Thursday, November 19, 2009

ஒரு Gகோலும் தென்னாபிரிக்காவிற்கு சில டிக்கட்டுக்களும்


நான் வீடு திரும்பிக் கொண்டிருந்த, களைப்பால் நிரம்பிய நிலக்கீழ் ரயில் Saint Michel ரயில் நிலையத்தில் தரித்து நின்றபோது பிளாட்பாரத்தில் ரயிலின் வருகைக்காக காத்து நின்றவர்கள் கும்பலாக ஏறி பெட்டியை நிறைத்தார்கள்.

ஏறியவர்களின் உடைகளைப் பார்த்ததும்தான் அடடே இன்றிரவு[18/11/2009] பிரான்ஸ்- அயர்லாந்து நாடுகளிற்கிடையிலான கால்பந்து மேட்ச் என்பது என் உணர்வில் விழித்தது. இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே தென்னாபிரிக்காவில் 2010ல் நடைபெறும் உலக கிண்ணக் கால்பந்து போட்டிக்கு தெரிவாகும் என்பதே இந்த ஆட்டத்தின் சிறப்பு.

14/11/2009 அன்று அயர்லாந்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஒரு கோல் போட்டு ஈட்டியிருந்த வெற்றி, கடந்தகாலங்களில் பிரான்ஸ் அணி சந்தித்து வந்திருந்த தோல்விகளின் வரலாற்றை அந்த அணியின் ஆதரவாளர்களிடமிருந்து சற்றே மறக்கச் செய்திருந்தது. பெரும்பாலான பிரான்ஸ் அணியின் ஆதரவாளர்கள் இம்முறையும் வெற்றி எங்கள் அணிக்கே என்று உள்ளூர நம்பினார்கள்.

அயர்லாந்தின் கால்பந்து அணியானது பிரான்ஸ் அணியுடன் ஒப்பிடும் போது ஆட்ட உத்திகளில் அது தேர்ந்த ஒர் அணி கிடையாது என்றே கூறப்பட்டது. அயர்லாந்து அணியின் வீரர்களும் பந்தா ஒட்டிக் கொள்ளா எளிமையுடன் தெரிந்தார்கள். இரவு நடக்கவிருக்கும் கால்பந்து ஆட்டம் பாரிசின் புகழ் பெற்ற STADE DE FRANCE விளையாட்டரங்கில் நடக்கவிருப்பதால் பிரான்ஸ் அணிக்கு அதன் ஆதரவாளர்களிடம் இருந்து கிடைக்கும் இதயபூர்வமான ஆதரவுக் கூச்சல்களே அதனை வெற்றிக்கு இட்டுச் செல்ல போதுமானதாக இருக்கும் என்றும் ரகசியமாக நம்பப்பட்டது.

ரயில் பெட்டிகளில் ஏறிய இரு அணிகளின் ஆதரவாளர்களினதும் களிப்பும், உற்சாகமும் ரயில் பெட்டிகளில் இருந்தவர்களில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. வேலைக்களைப்பின் மரணத்திலிருந்து உயிர்பெற்ற சிறு புன்னகைகள் ரயில் பெட்டிக்குள் கண் சிமிட்ட ஆரம்பித்தன. ரயில் பெட்டியின் உள்ளே கூரையிலும், தரையிலும் தாளம் போட்டு ஆதரவாளர்கள் பாடிய பாடல்களும், அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட கிண்டல்களும் அந்த தருணத்தை பாரம் நீக்கின.

நான் என் தரிப்பில் ரயிலை விட்டு கீழிறங்கி, ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினேன். வெளியே இலையுதிர் காலத்தின் ரகசியங்கள் நிறைந்த இரவு ரம்யம் காட்டியது. தெருவில் இருந்த உணவு விடுதியொன்றில் பொருத்தப்பட்டிருந்த ராட்சத தொலைக்காட்சித் திரையில் அல்ஜீரியாவிற்கும், எகிப்திற்குமிடையிலான கால்பந்தாட்டப் போட்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்க, உணவு விடுதியை அல்ஜீரிய இளம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் ஆக்கிரமித்திருந்தனர். விடுதிக்கு வெளியே நின்றபடியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த அல்ஜீரிய இளம் அழகொன்றை ரசித்தவாறே நான் வீடு நோக்கி நடந்தேன்.

வீட்டில் தொலைக்காட்சியை நான் போட்ட போது அதில் மாலைச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன. அல்ஜீரிய கால்பந்தாட்ட அணியானது எகிப்து அணியை வென்றது எனும் முடிவு அதில் அறிவிக்கப்பட்டது. இவ்வெற்றி மூலம் தென்னாபிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக கிண்ணப் போட்டிக்கு அல்ஜீரிய அணி தெரிவாகியது.

பல கிலோ மீற்றர்களிற்கு அப்பால் இருக்கும் அல்ஜீரியாவின் வெற்றியின் உவகை நிறைந்த குரல்கள் தெருக்களிலும், அருகாமைக் கட்டிடங்களிலும் ஒலிக்க ஆரம்பித்தன. அல்ஜீரிய இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கார் ஹாரன்களை ஒலிக்க விட்டு இரவின் மெளனத்தைச் சீண்டினார்கள்.

வழமையான காலநிலை அறிவிப்பு, விளம்பரங்கள், எந்த அணிக்கு வெற்றி என முன்கூறும் அலசல்களைக் கடந்து தொலைக்காட்சியில் பிரான்ஸ்- அயர்லாந்து மேட்ச் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. விளையாட்டரங்கின் பெரும்பகுதியை பிரான்ஸ் அணியின் ஆதரவாளர்கள் நீலமாக ஆக்கிரமித்திருந்தார்கள். அயர்லாந்து ஆதரவாளர்களோ மைதானத்தின் புல்தரைக்கு தங்கள் பச்சை வண்ணத்தினால் தூதனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

69751_franceune ஆட்டத்தின் ஆரம்பத்தில் பந்து பிரான்ஸ் அணியிடம் சற்று அதிகமாக இருந்ததாகத் தெரிந்தது. ஆனால் ஆட்டம் மாறியது. உத்தியில் தேர்ந்த பிரான்ஸ் அணிக்கு செல்லும் பந்துகளை எல்லாம் ஓடி ஓடிச் சென்று பறித்தெடுத்தது அயர்லாந்து அணி. ஒர் கட்டத்தில் பிரான்ஸ் அணிக்கு பந்தே கிடைக்காதது போன்ற ஓர் பிரமை தொலைக்காட்சியில் மெல்ல எட்டிப்பார்த்தது.

33வது நிமிடத்தில் அயர்லாந்து அணியைச் சேர்ந்த வீரரான KEAN போட்ட அற்புதமான கோல், இரு மேட்ச் ஒப்பீட்டில் ஆட்டத்தை சமநிலைக்கு இட்டு வந்தது. அரங்கின் பச்சை அதிர்ந்தது, பாடியது, மகிழ்ந்தது. நம்பிக்கை துளிராக விரிந்தது. பிரான்ஸோ, அயர்லாந்தோ எந்த அணி தென்னாபிரிக்காவிற்கு செல்ல விரும்பினாலும் குறைந்தது ஒரு கோலாவது போட்டேயாக வேண்டிய நிலை. ஆட்டத்தின் முதல் பாதி எந்த வித கோல்களும் இன்றி முடிந்தது. பிரான்ஸ் அணியின் கோல் கீப்பர் Llorisன் அபாரமான திறமையே இதற்கு மூலகாரணம் என்பதே உண்மை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணிக்கு சற்று தெம்பு பிறந்திருந்தது. இரண்டாம் பாதியின் பின்பான ஆட்ட நீட்டிப்பில் 104வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் காப்டன் Thierry Henry வழங்கிய பந்தை தன் தலையால் தட்டி கோல் ஒன்றைப் போட்டார் William Gallas.

விளையாட்டரங்கமே வெடித்தது, மனிதர்கள் பிரான்ஸ் நாட்டின் மூவண்ணக் கொடிகளாக மாறிப்போனார்கள், நீலக்கடலின் அலைகள் போல் கொடிகள் அசைந்தன. பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் ஸ்பான்சர்கள் மனத்தில் ஷாம்பெய்ன் மழையாகப் பொழிந்தது. பிரான்ஸ் அணியின் வீரர்கள் வெற்றிக்களிப்பில் மிதந்தார்கள், மைதானத்தைச் சுற்றிப் பறந்தார்கள். இந்தக் களிப்பில் அயர்லாந்து அணியினர் தங்கள் கைகளைத் தொட்டுக் காட்டிக் கொண்டிருந்த அந்த சைகையை ஒரு கணம் எல்லாரும் மறந்திருந்தார்கள்.

1258633789 தன்னைக் கடந்து செல்லவிருந்த அந்தப் பந்தை Thierry Henry வளைத்து William Gallasஇடம் அனுப்பி வைத்த போது அவர் கால்கள் மட்டுமல்லாது அவரின் கைகளின் கறையும் அப்பந்தில் சேர்ந்தே பதிந்திருந்தது. பந்தை ஹென்ரி கைகளாலும் விளையாடினார் என்ற அயர்லாந்து அணியினரின் கூச்சல் தோற்றுப் போனது. போட்டியின் நடுவர், Gallas போட்ட கோலை உறுதி செய்தபடியால் கொண்டாட்டம் தொடர்ந்தது. ஆட்டம் முடிந்தபோது பிரான்ஸ் உலககிண்ணப் போட்டிகளிற்கு தெரிவாகி இருந்தது.

அயர்லாந்து அணியின் கண்ணியம் போற்றத்தக்கது. உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் இந்தப் போட்டியைப் பார்த்திருக்ககூடிய எந்த ஓர் உண்மையான கால்பந்தாட்ட ரசிகனிற்கும் உண்மையான வெற்றி யாரிற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பது தெரியும். போட்டியின் பின் அயர்லாந்தின் வீரர்களைப் பார்த்தபோது பெருமையாக உணர முடிந்தது.

ஆட்டம் முடிந்து மைதானத்தைச் சுற்றி ஓடி பிரான்ஸ் அணியினர் தங்கள் ஆதரவாளர்களிற்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள். அம்மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்த Thierry Henryயின் மீது தொலைக்காட்சி கமெராவின் பார்வை வீழ்ந்த ஒவ்வொரு கணமும் அவர் தலை குனிந்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

“கை பட்டது வாஸ்தவம்தான் ஆனால் நான் நடுவரில்லை” இது ஹென்ரி ஊடகவியலாளர்களிற்குச் சொன்னது. அன்பின் ஹென்ரி, உலகக் கிண்ணப் போட்டிகளிற்காக நீங்கள் தென்னாபிரிக்காவில் சென்று இறங்கும்போது உங்கள் தோள்களின் பின்னால் சற்றே திரும்பிப் பாருங்கள், ஏனெனில் உண்மையான விளையாட்டு வீரனொருவனின் அவமானம் அங்கே உங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும்.

பார்க்க விரும்பினால்

8 comments:

  1. அன்பு நண்பரே

    தியரி ஹென்றி ஒரு திறமையான ஆட்டக்காரர். தன் அணிக்காக ஆடக்கூடியவர். நேர்மையான ஆட்டக்காரரும் கூட என இன்னமும் நான் நம்புகிறேன். தன் அணி வெற்றிப் பெற்றே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திற்காக சகித்துக் கொண்டு சொன்ன வார்த்தைகளாக கூட அவை இருக்கலாம்,

    கிரிக்கெட்டை போல ஒரே இடத்தில் கால்களில் பூக்கள் முளைக்கும் வண்ணம் நின்றுக் கொண்டிருக்கும் நடுவர்போல கால்பந்து நடுவர் இருக்க முடியதல்லவா? சிலவேளைகளில் கவனம் தவறுவது இயல்பே.

    அயர்லாந்தின் மிகத் திறமையான ஆட்டத்தை சற்றும் நான் எதிர்பார்க்கவே இல்லை. உலகக் கோப்பை போட்டியில் ஒருவேளை ப்ரான்ஸ் இறுதியில் வெற்றி பெறுமேயானால் அவர்களின் மனச்சாட்சி அவர்களை கடைசிவரை மன்னிக்காது.

    மரடோனாதான் தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பிக்க தகுதியானவர். அவர் சொன்னது ‘அது கடவுளின் கை’.

    அழகிய நடையில் உங்களது இக்கட்டுரை அமைந்துள்ளது. ஒருவேளை இப்போட்டி இங்கிலாந்திற்கும் ப்ரான்சிற்கும் இடையில் அமைந்திருந்தால் நீங்கள் ஒருயுத்த கள கட்டுரை எழுத நேரிட்டிருக்கும், :)

    ReplyDelete
  2. well said.the supporters also make silence.last judegement[god]?

    ReplyDelete
  3. காதல் பறவையே,

    கால்பந்து போட்டிகளில் கிரிக்கெட் அளவிற்கு அவ்வளவு ஆர்வம் இல்லையென்றாலும், நான் பார்த்த சில போட்டிகளில் ஹென்றியின் ஆட்டத்தை பார்த்து பிரமித்திருக்கிறேன்.

    ஒரு நாடே தங்கள் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது, தன் மனசாட்சியை காரணியாக கொண்டு ஒருவன் எவ்வளவு தூரம் தான் உண்மையை ஒப்புக்கொள்ள முடியும் என்று நினைக்கும் போது, அவர் செய்தது ஒப்புகொள்ள முடியுமா என்று மனபோராட்டம் நடத்த வேண்டி தான் இருக்கிறது.

    நம்ம ஊரில் சொல்வது போல, நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் சரிதான் என்று கூறி கொண்டு போய் விட வேண்டும் போல.

    அனுபவங்களை பகிரும்போதும் கூட, அங்கு அங்கு அழகு ஓவியங்களை அளவெடுக்காமல் காதலர் விடுவதில்லை போலும்... நடத்துங்கள் வேட்டையை, கண்களில் மட்டும் தான் :)

    ReplyDelete
  4. ஜோஸ்,அந்தத் தருணத்தில் எந்த வீரனுமே வாயை திறந்திருக்க மாட்டார்கள், ஹென்ரி தன் கைபட்டது என்று கூறியிருந்தால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் நடுவர், துணை நடுவருடன் கலந்தாலோசித்திருக்கலாம். ஹென்ரியின் கை விளையாட்டை தவளைக் கை என்று அயர்லந்துப் பத்திரிகை ஒன்று கிண்டல் அடித்திருக்கிறது. இங்கிலாந்துடன் இந்த நிலை வந்திருந்தால் ரணகளம்தான். வரும் பருவத்திற்குரிய ஹென்ரியின் இங்கிலாந்து கால்பந்துக் கிளப்பு ஒப்பந்தங்களும் கேள்விக்குறியாகியிருக்கும். இப்போது கூட இங்கிலாந்திலிருந்துதான் அறிக்கை விடுகிறார். நீங்கள் அண்மையில் கால்பந்து ஆட்டங்களில் பங்கேற்றிருக்கிருகிறீர்களா? கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    அனானி அன்பரே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ரஃபிக், நீங்கள் கூறியது போல் அழகை ரசிப்பதுடன் எல்லாம் முடிந்து விடுகிறது. ஒரு நாள் இதற்கு விடிவு வரும் என்று நம்புகிறேன் :) பிரான்ஸ் அணியின் திறமையை தென்னாபிரிக்காவில் முழு உலகமே காணத்தானே போகிறது. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. ஒரு நடு நிலையான பார்வையாளனின் நேர்மையான உணர்வை தான் சொல்கிறது உங்களின் பதிவு. எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து. அனேகமாக எந்த மேட்சையும் தவறவிடுவதில்லை. உங்களின் எண்ணம் தான் உண்மையான கால்பந்து ரசிகனின் எண்ணமும் கூட. ஹென்றி போன்ற வீரர்கள்
    ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் உண்மை உண்மையே. அதை யாராலும் மறுக்க முடியாது. காலம் அதை வெளிப்படுத்தும். முதன் முதலின் கால்பந்து மேட்சை பதிவு செய்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். தொடர்க...

    ReplyDelete
  6. // ஒரு நாள் இதற்கு விடிவு வரும் என்று நம்புகிறேன் :) //

    நவஜோ மதகுரு கவனிக்க....

    (என் மனசாட்சி: பத்த வச்சிட்டீயே, பரட்ட)

    ReplyDelete
  7. நண்பர் வேல்கண்ணன் அவர்களே உங்கள் கனிவான கருத்துக்களிற்கும், வாழ்த்துக்களிற்கும் நன்றி.

    ரஃபிக், இது நியாயமா, தர்மமா!! :)

    ReplyDelete
  8. கடைசியில் தர்மம் நிலைத்து விட்டது... ப்ரான்ஸ் கால்பந்து அணி இப்படி கோல்மால் செய்து உலக கோப்பைக்கு வந்து, இப்படி அவர்களுக்குள் அடித்து கொண்டு, போட்டி இட்டிருக்கவே வேண்டாமோ என்று தற்போது எண்ணி கொண்டிருப்பார்கள் :)

    ReplyDelete