Sunday, May 13, 2012

இருண்ட நிழல்கள்

அஞ்செலிக்கா எனும் சூன்யக்காரியின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பார்னபாஸ் காலின்ஸ், சூன்யக்காரியின் சாபத்தினாலும், சதியாலும் ஒரு ரத்தக் காட்டேரியாக மாற்றம் பெற்று ஊர் மக்களால் உயிருடன் புதைக்கப்படுகிறான்.. ஏறக்குறைய இருநூறு வருடங்களிற்கு பின் தன் சிறையிலிருந்து விடுதலை பெறும் பார்னபாஸ், தான் ஒரு புதிய யுகத்தில் இருப்பதையும் தன் சந்ததிகள் அவர்களின் முன்னைய செல்வாக்கை கொடிய சூன்யக்காரியான அஞ்செலிக்காவிடம் இழந்து விட்டிருப்பதையும் கண்டு கொள்கிறான். இழந்த தன் காலின்ஸ் குடும்ப கவுரவத்தையும், செல்வத்தையும் மீட்டெடுக்கும் முடிவிற்கும் பார்னபாஸ் வருகிறான்.....

மீண்டும் பர்ட்டன், டெப் கூட்டணி, நகைச்சுவை அதிகம் இழையோடிய ட்ரெய்லர், போதாக்குறைக்கு காட்டேரி, அதுவும் டெப் காட்டேரி! டிம் பர்ட்டனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Dark Shadows திரைப்படத்திற்கான என் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இந்த வரிகளில் அடங்கிவிட்டது என்றால் அதை யார்தான் நம்பப் போகிறீர்கள். கூடவே அழகான செக்ஸியான திரண்ட பல செளந்தர்ய லாவண்யங்களை கொண்ட சுந்தரி Eva Green ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது என் எதிர்பார்ப்புகள் எல்லாம் இந்த வரிகளிற்குள் அடங்கி விட்டிருக்கும்.

படத்தின் ஆரம்பகாட்சிகள் எவ்வாறு காலின்ஸ் குடும்பம் அமெரிக்காவில் குடியேறி ஒரு செல்வாக்கான நிலையை எட்டியது என்பதையும், அவர்களின் வாரிசான பார்னபாஸ் காலின்ஸ் மேல் காதல் கொண்ட ஒரு சூன்யக்காரி எவ்வாறு அக்குடும்பத்தை நாசம் செய்கிறாள் என்பதையும் சில நிமிடங்களில் திரையில் காட்சிகளாக விரிக்கிறது. வழமை போலவே பர்டனிற்கு இஷ்டமான, இலைகளை தொலைத்த மரங்கள் தங்கள் கிளைகளை சுருள் கரங்களாக சுருட்டிக் கொண்டு இருளான ஒளிப்பதிவில் புகாருடன் ரசிகர்களை மிரட்ட முயற்சிக்க ட்ராகுலா இசை பயத்தை கடல் அலைகளின் நுரைக்குமிழிகளில் கரைக்கிறது. அடடா என்ன ஒரு விருந்துக்கு வந்து விட்டோம் என எம் மனம் உவகையில் புரள ஆரம்பிக்கிறது.

இருநூறு ஆண்டுகள் கழித்து காலின்ஸ் குடும்பம் பார்வையாளர்களிற்கு அறிமுகமாகும் போதும் ஒவ்வொரு பாத்திரங்களினதும் அறிமுகம் அப்பாத்திரங்கள் மீதான ஆர்வத்தை உருக்கொள்ள செய்கிறது. 1972 களில் சற்று வசதியற்ற ஒரு செல்வந்த குடும்பத்தை ஒரு தூசு பிடித்த மாடமாளிகையில் அவர்களின் குடும்ப செருக்கு குறையாத நிலையில் காட்சிப்படுத்துகிறார் டிம் பர்ட்டன். மிக நீண்ட நாட்களிற்கு பின்பாக திரையில் காட்சிக்கு வரும் முன்னாள் பிரபல நடிகை மிச்செல் பெய்ஃபெர் காலின்ஸ் குடும்பத்தின் தலைவியாக அறிமுகமாகிறார். மிகவும் எதிர்பார்க்க செய்த பாத்திரம் அவருடையது. அதற்கேற்ப ஆரம்ப காட்சிகளில் சிறப்பாகவும் செய்திருக்கிறார் நடிகை மிச்செல் பெய்ஃபெர். மர்மமான பின்னணியுடன் காலின்ஸ் வீட்டிற்கு பணிபுரிய வரும் பெண்ணான விக்டோரியா, தன் தாயின் ஆவியுடன் உரையாடுபவன் என்பதால் கிறுக்கனாக கருதப்படும் சிறுவன் டேவிட், அவனை குணமாக்க வந்து பின் காலின்ஸ் மாளிகையிலேயே தங்கிவிடும் மருத்துவரும் மதுப்பிரியருமான ஜூலியா என ஆர்வத்தை மிக கண்டிப்பாக தூண்டும் பாத்திரங்கள் எண்ணிக்கை திரைப்படத்தின் ஆரம்பத்தில் குறைவே இல்லாத அம்சங்கள்.

போஸ்டு போட்டவன போட்டு தள்ளிடனும்!!!
இது போதாது என்று தன் பிரேதப் பெட்டி சிறையிலிருந்து விடுதலை பெற்று புதிய உலகிற்குள் வரும் காட்டேரி பார்னபாஸ்!! விடுதலை பெற்ற வேகத்தில் விடுதலை செய்தவர்களை ஒன்றுவிடாது உறிஞ்சிதள்ளிவிட்டு மனிதர் தன் வழமையான பாணியில் கலக்க ஆரம்பிப்பார். அவரிற்கேயுரிய அந்தச் செல்ல நடையுடன் கையில் கோலுடன் தார் வீதியில் அவர் நடைபழகும் அழகே அழகு. விளம்பரம் செய்ய பணமும் தந்து அதற்கு பதிலாக செம கிண்டலை வாங்கும் நற்குணம் McDonalds க்கு உள்ளது என்பதை பர்ட்டன் நிரூபித்திருக்கிறார். டெப் மக்டோனால்ட்டின் M ஐ பார்த்து சொல்லும் ஒரு சொல் போதும் அது எவ்வகையான நகைச்சுவை என்பதை விளங்கி கொள்ள.

ஒரு புதிய யுகத்தில், தன்னைப் பொருத்திக் கொள்ள இயலா ஒரு சமூகத்தில் தன் குடும்பத்தை மீண்டும் செல்வாக்கான நிலைக்கு இட்டு வரும் போராட்டத்தில் சவாலுடன் குதிக்கும் பார்னாபாஸ் ரசிகர்கள் ஆர்வத்தில் அவல் போடுகிறார். அவர் காலின்ஸ் குடும்பத்தில் வந்து அறிமுகம் செய்து கொள்ளும் காட்சிகளும் அதைப் பின் தொடரும் காட்சிகளும் சிரிக்கவே வைக்கின்றன. பார்னபாஸின் விடுதலையை அறியும் சூன்யக்காரி அஞ்செலிக்காவும் பார்னபாஸை வந்து சந்தித்து மோதலா காதலா என முட்டிப் பார்க்கையிலும் இன்னொரு பிடி அவல் வந்து விழுகிறது. ஆனால், ஆனால்,....... துரதிஷ்ர்ட வசமாக இந்த அவல்களுடன் மட்டுமே எல்லாம் நிறைவு பெற்று விடுகிறது.

மிகையான எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தொடரும் காட்சிகள் வழியே சுக்கு நூறாக்கப்படுகின்றன . ஆரம்பத்தில் சிரிக்க வைத்த காட்சிகளில் சிரித்த ரசிகர்கள் சலிப்பின் எல்லைக்கு செல்லும் வகையில் இருக்கிறது தொடரும் காட்சிகள். பார்னபாஸ் முடங்கிய தன் குடும்ப வியாபாரத்தை ஆரம்பிப்பது ஆகட்டும், மனிதனாக ஆகிட டாக்டர் ஜூலியாவின் துணையுடன் முயற்சிப்பது ஆகட்டும், சூன்யக்காரியுடன் சல்லாபமாடி தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகட்டும் எதுவுமே முன்பு உருவாக்கப்பட்ட ஆர்வத்திற்கு தீனி போடவில்லை. அதுவும் டாக்டர் ஜூலியாவாக வீணடிக்கப்பட்டிருப்பவர் நடிகை ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர். பர்ட்டன் இதிலுமா உங்கள் நகைச்சுவையை நீங்கள் காட்ட வேண்டும். ஆரம்பக் காட்சிகளில் மப்புக் குலையா மயக்கத்துடன் அமைப்பற்ற உடலுடன் ஹெலனா உணவருந்தும் மேசைக்கு வந்தமரும் காட்சியில் இருந்த நளினம் அழகு எல்லாம் பின்னால் பணால் பணால். போதாக் குறைக்கு தொப்பியும் குளிர்கண்ணாடியும் அணிந்த பார்னபாஸ் தூரத்தில் இருந்து பார்க்கையில் மைக்கேல் ஜாக்சன் போல் இருக்கிறார்.

கதை உருவாக்கத்தில் பங்கேற்பு, திரைக்கதை ஆகியன செத் கிராஹாம் க்ரீன் என திரையில் வீழ்ந்தபோது, அடடா இவர் அதற்குள் இப்படி வளர்ந்து விட்டாரே என ஆச்சர்யம் உருவானது. ஆனால் மனிதர் கதையையும், திரைக்கதையையும் சொதப்பி பாத்திரங்களை வீணடித்து அவர்களின் மதிப்புக்களை இழக்க வைத்து அவர்களை ஏறக்குறைய பிணங்கள் போல் ஆக்கி விடுகிறார். தாடி வெச்ச டேஞ்சர் மாமா நாவலை எழுதிய புண்யவான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். பார்னபாஸின் காதல், சவால், குடும்பம் என அனைத்துமே பிச்சைப்பாத்திரத்தில் கடைசியாக வந்து சேரும் தானங்கள் போல் ஒரு நிலையை எட்டி விடுவது பரிதாபமான ஒன்று.

எவா க்ரீனையாவது எதையாவது காட்ட விட்டார்களா என்றால் அதுவும் இல்லை!!! எவா அழகான சூன்யக்காரி, செக்ஸி பேபி ஒத்துக் கொள்கிறேன் அதற்காக திரைப்படம் நெடுகிலும் அவர் கண்களை மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன. அதிலும் காட்டேரிக்கும், சூன்யக்காரிக்கும் இடையில் வரும் சல்லாபக் காட்சியை IKEA உரிமையாளர் மட்டுமே ரசிக்க முடியும். அவ்வளவு தளபாட சேதம். அதில் சிருங்காரமும் இல்லை, நகைச்சுவையும் இல்லை.

வழமையாக தான் இயக்கும் படங்களில் ஒரு சிறப்பான அழகியலை தக்க வைத்துக் கொள்வார் பர்ட்டன். இதில் அதுவும் இல்லை. 1972 களில் இத்திரைப்படம் வெளிவந்திருந்தால் ரசிகர்கள் சுமாராக ரசித்திருக்ககூடிய வகையில் அமைந்திருக்கின்றன இத்திரைப்படத்தின் வரைகலைநுட்ப காட்சிகள். இறுதியில் கதை இயக்கம் நடிப்பு என எல்லாம் போய் வரைகலைக்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றன. டிம் பர்ட்டன் இயக்கியதா இப்படம் எனும் கேள்வி எழுவதை தடுக்கவே இயலவில்லை. போதாக்குறைக்கு படத்தின் இறுதியில் ஒரு தூண்டில் திருப்பம் வேறு. சிக்கல் என்னவெனில் தூண்டில் இரையுடன் வீழ்ந்திருக்க வேண்டிய இடத்தில் பர்ட்டனின் திரைப்படம் வீழ்ந்துவிட்டது என்பதுதான். டிம் பர்டன் மோசமான திரைப்படங்களை தந்திருக்கலாம் இருப்பினும் டெப்பும் அவரும் இணைந்த இத்திரைப்படம் இவ்வளவு மோசமான ஒரு அனுபவமாக அமையும் என எந்த இருளின் நிழலும் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் ஏற்றுக் கொண்டிருக்கவே செய்யாது. திரையரங்கை விட்டு பல இருண்ட நிழல்கள் வெளியேறின என்பது ஒரு மிகையான கூற்றே அல்ல!! [*]

காப்பிரைட்.... இலுமி [ தாடி வெச்ச டேஞ்சர் மாமா]


ட்ரெய்லர்








17 comments:

  1. உங்க தமிழ் சூப்பர்! ஆனா, ஒரு ஸ்டார் படத்துக்கு எல்லாம் ஏன் விமர்சனம் போடறீங்க?! :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியாவது ஒரு ஸ்டார் பதிவர் ஆகலாமின்னுதான்.... விட மாட்டீங்களே..:))

      Delete
    2. பேசாம ரஜினி பத்தி ஒரு பதிவு போட்டு "சூப்பர் ஸ்டார் பதிவர்" ஆயிடுங்க! ;)

      Delete
    3. அந்த இடம் உங்களிற்கே உங்களிற்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறதே.....:))

      Delete
  2. //திரையரங்கை விட்டு பல இருண்ட நிழல்கள் வெளியேறின என்பது ஒரு மிகையான கூற்றே அல்ல!!//

    படம் அவ்வளவு மோசமா? இந்தக் கூட்டணி பற்றி கேள்விப்பட்டு ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் இருந்தேனே. கூட்டணி கவிழ்த்துவிட்டார்களா?

    ReplyDelete
    Replies
    1. என்னை படம் திருப்திப்படுத்தவில்லை மேலும் கூட்டணி ஏமாற்றிவிட்டது என்பதும் பொருத்தமாக இருக்கும்...:))

      Delete
  3. அப்போ படம் பார்க்க வேண்டாம்... முதலில் படிக்கும்போது நன்றாக இருந்தது! ஆனால் கடைசியல் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டிர்... சரி சரி dvd வரும்போது பார்க்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ், அதற்கு பதில் நல்ல ஒரு காமிக்ஸை படியுங்கள்.....:)

      Delete
  4. தாடி வச்ச டேஞ்சர் மாமாவுக்கு அடுத்து சுண்ணாம்பு பூசின சொத்தை மாமா போல. :)

    டிம் பர்டன் படங்கள் எதுவும் சமீபத்தில் எனக்கு பிடிக்கவில்லை( alice in wonderland இன்னும் பார்க்கவில்லை என்பதை சொல்லிகொள்கிறேன்). ஆனால் இதே போல இவர் இயக்கிய Corpse Bride என்றவொரு படம் இருக்கிறது. அது மகா மொக்கை. கதை என்னவோ வித்தியாசமான, ஆர்வமூட்டக் கூடியவொன்று தான். ஆனால்,சிரிப்பு சுத்தமாக வராது. அதனால் தானோ என்னவோ இப்படத்தை எந்தவகையிலும் எதிர்பார்க்கவே இல்லை. அது சரியே என்றும் நீர் சொல்கிறீர் இப்போது. :)

    ReplyDelete
    Replies
    1. கார்ப்ஸ் ப்ரைட் அருமையான படம்.....:)

      Delete
  5. ஆகா.. நானு ரொம்ப எதிர்பார்த்திருந்த படமாச்சே! இப்படியா கவுத்து விட்டிருக்கிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. பாத்தீங்கின்னா தெரிஞ்சிடும்....:)

      Delete
  6. அன்பு நண்பரே,

    த டூரிஸ்ட் திரைப்படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட கொதிப்பு போல் உங்களுக்கு இருந்திருக்காது என்று நம்புகிறேன். டிம் பர்டன் மற்றும் ஜானி டெப் இணைகையில் என்ன தவறு ஏற்பட்டிருக்க முடியும் என்ற அதீத நம்பிக்கையுடன், திரைப்படத்தை பார்க்கும்போது, சில சிறிய தவறுகளும் எரிச்சலடைய செய்யும். அத்துடன், ஈவா க்ரீன் முழு ஆடையுடன் அனைத்து காட்சிகளிலும் வருவதை நீங்கள் எதிர்பார்ததிருக்க வில்லை என தெரிகிறது.

    நல்ல விமர்சனம்தான். இருப்பினும், நான் இத்திரைப்படத்தை பார்த்த பிறகே நம்புவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆண் பிறப்பு எவ்வளவு பரிதாபமானது என்பதை இவ்வகையான திரைப்படங்களை முழுமையாக பார்க்கும் அனுபவமே சிறப்பாக உணரச் செய்கிறது....நீங்கள் பார்க்கும் பிரதியில் இன்னம் ஒரு மணிநேரம் கூடுதலாக காட்சிகள் இருக்க இறைவன் அருள் செய்வாராக....எவா க்ரீன்....அது ஒரு துன்பியல் நாடகம்...[கிரேக்க]

      Delete
  7. உங்க எழுத்தும் விமர்சனமும் மிக அருமை. ஒரே ஒரு குறை என நான் நினைப்பது என்னவென்றால், படத்தின் பெயரை தமிழ் படுத்த வேண்டாமே ப்ளீஸ்... ஒருவரின் பெயரை எப்படி மொழி மாற்றம் செய்ய முடியாதோ அதே போலதான் படத்தின் பெயர்களும் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. இராயப்பர் இவரின் பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் பீட்டர் என்று வரும்.....:) பதிவின் தலைப்பை திரைப்படத்தின் பெயரின் மொழிபெயர்ப்பாக நீங்கள் காண்கிறீர்கள் என எண்ணுகிறேன்.... அதை பதிவின் தலைப்பாக மட்டுமே பாருங்கள்....அது திரைப்படத்தின் பெயரின் மொழிபெயர்ப்பாக இருந்தால்கூட...:))

      Delete
  8. hii.. Nice Post

    Thanks for sharing

    More Entertainment

    For latest stills videos visit ..

    .

    ReplyDelete