Wednesday, February 13, 2013

கில்லிங் ஜோர்டான் - 1

அலைகளின் ஆலிங்கனம் கதையின் மாதிரிப்பக்கம் இணையவெளியை ஆலிங்கித்தபோது அதிலிருந்த மொழிபெயர்ப்பு தரத்தைக் கண்ணுற்று அதிர்ச்சியடையாமல் இருந்திருக்ககூடியவர்கள் இருவரே. ஒருவர் பெனுவா XVI, அடுத்தவர் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு. விஜயன்.

முன்னவர் ஆத்ம பரிசோதனையில் தன்னை இழந்திருந்தபடியால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்தவரிற்கு கதையின் மொழிபெயர்ப்பு மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பது அதிர்ச்சியை உருவாக்க வாய்ப்பை அளிக்கவில்லை. அதனால்தான் கதையை முழுதுமாக படித்தபின்பாக மொழிபெயர்ப்புக் குறித்துக் கூறுங்கள் என ஒரு காணொளியில் அவர் கூறியிருந்தார். அலைகளின் ஆலிங்கனத்தின் மாதிரிப்பக்கத்தில் கார் கதவை நிகிட்டா சிக்ஸ் அறைந்து சாத்தும் சத்தம் இல்லாமல் இருந்ததும், NBS ல் சத் எனும் கவித்துமான ஓசை அதன் இடத்தை பிடித்ததும் ஒரு அற்புதம் எனலாம். ஆனால் அற்புதம் என்பது தனித்து வருவது இல்லை. அது வரும்போது அலையலையாக வரும். வாசகனை அப்படியே தன் அலைக்கரங்களில் அள்ளி ஆலிங்கனம் செய்திடும். இவ்வகையான ஒரு முன்னோக்கு அர்த்தத்துடனேயே அலைகளின் ஆலிங்கனம் எனும் தலைப்பு அக்கதைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாதுதான்.

எனது இந்த தொடர் பதிவுகளின் நோக்கமும் கதையின் வாசிப்பின்போது என்னை அலைக்கரங்களால் ஆலிங்கனம் செய்த  அந்த அற்புதங்களை இங்கு பகிர்ந்து கொண்டிட வேண்டும் என்பதுதான். இது ஒரு ஒழுங்கற்ற தொடர். எப்போது வேண்டுமானாலும் வரும். வராமல் போகும். என் போக்கிற்கேற்ப, மனநிலைக்கு ஏற்ப பதிவாக்கி விடுகிறேன். அவ்வளவுதான். இந்த பதிவினால் தமிழ் காமிக்ஸின் மொழிபெயர்ப்பு தரம் மாற்றம் காணும் என நான் எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் அறிவு ஜீவித்தனமானது என்பது தெரியும் என்பதனால் நான் என் எல்லைக்குள் நின்று கொள்வது நலம். காலத்தை விரயமாக்கி பக்கங்களை மொழிபெயர்த்து ஒப்பிடுவதையும் நான் செய்யப் போவது இல்லை. இத்தனையாம் பக்கம், இத்தனையாம் கட்டம், அசலில் இப்படி, தமிழில் இப்படி என்று சொன்னால் புரிந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன். புரிபவர்களிற்காவது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பை மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறார். பெயர்த்தும் விடுகிறார். மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தை மேற்பார்வையாளர் படைப்பின் மூலப்பிரதியுடன் ஒப்பிடுகிறார். உதாரணமாக படைப்பு மாரிஸ் திலியூ என்பவரால் உருவாக்கப்பட்டது என வைத்துக் கொள்வோம்.

..........மார்பிஹானிலிருக்கும் ஒரு சிறு மீன்பிடிதுறைதான் லாப்ரான். D 21A பாதை வழியாக அங்கு நீங்கள் நுழைகையில் கடலில் அமர்ந்திருக்கும் குஜால் குதிரைவீரன் கோட்டை உங்கள் கண்களில்படும். சிதிலமடைந்த அக்கோட்டையில் இன்று கடந்தகாலத்தின் நினைவுகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. அக்கோட்டையை தன்மீது தாங்கியிருந்த பாறையானது எட்டு கிலோ மீற்றர் நீளம் கொண்ட, நீரில் மூழ்கிடக்கூடிய ஒரு கற்பாதையால் கரையுடன் இணைக்கப்பட்டிருந்தது. எமனின் பாதை அது. மத்திய காலத்தில் கட்டப்பட்டு கடந்த ஏழு நூற்றாண்டுகளாக தன்னை தினந்தோறும் மூழ்கடிக்கும் கடல் ஏற்றங்களை வெற்றிகரமாக தாங்கி வரும் பாதை. இப்பாதையில் கடலுடன் கைகுலுக்குபவனிற்கு ராகு உச்சம். இப்பாதையை கடப்பதற்கு ஒரு கையை கடவுளிடமும் மறு கையை எமனிடமும் தரவேண்டும் என எச்சரிக்கிறது ஒரு முதுமொழி. குளிர்காலத்தில் இப்பகுதி ஆளரவமற்றதாகவிருக்கும். ஆனால் டிசம்பரின் அந்த நாளில்.....

இப்படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டிய [ இது என்னாலானது, இதனை விட சிறப்பாக செய்தால் அனுப்பி வையுங்கள்  கண்டிப்பாக அடுத்த பதிவில் பிரசுரிக்கிறேன்.... இல்லை, நான் PDF கோப்பு அனுப்ப மாட்டேன்]  La Voiture Immergée ன் அதாவது NBS ன் அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கத்தின் முதல் கட்டமானது ஏதோ இதனுடன் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்குமாறான வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் [ அட வெட்கப்படாமல் NBS ல் அலைகளின் ஆலிங்கனம் முதல் பக்கம் முதல் கட்டத்தை பாருங்கள்]. ஆனால் அது மாரிஸ் திலியூவினால் எழுதப்பட்ட வரிகளின் மொழிபெயர்ப்பு அல்ல. அப்படியானால் அவ்வரிகள் யாரால் எழுதப்பட்டன? படைப்பை உருவாக்கியவரின் வரிகளை விட்டு ஏன் மொழிபெயர்ப்பாளர் புதிய சொற்களை உருவாக்க வேண்டும்? அப்படியானால் இது மாரிஸ் திலியூவின் கதையின் மொழிபெயர்ப்பு இல்லையா? அப்படியானால் இக்கதையை படைத்தவர் யார்? ஏன் அவரின் பெயரிற்கு பதிலாக மாரிஸ் திலியூவின் பெயர் அலைகளின் ஆலிங்கனத்தை ஆரத்தழுவுகிறது? மாரிஸ் திலியூவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஒரு படைப்பாளியின் வரிகளை அதற்கு பதிலாக பயன்படுத்தி அதனை சந்தைப்படுத்தலை என்ன சொல்லி அழைக்கலாம்? இதனை மொழிபெயர்ப்பு எனச் சொல்லலாமா ? மேற்பார்வையாளரிற்கு கேள்விகள் உருவாகலாம் ஆனால் எதுவுமே உருவாகமால் படித்து செல்வதன் பெயர்தான் அற்புதம் அல்லவா. அதையே அப்படியே பிரசுரிப்பது பேரற்புதம் அல்லவா... நாமெல்லாம் அற்புதமான வாசகர்கள் அல்லவா !!!!

அற்புதங்கள் வரும்....


7 comments:

 1. இன்றைய சுபயோக சுபதினத்தில் பொழுது போகாததொரு வேளையில், கரண்ட் இல்லாததொரு தருணத்தில், எட்ட இருக்கும் ப்ளாக் சிலவற்றை சற்றே எட்டிப் பார்த்தால் தேவலாம் என்று எண்ணம் எட்டிப் பாய்ந்ததொரு தருணத்தில் தங்களது ப்ளாக் வர நேர்ந்தது. தாவாங்கட்டையை தடவிக் கொண்டே யோசித்துப் பார்க்கையில், " தயவு செய்து வலிக்காத மாதிரி அடிங்க பாஸு" என்று கெஞ்சுவதைத் தவிர்த்து எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை. பதில் வேணுமா? அடப் போங்க பாஸு. வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்? தெரிஞ்சா சொல்ல மாட்டோம்? ஆஹா, கால காவாய்க்குள்ள விடுறதுல என்னா சுகம்!

  பிகு: இந்த அரிய புத்தகத்தை படிக்கத் துணியாத என்னைப் போன்ற கபோதிகளுக்காக தமிழ் துள்ளி விளையாடும் அந்த மொழிபெயர்ப்பையும் தயவு செய்து போடுமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

  இவன்,
  சிவகாசி ஆரம்பநிலை பள்ளிக்கூட எட்டுமாஸ்டர்,
  RTO அருகே,
  ஆண்டியாசந்தாபட்டி,
  சிவகாசி,
  சோக்கு டிஸ்ட்ரிக்ட்.

  ReplyDelete
  Replies
  1. இதுபற்றிய தங்களது கருத்து எதுவானாலும் உடனே கொரியரில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். வெள்ளிக்கிழமைக்குள் வருமாறு இருந்தால் மட்டுமே உங்கள் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும். அதுக்கு அப்பால வந்தால் கடிதம் நேராக குப்பைத்தொட்டிக்குத் தான் போகும் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், அதுக்கு முன்ன வந்தாலும் அங்கன தான் போகும் என்று சொல்லி உங்களை தேற்றவும் கடமைப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்குல அள்ளிக் கொடுத்தாலும் என்ன இருந்தாலும் நாமல்லாம் குதூகலமா கும்மி அடிக்குற குடும்பமில்லையா? அம்மிக் கல்ல ஆட்டுங்கல.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. மார்ஹிபான் பகுதியில் இருக்கும் ஒரு சிறு மீன்பிடித்துறை லாப்ரான்.D21A சாலையை நெருங்கும் போது, உற்சாக வீரன் (Merry Knight) கோட்டை கண்ணுக்குப் புலப்படும். கடலுக்கு அருகில் கறுமையும் வெறுமையும் நிறைந்து சிதிலமடைந்து கிடக்கும் அக்கோட்டையில் கடந்தகால நினைவுகளையும், ஆவிகளையும் தவிர்த்து எதுவும் கிடையாது. எட்டு கிலோமீட்டர் தொலைவு ஓடும் சாலை ஒன்று கோட்டை அமைந்திருக்கும் பாறையையும், கரையையும் இணைக்கிறது. சாத்தானின் வழித்தடம் இது. மத்திமக் காலத்தில் கட்டப்பட்டு ஏழு நூற்றாண்டுகளாக மூழ்கடிக்கும்வண்ணம் வரும் அலைகளின் ஆக்ரோசத்தை தினமும் தாங்கிக்கொண்டிருக்கிறது. அலை பொங்கிவரும் போது நடுவில் மாட்டிக்கொள்ளும் எவரும் கடலுக்கு காணிக்கையே. உள்ளூர்ப் பழமொழி ஒன்று சொல்வது போல இந்தப் பாதையைக் கடக்க நினைப்பவன் கடவுளிடமும் சாத்தானிடமும் வேண்டிக்கொள்வது நல்லது. பனிக்காலத்தில் இப்பாதை வெறிச்சோடிப் போயிருக்கும். ஆனால், இந்த டிசம்பர் தினத்தில்....

   - கைநாட்டுக் கபோதி.

   Delete
  2. //தொலைவு ஓடும் சாலை// பாதை என்பது இன்னும் சரியாக இருக்கும்.

   Delete
 3. எடிட்டிடம் தற்போது ஒரு தன்னை தானே நிராகத்தி கொள்ளும் குணம் பல்கி பெருகி விட்டது எனலாம். நேரில் பார்க்கும்போது தற்போதைய ஆங்கிலம் அல்லாத மொழிபெயர்ப்பு குழு, பகுதி நேர வேலையாளர்கள், எனவே அவர்கள் திறன் கேள்விகுறியது, அதை மேம்படுத்த பேராசிரியர் ஒருவரை அணுகி இருக்கிறோம், என்று பதிலளிக்கிறார். ஆனால், எழுத்துகளாக உறதிபடுத்தும் போது அதில் குறை என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்றும் சான்றளிக்கிறார்.

  ப்ரஞ்சு, இத்தாலி மொழிகள் தெரியாததனால் தான் மூலத்தை சரிபார்க்கமுடியவில்லை என்று தன் இயலாமையை தெரிவிக்கும் நபர், ஏன் ஆங்கிலத்தில் வெளியான அதே கதையை கொண்டு அப்பணியை செய்ய முடியாது. அதற்கு கேட்டால், ஆங்கிலத்தில் வந்தவை தான் சரியான மொழியாக்கமா என்று குறுக்கு கேள்வி கேட்கிறார். தன் பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்களை நம்பும் அளவிற்கு, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு Proof Reader ஐ வைத்து மொழிமாற்றம் செய்யும் நிறுவனத்தை நம்ப மாட்டாரா ?

  50 வருட புராதண ஒரு தொடர் இப்படி சொதப்பலாக தமிழில் அறிமுகமாகி இருப்பது, கேவலம். ஒரு வேளை இதை தான் தமிழ் காமிக்ஸ் ரசிக வட்டம் விரும்புகிறதோ என்னவோ... அவர்களுக்கு தற்போதைய கோபம் எல்லாம் "ஜோர்டான் கதை ஆக்ஷன் இல்லையே" என்பது தான் :P

  ReplyDelete
 4. // மாரிஸ் திலியூவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஒரு படைப்பாளியின் வரிகளை அதற்கு பதிலாக பயன்படுத்தி அதனை சந்தைப்படுத்தலை என்ன சொல்லி அழைக்கலாம்? இதனை மொழிபெயர்ப்பு எனச் சொல்லலாமா ?//

  ReplyDelete