Sunday, July 31, 2011

எறும்புகள்


பூட்டுக்கள், மற்றும் சாவிகள் சம்பந்தமான திருத்தல் வேலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜோனதன், பாரிஸின் அபாயம் நிறைந்த புறநகர்ப் பகுதிகளில் இரவு வேளைகளில் பணியாற்ற மறுத்தமைக்காக வேலை நீக்கம் செய்யப்படுகிறான்.

இவ்வேளையில் அவனது மாமா எட்மொண்ட், அவரது இறப்பிற்குப் பின் அவனிற்கு உரித்தாக எழுதிச் சென்ற வீடு அவனிற்கு கிடைக்கிறது.

ஜோனதனின் மாமா எட்மொன்ட் உயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். மர்மமான முறையில் குளவிகளால் தாக்கப்பட்டு மரணமடைவதற்கு முன்பாக எறும்புகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். எறும்புகளின் மீதான அவதானிப்புக்களின் விளைவாக அவர் ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார் ஆனால் அதனை பிறர் கண்களில் படாது மிக ரகசியமாக பாதுகாத்திருந்தார்.

வேலையற்ற நிலையில் வாடகைச் செலவைக் குறைக்கும் முகமாக தன் மாமா எட்மொண்டின் வீட்டிற்கு தன் மனைவி லூசி, மகன் நிக்கோலா, மற்றும் அவனது வளர்ப்பு நாய் சகிதம் குடி வருகிறான் ஜோனதன்.

தனது மாமா எட்மொண்ட் எதற்காக அவர் வீட்டை தனக்கு உயிலில் எழுதி வைத்தார் என்பது ஜோனதனிற்குப் புதிராகவே இருக்கிறது. தன் மாமாவைக் குறித்து விரிவாக அறிந்து கொள்வதற்காக தனது பாட்டியை சென்று பார்க்கிறான் அவன்.

பாட்டி கூறும் விபரங்களிலிருந்து எட்மொண்ட் குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்கிறான் ஜோனதன். பாட்டியிடமிருந்து அவன் விடைபெறும் வேளையில் ஜோனதனிடம் கையளிக்கச் சொல்லி எட்மொண்ட் விட்டுச் சென்றிருந்த ஒரு கடிதத்தை அவனிடம் தருகிறாள் பாட்டி. அக்கடிதத்தை திறந்து பார்க்கும் ஜோனதன் அதில் "என்ன நிகழ்ந்தாலும் நிலவறைக்குள் மட்டும் நுழையாதே” எனும் ஒரே ஒரு வரி தன் மாமா எட்மொண்டின் கைகளால் எழுதப்பட்டிருப்பதை கண்டு வியப்பும், அச்சமும் கொள்கிறான்.

9782226061188FS வீடு திரும்பும் ஜோனதன் தன் மனைவியிடமும், மகனிடமும் எக்காரணம் கொண்டும் யாரும் நிலவறைக்குள் நுழையக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறான். அங்கே முரட்டு எலிகள் அதிகம் வாழ்வதாகவும் அவர்களை எச்சரிக்கிறான்.

எட்மொண்டின் வீட்டில் ஜோனதன் குடும்பத்தினரின் வாழ்க்கை அதன் வழமையான நிகழ்வுகளுடன் நகர்கிறது. புதிய வேலையொன்றை ஜோனதன் விரைவில் தேடிக் கொள்ள வேண்டும் என அவனை நிர்பந்திக்கிறாள் லூசி. ஜோனதனிற்கும், லூசிக்கும் இடையில் பிரிவு என்னும் சொல்லின் ஆரம்பம் உருவாகத் தொடங்கிய வேளையில் அவர்களது வளர்ப்பு நாயானது காணாமல் போய்விடுகிறது.

காணாமல் போன நாயை பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதனைக் கண்டு பிடிக்க முடியாததால், வீட்டிலிருக்கும் நிலவறைக்குள் இறங்கி அதனை தேடிப்பார்க்கும்படி ஜோனதனை அவனது மனைவியும் மகனும் பிடிவாதமாகக் கேட்டுக் கொள்கிறார்கள்.

