Saturday, January 8, 2011

இகார் ஓசன் பாரன்ஹைட் 451

கிரேக்க புராணக் கதைகளில் இகாரஸ் என்பவன் தன் தந்தை உருவாக்கிய சிறகு போன்ற அமைப்புக்களை தன் முதுகின் மீது பொருத்திக் கொண்டு கிரெட்டின் அரச மாளிகையிலிருந்து தப்பி வானில் உயரப் பறக்கையில், சூரியனின் வெப்பத்தால், அந்த சிறகு போன்ற அமைப்புக்களில் இருந்த மெழுகு உருகியதால் தொடர்ந்து பறக்க முடியாது கடலில் வீழ்ந்தவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் கதாசிரியர் மற்றும் ஓவியரான Moebius – ப்ளுபெர்ரி புகழ் ஜான் ஜிரோ- அவர்கள் உருவாக்கியிருக்கும் கதையின் நாயகனான இகாரோ பறக்கும் சக்தியை பிறக்கும்போதே ஒரு இயல்பாக தன்னுள் கொண்டிருக்கும் ஒருவனாக உருவாக்கப்பட்டிருக்கிறான்.

மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு பிறக்கும் ஆண் சிசுவானது காற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. இந்த தகவலை அறியும் ஜப்பானிய ராணுவ அதிகாரம் அச்சிசுவை தன் பாதுகாப்பிற்குள் எடுத்துக் கொள்கிறது. வெளியுலகம் என்னவென்று தெரியாது கூண்டுப் பறவை போல் வளர்க்கப்படும் இகார் எனும் அந்த குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். அவன் பறக்கும் சக்தி குறித்து எண்ணற்ற ஆய்வுகளை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பெண் ஒருத்தி மீது காதல் வயப்படுகிறான் இகார். இது அவனை சுதந்திரத்தையும், விடுதலையையும் நோக்கி பறக்கச் செய்கிறது. ராணுவக் கட்டுப்பாடுகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி இகார் தன் காதலில் வெற்றி கண்டானா, சுதந்திரமாக வானில் பறந்தானா என்பதை நீண்ட கதை விபரிக்கிறது.

ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி ஆரம்பமாகும் கதை பின் தன் சுவையையும், சுவாரஸ்யத்தையும் இழக்கிறது. ஜப்பானிய அதிகாரத்திற்கு எதிராக செயற்படும் புரட்சிக் குழுக்கள், இவ்வகையான குழுக்களை அடக்குவதற்கான நிகரற்ற ஆயுதமாக உருவாக்கப்படும் இகார், Sadomaso சிருங்காரம், இரு உள்ளங்களிற்கிடையில் மெல்ல மலரும் காதல் என மிகவும் சுவாரஸ்யமாகவும், சூடாகவும் சென்றிருக்க வேண்டிய கதை, விஞ்ஞான ஆய்வுகளிலும், இகாரின் கவிதை போன்ற பறத்தல்களிலும், சலிப்பை தரும் கதை நகர்விலும் தன்னை தொலைத்து விடுகிறது.


ic1 ic2 மாபியஸ் அவர்கள் உருவாக்கிய கதை, ஜப்பானிய ஆசிரியர் குழுவால் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, புத்தகத்தின் அட்டையில் அவரின் பெயரும், ராயல்டியில் பங்கும் அவரிற்கு உண்டு என்பதால் கதை சுமாரிற்கும் கீழாக உள்ளது என்பதற்கும் அவரே பொறுப்பு ஆகிறார். ஜப்பானிய மங்கா வார சஞ்சிகை ஒன்றில் இக்கதை தொடராக வெளியான போது வாசகர்களின் ஆதரவு இத்தொடரிற்கு கிடைக்காததால் கதை முழுமை பெறாமலேயே நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பை நாவலில் வாசகன் உணர முடியும். விருந்து சுமார்தான் எனினும் அதனையும் பாதியில் முறித்தால் என்ன உணர்வு வருமோ அதே உணர்வு கதையின் முடிவிலும் வருகிறது. இதற்குப் போய் இவ்வளவு பெரும் கூச்சலா எனும் கேள்வி மனதில் இறக்கை கட்டி பறக்கிறது.

இந்த மங்காவிற்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல மங்கா கலைஞர் Jiro Taniguchi. அற்புதமாக வரைந்து தள்ளியிருக்கிறார். பறத்தல் காட்சிகள், சிருங்காரக் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என எதிலும் குறை வைக்கவிலை டேனிகுச்சி. சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. மென்மையான உள்ளம் கொண்ட வாசக அன்பர்களிற்காக அப்பக்கங்களை இங்கு தரமால் விட்டிருக்கிறேன். இது என் கடமை. என்னை நீங்கள் பாராட்டக்கூடாது. ஆங்கில மொழியில் Icaro எனும் தலைப்பில் இச்சித்திர நாவல் வெளியாகி இருக்கிறது.

மிக எளிதாக வாசகர்களால் மறந்து விடப்படக்கூடிய இக்கதை புத்தக வடிவில் வெளிவரக் காரணம் ஜிரோ டேனிகுச்சி இன்று பெற்றிருக்கும் பிரபலம் ஒன்றுதான். நல்ல சித்திரங்கள் இருந்தாலும் கதை எனும் முக்கிய அம்சம் இறகை ஒடித்து விட்டதில் நாவல் சப்பென்று இருக்கிறது. கிழக்கும் மேற்கும் இணைகிறது என நடாத்தப்பட்ட விளம்பரங்களும், காமிக்ஸ் துறையின் இரு ஜாம்பவான்கள் கை கோர்க்கிறார்கள் என்ற வியப்பும் தரையில் வீழ்ந்து கிடக்கும் இகாரை பறக்க வைக்கப்போவதேயில்லை. [ * ]

ocean_10 இகாரைப் போலவே Ocean ம் சுமாரான ஒரு கதைதான். இன்று அமெரிக்க காமிக்ஸ் உலகின் பிரபல காதாசிரியர்களில் ஒருவரான Warren Ellis ஆல் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்வெளிப் பயணங்கள் ரயில் பயணங்கள் போல் ஆகி விட்ட ஒரு எதிர்காலத்தில் இக்கதை கூறப்படுகிறது. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Chris Sprouse.

numérisation0003 ஜூபிடர் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Europa சமுத்திரப் பரப்பால் சூழப்பட்டிருக்கிறது. இச்சமுத்திரத்தினுள் ஆய்வுகளை நிகழ்த்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு அங்கு விசித்திரமான மிதக்கும் தாழிகளை கண்டுபிடிக்கிறது. தொடரும் ஆய்வுகள் தரும் முடிவுகள், ஐநா இன்ஸ்பெக்டர் நேதன் கேனை இயுரோப்பாவிற்கு இட்டுச்செல்கின்றன. பலம் பொருந்திய பல்தேசிய நிறுவனம் ஒன்றின் எதிர்ப்புக்களை முறியடித்து விசித்திரமான தாழிகளினுள் உறங்கியிருக்கும் மர்மத்தையும், அதன் மூலம் பூமிக்கு உருவாகவிருக்கும் அபாயத்தையும் நேதன் கேனும் ஐநா ஆய்வுக்குழுவினரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இக்கதை விபரிக்கிறது. கதையில் கூறப்படும் ஆரம்பகால விண்வெளிப் பிரயாணங்கள் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவையாக உள்ளன.

வில் ஸ்மித்தை நாயகனாக கொண்டு இக்கதையை ஹாலிவூட்டில் இயக்கினால்கூட அப்படம் கதையால் அல்ல அதில் இடம்பெறும் அதிரடி ஆக்சன் மூலமே ரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடும். சினிமாத்தனமான திருப்பங்களின் துணையுடன் பயணிக்கும் கதையின் இறுதிப்பகுதி விறுவிறுப்பை சிறிதளவில் வழங்கினாலும், அழிந்து போன உலகம், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்கள் கலாச்சாரம், அதன் நீட்சி என புதுமையற்ற கதைதான் நாவலை ஆக்கிரமிக்கிறது. அமெரிக்க காமிஸ்களிற்கேயுரிய சித்திரப்பாணியில் சித்திரங்கள் கதைக்கு துணையாக நிற்கின்றன. இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. [ * ]

Ray Bradbury என்றால் அறிவியல் புனைகதை ஆர்வலர்களிற்கு Fahrenheit 451 எனும் தலைப்பு நினைவுகளில் தீப்பிடிக்கும். நாவலாசிரியர் ரே ப்ராட்பரியின் ஒத்துழைப்புடன் அந்த நாவலை சித்திர நாவலாக மாற்றியிருக்கிறார் Tim Hamilton. இந்த வேள்வித்தீயின் விளைவு அற்புதமான ஒரு சித்திர நாவலாக மலர்ந்திருக்கிறது.

fce34b7aec478f00b3bcf1b71c470adc96a8b6cc புத்தகங்கள் படித்தலும், சிந்திப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகிவிட்ட எதிர்காலம். வீடுகள், கட்டிடங்கள் தீப்பிடிக்க இயலாதவைகளாக உருவாக்கப்படுகின்றன. எனவே தீயணைப்பு வீரர்கள் புத்தகங்களை கொளுத்துகிறார்கள். புத்தகங்களை வைத்திருப்பவர்களை, படிப்பவர்களை கைது செய்கிறார்கள். இந்த தீயணைப்பு படை!! வீரர்களில் ஒருவனே Guy Montag.

தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் ஒரு அமைதியான மாலை வேளையில் வினோதமான இளம் பெண்னான Clarisse McClellan ஐ சந்திக்கிறான் கய் மொண்டாக். கிளாரிசுடன் தொடரும் அவன் சந்திப்புக்கள் அவனை தன் வாழ்க்கை குறித்த கேள்விகளை உருவாக்க வைக்கின்றன. கேள்விகள் அவனை புத்தகங்களை நாட வைக்கின்றன. புத்தகங்கள் அவனை அதிகாரத்திற்கு எதிரானான ஒருவனாக மாற்றியமைக்கின்றன…

என்ன ஒரு கதை! என்னே ஒரு சித்திர நாவல்! இகாரினால் சோர்ந்து போயிருந்த என்னை உற்சாகமூட்டி எழுப்பியது டிம் ஹாமில்டனின் இந்த அற்புதமான படைப்பு. அசர வைக்கும் ஹாமில்டனின் ஒவியப்பாணி கதைக்கு மென்மேலும் இருளை சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. பிரகாசமான பக்கம் என்பது தீயானது புத்தகங்களை கபளீகரம் செய்யும் தருணத்தின்போதே காணக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. ஒளி நிறைந்த ஒரு எதிர்காலம் எனும் கனவை தன் சித்திரங்களில் கலந்திருக்கும் இருள்தன்மையால் இல்லாத ஒன்றாக்கி திகிலடிக்கிறார் டிம் ஹாமில்டன்.

f451 ஹாமில்டன், தற்காலத்திற்கேற்ப மூலக்கதையில் சிறிது மாற்றங்களை செய்திருப்பார் என்றே நம்புகிறேன் [ நான் நாவலைப் படிக்கவில்லை]. நாவலில் முன் வைக்கப்பட்டிருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த பார்வைகள் ஆச்சர்யப்பட வைப்பவை. இச்சித்திர நாவலை படித்து முடித்தவுடன், தான் படிக்கும் புத்தகங்கள் மோசமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை தீயிலிட்டுக் கொளுத்தி மகிழும் என் நண்பரிற்கு நான் ஒரு மடலை அனுப்பினேன். உங்கள் அகத்தில் ரே ப்ராட்பரியின் கற்பனைகளின் ஒரு கூறு மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என!

எதிர்காலம் குறித்த ஒரு அச்சமான தரிசனத்தை வாசகன் மனதில் தீ போல் பரவச்செய்து கனவுகளினதும், கற்பனைகளினதும், எதார்த்தங்களினதும் அரூப வெளிகளில் அவன் முன்வைக்ககூடிய எண்ணற்ற புதிர் வினாக்களை விருட்சமொன்றின் உதிரும் இலைகள்போல் அவன் மனவெளியில் நிரப்புகிறது கதை. எதிர்வரும் நாட்களில் புத்தகங்களை எரிக்க தீயணைப்பு படை தேவையில்லை மக்களே விரும்பி புத்தகங்களை விட்டு விலகி வந்துவிடுவார்கள் எனக்கூறப்படும் கருத்து அதிரவைப்பது. மிகையான கேளிக்கை கொண்டாட்டங்களாக இருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் காட்சி ஊடகங்களும் மனிதர்களை சிந்திக்கவிடாதும், கேள்விகளை எழுப்ப விடாதும் செய்துவிடுகின்றன எனும் பார்வை அன்றே முன்வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைத்தது. சித்திர நாவலின் கதை சொல்லலிலும், உரையாடல்களிலும் டிம் ஹாமில்டன் பின்னி எடுத்திருக்கிறார். திகில்தன்மையை இறுதிப்பக்கம் வரை அவர் சிறப்பாக எடுத்து செல்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் இச்சித்திர நாவல் காமிக்ஸ் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து. மழை அடித்து பெய்யும் தருணம் ஒன்றில் கிளாரிசை சந்திப்பான் மொண்டாக், கிளாரிஸ் உளவியல் மருத்துவரைக் காணச் சென்று கொண்டிருப்பாள், மழையின் துளிகள் தனக்கு திராட்சை மதுவைப்போல சுவை தருகின்றன நீ எப்போதேனும் மழைத்துளிகளை சுவைக்க முயன்று பார்த்திருக்கிறாயா என வினவும் கிளாரிஸை கடிந்து கொள்ளும் மொண்டாக், அவள் தன்னை விட்டு விலகியபின் மழையினூடு நடந்து செல்வான், சித்திரப்பக்கத்தை க்ளிக்கி அத்தருணத்தை ரசியுங்கள்.

[ **** ]

16 comments:

  1. // சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. மென்மையான உள்ளம் கொண்ட வாசக அன்பர்களிற்காக அப்பக்கங்களை இங்கு தரமால் விட்டிருக்கிறேன். இது என் கடமை. //

    உங்கள் கடமை உணர்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது காதலரே :)
    .

    ReplyDelete
  2. // இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. [ * ] //

    ஏன் இந்த கோபம் காதலரே !!!????
    .

    ReplyDelete
  3. // Fahrenheit 451 //

    வாவ் நான்கு ஸ்டார்கள்

    யாராவது டவுன்லோட் லிங்க் கொடுங்களேன் ;-)
    .

    ReplyDelete
  4. தல...
    தலைப்புல ஒரு கமா வாவது போடுங்க..ஒண்ணும் புரியல...

    ReplyDelete
  5. இன்னைக்கு சென்னை புத்தகக் கண்காட்சில பல காமிக்ஸ்களை பார்க்க நேர்ந்தது. சீக்கிரம் உங்களது ரேப் டிராகனை அதில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :))

    ReplyDelete
  6. நீங்கள் ரசித்து எழுதியிருக்கும் விதம் - நிஜமாகவே - படிக்கத் தூண்டுகிறது. நீங்கள் மூலக் கதையை படித்துள்ளீர்களா..அந்த impact இதில் கிடைக்கிறதா..

    ReplyDelete
  7. நண்பர் சிபி கேட்டது....seeds கம்மியாயிருந்தாலும்...டவுன்லோட் ஆகுது...அட்ஜஸ்ட் மாடி..
    http://thepiratebay.org/torrent/5184966/Fahrenheit_451

    ReplyDelete
  8. நண்பர் சிபி, என்னைப் புகழாதீர்கள் என் கடமையைத்தானே நான் செய்தேன். ஓசன் கதை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி என்னை ஏமாற்றியது அதுதான் சிறிதளவு கொலைவெறி :) லிங் வரமருளும் தேவர்கள் லிங்குகளை வழங்குவார்கள் என நம்புகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, சில நாட்களின் முன்பாக புத்தகங்களினால் ஒரு பயனுமில்லை எனும் உங்கள் பதிவின் வழியாக பிரான்சுவா த்ருபோ அவர்கள் இயக்கிய Fahrenheit 451 குறித்த உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து இருந்தீர்கள். நான் ப்ராட்பேரியின் நாவலைப் படிக்கவில்லை. ஆனால் டிம் ஹாமில்டன் அதை மிகவும் அற்புதமாக சித்திர நாவலாக்கி இருக்கிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் வேளையில் நாவலையும் படித்துவிடுவேன் தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  9. கொழந்த சொன்ன ஃபாரன்ஹீட் படத்தின் காமிக்ஸ்? நன்றாக இருக்கும்போலிருக்கே1

    ReplyDelete
  10. காதலரே,

    மூன்று பதிவுக்கு தேவையான விஷயங்களை ஒரே பதிவில் கதம்ப மாலையாக இட்டு விட்டீர்களே.... இகார் உங்களை மிகவும் தான் துன்புறுத்தி இருக்கிறது போல.

    வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் என்று அட்டகாசமாக விளம்பரம் செய்து ஆரம்பித்திருந்தார்கள்...கடைசியில் அது ஒரு குழப்பல் கூட்டணியாக ஆகி விட்டது போல. காதல், காமம், விந்தை என்பது ஜப்பானிய மங்காவிற்கு மிகவும் பொருந்தி போகலாம், ஆனால் அதை மேற்கு நில வாசிகள் தங்கள் கதைகளில் துணை கூறுகளாக தான் சேர்ப்பார்கள். மங்கா பாணி ஓவியம் அசத்தினாலும், கதையில் காரம் இல்லை என்பது சில பக்கங்களை பார்த்தவுடன் தோணிற்று. நீங்கள் சிருங்கார பக்கங்கள் என்று வர்ணித்தது உட்பட.

    நண்பர்களுக்கு தரவிறக்கம் செய்ய

    இரு புத்தகங்களாக வெளிவவந்தவைகளை பகுதி வாரியாக பிரித்து செலுத்தியிருக்கிறார்கள்.

    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

    வாரன் எல்லீஸ் பெரும்பாலும் ஸ்கை-பை வகை கதைகளை தான் முக்கியத்துவம் கொடுப்பார் போலும். தற்போது அமெரிக்காவில் சித்திரங்களை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிக வட்டம் உருவாகி விட்டது, அதை மையபடுத்தி தான் இந்த ஓசன் சித்திரகதையும் வெளியாகி இருக்கும் போல. பக்கங்களின் வண்ணத்திற்கு, கலைக்குமாவது படிக்க தூண்டுகின்றன.... முடித்து விடுகீறேன்.

    நண்பர்களுக்கு தரவிறக்கம் செய்ய

    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

    நீங்கள் அதிகம் மேற்கோள் காட்டிய சமீபத்திய நாவல்களில் பாரன்ஹீட் முதன்மை படும் என்பதில் ஐயமில்லை. ரசித்து பதிந்திருக்கிறீர்கள்... புத்தகங்களே இல்லாமல் போகும் அந்த வருங்கால பயங்கர நினைவை வித்தியாசமான பாணியில் காட்டியிருக்கிறார்கள் போல. சென்னை புத்தக கண்காட்சியில் பட்டியலிடபட்டிருக்கும் புத்தகங்களின் தரங்களை பார்க்கையில் அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

    நீங்கள் மேற்கோள் காட்டிய அந்த ஒரு பக்க ஓவியமே, கதையை முழுவதும படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டு விடுகிறது...சீக்கிரம் படித்து விட முயல்கிறேன்.

    நண்பர்களுக்கு தரவிறக்கம் செய்ய

    ReplyDelete
  11. Ocean கதை விறுவிறுப்பாக இருப்பது எவ்வளவு உண்மையோ,அவ்வளவு உண்மை அதில் சிறந்த கதை இல்லாததும்.
    ஒரு முறை படித்து விட்டு மறக்கக் கூடிய கதையே அது.அதில் இருக்கும் நல்ல விஷயம், பர பர வேகமும், ஆக்ஷனும் தான்.எல்லிஸ் பர பர கதையோட்டம் ஒன்றிற்காகவே பிரபலமாய் அறியப்படுபவர்.ஆனால்,இவரது planetary ஒரு மிகச் சிறந்த suspense action கதை.அதுவும் சூப்பர் பவர் கொண்ட ஒரு குழுவின் கதை என்றாலும்,அமெரிக்க மொக்கை காமிக்ஸ்கள் போலில்லாது,இதில் வெளிப்படும் நம்பகத்தன்மை தான் இதன் பலம்.

    இகார் பற்றி நீர் கூறியபோது தான் அதை பற்றி நான் தெரிந்து கொள்ளவே செய்தேன்.நல்ல முறையில் உணர்ச்சிகரமாக கொண்டு வந்திருக்க வேண்டிய கதை என்று தெரிகிறது.ஆனால்,தூரத்தின் காரணமாய்(both geographically and culturally) இதனை உருவாக்கியவர்கள் கோட்டை விட்டு இருக்கிறார்கள் போல...
    ஆனால்,இது இன்னொரு மார்வல் எக்ஸ் மென் கதை போல ஆகாமல் போனதிற்கு நாம் சந்தோசப்பட வேண்டும் . :)

    Fahrenheit 451 பற்றியும் நான் அறிந்ததில்லை.
    ஆனால்,எதிர்காலத்தில் புத்தகம் படிப்பது,தேடல் கொண்ட வாழ்க்கை வாழ்வது குற்றமென கருதும் அரசாங்கம்... என்ற கதைக் கரு ஏற்கனவே தெரிந்தது தான்.சில படங்களிலும் வந்திருக்கிறது.

    //ஒளி நிறைந்த ஒரு எதிர்காலம் எனும் கனவை தன் சித்திரங்களில் கலந்திருக்கும் இருள்தன்மையால் இல்லாத ஒன்றாக்கி திகிலடிக்கிறார் டிம் ஹாமில்டன்.//

    நல்ல பார்வை.சீக்கிரம் படிக்கிறேன்.படித்துவிட்டு சொல்கிறேன்.

    புத்தகம் படிப்பது குற்றம் என்றானால், உலகத்தில் இருக்கும் எவருக்கு பிரச்சனையோ எதுவோ, தமிழர்களுக்கு பிரச்சினையே இல்லை. ;)
    டிவி,மசாலா படம் இல்லையென்றால் வேண்டுமானால் பிரச்சனை வரலாம்.

    ReplyDelete
  12. //சென்னை புத்தக கண்காட்சியில் பட்டியலிடபட்டிருக்கும் புத்தகங்களின் தரங்களை பார்க்கையில் அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.//

    உண்மை.நம் மக்கள் பலர் இன்னும் மேலோட்டமான வாசிப்பிலேயே இருக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.அதனை திருப்திபடுத்தும் வகையிலேயே இதுவும் இருப்பது கொடுமை.

    ReplyDelete
  13. நண்பர் எஸ்.கே., அருமையான சித்திரநாவல். கூடுமானால் படித்துவிடுங்கள் . கருத்துக்களிற்கு நன்றி.

    ரஃபிக், தனியான பதிவிற்கு தகுதியான ஒரு படைப்பாக என்னால் கருதப்படுவது Fahrenheit 451 மட்டுமே. ஆனால் சுருக்கமாக ஏனைய கதைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் எனும் நினைப்பில் அவற்றையும் பதிவில் இணைத்துக் கொண்டேன். சிருங்கார பக்கங்களை பார்த்து விட்டீர்களா :) இகார் என்னை கவரவில்லை மேலும் அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தந்துவிட்டது. ஓசனை நீங்கள் நிதானமாகவே படித்துக் கொள்ளலாம் ஏனோ அக்கதையின் சித்திரங்கள் என்னை கவரவில்லை :) பட்டியலில் இருப்பவை எல்லாம் தரமானவையாக இருந்துவிடுவதில்லை என்பது உண்மை ஆனால் வாசக்ர்கள்தான் தரமானவற்றை கண்டுகொள்ள வேண்டும். அதற்கு தேடலுடன் கூடிய வாசிப்பும், புதியவற்றை அங்கீகரீக்கும் மனமும் வேண்டும்.விரைவில் இது சாத்தியமாகும். நேற்றையதினம் நல்ல விற்பனை என்றார்கள் அது எனக்கு மகிழ்ச்சியே. தாங்கள் வழங்கியிருக்கும் சுட்டிகளிற்கும் விரிவான கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.

    அன்பு நண்பர் இலுமினாட்டி அவர்களே, வாரென் எலிஸ் கதைகளில் வேகம் இருக்கிறது ஆனால் அவை எனக்கு நெருக்கமானவையாக அமைவதில்லை. நீங்கள் கூறிய பிளனட்டரி என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள உதவும் என நம்புகிறேன். ஜப்பானிய மங்காக்கள் சில கவிதைபோல இருக்கும். ஐரோப்பிய கலைஞர்களிடம் இந்த ஆற்றல் அரிதாகவே காணக்கிடைக்கிறது. மாஃபியஸ், டேனிகுச்சி கூட்டணி தோல்வியடைந்ததிற்கு இரு கலாச்சாரங்களிற்குமிடையில் இருக்கும் ஆழமான வேறுபாடுகளும் காரணமாகவிருக்கலாம். உதாரணமாக ஒரு வடையை பிரெஞ்சுக்காரன் சுவைப்பதற்கும், தமிழன் சுவைப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா :) அந்த வடையை பிரெஞ்சுக்காரர் செய்தால் அதில் காரம் கம்மியாக இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும். தமிழ் கலாச்சாரத்தில் ஒன்றிய ஒரு பிரெஞ்சுக்காரர் ஒரு நல்ல வடையை செய்திடலாம். ஆனால் மாஃபியஸும், டேனிகுச்சியும் அப்படிப்பட்டவர்கள் அல்லவே. டிவி, மற்றும் மசாலா படம், தொலைக்காட்சி தொடர்கள், குத்தாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத தமிழ் சமூகமா. அது செவ்வாய்க் கிரகத்தில்தான் இருக்க முடியும்- எனக்கே குத்து டான்ஸ் பிடிக்கும்- மக்கள் மேலோட்டமான வாசிப்பில் இருக்க காரணம் அவர்களிற்கு அவ்வகையான வாசிப்பை அள்ளி வழங்கும் வார, மாத சஞ்சிகைகள், மற்றும் பத்திரிகைகளே. ஆழமான வாசிப்பை விரும்புவர்களின் எண்ணிக்கை தமிழில் மட்டுமல்ல உலக மொழிகள் அத்தனையிலும் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து. தங்கள் மேலான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  14. // நண்பர் சிபி கேட்டது....seeds கம்மியாயிருந்தாலும்...டவுன்லோட் ஆகுது...அட்ஜஸ்ட் மாடி..
    http://thepiratebay.org/torrent/5184966/Fahrenheit_451 //

    நண்பர் கொழந்த மிக்க நன்றி :))

    Thanks for your immediate response :))
    .

    ReplyDelete
  15. Rafiq Raja மிக்க நன்றி :))

    For all the download links :))
    .

    ReplyDelete