தி டாவ்ன் எனும் இளம் பெண்ணை தமக்கு வழிகாட்டியாக இணைத்துக் கொள்கிறார் டெக்ஸ். கார்சனிற்கு எலும்புகளில்தான் உதிரிக்கட்டு, பெருசு பெண்கள் விடயத்தில் ஒரு மன்மத மைனா என்பது ஊரறிந்த விடயம், கார்சன் தன் திறமைகளை டாவ்னிடம் காட்ட தயங்குவதோ தவறுவதோ இல்லை.
dtso2அடர்த்தியான பனிப்போர்வை மீது வழுக்கிப் பயணிக்க இழுவை வண்டி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை இழுத்து செல்லும் நாய்கள். கதாசிரியர் Mauro Boselli கதையில் இது குறித்து தரும் தகவல்கள் சுவாரஸ்யமானவை. ஜோடி ஜோடியாக வண்டியில் இணைக்கப்படும் நாய்களின் நிலைகள், அவற்றிற்கான காரணங்கள் என அவர் தர ஆரம்பிக்கும் தகவல்கள் கதை நெடுகிலும் அடர்பனி பிரதேசம் ஒன்றினூடாக பயணிக்கும் மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களை தந்து கொண்டே இருக்கிறது. இவ்வகையில் பொசெலி ஒரு அற்புதமான கதாசிரியர் எனலாம். அதேபோல அருமையான கதைக்களத்தை உருவாக்கி அதில் வரும் எதிர்நாயகர்களை சோடை போகாத வகையில் சித்தரிக்கும் பண்பும் பொசெலியிடம் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அவர் எழுதிய சிறப்பான கதையான கார்சனின் கடந்த காலம்.
இம்முறையும் அவர் கதைக்களத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டிடவில்லை. பிராண்டனின் மறைவிற்கு ஒரு வகையில் காரணமான கடிதம் கொண்டிருக்கும் மர்மம், மனித ஆன்மாக்களை தன்வசமாக்கி அவர்களை நடைப்பிணங்களாக்கும் வெண்டிகோ எனும் துராத்மாவின் வடிவான தங்கவிழி மனிதன் போன்றவற்றை மனிதர்கள் முன் மாபெரும் சக்தியாக தன்னை நிறுத்தும் இயற்கையுடன் அவர் கதைப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் ரயில், நாவல்மரம், சொம்பு என்பவையும் ஒரு பாத்திரமே எனச் சொல்வதுபோல பொசெலியின் இக்கதையில் அவர் உருவாக்கி இருக்கும் பிரதான எதிர்நாயகன் இயற்கை. –30°C ல் குளிர் இறங்கி தாண்டவமாடும் வெண்பனி நிலத்தில் அவர் சாதாரண மனிதர்களின் நாயகத்தன்மையை பொருத செய்திருக்கிறார். கதையில் பரபரப்பிற்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லை எனலாம்.
கதையின் பிரதான பெண்பாத்திரமான Kathy Dawn செவ்விந்திய தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் பிறந்தவள். ஆனால் அவள் செவ்விந்திய மரபிலேயே வளர்கிறாள். அவள் தந்தை பொலிசாரால் கொல்லப்பட்டது பொலிஸ் அதிகாரிகள் மீதான ஒரு வெறுப்பை அவளில் உருவாக்கி வைத்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் என்றாலே தன் இனத்திற்கு கேடுதான் எனும் ஒரு எண்ணம் அவள் மனதில் பதிந்துபோய்க் கிடக்கிறது. ஆரம்பத்தில் அவள் டெக்ஸ், கார்சனுடன் பழகும் முறையில் ஒரு அந்நியத்தன்மை வெளிப்பட்டாலும் கதையின் நகர்வில் அவள் அவர்களுடன் இணைந்து போராடுபவளாக மாறுகிறாள். செவ்விந்தியக் குடிகளில் அடங்கியிருக்கும் ஒரு பெண்ணாக டாவ்ன் காட்டப்படுவது இல்லை மாறாக மிகுந்த மனத் தைரியத்துடன் இயற்கையையும், மனிதர்களையும் எதிர்த்துப் போராடும் பெண்ணாகவே அவள் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் செவ்விந்திய மரபு அவளில் ஏற்றிவைத்த மூட நம்பிக்கைகளையும் அவள் தன்னில் கொண்டிருக்கிறாள். கதையின் ஒரு பரபர தருணத்தில் பெண் சொல்வதை ஆண் ஒரு போதும் நம்பக்கூடாது என டாவ்னின் துணைவனான ஜெரிக்கோ கூறுவதன் மூலம் செவ்விந்தியக் குடிகளில் பெண்ணின் நிலை எப்படியானது என்பதை வரிப்படுத்துகிறார் பொசெலி. அதேபோல பெண்ணின் இந்நிலை அல்லது தகுதியை வைத்தே எதிரிகளிடம் வாயைத் திறக்காத ஒரு செவ்விந்திய வீரனை டெக்ஸ் வில்லர் உடைப்பதாகவும் அவர் கதையை உருவாக்கி இருப்பார். பெண்ணினால் ஏற்படும் மரணம் வீர மரணம் அல்ல எனும் நம்பிக்கையை கொண்டதாகவும் சில செவ்விந்தியக் குடிகள் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. இதுதான் டெக்ஸ் கதைகளின் அழகு. எது ஒரு எதிர்மறை அம்சமோ அதை வைத்து கதையில் திருப்பங்களை உருவாக்குவது. இதுவே பரட்டை கதையாக இருந்தால் பரட்டையின் அலம்பல்கள் தாளாது வாசகர்கள் கண்ணீர் கடலில் படகு ஓட்ட ஆரம்பித்து இருப்பார்கள்.
dtso3மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கதையில் உருவாக்கப்படும் பாத்திரம் தங்கவிழி மனிதன். அவன் சக்திகள், அவன் ஆற்றும் கொடூர செயல்கள், அவன் அடியாட்கள், அவன் பலம் என கதையின் நகர்வில் அவன் குறித்த பிம்பத்தை பெரிதான ஒன்றாக உருவாக்குகிறார் பொசெலி. டாவ்னிற்கும், பிராண்டனிற்கும் தங்கவிழி மனிதனைக் கொல்ல தகுந்த காரணங்கள் இருக்கிறது. பிராண்டனின் விதி அது எனவும், செவ்விந்தியர்களின் பேராத்மாக்கள் அவன் தங்கவிழி மனிதனை அழிக்க துணைபுரிவார்கள் என்பதாகவும் கதை அடுக்கி கொண்டே செல்கிறது. நழுவும் நிழல் எனும் செவ்விந்திய பாத்திரம் ஒரு செவ்விந்திய கிராமத்தின், மக்களின் அழிப்பிற்கு துணைபோகிறான் பின் ஒரு தருணத்தில் பனியில் பிணங்களுடன் ஆழ்ந்து போய்க்கிடக்கும் அதே கிராமத்தில் அவன் தன் மரணத்தை சந்தித்துக் கொள்கிறான். கதாசிரியர் பொசெலி தர்மம் ஒன்றன் வழி செயற்படும் நீதி எனும் கருத்தை இங்கு தன் கதையில் முன் வைக்கிறார். ஆனால் தங்கவிழி மனிதன் விடயத்தில் அனைத்தும் பொய்த்துப் போகிறது.
ஏனெனில் தங்கவிழி மனிதனைக் கொல்வது பிராண்டனோ, டாவ்னோ அல்ல. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட பாத்திரமான தங்கவிழி மனிதனிற்கும் நாயகர்களிற்கும் எதிரான போராட்டம் உணர்வுபூர்வமாகவும் அதே சமயம் விறுவிறுப்பு குறையாமலும் இருந்திருக்க வேண்டும் மாறாக கதையில் அது டப் என முடிந்துபோய்விடுகிறது. கதையின் அனைத்து நல்ல அம்சங்களையும் இந்த மிகையான ஏமாற்றம் அடித்துப் போட்டு விடுகிறது. இப்படி அருமையாக ஒரு கதையை சொல்லி வந்துவிட்டு இறுதியில் இப்படி ஒரு நமத்துப் போன சீனிப்பட்டாசு வெடிப்பை தந்தால் யார்தான் திருப்தி கொள்வார்கள். இதுவே எதிரானதாக இருந்திருந்தால் கதை டெக்ஸின் டாப் கதைகளில் இடம் பெற்றிருக்கும். இருப்பினும் கதை சுவாரஸ்யமானது, ரசிக்க அனேக தருணங்கள் உண்டு. ஓயா புலம்பல் புகழ் கார்சன் பனியில் புலம்புவது ஒரு சுகம். லிண்ட்மேன் ஏரியின் அருகே நிகழும் நீண்ட சண்டைக் காட்சி வாரே வா. டெக்ஸா கொக்கா. கார்சனையும், டெக்ஸையும் அவர்களின் முகத்தில் இட்ட கோடுகள் வழியாக முதுமைத்தோற்றம் கொண்டவர்கள்போல தோன்ற வைத்தாலும் கதையின் பெரும்பான்மையான காட்சிகளில் அதிரடி செய்திருக்கும் அல்ஃபோன்சோ பொண்ட். கோஸ்ட், ஜெரிக்கோ, நழுவும் நிழல், கருமின்னல் போன்ற சுவாரஸ்யமான சிறு பாத்திரப் படைப்புக்கள் என கதை மோசம் எனும் நிலையிலிருந்து கணிசமான தொலைவில்தான் நிற்கிறது. இக்கதையில் குளிருக்குள் ஒரு சூடான Bourbon மதுவை அடித்த இன்பம் உண்டு ஆனால் முழுமையான கிக் எட்டிவிடாத நிலையில்.

10 comments:

  1. வாவ் சூப்பர் பதிவு

    வரிசையாக டெக்ஸ் மாக்ஸ்சியின் பதிவுகளாக போட்டு தாக்கி வருகிறீர்கள் நன்றி காதலரே

    வெகு விரைவில் தமிழில் எதிர் பார்க்கலாம் ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. அட தமிழில் கண்டிப்பா வரும் ஆனா தமிழில் வராது :)

      Delete
  2. எப்பொழுதும் போல ஒரு சிறப்பான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. ரமேஸிற்கு ஒரு மனரா கதை பார்சல்... :)

      Delete
  3. அருமையான விமர்சனம்.
    படிக்க தூண்டுகிறது.
    ஹ்ம்ம் தமிழில் எப்பொழுது வருமோ..:)

    ReplyDelete
  4. கார்சன் மீது உமக்கு எப்போதும் ஒரு கரிசனம் இருந்து வந்திருக்கிறது. Kathy Dawn பற்றி உருகி உருகி எழுதினாலும் அவர்தம் உருவப்படத்தை அமுக்கி வைத்து அநியாயம் செய்திருக்கிறீர். கார்சன் மீது கரிசனம் இருந்தால் மட்டும் போதும் என்பதோ உம் எண்ணம்? :P

    ReplyDelete
    Replies
    1. ஆமா அப்டித்தான் செய்வேன்.... :)

      Delete
  5. // காலம் போல ஆறும் தன்னைச் சுற்றியவை குறித்த பிரக்ஞையற்று தன் வழியில்//

    பதிவு தென்றலாக மனதை வருடுகிறது...

    ReplyDelete