நிகழ்காலத்தில் இருண்டிருக்கும் திரையிலிருந்து ஒலிக்கும் வயதேறித் தளர்ந்த குரல் ஒன்று, திரையின் மத்தியில் மெதுவாக ஒளிரத்தொடங்கும் கடந்த காலத்திற்குள் பார்வையாளனை அழைத்துச் செல்கிறது.
ஜெர்மனியில், 1913ம் ஆண்டின் வசந்தம் தன் பூரண அழகுடன் வீசிக்கொண்டிருக்கும் ஒர் சிறு கிராமம் பிரகாசமாக எம் கண்களில் தெரிகிறது. எம்மை அங்கே அழைத்துச் செல்லும் குரல் முன்பு அக்கிராமத்தில் பணியாற்றிய பள்ளி ஆசிரியனுடையதாகவிருக்கிறது.
கிராமத்தில் நடந்தேறிய சில விபரீதமான சம்பவங்களை பார்வையாளன் நன்கு அவதானிப்பதன் மூலம் ஜெர்மனியின் வரலாற்றில் கறுப்பாக படிந்திருக்கும் வரிகளை அவனால் ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும் என்கிறது ஒர் குரல்.
அக்கிராமத்தில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்தவராக ஒர் பிரபு இருக்கிறார். அவரிற்கு ஒர் அன்பு மனைவி. மூன்று பிள்ளைகள். அக்கிராமத்தின் தலைவர் அவர்தான் என்று கூறிடலாம். கிராமத்தில் வசிக்கும் வறிய மக்கள் பிரபுவின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஜீவனத்தின் வழி பிரபு என்பதால் அவரின் அதிகாரத்திற்கு அடங்கி, அவர் மேல் மதிப்பு கொண்டவர்களாக அவர்கள் வாழ்கிறார்கள்.
பிரபுவின் பின் கிராமத்தின் மதிப்பும் கவுரவும் மிகுந்த குடும்பங்களாக கிராம மருத்துவர், மத போதகர், பிரபுவின் சொத்துக்களை பராமரித்துக் கொள்பவர் ஆகியோரின் குடும்பங்கள் திகழ்கின்றன. கிராமத்தின் பள்ளியில் பிள்ளைகளிற்கு பாடங்களையும், இசைப்பாட்டையும் கற்றுத்தருபவராக பணியாற்றுகிறார் ஆசிரியர். அவர் அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் அல்ல.
கிராமத்தின் மத போதகர் தன் பிள்ளைகளை மிகுந்த கண்டிப்புடனும், ஒழுக்கத்துடனும் வளர்ப்பவர். தீமை என்பது தன் பிள்ளைகளையோ அல்லது தன் பிள்ளைகள் தீமையையோ நெருங்கி விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார் அவர்.
தீமைகளை தன் பிள்ளைகள் எந்நேரமும் விலத்தியிருக்க வேண்டும் என்பதை அவர்களிற்கு நினைவூட்டுவதற்காக அவர்கள் கைகளிலும், தலை முடியிலும் வெள்ளை ரிப்பன் கட்டி விடுகிறார் அவர். வெள்ளை ரிப்பன் களங்கமின்மையையும், தூய்மையையும் அவர்களிடம் இருந்து பிரியாது கட்டி வைத்திருக்கும் ஒர் அடையாளமாக அவரிற்கு இருக்கிறது.
தன் குழந்தைகள் சிறிய தவறுகள் இழைத்தால் கூட அவர்களை அவர் கடுமையாக தண்டிக்கிறார். பிரம்பால் அடித்தல், பட்டினி போடல், கட்டிலில் தன் மகனின் கரங்களை கட்டிவிடுதல் என அவர் தண்டனைகள் தவறுகளிற்கேற்ப வேறுபடுகின்றன.
கிராம மருத்துவரிற்கு ஒர் மகள், ஒர் பையன் என இரு பிள்ளைகள். தன் மனைவி இறந்து விட மேடம் வாக்னர் எனப்படும் பெண்மணியின் உதவியுடன் தன் குழந்தைகளை வளர்த்து வருகிறார் மருத்துவர். மேடம் வாக்னர் மருத்துவரின் மருத்துவப்பணியிலும் அவரிற்கு உதவியாளராக செயற்பட்டு வருகிறார். மேடம் வாக்னரிற்கு மனநிலை சற்றுக் குன்றிய ஒர் மகன் இருக்கிறான்.
கிராமப் பிரபுவின் நிலத்தில் தன் குதிரையோட்டத்தை முடித்துக் கொண்டு தன் வீடு நோக்கி திரும்புகிறார் மருத்துவர். அவர் தன் வீட்டினை அண்மிக்கும் வேளையில் அவர் குதிரை கால் இடறி கீழே வீழ்கிறது. குதிரையுடன் கூடவே கீழே விழும் மருத்துவரிற்கு உடலில் நல்ல அடி படுகிறது.
கீழே விழுந்த மருத்துவர் சிகிச்சைக்காக கிராமத்திலிருந்து தொலைவிலிருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். மருத்துவரின் குதிரை வீழ்ந்ததிற்கு காரணம் அது வரும் பாதையின் குறுக்காக கட்டப்பட்டிருந்த கம்பி ஒன்று என்பது தெரிய வருகிறது. ஆனால் அங்கு யார் அந்தக் கம்பியைக் கட்டியிருப்பார்கள் எனும் கேள்விக்கு யாரிற்குமே விடை தெரியவில்லை.
மருத்துவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த பின், பரோனின் மர அரிவு ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த உடல் நலம் குன்றிய ஒரு பெண்மணி மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகி இறந்து போகிறாள். அப்பெண்ணின் மகன் தன் தாயின் மரணத்திற்கு பிரபுதான் காரணம் எனக் கோபம் கொள்கிறான். இது குறித்து மெளனமாக இருக்கும் அவன் தந்தையுடன் அவன் வாக்குவாதம் செய்கிறான். அவன் தந்தையோ அவனை எந்த எதிர்ப்பையும் காட்டாது அமைதியாக இருக்கும்படி கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறார்.
கிராமத்தில் வசந்தமானது இலையுதிர்காலத்தை வரவேற்க தயாராக, கிராம மக்கள் அறுவடை விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிறார்கள். பிரபுவின் ஆசியுடன் அறுவடை விழாவானது களைகட்டுகிறது. பீரும், உணவு வகைகளும் தாராளமாக பரிமாறப்படுகின்றன. இசையும் நடனமும் கிராம மக்களின் துன்பங்களை மறக்கடிக்க செய்கின்றன. நல்ல ஒர் அறுவடை தந்திடும் மனநிம்மதியை கிராமத்தவர்கள் அனுபவிக்கிறார்கள். விழா நடந்து கொண்டிருக்கும் வேளையில் பிரபுவின் கோவா தோட்டத்தில் நுழையும் ஒருவன் அத்தோட்டதை சிதைத்து விடுகிறான்.
தனது கோவா தோட்டம் சிதைக்கப்பட்டதை அறிந்து கொள்ளும் பிரபு அதிர்ச்சியடைகிறார். இந்தக் காரியத்தை செய்தது யாராக இருக்கலாம் என்று கிராம மக்கள் தங்களிற்குள் கேள்விகளை எழுப்பிக் கொள்கிறார்கள். அன்றைய இரவு தன் மகன் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டதையும் பிரபு அறிந்து கொள்கிறார்.
காணாமல் போன பிரபுவின் மகனைத் தேட ஆரம்பிக்கிறார்கள் கிராமத்தவர்கள். பீர் தந்த மயக்கமும், விழா தந்த களைப்புமாக இருளை எரிக்கும் தீப்பந்தங்களுடன் கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தும் அவர்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்தரவதைக்குள்ளாகியிருக்கும் பிரபுவின் மகனைக் கண்டு கொள்கிறார்கள்.
ஞாயிறன்று கிராம ஆலயத்தில் கூடியிருக்கும் கிராமமக்களிடம் இந்தக் குரூரமான செயலை செய்தவர்களை கண்டுபிடிக்க தனக்கு உதவும்படி வேண்டுகிறார் பிரபு. தொடரும் சில வாரங்களின் பின் பிரபுவின் களஞ்சியம் ஒன்றும் மர்மமான முறையில் தீக்கிரையாக்கப்படுகிறது.
இச்சம்பவங்களின் பின் உடல்நலம் தேறி கிராமத்திற்கு திரும்புகிறார் மருத்துவர். அவர் கிராமம் திரும்பிய சிறிது காலத்தின் பின் மேடம் வாக்னரின் மனநலம் குன்றிய மகன் மிகவும் குரூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் கிராமத்தவர்களால் கண்டெடுக்கப்படுகிறான். அவன் அருகில் தந்தை செய்யும் பாவங்களிற்கு அவனுடைய சந்ததி தண்டிக்கப்படும் எனும் வேதாகம வசனம் எழுதப்பட்ட காகிதம் காணக்கிடைக்கிறது.
ஒரு நாள் மாலை தன் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போதகர், தன் அறையில் அவர் அன்பாக வளர்த்து வந்த குருவியின் இறந்த உடல், கத்தரிக்கோல் ஒன்று அதனுடலில் செருகப்பட்ட நிலையில், சிலுவையில் அறையபட்ட கிறிஸ்துவைப்போல் அவர் மேசையின் மீது கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார்.
தன் மகன் தாக்கப்பட்டு சில நாட்களின் பின், பள்ளி ஆசிரியருடன் பதட்டமாக உரையாடும் மேடம் வாக்னர், தன் மகன் தன்னை தாக்கியவர்கள் யாரென்று தனக்கு கூறியதாக கூறிவிட்டு கிராமத்திலிருந்து காணாமல் போய்விடுகிறாள். மேடம் வாக்னரின் கூற்றால் உந்தப்படும் பள்ளி ஆசிரியர் தன் சிறு விசாரணைகளின் பின் கிராமத்தில் நடந்த அசம்பாவிதங்களிற்கு காரணமாக இருக்ககூடியவர்கள் யார் என்பதன் சாத்தியத்தை ஊகித்து விடுகிறார்…..
ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், மேற்பூச்சாக கொண்ட சமூகமொன்றின் உள்ளே தந்திரமாக வேடமிட்டிருக்கும் போலித்தனங்களையும், வன்மத்தையும், குரூரத்தையும் அழுத்தமாகக் காட்டுவதுடன் நின்றுவிடாது, இச்சமூகத்தின் துவேஷங்களையும், வெறிகளையும் உள்ளெடுத்தபடியே அச்சமூகத்தை விட மோசமாக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சந்ததி ஒன்றின் தோற்றத்தையும் அதன் விளைவுகள் எவ்வாறாக இருக்கலாம் என்பதனையும் பார்வையாளனை நோக்கி அழுத்தமாக திருப்புகிறது Das Weisse Band எனும் இந்த ஜெர்மன் மொழித்திரைப்படம்.
வசதி படைத்தவன் வறியவன் மேல் கொண்டுள்ள அதிகாரம், ஆண் பெண்மேல் கொண்டுள்ள அதிகாரம், வளர்ந்தவர்கள் சிறியவர்கள் மேல் கொண்டுள்ள அதிகாரம், கடவுள் மனிதன் மேல் கொண்டுள்ள அதிகாரம் என்பவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் இத்திரைப்படம், அதிகாரத்தின் கீழ் அடக்கப்படுபவர்கள் திருப்பி அடித்தால் அதன் விளைவுகள் தரும் பாதிப்புக்களையும் காட்டுகிறது.
பார்வையாளனை படிப்படியாக திரைப்படத்தின் சம்பவங்கள் மூலம் தீமையின் தழுவலிற்குள் அகப்படவைத்து அவர்களை அதிர்ச்சியும், சங்கடமும் கொள்ள வைக்கிறார் ஆஸ்திரிய இயக்குனர் Michael Haneke. ஒர் தூய்மையான சமூகத்தின் பின் மறைந்திருக்கக் கூடிய தீமையின் சலனத்தை அவர் பார்வையாளன் மனதில் பதித்து விடத் தவறவில்லை.
மருத்துவரிற்கும் மேடம் வாக்னரிற்குமிடையிலான ரகசியக் காதல் முறிவடையும் காட்சியில் பேசப்படும் வசனங்களின் வன்மம் பார்வையாளனை ஊமையாக்கி அவன் உணர்வுகளை சாட்டை கொண்டு அடிக்கிறது. மருத்துவரின் வக்ரம் வெளிப்படும் தருணத்தில் தீமையின் பிரகாசத்தினுள் குறுகிப் போகிறான் பார்வையாளன்.
தான் கண்டெடுத்து ஆசையுடன் வளர்த்து வரும் குருவியை கண்டிப்பான போதகரான தன் தந்தைக்கு வழங்க முன்வரும் அந்த சிறுவனின் பாசம் கடவுளையே நெகிழ வைக்கும்.
திரைப்படம் கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. Christian Berger எனும் ஆஸ்திரிய ஒளிப்பதிவாளர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிகுந்த இருண்ட கதை கொண்ட இத்திரைப்படத்தை வசந்தகாலம், அறுவடை விழா, பனிக்காலம் என பிரகாசமாகக் காட்டியிருக்கிறார் அவர். இருண்ட காட்சிகளின் தெளிவு வியக்க வைக்கிறது. இருளும் ஒளியும் அரவனைத்துக் கொள்ளும் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்களின் நடிப்பு பார்வையாளர்களை வசியம் செய்து விடுகிறது. அதிலும் போதகரின் கடைக்குட்டி மகனின் புன்னகையை மறக்கவே முடியாது.
படத்தில் நிகழும் பெரும்பாலான குற்றங்களை செய்தவர்கள் யார் என்பதை பார்வையாளனையே ஊகிக்கும்படி அழைக்கிறார் இயக்குனர். முதாலாம் உலக யுத்தத்தின் அறிவிப்புடன் நிறைவடைகிறது படம். ஜெர்மன் மண்ணில் விளைந்திருந்த[இருக்கும்]எல்லாவகை துவேஷங்களினதும், வெறிகளினதும் ஆதிவேர்களின் ஊன்றலை ஒர் சிறிய கிராமத்தின் சமூகம் வழி தேட முயன்றிருக்கிறார் Michael Haneke. இத்திரைப்படம் அவரிற்கு CANNES திரைப்படவிழாவின் [2009] மிக உயர்ந்த விருதான Palme D’Or ஐப் பெற்றுத்தந்தது.
விளைநிலமொன்றில் தீமைகளை கலந்து விதைக்கும் போது விளைவதும் தீமையைத் தன்னுள்ளே கொண்டே இருக்கும். தீமைகளை விலக்குவதற்கு கட்டப்படும் ரிப்பன்கள் என்ன வண்ணத்திலிருந்தாலும், மனதில் தீமை விளைவிக்கும் கவர்ச்சியின் வண்ணத்தின் முன்பாக அவை பெரும்பாலும் வண்ணமிழந்தே போகின்றன. [***]
ட்ரெயிலர்
விரிவான விமர்சனம். படம் கருப்பு வெள்ளையா ?
ReplyDeleteThanks for introducing new n interesting movies.
ReplyDelete-Toto
www.pixmonk.com
நல்ல விமர்சனம்
ReplyDeleteஅருமையான விமர்சனம். தேடிப்பிடித்து பார்த்து விடுகிறேன். நன்றி நண்பரே
ReplyDeleteஅன்பு நண்பரே
ReplyDeleteவண்ணப்படங்கள் சொல்லாத ஒரு உணர்வை கருப்பு வெள்ளைப் படங்கள் சொல்லி விடுகின்றன. ஒரு முழுப்படத்தின் உணர்வையும் உங்களின் சிலப் படங்களில் பார்த்த உணர்வு. தீமையின் காலடித்தடம் படம் மிகவும் பிடித்திருந்தது.
இது போன்ற படத்திற்கு நாங்கள் பனை ஒலைக்கூட கொடுக்க மாட்டோம். கதையினை சிறிது மாற்றி பேரரசு இயக்கினால் ஒருவேளை இக்கதை விருது பெற வாய்ப்புண்டு. :)
நண்பர் பின்னோக்கி அவர்களே, முழு நீள கறுப்பு வெள்ளைக் காவியம். கருத்திற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் TOTO அவர்களே உங்கள் ஆதரவிற்கும், கருத்திற்கும் நன்றி.
நண்பர் கிள்ளிவளவன் அவர்களே உங்கள் கருத்திற்கு நன்றி.
நண்பர் வேல்கண்ணன் அவர்களே உங்கள் கருத்துகளிற்கு நன்றி.
ஜோஸ், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. நீங்கள் வழங்கப் போவதாக கூறியிருந்த தங்க ஆலமர விருதுக்கு ஏற்றமாதிரி இக்கதையை பேரரசு டெவலப் பண்ண வேண்டுகோள் வைத்து விடலாம் அன்பு நண்பரே.