Monday, November 23, 2009

அன்பு ததும்பும் வீட்டின் பிளாஸ்டிக் கனிகள்


பர்ட்டும்[BURT], வெரோனாவும் [Verona] ஒன்றாக வாழும் இளம் ஜோடிகள். பர்ட், வெரோனாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் வெரோனா திருமணத்தில் நம்பிக்கை அற்றவளாக இருக்கிறாள். இருவரினதும் வேலைகளால் கிடைக்கும் வருமானமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலேயே ஓர் வசதியற்ற வீட்டில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இருவரினதும் அன்பான வாழ்வின் மகிழ்ச்சிக் கீற்றாக வெரோனா கர்பமாகிறாள்.

தனக்கு அவசியமான வேளைகளில் தன் பெற்றோர் தனக்கு உதவுவார்கள் எனும் நம்பிக்கையிலும், பிறக்கப்போகும் தன் குழந்தைக்கு தன் பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும் என்ற ஆசையிலும் பர்ட் தன் பெற்றோர்கள் வாழும் பகுதியிலேயே வசித்து வருகிறான். ஆனால் பர்ட்டின் பெற்றோர்கள் தாங்கள் பெல்ஜியத்திற்கு சென்று இரண்டு வருடங்கள் அங்கு வாழப்போவதாக திடீரெனத் தெரிவிக்கிறார்கள்.

எதிர்பாராத இத்தகவலால் அதிர்சியுறும் பர்ட், வெரோனா ஜோடி, தமக்கென யாரும் இல்லாத இடத்தில் இருப்பதை விட, தங்களை நேசிக்கக் கூடியவர்கள் யாரேனும் உள்ள, தங்களிற்கு பிடித்துக் கொள்ளக்கூடிய நகரொன்றில் பிரசவத்திற்கு முன்பாக குடியேறிவிட விருப்பம் கொள்கிறார்கள். இதன் பொருட்டு அமெரிக்காவின் வேறுபட்ட நகரங்களிலும், மாண்ட்ரியலிலும் வாழ்ந்து வரும் தங்கள் நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் ஓர் நீண்ட பயணத்தை அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்…..

தங்களினதும், தங்களிற்கு பிறக்கப் போகும் பிள்ளைக்குமான சிறப்பான ஒர் எதிர்கால வாழ்வைத்தேடி ஓடும் ஓர் அன்புமிகு இளம் ஜோடியின் கதையை மென்மையுடன் நகைச்சுவை கலந்து நெகிழவைக்கும் விதத்தில் சொல்கிறது AWAY WE GO எனும் இத்திரைப்படம்.

இளம் ஜோடிகளின் பயணத்தில் வேறுபட்ட நகரங்களில் அவர்கள் சந்திக்கும் நண்பர்கள், உறவினர்களின் குடும்ப வாழ்க்கை புறத்தில் மகிழ்ச்சியும், வெற்றியுமாகக் காட்சியளித்தாலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊமையான சோகமும், தீராத ஆசைகளின் ஏக்கமும், தோல்விகளின் வலியும் ஒளிந்திருப்பதை இளம் ஜோடிகள் கண்டுணர்ந்து கொள்வதை நகைச்சுவையுடன் கூறி நகர்கிறது கதை.

away-we-go-pic அவர்கள் சந்திக்கும் குடும்பங்களில் இல்லாமலிருக்கும் ஒன்றை தங்கள் வாழ்விலும் அவர்கள் இழந்து விடக்கூடாது எனும் அக்கறையும், அது தரும் பயமும் இளம் ஜோடிகளை அவர்கள் அன்பில் மேலும் இணைக்கிறது. திருமணம் எனும் பந்தம் சிலவேளைகளில் அனாவசியமான ஒன்று என்பதனையும், தாங்கள் கொண்ட அன்பின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளல், விட்டுக்கொடுத்தல் என்பவற்றால் திருமணம் எனும் சொல்லைத்தாண்டியும் உறுதியான ஒர் உறவை அமைத்துக் கொள்ளலாம் என்பதனையும் அவர்கள் சந்திப்புக்கள் அவர்களிற்கு தெளிவாக்குகிறது.

படத்தில் வன்முறை என்பது துளியும் கிடையாது. வசனங்கள் அருமையான நகைச்சுவையுடன் பரிமாறப்படுகிறது. நடிகர்களின் இயல்பான நடிப்பு ஒர் வரப்பிரசாதம். துணைப் பாத்திரங்கள் சில நிமிடங்கள் வந்தாலும் கூட உள்ளம் கவர்கிறார்கள். அதிலும் ஹிப்பி தம்பதிகளாக வரும் ஜோடிகளின் அட்டகாசமான நடிப்பு சிறப்பாக இருக்கிறது. பர்ட் பாத்திரத்தில் கோபமே கொள்ளாத இளைஞனாக வரும் Jhon Krasinski, துறுதுறுப்பான வெரோனாவாக வரும் Maya Rudolph என்பவர்கள் அருமையான தெரிவு.

THE LIMITS OF CONTROL away-we-go-2009-16856-145443210 படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் படம் நெடுகிலும் ஒலிக்கும் பாடல்கள். Alexis Murdoch எனும் கலைஞர் எழுதி இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடல்கள் மனதில் இனம்புரியாத ஒர் உணர்வையும் ஏக்கத்தையும் உருவாக்கி பார்வையாளனை உருக்குகின்றன. படத்திற்கு மென்மையான இசையமைத்திருப்பவரும் இவரே.

நீ குண்டானாலும் சரி, உன் மார்புகளின் அழகு குலைந்து போனாலும் சரி உன் பெண்ணுறுப்பை என்னால் கண்டு கொள்ள முடியும் என்ற வரிகளைக் கூட வக்கிரமாக்கிவிடாது பார்வையாளனை நெகிழவைக்க பயன்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் Sam Mendes. அவருடைய முன்னைய படங்களான American Beauty, Revolutionary Road ஆகியவற்றில் அவர் எடுத்துக் கொண்ட கதைகள் குடும்பங்களை மையமாக கொண்டவையே. அப்படங்களில் இருந்த திரைக்கதையின் கனம், நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் என்பவற்றிலிருந்து முற்றிலும் விலகி Dave Eggers, Vendela Vida ஆகியவர்கள் எழுதிய மென்மையான திரைக்கதையை அதிகம் அறிமுகமில்லாத நடிகர்களுடன் அவர் படைத்திருக்கிறார். அவரின் இத்திரைப்படம் ரசிகர்களிற்கு ஒர் புத்துணர்வை வழங்குகிறது. கட்டிடமொன்றின் கண்ணாடிகளில் ஒரு விமானம் நீலக்கடலில் டால்பின்கள் போல் நீந்திச் செல்வது கவிதை.

தங்கள் பயணத்தின் முடிவாக தங்களிற்குரிய ஒர் வீட்டை கண்டடைகிறார்கள் இளம் ஜோடிகள். வெறுமையாக இருக்கும் அவ்வீட்டினை தங்கள் அன்பால் அவர்கள் நிச்சயம் நிரப்புவார்கள். அன்பைத் தவிர்த்து வேறு பல செல்வங்களினாலும் நிரம்பியிருக்கும் வீடு வெறும் கூடுதான். அன்பு ததும்பும் வீட்டின் கண்ணீர் கூட அன்பின் சுவையைச் சார்ந்தே இருக்கிறது. பர்ட், வெரோனாவின் புதிய வீட்டின் முன்பாக நிற்கும் செடியில் தொங்குபவை பிளாஸ்டிக் கனிகளே என்றாலும் அவை அன்பால் விளைந்தவையாகவே இருக்கின்றன. [***]

ட்ரெயிலர்

Alexis Murdochன் அற்புதமான பாடல் கண்டிப்பாக கேளுங்கள்


6 comments:

  1. அன்பு நண்பரே,

    மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையானது ஒரு திறமையான இயக்குநரின் திரைக்கதையில் பிரமாதமான Feel Good படமாக வெளிவரும்.

    மிக இனிமையான விமர்சனம். தொடருங்கள். அப்புறம், இன்னும் கையில் நூறு பதிவுகள் இருக்கின்றது என சொன்னீர்கள் அல்லவா? ஒரு தகவலுக்கு கேட்டு வைத்துக் கொள்கிறேன். :)))

    ReplyDelete
  2. காதல் பறவையே,

    உறவுகளின் இணைப்பை தேடி ஒரு உள்ளம் எப்படி தவிக்கும் என்பதை நகைச்சுவை உணர்வுடன் ஆழ பதிந்திருக்கிறார் போலிருக்கிறது இயக்குனர், இந்த படத்தில்.

    கிடைக்கும் சொற்ப நேரத்தில், நீங்கள் விமர்சிக்கும் எல்லா படங்களையும் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படி வித்தியாசமான சில படங்களும் வெளிவந்தது, அதை பற்றி எனக்கும் தெரியும் என்ற நிறைவை உங்கள் விமர்சனம் கட்டாயம் தர உதவும், என்பது உண்மை.

    நீங்கள் வழங்கியுள்ள அந்த பாட்டு வீடியோக்கள், இரவின் நிசப்தத்தில் ரிங்காரமாக ஒலிக்கின்றன.

    ReplyDelete
  3. தலைப்பே அசத்தி விட்டது. பிரமாதம்.

    நீண்ட நாட்கள் கழித்து வந்து கமெண்ட் இடுவதற்கு மன்னிக்கவும். நேரமின்மையே ஒரு காரணம். ஆனாலும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்தே என்னுடைய பயண நேரத்தை கழிக்கிறேன். அற்புதம். தொடருங்கள்.

    ReplyDelete
  4. அன்பு நண்பர் ஜோஸ், நீங்கள் அனுப்பி வைப்பதாகக் கூறிய 99 பதிவுகளையும் உடனடியாக அனுப்பி வைக்கவும் :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ரஃபிக், உங்களிற்கு நேரம் கிடைத்தால் நீங்கள் தவறாது பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். அதென்ன காதல் பறவை, பறவையை கூட்டில் அடைத்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்தானே.கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் காமிக்ஸ் பிரியரே, கருத்துக்கள் இட வேண்டுமென்பது கட்டாயம் அல்லவே. உங்கள் கனிவான கருத்துக்களால் மனம் மகிழ்ந்தேன். உங்கள் பயணங்கள் இனிதாக அமையட்டும் நண்பரே.

    ReplyDelete
  5. உலகின் நல்ல படங்களை தேடிப்பார்ப்பதில், என்னுடைய பதிண்ம வயதுகளில் இருந்தே
    எனக்கு மிகுந்த ஈடுபாடு. தற்செயலாக வலை
    பக்கங்களை புரட்டுகையில் தங்களின் பக்கம்
    எனக்கு ஒரு தங்கப்புதையலாக கிடைத்தது.
    முத்லில் உங்களின் முயற்சிக்கு எனது
    பாராட்டுக்கள். பாலைவனத்தில் பயணம்
    செய்பவன் ஒரு நீருற்றை கண்ட போது
    அடைந்த மகிழ்சியை இன்று நான்
    அடைந்துள்ளேன்!

    ReplyDelete
  6. நண்பர் mathileo மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கண்ட நீருற்றினை வற்றாது பாதுகாக்க முயல்கிறேன். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete