Thursday, April 5, 2012

கோபால்ட் நீலப் பிரார்த்தனை

சான் பிரான்சிஸ்கோ நகரத் துப்பறிவாளன் ஸ்பேட் சாமுவேலை தேடிவரும் அழகிய நங்கையான வொண்டர்லி, நீயூயார்க்கிலிருந்து ப்லாய்ட் தர்ஸ்பி என்பவனுடன் கிளம்பி வந்துவிட்ட தன் தங்கையை அவனிடமிருந்து மீட்டு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறாள். தர்ஸ்பியை பின்தொடரச் செல்லும் ஸ்பேட்டின் சகாவான ஆர்ச்சர் மைல்ஸ் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறான்......

சிறந்த குற்றப்புனைவுகளை வரிசைப்படுத்தி இருக்கும் பட்டியல்களில் பெரும்பாலும் Dashiell Hammett எழுதிய The Maltese Falcon தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். Hard Boiled என வகைப்படுத்தக்கூடிய குற்றப் புனைவுகளின் பண்புகளை அறிமுகமாக்கிய ஆரம்பநிலை புனைவுகளில் ஒன்றாகவும், சிறந்த குற்றப்புனைவு எனவும் பெரிதும் பேசப்பட்டிருக்கும் இந்நாவலின் வாசிப்பனுபவம் பிரம்மிக்கதக்க வைக்கும் ஒன்றல்ல எனினும் நாவலின் பாதிப் பகுதி கடந்தபின் கதை தன்னுள் கொள்ளும் வேகமும், 1930 களில் எழுதப்பட்ட கதை இது என்பதை படிப்பவர் மனதில் கொண்டால் அதில் உருவாகும் வியப்புமே இந்நாவலின் வாசிப்பை மதிப்பிற்குரிய ஒன்றாக்குகிறது.

நாவலின் முதற்பாதியானது துப்பறிவாளன் ஸ்பேட் எனும் பாத்திரம் குறித்த ஆழமான ஒரு பிம்பத்தை படிப்பவர் மனதில் தெளிவாக வரைகிறது. நீதி, அறம், ஒழுக்கம் என்ற சமூக வரையறைகள் என்பவற்றை சற்றே தூக்கி அப்பால் வைத்து விட்டு தனக்கென உருவாக்கி கொண்ட நீதி அறம் ஒழுக்கத்துடன் இயங்குபவன் துப்பறிவாளன் ஸ்பேட். காவல் துறைக்கு அவன் நெருங்கிய நண்பன் அல்ல ஆனால் காவல்துறையை தன் பலன்களிற்கேற்ப அவன் பயன்படுத்திக் கொள்கிறான். தீயவர்கள் அவன் எதிரிகள் அல்ல எனவே அவர்களிடமிருந்தும் அவன் அதிக பலன்களை அடைய முயல்கிறான். அவன் ஆற்றும் செயல்கள் ஒவ்வொன்றிலும் அவன் அடையக்கூடிய பலன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக அவன் அனைத்து தரப்பினர்களிற்கும் நலம்விரும்பியான ஒரு தோற்றத்தை உருவாக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. இது கதையில் வரும் பாத்திரங்களை மட்டுமல்ல கதையை படிக்கும் வாசகனையே தள்ளாட வைத்து விடுகிறது. ஸ்பேட்டின் உண்மையான நகர்வு என்ன என்பதையே ஊகிக்க இயலாதபடி அவன் பாத்திரம் கதையின் இறுதிப்பகுதிவரை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தன் சகாவின் கொலை குறித்த நிஜத்தில்கூட அவன் தன் லாபம் காண்பவனாகவே இருக்கிறான் என்பது ஸ்பேட் பாத்திரத்தின் உருவாக்கத்தில் கதாசிரியர் கடைப்பிடித்திருக்கும் கண்டிப்பான ஒழுங்கிற்கு சான்று. நாவலில் ஸ்பேட்டிற்கும் பெண்களிற்குமிடையிலான உறவு சமூக ஒழுக்க வரையறைகளை மீறியதாகவே இருக்கிறது. தன் சகா ஆர்ச்சர் மைல்ஸின் மனைவியான இவாவுடன் அவன் கொண்டிருக்கும் உறவு அவனை எந்தவிதத்திலும் எந்த சந்தர்பத்திலும் குற்றவுணர்வு கொண்டவன் ஆக்குவதில்லை. பெண்களை சமாளிப்பதில் தனக்கென ஒரு மொழியைக் கையாள்கிறான் ஸ்பேட். இறுதிவரை பெண்களுடான அவன் மொழி தடுமாறுவதில்லை. பெண்களுடான அவன் மொழி மென்மையற்றது ஆனால் அதுவே பெண்களின் உணர்வுகளை மென்மையாக தொட்டுச்செல்லும் ஒன்றாக உருக்காண்கிறது.