முதலில் தயங்கும் ஜோனதன், அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாக நிலவறைக்குள் நுழைகிறான். நீண்ட நேரத்திற்கு பின்பு நிலவறையிலிருந்து வெளிவரும் அவன் கைகளில் அவர்களினது வளர்ப்பு நாய் குருதி தோய்ந்த நிலையில் பிணமாகக் கிடக்கிறது.

இந்நிகழ்விற்கு பின்பாக ஜோனதனின் நடத்தைகள் சிறிது சிறிதாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன. வீட்டுச் செலவிற்கே பணம் போதாத நிலையிலும் எறும்புகள் சம்பந்தமான நூல்களை வாங்கிக் குவிக்கிறான் அவன். நிலவறைக்குள் தனது நாட்களை கழிக்கிறான். இது அவனிற்கும் லூசிக்கும் இடையில் மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

ஒரு நாள் நிலவறைக்குள் வழமை போலவே நுழையும் ஜோனதன் அங்கிருந்து திரும்பி வராது போகிறான். அவனைத் தேடி செல்லும் அவனது மனைவியும் மறைந்து போகிறாள். இவர்களைத் தேடி நிலவறைக்குள் நுழையும் ஒரு பொலிஸ் அதிகாரியும், தீயணைப்பு படை வீரர்களும் காணாமல் போய்விடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலவறையை சீல் வைக்கிறது. நிக்கோலா ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறான்..

9782226086365FS ஜோனதன் தன் மாமாவின் வீட்டிற்கு குடிவரும் அதே வேளையில் Bel o Kan எனப்படும் எறும்பு நகரில்[ புற்றில்], தன் பனிக்கால தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறது ஆண் எறும்பு 327.

நகரில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட ஏனைய சில எறும்புகளுடன், நகரை விட்டு வெளியேறும் 327, சூரிய ஒளியில் குளித்து தன் சக்தியைப் புதுப்பித்துக் கொள்கிறது. சூரிய ஒளியிலிருந்து தேவையான சக்தியைப் பெற்ற பின் கடமையே கண்ணாக தன் நகரிற்குள் திரும்பும் 327, அங்கு இன்னமும் உறக்கம் கலையாமல் இருக்கும் எறும்புகளை தொட்டு, அவற்றின் துயில் கலைக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறாக நீண்ட உறக்கத்திலிருந்து செவ்வெறும்புகளின் நகரமான பெல் ஒ கான் உயிர் பெறுகிறது.

நகரில் விழித்தெழும் செவ்வெறும்புகள் அவரவர்க்குரிய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, 327க்கு உணவு வேட்டைக்கு போகும்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வேட்டைகளில் ஏற்கனவே அனுபவம் பெற்ற எறும்புகளுடன் உணவு வேட்டைக்கு கிளம்பிச் செல்கிறது 327. அவர்களின் உணவு வேட்டையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெல் ஒ கானிற்கு திரும்பும் வழியில் அந்த எறும்புக் கூட்டம் மிக மர்மான ஒரு முறையில் தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 327 மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விடுகிறது.

உயிர்தப்பிய 327 பெல் ஒ கானிற்கு விரைவாக வந்து சேர்கிறது. எவ்வகையான தாக்குதல், தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டது என்பது தெரியாத நிலையில் 327ன் முறைப்பாடுகளையும், எச்சரிக்கைகளையும் நகரில் குடிமக்கள் அலட்சியம் செய்கின்றார்கள்.

நகரின் அதிகார உச்சமான எறும்பு ராணியும்[ 327, மற்றும் பெல் ஒ கான் எறும்புகளின் தாயார்] 327ன் புலம்பல்களை பொருட்படுத்தாது விடுகிறாள். வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தும்படி ராணி, 327க்கு ஆலோசனையும் தருகிறாள். ஆனால் 327க்கு அதன் நகரத்திற்கு ஏதோ ஒரு அபாயம் வரவிருக்கிறது எனும் அச்சம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இதனால் 327 இம்மர்மம் குறித்து தனியாக தனது தேடலை ஆரம்பிக்கிறது. அதன் தேடல்கள் பெல் ஒ கான் நகரினுள்ளேயே அதன் குடி மக்களிற்கு தெரியாது நிகழும் ஒரு சதியை அது கண்டுகொள்ள வைக்கிறது…..

ஜோனதனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்தது என்ன? நிலவறையின் ரகசியம்தான் என்ன? 327 கண்டுகொண்ட சதிதான் என்ன?

இரு வேறு தளங்களில் விறுவிறுவென ஒரு த்ரில்லர் போல் பயணித்து, இரு தளங்களையும் ஒரே புள்ளியில் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து இணைக்க செய்கிறது Les Fourmis [எறும்புகள்] எனும் இச்சிறு நாவல். நாவலை எழுதியவர் பிரெஞ்சு மொழியின் பிரபல நாவலாசிரியரான Bernard Werber.

BernardWerber ஒரு எறும்பின் பனிக்கால துயில் கலைதலிலிருந்து ஒரு எறும்பு புற்றினுள் நிகழும் பல்வேறுவகையான நிகழ்வுகளை சுவையாக விபரிக்கிறது நாவல். எறும்புகள் எவ்வாறு தமக்குள் உரையாடிக் கொள்கின்றன, உணவு வேட்டை, எதிரிகளை எதிர்த்து தாக்குதல், யுத்த தந்திரங்கள், காதல் கலப்பு பறத்தல், புதிய நுட்பங்களின் கண்டுபிடிப்பு, எறும்பு புற்றின் உருவாக்கம், அதன் அபிவிருத்தி, அதன் ஆதிக்க விரிவு என நாவலில் படிக்க கிடைக்கும் விடயங்கள் வாசகனை மயங்கடிக்கின்றன.

நாவலைப் படிக்க படிக்க எறும்புகள் மீதான அபிப்பிராயம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தச் சின்ன உருவங்களிற்குள் இவ்வளவு பெரிய அறிவா என உருவாகும் வியப்பு சுள்ளென்று கடிக்கிறது. நாவலாசிரியர் தன் கற்பனைகளில் இருந்த தகவல்களை உருவாக்காது நிஜமான தகவல்களை வழங்கியிருப்பது கதையின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.

கதையில் அடிக்கடி குறுக்கிடும் எட்மொண்ட்டின் கலைக்களஞ்சியப் பக்கங்கள், உலகில் பூச்சி இனத்தின் தோற்றம், தொடர்ந்து அவற்றிற்கு எதிராக நிகழும் அழிப்பு செயல்களிலிருந்து நீடிக்கும் அவைகளின் இருத்தல், மனித சமூகத்திற்கும், எறும்புகள் கூட்டத்திற்குமிடையிலான ஒப்பீடுகள், சித்தாந்தம் என சிறப்பான குறிப்புக்களை வழங்குகின்றன.

எறும்புகளின் டிராகன் [ஓணான்] வேட்டை, சிலந்தியின் வலை வீடு நிர்மாணம், நத்தைகளின் காதல் என சுவையான பல தகவல்கள் நாவலில் இருக்கின்றன.

உன் எதிராளி தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் வரை காத்திருப்பதை விடச் சிறந்த யுத்த தந்திரம் எதுவுமில்லை” இப்படி ஒரு பஞ்ச் சித்தாந்தத்தை உதிர்ப்பவர்; வலையைப் பின்னி விட்டு அதில் விழுந்த இரை, உயிரிற்காக துடிப்பதை அவதானிக்கும் ஒரு சிலந்தியார். இவ்வகையான பூச்சி சித்தாந்தங்களிற்கு கதையில் குறைவில்லை.

71YDW4MXSBL._SS500_.gif பெர்னார் வெர்வேயின் எளிமையான கதை சொல்லல் நாவலின் முக்கிய பலம். சாதாரண வாசகன் அதிகம் அறிந்திராத எறும்புகளின் உலகிற்கு அவனை அழைத்துச் சென்று அதன் பிரம்மாண்டத்தில் அவனை திக்குமுக்காட வைக்கிறது கதை. அறிவியல் சொற்களை அதிகம் புகுத்திக் கதையோட்டத்தை தடுக்காது, தெளிவாக, மென் நகைச்சுவையுடன் கதையை நகர்த்துகிறார் வெர்வே. கதையின் விறுவிறுப்பு பக்கங்களை தொய்வின்றிக் கடத்திச் செல்கிறது.

வெர்வே, பிரெஞ்சு மொழியில் புகழ் பெற்ற ஒரு நாவலாசிரியர். இவரது நாவல்கள், அறிவியல், தொன்மம், ஆன்மீகம், சித்தாந்தம், சாகசம், எதிர்காலம் குறித்த பார்வைகள் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. 1991ல் எறும்புகள் நாவல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. எறும்புகளின் தொடர்ச்சியாக Le Jour des Fourmis[ நாளை எறும்புகளின் நாள்], La Revolution des Fourmis[ எறும்புகளின் புரட்சி], என மேலும் இரு நாவல்களை அவர் எழுதினார். நாவல்கள், சினிமா, சித்திரக்கதை, நாடகம், என பல தளங்களில் இயங்குபவர் வெர்வே. 35 மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. உலகில் அதிகம் வாசிக்கப்படும் பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவராக வெர்வே இருக்கிறார். எறும்புகள் நாவல் ஆங்கிலத்தில் Empire Of The Ants எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

கதையின் முடிவானது அறிவு கொண்ட இரு இனங்களிற்கிடையிலான ஒரு புதிய ஆரம்பத்தை முன் வைக்கிறது. அதன் சாத்தியம் குறித்த கேள்விகளை இது ஒரு புனை கதை எனும் எண்ணம் அடக்குகிறது. ஆனால் மனதில் கேள்விகள் எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. மனிதர்களை விட எறும்புகள் பராக்கிரமம் மிகுந்தவை, இந்த உலகின் உண்மை ஆண்டகைகள் அவைகளே என்பதாக கதை நிறைவு பெறுகிறது. அதனை நம்பால் இருப்பதுதான் சற்றுக் கடினமான செயலாக இருக்கிறது. [***]

8 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நாவலுக்கான விமர்சனமாக நீங்கள் கோர்த்திருக்கும் வார்த்தைகளே நிறைய அவாவை தூண்டுகிறது நாவலை படிக்க வேண்டும் என்று..

  \\ இந்த உலகின் உண்மை ஆண்டகைகள் அவைகளே//
  யோசித்து பார்க்கையிலேயே அப்படிதான் தோன்றுகிறது...
  கண்டிப்பா படிக்க வேண்டிய புத்தக வரிசையில் இதை வைக்கலாம் என எண்ணுகிறேன்..
  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கனவுகளின் காதலனே
  :) :)

  ReplyDelete
 3. http://specialdoseofsadness.blogspot.com/


  add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...

  add tis movie blog too

  http://cliched-monologues.blogspot.com/

  ..d..

  ReplyDelete
 4. நண்பரே . .இந்த நாவல், வாண்டுமாமா எழுதிய 'மெழுகு மாளிகை' என்ற புத்தகத்திலிருந்து சுடப்பட்டது என்று சுப்பிரமணியன் சுவாமி எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதன் தகவல்களைப் பற்றிப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறேன். ஊர்ஜிதமானவுடன் பதிவு போடுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 5. உங்கள் விவரிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால், என்னைப்பொறுத்தவரையில், எனக்கு பூச்சிகள் வைத்து எழுதப்படும் நாவல்கள் அலர்ஜி. அவை என் மேல் ஊர்வதைப் போல உணர்வதே காரணம் :-) . . இருந்தாலும், இது படமாக வந்தால், அதைப் பார்ப்பேன்.

  ReplyDelete
 6. அருமையான பதிவு! நாவலை பற்றிய விமர்சனமாக இருப்பினும் தங்கள் மொழிநடை காட்சிகளாக உருப்பெற்றது ஆச்சரியம்!( மனதில் ஒரு வித கிலியை ஏற்படித்தியது! பாராட்டுக்கள்!) எனக்கு ANTZ படமும் நினைவுக்கு வந்தது!

  ReplyDelete
 7. நண்பர் லக்கி லிமட், தங்கள் வருகைக்கு நன்றி.

  நண்பர் லெமூரியன், காலம் கனிந்து வருகையில் படித்திடுங்கள், இக்கதை உங்களை ஏமாற்றாது. கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், வாண்டுமாமாவினை தழுவியது எனும் தகவல் பல பூகம்பங்களை கிளப்பும் என்பது உறுதி, வழமை போலவே பட்டையை கிளப்பிடுங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் cap tiger, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete