Friday, January 1, 2010

முசோலினியின் மனைவி


இத்தாலியின் மிலான் நகரத்தில் 1914ல் இத்தாலிய சோசலிசக் கட்சியை சேர்ந்தவனான பெனிட்டோ முசோலினி, அதிகாரத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இணைந்து மிலான் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை முன்னின்று நடாத்துகிறான்.

முசோலினியின் ஆளுமையால் வெகுவாகப் கவரப்படும் Ida Dalser எனும் பெண் அவன் மீது காதல் வயப்படுகிறாள். ஐடா, மிலான் நகரில் ஒரு அழகுநிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறாள். மிலான் நகரிற்கு அவள் வருமுன்பாகவே முசோலினியைத் தெரிந்தவளாக அவள் இருக்கிறாள்.

முசோலோனி பங்கேற்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் அவனைக் கண்டுகொள்ளும் ஐடா, கூட்டத்தினுடாக அவனை அணுகுகிறாள். தன் இருப்பிடத்தின் முகவரியை முசோலினியிடம் ரகசியமாக தருகிறாள்.

அன்றிரவு ஐடாவின் வீட்டிற்கு வருகிறான் முசோலினி. முசோலினி மீதான காதலும், ஈர்ப்பும், பொங்கித் ததும்பும் அவள் இளமையும் ஐடாவை அவனுடன் கலக்க வைக்கின்றன. முசோலினி மீதான தன் முழுமையான காதல் வீச்சுடன் அவனுடன் உறவு கொள்கிறாள் அவள். ஆனால் முசோலினியின் கண்களோ அதிகாரம் மீதான அவன் கனவுகளை அந்த அறையின் மெலிந்த இருளில் தேடிப்பயணிக்கின்றன. சிந்தனையிலாழ்ந்த ஒரு எந்திரம் போல் ஐடாவின் உடல்மேல் இயங்குகிறான் அவன்.

ஐடாவின் காதல் முசோலினியுடன் தொடர்கிறது. இவ்வேளையில் முதலாம் உலக யுத்தம் ஆரம்பமாகிறது. அது நாள்வரையில் போரிற்கு எதிரான கருத்துக்களை உரக்கப் பேசிக்கொண்டிருந்த முசோலினி, போரிற்கு ஆதரவாக தன் கருத்துக்களைப் பேச ஆரம்பிக்கிறான். இது இத்தாலிய சோசலிசக் கட்சியில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணுகிறது. தொழிற்சங்கவாதிகள் முசோலினி தன்னை பிரான்ஸ் நாட்டிற்கு விற்ற ஒரு துரோகி எனக் கொதிக்கிறார்கள். இவ்வகையான சர்ச்சைகளால் முசோலினி பணியாற்றிக் கொண்டிருந்த சோசலிசச் சார்பு பத்திரிகையான Avanti [முன்னோக்கிய] யிலிருந்தும், இத்தாலிய சோசலிசக்கட்சியிலிருந்தும் அவன் வெளியேற்றப்படுகிறான்.

gimg_814820 முசோலினியின் வாழ்வின் இலட்சியக் கனவுகளை நன்கறிந்த ஐடா, தன் அழகு நிலையம், வீடு, நகைகள் என தன்னிடமிருந்த அனைத்தையும் விற்று வந்த பணத்தை முசோலினிக்கு தருகிறாள். ஐடா வழங்கிய பணத்தின் உதவியுடன் முசோலினி Il Popolo d’Italia [இத்தாலி மக்கள்] எனும் ஓர் பத்திரிகையை ஆரம்பிக்கிறான்.

முசோலினியின் பத்திரிகை இத்தாலி, போரில் இணைந்து கொள்ள வேண்டும் எனும் கருத்தினை ஆவேசமாக முன்வைக்கிறது. முசோலினியின் கருத்துக்கள் இத்தாலியின் தேசியவாத பூர்ஜூவாக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. [பின்வரும் காலங்களில் இப்பத்திரிகையே முசோலினியின் பாஸிசக் கருத்துக்களின் பிரச்சார அச்சாணியாக செயற்பட்டது.]

முசோலினியுடன் கொண்ட உறவால் தான் கர்ப்பமுற்றிருப்பதை அறிகிறாள் ஐடா. இந்த மகிழ்ச்சியான செய்தியை முசோலினியுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவனைத்தேடி அவன் பத்திரிகை அலுவலகத்திற்கு செல்கிறாள் அவள். முசோலினிக்கு தான் கர்ப்பமுற்றிருக்கும் தகவலையும் தெரிவிக்கிறாள். ஆனால் சந்தர்ப்பவசமாக முசோலினிக்கு ஏற்கனவே ரேச்சல் எனும் பெண்ணுடன் தொடர்பும் அவள் வழியாக பிறந்த ஒரு பெண் குழந்தையும் இருப்பதை அவள் அறிந்து கொள்கிறாள். மனதில் கோபம் பொங்க பத்திரிகை அலுவலகத்தை விட்டு வெளியேறிச் செல்கிறாள் ஐடா.

ஐடாவின் குழந்தை உலகை எட்டிப்பார்க்கும் போது முசோலினி யுத்தக்களத்தில் இருக்கிறான். மோதல் ஒன்றில் முசோலினி காயமடைந்து விட்டதை பத்திரிகைகள் வழி அறிந்து கொள்ளும் ஐடா, முசோலினி சிகிச்சை பெறுமிடத்தில் அவனை உடனே சென்று பார்க்க விரைகிறாள்.

அங்கு காயமடைந்து கட்டிலில் படுத்திருக்கும் முசோலினியை அன்புடன் பராமரித்துக் கொண்டிருக்கிறாள் ரேச்சல். ஐடா அங்கு வந்திருப்பதைக் காணும் ரேச்சல் அவளை கண்டபடிக்கு திட்டுகிறாள். தானே முசோலினியின் மனைவி எனக் கத்துகிறாள் ரேச்சல். பரிதாபமான நிலையில் தன்னையும் தன் குழந்தையையும் கைவிட வேண்டாம் என முசோலினியிடம் கண்ணீருடன் வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறாள் ஐடா.

vincerecouple யுத்தம் நிறைவடைந்த பின் முசோலினி அதிகாரத்தின் படிகளில் வேகமாக ஏற ஆரம்பிக்கிறான் [ 1921களில் தேசிய பாசிசக் கட்சியை அவன் ஆரம்பிக்கிறான்]. ஆனால் ஐடாவோ அவனிற்கு விடாது தொல்லை தருகிறாள். பொது இடங்களில் முசோலினியை சங்கடப்பட வைக்கிறாள். அரச அதிகாரிகள், இத்தாலிய மன்னர், பாப்பாண்டவர் ஆகியோரிற்கு முசோலினி தனக்கு இழைத்த அநீதி குறித்து கடிதங்கள் எழுதுகிறாள். ஐடாவின் தொந்தரவுகளை ஒரு வழி பண்ண வேண்டிய நிலையில் தன் செல்வாக்கின் மூலம் ஐடாவை Trente எனும் ஊரிற்கு இடம்பெயரச் செய்கிறான் முசோலினி.

திரென்ந்த் எனும் அந்த ஊரில் தன் சகோதரன் வீட்டில் பலத்த கண்காணிப்பின்கீழ் தன் வாழ்க்கையைத் தொடர்கிறாள் ஐடா. அவள் மகன் பெனிட்டோ அல்பினோ முசோலினி ஒரு சாதாரண பள்ளியில் தன் கல்வியை தொடர்கிறான். இது அவளிற்கு பெரிதும் விசனத்தை தருகிறது.

தன் சகோதரன் வீட்டிலிருந்தும் அதிகாரங்களை நோக்கி கடிதங்களை எழுதுகிறாள் ஐடா. அவள் எழுதும் எந்தவொரு கடிதத்திற்குமான பதிலும் அவளிற்கு கிடைத்ததில்லை.

முசோலினியை மறந்துவிட்டு வேறொருவனைத் தேடிக்கொள் என்கிறான் அவள் சகோதரன். ஆனால் அவளோ முசோலினியைத் தவிர வேறு எந்த ஆணும் தனக்கு வேண்டியதில்லை என்கிறாள். முசோலினி ஏற்கனவே ரேச்சலை பதிவுத் திருமணம் செய்து கொண்ட விடயத்தை அவள் அறிந்திருக்கவில்லை.

சலிப்பான நாட்களைக் கடந்து கொண்டிருக்கும் ஐடா, முசோலினியின் கட்சி அதிகாரத்தில் அமர்வதை அறிந்து கொள்கிறாள். தானே முசோலினியின் உண்மையான மனைவி எனவும், தன் மகனே முசோலியின் உண்மையான வாரிசு எனவும் எல்லாரிடமும் கூறிவருகிறாள் அவள். முசோலினிக்கும் அவளிற்கும் கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெறும் திருமணம் அவள் கனவுகளில் வெளிச்சமாக மலர்கிறது.

சிறிது காலத்தின் பின் திரெந்த் ஊரிற்கு விஜயம் செய்யும் முசோலினிக்கு நெருக்கமான மந்திரி ஒருவனை அவன் எதிர்பாராதவிதமாக அணுக முயல்கிறாள் ஐடா. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவளை மடக்கிப் போட்டு விடுகிறார்கள்.

ஐடாவின் தீராத தொல்லைகளை இல்லாதொழிக்க விரும்பும் முசோலினி அவளை மனநல மருத்துவமனை ஒன்றில் பலவந்தமாக அனுமதிக்க செய்கிறான். ஐடாவின் மகன் அவளிடமிருந்து பிரிக்கப்பட்டு கத்தோலிக்க விடுதி ஒன்றில் வளர்க்கப்படுகிறான். அங்கு அவன் தந்தை பெயர் முசோலினி இல்லை என்று அவனிற்கு கூறப்படுகிறது. தன் தந்தை முசோலினி மீது வெறுப்புடன் வளர்கிறான் அவன்.

vincere-marco-bellocchio-L-5 மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐடா, தான் முசோலினியின் மனைவி என்பதனையும், தன் மகனே முசோலினியின் வாரிசு என்பதனையும் அங்கு அவளிற்கு வழங்கப்படும் சிக்கிச்சைகளையும் மீறி தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறாள். அவள் மகனைப் பார்ப்பதற்கோ இல்லை அவனைத் தொடர்பு கொள்வதற்கோ அவளிற்கு அனுமதி மறுக்கபடுகிறது. அவளது மகன் எழுதியது போன்ற பொய்க் கடிதங்களைக் காட்டி அவளை ஏமாற்றவும் முயற்சிக்கிறது மருத்துமனை நிர்வாகம்.

ஐடாவிற்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் ஒருவர், ஐடா தன் பையனை மீண்டும் பார்க்க விரும்பினால், அவளுடைய போக்கை அவள் மாற்றிக் கொள்ள வேண்டுமென ஆலோசனை தருகிறார். மனநல மருத்துவமனையைவிட்டு அவள் வெளியேற விரும்பினால் முசோலினிக்கும் அவளிற்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்று ஐடா நடிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஆனால் ஐடாவோ தான் உண்மையை உரக்கக் கூறுவேன் என்று கூறுகிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன, மனநல விடுதிகளில் அலைக்கழிக்கப்பட்டு தன் காலத்தை இழக்கிறாள் ஐடா. அவன் மகனோ இளைஞனாக வளர்ந்து நிற்கிறான். மனநலவிடுதிகளில் இருப்பவர்களை விட வெறிபிடித்தவனான தன் தந்தை முசோலினியின் வீராவேசப் பேச்சுக்களை தன் நண்பர்களிற்கு நடித்துக் காட்டிக் களைக்கிறான் அவன். இவ்வாறான ஒரு நாளில் தன் தாயின் சகோதரனைக் கண்டுகொள்கிறான் அவன். ஐடாவின் சகோதரனை ரகசியமாக அணுகும் அவன், தன் தாயிடம் எப்படியாவது கொண்டு சேர்த்து விடும்படி கூறி அவரிடம் ஒரு கடிதத்தை ஒப்படைக்கிறான்.

ஐடா தங்கவைக்கப்பட்டிருக்கும் மனநல மருத்துவமனையில் பணியாற்றும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு சகோதரியின் மூலம் அக்கடிதத்தை ஐடாவிடம் சேர்ப்பிக்கிறான் ஐடாவின் சகோதரன். நீண்ட கால இடைவெளியின் பின்பாக தன் கைகளில் வந்து சேர்ந்திருக்கும் தன் அன்பு மகனின் கடிதத்தைப் படித்துப்பார்த்து அழுது கொண்டேயிருக்கிறாள் ஐடா.

ஐடாவிற்கு கடிதத்தை ரகசியமாகத் தந்த சகோதரி அன்றிரவு ஐடாவின் அறைக்கு வருகிறாள். அங்கு அழுதபடியே இருக்கும் ஐடாவைக் காணும் அவள், ஐடாவின் மகன் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்க்கிறாள். அக்கடிதத்தில் துடித்துக் கொண்டிருக்கும் பிரிவும், பாசமும் அவள் கண்களை ஈரமாக்குகிறது. தன் உடைகளையும், சாவிகளையும் ஐடாவிடம் தந்து மனநல மருத்துவமனையிலிருந்து அன்றிரவே ஐடா தப்பிச் செல்ல உதவிகிறாள் அவள்.

அடித்துப் பெய்யும் மழையினூடாக மனநல மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடுகிறாள் ஐடா. தன் சகோதரனின் வீட்டை அடையும் வரையிலும் அவள் தன் வேகத்தைக் குறைக்கவில்லை. தன் சகோதரனின் வீட்டுக்கதவுகளை அவள் திறக்கிறாள், அங்கே ஏற்கனவே அவளைத்தேடி காவலர்கள் வந்து காத்திருக்கின்றனர்.

VINCERE 4 காவலர்களைத்தாண்டி மாடிப்படிகளில் ஏறி தன் மகன் சிறுவனாக இருந்தபோது தூங்கிய கட்டிலில் விழுந்து கதறுகிறாள் ஐடா. தன்னை மீண்டும் மனநல விடுதியில் அடைக்க வேண்டாம் எனக்கெஞ்சிக் கேட்டவாறே அழுகிறாள் அவள்.

காவலர்கள் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்கள். வீட்டு வாசலில் ஊர்மக்கள் கூடி நிற்கிறார்கள். கொலைகாரர்களே, அவளை விடுதலை செய்யுங்கள் எனும் கூச்சல் இடைவிடாது அவர்களிடமிருந்து எழுகிறது. கும்பலைத்தாண்டி ஐடாவை தங்கள் காரில் ஏற்றிவிடுகிறார்கள் காவலர்கள்.

கார் மெதுவாக ஓட ஆரம்பிக்கிறது. கூட்டத்திலிருந்த சிறுமி ஒருத்தி தான் கொய்த மலர்களை ஐடாவிற்கு காரின் கண்ணாடி வழியாக வழங்குகிறாள். ஐடாவின் கரங்களைப் பற்றி அவளிற்கு ஆறுதல் தருகின்றனர் ஊர்மக்கள். என்னை மறந்து விடாதீர்கள் என்று ஊர்மக்களைப் பார்த்துக் கேட்கிறாள் ஐடா. காரிற்குளிருந்து ஊர் மக்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஐடாவின் பார்வை இப்போது அரங்கில் இருக்கும் பார்வையாளனை நோக்கித் திரும்புகிறது, பார்வையாளனின் கண்களை நேரே எதிர் கொள்கின்றன கலங்கியிருக்கும் அவள் விழிகள். திரையிலிருந்து அவள் மறையும்வரை பார்வையாளனின் கண்களைப் பார்த்தவாறே இருக்கிறாள் ஐடா. அவளின் பார்வை நீங்களும் என்னை மறந்து விடாதீர்கள் என்று எங்களிடம் அவள் கெஞ்சிக் கேட்பதுபோல், எங்கள் மனங்களில் மென்மையாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

6a00d834529f5d69e200e54f0acf858833-800wi ஐடா டால்சர்- 1937ல் வெனிஸில் உள்ள மனநல மருத்துவமனையொன்றில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் இறந்து போனாள். அவள் இறக்கும்வரையிலும் அவள் மகனைச் சந்திப்பதற்கு அவளிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஐடாவிற்கும், முசோலினிற்கும் திருச்சபை சாட்சியாக இடம்பெற்ற திருமணத்திற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

பெனிட்டோ அல்பினோ முசோலினி- 1932ல் அவனது குடும்பப் பெயர் முசோலினி என்பதிலிருந்து பெர்னார்டி என்பதாக மாற்றப்பட்டது. கடற்படையில் பணிபுரிந்த அவன் சீனாவிற்கு சேவைக்காக சென்று திரும்பியபின் பலவந்தமாக மனநல விடுதி ஒன்றில் சேர்க்கப்பட்டான். 26/07/1942ல் தனது 26 வயதில் அம்மருத்துவமனையிலேயே இறந்து போனான்.

ஐடாவினதும், அவன் மகனினதும் கதையை மனதை உருக்கும் விதத்தில் திரையில் கொணர்ந்திருக்கிறது Vincere [ வெல்லுதல்] எனும் இந்த இத்தாலியத் திரைப்படம். 1907லிருந்து ஆரம்பித்து ஏறக்குறைய 30 வருட வரலாற்றை தன்னுள் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். திரைப்படத்தினை சிறப்பாக இயக்கியிருக்கிறார் Marco Bellochio எனும் இயக்குனர். இத்திரைப்படத்தின் கதையை உருவாக்குவதற்கு Marco Zeni என்பவர் எழுதிய இரு நூல்கள், மற்றும் ஒரு தொலைக்காட்சி விவரணச் சித்திரம் என்பன அவரிற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

ஐடாவின் வரலாறு வழி இயக்குனர் இத்தாலியின் சரித்திரத்தில் முக்கியமான பாத்திரங்களில் ஒருவனாகிய முசோலினியின் வளர்ச்சியையும், அவனது துரோகச் செயல்களையும், இத்தாலியில் பாசிசத்தின் உட்புகலையும் சிறப்பாகக் கூறியிருக்கிறார். படத்தின் பின்பாதியில் முசோலினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமை ஐடாவிடமிருந்து அவனை அன்னியப்படுத்தும் உணர்வைத் தருகிறது.

மனநல மருத்துவமனையில் ஐடா தன் மகனைப் பிரிந்து வேதனைப்படும் உணர்வுகளை, அம்மருத்துவமனையில் திரையிடப்படும் சார்லி சாப்ளினின் The Kid படத்தில் வரும் காட்சிகளுடன் இயக்குனர் சங்கமிக்க வைத்திருக்கும் விதம் அருமை.

19103535.jpg-r_760_x-f_jpg-q_x-20090511_033201 படத்தின் மிக முக்கிய பாத்திரமான ஐடாவை திரையில் உயிர்க்க வைத்திருக்கிறார் நடிகை Giovanna Mezzogiorno. தன் அற்புதமான திறனால் ரசிகர்களின் உள்ளங்களை கரைய வைக்கிறார் அவர். ஐடா பாத்திரத்தில் பொதிந்திருக்கும் அந்தச் சக்தியை முழு வீச்சுடன் வெளிப்படுத்துவதில் வெற்றி காண்கிறார் இந்த அழகான இத்தாலிய நடிகை. கேன் திரைப்படவிழாவில் ஏன் இவரின் சிறந்த நடிப்பிற்கு விருது வழங்கப்படவில்லை எனும் கேள்வி என் மனதில் எழுகிறது.

முசோலினி பாத்திரத்திலும், ஐடாவின் மகன் பாத்திரத்திலும் நடித்திருப்பவர் Filippo Timi. முசோலினி பாத்திரத்தில் வெறுக்கவும், மகன் பாத்திரத்தில் கலங்கவும் வைக்கும் சிறப்பான நடிப்பிற்கு சொந்தக்காரர்.

சிறப்பான ஒளிப்பதிவு, இனிமையான இசை, கவித்துவமான காட்சிகள், பொருத்தமான ஆவணப்படங்களின் பிட் சொருகல்கள் என அருமையாக வந்திருக்கிறது இத்திரைப்படம். இத்தாலியின் சரித்திரத்தில் அதிகம் பேசப்படாத, பூசி மறைக்கப்பட்ட ஒரு உண்மையை பாசாங்கின்றி சொல்வதில் வென்றிருக்கிறது இத்திரைப்படம்.

மனநலவிடுதிகளிலும் ஐடா தன் கடிதங்களைத் தொடர்ந்து எழுதுகிறாள். ஆனால் அவற்றை உரியவரிடம் அனுப்புவதற்கு அவளால் முடிவதில்லை. அக்கடிதங்களை இரும்புக் கம்பிகள் கொண்ட பிரம்மாண்டமான ஜன்னல்கள் வழியே வெளியே வீசுகிறாள் அவள். ஆகாயத்திலிருந்து கொத்தாக கவிழ்த்துவிடப்பட்ட வெள்ளை மலர்களைப்போல் வெளியே பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. ஐடா எறிந்த கடிதங்களில் அவள் எழுதியிருந்த உண்மைகள் இயற்கையின் பெருவெளியின் மடிப்புக்களில் மடங்கிப்போய்க் கிடக்கின்றன. அவற்றின் மீதாகக் காலம் மெளனமாக தன் பயணத்தை தொடர்ந்து செல்கிறது. [***]

நண்பர்கள் அனைவரிற்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தாலிய ட்ரெயிலர்

14 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. காதலரே,

    சரித்திரத்தில் மறக்கபட்ட ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கையை திறம்பட பதிவு செய்திருக்கிறார் போல, பெல்லாகியோ. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்பும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவர், சர்வாதிகாரிகளுக்கும் அது பொருந்தும் போல. முசோலினியின் வாழ்க்கை தோல்விக்கு, அவர் இடாவிற்கு செய்த துரோகம் தான் காரணம் என்று வகைபடுத்தலாம்.

    ட்ரெயிலரில், அந்த சின்ன குழந்தை தொட்டிலில் இருந்து அழுவும் காட்சியும், கடைசியில் கடிதங்களை உயர்ந்த ஜன்னல் இரும்பு சட்டங்கள் மேல் ஏறி விசிறி அடிக்கும் காட்சியும் மனதை விட்டு அகலாமல் நிலைகுத்தி நிற்கின்றன. அருமையான ஒரு படம், வாய்ப்பு கிடைப்பின் பார்த்து விடுகிறேன்.... Subtitle உதவியுடன்.

    அந்த அழகிய இத்தாலிய நடிகை மெஸ்ஸோகியோர்னோ, இது வரை ஆங்கில படங்களில் ஏன் பார்க்கவில்லை என்ற கேட்க தோன்றுகிறது. அழகும் நடிப்பும் ஒரு சேர பார்ப்பது இப்போதெல்லாம் அரிதாக ஆகி விட்டதே.

    உங்களுக்கும், உங்கள் மதகுருவுக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், நண்பரே. 2009ல் 60 பதிவுகளுடன், எங்களை மகிழ்வித்தது போல... 2010லும் தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    மற்ற நண்பர்களுக்கும் மனம்நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அன்பு நண்பரே

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இது போன்ற வரலாற்று சுவடுகளை திரைப்படமாக எடுக்கும்போது நம்பகதன்மை பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும் சில படங்கள் அவற்றை வென்று விடுகின்றன. உங்கள் விமர்சனத்திலிருந்தும், உங்கள் மனதை கவர்ந்திருப்பதையும் வைத்தும் இதுவும் அவ்வகையில் சேர்ந்தது என முடிவெடுத்து விடலாம்.

    அழகிய துன்பியல் கவிதை போலுள்ளது இப்படத்தின் ட்ரைலர்.

    பொதுவாக இத்தாலிய படங்களில் இசை மிக பிரமாதமாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒபரா இசைக்கோர்ப்பை மிக பிரமாதமாக பயன்படுத்துவார்கள். நான் பார்த்த படங்கள் எல்லாம் நகைச்சுவை படங்கள்தான் என்றாலும்.

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஆண்டின் தொடக்கத்தில் அதிர வைக்கும் பதிவு நண்பரே, இடாவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் மறக்காத வடுவாக மாறிவிடுகிறது.
    வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு பார்த்து விடுகிறேன்.
    //அழகிய துன்பியல் கவிதை போலுள்ளது இப்படத்தின் ட்ரைலர்//
    நண்பர் ஜோஷ் சொன்னதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. தலைவர் அவர்களின் வாழ்த்துக்களிற்கு நன்றிகள்.

    அன்பு நண்பர் ரஃபிக்கின் வாழ்த்துக்களிற்கு நன்றிகள். ஜலசா வேடத்தில் இந்த நடிகையைப் போடலாமா :)).
    துரோகங்கள் தரும் தோல்விகளை விட அவை தரும் வலிகள் அதிக நாசத்தை விளைவித்துவிடும் தன்மை கொண்டவை அன்பு நண்பரே.

    ஜோஸ், ஆதாரமற்ற உண்மைகளும்,ஆதாரங்கள் அழிக்கப்பட்ட உண்மைகளும் நிரூபிக்கப்படாத நிலையில் என்னவாகிவிடுகின்றன. சரித்திரம் இவ்வகையான உண்மைகளால் நிரம்பியே கிடக்கிறது. நல்ல கலைஞன் அதன் மெளனத்தை தன் படைப்புக்கள் வழி உடைக்க முயல்கிறான். சில வேளைகளில் செவிடான மனிதத்தை தொடவும் செய்கிறான். இது அவ்வகையான ஒரு படைப்பு. வாழ்த்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன், இவ்வகையான படைப்புக்கள் அவளை கொஞ்சமாவது நினைவுகூற முடிகிறது என்பதே ஆறுதலான விடயம். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  6. காதலரே . . மிகவும் யோசிக்கத்தக்க ஒரு பதிவு. இதைப் பார்த்தாலே, இப்படம் எப்படி இருக்கும் என்பதை அறிய முடிகிறது ஆனால், இக்கதை, நம் அமைதிப்படையை நினைவுபடுத்தியது :-) . உங்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். படத்தை விரைவில்பார்ப்பேன்.

    ReplyDelete
  7. கருந்தேள், சட்டென் மேட்டரை பிடித்துவிட்டார். நானும் பதிவை படிக்கும்போது, கதை அப்படியே அமைதிப்படையை ஒத்திருப்பது போல உணர்ந்தேன். ஆனால் முசோலினியின் துரோக வரலாறை படித்திவிட்டு அந்த தாக்கத்தில் கருத்திடும் போது, அந்த நியாபகம் மனதில் தங்கவில்லை.

    நமக்கு முன்பே சரித்திர கதைகளை புரட்டிப்போட்டு அதில் உள்ள கருவை வைத்து அதில் கொஞ்சம் அல்வா (அதுவும் அபின் அல்வா ;) ) தடவி, மசாலா கொடுப்பதில் நம் படாதிபதிகள் வித்தகர்கள் தான் போல.

    ReplyDelete
  8. நண்பர் கருந்தேள் வாழ்த்துக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி. நல்ல படைப்பு தவறாது பாருங்கள்.

    ரஃபிக், மீண்டும் உங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி. மணிவண்ணன் அவர்கட்கு உங்கள் கருத்தினை மெயில் பண்ணலாமா :))

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம்.முழுப் படம் பார்த்த திருப்தி கிடைக்கின்றது தங்களின் பதிவுகள் படித்தால்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. துன்பியல் காவியமாய் இருக்கும் போலிருக்கிறது. உங்கள் விமர்சனம் படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  11. நண்பர் ரகுநாதன், சந்தர்ப்பம் கிடைத்தால் தவறாது இத்திரைப்படத்தை பாருங்கள், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. நண்பர் மகா, உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. இப்ோதே இப்படம் பார்க்க விளைகிறேன்..

    ReplyDelete