பணம் என்பதன் மீது நம்பிக்கை கொண்டவனாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஸ்பேட், தன்னை தேடி வந்த வொன்டர்லி கூறிய தகவல்கள் பொய் என்பதை அறிந்தபின்னும் காவல்துறை, மற்றும் பிற தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுவதற்கு முன்வருகிறான். இதற்காக பணத்தை பெற அவன் தயங்குவதேயில்லை. இவாவிடம் அவன் உறவு கொண்டிருந்தாலும் ஒரு சிறிய தழுவலிற்கு பின்பாக அவளிடம் அவன் ஒரு எல்லையிலிருந்தே பழகிக் கொள்கிறான். அவன் உறவு என்பது தாமரை இலையில் இருக்கும் தண்ணீர் துளியை விட வழுக்கும் தன்மை அதிகம் கொண்டது. அந்தவகையில் தன் காரியதரிசி எஃபி பெரினுடனே அவன் உறவானது சற்றே இயல்பான தன்மை கொண்டதாக உள்ளது எனலாம். இருப்பினும் எஃபியை அவன் தன் காரியங்களிற்கு எல்லாம் நினைத்த வேளைகளில் இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்கிறான். எஃபியும் இது குறித்த எந்த முறைப்பாடுகளுமின்றி ஸ்பேட்டிற்கு காரியங்களை ஆற்றி தருகிறாள். இவா மற்றும் வொன்டர்லி எனப் பொய் நாமம் சூட்டிய பிரிஜிட் ஆகிய பெண்களுடன் ஸ்பேட்டின் உறவு எத்தகையது என்பதை அவள் அறிந்திருந்தும், அவள் இடையில் தவழும் ஸ்பேட்டின் கரங்கள் குறித்து அவள் எதிர்ச்சலனங்கள் கொண்டாளில்லை.

பிரிஜிட் எனும் உண்மைப் பெயரை செங்கூந்தல் அழகியிடமிருந்து அறிந்தபின்பாக அவளைக் குறிவைக்கும் தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற நடவடிக்கைகளில் இறங்குகிறான் ஸ்பேட். ஆனால் இங்கு நடவடிக்கை என்பது அதிரடியான சண்டைகளோ, துப்பாக்கி மோதல்களோ இல்லை. பிரிஜிட்டிற்கு எதிரானவர்கள் ஸ்பேட்டை சந்திக்கிறார்கள். உரையாடல்கள் வழி தீர்வுகாண இரு தரப்பினரும் முயல்கிறார்கள். உரையாடல்கள் தந்திரங்களாகவும், ஸ்பேட்டிற்கு பிடிக்காத அவனிற்கு எதிரான செயல்களாகவும் மாறும்போது வன்முறை கதையில் இடம்பிடித்துக் கொள்கிறது. சமகால குற்றப்புனைவுகளில் இடம்பிடிக்கும் வன்முறை அலகிற்கு மிகவும் குறைவான வன்முறையையே கதையில் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதை நெடுகத் தேடினாலும் F சொல் கிடைக்காது. வில்மர் எனும் பாத்திரம் அதை உபயோகப்படுத்தினாலும் கதாசிரியர் அதை ஒரு சொல்லாக நாவலில் எழுதியிருக்கமாட்டார் மாறாக ஒரு வர்ணனையாக வாசகனிற்கு அச்சொல்லை அளிப்பார்.

ஆக பிரிஜிட் மறைக்கும் உண்மை ரகசியம்தான் என்ன? தர்ஸ்பியின் கொலை, ஆர்ச்சர் மைல்ஸின் கொலைக்கான காரணங்கள்தான் என்ன அவர்களை கொன்றது யார்? காவல்துறை இதை அறிய விழைகிறது, நகர சட்டத்தரணி இதை அறிய விழைகிறார், வாசகனும் இவர்கள் கூடவே மர்மத்தினுள் கட்டியிழுக்கப்படுகிறான். யாவரையும் வேறுபாடின்றி எள்ளி நகையாடியபடியே சுவரை நோக்கி உந்தித் தள்ளுகிறான் ஸ்பேட். இந்தக் கணத்தில் கதையில் வந்து சேர்கிறது ஒரு பறவை. செல்லமாக மால்டா ராஜாளி.

அப்பறவையையும், அப்பறவையின் பின்புள்ள மர்மங்களையும் ஸ்பேட் கண்டு கொள்வானா? கொலைக்கான காரணங்களையும் அதை ஆற்றியவர்களையும் அதை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதையும் அவன் அறிந்து கொள்வானா? ..என்பதை நாவலின் பின்பாதி தொய்வின்றி நகர்த்தி செல்கிறது. மாறாக முதற்பாதியின் வேகம், குறைவான ஒன்றே. ஹோட்டல் துப்பறிவாளர்களுடன் உரையாடல், ஹோட்டல் அறைகளிற்குள் ரகசியமாக உள்நுழைதல், கதை மாந்தர்களுடன் உரையாடல் என பாத்திரங்களின் இயல்புகளை முதற்பாதி மெதுவான ஓட்டத்தில் எழுதுகிறது. பிங்கர்ட்டன் துப்பறியும் நிறுவனத்தில் டாஷியல் ஹாமெட் பணிபுரிந்த அனுபவம் இயல்பான ஒரு துப்பறிவாளன், காவல்துறை, நீதித்துறை பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் நலன்களிற்கு கேடு விளைவிப்பவர்கள், சக துப்பறிவாளர்கள் என தம் தொழில்வாழ்க்கையுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் தொழிலை ஆற்ற வேண்டிய சூழல் குறித்த தகவல்களை எளிதாக எழுதிட உதவியிருக்கலாம். இருப்பினும் சமகால வாசிப்பிற்கும் இந்நாவலிற்குமிடையிலுள்ள காலவெளியை இல்லாதாக்குவது ஹாமெட்டின் குழப்பமான முடிச்சுக்களற்ற கதைசொல்லலே.

நூறு பக்கங்கள் தாண்டியபின் கதையின் வேகம் நிறுத்தப்பட முடியாத ஒன்று. குறிப்பாக ஸ்பேட்டின் சகா ஆர்ச்சர் மைல்ஸ் கொலை குறித்த மர்மத்தை ஆசிரியர் நழுவவிடாது இறுதிப்பக்கவரை இறுக்கமாக கொண்டு சென்று விடுகிறார். ஸ்பேட் யார் பக்கம் சாய்கிறான் என்றே ஊகிக்க முடியாதபடி படு திறமையாக ஆனால் எளிமையாக கதையை சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். கதாசிரியர் பாத்திரங்களை ஓயாது வர்ணிக்கும் முறைதான் நாவலில் சிறிது எரிச்சலை உருவாக்கும் ஒன்றாகும். கதைமாந்தர்களின் விழிகளையும், தலைமுடியையும், தாடைகளையும், நாசிகளையும் சலிக்காது ஆனால் இன்றைய வாசகனிற்கு சலிப்பூட்டும் வகையில் உறுதியுடன் எழுதுகிறார் ஹாமெட். மேலும் 1930கள் குறித்து பெரிதாக எதையும் நாவல் பேசிடவில்லை மாறாக மனிதர்களின் மனங்களில் விளையும் ஆசையின் விபரீதமான ஓவியங்களும் அவை உருவாக்கும் விளைவுகளும் காலகாலத்திற்கும் மாறிடுவதில்லை என்பதை வாசகன் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள இயலும். கதையில் வரும் உப பாத்திரங்களான மிஸ்டர் G எனும் கட்மேன், ஜோவெல் கைரோ ஆகியவர்கள் மிகவும் ரசிக்கப்படக்கூடியவர்கள். குறிப்பாக ஜோவெல் கைரோ பாத்திரத்தை நகைச்சுவை ததும்ப செதுக்கியிருப்பார் ஹாமெட். 1930களில் அமெரிக்காவில் ஒரினச்சேர்க்கை குறித்து எழுதப்பட்ட நாவலாகவும் இதை ஒருவர் கண்டு கொள்ளலாம். நாவலில் வரும் எவரையும் நல்லவர்கள் என சுட்டிக்காட்ட இயலாதபடி நல்லவர்களற்ற நிஜ மனிதர்களுடன் வாசகனை உலவ விட்டு அவனை தன் அறம் குறித்த நிலைப்பாடுகளுடன் மோதச் செய்கிறார் கதாசிரியர். இதுவே இந்நாவலின் மிகச் சிறப்பான ஒரு அம்சமாக என்னால் உணரப்படுகிறது.

கதையின் இன்னுமொரு முக்கிய பாத்திரம் வொண்டர்லி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரிஜிட். அழகான ஆபத்து என்பார்களே அதுதான் பிரிஜிட். நாவல் முழுதும் இப்பெண்மீது இரக்கத்தை தவிர வாசகர்கள் என்ன உணர்வை உருவாக்கி கொண்டுவிட முடியும். அப்படியாக அப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் டாஷியல் ஹாமெட். நாவலின் உச்சக்கட்டம் நம்ப இயலாவகை எதார்த்தம், நாவலின் கடைசி நான்கு பக்கங்கள் ஸ்பேட்டை என்றும் எவரும் நம்பவே இயலாது எனும் எதார்த்தம். இவை இரண்டுமே நாவலின் மிக முக்கியமான திருப்பங்கள். நாவலின் மதிப்பையும், உணர்ச்சிகரமான வாசகனின் மனதில் நாவலை சிறப்பான ஒன்றாக உயர்த்துபவையும் இவைதான்.உங்கள் பிரார்த்தனைகள் கோபால்ட் நீல நிறத்தில் இருக்கலாம் ஆனால் ஸ்பேட் எனும் கடவுளிடம் இரக்கம் ததும்பும் செவிகள் இருப்பது இல்லை. இணையத்தில் உலவும் மிகையான எதிர்பார்ப்புகளை உற்பத்தியாக்கும் காரணிகளை உதறிவிட்டு படித்தால் சிறப்பான வாசிப்பனுபவத்தை வழங்கும் ஒரு நாவல் இது. எதிர்பார்ப்புகளை உதறாமல் படித்தால்கூட ஏமாற்றிடாத நாவல் இது.12 comments:

 1. அன்பு நண்பரே,

  இந்த வருடம் குற்றப் புனைவுகளை படிப்பதை குறைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஆனால் நீங்களோ பட்டியலை நீட்டித்தே வருகிறீர்கள்.

  ஆசிரியரை பற்றி கேள்விப் பட்டதே ,இல்லை. அவரை பற்றி சிறிய குறிப்பை எழுதியிருக்கலாம். குற்றப் புனைவு வெற்றியடைய முக்கிய தேவை வேகம். அது இந்நாவலில் உள்ளது என்றிருக்கிறீர்கள், வாய்ப்பு கிடைப்பின் படித்து விடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நண்பரே,

   நான் எங்கு பட்டியலை நீட்டினேன்... அது தானாகவே நீண்டு செல்கிறது :) விக்கி, மற்றும் நாவல் உள்பக்கம் பார்த்து ஆசிரியர் குறித்து சாவகாசமாக சிறுகுறிப்பு ஒன்றை பதிவில் சேர்த்துக் கொள்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி.

   Delete
 2. [***] இவ்வாறு திரைப்படங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு அளிக்கும் நீங்கள் புத்தக விமர்சனங்களுக்கு ஏன் அளிப்பதில்லை?!

  ReplyDelete
  Replies
  1. ]***[ இவ்வாறு வழங்கலாமா என மூளையை மிக்ஸியில் போட்டு சிந்தித்துக் கொண்டிருப்பதால்தான் அளிப்பதில்லை :)) எல்லா பிரபல பதிவர்கள் ப்ளாக்குகளிலும் லிங்கு வழங்கி மகிழும் நீங்கள் ஏன் இன்னமும் இலுமினாட்டி அவர்களின் ப்ளாக்கில் லிங்கு தரவில்லை,

   Delete
  2. ஆமா ஓய், ரொம்ப நாளா எவனும் அங்க வர மாட்றானுக. போர் அடிக்குது. இப்டி எதுனா பண்ணி எவனையாவது அனுப்பி வையும். கொஞ்சம் ஜாலியா பொலி போட்டு விளையாடலாம்.

   Delete
  3. பின் குறிப்பு: //ரொம்ப நாளா எவனும் அங்க வர மாட்றானுக// இந்த இடத்தை "தேடித் போய் வரண்டிழுத்து வம்பு பண்ணினாலும் வர மாட்றானுக" என்று படிக்கவும். :)

   Delete
  4. *** என்ன செய்ய, லயன் காமிக்ஸ் தளத்தில் இப்போது நீங்கள் என்னோடு கும்மி அடிக்க வருவதில்லை என்ற வருத்தத்தில் சோகமாய் இப்படி ஒரு மொக்கை பின்னூட்டம் அடித்தேன்!

   பி.கே: இப்போதாவது தாங்களும் ஒரு பிரபல பதிவர்தான் என்ற ஐயம் தீர்ந்ததா? ;) ஜோக்ஸ் அபார்ட் உங்கள் தமிழுக்கு நான் காதலன்!

   பி.கு.1: என் profile பெயரிலேயே இப்போது ஒரு புது வகை விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளேன் ;)

   பி.கு.2: பி.கே. = பின் கேள்வி!

   Delete
  5. @ ILLUMINATI: உங்கள் தளத்தை பல வருடங்களுக்கு முன் following லிஸ்டில் சேர்த்து அவ்வப்போது படித்து வருகிறேன்! எனக்கும் மிக படித்த ஒரு எழுத்தாளர் saandilyan (படித்து பல வருடங்கள் ஆகிறது!).

   சென்ற பதிவில் உங்கள் "குத்த வச்சு+வாந்தி" பின்னூட்டத்தில் பேஜாராகி எனக்கு பேதி புடுங்கி விட்டதால் அப்படியே ஜூட் விட்டு விட்டேன்! :)

   Delete
  6. ஆமா... அப்பவே சொன்னேன்.... மெது மெதுவாதான் வெட்டனும்னு :)) இலுமி வயலன்ஸ்ச கொறைச்சிக்கப்பா... கஸ்டமர்ஸ் பயப்படுறாங்கில்ல...:))

   Delete
 3. 1941ல்...ஹம்ப்ரி பொகார்ட் நடிப்பில்...
  ஹாலிவுட் திரைப்படமாக வந்ததும்... இந்த நாவலும் ஒன்றா?

  ReplyDelete
  Replies
  1. ஆம் உலக சினிமா ரசிகரே, மூன்று தடவைகள் திரைவடிவம் பெற்றிருக்கிறது என்கிறார் விக்கி.

   Delete
 4. hii.. Nice Post

  Thanks for sharing

  Best Regarding.

  More Entertainment

  For latest stills videos visit ..

  www.chicha.in

  ReplyDelete