Saturday, February 27, 2010

ஷட்டர் ஐலண்ட்

யு. எஸ் மார்ஷல்களான டெடி டானியல்ஸும் [Leonardo DiCaprio], சக்கும் [Mark Ruffalo] பெரி கப்பல் ஒன்றில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட பெண் கைதியான[நோயாளியான] ரேச்சலின் மறைவு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுவதே அவர்களின் நோக்கம்.

தீவை வந்தடையும் அவர்கள் மருத்துவமனையின் பிரபலமான டாக்டர் கோ[வ்]ளியை [Ben Kingsley] சந்தித்து உரையாடுகிறார்கள். டாக்டர் கோளியும் காணமல் போன ரேச்சல், தன் மூன்று குழந்தைகளையும் ஏரியில் அமிழ்த்திக் கொலை செய்தவள் எனும் தகவலை அவர்களிடம் தெரிவிக்கிறார்.

டெடி டேனியல்ஸ், சக் சகிதம் மருத்துவமனையில் தனது விசாரணைகளை ஆரம்பிக்கிறான். தொடரும் விசாரணைகளும், டெடியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும், அவன் தேடல்களும், ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் மனநல மருத்துவமனையில் மிகவும் நிழலான சங்கதிகள் இடம்பெறுகின்றன எனும் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.

சக கைதிகளுடான தன் விசாரணையின்போது லாடிஸ் என்பவன் குறித்து அவர்களிடம் கேள்விகளை எழுப்புகிறான் டெடி, இது குறித்து அறிய விரும்பும் சக்கிடம் தன் மனைவி மரணமாகக் காரணமாக இருந்தவன் லாடிஸ் என்பதை தெரிவிக்கிறான் டெடி……

Shutter Island திரைப்படத்தின் மிக முக்கியமான பாத்திரமான டெடி நம்புவது மேற்கூறியவற்றைத்தான். கதையின் அசர வைக்கும் இறுதித் திருப்பம் வரையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி, திரைக்கு முன் உட்கார்ந்திருக்கும் ரசிகர்களை நம்ப வைக்க விரும்புவதும் இவற்றைத்தான். அதில் அவர் வெற்றி கண்டாரா?!

shutter-island-2010-16142-498014340டெனிஸ் லுஹென் எழுதிய நாவலை அல்லது அதனைத் தழுவி உருவாகிய சித்திர நாவலைப் படித்து அதில் மயங்கி திரைப்படத்தைக் காணச் சென்ற ரசிகர்கள், ஸ்கோர்செஸியின் ரசிகர்கள், டிகாப்ரியோவின் ரசிகர்கள், கதை+ நடிகர்+ இயக்குனர் எனும் முக்கூட்டணியின் விளைவாக உருவாகும் ஒரு திறமையான படைப்பை எதிர்பார்த்துச் சென்ற சினிமா ரசிகர்கள்: இவர்களில் முழு விருந்து உண்டு, பிராந்தி ஒரு பெக் அடித்து, பீடா போட்டு வயிற்றைத் தடவிவிடும் அதிர்ஷ்டம் கிடைத்த பாக்கியசாலிகள், டிகாப்ரியோவின் ரசிகர்கள். அடுத்து வருபவர்கள் முக்கூட்டணியின் ரசிகர்கள். ஸ்கோர்செஸியின் ரசிகர்களை திரைப்படம் முழுமையாக திருப்தி செய்யுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகும்!!

அலைகளின் மேல் உலவும் வெண்புகாரைக் கிழித்துக் கொண்டு பெரி கப்பலானது ஷட்டர் தீவை நோக்கி வந்து கொண்டிருக்கும் போதே காட்சிகள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்து விடுகின்றன. அவ்வேளையில் கப்பலிலிருந்து ஒலிக்கும் ஹாரன் ஒலியே பின்னனி இசையாக மாறி மிரட்டுகிறது. டெடியின் விசாரணைகள், அவன் கண்டுபிடிக்கும் தகவல்கள், அவனின் ரகசியத் தேடல்கள் என பரபரப்பாக நகர்கிறது திரைப்படம்.

டெடி, ப்ரீன் எனும் நோயாளியை விசாரணை செய்யும் தருணத்தில், ப்ரீன் அவனிற்கு கூறும் தகவல்களால் கொதிக்க ஆரம்பிக்கும் டெடி, தன் நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் கிறுக்க ஆரம்பிப்பான். அவனின் உள்ளத்தில் வெடிப்பதற்காகத் துடிக்கும் அழுத்தம் மிகுந்த அந்த வன்முறையை ஸ்கோர்செஸி, பென்சில் கிறுக்கலில் உள்ள வன்மம், மற்றும் அந்தக் கிறுக்கல் எழுப்பும் ஒலி வழியாக அசத்தும் விதத்தில் காட்டியிருப்பார்.

shutter-island-2009-16142-2039497793 இவ்வகையான சில காட்சிகளைத் தவிர டெடியின் விசாரணைக்காட்சிகளும், தேடல்களும் ரசிகர்களை தமது பிடிக்குள் வைத்துக் கொள்ள சிறிது சிரமப்படவேண்டியிருக்கிறது.

பின்பு வரும் திரைப்படத்தின் உச்சக் கட்டக் காட்சிகள் லாவகமாக ரசிகர்களை மீண்டும் தமது அணைப்பிற்குள் எடுத்துக் கொள்கின்றன. இதற்குப் பிரதான காரணம் டிகாப்ரியோவின் அசர வைக்கும் நடிப்பு.

மிகவும் கனமான, சிக்கலான பாத்திரத்தை அற்புதமாக விளையாடியிருக்கிறார் டிகாப்ரியோ. உச்சக் கட்டக் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு இதுவரை அவர் திரையில் வழங்கியவற்றிலேயே மிகவும் சிறப்பானது என்பதை உறுதியாகச் சொல்லலாம். படத்தையே தூக்கி வைத்திருப்பது அவர்தான் என்று யாராவது கூறினால்கூட அது மிகையற்ற ஒன்றே. தன் சிஷ்யனை, பட்டை தீட்டோ தீட்டென தீட்டியிருக்கிறார் ஸ்கோர்செஸி.

டிகாப்ரியோவுடன் ஒப்பிடுகையில் பென் கிங்ஸ்லி, மார்க் ரூஃபலோ ஆகியோரின் பாத்திரங்கள் திரைப்படத்தில் அடங்கிப் போய்விடுகின்றன. இருப்பினும் மிகக் குறைந்த நேரமே படத்தில் தோன்றினாலும் டாக்டர் நேரின்ங்[Max Van Sydow], மற்றும் மனநோயாளியான ஜார்ஜ் நொய்ஸ்[Jackie Earle Haley] ஆகியோர் மனதில் இலகுவாகப் பதிகிறார்கள்.

1950களில் மனநோயாளிகள் மீது சுமத்தப்பட்ட மிருகத்தனமான சிகிச்சை முறைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, உளவியல் மருத்துவத்தின் நவீன முறைகளை பயன்படுத்த விரும்புபவராக முன்னிறுத்தப்படுகிறது டாக்டர் கோளியின் பாத்திரம். தந்திரமும், மென்மையான மர்மம் சூழ்ந்ததுமான ஒரு பாத்திரமாக கதையில் அறியப்படும் இம்முக்கிய பாத்திரம் திரைப்படத்தில் முழு நிறைவை அடைந்து விடவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் பென்கிங்ஸ்லி அசரடிக்க தவறுகிறார்.

shutter-island-2010-16142-922656245 அணைக்க வேண்டிய தருணத்தில் அணைத்து, மிரட்ட வேண்டிய வேளையில் மிரட்டி, உருக்க வேண்டிய கணங்களில் உருக்கி அசத்துகிறது Robbie Robertsonன் மேற்பார்வையில் ஒலிக்கும் இசை. புயல் அடிக்கும் தீவு, இருளான, நிழலான மர்மம் உறையும் வராந்தாக்கள், அறைகள், பளீரெனப் பிரகாசிக்கும் கற்பனைக் காட்சிகள் என சிறப்பாக இருக்கிறது Robert Richardsonன் ஒளிப்பதிவு. திரைப்படத்தில் வரும் உள் அலங்காரங்கள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆக எஞ்சுபவர்கள் கதையை ஏற்கனவே படித்து, அந்த இறுதி திருப்பத்தை அறிந்து கொண்டு, ஸ்கோர்செஸியின் கைகளில் இக்கதை எவ்விதமாகப் பரிமாறப்படும் என்பதை ஆவலுடன் திரையில் காணச் சென்ற ரசிகர்கள். அவர்களை ஸ்கோர்செஸி ஏமாற்றி விடவில்லை. டிகாப்ரியோவின் கவர்ச்சிப் புலத்திற்குள்ளும் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் [உம்- அடியேன்]

shutter-island-2010-16142-1584043848 கதையின் முடிவை அறிந்தவர்களிற்கு இயக்குனர் ஸ்கோர்செஸி வழங்குவது என்ன? டெடி டானியல்ஸ் எனும் பிரதான பாத்திரத்தை சுற்றி இருக்கும் ஏனைய பாத்திரங்களின் செயல்களும், நகர்வுகளுமே அவர்களிற்கு விருந்தாக அமைகிறது. கதையின் முடிவைத் தெரிந்து கொண்டு, டெடியைச் சூழ இருப்பவர்களின் ரியாக்‌ஷன்களை காண்பது ஒரு வேறு வகையான அனுபவம். அதில் தன் திறமையைத் தவறாது காட்டியிருக்கிறார் இயக்குனர். எனவேதான் இத்திரைப்படமானது இரு தடவைகள் பார்த்து ரசிக்க வேண்டிய படமாகிறது. முதல் தடவை கதையின் முடிவை தெரியாது படத்தைப் பார்த்தவர்கள் திரைப்படத்தை மீண்டும் காணும்போது அந்த காட்சிகள் தரும் அர்த்தம் வேறாக இருக்கும். எனவே அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள்!

கிழட்டுப் புலி ஸ்கோர்செஸி 16 அடிகள் பாயவில்லை ஆனால் 14 அடிகள் வரை பாய்ந்திருக்கிறது. மேலும் டிகாப்ரியோவின் அருமையான நடிப்பிற்காகவாவது எல்லா ரசிகர்களும் பார்க்க வேண்டிய படமாக இது அமைகிறது. டிகாப்ரியோ என்ன பெரிய கொம்பனா என்று நீங்கள் எண்ணியிருப்பீர்கள் எனில் இத்திரைப்படம் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள உதவும். [***]



ட்ரெயிலர்

16 comments:

  1. அப்ப டிகாப்ரியோவுக்கு அடுத்த அகாடமி அவார்டாவது கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகின்றது நண்பா... பகிர்தலுக்கு நன்றி...
    கிழட்டு புலி 14 ஆடி பாயுதுல்ல அது போதும்...

    ReplyDelete
  3. காமிக்ஸ் நண்பர்களே,

    வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?
    புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

    இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
    காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

    ReplyDelete
  4. காதலரே . . இந்தப் படத்தைப் பற்றியே உங்கள் வலைப்பூவில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் . . இங்கு வரட்டும்.. பார்த்து விடுகிறேன் . . டி வி டியில் இப்படத்தைப் பார்க்க இஷ்டமில்லை . . .

    ReplyDelete
  5. நண்பர் அண்ணாமலையான் அவர்களே கருத்துக்களிற்கு நன்றி. தமிழிஷில் செஞ்சுரி போட்டதற்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்.

    நண்பர் தர்ஷன், அகடாமி அவார்ட் கிடைக்காவிடிலும் கூட அவரது நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அடுத்த வருடம் பார்க்கலாம், விடை தெரிந்து விடும். கருத்துக்களிற்கும், வருகைக்கும் நன்றி நண்பரே.

    டெக்‌ஷங்கர், படங்களைப் பார்த்தேன் ரசித்தேன். வருகைக்கும், கருத்துக்க்களிற்கும் நன்றி நண்பரே.

    டார்லிங் பூங்காவனம், இன்ஸ்பெக்டர் இன்பராஜ் உன் வளமான, வாளிப்பான முதுகுக்குப் பின்னால் செய்யும் செயல்கள் உனக்குத் தெரியாது. அந்தப் பையை செக் செய்கையில் இன்பராஜின் ***** அதில் காணப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா டார்லிங். காதலன், பூங்காவனத்தின் ஒரேயொரு உண்மைக் காதலன்.

    நண்பர் கருந்தேள், திரைப்படம் அங்கு திரைக்கு வருமுன் முடியுமானால் நாவலைப் படித்து விடுங்கள். திரைப்படத்தைக் காணும்போது உங்கள் அனுபவம் வேறாக இருக்கும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. நண்பர் ஜாக்கி சேகர், படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களைப் பதிவாக பகிர்ந்து கொள்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. ஸ்கார்சிசீ படங்களின் வெறியன் நான். அந்த வகையில் இந்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  8. காதலரே,

    டி கேப்ரியோவை பற்றி எழுதும்போது அவரின் பட வாழ்க்கையை இரண்டு விதமாக பிரிக்க வேண்டும்.

    2002 ஆண்டுக்கு முன் மற்றும் 2002 ஆண்டுக்கு பின் என்று. என்னதான் டைடானிக் சிறந்த வெற்றிப்படமாக இருந்தாலும் அதில் லியோவின் நடிப்பு ஒன்றும் சிறப்பில்லை.

    எப்போது அவர் ஸ்கார்சிசி என்ற குருவிடம் வந்து நடிக்க ஆரம்பித்தாரோ (கேங்க்ஸ் ஆப் நியூயார்க்) அன்று முதல் அவரின் நடிப்பு சிறப்பாக மெருகூட்டப்பட்டு வருகிறது என்பது என் கணிப்பு. என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  9. விஸ்வா, நீங்கள் கூறுவது சரியே. இன்று ஸ்கோர்செஸி அதிகம் இயக்க விரும்பும் நடிகராக டி காப்ரியோ இருக்கிறார் என்று கருதுகிறேன். அவரின் இயக்கத்தில் டிகாப்ரியோ புதிய பரிமாணம் கொண்டிருக்கிறார். படத்தை தவறாது பார்த்திடுங்கள். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. நண்பர்களே,

    புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். வந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிக்கவும்.

    நன்றி.

    http://kingofcrooks.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  11. Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

    http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  12. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே
    இன்னமும் கிடைக்கவில்லை. கண்டிப்பாக பர்ர்த்துவிடுவேன். நீண்ட நாள் ஆயிற்றே ஏதேனும் நாவல் பற்றி...

    ReplyDelete
  13. நண்பர் வேல்கண்ணன், சித்திர நாவல் ஒன்று குறித்த பதிவை விரைவில் பதிவிடுகிறேன். நல்ல பிரதியில் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  14. காதலரே,

    ஒரு வழியாக இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கைகிட்டியது. நல்ல டிவிடி பிரதிக்கான காத்திருப்பு, அந்த மிரட்டும் பிண்ணணி இசை மற்றும் ஒளி மாற்ற காட்சிகளின் ரூபத்தில் சரியான பரிசாகவே அமைந்து விட்டது. ஆரம்ப காட்சியில் அனாமதேய தீவை ஒரு கிலியூட்டும் பார்வையில் நெருங்கும் காமரா கோணம், கடைசி காட்சி வரை பிரமிக்க வைக்கிறது.

    பிண்ணணி இசை, வித்தியாசமான வெளிச்சம் மிகுந்த பிளாஷ்பேக் காட்சிகள், பென் கிங்க்ஸ்லியின் அலட்டல் இல்லாத கம்பீர நடிப்பு, என்று பல விடயங்கள் பிரகாசித்தாலும், நீங்கள் கூறியது போல படத்தை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அப்பழுக்கில்லாமல் தன் உயர்ந்த நடிப்பால் பிரகாசிக்க வைப்பது டி காப்ரியோ தான் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

    சமீபத்திய டிகாப்ரியோவின் படங்களில் அவர் காட்டி வரும் நடிப்பு முதிர்ச்சி தன்மை, இவரா டைட்டாடினிக்கில் சாக்லெட் பாய் போல வந்து போனவர் என்று ஆச்சர்யபடுத்த வைக்கிறது. கடைசி காட்சியில் ஒரு வித பதட்டத்துடன் நடுங்கும் விரல்களில் அவர் உண்மையை சகித்து கொள்ள முயலும் அந்த கட்டம், இது வரை பார்த்திராத டிகாப்ரியோவின் ஒரு முகத்தை வெளிச்சமிட்டிருக்கிறது.

    கிழட்டு புலி ஸ்கோர்ஸிகியின் வடிவமைப்புக்கு ஹாட்ஸ் ஆப். படம் சக்கை போடு போட்டு ஓடியது சிறந்த பரிசே. முடிச்சுகளை அவிழ்க்காத தரமான விமர்சனத்திற்கு நன்றிகள் காதலரே.

    ReplyDelete
  15. ரஃபிக், நல்ல ஒரு டிவிடிப் பிரதியில் நீங்கள் இந்த படத்தை பார்த்திருப்பது மகிழ்சியை அளிக்கிறது. டிகாப்ரியோவின் அருமையான நடிப்பை என்னவென்று கூறுவது. தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete