Thursday, April 12, 2012

மார்சுபிலாமியின் தடத்தில்

V8 தொலைக்காட்சியின் செய்தியாளனான Dan Geraldo [Alain Chabat], பலோம்பியா தேசத்தின் பூர்வகுடிகளான பாயாக்கள் குறித்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக அங்கு பயணமாகிறான். டான் ஜெரால்டோவின் வழிகாட்டியாக பலோம்பியாவை சேர்ந்த Pablito Camaron [Jamel Debbouze] சேவைக்கு அமர்த்தப்படுகிறான்.....

André Franquin எனும் பெல்ஜிய காமிக்ஸ் கலைஞரின் கற்பனையில் உதித்த ஒரு விசித்திர விலங்கே மார்சுபிலாமி. 1952ல் தனது Spirou et Fantasio காமிக்ஸ் தொடரின் கதையான Spirou et les Hèritiers ல் ஆண்ட்ரே பிராங்கான் இவ்விலங்கை அறிமுகம் செய்து வைத்தார். மனிதன், குரங்கு, கங்காரு, சிறுத்தை ஆகியவற்றின் இயல்புகளும், நீண்ட வாலும், அதீத பலமும் கொண்டது இந்த மார்சுபிலாமி. குறும்புகள் செய்வதில் நாட்டம் கொண்ட விலங்கிது. மார்சுபிலாமியின் வாலானது பல காரியங்களை ஆற்றக்கூடிய இயல்பைக் கொண்டது. மீன் பிடிக்க, மரக்கிளைகளில் தொங்கியபடி தாவ, எதிராளிகள் முகத்தில் குத்த, அரிய வகை ஆர்க்கிட்டுகளை கொய்ய, காதலியின் அழகான கன்னத்தை வருட என  மார்சுபிலாமியின் வால் பல செயல்களை ஆற்றிட அவ்விலங்கிற்கு உதவிடும்.

ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோ தொடரில் பணியாற்றுவதை பிராங்கன் நிறுத்திக் கொண்டதன் பின்பாக 1987களில் மார்சுபிலாமியை பிரதான பாத்திரமாக கொண்ட காமிக்ஸ் கதை தொடர்கள் வெளியாக ஆரம்பித்தன. அத்தொடர்களில் மார்சுபிலாமியை வரையும் பொறுப்பை பிராங்கான் தானே ஏற்றுக் கொண்டார். முதல் ஆல்பமான la Queue du Marsupilami வெளியாகி 6 லட்சம் ஆல்பங்கள் விற்று சாதனை படைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மார்சுபிலாமியின் முதலிரு ஆல்பங்களில் பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே அறிமுகமாகிய காமிக்ஸ் கலைஞர் கிரெக் கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார். எந்த காமிக்ஸ் தொடரில் மார்சுபிலாமி அறிமுகமானதோ அந்தக் காமிக்ஸ் தொடரான ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோவில் இன்று மார்சுபிலாமி தலை காட்டாதவாறு அதன் தற்போதைய உரிமையாளர்களான Marsu Prouductions கடினமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காமிக்ஸ் வடிவம் பெற்ற வரவேற்பையடுத்து தொலைக்காட்சியில் அனிமேஷன் தொடராகவும் மார்சுபிலாமி உருவானது. 2005ம் ஆண்டில் பிரெஞ்சு இயக்குனர் ஆலன் ஷபா, மார்சுபிலாமியை மையமாக கொண்ட ஒரு திரைப்படைத்தை உருவாக்க வேண்டும் எனும் தன் திட்டத்தை ஆரம்பித்தார். அத்திட்டம் முழுமையான ஒரு படைப்பாக திரையை எட்ட ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

marsupilami-tome-1-la-queueSpirouEtFantasio4_13082006இத்திரைப்படத்தின் கதைக்காக ஆலன் ஷபா இதுவரை வெளியாகிய மார்சுபிலாமியின் எந்த ஒரு காமிக்ஸ் கதையையும் நாடிச்செல்லாது, ஜெரெமி டொனெர் என்பவருடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். ஆலன் ஷபாவின் அட்டகாசமான அபத்தக் காமெடி திரைப்படம் முழுதும் நிரம்பி இருந்தாலும் அதனை அனைத்து வயதினரும் களிப்புடன் ரசிக்க வைப்பதில் அவர் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். திரையரங்கில் ஒலித்திடும் ஓயாத சிரிப்பலைகள் அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு கிடைத்த கைதட்டல்கள் ஆகும். டான் ஜெரால்டோ வழங்கிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்வதில்லை என்பதினால் தொலைக்காட்சி நிர்வாகம் பலோம்பியா சென்று ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும் இறுதியான வாய்ப்பை அவனிற்கு அளிக்கிறது. எந்த வழியிலாவது பலோம்பியாவில் அந்நிகழ்சியை பதிவு செய்து ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம் டான் ஜெரால்டிற்கு. தொலைக்காட்சி நிர்வாகியின் வார்த்தைகளில் சொல்வதானால் நிகழ்ச்சி பெட்டிக்குள் இல்லையெனில் நீ உன் பெட்டியைக் கட்டவேண்டியிருக்கும் என்பதாக இருக்கிறது. எனவே டான் ஜெரல்டோ பெட்டியுடன் பலோம்பியாவிற்கு கிளம்ப வேண்டியதாகவிருக்கிறது.

பவ்லிட்டோ கமொரொன் ஒரு போலி மிருக வைத்தியன். அனாதைகளாக கைவிடப்பட்ட குழந்தைகளை தன் பராமரிப்பில் எடுத்து வளர்த்து வருபவன். சொல்லிக் கொள்ளும்படியான வசதிகள் ஏதும் அவனிடம் இல்லை. உல்லாசப் பிராயணிகளின் இரக்க குணத்தை பயன்படுத்தி காசு சம்பாதித்து தன் வளர்ப்பு குழந்தைகளின் வயிற்றை நிரப்பிட அவன் தயங்குவதில்லை. அவன் வாங்கிய ஒரு கடனிற்காக குண்டர்கள் குழுவொன்று அவனை ஓயாது மிரட்டி கெடுவையும் விதித்து, ஒரு வண்ணக்கிளியை பணயக்கைதியாகவும் எடுத்து சென்று விடுகிறது. இந்நிலையில் அக்கிளி தன்னைச் சுற்றி நிற்கும் குழந்தைகளையும் பவ்லிட்டோவையும் கழுத்தை தூக்கி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே என்னை ஏன் பாஸ் பிடிக்கிறீங்க என்று குண்டர்களிடம் பரிதாபமாக கேட்கும் பாருங்கள் அதுதான் ஆலன் ஷபா முத்திரை.... ஆகவே குறித்த தொகைப் பணத்தை குண்டர்கள் விதித்த கெடுவிற்குள் தேடியாக வேண்டிய இக்கட்டான நிலை பவ்லிட்டோவிற்கு.

ஆக இரு இக்கட்டான நிலைகளில் உள்ள இரு வேறுபட்ட கலாச்சார அடையாளங்களை கொண்ட இரு மனிதர்களை சந்திக்க செய்வதன் வழி அம்மனிதர்களின் ஆளுமைகளினதும், அடையாளங்களினதும் எதிர்கொள்ளலை தனக்கே உரிய அபத்த நகைச்சுவையைக் கலந்து திரையில் பரிமாறியிருக்கிறார் இயக்குனர். வண்ணக்கிளி உயிருக்கு போராடுவது போல் நடிக்க, அதற்கு சிகிச்சை வழங்கும் ஆரம்பக் காட்சியிலேயே பவ்லிட்டோவாக பாத்திரமேற்றிருக்கும் நடிகரான ஜமெல் டுபுஸ் சிரிக்க வைத்துவிடுகிறார். வழமையாக தன் எல்லைக்கு மீறிய சேஷ்டைகளாலும், கோமாளித்தனங்களாலும் என்னை எரிச்சலின் எல்லைக்கு இட்டு செல்லும் ஜமெலை இவ்வளவு ரசித்தேன் என்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று. தன் வழமையான கூத்துகளை அடக்கிவிட்டு சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். தொலைக்காட்சி செய்தியாளார் டான் ஜெரால்டோவாக வேடமேற்றிருக்கும் இயக்குனர் ஆலன் ஷபா தன் வழமையான சோம்பல் பூத்த நடிப்பாலும் உடல்மொழியாலும் தன் பாத்திரத்தை சிறப்பித்திருக்கிறார்.

sur-la-piste-du-marsupilami-2012-21694-462239602பலோம்பியாவின் பாயா பூர்வகுடிகளை சந்திக்க செல்லும் இருவரும் எவ்வாறு உலகை ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பது மீதிக்கதை. இக்கதைக்குள் விசித்திர விலங்கு மார்சுபிலாமி, பாயா பூர்வகுடிகளின் தீர்க்கதரிசனம், நித்திய இளமைக்கான ஒளடத வேட்டை, பலோமியா நாட்டின் சர்வாதிகார அரசியல் என்பவற்றை கொணர்ந்து திரைப்படத்தின் முழுமையான அனுபவத்தின் வெளிக்காற்று கேளிக்கையும் களிப்புமான ஒன்றாக அமையும்படி திரைப்படம் உருவாக்கப்பட்டிருகிறது.

ஜெரால்டோ, பவ்லிட்டோ ஆகிய இருவருடனும் தொடர்பும், உறவும் கொண்டிருப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. ஜெரால்டோவிற்கும், பவ்லொட்டோவிற்குமிடையிலுமான உறவிலும் நம்பிக்கை இருப்பதில்லை. பாயாக்களின் கட்டுக்கதை என நம்பப்படும் விசித்திர விலங்கான மார்சுபிலாமியின் இருத்தலின் நிரூபணமே இந்த இரு மனிதர்கள் மீதும் உலகம் நம்பிக்கை கொள்ள வழிவகுக்கிறது, அவர்களிருவரிற்குமிடையில் நம்பிக்கை உருவாக துணைநிற்கிறது எனவே மார்சுபிலாமியை நம்பிக்கையின் பிறப்பிடமாக இயக்குனர் இங்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

திரையில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் முழுமையாக ரசிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆலன் ஷபா தன் இயக்கத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரபல பாடகி ஒன்றின் ரசிகராக வரும் பலோம்பியாவின் சர்வாதிகாரி பொஷெரோவாக வேடமேற்றிருக்கும் திறமையான நடிகர் லாம்பெர்ட் வில்சன் படத்தின் இறுதிப்பகுதியில் நிகழ்த்திடும் ஒரு காரியம் அபத்தத்தின் உச்சம் ஆனால் அரங்கம் வெடிச்சிரிப்பால் மூழ்குகிறது. தாவரவியலாளனாக வரும் இளம் நடிகர் ஃப்ரெட் டெட்சோவின் நடன அசைவு கலந்த நடிப்பு அப்பாத்திரத்திற்கு ஒரு புத்துயிர்ப்பை வழங்குகிறது. சாடிஸ்டான ராணுவ அதிகாரியாக வரும் பற்றிக் டிம்சிட்டின் முகபாவனைகள் சிரிக்க வேண்டாம் என இருந்தாலும் கிச்சு கிச்சு காட்டுகின்றன. மனிதர் மார்சுபிலாமியை சித்தரவதை செய்யும் காட்சி வன்முறைக்காமெடி.

sur-la-piste-du-marsupilami-2012-21694-143022500sur-la-piste-du-marsupilami-2012-21694-146796048மார்சுபிலாமி விலங்கை வரைகலை நுட்பம் மூலம் மிகவும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். பிரெஞ்சுக்கார பயபுள்ளைகளா இக்காட்சிகளை உருவாக்கினார்கள் எனும் நியாயமான சந்தேகம் இன்னமும் தீரவில்லை. பாயா பூர்வகுடிகளின் குகைக்குள் நடக்கும் கலாட்டா வண்ணமயம். பவ்லிட்டோவிற்கு பூர்வகுடிகளின் தலைவியின் வளர்ப்பு நாய் செய்திடும் ஒரு அநியாயம் திரையில் வருகையில் சிரிக்க இனொரு முகம் வேண்டியிருக்கிறது. இதேவேளையில் தன் அபத்த நகைச்சுவையால் பார்வையாளனை முட்டாள் என சுட்டுவதை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் இயக்குனர் ஆலன் ஷபா. அபத்தம் என்பது குறித்த பிரங்ஜை கொண்டவனாக பார்வையாளன் தன் நகைச்சுவையில் பங்கேற்கும் வண்ணமாகவே அவர் படைத்திருக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே அபத்தத்தை மேலும் ரசிப்பிற்குரிய ஒன்றாக மாற்றியமைக்கிறது.

அபத்த நகைச்சுவையோடு மட்டும் நின்றிடாது சூழியல் குறித்த சில கருத்துக்களையும் ஆலன் ஷபா திரையில் பேசுகிறார். ஆனால் நகைச்சுவையின் வீர்யத்தில் இவை ஒதுக்கி செல்லப்பட்டு விடுகின்றன. பிரபலமான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், ஸ்மார்ட் போன் என இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளாகிப் போன பொருட்கள் குறித்தும் ஆலன் ஷபா கிண்டல் செய்கிறார். தனது இளமைக்கும், அழகிற்காகவும் ஏனைய இனங்கள் குறித்தோ அல்லது இயற்கை குறித்தோ எந்த சலனமுமற்று மனிதகுலம் இயங்கிச் செல்லும் ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

திரைப்படம் ஆரம்பமானது முதல் பார்வையாளனை களிப்பின் பிடிக்குள் வைத்திருக்கும் அரிதான வகைத் திரைப்படங்களில் இது ஒன்று. அதேபோல் இறுதியில் திரையில் எழுத்துக்கள் ஓட ஆரம்பித்தாலும் ரசிகர்களை இருக்கைகளை விட்டு எழமுடியாது தன் குறும்புத்தனத்தை சில துணுக்கு காட்சிகள் வழி காட்டியிருக்கிறார் ஆலன் ஷபா. ஆலன் ஷபாவின் இப்படைப்பு ஒரு அபத்தக் கேளிக்கை பெட்டகம். அபத்தக் காமெடி ஆர்வலர்கள் திறப்பதற்கு தயக்கம் காட்டவே கூடாது.

பிரெஞ்சு ட்ரெய்லர்

15 comments:

 1. கட்டாயம் பெட்டகத்தை சீக்கிரம் திறந்துவிடுகிறேன். அழகான விமர்சனத்திற்கு நன்றி.

  ReplyDelete
 2. நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருண், எனக்கு உலக சினிமாவில் ஆர்வம் என்பது கிடையாது, நான் சாதாரண ஒரு ரசிகன், தங்கள் நண்பரின் தளத்தை நேரம் கிடைக்கையில் சென்று படித்து பார்க்கிறேன், நன்றி.

   Delete
 3. அன்பு நண்பரே,

  ட்ரைலரையே வெகுவாக இரசித்தேன். ப்ரென்ஞ் கபீஷ்-ன் சாகசங்களை விரைவில் பார்க்க வேண்டியதுதான். படத்தின் வசூல் நிலவரம் எவ்வாறு இருக்கிறது? ;)

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த விளம்பரங்கள் செய்யப்பட்டு வெளியான படைப்பு, 2012ம் ஆண்டின் இரண்டாவது மிகச்சிறந்த வசூல் முதல்நாளில் என்பது மட்டுமே தற்போதைய தகவல்... டைட்டானிக், த லயன் கிங் 3டி க்களின் அணிவகுப்புடன் மார்சுபிலாமி போட்டி போடுவதும், யுத்தக்கலம் இவ்வாரம் வெளியாகி இருப்பதும் இதன் வசூலை பாதிக்கலாம்..... அதனால் என்ன நீங்கள் ஒவ்வொரு கணத்தையும் ரசித்துப் பார்க்க போகிறீர்கள் என்பதை இப்போதே என்னால் உறுதியாக கூறிட முடியும்.... தயவு செய்து நாளைக்கு வேலைக்கு செல்லுங்கள்....:))

   Delete
 4. >>>கனவுகளின் காதலன்Apr 6, 2012 12:28 PM
  ]***[ இவ்வாறு வழங்கலாமா என மூளையை மிக்ஸியில் போட்டு சிந்தித்துக் கொண்டிருப்பதால்தான் அளிப்பதில்லை :)) <<<

  மிக்சி இன்னும் ஓடிட்டு இருக்கோ ;)

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்க தல கரண்டு கட்டா, கலப்பான் ஸ்டக்கு ஆயிடுச்சு.....ஆங்

   Delete
 5. சில வாரங்களாக marsupilamiயின் 2D animation சீரியல்களை தமிழில் தொலைகாட்சி ஒன்றில் வெளியிட்டு வருகிறார்கள், உங்கள் போஸ்ட் பார்த்த பிறகுதான் இந்த காரக்டருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருகிரார்கள் என்பது புரிகிறது. இப்படத்தை பார்க்க தூண்டி விட்டீர்கள்.. நன்றி காதலரே!!

  ReplyDelete
  Replies
  1. என்ன இருந்தாலும் தமிழ்ல படிக்கிறத பார்க்கிறத போல வராதுங்க.... உள்ளுக்குள்ளே இறங்கணுங்க....:))

   Delete
 6. முன்னோட்டம் நன்றாக இருந்தது. பார்க்க துண்டியாயது..... இதுவரை இன்னும் ஒரு கேமர பிரிண்ட் கூட வரவில்லை... விரைவில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளிவரும் என்று எதிர்பர்கின்றேன்... 2D படத்தை தொலைகாட்சி பார்திருகின்றேன்....

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலத்தில் வந்துவிடும் ரமேஷ், கவலையே வேண்டாம்.

   Delete
 7. hii.. Nice Post

  Thanks for sharing

  Best Regarding.

  More Entertainment

  For latest stills videos visit ..

  www.chicha.in

  ReplyDelete
  Replies
  1. கார்த்திக்கு போட்டியா நீங்களா... சரி அடி பின்னுங்க....:))

   Delete
  2. அதெல்லாம் பழங்கதை! ;) அதெல்லாம் நிறுத்தி பல வாரம் ஆகுது! இந்த பதிவை (ச்சே, லிங்க் வேற இப்ப போட முடியாது!) படிக்கலையா நீங்க?! :) :) :)

   Delete