Sunday, July 10, 2011

அரியணை ஆட்டம்


மாயப்புனைவு ஒன்றினது ஆரம்ப பக்கங்கள் அதனைப் படிக்க ஆரம்பிக்கும் வாசகன் மனதை விளைச்சலிற்கு தயாராகவுள்ள உள்ள ஒரு நன்னிலம் போல் அரவணைத்துக் கொள்ளல் வேண்டும். வாசகன் மனதில் அந்த ஆரம்ப பக்கங்கள் விதைக்கும் எதிர்பார்ப்புகளே அவனை ஆர்வத்துடன் தொடரும் பக்கங்களை நகர்த்திட பெரிதும் உதவுகின்றன. பரந்த ஒரு வாசகப் பரப்பை கொண்டிருக்கும் மாயப்புனைவுவானது தன்னை ஏனைய மாயப்புனைவுகளில் இருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், அந்த வேற்றுமைகளை வாசகனிடம் சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டிய தன்மையை கொண்டதாகவும் இருத்தல் அதன் வெற்றிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். George R.R. Martin படைத்திருக்கும் A Song of Ice and Fire நாவல் தொடரின் முதல் புத்தகமான A Game of Thrones மாயப்புனைவொன்றின் பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

ஏழு ராஜ்யங்களின் மன்னனாக முடி சூடிக்கொண்ட ராபார்ட் பராத்தியோன் அகால மரணமடைந்துவிட, அவன் அரியணையை கைப்பற்றி அதிகாரத்தை தம் வசப்படுத்திக் கொள்ள பிரபுக் குடும்பங்களினிடையே நடக்கும் போட்டியே இம்முதல் பாகத்தின் பிரதான அம்சமாகும். ஆனால் அப்போட்டியானது மன்னன் ராபார்ட்டின் மரணத்தின் முன்பே ஆரம்பமாகி இருக்கிறது.

பனிக்காலமோ, வசந்த காலமோ எல்லைகள் இன்றி நீண்டு செல்லக்கூடிய ராஜ்யமொன்றின் வடக்குப் பகுதியில் பனிக்கட்டியாலான எல்லைச்சுவரிற்கு அப்பால் இருக்கும் அடர் வனமொன்றில் ஆரம்பிக்கும் கதை, அவ்வனத்தில் நிகழும் அசம்பாவிதங்கள் மூலமாக வாசகன் மனதில் மாயத்தின் மர்மத்தை மெல்லிய இழையொன்றால் முடிச்சாக்கி விடுகிறது. வழமையான மாயப்புனைவுகளில் காணக்கிடைப்பது போல் விந்தை மனிதர்களும், அதிசய சக்திகளும், வினோத சிருஷ்டிகளும் பக்கத்திற்கு பக்கம் ஜார்ஜ் மார்ட்டினின் கதையில் காணக்கிடைப்பதில்லை. ஆனால் மாயமும் மந்திரமும் உண்டு என்பதை வாசகன் மனதில் ஒரு சந்தேகமாக ஊன்றி விட்டு, யதார்தமாக கதையை நகர்த்த ஆரம்பித்து விடுகிறார் கதாசிரியர் மார்ட்டின்.

பிரபுக்களின் குடும்பங்கள் வழியாக நாவலில் கதையை நகர்த்தி செல்கிறார் மார்ட்டின். பாத்திரங்களின் பெயர்களே அத்தியாயங்களின் தலைப்பாக இடம்பிடித்துக் கொள்ள ஏழு ராஜயங்களின் ஆரம்ப வரலாற்றையும், அதன் ஆதிகுடிகளான வனக்குழந்தைகள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதையும், வனக்குழந்தைகளின் அழிப்பின் பின்பாக ஏழு ராஜ்ஜயங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ராஜ குடும்பமான டார்காரெயன்களினது அழிப்பையும், ஏழு ராஜ்யங்களின் தற்கால மன்னனான ராபார்ட் பராத்தியோன் எவ்வாறு இறுதி டார்காரெயன்களை வெற்றி கொண்டு அரியணையைக் கைப்பற்றினான் என்பதனையும் தொய்வுகள் ஏதுமின்றி விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார் மார்ட்டின்.

வழமையாக மாயப்புனைவில் காணப்படாத குரூரமும், ரத்தமும், காமமும், அதிகாரத்திற்கான வெறியும் வெகு இயல்பாக கதையின் வரிகளில் குடியேறி வாசகன் ஆர்வத்துடன் பக்கத்தை திருப்ப செய்து விடுகிறது. வார்த்தைகளையும், வரிகளையும் கண்டிப்பான முறையில் கதையிலிருந்து விலகாதவாறு எழுதுவதில் மார்ட்டின் அபார வெற்றி விடுகிறார். மிக முக்கிய நாயகர்களாக அறிமுகமாபவர்களிற்கு அவர் வழங்கும் முடிவுகள் வாசகர்களிற்கு அதிர்ச்சியை எதிர்பாராச் சுவையாக வழங்குமெனில் அவையே அடுத்து நடக்கப்போவது என்ன எனும் ஆர்வத்தனலையும் அவர்கள் மனதில் உப்பி ஊதி விடுகின்றவையாக அமைகின்றன.

A_Game_of_Thrones_Genesis_Art01

கதையின் முதல் பாகத்தில் பலபாத்திரங்கள் அறிமுகமானலும் என் மனதைக் கவர்ந்த சில பாத்திரங்கள் குறித்து சில வரிகளை எழுதி விடுகிறேன். கதை ஆரம்பிக்கும் வடக்கு ராஜயத்தின் ஆண்டகையான ஸ்டாக் பிரபுவிற்கு திருமண பந்தம் இன்றி பிறந்த பையான ஜொன் ஸ்னோ, கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே என் மனதைக் கவர்ந்து விட்டான். திருமண பந்தமின்றி பிறக்கும் குழந்தைகளிற்கு குடும்ப பெயரிற்கு பதிலாக ஸ்னோ [ Snow ] எனும் பெயர் பொதுவான ஒரு பெயராக வடக்கு பகுதி ராஜ்யத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. தன் தந்தையின் அருகில் வாழ்ந்தாலும் கூட தான் முழு உரிமைகளும் அற்ற ஒருவன் என உணர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் ஜொன் ஸ்னோ பாத்திரம் மனதில் இலகுவாக பதிந்து விடுகிறது. அதேபோல் கதையில் இடம்பிடிக்கும் அமானுடங்களை எதிர் கொண்டு வெல்லும் முதல் பாத்திரமாக ஸ்னோ சித்தரிக்கப்படுகிறான். கதையில் மாயத்தின் மந்திரத்தின் பங்கு சிறிதுதான் ஆனால் அவை பிரசன்னமாகும் தருணங்கள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மன்னன் ராபார்ட்டின் அகால மரணத்தின் பின்பாக நிகழும் அரியணைக்கான போட்டியில் நிகழும் யுத்தங்களில் கலந்து கொள்வதை தெரிவு செய்யாது பனியாலான நீண்ட எல்லைச் சுவரின் பின்பாக காத்திருக்கும் அடர்ந்த ஒரு குளிர்காலத்தையும் அது தன்னுடன் எடுத்து வரக்கூடிய அபாயங்களையும் அமானுடங்களையும் எதிர்த்துப் போராட தயாராகி நிற்கும் ஸ்னோ கதையின் சிறப்பான பாத்திரங்களில் ஒருவன் ஆவான்.

டார்காரெயன்கள் ராஜ வம்சத்தின் இறுதி இளவரசியாக அறிமுகமாகும் டேனி [Daenerys] , தன் சகோதரனுடன் ஒடுங்கிய கடல் தாண்டிய பென்டோஸ் எனும் தேசத்தில் வாழ்ந்து வருபவள். தான் மூதாதையர் இழந்த ஏழு ராஜ்ஜயங்களையும் மீண்டும் வென்று மன்னனாக முடிசூட வேண்டும் என்பது டேனியின் சகோதரனான விசெரிஸில் ஒரு வெறியாகவே வளர்ந்து வருகிறது. பதின்மூன்று வயதான தன் தங்கையை குதிரைப் பிரபு ஒருவனிற்கு மணம்முடித்து வைத்து குதிரைப்பிரபுவின் வீரர்களையும் உதவியையும் பெற்று ஏழு ராஜ்யங்களை கடல் கடந்து சென்று வென்றிடும் வெறியோடு அலையும் இறுதி ட்ராகன் என தன்னைக் கூறிக் கொள்ளும் விசெரிஸ், அதற்காக தன் தங்கையை குதிரைப் பிரபுவோடும், அவன் வீரர்களோடும், அவ்வீரர்களின் குதிரைகளோடும் புணர வைக்க சிறிதும் தயங்காதவன். ஆனால் குதிரைப் பிரபுவை திருமணம் செய்து கொள்ளும் டேனி மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள். திருமணப் பரிசாக அவளிற்கு வழங்கப்பட்ட மூன்று ட்ராகன் முட்டைகள் தம்மில் ஒரு ரகசிய மர்மத்தை வசீகர வண்ணமாக பொதித்து வைத்திருக்கின்றன. டேனி எதிர்பார்த்த எல்லாம் அவளிற்கு கிடைக்கிறதா என்பதை விட டேனி எவ்விதமான ஒரு ஆளுமையாக மாற்றம் கொள்கிறாள் என்பதுதான் இப்பாகத்தின் உச்சபட்ச ஆச்சர்யம். குதிரை பிரபுக்களை தொடரும் ஜனங்களின் வினோத பண்பாடுகள், பென்டோஸ் தேசத்தின் பல இன மக்களின் ஆச்சர்யமான வழக்கங்கள், கறுப்பு மந்திரம், காமம், ரத்தம் என அட்டகாசமாக செல்லும் இப்பகுதி கதையில் தனியாகவே கூறிச்செல்லப்பட்டாலும் நாவலின் அனைத்துப் பகுதிகளையும் அடித்துப் போட்டு விடும் சுவையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையில் ட்ராகன்கள் இருக்கிறதா என என் நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார், படு அட்டகாசமான, நாவலின் இறுதி அத்தியாயத்தில் அதற்கு விடை இருக்கிறது என்பதுதான் அவரிற்கு என் பதில். இந்நாவலின் மிகச்சிறப்பான பாத்திரமாக டேனி உருப்பெற்று நிற்பதும் அந்த இறுதி அத்தியாயத்தில்தான்.

iron-throneமன்னன் ராபார்டின் மனைவி செர்ஸி, லேனிஸ்டர் எனும் பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவள். லேனிஸ்டர் குடும்பம் கதையில் வீரமும், சதிக்குணமும் கொண்ட ஒரு குடும்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. செர்ஸியுடன் கூடப் பிறந்த சகோதரன்களில் ஒருவன் குள்ளன். அவன் பெயர் தியோன். குள்ளனாக இருப்பதால் தன் தந்தையால் ஒதுக்கப்படும் தியோன் கதை நெடுகிலும் வாசகன் மனதில் உயர்ந்தவனாகிக் கொண்டே செல்வான். ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்துக் கொள்ளும் அவன், தனக்குரிய அங்கீகாரத்தை ஒதுக்கபட்ட இனத்தின் வழியாகவே வென்றெடுப்பான். நகைச்சுவையும், யதார்த்தமும், மனதை தொடும் உணர்வுகளுமாக இப்பாத்திரம் அருமையான ஒன்றாக கதையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் மார்டினின் எழுத்துக்கள் சற்று அவதானத்தை வேண்டும் வகையை சார்ந்தது. அவரின் வரிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தங்களையும் உணர்ந்து படிக்கையில் கதையைப் படித்தல் ஒரு சுகமான அனுபவமாக மாறி புத்தகத்தை பிரியமான ஒன்றாக மாற்றியடிக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே மான் கொம்புகள் வயிற்றில் புதைந்து உடைந்த நிலையில் இறந்து கிடக்கும் பனி ஓநாய் ஒன்றினதும் அதன் பரிதவிக்கும் குருளைகளையும் வைத்தே கதை எப்படி நகரும் என்பதை காட்டியிருப்பார் மார்ட்டின் [ ஓநாய் மற்றும் மான் ஆகியவை கதையில் இடம் பிடிக்கும் இரு பிரதான குடும்பங்களின் இலச்சினைகள் ஆகும் ]. யார் நல்லவர், யார் கெட்டவர் எனும் எண்ணங்களிற்கே இடம் தராத வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியின் முன்பாக எந்த மனிதனும் ஞானியல்ல என்பதை தெளிவாக்குகிறார் மார்டின். ஓற்றர்கள், தளபதிகள், யுத்தங்கள், யுத்த தந்திரங்கள், விலை மாதர்கள், சதிகள், எதிர்பாரா திருப்பங்கள், அமானுடங்கள், வேறுபட்ட கடவுள் நம்பிக்கைகள் என வாசகனை முழுமையாக திருப்திபடுத்தும் இந்நாவல் மாயபுனைவுகளை விரும்பும் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒன்று என்பேன். [****]

மார்டினை படித்து முடித்ததும் அவர் தொடர் நாவலின் இரண்டாம் பாகத்தை படிக்க மனம் விரும்பினாலும் மாயப்புனைவை படிக்காது வேறொன்றை படிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு வந்திருந்தேன். ஸ்டீபன் கிங்கை நான் தற்போது படிப்பது இல்லை. அவரின் சில நாவல்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் அவர் தற்போது எழுதும் நாவல்கள் என் ரசனையை தாண்டியுள்ளவையாக இருக்கின்றன என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்திருந்தேன். ஆனால் இன்றும் அவர் நாவல்கள் பெஸ்ட் செல்லர்களாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் எழுத்தை ரசிப்பதற்கென நிரந்தரமாக ஒரு மாபெரும் ரசிகர் படையே உள்ளது போலும். நண்பர் ஒருவர் கிங்கின் Bag of Bones படித்துக் கொண்டிருக்கிறேன் அதன் ஆரம்ப பக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என அந்நாவலை எனக்கு பரிந்துரைத்தார். நல்ல நாவல் என ஒன்றை ஒருவர் பரிந்துரைக்கையில் அதனை முயற்சி செய்து பார்ப்பது எனக்கு பிடித்தமான காரியங்களில் ஒன்றாக எப்போதும் இருக்கிறது. எனவே அந்நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

9780340951422Bag of Bones நாவலின் கதை, தன் மனைவியை பறிகொடுத்த ஒரு கதாசிரியனின் உணர்வுகளை அதன் ஆரம்ப பக்கங்களில் விரிக்கிறது. தன் மனைவியின் மரணத்தின் பின்பாக அவள் தன்னிடம் கூறாது மறைத்திருந்த ஒரு விடயம் கதாசிரியன் மைக் நூனான் மனதை சந்தேகத்தால் அரித்தாலும் தன் மனைவியைப் பிரிந்த ஏக்கமும், அவள் மீதான அவன் அன்பும் அப்பக்கங்களில் சிறப்பாக கூறப்படுகின்றன. இந்நிலையில் கதாசிரியனான மைக் நூனானிற்கு கற்பனை தடை உருவாகி அவனால் புதிய படைப்புக்களை உருவாக்க முடியாத சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ஓய்வை நாடும் மைக், தான் வாழும் நகரத்தை விட்டு தன் விடுமுறைக்கால வாசஸ்தலமான Sara Laughs எனும் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவ்வீட்டில் அவன் தனியாளாக இல்லை என்பதை நிரூபிக்கும் சில சம்பவங்கள் நிகழ்ந்தேறி விடுகின்றன.

இந்த முதல் திருப்பத்திற்கு வருவதற்கே வாசகன் ஏறக்குறைய 170 பக்கங்களை தாண்டி வர வேண்டியிருக்கிறது, அதன் பின்கூட வேகமாக சில தருணங்களிலேயே கதை நகர்கிறது என்பது வேதனையானதே. மனதை தொடும் சில பக்கங்கள் இருந்தாலும், குழந்தை ஒன்றின் மீதான ஏக்கத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் அருமையான சில தருணங்கள் இருந்தாலும், சாரா லாஃப்ஸ் எனும் அவ்வீட்டில் இருக்கும் மர்மங்கள் விடயத்திலும் திகிலிலும், அதற்கான காரணங்களிலும் சலிக்க வைத்து விடுகிறார் ஸ்டீபன் கிங். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி எம்மை அழைத்து செல்லும் ஒருவர் ஒரு மோசமான சிட்டை எமக்கு அறிமுகப்படுத்தும் போது உருவாகும் அந்த உணர்வு ஸ்டீபன் கிங்கின் பாக் ஆஃப் போன்ஸின் இறுதிப் பக்கங்களில் உத்தரவாதமாக கிடைக்கிறது. இக்கதையை படித்ததால் ஏற்பட்ட ஒரு நன்மை என்னவெனில் ஸ்டீபன் கிங் எனும் பிரபல எழுத்தாளரின் படைப்புக்களை இனி நான் படிக்கவே போவதில்லை எனும் உறுதியான தீர்மானம்தான். [*]

11 comments:

  1. காதலரே Game of Thrones தற்போது சீரியலாக வந்துகொண்டிருக்கிறதே..

    ReplyDelete
  2. >>இக்கதையை படித்ததால் ஏற்பட்ட ஒரு நன்மை என்னவெனில் ஸ்டீபன் கிங் எனும் பிரபல எழுத்தாளரின் படைப்புக்களை இனி நான் படிக்கவே போவதில்லை எனும் உறுதியான தீர்மானம்தான்.

    It is unfortunate that your first intro to Stephen King was this boring novel.

    I would like to suggest reading his earlier novels which I have read and enjoyed many times over and over again. It you get a chance, please read the following novels and let me know if you still feel the same way:
    1. Salem's Lot (highly recommended)
    2. Pet Sematary (highly recommended)
    3. Night Shift
    4. Skeleton Crew
    5. The shining
    6. Firestarter
    7. It
    8. The talisman

    There is a reason why SK is beloved by millions of fans, and the above books are the reasons. Of late he is more inclined to write pillow sized boring books but his earlier books were nothing short of fantastic.

    ReplyDelete
  3. Among Stephen King's more recent books, I liked the short story collection "Everything's Eventual". In particular the short story "1408" was awesome, and the movie that they made out of it with John Cusack was terrific.

    ReplyDelete
  4. // அவரின் எழுத்தை ரசிப்பதற்கென நிரந்தரமாக ஒரு மாபெரும் ரசிகர் படையே உள்ளது போலும்.//

    எந்த எழுத்தாளனுக்கு முட்டாள்தனமாக கொடி பிடிக்கும் ரசிகர்கள் உண்டு. இவருக்கு சற்றே அதிகம்.

    bag of bones கதையின் ஆரம்ப பக்கங்களில் ஒரு எழுத்தாளனது வாழ்க்கை, மனைவியை இழந்த சோகம், அன்பு, இயலாமை, வேட்கை, கழிவிரக்கம் போன்றவை சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டதை கண்டே கதை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், போக போக கதை நொண்டி அடிக்க ஆரம்பித்து விட்டது. கடைசி இருநூறு பக்கங்கள்... உஹூம், nothing new.

    மேலும்,மிக அருமையாக வந்திருக்க வேண்டிய கதை சற்றே வலிமை குறைத்து படைக்கப் பட்டது போன்ற ஒரு எண்ணம்.ஒரு ஃபீல் குட் கதையாக தர வேண்டும் என்று மெனக்கெட்ட மாதிரி ஒரு தோற்றம். அல்லது எப்படி முடிப்பது என்று தெரியாமல் போனதாலும் இருக்கலாம். நாவலில் நல்ல தருணங்கள் நிறைய உண்டு. இந்த புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது எழுத்து நடை தான்.குறிப்பாக முதல் இருநூறு பக்கங்கள். கிங் எழுதும் first person narratives நடையில் நன்றாக இருப்பதாக எனக்கு தெரிகிறது.

    ReplyDelete
  5. நானு நாளை வருவேன். இப்ப போறேன் :-)

    ReplyDelete
  6. Hi,

    Thanks for the review. I was bit hesitating to buy and read this series of novels, due to the size. Your review removed my hesitation.

    I hope you will like Windhaven written by George Martin and Lisa Tuttle too....
    It was not as famous as this one. But somehow I liked it very much. Though I read that novel around 12 years ago, still i have the imprint.
    Regards,
    Mahesh

    ReplyDelete
  7. நண்பர் லக்கி லிமட், ஆம் தற்போது இக்கதை தொலைக்காட்சி தொடராக உருவாக்கப்பட்டிருக்கிறது, வருகைக்கும் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஆனந்த், :)க்கு நன்றி :)

    நண்பர் BN USA, கிங் எழுதியவைகளில் சிமெட்ரியும், சலேமும், க்றிஸ்டினும் எனக்கு பிடித்தமானவை. நீங்கள் வழங்கியிருக்கும் பட்டியலிற்கு நன்றி ஆனால் கிங் போதும் என்றாகி விட்டது :) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, மொக்கை கதை என்று சுருக்கமாக எழுத மாட்டீர்களா என்ன :) தங்கள் விரிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், நீங்க எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் கதவுகள் திறந்தே இருக்கும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் மகேஷ்குமார், இந்நாவல் வரிசையின் முதல் பாகத்தை மட்டும் வாங்கிப் படித்துப் பாருங்கள் அதன்பின் முழு நாவல்களையும் படித்து விட அதுவே காரணமாக அமையும். மார்டினின் ஏனைய படைப்புக்களையும் நேர வசதிப்படி படித்துப் பார்க்கும் எண்ணம் உண்டு :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  8. http://www.paristamil.com/index
    http://www.paristamil.com/fm

    ReplyDelete