Saturday, July 16, 2011

ஹாரிபொட்டரும் ஏமாற்றக் குவளையும்!


உணவு உண்ணும் போதும், உறங்கச் செல்லும் முன்பாகவும் தொலைக்காட்சியில் அன்றைய செய்தி நறுக்குகளைப் பார்ப்பது எனக்கு வழக்கமாகிக் கொண்டு வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதியின் வரவு குறித்தும், அதன் வரவின் முன்பாகவும் பின்பாகவும் தவறமால் தொற்றிக்கொள்ளும் அந்த ஹாரிஜூரம் குறித்தும் குறிப்பிடத்தக்க நறுக்குகளை தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தவறாத பிரார்த்தனைபோல் ஒளிபரப்பி தம்மையும் ஹாரிஜூரத்தின் பரப்பிகளாக மாற்றி அகமகிழ்ந்தன.

அந்நறுக்குகளின் வழி ஹாரி மிகப்பிரம்மாண்டமான ஒரு ரசிகர் உலகத்தை இன்னமும் தன் கைக்குள் வைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்றாகவே எனக்கு தோன்றியது. ஹாரிபொட்டரின் நிறைவுப்பகுதியின் சர்வதேச முதற்காட்சிக்கு இங்கிலாந்தில் கூடிய சர்வதேச ரசிகர் கூட்டம், அதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இடம்பெற்ற நள்ளிரவுக் காட்சிகளின் பின்பான ரசிகர்களின் எதிர்வினைகள் யாவும் ஹாரிபொட்டரின் இறுதிப்பகுதியின் புகழை மட்டுமே பாடின அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் புகழ் பாடப்பட்ட எதிர்வினைகளை மட்டுமே காட்டின. யாவரும் ஒரு உலகலாளவிய வியாபாரத்தில் அறிந்தோ அறியாமலோ பங்கு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றாக எனக்கு தோன்றியது ஆனால் இவ்வியாபாரத்தின் லாபத்தில் மட்டும் யாவர்க்கும் பங்கு கிடைப்பது இல்லை.

ஹாரிபொட்டர் இறுதி நாள் படப்பிடிப்பின் பின்பாக தான் கண்ணீர் விட்டு அழுததாக ஹாரிபொட்டர் வேடமேற்ற நடிகர் டானியல் ராட்க்ளிஃப் ஒரு பேட்டியில் கூறுவதை நான் பார்த்தேன். டானியல், நீங்கள் மட்டும் அழவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா இல்லை அனுதாபக் கண்ணீரா என்பது குறித்து எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இத்துடன் திரைப்படத்தொடர் முடிந்ததே என்பது என்னைப் பொறுத்த வரையில் ஆனந்தக் கண்ணீரிற்கான ஊக்கிதான்.

இவ்வளவு புகழ்ச்சிகளின் மழையிலும், பாராட்டுக்களின் அரவணைப்பிலும், ரசிகர்களின் பித்துவத்திலும் ஊறித்திளைத்த ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதி, வரைகலை உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் சில காட்சிப் படைப்புக்களையும், செவ்ரெஸ் ஸ்னேப் சம்பந்தமான உணர்சிகரமான தருணங்களையும், அவ்வப்போது அருமையாக ஒலிக்கும் இசையையும் தவிர்த்து என்னைப் போன்ற ரசிகன் ஒருவனின் எதிர்பார்ப்பின் இறுதிக் குவளையையும் ஏமாற்றத்தால் மட்டுமே நிரப்பும் மந்திரத்தையே தன்னில் கொண்டிருக்கிறது. வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் அழிக்கப்படுகையில் அவன் பலவீனமுறுவதைப் போலவே இத்திரைப்படமும் தன் பலத்தை இழந்து கொண்டே இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இடிந்து நொறுங்கிக் கொண்டேய்ய்ய்ய்ய்ய்ய்யிருக்கும் மந்திரவாதிகளின் கல்லூரி, விறுவிறுப்பற்ற மோதல் காட்சிகள், முகத்தில் இழுப்பொன்று இழுத்துக் கொண்டே குச்சிப்பொடி மந்திரம் காட்டும் ஹாரி மற்றும் அவன் சகாக்கள், பெண் சாயம் பூசிய குரலில் தன் மேலங்கியை தடவிக் கொண்டு நாகினிப் பாம்பை தன் பின்னால் இழுத்துச் செல்லும் அபத்தமான ஒரு வோல்டெர்மோர், இழு இழுவென இழுக்கப்படும் உச்சக்கட்டக் காட்சிகள் என மேலதிகமாகவும் சில குவளைகளை ஏமாற்றத்தால் நிரப்பும் சக்தி வாய்த்திருப்பது இத்திரரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. அன்புத் தம்பி ஹாரி, RIP. [*]

6a00e5510dc3dd88330120a5718d0f970b-800wiகடந்த நாட்களில் Tim Powers எழுதிய The Anubis Gates எனும் புதினத்தை படித்து முடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. காலத்தில் பயணித்தல் எனும் கருவை எடுத்துக் கொண்டு டிம் பவர்ஸ் ஒரு சுவையான நாவலை 1983 களில் எழுதியிருக்கிறார் என்பதுதான் இந்நாவலைப் படித்து முடித்த பின்பாக எனக்கு தோன்றிய எண்ணமாகும்.

1983ல், டாரோ கொச்ரான் எனும் செல்வந்தனால் இங்கிலாந்திற்கு வருவிக்கப்படுகிறான் 19ம் நூற்றாண்டு இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்து நூல்களை எழுதும் பிராண்டேன் டொய்ல் எனும் எழுத்தாளன், காலத்தில் பயணிக்கும் ஒரு உத்தியை அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கண்டு பிடித்திருக்கும் செல்வந்தன் டாரோ, 19ம் நூற்றாண்டை நோக்கி சில தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்க விரும்புகிறான். இப்பயணிகளிற்கு 19ம் நூற்றாண்டின் இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்த ஒரு வழிகாட்டியாக இருக்க பிராண்டேன் டொய்ல் வேண்டிக் கொள்ளப்படுகிறான். செல்வந்தன் டாரோவின் நிபந்தனைகளிற்கு சம்மதித்து காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் [ கதையில் தாவுதல் எனும் சொல்லே பிரயோகிக்கப்படுகிறது] பிராண்டன் டொய்ல், எதிர்பார்க்க முடியாத சம்பவங்களின் நிகழ்வுகளால் மீண்டும் 1983க்கு திரும்ப இயலாது 1811ல் இங்கிலாந்தில் அகப்பட்டுக் கொள்கிறான். பிராண்டன் டொய்லின் கதை என்னவானது என்பதை மரபான கதை சொல்லலில், விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் கதாசிரியர் டிம் பவர்ஸ்.

காலத்தில் பயணம் செய்தல் குறித்த தர்க்க பூர்வமான வாதங்களை நாவலில் – ஒரு அத்தியாயம் தவிர்த்து- அதிகமாக முன்வைக்காதது என் போன்ற வாசகனிற்கு டிம் பவர்ஸ் வழங்கியிருக்கும் ஒரு வரம். மிகவும் தெளிவான எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான கதை சொல்லலை நகைச்சுவையுடன் இந்நாவலில் கையாண்டிருக்கிறார் டிம் பவர்ஸ்.

எகிப்திய கடவுள்கள் மற்றும் தொன்மம், மந்திரவாதிகள், கறுப்பு மாந்தீரிகம், நரநாய்கள், கூடுவிட்டு கூடு பாய்தல், ரகசிய சகோதரத்துவங்கள், 18ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பிச்சைக்கார மற்றும் திருடர் குழு தலைவர்களின் அட்டகாசமான நடவடிக்கைகள், மந்திரத்தால் உருவாக்கப்படும் மனித நகலிகள் என படிக்க படிக்க சுவையையும் வியப்பையும் அத்தியாத்திற்கு அத்தியாயம் தவறாமல் கதையை நகர்த்துகிறார் டிம் பவர்ஸ். கதையின் இறுதி அத்தியாயம் வரை பிராண்டேன் டொய்ல் குறித்த மர்மத்தை அவர் வாசகனிடம் சரியாக ஊகிக்க விடுவதேயில்லை. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிஜக் கவிஞர்களையும், 19ம் நூற்றாண்டின் முன்பான எகிப்தின் வரலாற்றையும் தகுந்த வகையில் அவர் கதைகூறலில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில மரபிலக்கிய பாணியில் கூறப்பட்டிருக்கும் இக்கதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் என்பது என் தாழ்மையான கருத்து. டிம்பவர்ஸ் மாயப்புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதுடன் இவர் எழுதிய On Stranger Tides எனும் நாவலே பிரபல கடற்கொள்ளையன் ஜாக் ஸ்பாரோவின் சமீபத்திய திரைப்படத்தின் திரைக்கதைக்கு உதவியாக அமைந்தது என்பதும் உபரியான தகவல்களாகும்.

13 comments:

 1. Harry Potter சமாச்சாரம் வழக்கமான டிராமா. :)
  இதை விடும். எனக்கு Twilight ஐ நினைத்தால் தான் கதி கலக்குகிறது. ;)

  ReplyDelete
 2. //காலத்தில் பயணம் செய்தல் குறித்த தர்க்க பூர்வமான வாதங்களை நாவலில் – ஒரு அத்தியாயம் தவிர்த்து- அதிகமாக முன்வைக்காதது என் போன்ற வாசகனிற்கு டிம் பவர்ஸ் வழங்கியிருக்கும் ஒரு வரம்.//

  அப்படியா? :)
  எதுனா விளக்கம் வேணுமா? ;)

  ReplyDelete
 3. நண்பர் இலுமினாட்டி, நீங்கள் அளிக்க விரும்பும் விளக்கத்தை படிப்பதை விட டிவிலைட்டை நான் தினந்தோறும் பார்ப்பேன்... என்ன ஒரு கொடூரமான வேண்டுகோள்... யப்பப்பா இப்போது நினைத்தாலும் ஆவி அடங்குகிறதே :)கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 4. விட்டது சனியன்................

  ReplyDelete
 5. சகோதரி எம்மா வாட்சன் பத்தி ஒரு தகவலும் இல்லாதது.............ஆச்சரியமாக இருக்கிறது !!!

  ReplyDelete
 6. ஹாரி பாட்டருக்கு இன்று செல்கிறோம். படம் மொக்கைக்கடியாக இருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், நாவலை சென்ற வருடமே படித்தாயிற்று :) . . ஹீ ஹீ

  ReplyDelete
 7. ஹாரி பாட்டர் முதல் மூன்று பாகங்கள், எனது most favorites . அதன்பின், XIII மாதிரி தேய்ந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இருந்தாலும், முதல் நாவலிலிருந்து கடைசி நாவல் வரை, ஒரு birds eye view ல், ஹாரி பாட்டரின் பல சம்பவங்கள், கதாபாத்திரங்கள், என்னை மகிழ்வித்திருக்கின்றன. குறிப்பாக ஹேக்ரிட், டம்பிள்டோர், ஹெர்மியோனி, Dobby பூதம் ஆகியன. ஹாரி பாட்டர் எனக்களித்த அந்த சந்தோஷ நிமிடங்களுக்காக, ஹாரி பாட்டர் முடிந்துவிட்ட இந்த நேரத்தில், இந்த சீரீசுக்கு ஒரு பெரிய Cheerz !!

  ReplyDelete
 8. அன்பு காதலரே,

  நேரம் எடுத்து இந்த மொக்கை சினிமா தொடரையும் பொறுமையாக எப்படி தான் பார்க்கிறீர்களோ... 5வது பாகம் பார்க்க சென்று தூக்கத்தை கட்டுபடுத்த நான் செய்த மல்லுகட்டுக்கு பிறகு, அப்பக்கம் செல்லவே இல்லை. மொத்தமாக ஏதாவது ஒரு மொக்கை நாளன்று டிவிடியில் பார்த்து கொள்ள வேண்டியது தான். ஆப்ரேட்டர் நாம் என்பதால் பாஸ்ட் பர்வார்ட் ஈஸி ஆயிற்றே ;)

  மொக்கை படம் அல்ல புத்தகங்களை பற்றி விமர்சிக்கும் போது, அதை இட்டு நிரப்ப இன்னொரு அறிமுகத்தையும் சேர்த்து இடும் உங்கள் பாணி அலாதி. பதிவை படிக்க அதுவே தூண்டிற்று. அனுபிஸ் கதவுகள் ஆர்வத்தை வரவழைக்கின்றன.

  ReplyDelete
 9. நண்பர் கொழந்த, அப்படிக் கூறவியலாது... எல்லாம் அம்மிணி ராவ்லிங் கைகளில்தான் உள்ளது. எம்மா அழகாக வளர்ந்து நிற்கிறார், இன்னும் அழகாவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது :) நம்பிகைதானே வாழ்க்கை:))கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், ஹாரிபொட்டர் திரைப்பட வரிசையை விட நாவல்கள் சிறப்பாகவே இருக்கும். உங்கள் திரைப்பட அனுபவம் இனிதாகட்டும். கருத்துக்களிற்கு நன்றி.

  ரஃபிக், என்னதான் செய்வது!! பார்த்து முடித்தாகிற்று. தவிர்த்துவிட முடியவில்லை :) அனுபிஸ் கேட்ஸ் நல்ல கதை,காமிக்ஸ் வடிவம் இல்லை என்பது ஒரு குறைதான் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 10. // இத்துடன் திரைப்படத்தொடர் முடிந்ததே என்பது என்னைப் பொறுத்த வரையில் ஆனந்தக் கண்ணீரிற்கான ஊக்கிதான //

  என்ன காதலரே பொசுக்குன்னு இப்படி சொல்லி விட்டீர்கள்
  ஹ்ம்ம் ;-)
  .

  ReplyDelete
 11. நண்பர் சிபி, இதற்கு மேலும் என்றால் தாங்காது ஆவி என்பதால்தான் ஆனந்தக் கண்ணீர் :) கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 12. ரசித்துப் படித்தேனுங்க..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

  ReplyDelete
 13. நண்பர் சுதா, மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete