Friday, August 27, 2010

தடம்


sil2 மரகதக் கடல் போல் விரிந்து கிடக்கிறது காடு. கதிரவன் தன் இளம் கதிர்களால் ஆசையுடன் விருட்சங்களினை வருடிக் கொடுக்கிறான். பரந்த காட்டின் மேலாகப் பறந்து வருகிறது சிலாஜ் கூட்டமைப்பை சேர்ந்த கோள வடிவமான வேவு பார்க்கும் கலமொன்று.

சிலாஜ் என்பது, அண்டவெளியின் பல்வேறுபட்ட கிரகங்களை சேர்ந்த, வெவ்வேறு இன மக்களை உள்ளடக்கிய, மில்லியன் கணக்கிலான விண்கலங்களை தன்னகத்தே கொண்ட, புதிய கிரகங்களையும், அறிவு கொண்ட உயிரினங்களையும், தொழில்நுட்பங்களையும் தேடி தொடர்ந்து பயணம் செய்யும் விண்கலத்தொடரின் கூட்டமைப்பு ஆகும். சிலாஜ் இதுவரை அறிந்திராத இனம், மனித இனம் என்பதாகும்.

கலத்தை ஓட்டி வரும் ஒற்றன், கலத்தின் திசை நோக்கி பறந்து வரும் பறவைக் கூட்டமொன்றை கலத்தினுள் உள்ள திரையில் காண்கிறான். கலத்தை சுற்றி போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு கவசப் புலத்தில் மோதி பறவைகள் இறந்து விடக்கூடாது என்பதற்காக அப்புலத்தை செயலிழக்க செய்கிறான் அவன். அப்பகுதியில் நடத்திய தேடலில் அறிவு விருத்தி அடைந்த உயிரினங்கள் எதுவும் தன்னால் கண்டு கொள்ளப்படவில்லை எனவும் சிலாஜின் கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் தருகிறான்.

கலத்தை விட்டு பார்வையை கீழே வீழ்த்தி, விருட்சங்களின் நுனிகளைக் கடந்து, கிளைகள் வழி இறங்கி கீழே வந்தால், மரமொன்றின் கிளையில் கால்கள் ஊன்றி, கைகளில் வில்லுண்டி ஏந்தி, அருகிலிருக்கும் மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் பறவையொன்றை குறி பார்த்துக் கொண்டிருக்கிறாள் சிறுமி நவி.

தன் காலை கிளையின் மீது சற்று வலிமையாக நவி ஊண்டி விட, அக்கிளை முறிந்து விழுகிறது. இதனால் தன் சமனிலை இழக்கும் நவி கீழே வீழ்கிறாள். அவள் வில்லுண்டியிலிருந்து விடுபட்ட தட்டையான உலோகம் காற்றைக் கிழித்துக் கொண்டு மேலே பறக்கிறது. பறவைக்கு வைத்த அக்குறி பறவையைத் தாக்காது மேலே பறந்து கொண்டிருந்த வேவு பார்க்கும் கலத்தை சென்று தாக்குகிறது.

மரக்கிளையிலிருந்து கீழே விழும் நவி, மரங்களிற்கிடையில் அங்கும் இங்குமாய் படர்ந்திருக்கும் காட்டுக் கொடிகளில் ஒன்றைப் பிடித்து தான் தரையை நோக்கி விழும் வேகத்தை குறைத்துக் கொள்கிறாள். காட்டின் தரையில் வீழ்ந்து விட்ட நவியைச் சற்றுத் தொலைவில் இருந்து நோட்டம் விடுகிறது அவளின் உயிர்த் தோழனான கரடிப்புலி கூயோ.

sil3 நவி வீழ்ந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி கிளைகளை உடைத்தவாறே வந்து விழுகிறது வேவு கலம். வீழ்ந்த அதிர்ச்சியில் அதில் தீப்பிடித்துக் கொள்ள, வட்ட வடிவமான கதவொன்று கலத்தில் திறக்கிறது. திறந்த கதவின் வழியாக வெளியே குதிக்கிறது, விண்கவச உடை அணிந்த, குழந்தை முகம் கொண்ட சிறிய உருவம் ஒன்று. தரையில் குதித்த அக் குழந்தை முக ஒற்றனின் விண்கவசம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

கலத்திலிருந்து வெளியே குதித்த ஒற்றனை வியப்புடன் பார்க்கிறாள் நவி. அவளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் கூயோ தன் மோப்ப சக்தியால் வரவிருக்கும் அபாயத்தை உணர்ந்து அவளை நோக்கி வேகமாக ஓட ஆரம்பிக்கிறது. கலத்தின் உட் பகுதியில் பொறிகள் பறக்கின்றன. தான் ஓடி வந்த வேகத்திலேயே நவியின் கையை தன் வாயில் கவ்வியபடி கலத்தை விட்டு விலகி ஓடுகிறது கூயோ. பொறிகளை துப்பியவாறே காட்டின் தரையில் கிடந்த வேவு கலம் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறுகிறது.

வெடித்து சிதறிய கலத்திலிருந்து பாதுகாப்பான தூரத்திற்கு நவியைக் கொண்டு செல்கிறது கூயோ. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக அதனை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறாள் நவி. கூயோவும் தன் நாக்கினால் நவியின் கன்னங்களை நக்கி தன் அன்பை வெளிப்படுத்துகிறது.

சற்று நிதானித்துக் கொண்டபின், ஆர்வமிகுதியால் வெடித்து சிதறிய கலத்தினைக் காணச் செல்கிறாள் நவி. கலத்தை செலுத்தி வந்த ஓற்றன் தீயில் கருகிப் போய்க் கிடப்பதைக் காணும் அவள், அந்த சிறு உடலை எடுத்து உண்ண முயற்சிக்கிறாள். அதன் ருசி அவளிற்கு பிடிக்கவில்லை என்பதால் அதனைக் கீழே வீசிவிட்டு, காட்டில் உணவு வேட்டையை தொடரச் செல்கிறாள் அவள்.

காடு அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு வேளை. பிரகாசமான ஒளியை தன்னைச் சுற்றி படரவிட்டவாறே காட்டில் இறங்குகிறது ஒர் பிரம்மாண்டமான விண்கலம். விண்கலத்திலிருந்து கிளம்பும் ஒர் வகை கதிர் வளையம், கீழே காணப்படும் காட்டைப் பஸ்பமாக்கி கலம் பாதுகாப்பாக இறங்க வழி அமைத்து தருகிறது.

தூசியைக் கிளப்பியவாறே தரையிறங்கும் கலத்தின் கதவுகள் திறக்கின்றன. திறந்த கதவுகள் வழி வெளியேறுகிறது, ஒரே உருவம், மற்றும் வடிவம் கொண்ட அடிமைகள் சேனை. கலத்தினை விட்டு வெளியேறும் இச்சேனை, ஒழுங்காக பிரிந்து, அணி வகுத்து கலத்திற்கு வெளியே யாரையோ எதிர்பார்த்து நிற்கின்றது.

sil4 பிரம்மாண்டமான கலத்தின் மற்றுமோர் கதவு திறக்க, பறவையும், பூச்சியும் கலந்த உருவமாய், கார் வண்ண உடற் கவசம் இரவில் மிளிர, செங்கண்கள் ஒளிர, கம்பீரமாக நடந்தபடி வருகிறான் மஜெஸ்டோ ஹெய்லிக். ஹொட்டார்ட் இன மக்களின் பெயரில் இப்புதிய கிரகத்தை தம் சொந்தமாக்கி கொள்வதாக அவன் அறிவிக்கிறான். இதன் பின் ஹா ஹா ஹா என ஒர் வில்லச் சிரிப்பையும் உதிர்க்கிறான்.

அவன் அருகே பணிவுடன் நிற்கும் அவன் காரியதரிசியான யந்திரன் சினிவெல், மஜெஸ்டோ ஆணையிட்டால் தான் அடிமைகள் சேனை வேலையை ஆரம்பிக்கும் என மென்மையான குரலில் கூறுகிறான். சுயமாகச் சிந்திக்கும் திறனற்ற அடிமைகளைக் கடிந்தவாறே, அவர்களிற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான் ஹெய்லிக். மறுநாள் காணாமல் போய்விட்ட வேவுகலத்தைப் தேடிச் செல்ல வேண்டியதை ஹெய்லிக்கிற்கு நினைவு படுத்தும் சினிவெல், அவனை ஓய்வெடுக்க சொல்கிறான். சிலாஜின் கட்டளைகளை மீற முடியாத நிலையை எண்ணி, மனதில் கறுவிக் கொண்டே ஓய்வெடுக்க செல்கிறான் மஜெஸ்டோ ஹெய்லிக்.

sil5 அதே இரவில் காட்டின் பிறிதோர் பகுதியில் கூயோவுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள் நவி. அவளின் ஆழ்ந்த உறக்கம் திடீரெனக் கலைய, தன் கண்களை விழித்துப் பார்க்கும் அவள், வெடித்து சிதறிய வேவுகலத்தின் ஒற்றனின் உருவத்தை ஒத்த, வெள்ளை நிறமான சிறு உருவம் தன் மேல் அமர்ந்திருப்பதைக் காண்கிறாள். அவள் மனம் சற்றுக் குழப்பமடைய, தன் கண்களை ஒரு முறை கசக்கி விட்டு நன்கு விழித்துப் பார்க்கும்போது, ஒற்றனின் சிறு வெள்ளை ஆன்மா மறைந்து விடுகிறது. இது வெறும் கனவு என்றபடியே மறுபடியும் தூங்கச் செல்கிறாள் அவள்.

மறுநாள் காலையில் அடிமைகளின் வேகமான செயற்பாட்டில் உருவாகியிருக்கும் புதிய கட்டமைப்புக்களை பார்த்து மகிழ்வுறும் மஜெஸ்டோ ஹெய்லிக், பறக்கும் தெப்பமொன்றில் சினிவெல் மற்றும் சில அடிமைகளுடன் காணாமல் போன வேவுகலத்தினையும், ஒற்றனையும் தேடிச் செல்கிறான்.

இந்த சிறு ஓற்றர்கள் கார்டோனியா எனப்படும் இனத்தை சேர்ந்தவர்கள். சிலாஜ் அமைப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுபவர்கள். இவற்றின் இனப்பெருக்கம் அரிதானது. எண்ணிக்கை குறைவாகவே உள்ள இனம் என்பதால் இத்தேடல் வேட்டை மிக முக்கியமானது என்பதை ஹெய்லிக்கிற்கு விளக்குகிறான் சினிவெல். அவன் கையில் இருக்கும் கருவியின் திரையில், ஒற்றனின் எண்ண அலைகள் குவிந்திருக்கும் இடம் தெரிகிறது. அப்பகுதியை நோக்கி வேகமாக பறக்கிறது பறக்கும் தெப்பம்.

காலையில் கண் விழிக்கும் நவி, காட்டில் வெப்பம் வழமைக்கு மாறாக அதிகரித்திருப்பதையும், பருவத்திற்கு முன்பாகவே இலைகள் பழுத்து விட்டதையும் கண்டு வியக்கிறாள். அவளிற்கு முன்பாகவே எழுந்து விட்ட கூயோ, தனக்கு பசி தாங்கவில்லை மீன் பிடித்து தா என நவியிடம் கேட்கிறது. கூயோவின் பசியை ஆற்றுவதற்காக கூயோவையும் அழைத்துக் கொண்டு நீர்வீழ்ச்சி ஒன்றை சென்று அடைகிறாள் நவி.

நீர்வீழ்ச்சியின் நீரோட்டத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மீனொன்றினை தன் வில்லுண்டியால் குறிபார்த்து அடிக்கிறாள் நவி. அவள் குறி தவறாது மீனின் தலையில் பாய்கிறது. அடிபட்ட மீனை எடுப்பதற்காக, நீர்வீழ்ச்சியின் நுனியிலிருந்து நீரோட்டத்தினுள் குதிக்கிறாள் நவி. நீரினுள் மூழ்கிய அவள், கையில் மீனுடன் வெளியேறி, கூயோவிற்கு அதனை உண்ணக் கொடுப்பதற்காக தயார் செய்கிறாள்.

வேவுகல ஓற்றனின் எண்ண அலைகளை காட்டும் கருவி, மஜெஸ்டோ ஹெய்லிக்கின் பறக்கும் தெப்பத்தை ஒர் நீர்வீழ்ச்சிக்கருகில் எடுத்து வருகிறது. நீர்வீழ்ச்சியை அண்மித்ததும் அக்கருவி பீப்பீப் எனும் ஒலியை எழுப்ப ஆரம்பிக்கிறது. ஆனால் நீர்வீழ்ச்சியின் அருகில் கருவி காட்டுமிடத்தில் ஒற்றனின் உருவத்தை சினிவெலால் காணமுடியவில்லை. பீப் ஒலியின் மூலமான ஒற்றனின் எண்ண அலைகள், நவியின் உடலில் இருந்து வருவதை சினிவெல் அறிந்து கொள்கிறான். இதென்ன புதுக்குழப்பம் என முனகும் சினிவெல்லிடம், நேரத்தை மேலும் வீணடிக்காமல் காற்றுத் தெப்பத்தைக் கீழிறக்கி, அடிமைகள் உதவியுடன் நவியைப் பிடிக்க சொல்கிறான் ஹெய்லிக்.

sil6 தனக்காக நவி தயார் செய்து கொண்டிருக்கும் மீனை, நாக்கில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருக்கும் கூயோவின் கண்களில் தம்மை ரகசியமாய் நெருங்கி கொண்டிருக்கும் நபர்கள் தெரிந்து விட நவியை உடனே எச்சரிக்கை செய்கிறது. அடிமைகளை பார்த்து அடடா இது நான் இதுவரை காணாத மந்தையாய் இருக்கிறதே என ஆச்சர்யப்படுகிறாள் நவி. இருகாலியைப் பிடி என மஜெஸ்டோ ஹெய்லிக் அடிமைகளிடம் ஆணையிட்டு விட ஆரம்பமாகிறது படுபயங்கரமான மோதல்.

வில்லுண்டியாலும், கூரான கத்தியாலும் அடிமைகளைத் தாக்குகிறாள் நவி. தன் கூரிய நகங்களினாலும், வலிய பற்களாலும் அடிமைகளை துவம்சம் செய்கிறது கூயோ. மோதலின் நடுவில், நவியின் பின்னலைப் பிடித்து அவளைத் தூக்கியவாறே தெப்பத்தை மேலே எழுப்புகிறான் ஹெய்லிக். இதைக் கண்டு விடும் கூயோ அருகிலிருக்கும் மலை ஒன்றில் செங்குத்தாக ஏற ஆரம்பிக்கிறது.

மிக வேகமாக மலையின் சுவரில் ஏறிய கூயோ, பறக்கும் தெப்பம் மிதக்கும் உயரத்தை தாண்டியவுடன், கீழே அந்தரத்தில் நிற்கும் தெப்பத்தை நோக்கிப் பாய்கிறது. அதன் பாய்ச்சல் ஹெய்லிக்கின் மேல் இறங்க, தன் பிடியிலிருந்து நவியை விட்டுவிடுகிறான் ஹெய்லிக். கீழே விழுந்த நவியை பார்த்து தப்பி ஓடும்படி கத்துகிறது கூயோ. அடிமைகளின் கரங்களில் அகப்படாது தப்பி ஓட ஆரம்பிக்கிறாள் நவி.

பறக்கும் தெப்பத்தில் ஹெய்லிக்குடன் ஆக்ரோஷமாக மோதுகிறது கூயோ. ஹெய்லிக்கின் தலையில் கூந்தல்கள் போல் தோற்றம் தரும் கலோரிக் குழாய்களை வெறியுடன் கடித்து துண்டாக்குகிறது அது. துண்டாக்கப்பட்ட கலோரிக் குழாய்களிருந்து வெளிப்பட்ட தீ கூயோவின் முகத்தை எரித்து விட, தெப்பத்திலிருந்து கீழே வீழ்கிறது கூயோ.

மலையின் பகுதிகளில் விழும் கூயோவின் உடல் அடிபட்டு, தெறித்து கீழே இறங்குகிறது. வலுவிழந்த அதன் நகங்கள் காற்றைப் பற்ற முயன்று தோற்கின்றன. கீழேயிருக்கும் நீர்வீழ்ச்சிக்குள் வந்து வீழ்கிறது கூயோ.

கூயோ நீர்வீழ்ச்சியின் நீரோட்டத்தில் மிதந்து செல்வதைக் காணும் நவி, உடனே நீரினுள் பாய்ந்து கூயோவை நோக்கி நீந்துகிறாள். கூயோவை நெருங்கி அன்புடன் அதனை தழுவும் அவள் கரங்கள், தன் உயிர் நண்பனின் உயிர் அவனிடத்தில் இல்லை என்பதனை அறிந்து கொள்கின்றன. உரத்த குரல் எடுத்து கதறுகிறாள் நவி.மேலிருந்து கீழே விழும் நீர் வீழ்ச்சியிலிருந்து ஈருடல், ஒருயிராக வீழ்கிறார்கள் நவியும், கூயோவும். நீரோட்டத்தில் நவியின் கண்ணீரை மீன்கள் மட்டும் கண்டு கொண்டன.

மோதலினால் களைப்படைந்திருக்கும் ஹெய்லிக், தெப்பத்தை தாங்கள் முகாமிட்டிருக்கும் இடத்தை நோக்கி திருப்ப சொல்கிறான்.கலோரிக் குழாய்கள் தாக்கப்பட்டதால் அவன் உடல் குளிரத் தொடங்குகிறது. எந்த வழியிலாவது நவியைப் பிடித்து வரும்படி அடிமைகளிற்கு புதிய உத்தரவு பிறப்பித்த பின், தெப்பத்தில் சினிவெலுடன் கிளம்பிச்செல்கிறான் ஹெய்லிக். மோதல் நடந்த இடத்தில் நவியின் கத்தி ஒன்றை கண்டு எடுத்த சினிவெலிடம் கேள்விகள் ஏராளமாய் துளிர்த்தன.

sil7 கலம் திரும்பி, தன் கம்பீரமான கறுப்பு உடல் கவசத்தை அகற்றி, மிகச்சூடான வெப்பநிலை உள்ள தன் பிரத்தியேக அறையில் ஒய்வெடுக்க ஆரம்பிக்கின்றான் ஹெய்லிக். அவன் முன்னே இருந்த ஹொலொகிராம் கருவியில் அவன் அன்புக் காதலி சஹாரின் உருவம் உருப்பெற ஆரம்பிக்கிறது.

சிலாஜ் விண்கப்பல்கள் கூட்டத்தில் ஹொட்டோ இன மக்கள் வினோத நோயொன்றால் பீடிக்கப்பட்டு இறப்பதாகவும், புதிய கிரகத்தை ஹெய்லிக் விரைவாக ஹொட்டார்ட் இன மக்களிற்கு ஏற்புடையதாக ஆக்கிவிட வேண்டுமெனவும் அவள் ஹெய்லிக்கிடம் கேட்கிறாள். அது வெகு விரைவில் நிறைவேறும் என தன் அன்பிடம் தெரிவிக்கிறான் ஹெய்லிக்.

நீரோட்டத்தின் கரையில் நவியைக் கண்டுகொள்ளும் அடிமைகள் அவளைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடமிருந்து விரவாக ஒடும் நவி தன் மறைவிடத்தினுள் நுழைந்து மறைந்து விடுகிறாள். அவளைத் தொடர்ந்து ஓடிவரும் அடிமைகள், அவள் நுழைந்த இடம் என்னவென்று அறியவேண்டி சினிவெலைத் தொடர்பு கொள்கிறார்கள். நவி நுழைந்து மறைந்தது கீழே வீழ்ந்து தரையில் புதையுண்டு போயிருக்கும் ஒர் விண்கலம் என்பதனை தன் திரையில் தெரியும் காட்சிகள் வழி அறிந்து கொள்கிறான் சினிவெல்.

அந்த விண்கலத்தின் நுட்பங்கள் சிலாஜ் இன்னமும் அறியாத ஒன்று. தங்கள் அறிவை விட வேறுபட்ட வகையான அறிவு கொண்ட இனத்தின் இருப்பின் தடத்தை அவர்கள் கண்டுபிடித்து விட்டதிற்கு சான்றாக அவ்விண்கலம் இருக்கிறது. அவ்விண்கலத்திலிருந்து தப்பியவள் நவி மட்டுமே என்பதை விரைவாகக் கணிக்கிறான் சினிவெல். இந்த மகிழ்வான செய்தியை அறிவிக்க ஹெய்லிக்கின் அறைக்கு செல்கிறான் அவன்.

சூடான தன் அறையில் சினிவெல் கூறுவதை அவதானமாகக் கேட்கும் ஹெய்லிக், தன் கவச உடையை அணிகிறான். சிலாஜ் உடனான வழமையான தகவல் பரிமாற்றத்திற்கான நேரம் நெருங்குவதை ஹெய்லிக்கின் அறையிலிருக்கும் தொடர்புக் கருவி பச்சை ஒளி உமிழ்ந்து அறிவிக்கிறது. சிலாஜிடம் உடனடியாக இந்த அற்புத தகவல்களை பகிர்ந்து கொள்ளச் சொல்கிறான் சினிவெல்.

உடற்கவசமணிந்த நிலையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஹெய்லிக், சிலாஜுடனான தொலைதொடர்பு இணைப்பைத் துண்டிக்கிறான். தன் பிரம்மாண்டமான உருவத்துடன் சினிவெலை நெருங்குகிறான் அவன். பின்பு அந்த அறையில் கேட்டதெல்லாம் சினிவெலின் திணறல் சத்தம் மட்டுமே. நிலத்தில் புதையுண்டு இருக்கும் விண்கலத்தையும், நவியையும் தடயமேயின்றி அழிக்கும்படி யந்திரப் படை ஒன்றிற்கு கட்டளையிடுகிறான் ஹெய்லிக்.

sil8 காட்டில் வெப்பம் அதிகரித்ததும், இலைகள் பழுக்க ஆரம்பித்ததினதும் காரணம் என்ன? சிலாஜ் கூட்டமைப்பிற்கு தெரியாது ஹெய்லிக் திட்டமிட்டும் பயங்கர சதி என்ன? நவியின் மறைவிடமான விண்கலம் அங்கு வந்தது எப்படி? அடிமைகள், யந்திரங்களின் தாக்குதலில் மாட்டிக்கொள்ளும் நவியின் நிலை என்ன? ஹொட்டார்ட் இன மக்கள் வாழ்வதற்கு புதிய கிரகத்தை ஹெய்லிக்கால் வெல்ல முடிந்ததா? இக்கேள்விகளிற்கெல்லாம் பதில் தருகிறது SILLAGE எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பமான A FEU ET A CENDRES [தீயும் சாம்பலும்].

கதையின் ஆரம்பம் முதல் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. எளிமையான கதை சொல்லல் கதையின் வெற்றிக்கு முக்கிய காரணம். விஞ்ஞானக் கதையை கடினமாக்கி திணிக்காமல் தெளிவாகக் கூறியிருக்கிறார் கதை ஆசிரியர். மர்மத்தை இறுதி வரை கொண்டு செல்வதில் அவரிற்கு வெற்றிதான் எனினும், மிக அட்டகாசமான ஆக்‌ஷனுடன் ஆரம்பித்த கதை இறுதிப்பகுதியில் சற்று அடங்கிப் போகிறது. அதனால் ஆக்‌ஷன் ரசிகர்களிற்கு சற்று ஏமாற்றம் ஏற்படலாம்.

கதையில் மிகச்சிறந்த பாத்திரமாக எங்கள் மனதில் நிறைந்து விடுபவர் மஜெஸ்டோ ஹெய்லிக். கடமையா, தன் இன மக்களின் மீட்சியா எனும் போராட்டத்தில் அவரிற்கு கிடைக்கும் முடிவு நெகிழ வைக்கும். எழுகை விசாரனைக் குழுவுடனான இறுதிக் காட்சியில் ஹெய்லிக் ஹீரோவாகி விடுவார்.

sil9 காமிக்ஸ் தொடரிற்கான கதையை எழுதியிருப்பவர் JEAN DAVID MORVAN எனப்படும் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர். கதைக்கு மிகச்சிறப்பான சித்திரங்களை வரைந்திருப்பவர் PHILIPPE BUCHET ஆவார். இவரும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரே. புஷே ஒர் நிறுவனத்தில் காமிக்ஸ் வடிவில் உள்சுற்று தொடர்பு ஆவணங்களை உருவாக்குபவராக பணியாற்றிக் கொண்டிருந்த போது மோர்வானின் அறிமுகம் அவரிற்கு கிடைத்தது. NOMAD எனும் விஞ்ஞான காமிக்ஸ் தொடரில் இருவரும் இணைந்தார்கள். ஆனால் இருவரையும் சிலாஜ் தொடரின் வெற்றி உச்சத்திற்கு கொண்டு சென்றது.

1998ல் சிலாஜின் முதல் ஆல்பம் வெளியாகியது, இன்றுவரை மொத்தம் பனிரெண்டு ஆல்பங்கள் இத்தொடரில் வெளியாகியுள்ளன. ஒர் ஆல்பத்தில் ஆரம்பிக்கும் கதை அந்த ஆல்பத்திலேயே நிறைவு அடையும். சிலாஜின் வெற்றியை தொடர்ந்து LES CHRONIQUES DE SILLAGE, NAVIS ஆகிய காமிக்ஸ் தொடர்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் இவை சிலாஜ் தொடர் அடைந்த வெற்றியை அடையவில்லை என்பது தெளிவு. சிலாஜ், சுவாரஸ்யமான வாசிப்புக்கு உகந்த ஒர் தொடர் என்பது என் தாழ்மையான கருத்து ஆகும். [***]

ஆர்வலர்களிற்கு

சிலாஜ் ஏனைய ஆல்பங்கள்

சிலாஜ் ஆங்கிலப் பதிப்பு

24 comments:

  1. அடடே!இது பத்தி முன்னமே சொல்லி இருக்கீங்க தான?

    ReplyDelete
  2. Me the 2nd

    ரொம்ப நாட்களுக்கு பிறகு காமிக்ஸ் பற்றிய பதிவு

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமை... அருமை...!
    காமிக்ஸ் என்றாலே அருமை தான்...!

    http://communicatorindia.blogspot.com/

    ReplyDelete
  5. // நீரோட்டத்தில் நவியின் கண்ணீரை மீன்கள் மட்டும் கண்டு கொண்டன. //

    காதலரின் பஞ்ச்

    ReplyDelete
  6. மிக அழகான நடை படிப்பதற்கு மிக அருமையாக உள்ளது
    கதையும் மிக அருமை
    .

    ReplyDelete
  7. ணா...கொஞ்சம் அவதார் சாயல் தெரியுதே?

    ReplyDelete
  8. நண்பர் இலுமினாட்டி, ஆம் சொல்லியிருக்கிறேன் ஆனால் என்ன பிரயோசனம்.. காஜால் தெலுங்கில் அழகாக இருப்பார், மெகான் ஃபாக்ஸ் மொக்கை பீஸ், பிரின்ஸ் ஆஃப் பெர்சியா அருமையான படம் என்று காலத்தை கடத்திவிடுகிறீர்களே. இவற்றையும் கொஞ்சம் படிக்க வேண்டாமா :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.[ இதெல்லாம் ஒரு கருத்தா :) ]

    நண்பர் சிபி, என்ன செய்வது காமிக்ஸ் பதிவுகளை எழுத மனம் படிய மாட்டேன் என்கிறது. இதுகூட ரொம்பப் பழைய பதிவுதான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ராஜ ராஜ ராஜன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, சில்லாஜின் சாயல் வேண்டுமானால் அவதாரில் தெரியலாம். என்னைப் பொறுத்த வரையில் சாயல்களை உணர முடியவில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  9. படங்களில் ஏனிந்த தணிக்கை?!! மக்கள் குடும்பத்துடன் வந்து வாசிக்கும் தளம் என்பதாலோ?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  10. //இதெல்லாம் ஒரு கருத்தா//

    உம்ம போஸ்டுக்கு ஏத்தா மாதிரியே நானும் ஒரு போஸ்ட் நேத்து எழுதிகிட்டு இருந்ததால படிக்காம போட்ட பதில் அது.படம் பார்த்துட்டு,நீரு இங்கிலீஷ் புக்க்கு லிங்க் கொடுத்து இருந்ததயும் பார்த்துட்டு தோணினது அது.
    கொஞ்ச நேரத்துல முழுசா படிச்சிட்டு வந்து வெட்டுறேன். :)

    ReplyDelete
  11. சித்திரங்களை தணிக்கை செய்து முக்கியமான இடங்களைப் பார்க்காமல் செய்த காதலர் ஒழிக !

    ReplyDelete
  12. ஆரம்பத்தில் சில பத்திகளைப் படிக்கையில், இது அவதார் கதையைப் போலவே இருந்ததை உணர முடிந்தது. சிறுமியின் பெயர் கூட நேவி ! அடடே ! ;-)

    ReplyDelete
  13. சித்திரங்கள் மிக மிக மிக அருமை !

    ReplyDelete
  14. தகவல் மிக அருமை....

    ReplyDelete
  15. தலைவர் அவர்களே, வாலிப வயோதிப அன்பர்களின் களங்கமற்ற ஆன்மாக்களை மனதில் கொண்டே மிகவும் நேர்மையான தணிக்கை அதிகாரியாக நான் நடந்து கொண்டிருக்கிறேன் :))[என்ன ஒரு குரூரம்] தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, பதிவுகளை ஜோடி சேர்த்து வைத்து சாதனை படைத்துவிட்டீர்கள் :))

    நண்பர் கருந்தேள், வாலிப வயோதிப உள்ளங்களின் தூய்மையை பேணிக்காக்கும் தணிக்கை அதிகாரி காதலன் வாழ்க.. அவர் தணிக்கை வெறி ஓங்குக :)) இந்த கதையை நீங்கள் படிக்கும்போது இதற்கும் அவதாரிற்குமிடையில் ஒற்றுமைகள் இல்லை என்பதை அறிவீர்கள். ஆம் சித்திரங்கள் சிறப்பாக இருக்கும்.

    நண்பர் rk guru, கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  16. படித்தேன். வியந்தேன். உங்களுக்கேயுரிய அழகிய எழுத்தில் அசத்தியிருக்கிறீர்கள் நண்பரே.

    ReplyDelete
  17. நன்றி நண்பரே... இதில் முதல் இரு கதைகளை படித்துவிட்டேன்.. முதல் ஐந்து நவிஸ் கதைகள் நன்றாக இருதன...

    ReplyDelete
  18. Information: Most of the (recent) cinebooks are very very low price in INDIAPLAZA.COM. up to 32% discount.

    ReplyDelete
  19. Download links for the first 11 books in english.Thanks to komicslive.com.

    http://www.mediafire.com/?tjl6a2a43aaeb1w
    http://www.mediafire.com/?y9ghleljp4ww9es
    http://www.mediafire.com/?6kzsm0xd3h2scp8
    http://www.mediafire.com/?oyg4txa56ehqbdd
    http://www.mediafire.com/?pomxpdx3ho0bay4

    http://www.megaupload.com/?d=HBIFCHPC

    ReplyDelete
  20. நண்பர் சரவணக்குமார், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ரமேஷ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி , தாங்கள் வழங்கியிருக்கும் சுட்டிகளிற்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  21. நண்பரே!சிறப்பான பதிவு.ஒரு அருமையான கதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

    //இவற்றையும் கொஞ்சம் படிக்க வேண்டாமா .//

    தாங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மையே!சில காலமாக புத்தகங்கள் மற்றும் காமிக்ஸில் இருந்து விலகி,படங்களை நோக்கி நான் அதிகம் நகர்வதாக எனக்கே ஒரு உணர்வு.அதனைக் குறைத்துக்கொண்டு,மறுபடியும் பற்பல புத்தகங்களையும்,காமிக்ஸ்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

    ReplyDelete
  22. நண்பர் இலுமினாட்டி, மீண்டும் வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  23. தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் படித்து..., ஆங்கிலம் புரிந்த பிறகு, அஸ்ட்ரிக்ஸ்& ஒம்ப்லிஸ், டின்டின் கதைககளோடு முடிட்ந்து போனது என் காமிக்ஸ் வாசிப்பு.

    இலுமி மற்றும் உங்களின் காமிக்ஸ் விமர்சனங்கள், காமிக்ஸ் உலகத்தின் வெவ்வேரு பரிணாமங்களை என் போன்றவர்களுக்கு தெரியப் படுத்துவதாக உள்ளது...

    ( இருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது இதன் மேல் இருந்த நாட்டம், வீடு,மனைவி,மக்கள்,வேலை இத்யாதிகளென்று போய் , இப்போது இதன் பால் நாட்டம் குறைவாகவே உள்ளது)

    ReplyDelete
  24. நண்பர் Jey, நீங்கள் கூறுவது உண்மையே ஆனால் தமிழில் காமிக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதற்கான காரணம் அதிக அளவில் காமிக்ஸ் கிடைக்காமையும், காமிக்ஸ் குறித்த ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்குரிய மூலங்களின் பற்றாக்குறையுமே. இலுமியிடம் காமிக்ஸ்களை இரவல் வாங்கி அலுவலகத்தில் வைத்து படித்துப் பாருங்கள், நாள் பறந்தோடிவிடும் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete