Tuesday, February 9, 2010

நாணல்களுடன் ஆடும் நடனம்


பரந்து விரிந்த நாணல் புற்பரப்பு. காற்று, நாணல்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறது. காற்றின் முனகல் கடல் அலைகள் போல் ஒலிக்கிறது. அந்தப் பழுப்பேறிய புற்பரப்பினூடாக தயங்கிய அடிகளில் நடந்து வருகிறாள் அந்தப் பெண். சற்று வயதானவள். கண்களில் அயர்ச்சி கலந்த சோகம். தன் நடையை ஒரு கணம் நிறுத்தி அழுக்கேறிய தன் கைகளைப் பார்க்கிறாள் அவள். புற்களிற்குள் உறையும் பூச்சிகளின் கீறிய குரல் காற்றுடன் சேர்ந்து கொள்கிறது. மனதில் ஏற்படும் ஏதோ ஒரு உந்தலில் திடீரென நடனமாட ஆரம்பிக்கிறாள் அவள். அந்த நடனத்தில் மெதுவாக அவள் தன்னை மறக்கிறாள். நாணல்களும், காற்றும், அவளும் இணைந்த பெரு நடனத் தருணமது………

டோ யூன், தென்கொரியாவின் ஒரு சிறிய நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வரும் மன நலம் குன்றிய ஒரு இளைஞன். மூலிகைக் கடை ஒன்றை பிழைப்பிற்காக நடாத்தி வரும் அவன் தாய், அவன் மேல் நிறைந்த பாசமும், அக்கறையும் கொண்டவளாக இருக்கிறாள். மூலிகைக் கடையின் மூலமாக வரும் வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாவிடினும் கூட தனது மகனை மிகுந்த ஆதரவுடன் பராமரித்து வருகிறாள் அந்தத் தாய்.

டோ யூனின் சிறந்த நண்பணாக ஜின் டே இருக்கிறான். துடிதுடிப்பான இளைஞன் அவன். டோ யூனின் தாய் அவனை ஜின் டேவுடன் பழக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாலும், ஜின் டேவுடன் தன் காலத்தைக் கழிப்பதை டோ யூன் தொடர்கிறான்.

ஒரு நாள் தெருவில் ஜின் டே சகிதம் நாய் ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருக்கும் டோ யூன்னை பென்ஸ் கார் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்று விடுகிறது. டோ யூன் அடிபடாது தப்பி விடுகிறான். பென்ஸ் கார் நிற்காமல் சென்றதால் கோபம் கொள்ளும் ஜின் டே, டோ யூனுடன் டாக்ஸி ஒன்றில் பென்ஸை தொடர்ந்து செல்கிறான்.

800px-Mother-05 பென்ஸ் கார் நுழைந்த கோல்ஃப் மைதானத்திற்குள் நுழையும் நண்பர்களிருவரும், மைதானத்தின் கார் நிறுத்தும் பகுதியில் அந்த பென்ஸைக் கண்டு கொள்கிறார்கள். பென்ஸ் காரின் பின்காட்டி ஒன்றை கோபத்துடன் உடைத்து விடுகிறான் ஜின் டே. இதன் பின்பு நண்பர்களிருவரும் காரில் வந்த நபர்களை மைதானத்தில் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இந்த தேடலின்போது கோல்ஃப் மைதானக் குளத்தில் அமிழ்ந்து கிடந்த கோல்ஃப் பந்துகள் சிலவற்றை தன்னுடன் எடுத்து வைத்துக் கொள்கிறான் டோ யூன். சில மணிநேரத் தேடலின் பின்பாக பென்ஸ் காரில் வந்தவர்களை கண்டு கொள்ளும் நண்பர்களிருவரும் அவர்களுடன் கைகலப்பில் இறங்குகிறார்கள்.

மைதானத்தில் ஆரம்பித்த கைகலப்பு பொலிஸ் நிலையத்தில் வந்து முடிவடைகிறது. இரு தரப்பின் முறைப்பாடுகளையும் பொலிஸ் விசாரிக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் நிலைய மேசையிலிருந்த ஒரு அழியா மைப் பேனாவை எடுக்கும் டோ யூன், தன் பெயரை அப்பேனாவினால் கோல்ஃப் பந்துகள் மேல் எழுதுகிறான்.

காரால் ஒருவரை மோதிவிட்டு நிறுத்தாமால் சென்றது தவறு என்று பொலிஸ் கூறும்போது, பென்ஸ் காரில் வந்தவர்கள், தங்கள் காரின் பின்காட்டி உடைக்கப்பட்டுள்ளதை ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர். ஜின் டே, பின் காட்டியை உடைத்த பழியை டோ யூன் மீது சுமத்தி விடுகிறான். இதனால் பென்ஸ் காரில் வந்தவர்களிற்கு நட்டஈடு கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான் டோ யூன்.

டோ யூன் பொலிஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து கொள்ளும் அவன் தாய், அவனைத்தேடி பொலிஸ் நிலையத்திற்கு வருகிறாள். பொலிசாரிடம் பேசி டோ யூனை ஒருவாறாக வீட்டிற்கு அழைத்து வருகிறாள். பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்புவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் எனக்கூறியவாறே அவனிற்கு உணவு பரிமாறுகிறாள் அவள்.

800px-Mother-10 இருவரும் சாப்பிட்டவாறே உரையாடுகிறார்கள். அவர்கள் உரையாடல்கள் டோ யூனின் பெண் நண்பி மீதாகத் திரும்புகிறது. தனக்கு ஒரு பெண் நண்பி இருப்பதாக தாயிடம் பிடிவாதமாகக் கூறுகிறான் டோ யூன். டோ யூனின் வெற்றுப் பிரதாபங்களைக் கேட்கும் அவள் தன் மகனைப் பார்த்து ஆதரவுடன் சிரிக்கிறாள்.

அன்று மாலை ஜின் டேயைத் சந்திப்பதற்காக மன்ஹாட்டன் எனும் மதுபான விடுதிக்கு செல்கிறான் டோன் யூ. அங்கு ஜின் டேவின் வரவிற்காக காத்திருக்கும் அவன் பீர்களைக் குடித்து சற்றுப் போதையேறி உறங்கிவிடுகிறான். ஜின் டே அன்று அங்கு வரவில்லை. விடுதியில் வாடிக்கையாளர்களுடன் உரசும் பெண்ணுடன் ஒரு விடயத்தை முயன்று பார்க்க விழைகிறான் டோ யூன். ஆனால் அவனது அம்முயற்சி பலனளிக்கவில்லை.

வித்தைகள் அறியாத டோ யூனை ஒதுக்கி விட்டு வேறு வாடிக்கையாளர்களுடன் உரசச் செல்கிறாள் அவள். இரவு பறக்கிறது, மதுபான விடுதியை மூட விரும்பும் பெண், டோ யூனை அங்கிருந்து வெளியேற்றுகிறாள். குடித்த பீர்களிற்காக தன் பெயர் எழுதிய கோல்ஃப் பந்துகளை அந்தப் பெண்ணிற்கு தரவிரும்புகிறான் டோ யூன், ஆனால் அவள் அதை மறுத்து விடுகிறாள்.

தெரு விளக்குகளில் இருந்து ரகசிய இழையாக வழியும் காமத்தினூடு, பீர் தந்த மயக்கமும், பெண் சுகம் கேட்கும் உடலும் சேர்ந்து, அந்த இரவில் தெருக்களில் தள்ளாடியவாறே நடந்து செல்கிறான் டோ யூன். செல்லும் வழியில் ஒரு இளம் மாணவியைக் கண்டு கொள்கிறான் அவன்.

அழகான அப்பெண்ணை உடனடியாகப் பின்தொடர ஆரம்பிக்கிறான் அவன். அப்பெண்ணை பின் தொடர்ந்தவாறே அவளை நோக்கி சில அழைப்புக்களை விடுக்கிறான் டோ யூன். ஆனால் அவளோ எந்தப் பதிலையும் தராது இருள் தழுவிய குறுகிய சந்துகளினுள் நடந்து செல்கிறாள்.

800px-Mother-17 ஒரு சிறிய சந்தில் நுழையும் இளம் பெண்ணை தொடர முயலும் டோ யூனை, அந்த சந்திலிருந்து வேகமாக அவனை நோக்கி வந்து விழும் ஒரு கல் தடுத்து நிறுத்துகிறது. இந்நிகழ்வால் உருவாகும் அச்சம் காரணமாக அப்பெண்ணைப் பின் தொடராது தன் வீடு திரும்பும் டோ யூன், தன் தாயின் அருகில் அவளை அணைத்தவாறே படுத்து உறங்கிப் போகிறான்.

மறுநாள் காலை டோ யூன் பின் தொடர்ந்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒரு பழுதடைந்த வீட்டின் மொட்டை மாடிச் சுவரின் மீது குறுக்காக போடப்பட்டிருக்கிறாள். இக்கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கும் பொலிஸ் அதிகாரிகள் டோ யூனின் பெயர் எழுதப்பட்ட கோல்ஃப் பந்தை கொலை நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கிறார்கள்.

இதன் விளைவாக டோ யூனை பொலிசார் கைது செய்கின்றனர். பொலிஸ் விசாரணையில் அப்பெண்ணை தான் கொலை செய்யவில்லை என டோ யூன் மறுத்தாலும் அவனிடம் தந்திரமாகப் பேசி கொலையை செய்ததை அவன் ஒப்புக் கொண்டதாக விரல் ரேகை ஒப்பத்தை வாங்கி விடுகின்றனர் பொலிஸ் அதிகாரிகள்.

பொலிஸ் நிலையம், வக்கீல், என ஓய்வின்றி கண்ணீருடன் அலைகிறாள் டோ யூனின் தாய். தனது மகன் ஒரு சிறு உயிரிற்குகூட தீங்கு செய்ய மாட்டான் என்று அழுகிறாள் அவள். ஆனால் கொலைக்கேஸை தகுந்த விசாரணைகளின்றி விரைவில் முடித்துவிட ஆர்வம் காட்டும் திறமையற்ற பொலிசார், டோ யூனின் விவகாரம் முடிந்து விட்டது என்று கையை விரிக்கிறார்கள்.

மதுபான விடுதிகளில் இளம் பெண்களுடன் சல்லாபம் கொஞ்சும் அவள் வக்கீலோ, டோ யூனின் சிறைத்தண்டனை மனநல மருத்துவமனையிலேயே கழியும் என்பதால் தண்டனையை ஏற்றுக் கொள்வதே நல்லது என அவளிற்கு ஆலோசனை வழங்குகிறார். தன் மகன் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வறுமையில் வாடும் அந்த தாய் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவேயில்லை.

800px-Mother-08 800px-Mother-16 ஆனால் டோ யூனின் தாய், தன் மகன் மேல் கொண்ட பாசத்தாலும், நம்பிக்கையாலும் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குறித்து விசாரிக்க ஆரம்பிக்கிறாள். அவள் தேடல்களும், அவள் அறிந்து கொள்ள ஆரம்பிக்கும் தகவல்களும் அவளை ஒரு அதிரவைக்கும் உண்மையை நோக்கி அழைத்து செல்ல ஆரம்பிக்கின்றன…..

தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் ஒரு தாய் செல்லக்கூடிய எல்லைகளை திரையில் வடிக்கிறது Mother எனப்படும் இந்த தென் கொரியத் திரைப்படம். படத்தை இயக்கியிருப்பவர் Memories of Murder எனும் சிறப்பான படைப்பை வழங்கிய Joon-ho Bong.

ஒரு கொலையைத் துப்பறியும் படத்திற்குரிய மிகைப்படுத்தப்பட்ட பரபரப்புக்கள் எதுவுமின்றி இயல்பாக நகர்கிறது திரைக்கதை. அந்த இயல்பான நகர்விலும் திரைக்கதை தனக்கேயுரிய திருப்பங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

மெதுவான நகர்தலால் மிக நீண்ட படம் போல் தோற்றம் தந்து, வேகப்பட ரசிகனை ஏமாற்றிவிடக்கூடிய இத்திரைப்படம், திறமையான இயக்குனர் ஜூன் வோங்கின் கைகளில் சிறப்பான ஒரு படைப்பாக உருமாறி, அழகான தருணங்களை தன் மடிப்புகளில் ஒளித்து வைத்திருக்கிறது.

ஜூன் வோங், படமாக்கலில் அழகியலை தூரமாக தள்ளி வைத்து விட்டு, எந்த வித அலங்காரங்களுமின்றி தென் கொரியாவின் சிறு நகரமொன்றின் நடப்பு நிலைகளை யதார்த்தமாக படம் பிடித்துள்ளார். நவீன அலங்காரங்கள், பிரம்மிக்க வைக்கும் ஒளியமைப்புக்கள் மூலம் காட்சிகளை மெருகு படுத்தாது கதை நிகழும் சூழலோடும், பாத்திரங்களோடும், முக்கியமாக கதையோடும் பார்வையாளனை ஒப்பனையின்றி நேர்கொள்ள செய்கிறார் அவர்.

Mother வசதியற்ற ஒரு தாயின் போராட்டம், வேலையற்ற இளைஞர்களின் நிலை, பணம் ஈட்ட மாணவிகள் தேடும் வழிகள், பணம் படைத்தவர்களினதும், அதிகாரம் கொண்டவர்களினதும் உண்மை முகங்கள், தங்கள் கடமைகளை சரிவரச் செய்யத்தவறும் பொலிஸ், வக்கீல் என ஒரு சிறிய கொரிய நகர சமூகத்தின் அவல நிலையின் சில கூறுகளை கூச்சமின்றி எம்முன் வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் மர்ம முடிச்சு விலகும் தருணம் மிகுந்த அதிர்ச்சியை தரும். அதே போன்று அதனைப் பின் தொடரும் காட்சிகள் மனதை உறையவும், நெகிழவும் செய்யும். அக்காட்சிகளை கவிதை போல் அழகாகக் கோர்த்திருக்கிறார் ஜூன் வோங். குறிப்பாக பொலிஸ், கொலைக் குற்றவாளி என டோ யூனின் தாய் முன்பாக நிறுத்தும் பிறிதொரு மனநலம் குன்றிய இளைஞனுடன் அத்தாய் நிகழ்த்தும் உரையாடலும், பின் தன் மனதில் அழுத்தும் பாரம் தாங்காது வெடித்து அவள் அழுவதும் அற்புதமான ஒரு தருணம்.

டோ யூனின் தாயாக வேடமேற்றிருக்கும் நடிகை Kim Hye-ja அபாரமான தெரிவு. இரக்கம் கலந்த பார்வையும், குறுகிய தோள்களும், தளர்ந்த mother-1 நடையுமாக அவர் வழங்கும் நடிப்பு அருமை. கண்களிலும், முகத்திலும் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி அசத்துகிறார் அவர். மன நலம் குன்றிய முட்டாள் இளைஞன் டோ யூனாக நடிகர் Won Bin அப்பாவித்தனமாக கச்சிதமாக நடித்து விடுகிறார். வேலையில்லா இளைஞனாக வரும் ஜின் டே பாத்திரத்தில் நடிகர் Jin Ku கம்பீரமான நடிப்பில் மிளிர்கிறார்.

நிதானமாக நகரும் ஒரு படத்தை ரசிக்க வேண்டிய பொறுமையும், ஆர்ப்பாட்டமில்லாத மெதுவான கதை சொல்லல் ஒன்றினுள் பொதிந்திருக்கக்கூடிய உள்ளழகைக் கண்டு கொள்ளும் பக்குவமும் உள்ள ரசிகர்களிற்கு Mother பிடித்துக் கொள்ளும் ஒரு படைப்பாக அமையும்.

பாசத்திற்காக மனிதர்கள் கடந்துவிடக்கூடிய எல்லைகளின் தீவிரங்களை தொட்டு விடுபவளாக அதிர வைக்கும் இந்தத் தாய், தன் பாசத்தாலும், பலவீனத்தாலும் ரசிகர்களின் மனங்களை நெகிழவும் வைக்கிறாள். நாணல்களுடன் அவள் ஆடும் நடனம், வலி நிறைந்த பாசத்தின் ஓவியம். [***]

ட்ரெயிலர்

6 comments:

  1. காதலரே . . மறுபடியும் ஒரு அழகான விமர்சனம். மிகவும் நல்ல கதை. நீங்கள் எழுதும் அனைத்து படங்களையும் சேர்த்து வைத்து, ஒரு மழை பெய்யும் வார இறுதியில், எனது தோழியுடன் ஒரே மூச்சில் பார்க்கப் போகிறேன்.
    ---
    இதைப் போன்ற நல்ல படங்களில், அந்த கோல்ப் பந்தில் பெயரை எழுதுவது போன்ற சில முத்திரைக் காட்சிகள் வரும். அந்தக் காட்சிகளே படத்தைப் பற்றி நினைக்கும்போது நம் நினைவிற்கு வரும்.

    அருமை . .

    ReplyDelete
  2. நண்பரே உங்களின் பதிவை படித்தவுடன் அதனை காண முயற்சி மேற்கொள்வேன்.
    கடந்த பதிவை படித்த இன்னும் கிடைக்காமல் தேடுகிறேன். அப்படியான விபத்து
    இதனில் நிகழாது என்று நினைக்கிறன். இந்த பதிவில் உங்களின் பார்வையின் ஆழம் மேலும்
    கூடியிருப்பதாக உணர்கிறேன். சரிதானே.. ? நண்பரே..

    ReplyDelete
  3. நண்பர் கருந்தேள், பார்த்து ரசித்து இன்புறுங்கள். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் வேல்கண்ணன், இத்திரைப்படம் உங்களிற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. திரைப்படமே பார்வையின் ஆழத்தை நிர்ணயிக்கிறது என்று எண்ணுகிறேன். நீங்கள் உணர்ந்தது சரியே. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. //பரந்து விரிந்த நாணல் புற்பரப்பு. காற்று, நாணல்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறது. காற்றின் முனகல் கடல் அலைகள் போல் ஒலிக்கிறது. அந்தப் பழுப்பேறிய புற்பரப்பினூடாக தயங்கிய அடிகளில் நடந்து வருகிறாள் அந்தப் பெண். சற்று வயதானவள். கண்களில் அயர்ச்சி கலந்த சோகம். தன் நடையை ஒரு கணம் நிறுத்தி அழுக்கேறிய தன் கைகளைப் பார்க்கிறாள் அவள். புற்களிற்குள் உறையும் பூச்சிகளின் கீறிய குரல் காற்றுடன் சேர்ந்து கொள்கிறது. மனதில் ஏற்படும் ஏதோ ஒரு உந்தலில் திடீரென நடனமாட ஆரம்பிக்கிறாள் அவள். அந்த நடனத்தில் மெதுவாக அவள் தன்னை மறக்கிறாள். நாணல்களும், காற்றும், அவளும் இணைந்த பெரு நடனத் தருணமது………///

    நீங்க நாவல் எழுதி இருகிறீர்களா....இல்லை எனில் உடனே எழுத துவங்குங்கள்... :) simply superb

    ReplyDelete
  5. நேரம் இருந்தா இதை படிங்க...
    http://krnathan.blogspot.com/2010/02/13-tzameti-french.html

    ReplyDelete
  6. நண்பர் ரகுநாதன் உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. பதிவை வார இறுதிக்குள் படித்துவிடுகிறேன் :)

    ReplyDelete