Sunday, January 2, 2011

காதலும் இன்னும் பிற மாத்திரைகளும்


மருந்து வகைகளை தயாரிக்கும் பெருநிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் Jamie [Jack Gyllenhaal], மருத்துவ நிலையமொன்றில் Maggie [Anne Hathaway] எனும் பெண்ணுடன் அறிமுகமாகிக் கொள்கிறான். அவர்களிருவரினதும் முதல் சந்திப்பு ஏனைய சந்திப்புக்களிற்கு வாய்ப்பளிக்க, மகி மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறான் ஜமி….

தன் கவர்ச்சியால் பெண்களை இலகுவாக கவர்ந்து அவர்களை படுக்கையில் வீழ்த்தி விடுவது என்பது ஜமியின் பலமான இயல்பாக இருக்கிறது. பெண்களுடன் நிலையான உறவொன்றை ஏற்படுத்திக் கொள்ளுவதில் அவனிற்கு ஆர்வம் இருப்பதில்லை. தொலைக்காட்சி, வானொலி, கைத்தொலைபேசி என்பவற்றை விற்பனை செய்ந்து கொண்டிருந்த ஜமியின் வேலை அவன் பலமான இயல்பினால் பறிபோக மருந்து வகைகளை விற்பதற்கான பயிற்சியில் இணைந்து Pfizer எனும் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து கொள்ளுகிறான் ஜமி.

ஜமியின் குடும்ப உறுப்பினர்கள் சாமர்த்தியம் போதாத ஒருவனாகவே அவனை மதிப்பிடுகிறார்கள். ஜமியும் பிறரைக் குறித்து அதிக அக்கறை கொள்ளாத ஒருவனாகவே இருந்து வருகிறான். விற்பனை பிரதிநிதியாக பதவியில் இணைந்து கொண்ட பின்பாக, அப்பணியில் அதிக பணம் சம்பாதிப்பதும், நல்ல ஒரு நகரத்தில் பணிமாற்றத்தை பெற்றுக் கொள்வது என்பதும் அவனிற்கு முக்கிய குறிக்கோள்களாக இருக்கின்றன.

ஆனால் விற்பனை பிரதிநிதி வேலை என்பது இலகுவானது அல்ல. தன் நிறுவனத்தின் தயாரிப்புக்களை முன்னிறுத்துவதற்காக அவன் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. டாக்டர்களை சந்திப்பதும், அவர்களிடம் நைச்சியமாக பேசி தன் நிறுவன மருந்துகளை அவர்கள் தம் நோயாளிகளிடம் பரிந்துரைக்க வேண்டி வாதிடுவதும், அவர்களின் மறுப்புக்களை ஏமாற்றத்துடன் தாங்கிக் கொள்வதும், தன் போட்டியாளர்களுடன் ஓயாது போட்டியிடுவதுமாக அந்தப் பணி ஜமியை சக்கையாக பிழிகிறது.

மருத்துவ நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பு பெண்கள், காரியதரிசிகளை தன் கவர்ச்சியாலும், பரிசுகள் தந்தும் கவிழ்த்தல், தன் போட்டியாளர்களின் மருந்து வகைகளை கவர்ந்து சென்று குப்பையினுள் வீசுதல் போன்ற அனைத்துவகை தந்திரங்களையும் தன் வெற்றிக்காக பயன்படுத்த ஜமி தயங்குவதேயில்லை. இவ்வகையான போராட்டம் நிறைந்த ஒரு பணிநாளிலேயே மகியின் அறிமுகம் ஜமிக்கு கிடைக்கிறது.

மகி ஒரு கலைஞி. போட்டோக்கள் பிடிப்பதும், ஓவியங்கள் வரைவதும் அவளிற்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால் மகி, பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டவள். அந்நோயின் ஆரம்ப கட்டத்தின் பிடிக்குள் இருக்கும் மகி, அந்தப் பிடியினூடே சளைக்காமல் தன் வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு பெண்ணாக இருக்கிறாள். தன் மீது இரக்கம் கொள்பவர்களை அவளிற்கு பிடிப்பதில்லை. தன்னால் பிறர் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனாலேயே ஆழமான, நீடிக்கும் உறவுகளை அவள் விரும்புவதில்லை. இரு மனிதர்களிற்கிடையில் இயல்பாக எழும் காமத்தை மட்டும் ஆற்றிக் கொள்ளல் எனும் நிபந்தனையிலேயே மகியினதும், ஜமியினதும் சந்திப்புகள் ஆரம்பத்தில் நிகழ்கின்றன.

இவ்வாறான வேறுபட்ட ஆளுமைகளிற்கிடையில் உருவாகும் ஒரு அன்பு நிறைந்த உறவைப்பற்றி அல்லது காதலைப்பற்றியே இயக்குனர் Edward Zwick இயக்கியிருக்கும் Love and Other Drugs திரைப்படம் பேசவிழைகிறது. இந்த இருவரினதும் உறவைக் குறித்து பேசுவதோடு மட்டும் நின்று விடாது, மருந்து விற்பனை பிரதிநிதிகளின் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், அமெரிக்க மருத்துவர்கள் தம் தொழிலில் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்பன குறித்தும் குறிப்பிடத்தக்கதான ஒரு பார்வையை திரைப்படம் வழங்குகிறது.

love-et-autres-drogues-2010-18882-649515796 தன் உடல் வேட்கையை தீர்த்துக் கொள்வதில் மட்டும் குறியாக இருந்த ஜமி பின் படிப்படியாக மகி மீது அக்கறை காட்ட ஆரம்பிக்கிறான். மகிக்கு இது பிடிக்காதபோதும் அவளுடன் இணைந்திருக்கவே ஜமி விரும்புகிறான். தன் பணியில் வெற்றிக்காக அவன் ஓயாது உழைத்தபோதும் மகியின் அருகாமையை அவன் வெறுப்பதில்லை. அழுத்தங்களும், தொடர் ஏமாற்றங்களும் நிறைந்த அவன் பணி, Pfizer நிறுவனம் வயகாரா மாத்திரைகளை சந்தைப்படுத்தும்போது வெற்றியின் உச்சத்திற்கு செல்கிறது. ஆனால் மகிதான் அவனை பிரிந்து விடுகிறாள்…

அன்பையும், அக்கறையையும் உடல் கொள்ளும் உறவுகள் மட்டும் எப்போதும் தீர்மானித்து விடுவதில்லை. மகியும், ஜமியும் ஒருவரையொருவர் சந்திக்கும் முன்பான காலத்திலும், பிரிந்த பின்னும் வேறு துணைகளுடன் உடல் உறவு வைத்துக் கொள்ளுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பிரிவுதான் எங்களிற்கு இழந்ததின் தேவையை சரியாக உணர்த்தும் ஒன்றாக அமைகிறது. மகியும், ஜமியும் தமக்கு வாழ்வில் மிகவும் தேவையானவைகளை பெற்றுக் கொண்டார்களா என்பதை மீதிப்படம் நெகிழ்வாக கூறிச்செல்கிறது. எந்த ஒரு மனிதனிலும் உறங்கியழியும் உன்னதங்களை விழித்து எழச்செய்து அவனை அழகாக்குவதில்தானே உண்மையான அன்பின் பரிமாற்றம் சாந்தம் கொள்கிறது.

வழமையான ஹாலிவூட் காதல் திரைப்படங்களிற்குரிய மோதலில் சந்திப்பு, சேர்ந்து வாழ்தல், பிரிவு, ஒரு தருணத்தில் தனக்கு வாழ்வில் தேவையானது இதுவே என நாயகன் உணரல், உச்சக்கட்டக் காட்சியில் காதலியை தேடி ஓடி கண்கள் கலங்க அவள்முன் வசனம் பேசல், பின்னணியில் ஒலிக்கும் இனிமையான பாடல்கள் என்பன படத்தில் இருந்தாலும் மெலிதான தீவிரத்தன்மையும் படத்தில் ஒட்டியிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு மருந்துகளை வாங்கச் செல்லும் முதியவர்களை காணும்போது விழிகள் வியப்பால் உயர்கிறது. பார்க்கின்சன் நோயாளியுடனான வாழ்வு என்பது வாழ்வல்ல அது ஒரு ரஷ்ய நாவல் என வரும் வரிகள் அங்கதமானவை எனினும் மனதை தொடுபவை. எனினும் சற்றே நீளமான படம் எனும் உணர்வும் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது.

திரைப்படத்தில் ஜேக் ஜிலென்ஹால், ஆன் ஹாத்தவே ஜோடியை நன்றாக ரசிக்க முடிகிறது. இயல்பாக நடித்து சென்றிருக்கிறார்கள் இருவரும். சில உணர்ச்சிகரமான தருணங்களில் மிகையான நடிப்பு உண்டு. எந்தவித வெட்கமுமின்றி ஆடைகளை விலக்கி காதல் காட்சிகளில் இருவரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். ஆண், பெண் ரசிக, ரசிகைகளிற்கு அற்புதமான விருந்து உண்டு. ஆன் ஹாத்தவேயின் மார்புகள் மிக மிக அழகாக இருக்கின்றன. வயக்கரா மருந்து ஏற்படுத்திய புரட்சி அங்கத சுவையுடன் கூறப்படுகிறது. ஆண்களைவிட பெண்களே வயக்கரா குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்ததாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. Jamie Reidy எனும் விற்பனை பிரதிநிதி எழுதிய The Evolution of a Viagra Salesman எனும் நூலை தழுவியே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜமியின் சகோதரன் ஜோஸாக! வேடம் ஏற்றிருக்கும் நடிகர் Josh Gad அடிக்கும் லூட்டிகள் வயிறு குலுங்கி சிரிக்க வைக்கின்றன. திரைப்படத்தில் நகைச்சுவையின் பங்கு கணிசமான ஒன்றாக இருப்பது ஒரு இதம். தன் சகோதரனின் திறமைகளை குறித்து அவர் புலம்புவது Aட்டகாசம். தன் ஆண்குறியை சொரொனின் கண்களை [லார்ட் ஆஃப் த ரிங்ஸ்] பார்ப்பது போலவே தன் காதலி பார்க்கிறாள் என அவர் ஜமியிடம் விசும்பும் கட்டத்தில் திரையரங்கம் சிரிப்பால் வெடிக்கிறது. ஜமியின் மேலதிகாரியான புருஸ் பாத்திரமும், டாக்டர் ஸ்டான் நைட்டும் மனதைக் கவர்கிறார்கள்.

நகைச்சுவை, நெகிழ்ச்சி, நல்லுணர்வு இவற்றை மனதில் கிளர்ந்தெழச் செய்யும் மாத்திரைகளை ரசிகர்கள் உள்ளெடுத்தால் அவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை அவர்களிடம் எடுத்து வருவதில் Love and Other Drugs திரைப்படம் வெற்றி காணவே செய்கிறது. [**]

ட்ரெயிலர்

11 comments:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. என்ன கொடுமை இது காதலரே... படத்தைப் பற்றி நன்றாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால் ஏன் ரெண்டே ரெண்டு ஸ்டார்கள்? என்ன கொடுமை இது

  ReplyDelete
 3. ஹேய்.... விஷ் யூ த சேம் யா.. ந்யூ இயர் விஷஸ் மேலே டக்கராக்கீது :-)

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே. சைடு பாரில் உள்ள புத்தாண்டு வாழ்த்து.. கலக்கல்.

  ReplyDelete
 5. விஸ்வா வாழ்த்துகளிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள்,மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் கொண்ட படமாயினும் இப்படத்தை தவறவிடுவதால் ரசிகர்களிற்கு அதிக இழப்புக்கள் ஏதுமில்லை-ஹாத்தவேயின் அழகான மார்புகளை தவிர :)எனவேதான் இரு நட்சத்திரங்கள். வாழ்த்து சொல்வது யார் இண்டர்போலையை இழுத்து நிறுத்தும் விருதகிரி அல்லவா :) கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் செ.சரவணக்குமார், வாழ்த்துக்களிற்கு நன்றி. ஆம் சைட் பார் அதிருதில்ல ;)

  ReplyDelete
 6. //இண்டர்போலையை இழுத்து நிறுத்தும் விருதகிரி அல்லவா :) //

  ஹாஹா...

  ReplyDelete
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 8. இந்த புத்தாண்டு மிக கலக்கலாக இருக்கும் போல இருக்கிறதே காதலரே
  ஏனென்றால் வாழ்த்து சொல்லுவது யாரு ஆங்ங்க் :))
  .

  ReplyDelete
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

  ReplyDelete
 10. நண்பர் இலுமினாட்டி, விருதகிரி விறுவிறு ஜாங்கிரி... அம்பு படத்தை விட விருதகிரி தேவலாம் என நண்பர் ஒருவர் சொன்னார் :) நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

  தலைவர் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிபி, வாழ்த்துக்கள் மட்டுமா பூங்கொத்தும் உண்டே எனவே செம கலக்கல் ஆங்ங்க் :)

  நண்பர் எஸ்.கே, தங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete