Friday, January 15, 2010

கற்களை வீசிய புனிதர்கள்


கிறிஸ்துவிற்கு பின் நான்காம் நூற்றாண்டு. எகிப்தின் பிரபலமான துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியா, எண்ணற்ற அறிஞர்களின் எழுத்துக்கள் நிரம்பிய அதன் நூலகத்திற்கும், மத்திய தரைக்கடலை கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கும் அதன் கலங்கரை விளக்கத்திற்கும் பேர் போனது.

அலெக்ஸாண்ட்ரியா நகரம் ரோம அதிகாரத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நகரமாகும். கிரேக்க ரோம நாகரீகம் அங்கு மேலோங்கியிருந்தது. பேகான் தெய்வங்களின் [ கிறிஸ்தவ, இஸ்லாம், யூத கடவுள்கள் அல்லாத தெய்வங்கள்] வழிபாடுகள் விமரிசையாக அங்கு இடம்பெற்றன. இவற்றையெல்லாம் ஆட்டிப்பார்க்கப் போகும் காற்று ஒன்று அலெக்ஸாண்ட்ரியா தெருக்களில் மெதுவாக உயிர் கொள்ள ஆரம்பித்திருந்தது. அக்காற்றின் பெயர் கிறிஸ்தவம்.

கிறிஸ்தவம் வறியவர்களை பசியாற்றியது, அடிமைகளை அணைத்தது, அலெக்ஸாண்ட்ரியாவின் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதன் வேரிற்கு தீர்ந்து விடாத நீராக அமைந்தன. அதிகாரத்தின் கண்களிற்கே தெரியாது அது தன் ஆதிக்கத்தை அக்காலத்தில் பெருக்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தது.

அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகத்தில் தன் மாணவர்களிற்கு விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறாள் ஹிப்பேசியா(Hypatia). நாலகத்தின் சாளரங்கள் வழி உள்ளே நுழையும் சூரியக்கதிர்கள் அவளைத் தங்கள் தூரிகைகளால் தேவதையாக தீட்டி விட்டிருந்தன.

ஹிப்பேசியா, தத்துவ ஞானி, கணித மேதை, வான சாஸ்திர விஞ்ஞானி என பல முகங்கள் கொண்டவள். கடவுள் நம்பிக்கை அற்றவள். பிறர்பால் அன்பும், அவர்களின் வாழ்க்கை முறைகள் மேல் மதிப்பும் கொண்டவள். அவள் மாணவர்களில் கிறிஸ்தவர்கள், பேகான்கள் எனப் பலரும் கலந்திருக்கிறார்கள். எல்லா மாணவர்களையும் சமமாகக் கருதும் ஆசான் அவள்.

agora-trailer-epique-dernier-amenabar-L-6 ஹிப்பேசியாவின் தந்தையான தியோன், அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் இயக்குனராக செயற்பட்டு வருகிறார். அவரிடம் சேவை செய்யும் பல அடிமைகளில் இளைஞன் டேவுஸும் ஒருவன். ஹிப்பேசியா பாடங்களை நடாத்தும்போது அவற்றை அருகிலிருந்து கூர்மையாக அவதானிக்கிறான் டேவுஸ். இவ்வழியாக தன் அறிவைக் கணிசமாகப் பெருக்கி கொள்கிறான் அவன்.

தன் எஜமானி ஹிப்பேசியா மீது ரகசியமான ஒரு காதலையும் தன் உள்ளத்தில் வளர்த்து வருகிறான் இளைஞன் டேவுஸ். தனது அடிமை தளையிலிருந்து விடுதலை பெற விரும்பும் அவன், அலெக்ஸாண்ட்ரியாவில் பரவும் புதிய மதமான கிறிஸ்தவத்தின் கொள்கைகளில் பிடிப்புற்று யாரிற்கும் தெரியாது அம்மதத்தை தழுவிக் கொள்கிறான்.

ஹிப்பேசியாவிடம் கல்வி கற்கும் மாணவனான ஒரெஸ்டிஸும் (Orestes) அவள் மீது தன் மனதை இழந்தவனாக இருக்கிறான். கடவுள் மற்றும் அவரது சிருஷ்டியாக்கம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் ஒரெஸ்டிஸ். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவன். உயர்ந்த பதவிகள் அவனிற்காக காத்திருக்கின்றன.

தன் சக கிறிஸ்துவ மாணவனான சினேசியஸ் (Synesius) கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை நிறைந்த கருத்துக்களுடன் உடன்படாதவனாக இருக்கிறான் ஒரெஸ்டிஸ். இவர்களின் வாக்குவாதங்கள் மோதல்களை நெருங்கிவிடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இவர்கள் இருவரையும் ஹிப்பேசியா, தனது மாணவர்கள் யாவரும் சகோதரர்களே என்பதை விளக்கி சமாதானம் செய்து வைப்பவளாக இருக்கிறாள்.

small_438600 அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகம் கல்விக்கூடமாகவும், ஞானிகளின் ஆவணக் காப்பகமாகவும் செயற்படுவதோடு மட்டும் நின்று விடாது, பேகான் தெய்வங்களின் வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது. அலெக்ஸாண்ட்ரியாவின் தெருக்களிலோ கிறிஸ்தவம் தன் வலுவான போதனைகளால் வறிய மக்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

அலெக்ஸாண்ட்ரியாவில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் [Agora] கிறிஸ்தவ மத போதகர்கள், பேகான் கடவுள்களிற்கு சவால் விடுகிறார்கள், எள்ளி நகையாடுகிறார்கள், கொளுந்து விட்டெரியும் தீச்சுவாலைகளிற்குள் நடந்து வெளியேறுகிறார்கள், பேகான்களை தீச்சுவாலைக்குள் தள்ளி விட்டு உங்கள் கடவுள் உங்களைக் காப்பாற்றுவாரா பார்க்கலாம் என வேடிக்கை பார்க்கிறார்கள். இவ்வகையான வன்முறைச் செயல்களிற்கு தலைமை வகிக்கிறான் அமோனியஸ் எனும் துறவி. இவன் பராபோலானி [Parabolani]எனும் சகோதரத்துவ சபையைச் சேர்ந்தவன்.

அலெக்ஸாண்ட்ரியா நூலக அரங்கில் நிகழும் ஒரு கலை நிகழ்ச்சியின்போது ஹிப்பேசியா மீதான தன் அபிமானத்தை அங்கு கூடியிருப்போர் முன்பாக வெளிப்படையாக அறிவிக்கிறான் ஒரெஸ்டிஸ். ஆனால் ஹிப்பேசியா அவனது வேண்டுகோளை நிராகரித்து விடுகிறாள். அறிவுத்தேடலிற்காக தன் வாழ்வை அர்பணிக்க விரும்புகிறாள் அவள். பூமி சுழலும் பாதையின் வடிவம் குறித்து ஆர்வத்துடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுபவளாக அவள் இருக்கிறாள். பூமி ஒரு வட்டப் பாதையில் சுழல்கிறது என்பதே அன்றைய கருத்தாக்கமாக இருந்தது. ஆனால் ஹிப்பேசியாவின் மனமோ இந்தக் கருத்துடன் உடன்பட மறுக்கிறது.

agora-trailer-epique-dernier-amenabar-L-9 அலெக்ஸாண்ட்ரியா தெருக்களில் நிலைமை சற்றுச் சூடாக ஆரம்பிக்கிறது. பேகான்கள் கிறிஸ்தவர்களால் மேலும் மேலும் சீண்டப்படுகிறார்கள். பேகான் தெய்வங்களின் விக்கிரகங்கள் கிறிஸ்தவர்களால் அவமதிக்கப்படுகின்றன. இந்நிலையை மேலும் ஏற்றுக் கொள்ள முடியாத பேகான்கள் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் கூடுகிறார்கள். கலந்துரையாடுகிறார்கள். முடிவாக ஆயுதங்களைக் கொண்டு கிறிஸ்தவர்களைத் தாக்குவது எனும் தீர்மானத்திற்கு வருகிறார்கள்.

ஹிப்பேசியா இந்த முடிவை எதிர்க்கிறாள். வன்முறை தேவையற்றது என்று கூறுகிறாள். தன் மாணவர்களை இந்த விடயத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என வேண்டுகிறாள். ஆனால் ஹிப்பேசியாவின் தந்தை தங்களிற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பிற்கு பதில் தந்தேயாக வேண்டும் எனக் கூறி விடுகிறார். இதனையடுத்து ஆயுதங்களுடன் அலெக்ஸாண்ட்ரியா தெருக்களில் இறங்குகிறார்கள் பேகான்கள். ஒரெஸ்டிஸும் இதில் அடக்கம்.

அலெக்ஸாண்ட்ரியாவின் சந்தைத் திடலில் கூடியிருந்த கிறிஸ்தவர்களை கொடூரமாக தாக்க ஆரம்பிக்கிறார்கள் பேகான்கள். மரண ஓலம், உருளும் தலைகள், பிரியும் உயிர்கள், எஜமானனைத் தாக்கும் அடிமைகள், சிதறும் ரத்தம், வெறியின் தாண்டவம், மதங்களின் வன்ம மொழி. ஆனால் பேகான்கள் எதிர்பார்த்திராத அளவில், நகரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. கிறிஸ்தவர்களின் எதிர்தாக்குதலை சாமாளிக்க முடியாது திணறுகிறார்கள் பேகான்கள்.

agora-2009-16759-1986286395 நகரிலிருக்கும் கிறிஸ்தவர்களுடன், அமோனியஸ் தலைமையில் பராபோலானிக்களும் கைகளில் ஆயூதம் ஏந்தி எதிர்தாக்குதலை தீவிரமாக்க, வேறுவழியில்லாது பின்வாங்கும் பேகான்கள் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தினுள் நுழைந்து அதன் பிரம்மாண்டமான வாயிற்கதவுகளை தாழிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களை துரத்தி வந்த கிறிஸ்தவர்கள் நூலகத்திற்கு வெளியே வெறியுடன் காத்து நிற்க ஆரம்பிக்கிறார்கள்.

அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் கல்வி பயிலும் சினேசியஸ் போன்ற கிறிஸ்தவ மாணவர்களை பணயமாக பிடித்து வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் பேகான்கள். ஹிப்பேசியாவும், கிறிஸ்தவர்களிற்கு எதிராக மோதிய ஒரெடிஸும் இதற்கு குறுக்கே வந்து அந்தக் கிறிஸ்தவ மாணவர்களைக் காப்பாற்றுகிறார்கள். அன்றிரவு அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஹிப்பேசியாவிற்கு தன் மனதின் நன்றிகளை கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறான் கிறிஸ்தவ மாணவனான சினேசியஸ்.

அலெக்ஸாண்ட்ரியா நூலகத்திற்கு வெளியே கூடியிருக்கும் கிறிஸ்தவர்களின் வெறிக்கூச்சல் அதிகரிக்கிறது. நூலகத்தின் வாயிற்கதவுகள் இடிக்கப்படுகின்றன. நகரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறியும் ரோம அதிகாரத்தின் ஆளுனர் நூலகத்திற்கு தன் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.

நூலகத்தை அடையும் வீரர்கள் நூலகத்தை சுற்றி காவல் நிற்கிறார்கள். நிகழ்ந்த அசம்பாவிதங்களைக் கருத்தில் கொண்டு ஆளுநர் தயாரித்த அறிக்கையை வீரர் தலைவன் உரத்த குரலில் படிக்கிறான்.

கலகத்தை ஆரம்பித்துவிட்டு நூலகத்தில் பதுங்கியிருக்கும் பேகான்கள் உடனடியாக நூலகத்தை விட்டு வெளியேற வேண்டும், அலெக்ஸான்ட்ரியா நூலகமானது இனி கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பதே அவ்வறிக்கையின் சாரம். அறிக்கையைக் கேட்ட கிறிஸ்தவர்கள் கூச்சல் எழுப்பிக் குதிக்கிறார்கள். பேகான்கள் அறிக்கை அளித்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.

நூலகத்தில் இருக்கும் பேகான்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பொறுப்பை ரோம வீரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நூலகத்திலிருக்கும் எண்ணற்ற அறிவுப் பொக்கிஷங்களில் முக்கியமானவற்றை தம்முடன் எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்கள் பேகான்கள். ஹிப்பேசியாவும், ஒரெஸ்டிஸின் உதவியுடன் சில ஆவணங்களை தன்னுடன் எடுத்துக் கொண்டு, மோதலில் காயமடைந்த தன் தந்தையுடன் நூலகத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறுகிறாள்.

ஹிப்பேசியாவின் அடிமை டேவுஸ் நூலகத்தில் தங்கி விடுகிறான். அவன் மனம் வெகுவாக குழப்பம் அடைந்த நிலையிலிருக்கிறது. நூலகத்தினுள் நுழையப் போகும் கிறிஸ்தவர்களை வெட்டிப் போடுவது போல் ஆயுதம் ஒன்றுடன் நூலக வாசலை நோக்கி ஓடுகிறான் அவன். இந்நிலையில் நூலகத்திற்கு வெளியே நின்ற கூட்டம் நூலக வாயில் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறது.

மதத்திற்கு மதம் பிடிக்கும்போது அதன் விளைவுகள் மனச்சாட்சியை கொடிய நரகத்திற்கு அனுப்பி விடுகின்றன. அலெக்ஸாண்ட்ரியாவின் புகழ் பெற்ற அறிவுக் கருவூலம் எந்தவிதக் கிலேசமும் இன்றி சிதைக்கப்படுகிறது. ஆவணங்கள் எரிக்கப்படுகின்றன. அறிவுக்களஞ்சியம் புகையாக வான் நோக்கி எழுகிறது. கலையழகு கொண்ட சிற்பங்கள் உடைத்து நொருக்கப்படுகின்றன. அறிவின்மேல் மதம் தன் வெறிக்கால்களை உக்கிரமாக ஊன்றி ஆடுகிறது.

பராபோலானிக்களின் தலைவன் அமோனியஸ் இந்த வெற்றியால் உற்சாகமாக கத்துகிறான். தன்னைச் சுற்றி நடப்பவற்றை நம்பமுடியாதவனாக பார்க்கிறான் டேவுஸ், ஆனால் அமோனியஸின் அழைப்பின்பேரில் நூலகத்தை அழிப்பதில் தானும் பங்கு வகிக்கிறான் அவன்.

agora-trailer-epique-dernier-amenabar-L-16 நூலக அழிப்பின் பின்னாக நள்ளிரவில் தன் எஜமானன் வீட்டிற்கு கையில் நீண்ட கத்தி ஒன்றுடன் வருகிறான் டேவுஸ். வீட்டில் அவனை வரவேற்கும் ஹிப்பேசியாவை பலவந்தமாக அணைத்துக் கொள்கிறான் அவன். ஹிப்பேசியாவின் உடலை அவன் கரங்கள் மேய்கின்றன, ஆனால் சிறிது நேரத்தில் ஹிப்பேசியாவை பலவந்தம் செய்வதை நிறுத்திவிட்டு அவள் தோளில் சாய்ந்து அழ ஆரம்பிக்கிறான் டேவுஸ். அவள் மேல் அவன் கொண்டது அன்பால் செய்த காதல் அல்லவா.

ஹிப்பேசியாவின் காலடியில் வீழ்ந்து கண்ணீர் சிந்தும் டேவுஸ், தன் கைகளில் இருந்த கத்தியை ஹிப்பேசியாவிடம் தருகிறான். அவள் தனக்கு தரப்போகும் தண்டனையை எதிர்பார்த்து அவள் கால்களை அணைத்துக் கொள்கிறான் அவன். ஆனால் ஹிப்பேசியாவோ அவன் கழுத்தில் இருந்த இரும்பு வளையத்தை நீக்கி அவனை அடிமை எனும் நிலையிலிருந்து சுதந்திர மனிதனாக்குகிறாள். அலெக்ஸாண்ட்ரியாவில் அன்று விரிந்திருந்த அந்தக் கொடிய இரவினுள் இருளாகச் சென்று மறைகிறான் டேவுஸ்.

வருடங்கள் ஓடுகின்றன. அலெக்சாண்ட்ரியாவின் அழிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி கிறிஸ்தவ ஆலயமாக மாறியிருக்கிறது. பிறிதொரு பகுதியில் ஆடுகள், கோழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அலெக்சாண்ட்ரியாவில் பேகான் வழிபாடு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது.

ஹிப்பேசியாவின் தந்தை உயிருடன் இல்லை. இப்போது அவள் தன் அறிவை சிறுவர்களிற்கு சொல்லித் தருகிறாள். அவளுடைய முன்னாள் மாணவனான ஒரெஸ்டிஸ் அலெக்ஸாண்ட்ரியாவின் ஆளுனனாகப் பதவியிலிருக்கிறான், கிறிஸ்தவ மதத்தையும் அவன் தழுவியிருக்கிறான். ஒரெஸ்டிஸிற்கும், ஹிப்பேசியாவிற்குமிடையில் நட்பு தொடர்கிறது. டேவுஸ், பராபோலானிக்கள் குழுவில் முக்கியமான ஒருவன். இவ்வேளையில் அலெக்ஸாண்ட்ரியாவின் கிறிஸ்தவ ஆயர் இறந்துவிட புதிய ஆயராக பதவியேற்றுக் கொள்கிறான் சிரில்.

agora-trailer-epique-dernier-amenabar-L-11 பதவியேற்ற சிரில், அலெக்ஸாண்ட்ரியாவில் வாழும் யூதர்களிற்கு எதிராக செயற்பட ஆரம்பிக்கிறான். யூதர்கள் கற்களால் தாக்கப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆளுனரிற்கு முன்பாக தீர்விற்காக கொண்டுவரப்படும் இவ்விடயத்தில் இருதரப்புக்களும் சமாதானமாக மறுத்து விடுகின்றன.

தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு பழிவாங்கத் துடிக்கும் யூதர்கள், தந்திரமாக பராபோலானிக்களை கிறிஸ்தவ ஆலயத்திற்குள் வரவைத்து அதன் கதவுகளை அடைத்து விடுகிறார்கள். ஆலயத்தின் மேற்பகுதியிலிருந்து பராபோலானிக்களை நோக்கி பொழிய ஆரம்பிக்கிறது உக்கிரமான கல்மழை. இந்ததாக்குதலில் கணிசமான பராபோலானிக்கள் உயிரை இழக்கிறார்கள். அமோனியஸும், டேவுஸும் இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விடுகிறார்கள்.

உணர்ச்சிகள் கொதிநிலையிலிருக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் உரையாற்றுகிறான் சிரில். அவன் உரை கிறிஸ்தவர்களின் உணர்சிகளை மேலும் தூண்டிவிடுகிறது. யூத இனம் கடவுளால் சபிக்கப்பட்ட இனம். அந்த இனம் வெளியேற்றப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களின் வெறிக்கு தூபம் போடுகிறான் சிரில். சிரிலின் உரையால் வெறியேறிய கிறிஸ்தவர்கள் அலெக்ஸாண்ட்ரியாவில் யூத இன மக்களின் அழிப்பில் இறங்குகிறார்கள்.

யூதர்கள், கொல்லப்படுகிறார்கள்,அவர்கள் உடமைகள் நாசமாக்கப்படுகின்றன. யூதப் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக்கப்படுகிறார்கள். ஆளுனர் ஒரெஸ்டிஸ், சிரிலிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து இக்கொடுமையை நிறுத்த வேண்டும் என ஒரெஸ்டிஸின் சபையில் கடுமையாக வாதிடுகிறாள் ஹிப்பேசியா. ஆனால் ஒரெஸ்டிஸ், சிரிலிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் தானிருப்பதை விளக்குகிறான்.

அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த யூத இன மக்கள் யாவரும் அந்நகரை விட்டு வெளியேறுகிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவில் இப்போது எஞ்சியிருப்பவர்கள் கிறிஸ்தவர்களும், ஹிப்பேசியா போன்ற சில கடவுள் நம்பிக்கை அற்றவர்களுமே.

யூதர்கள் அலெக்ஸாண்ட்ரியாவை விட்டு வெளியேறிச் செல்லும் தருணத்தில், நகரத்தில் நுழைகிறான் ஹிப்பேசியாவின் முன்னாள் கிறிஸ்தவ மாணவன் சினேசியஸ். சிரிலைப் போன்று ஒரு ஆயராக உயர்ந்திருக்கிறான் அவன். நகரில் யூதர்களிற்கு இடம் பெற்றிருக்கும் கொடுமைகளை தன் கண்களால் காண்கிறான் அவன்.

சினேசியஸ் தன் ஆசிரியையான ஹிப்பேசியாவை சென்று சந்திக்கிறான். தனது நண்பன் ஒரெஸ்டிஸ் கூடவும் உரையாடுகிறான். ஒரெஸ்டிஸும், சினேசியஸும், ஹிப்பேசியாவிற்கு மதிப்பு தருவதையும், அவள் கருத்துக்களை கேட்பதையும் அறிந்து கொள்ளும் சிரில், தனக்கும் அதிகாரத்திற்கும் இடையில் ஒரு தடையாக இருக்கும் ஹிப்பேசியாவை அழித்து விட முடிவு செய்கிறான்.

agora-trailer-epique-dernier-amenabar-L-12 மிகத் தந்திரமான ஒரு திட்டத்தை வகுக்கும் சிரில், சினேசியஸ் வழியாக ஒரெஸ்டிஸை தன் ஆலயத்திற்கு வரவழைக்கிறான். ஒரு சமூகத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென இறை நூலில் எழுதியிருக்கும் வரிகளை ஆலயத்தில் கூடியிருக்கும் கூட்டத்தில் உரக்கப் படிக்கிறான் சிரில். ஆலயத்தில் கூடியிருக்கும் பராபோலானிக்கள் நடப்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

பெண்கள் கண்ணியமாக உடை உடுக்க வேண்டும், ஆண்களிற்கு அடங்கி இருக்க வேண்டும், குறிப்பாக தங்கள் கருத்துக்களை சொல்ல பெண்களிற்கு உரிமை கிடையாது என்பதான வரிகளை சிரில் படித்து முடித்தபின் இது இறைவனின் வார்த்தை அனைவரும் முழந்தாளிடுங்கள் என்கிறான் அவன்.

கோவிலில் இருக்கும் ரோம அதிகாரிகளிற்கும், ஒரெஸ்டிஸுக்கும் சிரிலின் நோக்கம் புரிந்து விடுகிறது. இறைவனின் வார்த்தைகளிற்கு முன்பாக மண்டியிடுவதன் மூலம் ஹிப்பேசியாவை சாதாரண ஒரு பெண்ணாக்கி அவளை அதிகாரத்தின் அருகிலிருந்து பிரித்து விடுவதே சிரிலின் நோக்கம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். முழந்தாளிட மறுத்தால் கிறிஸ்தவர்களின் வெறுப்பு அவர்களின் ஆட்சிக்கு உலை வைக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

ரோம அதிகாரிகள் ஒவ்வொருவராக சிரிலின் முன் முழந்தாளிட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஒரெஸ்டிஸ் முழந்தாளிட மறுத்து விடுகிறான். அவன் முகத்தில் சினம் கொப்பளிக்கிறது. பரபோலானிக்களின் தலைவன் அமோனியஸ் ஒரெஸ்டிஸ் முழந்தாளிட வேண்டுமென கத்த ஆரம்பிக்கிறான். ஆலயத்தில் குழுமியிருந்த கூட்டமும் அதனுடன் சேர்ந்து கொள்கிறது. சிரில் தன் பதவியை அடைய விரும்பிக் காய் நகர்த்துகிறான் என்பது ஒரெஸ்டிஸுக்கு புரிகிறது.

ஆலயத்தை விட்டு தன் வீர்கள் பாதுகாப்புடன் வெளியேறுகிறான் ஒரெஸ்டிஸ், ஆனால் அமோனியஸ் எறியும் ஒரு கல் அவன் மண்டையை பதம் பார்க்கிறது.

தனது மாளிகையில் தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருக்கும் ஒரெஸ்டிஸை வந்து சந்திக்கிறான் ஆயர் சினேசியஸ். சிரிலை எதிர்ப்பதற்கு ஒரெஸ்டிஸுக்கு தான் உதவுவதாகக் கூறும் அவன், ஏன் ஆலயத்தில் கடவுளின் வார்த்தைகளிற்கு முன்பாக ஒரெஸ்டிஸ் மண்டியிடவில்லை என்று கேட்கிறான். நீ உண்மையிலேயே கடவுளை விசுவசிப்பவனாக இருந்தால் இங்கே என் முன்பாக மண்டியிடு என்கிறான் சினேசியஸ். தன் இயலாமை கனமாக அழுத்த சினேசியஸின் முன்பாக கண்களில் கண்ணீருடன் மண்டியிடுகிறான் ஒரெஸ்டிஸ்.

தனது இல்லத்தில் புவியின் சுழற்சிப் பாதை வட்டமானது அல்ல அது நீள் வட்டமாக இருக்க வேண்டுமென்பதைக் கண்டுபிடிக்கிறாள் ஹிப்பேசியா. இதனை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென அவள் விரும்புகிறாள். மறுநாள் ஒரெஸ்டிஸ் அவளைத் தனது மாளிகைக்கு அழைக்க அங்கு அவனைக் காணச் செல்கிறாள் ஹிப்பேசியா. அங்கு ஒரெஸ்டிஸும், சினேசியஸும் தனக்காக காத்திருப்பதை அவள் காண்கிறாள்.

ஆலயத்தில் ஒரெஸ்டிஸ் மீது கல் வீசியதற்காக பராபோலானிக்களின் தலைவன் அமோனியஸிற்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. கிறிஸ்தவத்திற்காக தனது இன்னுயிரை நீத்த அமோனியஸினதுனது பெயரை மாற்றி அவனை ஒரு புனிதனாக அறிவிக்கிறான் சிரில். அமோனியஸின் மரணத்திற்காக ஒரெஸ்டிஸை பழிவாங்க முடியாத பராபோலானிக்கள், ஹிப்பேசியாவைக் கொன்று விடுவது என்று தீர்மானிக்கிறார்கள்.

பராபோலானிக்களின் திட்டத்தை அறிந்து கொள்ளும் டேவுஸ், ஹிப்பேசியாவைக் காண்பதற்காக அவள் இல்லத்திற்கு செல்கிறான். ஆனால் அவளோ ஒரெஸ்டிஸின் மாளிகைக்கு சென்று விட்டிருப்பதை அறியும் டேவுஸ் அவளைத்தேடி ஒரெஸ்டிஸ் மாளிகைக்கு விரைகிறான்.

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அல்லாதோர் அனைவரும் கட்டாயமாக திருமுழுக்கு மூலம் கிறிஸ்தவர்களாக்கப்படுவார்கள் எனும் அதிர்ச்சி தரும் செய்தியை ஹிப்பேசியாவிடம் தெரிவிக்கிறான் ஒரெஸ்டிஸ். தன் மாணவர்கள் இருவரையும் நம்ப முடியாதவளாகப் பார்க்கிறாள் ஹிப்பேசியா.

அதிகார ஆசை மனிதர்களை எப்படி மாற்றிப் போடுகிறது எனும் விஞ்ஞானத்தை அவள் அதிகம் படித்திருக்கவில்லை அல்லவா. விளைவுகள் எதுவாகவிருந்தாலும் தான் கிறிஸ்தவ மதத்தை தழுவப் போவதில்லை என்று உறுதியுடன் கூறுகிறாள் ஹிப்பேசியா. ஒரெஸ்டிஸ் அவளிற்கு வழங்கி வந்த பாதுகாப்பையும் உதறிவிட்டு, ஒரு சுதந்திர மனுஷியாக அலெக்ஸாண்ட்ரியா தெருவில் இறங்குகிறாள் அவள்.

3650171kmjgn ஒரெஸ்டிஸ் மாளிகையை நெருங்கும் டேவுஸ், தெருக்களில் பராபோலானிக்கள் கூட்டமாக வருவதைக் கண்டு ஒளிந்து கொள்ள எத்தனிக்கிறான். ஆனால் அவர்களோ அவனைக் கண்டு கொண்டு கூவி அழைக்கிறார்கள். ஹிப்பேசியா எனும் வேசை தங்களிடம் அகப்பட்டு விட்டாள் என்று கூச்சல் போடுகிறார்கள். வெறிபிடித்த விலங்குகள் மத்தியில் மாட்டிக் கொண்ட பட்டாம் பூச்சி போல் பராபோலானிக்கள் மத்தியில் ஹிப்பேசியா விக்கித்து நிற்பதைக் காண்கிறான் டேவுஸ். அவன் மனதின் வார்த்தைகள் ஒலியற்று அழ ஆரம்பிக்கின்றன.

மிகவும் முரட்டுத்தனமாக கிப்பேசியாவை, ஆலயமாக மாறியிருக்கும் அலெக்ஸாண்ட்ரியாவின் அழிந்து போன நூலகத்திற்கு இழுத்துச் செல்கிறார்கள் பராபோலானிக்கள். இறைவனின் பீடத்தின் முன் அவள் ஆடைகள் கிழித்து வீசப்பட்டு நிர்வாணமாக்கப்படுகிறாள் ஹிப்பேசியா. அவள் உடலை தசை தசையாக கூறு போட விரும்புகிறார்கள் பராபோலானிக்கள், ஆனால் அவர்களிடம் கத்திகள் இருக்கவில்லை என்பதால் கற்களால் எறிந்து ஹிப்பேசியாவைக் கொல்வது என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இதற்காக கற்களைப் பொறுக்க ஆலயத்திற்கு வெளியே செல்கிறார்கள்.

இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் டேவுஸ், எதுவுமே செய்ய முடியாத நிர்க்கதியில், உடல் நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஹிப்பேசியாவை நெருங்குகிறான். ஆடைகள் அற்ற அவள் உடலை ஆதரவுடன் அணைத்துக் கொள்கிறான். ஹிப்பேசியாவின் கண்கள் டேவுஸை நோக்குகின்றன. அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அவள் உணர்கிறாள்.

அன்புடன் தன் மேல் அவளை அணைத்தபடியே, ஹிப்பேசியாவின் வாயையும், மூக்கையும் தன் கரங்களால் இறுகப் பொத்துகிறான் டேவுஸ். அவன் உள்ளம் அந்தத் தேவதை தன் அடிமை வாழ்வில் தனக்கு வழங்கிய இனிய தருணங்களை அசை போடுகிறது. மூச்சு எடுக்க முடியாது அகல விரிகின்றன ஹிப்பேசியாவின் பாசம் நிறைந்த விழிகள். அவள் உயிர் மெல்ல மெல்லப் பிரிகிறது. அந்த வேளையிலும் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் வட்டமான கூரை ஜன்னலில் உட்புகும் சூரிய வெளிச்சத்தில் புவியின் சுழற்சிப்பாதையைக் காணவிழைகிகிறாள் அந்த மகத்தான பெண், அவளது உயிரற்ற உடல் பிரபஞ்சத்தை உருவாக்கிய தேவனின் இல்லத்தின் தரைகளில் சரிகிறது.

கொலைவெறியுடன் கற்களுடன் உள்ளே வரும் மத வெறியர்களிடம் ஹிப்பேசியா நினைவிழந்து விட்டதாக கூறுகிறான் டேவுஸ். உயிரற்ற ஹிப்பேசியாவின் உடல் மீது கற்கள் வெறித்தனமாக விழ ஆரம்பிக்கின்றன. கண்களில் வழியும் கண்ணீருடன் ஆலயத்தை விட்டு தூரமாக நடந்து செல்கிறான் டேவுஸ்……

ஹிப்பேசியா எனும் அறிவு செறிந்த, பிறர் நேசம் கொண்ட பெண்பாத்திரம் வழியாக, அலெக்சாண்ட்ரியாவின் குறிப்பிட்ட கால வரலாற்றை வலியுடன் கண்முன் கொணர்கிறது Agora எனும் இத்திரைப்படம். ஹிப்பேசியா, ஒரெஸ்டிஸ், சினேசியஸ், சிரில், தியோன் ஆகியோர் வரலாற்றில் வாழ்ந்த நிஜப்பாத்திரங்கள். படத்தை உணர்சிகரமாக இயக்கியிருப்பவர், ரசிகர்களின் மென்னுணர்சிகளை மீட்டுவதில் வல்லவரான ஸ்பெயின் இயக்குனர் Alejandro Amenabar. இத்திரைப்படத்தின் கதையை சரித்திர வல்லுனர்களின் ஆலோசனைகள் வழியே இயக்குனரும், திரைக்கதையாசிரியரும்[ Mateo Gil] மூன்று வருட உழைப்பில் உருவாக்கினார்கள்.

ஒரு மததத்தின் வளர்ச்சி எவ்வாறு, விஞ்ஞான வளர்ச்சி, பெண் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பிற மதம் மற்றும் இனங்கள் மீதான சகிப்புத்தனமை என்பவற்றை கொன்றொழித்தது என்பதை மனத்தை அதிர வைக்கும் விதத்தில், தைரியமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்படத்தில் ஹிப்பேசியா பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் நடிகை Rachel weisz. மம்மி போன்ற மசாலாப் படங்களிலிருந்து விலகி அவர் தந்திருக்கும் அமைதியான, பண்பட்ட நடிப்பு அசத்துகிறது. டேவுஸ் எனும் பாத்திரம் கற்பனையாக உருவாக்கப்பட்டது. அப்பாத்திரத்தில் நடித்திருக்கும் Max Minghella சிறப்பாக செய்திருக்கிறார்.

Agora_wallpaper1_1680x1050 இவ்வகையான வரலாற்றுப் படங்களில் இசையின் பங்கு குறித்து எழுத வேண்டியதில்லை. அருமையான இசை. அதற்காக படம் முழுவதும் இசை வெள்ளமாகப் பாய்ந்தோடாது, தேவையான சமயங்களில் உணர்சிகளை பந்தாடுகிறது Dario Marianelli ன் இசை. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் வரும் இசையானது காட்சிகளுடன் சேர்ந்து கண்களை கலங்க வைத்து விடுகிறது.

அலெக்ஸாண்ட்ரியா நகரம், நூலகம் என்பவற்றை மால்ட்டா நாட்டில் செட்கள் மூலம் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். நூலக அழிப்புக் காட்சிகள், யூத இன அழிப்பு என்பன வேதனைச் சாட்டையால் மனதைக் குரூரமாக அடிக்கின்றன. இன்று புனிதர்கள் என்று போற்றப்படுபவர்களின் சாத்தியமிகு கடந்தகால வரலாறு சங்கடப்படுத்துகிறது. [ சிரில் ஒரு புனிதராக அறியப்படுகிறார்]

அமேனாபாரின் இத்திரைப்படம் கிறிஸ்தவ அன்பர்களின் முணுமுணுப்புக்களை அல்லது கூச்சல்களை அள்ளிக் கொள்ளப் போவதற்கு அனேகமான சாத்தியங்கள் உண்டு [இத்தாலியில் திரைப்படத்திற்கு வினியோகிஸ்தர்கள் கிடைக்கவில்லையாம்!!]. ஆனால் கலைஞன் உண்மைகளைக் கூறுவதற்கு தயங்கல் ஆகாது என்பதற்கு இப்படம் ஒரு சான்று.

நான்காம் நூற்றாண்டிற்கும், இன்று உலகில் நடக்கும் நிகழ்வுகளிற்கும் அதிகம் வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. மதம் குறித்த போர்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தன்னை விட அறிவு நிறைந்த பெண்களை மதிக்கும் ஆண்கள் இவ்வுலகில் பெரும்பான்மையானவர்கள் அல்ல. இன அழிப்புக்கள் நாள்தோறும் நிகழ்ந்தேறுகின்றன. இவ்வாறான வலி நிறைந்த உண்மைகளை திரைக்கு அப்பால் எடுத்து செல்வதில் வென்றிருக்கிறார் இயக்குனர் அமேனாபார். [***]

ட்ரெயிலர்

11 comments:

  1. கனவுகளின் காதலனே,

    வணக்கம். உங்களுக்கும் உங்களின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.

    பை தி வே, மீ த பர்ஸ்ட்டு.

    ReplyDelete
  2. முக்கியமான விஷயம் - இந்த திரைப்படம் சத்தியமாக தமிழ்நாட்டில் வராது. அதனால் டிவிடியில் மட்டுமே பார்க்க இயலும்.

    தலைப்பை பார்த்து விட்டு நான் கூட ஏதோ நம்ம ஆர்யா நடிக்க முயன்ற நான் கடவுள் அகோரர்களோ என்று யோசித்தேன்.

    ReplyDelete
  3. அன்பு நண்பரே,

    ரேஷல் வைஸ் சிறந்த நடிகை. த கான்ஸ்டன்ட் கார்ட்னரில் அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பகான் வழிபாட்டில் பெண்களுக்கு மிக மிக முக்கிய இடம் உண்டு என்பதே இங்கு முரண்நகை.

    நிறைவான விமர்சனம். இருப்பினும் சில விஷயங்கள் உங்களை கவரவில்லையென நினைக்கிறேன். மூன்று ஸ்டார்கள்?

    ReplyDelete
  4. விஸ்வா, வாழ்த்துக்களிற்கும், முதன்மைக் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே. இப்பதிவிற்கான ஸ்டில் வேட்டையில் இறங்கியபோது ஆர்யாவின் புகைப்படமும் வந்தது என்றால் நம்புவீர்களா!!!

    ஜோஸ், கான்ஸ்டண்ட் கார்ட்னர், அருமையான படம். நாவல் அதனைவிட அருமையாக இருக்கும். ரேச்சலின் நடிப்பு அப்படத்தில் கலங்க வைக்கும். மூன்று ஸ்டார்கள் என்றாலே அது தவறவிடாதீர்கள் என்ற அர்த்தத்தை தரும். சிறப்பான படமாக இருப்பினும் நான்கு ஸ்டார்கள் தர முடியவில்லை. படம் என்னை அரங்கிலேயே இருக்கும் உணர்வைத் தந்ததும், இதனைவிட அமேனாபார் சிறப்பாக செய்ய முடியும் என்ற எண்ணமுமே அதற்கு காரணம். அவருடைய The Sea Inside என்ற படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அவரின் படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த படமது. பேகான் தெய்வங்களை இவ்வருடம் வெள்ளித்திரைகளில் காணும் சந்தர்ப்பம் கிடைக்கபோகிறது, அதுவரை காத்திருப்போம். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  5. காதலரே - விஷ்வாவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். இது சத்தியமாக இந்தியாவில் வராது. இவ்விமர்சனத்தைப் படிக்கும் நேரத்தில், எனக்கு முன்னொருகாலத்தில் ஒரு மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நினைவு வந்தது. இப்படத்தைக் கட்டாயமாகப் பார்த்தே தீருவேன். ராச்சல் வெய்ஸ் எனக்கும் பிடித்த நடிகை. . :)

    ReplyDelete
  6. நண்பர் கருந்தேள், கண்டிப்பாக பாருங்கள். ரேச்செல் வெய்ஸிற்கு ஒரு கோவில் கட்டி விடலாம். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
    தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

    ReplyDelete
  8. நண்பரே, நிறைவான விமர்சனம்
    டிவிடி வரட்டும் பார்த்து விடுகிறேன்.
    //நான்காம் நூற்றாண்டிற்கும், இன்று உலகில் நடக்கும் நிகழ்வுகளிற்கும் அதிகம் வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை//
    நானும் இதைபற்றி நினைத்ததுண்டு. ஒருவேளை தவிர்க்க முடியாத சுழற்சியா என்றும் தெரியவில்லை. இயக்குனர் அமேனாபார் இயக்கிய வேறு ஏதேனும் படம் உண்டா...? நண்பரே

    ReplyDelete
  9. ஒலக காமிக்ஸ் ரசிகரே உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.

    நண்பர் வேல்கண்ணன், இயக்குனர் அமேனாபார் இயக்கிய The Sea Inside மற்றும் Open Your Eyes ஆகிய இரு படங்களும் தரமான படங்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. திரைப்பட விமர்சனத்தில் திரைப்படத்தில் முழு கதையையும் கூற வேண்டியதன் அவசியம் என்ன? இந்த படத்தின் உச்சக்காட்சியின் தாக்கம் முடிவு தெரிந்துகொண்டு பார்த்தால் கிடைக்குமா?

    மேலும், படத்தில் பல்வேறு இழைகள் பின்னப்பட்டுள்ளன. அடிமையின் அலெக்ஸாண்ட்ரியாவும் கனவான்களின் அலெக்ஸாண்ட்ரியாவும் ஒன்று அல்ல... இந்த பின்னணியில் அந்த அடிமையின் கதாப்பாத்திரன், அதன் அலைவுகள் எல்லாமே மிக முக்கியமானவை. படத்தின் கதையை அப்படியே தருவதற்கு பதி, அதன் தாக்கத்தை குறித்தும் அதன் உள்ளீடுகளை குறித்தும் எழுதலாமே?

    - சித்தார்த்.

    ReplyDelete
  11. நண்பர் சித்தார்த்,

    திரைப்படவிமர்சனத்தில் முழுக்கதையையும் கூறவேண்டியதன் அவசியம் இல்லை இருப்பினும் எழுதுபவன் என்ற காரணத்தினால் நான் முழுக்கதையையும் கூறுவதை தேர்ந்தெடுத்துக் கொண்டேன், அது என் தெரிவு. முடிவைத்தெரிந்து கொண்டு பார்த்தாலும் அப்படத்தின் தாக்கம் உணரப்படவேண்டிய ஒன்றுதான். படைப்பில் ஆழ்பவன் விமர்சனங்களை உணரவேண்டியதில்லை. அவன் படைப்பை உணரவேண்டும்.

    இழைகள், தாக்கம் எல்லாம் என் கதைகூறலில் வந்துவிடுகிறது. நான் உணர்ந்தவற்றை கதையிலேயே எழுதிவிடுகிறேன். உங்கள் தேடலின் ஆழத்திற்கு அவை திருப்தியளிக்காதது எனக்கு வருத்தமே. தங்கள் மேலான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete