Sunday, November 1, 2009

ஒன்று, இரண்டு... XIII- கண்ணீர் கேட்கும் நீதி


judg1 பெண்டகனின் புற்தரையின் இளம் ஈரம் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களின் காலணிகளை குளிர்வித்துக் கொண்டிருந்தது. புற்தரையின் ஒர் பகுதியில் அமைந்திருந்த ஹெலிபாட்டில் காற்றைக் கலக்கியபடியே வந்திறங்குகிறது அமெரிக்க ஜனாதிபதி வால்டர் ஷெரிடானை ஏந்திய ஹெலி.

ஹெலியிலிருந்து தன் சகாக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கீழே இறங்கும் ஜனாதிபதியை விறைப்பான உடல்களுடன் வரவேற்கிறார்கள்- இன்னமும் சிறிது நிமிடங்களில் தன் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அமெரிக்க ராணுவ முப்படைகளின் கூட்டுத்தளபதியான ஜெனரல் பெஞ்சமின் காரிங்டன் மற்றும் அப்பதவிக்கு புதிதாக நியமனம் பெறவிருக்கும் ஜெனரல் ஜேம்ஸ் எல்ராய் விடேக்கர்.

ஜெனரல் காரிங்டனைப் பற்றிய புகழுரையை அங்கு குழுமியிருப்பவர்கள் மத்தியில் ஜனாதிபதி ஆற்றி முடித்த பின், பெண்டகனின் ரகசிய நிலவறையொன்றில் பதவி மாற்றத்தின் அதி ரகசிய பரிமாற்றங்களை நிகழ்துவதற்காகச் செல்கிறார்கள் இரு ஜெனரல்கள், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர்.

இவர்களுடன் கூடவே அந்த அறைக்கு ஓர் கறுப்பு சூட்கேஸும் செல்கிறது. இந்தக் கறுப்பு சூட்கேஸை பல ஹாலிவூட் படங்களில் நண்பர்கள் பார்த்திருப்பீர்கள். இப்பெட்டியில் உள்ள சில சங்கேத எண் பட்டன்களை தகுந்த முறையில் அழுத்தினால் உலகில் ஒர் மெகா அணு ஆயுத அழிவு ஏற்படும்.[ இதே போன்று ஓர் கறுப்பு சூட்கேஸை தமிழ் கூறும் நல்லுலகின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் தன் படங்களில் உபயோகித்து இருக்கிறார்]

இந்தப் பரிமாற்றங்களின் பின் ஜனாதிபதி புதிதாகப் பதவியேற்றிருக்கும் ஜெனரல் விடேக்கரை வாழ்த்தி உரையாற்றுவார். இதனை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது பெண்டகணின் பிறிதோர் பகுதியிலிருந்து மேலே உயரும் ஹெலியின் சத்தம். பாதுகாப்பு அதிகாரிகளின் உள்ளுணர்வு ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்த்தி விட பெண்டகணின் ரகசிய நிலவறையை நோக்கி விரைவாக ஓடுகிறார்கள் அவர்கள்.

judg2 ரகசிய நிலவறையின் கதவுகளைத் திறந்து அதனுள் நுழையும் அதிகாரிகள் அங்கு ஜெனரல் விடேக்கரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் மயங்கிக் கிடப்பதைக் காண்கிறார்கள். ஜனாதிபதி வால்டர் ஷெரிடானும், ஜெனரல் காரிங்டனும் நிலவறையில் இருந்து காணாமல் போயிருக்க அவர்களுடன் இணைந்து அணுப் பேரழிவை உலகிற்கு அள்ளி வழங்கிவிடக்கூடிய கறுப்பு சூட்கேஸூம் மறைந்து போயிருந்தது.

வாஷிங்டனிலிருந்து ஐம்பது கிலோ மீற்றர் தூரத்தில், ஜெனரல் காரிங்டன் ஜனாதிபதியைக் கடத்திச் சென்ற ஹெலி கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. ஹெலியின் இருக்கை ஒன்றில் ஓர் கடிதம் ஜம் என உட்கார்ந்திருக்கிறது. அக்கடிதத்தில் தான் மேஜர் ஜோன்ஸையும், மக்லேனையும் மட்டுமே சந்திக்க விரும்புவதாக ஜெனரல் காரிங்டனின் எழுத்துக்கள் கூறுகின்றன.

இதனையடுத்து வெள்ளை மாளிகையில் உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக் கூட்டம் ஒன்று ஏற்பாடாகிறது. கோஸ்டா வெர்டிலிருந்து உடனடியாக வரவழைக்கப்படும் மேஜர் ஜோன்ஸும், மக்லேனும் [XIII] இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

ஜெனரல் காரிங்டன் எவ்வாறு ஜனாதிபதியைக் கடத்தி சென்றார் என்பதனையும், கறுப்பு சூட்கேஸ் தற்சமயம் காரிங்டனின் பிடியில் இருக்கிறது என்ற தகவலையும் அதிகாரிகள் வழி ஜோன்ஸூம், மக்லேனும் அறிந்து கொள்கிறார்கள். காரிங்டனையும், அவனது சகாக்களையும் ஜோன்ஸும், மக்லேனும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறார்கள்.

அதிகாரிகளின் வேண்டுகோளை நிராகரிக்கும் மக்லேனையும், ஜோன்ஸையும் நீண்டகாலம் சிறையில் போட வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறான் ஜியோர்டினோ. இதேவேளையில் ஜெனரல் காரிங்டன் அனுப்பி வைத்த ஒளிநாடா ஒன்று வெள்ளை மாளிகையை வந்தடைகிறது.

அந்த ஒளிநாடாவில் செவ்விந்தியன் செல்லுமிடத்தில் அவர்களை தான் சந்திப்பதாக ஜோன்ஸிற்கும், மக்லேனிற்கும் தகவல் தருகிறார் ஜெனரல் காரிங்டன். செவ்விந்தியன் செல்லுமிடம் என்பது என்ன என்று தெரியாது குழம்புகிறார்கள் அதிகாரிகள். ஜெனரல் காரிங்டனின் தகவல் முடிந்த கணமே அவர் அனுப்பிய ஒளிநாடாவும் வெடித்து சிதறுகிறது.

judg3 செவ்விந்தியன் செல்லுமிடத்தை நோக்கி கிளம்புகிறார்கள் அதிரடி ஜோடிகளான ஜோன்ஸும், மக்லேனும். விமானப் படை விமானத்தினை சமயோசிதமாக ஒர் சிறிய புயல் மண்டலத்தினுள் செலுத்தி தங்கள் பயணத்தை கண்காணிப்பவர்களின் கண்களிற்கு தண்ணி காட்டி விடுகிறாள் கறுப்பழகி ஜோன்ஸ்.

வீசிக் கொண்டிருக்கும் புயலினூடு விமானத்தை ஒர் பெரிய ஏரியின் மீது இறக்கி விடுகிறாள் அவள். அதன்பின் அவர்கள் இருவரும் ஒர் நீண்ட பயணத்தை மேற்கொண்டு இயற்கை அழகு அள்ளித் தழுவிக் கொள்ளும் கெலோனி ஏரிப் பிரதேசத்தில் இருக்கும் ஒர் மர வீட்டை வந்தடைகிறார்கள். ஆனால் அந்த வீட்டில் அவர்களிற்காக காத்திருப்பது ஜெனரல் காரிங்டன் அல்ல.

அழகிய இயற்கையின் தழுவலில் மயங்கிக் கிடக்கும் மரவீட்டில் அவர்களை வரவேற்கிறார் ஜெனரல் காரிங்டனின் சகாவான கேணல் ஏமஸ்.

ஜெனரல் காரிங்டனின் கணனியைக் கிளறும் அதிகாரி ஒருவன், கைவிடப்பட்ட நிலையிலிருந்த அணு ஆயுத தளமொன்றை ஜெனரல் காரிங்டன் ரகசியமாக புணரமைத்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். நவீன வகை பாதுகாப்பு வேலிகள், செய்மதி வழித் தொலை தொடர்பு வசதிகள் என மிக நவீனமாக புணரமைக்கப்பட்டிருக்கிறது அத்தளம். இத்தகவல்களை அறியும் உயர் அதிகாரிகள் காரிங்டன் ஜனாதிபதியை அத்தளத்தில்தான் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்பதனை ஊகித்துக் கொள்கிறார்கள்.

தன் சமையல் திறமை மூலம் மக்லேனின் சுவையுணர்வையும் மறக்கடிக்க செய்து விடும் கேணல் ஏமஸ், காரிங்டன் எதற்காக ஜனாதிபதி வால்டர் ஷெரிடானைக் கடத்தினார் என்பதனை அவர்களிற்கு விளக்குகிறார். காரிங்டனின் திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் ஒர் முக்கியமான நபரை மக்லேனும், ஜோன்ஸும் கடத்தி வர வேண்டும் எனவும் அவர் கூறுகிறார். அவர்கள் கடத்தி வர வேண்டிய நபர் வேறு யாருமல்ல. அவன் பெயர் மங்கூஸ்ட்.

judg4 பஹாமாஸிலுள்ள ரம் கே எனும் தீவிற்கு கேணல் ஏமஸின் அறிவுறுத்தலின்படி வந்து சேர்கிறார்கள் மக்லேனும், ஜோன்ஸும். கடற்கரை அருகிலிருக்கும் பெரிய மாளிகையொன்றில் அழகிய கொலைகாரி இரினா, மற்றும் பாதுகாவலர்கள் சகிதம் இன்பமாக வாழ்க்கையை அனுபவித்து வருகிறான் மங்கூஸ்ட். மங்கூஸ்ட் கூட்டத்தின் நடவடிக்கைகளை வேவு பார்க்கும் மக்லேன், ஜோன்ஸ் ஜோடி அதிரடியில் இறங்கத் தயாராகிறது…

ஜெனரல் காரிங்டன் ஜனாதிபதியைக் கடத்தியதற்கான காரணம் என்ன? மேஜர் ஜோன்ஸும், மக்லேனும் கூலிக் கொலைஞன் மங்கூஸ்டைக் கடத்தி வருவதில் வெற்றி கண்டார்களா? ஜெனரல் காரிங்டனின் திட்டம் வெற்றி பெற்றதா?

XIII காமிக்ஸ் தொடரின் 12வது ஆல்பமான LE JUGEMENTன் கதையை, பாசம் நிறைந்த தந்தை ஒருவனின் கண்ணீர் கேட்கும் நீதி என ஒரு வரியில் கூறிவிடலாம்.

judg5 ஜெனரல் காரிங்டன் அமெரிக்க ஜனாதிபதையைக் கடத்தி சென்று ஒர் திட்டத்தை செயற்படுத்த விரும்புகிறார், அத்திட்டத்திற்கு தீர்ப்பு வழங்குவதற்கு அவர் அமெரிக்க நல்லுலகின் மக்களை அழைக்கிறார். இத்திட்டத்தை அவர் மக்களிடம் நேரடியாக எடுத்து செல்ல அமெரிக்காவின் பலம் பொருந்திய ஊடகங்களில் ஒன்றான தொலைக்காட்சியை தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்.

1992ல் வெளியாகிய இந்த ஆல்பத்தின் இறுதிப் பகுதி, ஜெண்டில்மேன் இயக்குனரின் இயக்கத்தில் உலகநாயகன் நடித்து வெற்றி பெற்ற ஒர் திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சிகளை வாசகர்கள் மனதில் அலையடிக்க செய்யலாம்.

வழமை போன்றே விறுவிறு ஆக்‌ஷனிற்கு மக்லேன், ஜோன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். கவர்ச்சிக்கு ஜோன்ஸ் மற்றும் இரினா [ சிங்கிள் சிங்கம் ஜோஸிற்காகவே இந்த வரிகள்] ஆனால் தமிழ் டப்பிங்கில் அவை வருமா என்பது தெரியவில்லை!! கதையின் நெகிழ்வான ஒரே ஒரு பக்கத்தை காரிங்டன் அபகரித்துக் கொள்கிறார். அப்பக்கத்தில் வான் ஹாம் மெளனம் காத்துவிட, தன் சித்திரங்களினால் மனத்தைக் கனக்க வைக்கிறார் வில்லியம் வான்ஸ்.

கெலோனி ஏரி மர வீட்டுக் காட்சிகளை திறக்கும் சித்திரங்கள் சிறப்பாக இருக்கின்றன. JVH என்றும் வேறு சில வகைகளிலும் வான் ஹாமின் பெயரை சித்திரங்களில் விளம்பரப்படுத்தியிருக்கிறார் வான்ஸ். கதையில் அமெரிக்க காமிக்ஸ் நாயகன் PUNISHERன் அடாவடி நடவடிக்கைகள் குறித்த மக்லேன் அடிக்கும் கமெண்ட் கூட உண்டு.

XIII தொடரின் முதல் சுற்றின் இறுதி ஆல்பம் இது எனக் கூறினால் அது மிகையானது அல்ல. ஆனால் கதையைப் படிக்கும்போது இதில் நடப்பவை எல்லாம் சாத்தியம்தானா என்று மனது ஒர் கண்டிப்பான காதலியைப்போல் கேள்விகளை எழுப்புகிறது. கேள்விகளை எழுப்பும் மனதினை தாலாட்டி தூங்க வைத்து விட்டு படித்தால் XIIIன் ரசிகர்களை இந்த ஆல்பம் திருப்திப்படுத்தும். [***]

8 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  மேஜர் ஜோன்ஸின் கிளுகிளுப்பு படத்தை வெளியிட்டதற்கு பிடுயுங்கள் பாராட்டுக்களை!

  இந்த ஆல்பமும் இதற்கு பின்வருபவையும் கதையை மேலும் ஜவ்வாக இழுத்துச் சென்ற படியால் இவற்றின் மேல் அவ்வளவாக அபிப்ராயம் இல்லை!

  XIII பொங்கலுக்கு இப்போதே உலையை பற்ற வைத்ததற்கு நன்றிகள்! சீக்கிரமா பொங்க வெச்சிருங்கப்பா!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. முடியாது.. நோ...சாரி..
  200 ரூபாய் கொடுத்து முன்பதிவு பண்ணிட்டேன்.
  அதுனால இந்த பதிவ படிக்க மாட்டேன் :)

  ReplyDelete
 3. yes,, this is last episode for first round....

  and begining for next round....

  ReplyDelete
 4. As Dr7 said, this volume is the begining of the mega serial culture for the XIII series. The story itself is confusing enough, on top of that, the copy I have got(combined volumes of 10,11 & 12) had the pages jumbled, leaving even more confusion. I had to read this book 3/4 times to understand the sotry.

  Nevertheless must read for all the XIII fans. I'm eagarly waiting for the Tamil release and more than that, the response from the Tamil comic fans for this legendary character now.

  ஆனால் கதையைப் படிக்கும்போது இதில் நடப்பவை எல்லாம் சாத்தியம்தானா என்று மனது ஒர் கண்டிப்பான காதலியைப்போல் கேள்விகளை எழுப்புகிறது. கேள்விகளை எழுப்பும் மனதினை தாலாட்டி தூங்க வைத்து விட்டு படித்தால் XIIIன் ரசிகர்களை இந்த ஆல்பம் திருப்திப்படுத்தும்./ Summarises the post/story beautifully :-)

  ReplyDelete
 5. உங்களின் பதிவுகளில் முதலில் படிப்பது மொழியாக்க பக்கங்களை தான்.
  //தன் சித்திரங்களினால் மனத்தைக் கனக்க வைக்கிறார் வில்லியம் வான்ஸ்//
  ஐந்து பக்கங்களில் நானும் எண்ணினேன். அருமை. வாழ்க... வளர்க...
  ஏதேனும் நாவல் பற்றி பதிவு உண்டா.. நண்பரே

  ReplyDelete
 6. தலைவர் அவர்களே, கிளுகிளுப்பு படத்தை வெளியிட்டு உங்களிடம் பாராட்டைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாசகர்களின் வரவேற்பை அடுத்தே டார்கோட் கதைத்தொடரை தொடரச் செய்தது, விற்பனை அதிகரித்தது உண்மையே ஆனால் நல்ல கதையை எதிர்பார்த்திருந்த ரசிகர்களை தொடர் அதிகம் திருப்திப்படுத்தவில்லை என்பது உண்மை. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.

  நண்பர் பின்னோக்கி உங்கள் குறும்பான கருத்துக்களிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.

  நண்பர் ரமேஷ் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. உங்கள் கருத்திற்கு நன்றி.

  மதிப்பிற்குரிய முத்து விசிறி அவர்கட்கு, தமிழ் ரசிகர்கள் மக்லேனை விமர்சையாக வரவேற்பார்கள், ஆனால் மக்லேன் அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் காணவேண்டும். 25 வருடங்களின் பின்னும் XIII எனும் தலைப்பை வைத்து திறம்பட வணிகம் செய்கிறது டார்கோட். என் பதிவொன்றில் உங்கள் கருத்துக்கள் இடம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நன்றி.

  நண்பர் வேல்கண்ணன் அவர்களே, தற்போதைக்கு நாவல்கள் குறித்த பதிவுகள் எதையும் தயாரிக்கவில்லை, மொழியாக்க பக்கங்கள் குறித்த உங்கள் வார்த்தைகளிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 7. அன்பு நண்பரே

  நல்ல மொழிபெயர்ப்புடன் கூடிய பக்கங்களை படிக்க படிக்க இச்சித்திர நெடுந்தொடரை ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்ற ஆவலை உண்டாக்குகின்றது.

  இப்பாகத்திற்கு பின்பு கதை தடம் மாறிச் செல்வதையும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். பெரும்புகழ் பெற்ற ஹாரிபாட்டர் ஆசிரியரை போல் மொத்தம் ஏழு மட்டும்தான் என்ற கறார் தன்மை இவர்களிடம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

  அடுத்த சித்திரத் தொடருக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. ஜோஸ்,நீங்கள் முன்னமே கூறியிருந்தீர்கள் வெற்றி என்பது சிலவேளைகளில் ஒர் சாபம் என்று. வணிகரீதியில் இத்தொடர் அடைந்த வெற்றியே தொடரின் இந்நிலைக்கு காரணம். கனிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete