Wednesday, August 3, 2011

பழிவாங்கும் ஆர்க்கிட்


முன்பொரு காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கண்டுகளித்த சில திரைப்படங்களில், தன் குடும்பத்தை பூண்டோடு அழித்த கொடியவர்களை பிரதான பாத்திரங்கள் எவ்வழியிலாவது பழிவாங்கிவிடுவது என்பது மிகவும் முக்கியமானவொரு அம்சமாக இடம்பெற்றிருந்தது.

கதையின் நாயகன் அல்லது நாயகியின் அன்பு உறவுகள் கொடியவர்களால் கறுப்பு வெள்ளையில் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்க, இந்த நாயகனோ அல்லது நாயகியோ ஒரு பொட்டியின் அல்லது அருகில் இருக்கும் மர்ம அறையொன்றின் சாவித்துவாரம் வழியாகவோ, அல்லது கட்டிலின் கீழிருந்தோ[…அய்யய்யோ மெத்தை பையன் தலைல முட்டிடப் போகுதே மாரியாத்தா காப்பாற்றும்மா…..] அல்லது வைக்கோல் போரிற்குள் மறைந்திருந்தோ தங்கள் உறவுகளின் கொடூரமான முடிவை பயம், கண்ணீர், கிளிசரின்,பரிதாபம், கையாலாகமை என்பன தம் முகத்தில் தாண்டவமாடிட பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த கொடிய செயலில் ஈடுபட்ட நீசர்களை நயகனோ நாயகியோ அல்லது திரையரங்கில் வீற்றிருக்கும் ரசிகர்களோ எதிர்காலத்தில் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் சில அடையாளங்கள் அந்த நீசர்களிற்கு வழங்கப்படிருக்கும். மண்டையோடு பச்சை, முகத்தின் குறுக்கே ரயில் தண்டவாளம் போல் ஒரு தழும்பு, ஓநாய் தலையை பூணாக கொண்ட ஒரு கைத்தடி என்பன இவ்வகையான அடையாளங்களிற்கு சில உதாரணங்களாகும். ஜாலியாக தம் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அடையாளங்கள் பழிவாங்குதல் எனும் கடமையை நாயகன் அல்லது நாயகிக்கு நினைவூட்டும். அவர்களும் தம் கடமையை ஆற்ற புறப்படுவார்கள். அரங்கில் விசிலடியும், பலகை இருக்கைகளின் தட்டலும் பட்டையைக் கிளப்பும்.

நல்ல வேளையாக Olivier Megaton இயக்கியிருக்கும் Colombiana எனும் திரைப்படத்தில் சிறுமி Cataleya வின் குடும்பத்தை அவள் கண்கள் முன்பாகவே அழித்தொழிக்கும் கொடியவர்களிற்கு மேற்கூறப்பட்ட சிறப்படையாளங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அந்தக் கொடியவர்களின் பிடியிலிருந்து தப்பி அமெரிக்கா வந்தடைந்து, ஆளாகி, கறுப்பு ஆர்க்கிட்டாக பூத்து நின்ற போதிலும் கத்தலியாவின் மனதில் அந்தக் கொடியவர்களின் முகம் மறைந்திடவில்லை. துரதிர்ஷ்டவசமாக இதுமட்டுமே இத்திரைப்படத்தின் ஆறுதலான ஒரு அம்சம்.

மனிதர்கள் அறிந்தும் தவறு செய்பவர்களே. ஆனால் இத்திரைப்படம் ஆரம்பமாகும்வரை நான் அறியாமல் ஒரு தவறு செய்வது எனக்கு தெரிந்திருக்கவில்லை. வழமையான விளம்பரங்கள் ஓடித் தீர திரைப்படம் ஆரம்பமாகி இத்திரைப்படம் Europa Corp தயாரிப்பு என்பது தெரியவந்தபோது என் அடிவயிற்றில் பகீரொன்றின் ப உருப்பெற ஆரம்பித்திருந்தது.

colombiana-2011-20332-1345479037இயூரோபா கார்ப் தயாரிப்பாக இருந்தாலும் சிலவேளைகளில் அந்த நபர், திரைக்கதை, வசனம் எழுதாத திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் உண்டு என மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் திரைக்கதைக்கு பொறுப்பாக அந்த நபரின் பெயரும் வந்து திரையில் விழுந்தபோது ஏற்கனவே உருப்பெற்ற ப வுடன் கீரும் முழுமை பெற்று சேர்ந்து கொண்டது. அடக் கடவுளே என மனதில் எண்ணிக் கொண்டேன். யார் சொன்னது கடவுளிற்கு காது கேட்பதில்லை என!!

1- கொலம்பியா: சிறுமி கத்தலியாவின் குடும்பத்தை அழிக்க அவள் வீட்டிற்கு வருகிறது முரடர் படை. அவர்களிடமிருந்து கத்தலியா தப்பி ஓடுகிறாள், முரடர்கள் துப்பாக்கியால் அவளை நோக்கி தாறுமாறாக சுடுகிறார்கள். அப்போது முரடர்களின் தலையான மார்கோ கூறுகிறான் சூடாதீங்கடா, அவ எனக்கு உயிரோட வேணும்… இந்த துரத்தல் முடிவிற்கு வருகையில் சிறுமி கத்தலியா பாதாள சாக்கடை ஒன்றினுள் புகுந்துவிட அவளை நோக்கி தன் துப்பாக்கியால் சராமாரியாக சுட ஆரம்பிப்பது மேற்கூறிய அறிவுறுத்தலை தந்த அதே மார்கோதான்.

2- அமெரிக்கா: பொலிஸ் கார் ஒன்றின் மீது வேகமாக வரும் ஒரு கார் மோதுகிறது. மோதியது ஒரு பெண். மிகையான போதை. ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸ்நிலையத்தில் அப்பெண் தடுத்து வைக்கப்படுகிறாள். அப்பெண்ணின் மிகை போதையை தெளிவிப்பதற்காக அவளிற்கு காப்பி!!!! வழங்கச் சொல்கிறார் பொலிஸ் அதிகாரி. அப்பெண்ணிற்கு ஒரு கிண்ணத்தில் காப்பி எடுத்துச் செல்லும் ஒரு பெண் பொலிஸ், அக்கிண்ணத்தை காப்பி கலக்கிய உலோகக் கரண்டியுடனே!!!! காவல் அறை கதவின் மீது வைத்து விட்டு அசால்ட்டாக திரும்புகிறார்.

மேலே எழுதிய இரண்டும் சிறு உதாரணங்களே. பக்கம் பக்கமாக எழுத படத்தில் உதாரணங்கள் இருக்கிறது. Luc Besson திருந்தவே போவதில்லை, ரசிகர்களை மடச் சாம்பிராணிகளாகவே எண்ணிக்கொண்டு அவர் எழுதி வழங்கும் படைப்புகள் வருடத்திற்கு வருடம் மேலும் தரம் கெட்டவையாகவே உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆக்‌ஷன் படத்தில் எதற்கு தர்க்கரீதியான சம்பவங்களை நான் தேட வேண்டும் எனும் கேள்வியை நான் கேட்டுப் பார்த்து விட்டேன். ஆனால் இத்திரைப்படத்துடன் ஒப்பிட்டால் பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதைக்கு ஏதாவது சர்வதேச விருதை வழங்கி விடுவார்களோ எனும் பயம் உருவாகி இருக்கிறது.

kcom 1அவதார் எனும் படத்தில் நீலப்பூச்சு பூசி நடித்த நடிகையான Zoe Saldana இப்படத்தில் நீலப்பூச்சின்றி கத்தலியாக வேடமேற்றிருக்கிறார். Cattleya எனும் ஆர்க்கிடு வகையின் பெயரை தழுவி கத்தலியாவின் பெயர் உருவாக்கப்பட்டதாம். தன் பழிவாங்கும் ஆட்டத்தில் கத்தலியா மேற்குறித்த ஆர்க்கிட்டினை ஒரு அடையாளமாக வரைவாராம் அல்லது விட்டுச் செல்வாராம். நடிகை ஸோவே சல்டானாவிற்கு அதிரடியான இந்த ஒப்பந்தக் கொலைகாரி பாத்திரம் பொருந்தவேயில்லை. அவர் அடிதடிகளில் இறங்கும்போது இரக்கம்தான் வருகிறது. குளியல் காட்சியில் அவர் கரங்களிற்கு சோப்பு போடுவதை தெளிவாக காட்டுகிறார்கள். ஆனால் அவர் மார்புகள் சிறிதானவை என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள அவர் அனுமதித்திருக்கிறார். சிக்காகோவில் இருக்கும் கத்தலியாவின் மாமாவாக வரும் நடிகர் Cliff Curtis க்கு ராபர்ட் டிநீரோ போல நடிக்க வேண்டும் எனும் விபரீத ஆசை ஏற்பட அந்த ஆசையை இத்திரைப்படத்தில் நிறைவேற்றியிருக்கிறார். வேதனையான முகபாவம் காட்டும் ராபார்ட் டிநீரோவின் முகத்தில் முட்டைத்தோசை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது க்ளிஃப் கர்ட்டிஸின் நடிப்பு.

சரி படத்தில் புதிதாக ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தால், கொலம்பியப் பவேலாக்களின் கூரை உச்சிகள் வழியே நடக்கும் துரத்தலில் Yamakasi, அமெரிக்கா வரும் கத்தலியா தான் ஒரு கொலைகாரியாக வேண்டும் என தன் மாமாவிடம் கேட்கையில் Léon, உறவுகளை விலத்தி தனியே வாழும் ஒப்பந்தக் கொலைகாரி ஒருத்தியின் வாழ்க்கை முறை, உளவியல்! அவளின் விசித்திரமான காதல்!!! போன்றவற்றில் Nikita என லுக் பெசனின் பழைய படைப்புக்களின் நிழல்கள் கொலம்பியான திரைப்படத்தில் நிழல் நடனம் புரிகின்றன. இப்படி ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தக் கொலைகாரியை லுக் பெசனால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்கு அவளின் அந்த விசித்திரமான காதலே சான்று. லுக் பெசன் படித்த கடைசி க்ரைம் நாவல் பாங்காக்கில் தமிழ்வாணானாக இருக்குமோ எனும் சந்தேகம் எழாமல் இருக்க முடியுமா என்ன.

ஹாலிவூட் மகாராஜாக்கள் வழங்கும் அதிரடி ஆக்‌ஷன்களைப்போல் தன் படைப்புக்கள் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக முயலும் லுக் பெசன் இப்படத்திற்கு எழுதியிருக்கும் வசனங்கள் அமெச்சூர் நாடக வசனங்கள் போலிருக்கின்றன. ஆனால் லுக் பெசன் ஓய மாட்டார். உலகெங்கிலும் சூப்பர் ஹிட்டாகும் ஒரு அதிரடி ஆக்‌ஷனை தரும் வரையில் அவர் கற்பனை நதி நிற்கப்போவதில்லை, அந்த வேட்கை அவரை தன் கைக்குள் வைத்து விபரீத விளையாட்டு காட்டியபடியே இருக்கும். நான்தான் அவதானமாகவும் ஜாக்ரதையாகவும் இருக்க வேண்டும். வவ்வாலான் மட்டும் லுக் பெசனை கடத்திச் சென்று கண்காணா இடத்தில் மறைத்து வைத்தால் அவரிற்கு மேட் இன் சைனா ஹிட் சூட் ஒன்றை நான் வாங்கிப் பரிசளிப்பேன். வஞ்சம் அழகானது என்பதால் நான் கண்ணை மூடிக் கொண்டு இருக்க இயலுமா. வேட்டைக்காரன், வேங்கை வகையான திரைப்படங்களை எள்ளி நகையாடும் முன் கொஞ்சம் கொலம்பியானா பாருங்கள் ராஜாக்களே.

பி.கு: பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு ஸ்கேன், வவ்வாலன் பெயர் போன்றவற்றின் உபயோகத்திற்கு கோளிக் காமிக்ஸ் எடிட்டரு கொக்ராஜிடம் நான் அனுமதி பெறவில்லை அவர் செய்வதை செய்து கொள்ளட்டும்.

ட்ரெய்லருங்கோ

7 comments:

 1. படம் பற்றிய விமர்சனத்தை விட, பழைய பழிவாங்கும் திரைப்படங்கள் பற்றிய கிண்டலான கருத்துக்கள் ரசிக்க வைக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அடடே . .என்ன கொடுமை இது. அடிபட்ட உமது மனத்திற்கு ஆறுதல், 'அப்சலூட்' போத்தலில்தான் உள்ளது என்று என் கனவில் வந்த ஓல்ட் மாங் ஒருவர் சொல்லினார்.

  ReplyDelete
 3. உங்களது நொந்த உள்ளம் துள்ளி எழ, கவ்பாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ் படத்தைப் பரிந்துரைக்கிறேன். அதுபோன்றதொரு துடிப்பான படம், கடைசியாக நான் பார்த்தது, குருவி படந்தான். எனவே, அதையும் பார்த்துவிட்டு, விமரிசனம் எழுதவும்

  ReplyDelete
 4. அப்படியே, குலேபகாவலிக்கு உங்களது பங்களிப்பு தேவைப்படுகிறது. அங்கே வாரும். எழுதித் தாரும்

  ReplyDelete
 5. மணியடி முதலாளி, வடை மட்டுமல்ல போன வாரம் செய்த கெட்டி சட்னியும் உங்களிற்கே.. :)

  பவர் ஸ்டார், அட நீங்க மாட்டாமலா இருக்கப் போறீங்க, இதெல்லாம் ஒரு வட்டமா நடக்குது ஆமா :)

  இந்திரா, தங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றிகள். ஆனால் அது கிண்டல் அல்ல நிஜமாக நடந்தது :)

  நண்பர் கருந்தேள், வீட்டில் கடுமையான மது விலக்கு சட்டம் அமுலில் உள்ளபோது இவ்வகையான பெயர்களை சொல்லி என்னை சோதிக்கலாமா, கவ்பாய் படத்திற்கு அப்சலூட் அடித்து விட்டு சென்றால் ஜாலியாக இருக்கும், அப்சலூட் அடித்து விட்டே பதிவையும் எழுதலாம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete