Friday, July 17, 2009

ஆர்க்டிக் தேசம்


bs1 உயிருள்ளவர்களிற்கு மரணத்தின் மீதுள்ள ஆர்வம் சொல்லிலடங்காதது. லைன் எனும் நகரத்தின் தெருவில், விளக்குக் கம்பம் ஒன்றில் தூக்கிலிடப்பட்டிருக்கும் இந்தக் குடிகாரக் கழுகு கவர்ந்திழுக்கும் கும்பலைப் பாருங்கள். மரணத்தை வியப்புடன் ரசித்துக் கொண்டிருக்கும் அந்த உருவங்களைப் பாருங்கள். பெண்ணின் வாசத்தை போன்று மரணத்தின் வாசத்தில் அவர்கள் கிறங்கி நிற்பதைப் பாருங்கள். மரணத்தின் கவர்ச்சியை கண்டு கொள்ள முடிந்ததா ? ஒரு வேளை அவர்கள் மரணத்தினை அவர்களால் வேடிக்கை பார்க்க முடியாதே எனும் ஏக்கமாக கூட இது இருக்கலாம்.

நிறவெறி கொண்ட ஆர்க்டிக் தேசம் எனும் குழுவைச் சேர்ந்தவர்களின் கைங்கர்யமே இந்த தூக்கு. குடிகாரர்களையும், வெள்ளை இனத்தை சேராதவர்களையும் அழித்து வெண்பனித் தேசம் அமைப்பது அவர்களின் கனவு. அவர்கள் கனவு தேசம் இவ்வகையான செயல்களால் சுத்தமாக்கப்படுகிறது என்பது அவர்கள் நம்பிக்கை.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின், நகரிலிருந்த ஒர் விமான உற்பத்தி தொழிற்சாலை மூடு விழாக் கண்டதால் லைன் நகரத்தில் வேலைவாய்ப்பின்மையும், குற்றச்செயல்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆர்க்டிக் தேசம் குழு ஒர் புறம் எனில் கறுப்பு நகங்கள் எனும் கறுப்பர்களின் குழு மறுபுறம். குற்றங்கள் கும்மாளமிடும் நகரமென்றால் துப்பறிவாளர்களிற்கு கொண்டாட்டம் அல்லவா. எங்கள் கதாநாயகன் ஜான் ப்ளக்சாடும் இந்நகரத்திற்கு வந்து சேர்ந்தது அதில் பங்கு கொள்ளத்தான்.

தூக்கிலிடப்பட்டவரை பார்த்தவாறே குறிப்புக்கள் எழுதிக் கொண்டிருக்கும் ப்ளக்சாட்டை, ஒர் பத்திரிகை நிருபர் என எண்ணி நெருங்குகிறான் “என்ன செய்தி” பத்திரிகையைச் சேர்ந்த நிருபரான வீக்லி. ப்ளக்சாட் எந்தப் பத்திரிகையை சேர்ந்தவன் என அவனிடம் வினவுகிறான் வீக்லி. அவனை முறைத்துக் கொள்ளும் ப்ளக்சாட், அந்த இடத்தை விட்டு பூனை நகர்வது போல் நகர்கிறான். தன்னை நீயு லைன் நகரத்திற்கு வரவழைத்த மிஸ். கிரே எனும் பள்ளி ஆசிரியை காணச்செல்கிறான் அவன்.

bs2 தன் பள்ளியில் பயின்ற சிறுமி கெய்லி கானாமல் போன விவகாரத்தை, தூவும் மென் மழையினூடு ப்ளக்சாடிடம் விபரிக்கும் மிஸ். கிரே, சிறுமியின் தாய் கூட இதனைப் பற்றி பொலிசிடம் முறையிடாதது குறித்து வருந்துகிறாள். நகரப் பொலிசும் கறுப்பு நகங்கள் குழுதான் சிறுமியைக் கடத்தியிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டுகிறது என்பதனையும் தெரிவிக்கிறாள்.

தான் வாழும் நகரத்தின் நிலை பற்றி வருந்தும் அவளிடம் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை செய்வதாக கூறி விடை பெறுகிறான் ப்ளக்சாட்.

இலைகள் சிதறிக் கிடக்கும் நகரங்களின் தெருக்களில் நடந்து செல்லும் ப்ளக்சாட்டை இழுத்து நிறுத்துகிறது ஆர்க்டிக் தேசம் குழுவை சேர்ந்தவர்களின் பிரச்சாரம். குழுவினர் யாவரும் வெள்ளை நிறத்தவர்கள். அவர்களை உன்னிப்பாக அவதானித்தவாறே விலகி நின்று அவர்களின் நிறவெறி பூசப்பட்ட உரையைக் கேட்கிறான் ப்ளக்சாட். ஹக் என்பவன் வெள்ளை நிற மகாத்மியங்களை மேடையில் நின்று உரக்க கத்திக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் ப்ளக்சாடை ரகசியமாக நெருங்கும் வீக்லி, எம் உடம்புகளை சூடாக்கி கொள்ள ஏதாவது பருகலாம் வா என அவனை அழைக்கிறான்.

bs3 அருகிலிருக்கும் உணவு விடுதி ஒன்றில் நுழைகிறார்கள் வீக்லியும், ப்ளக்சாடும். உணவு விடுதியில் கறுப்பு நிற மக்களிற்கு அனுமதியில்லை எனும் ஒர் அட்டை தொங்குகிறது. இதனைப் பொருட்படுத்தாது குடிப்பதற்கு பானங்களை ஆர்டர் செய்து பருகுகிறார்கள் இருவரும். இருவரும் பரஸ்பரம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஹக்கின் தலைமையில் உள்ளே நுழைகிறது ஆர்க்டிக் தேசம் குழு.

உணவுவிடுதியில் சூதாட்ட இயந்திரத்தில் சில்லறைகளிட்டு தன் அதிர்ஷ்டத்தை குலுக்கி கொண்டிருக்கும் காட்டென் எனும் கருப்பு நிற முதியவனை அனுகும் அவர்கள், அவனிற்கு உணவு விடுதியில் என்ன வேலை என்று கேட்டு நையாண்டி செய்கிறார்கள். தூய்மையான இந்த நகரத்தை நீங்கி லாஸ்வேகாஸ் செல்வதற்காக தான் சூதாடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறான் அம்முதியவன். பின்பு ப்ளக்சாட் இருக்கும் மேசையை நோக்கி வரும் குழு அவனிற்கு அட்டையில் எழுதி இருக்கும் அறிவிப்பை படிக்க தெரியாதா எனச் சீண்ட, தொடரும் மோதலின் விளைவாக, ப்ளக்சாடும், வீக்லியும் நகரத்தின் போலிஸ்அதிகாரி, ஹருப் முன் கொண்டு சென்று நிறுத்தப்படுகிறார்கள்.

ஹருப்பின் கடந்தகாலம் வினோதமானது. அவன் முதல் மனைவி ஒரு கருப்பினத்தவள், லைன் நகரில் அவர்கள் குடியேறிய பின், நகரத்தின் உயர்மட்ட சமூகத்தில் தானும் ஒருவனாகி விட வேண்டும் எனும் ஆசையிலும், நிறவெறி கொண்ட ஒல்ட்ஸ்மில் போன்ற பணக்காரர்களின் சகவாசத்தினாலும் அவன் நிற வெறி கொண்டவனாக மாறிவிடுகிறான். தன் முதல் மனைவியை விட்டு விலகி விடுகிறான். அழகான இளம் பெண்ணான ஜெஸபெல்லை பின்பு மணந்து கொள்கிறான். ஆர்க்டிக் தேசம் குழுவிற்கும் ஹருப்பிற்கும் தொடர்பு இருக்கிறது.

bs4 தன் முன்னே கொண்டு வந்து நிறுத்தப் பட்ட வீக்லியையும், ப்ளக்சாட்டையும் தீயுடன் மோதிப்பார்க்க வேண்டாம் எனவும் லைன் நகரில் அவர்கள் இருப்பதை தாம் விரும்பவில்லை என்றும் கூறி எச்சரிக்கை செய்து அனுப்புகிறான் ஹருப்.

ஹருப்பின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது தன் விசாரனையைத் தொடரும் ப்ளாக்சாட், காணாமல் போன சிறுமி கெய்லியின் தாயை அவள் பணிபுரியும் ட்ரைவ் இன் சினிமாவில் சந்திக்கிறான். தன் வேலை நேரம் முடிவடைந்த பின் கெய்லியின் தாயான டினா, ப்ளக்சாட்டுடன் உரையாடுகிறாள்.

வெள்ளை நிறத்தவரின் சட்டங்கள் மேல் தான் கொண்டுள்ள அவநம்பிக்கை காரணமாகவே தன் மகள் காணாமல் போனது குறித்து பொலிசில் முறையிடவில்லை என்பதை ப்ளக்சாடிடம் தெரிவிக்கும் டினா, வெளி நகரத்திலிருந்து வந்திருப்பவர்களிற்கு லைன் நகரின் உண்மைகள் புரியாது என்கிறாள். சில காலத்தின் முன்பு ஹருப்பின் வீட்டில் தான் பணிப்பெண்ணாக பணிபுரிந்ததையும், தன் மகளான கெய்லியை ஹருப் பார்த்த விதம் தன் இரத்தத்தை உறைய வைத்தது என்றும் கூறுகிறாள்.

bs5 ஹருப் மிக ஆபத்தானவன் என்று அவனிடம் தெரிவிக்கும் டினா, தான் போலிசாரின் உதவியை நாடப்போவதில்லை என்பதை தெரிவிக்கிறாள். தன் மகளின் நிலை என்னவாகவிருக்குமோ எனக் கண்ணீர் சிந்தும் அவளை ஆதரவாக தழுவிக் கொள்ளும் ப்ளக்சாட், டினாவிற்கும் செல்வந்தன் ஒல்ட்ஸ்மில்லின் மகனிற்குமிடையில் ரகசிய தொடர்பு இருந்தது உண்மையா என வினவ, ஆத்திரம் கொள்ளும் டினா ப்ளக்சாடின் கன்னத்தில் அறைந்து விடுகிறாள்.

பலசரக்கு கடை ஒன்றில் வீக்லியை சந்திக்கும் ப்ளக்சாட், டினாவின் ரகசியத்தொடர்பு பற்றி அவன் தனக்கு தந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து வினவுகிறான். இவ்வேளையில் துப்பாக்கி சகிதமாக கடைக்குள் நுழையும் கறுப்பு நகங்கள் குழு குண்டர்கள், ரவுடிகளிற்கு கடையில் இடமில்லை எனக் கூறும் கடைச் சிப்பந்தியை தாக்குகிறார்கள், பின் வீக்லியை நெருங்கும் தடியன் ஒருவன் அவனை அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணக்குழம்பு டப்பாக்கள் மேல் தூக்கி எறிகிறான்.

bs6 வண்ணக் குழம்பு தலையில் வழிய கீழே கிடக்கும் வீக்லியை நெருங்கும் தடியன் வீக்லியின் வாயில் ஒரு தாளைச் செருகி, எமக்கும் சிறுமி காணாமல் போனதிற்கும் சம்பந்தமில்லை, ஒல்ட்ஸ்மில்லையும், அவன் கிறுக்கு மகனையும் ஹருப் இவ்விவகாரத்திலிருந்து பாதுகாக்கிறான் என்பதை செய்தியாக போடும் படி மிரட்டுகிறான். ப்ளக்சாட்டுடன் முறைத்துக் கொண்டபின் குண்டர் குழு கடையை விட்டு வெளியேறுகிறது.

சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஹருப்பின் பங்கை அறிய வேண்டி வீக்லியை ஹருப்பின் வீட்டை வேவு பார்க்க சொல்லிக் கேட்கும் ப்ளக்சாட் பின் செல்வந்தன் ஒல்ட்ஸ்மில்லைக் காண்பதற்காக செல்கிறான்.

டென்னிஸ் மைதானத்தில் தன் அரைக்கிறுக்கு மகனுடன் டென்னிஸ் விளயாடிக்கொண்டிருக்கும் ஒல்ட்ஸ்மில்லை நெருங்கும் பளக்சாட், ஒல்ட்ஸ்மில்லிடம் கெய்லியின் விவகாரத்தில் அவன் மகன் பெயர் அடிபடுவதைக் கூறுகிறான். ப்ளாக்சாடிடம், தன் கிறுக்கு மகனை ஒர் முறை நன்றாக பார்க்க சொல்லும் ஒல்ட்ஸ்மில், இவனுடன் யாராவது படுக்க விரும்புவார்களா எனக் கேட்கிறான்.

bs7 சிறுமி கெய்லி, ஹருப்பின் மகளாக இருந்தால் அது தனக்கு ஆச்சர்யத்தை தராது எனக்கூறும் ஒல்ட்ஸ்மில், பின் நிறவெறி தெறிக்கும் கருத்துக்களை உதிர்க்க, அவனிற்கு சூடாக பதிலளித்து விட்டு அவ்விடத்தினை விட்டு நீங்குகிறான் ப்ளக்சாட்.

ஹருப்பின் வீட்டை மறைந்திருந்து வேவு பார்க்கும் வீக்லி, ஹருப்பின் மனைவி ஜெஸபெல்லிற்கும் ஆர்க்டிக் தேசம் குழுவைச் சேர்ந்த ஹக்கிற்கும் இடையில் ரகசிய உறவு இருப்பதை கண்டுபிடித்து விடுகிறான். அவர்களின் லீலா வினோதங்களையும் போட்டோ பிடித்து விடுகிறான்.

ப்ளக்சாட்டை சந்தித்து அவனிடம் இவ்விபரத்தைக் கூறும் வீக்லி, ஹக் வீட்டை விட்டுக் கிளம்பிய பின், ஜெஸபெல்லா, கெய்லியின் தாய் டினாவை ஒர் கபேயில் சந்தித்ததையும், டினா தன் மகள் துன்புறுவதை தன்னால் அனுமதிக்க முடியாது என அவளிடம் அழுதபடியே கூறியதையும் தெரிவிக்கிறான். ஹருப் மீது ப்ளக்சாட் கொண்ட சந்தேகம் இதனால் வலுக்க ஆரம்பிக்கிறது.

டினாவை மீண்டும் விசாரிக்க விரும்பி அவள் வீட்டிற்கு செல்லும் ப்ளக்சாட், அங்கு அவள் கொலையுண்டு கிடப்பதைக் கண்கிறான். ஹருப்பை அவன் செல்லும் ஆலயத்தின் வெளியே சந்திக்கும் ப்ளக்சாட் அவனை டினாவின் கொலையிலும், கெய்லியின் மறைவிலும் சேர்த்து குற்றம் சாட்டுகிறான், ஹருப்பின் மனைவி ஜெஸபெல்லும், ஹக்கும் ப்ளக்சாட்டை எதிர்த்துப் பேச ஆரம்பிக்க, ப்ளக்சாட், அவர்களின் ரகசிய உறவை நயமாக கோடி காட்டிப் பேசி விட்டு இடத்தை விட்டு விலகுகிறான்.

ஹருப்பை பற்றி வீக்லி, தன் பத்திரிகையில் தாறுமாறாக எழுதி விட, வீக்லியையும், ப்ளக்சாட்டையும் ஒர் வழி பண்ணுவதற்காக ஹக்கிடம் ஆர்க்டிக் தேசம் குழுவை ரகசிய இடத்தில் கூட்டச் சொல்கிறான் ஹருப். ஜெஸபெல்லாவிற்கும் தனக்கும் ப்ளக்சாட் கூறிய மாதிரி எதுவுமில்லை என ஹருப்பிடம் கூறும் ஹக்கை மோசமாகத் தாக்குகிறான் ஹருப்.

bs8 பத்திரிகை நிருபர் வீக்லி காணாமல் போய் விடுகிறான், முதியவன் காட்டென் மேல் சந்தேகம் கொண்டு அவனைத் தொடரும் ப்ளக்சாட், காட்டென், வீக்லியின் கமெராவை ரகசியமாக விற்க முயல்வதை கண்டு கொள்கிறான். காட்டெனை மிரட்டும் ப்ளக்சாட், வீக்லி எங்கிருக்கிறான் என்று கூறும்படி அவனிடம் கேட்க, ப்ளக்சாட்டை அவ்விடத்திற்கு தான் அழைத்து செல்வதாக கூறுகிறான் காட்டென். தனக்கு விரிக்கப்பட்டிருக்கும் சதி வலை பற்றி அறியாது காட்டெனை பின் தொடர்கிறான் ப்ளக்சாட்……

சிறுமி கெய்லி மீட்கப்பட்டாளா? வீக்லியின் கதி என்ன? டினாவைக் கொலை செய்தது யார்? தனக்கு விரிக்கப்பட்ட வலையிலிருந்து ப்ளக்சாட் தப்பித்தானா? போன்ற கேள்விகளிற்கு எதிர்பாராத திருப்பங்களுடனும், விறுவிறுப்பாகவும் விடை தருகிறது மீதிக்கதை.

1950களின் அலங்காரத்தில், நிறவெறி தெறிக்கும் சிறு நகர் ஒன்றில், மிகத் தந்திரமான வஞ்சம் தீர்க்கும் படலமொன்றை, ஆல்பத்தின் கடைசிப் பக்கங்கள் வரை மர்மத்தை வெளிப்படுத்தாது, தேர்ந்த ஒர் த்ரில்லராக ஆச்சர்யப்படுத்துகிறது BLACKSAD தொடரின் இரண்டாவது ஆல்பமாகிய ARCTIC NATION.

மிருகங்களின் தோற்றத்தில் தோன்றும் பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக படைக்கப் பட்டிருக்கின்றன [பாத்திரங்கள் மிருகங்களின் தோற்றத்தில் இருந்தாலும் காதாசிரியர் மனித சமூகத்தையே கதையில் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு ] , மர்மம், வன்முறை, செக்ஸ், நிறவெறி என கதையை சிறப்பாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர் JUAN DIAZ CANALES. அலட்டிக் கொள்ளாத ஆனால் அட்டகாசமான ஸ்டைலைக் கொண்ட துப்பறிவாளன் ப்ளக்சாட் போன்ற மிடுக்கான ஒர் பாத்திரத்தை படைத்ததிற்கு கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

bs9 கதையில் வரும் ஏனைய பாத்திரங்களிற்கும் அவர் சிறப்பான முக்கியத்துவம் அளித்திருக்கிறார். குறிப்பாக முதியவன் காட்டெனின் முடிவும், சிறுமி கெய்லியின் நிலையும் மனதை நெகிழ வைக்கும். டினா, ஜெஸபெல்லா, ஹருப், ஹக் என சகல பாத்திரங்களிற்கும் சிறப்பான பங்கை கதையில் அவர் தந்திருக்கிறார்.

கதாசிரியரின் பலமான கதையை தூக்கி நிறுத்துகிறது JUANJO GUARNIDOன் அசத்த வைக்கும் ஓவியங்கள். இவ்வளவு கம்பீரமாக பாத்திரங்களின் உணர்சிகளையும், அசைவுகளையும், உடல் பாஷையையும் வெளிப்படுத்தும் சித்திரங்களை நான் கண்டதில்லை. பக்கத்திற்கு பக்கம் அவரின் கடின உழைப்பு எங்கள் கண்களிற்கு விருந்து படைத்து நிஜப்பாத்திரங்களை கண் முன் உலவவிட்டுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது

கதாசிரியரும், ஓவியரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜுவான் டயஸ் கனால், 1972ல் மாட்ரிட்டில் பிறந்தவர். பதினெட்டு வயதில் அனிமேஷன் பள்ளி ஒன்றில் சேர்ந்து கொண்டார். இங்கு அவரிற்கு ஜுவாஞோ குவார்னிடோவின் நட்பு கிடைத்தது. குவார்னிடோ பிறந்தது 1967ல்.

ஜூவாஞோ பின்பு பாரிஸில் உள்ள டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோவில் வேலையில் இணைய, கனால் ஸ்பெயினில் தங்கிக் கொண்டார். ஆனால் இப்பிரிவு ஒர் புதிய கனவின் பிறப்பின் முன் தடையாக நிற்கவில்லை. அக்கனவின் பெயர் ப்ளக்சாட். 1930களின் துப்பறியும் கதைகளின் பாணியில் கனால், ப்ளக்சாட்டை உருவாக்கினார்.

ப்ளக்சாட் தொடர் முதல் பிரெஞ்சு மொழியிலேயே வெளியாகியது. முதல் ஆல்பம் 2000ம் ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை மூன்று ஆல்பங்கள் வெளியாகியுள்ள ப்ளக்சாட் கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலிரு ஆல்பங்களும் ஆங்கில பதிப்பாக வெளிவந்திருக்கின்றன. ப்ளக்சாட், தனக்கேயுரிய ஒரு பிரத்தியேக பாணியைக் கொண்டுள்ள காமிக்ஸ்களில் ஒன்று. அதன் வெற்றி தொடரும் என்பதில் சந்தேகமேயில்லை.


அன்பு நண்பர்களே, தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், பதிவுகள் குறித்த உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆல்பத்தின் தரம் [****]

ஆர்வலர்களிற்கு

BLACKSAD

ஆல்பங்கள்

11 comments:

  1. Blacksad I - Somewhere Within the Shadows
    Blacksad II - Arctic Nation
    Blacksad III - Red Soul
    http://rapidshare.com/files/167407775/Blacksad.rar
    http://www.demonoid.com/files/details/1957351/4558899/

    ReplyDelete
  2. அருமையான சித்திரங்கள் கொண்ட கதை . அருமை காதலரே, அருமையான புத்தகத்தை அறிமுகபடுதியதற்கு நன்றி .

    // அப்பாவி போல தன்னை காட்டி கொள்ளும் அப்பாவி இல்லாத ///
    அருமை மொழி பெயர்ப்பு காதலரே

    ReplyDelete
  3. அடடா இப்போதுதான் நீங்கள் ஒரு சினிமா பதிவை இட்டிருப்பதை படித்து கொண்டிருந்தேன். அதற்குள் இன்னொரு காமிக்ஸ் அறிமுகமா... உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது காதலரே....

    பொறுமையாக படித்து விட்டு வருகிறேன். :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  4. சித்திரங்கள் அருமை நண்பரே!

    தமிழில் இவ்வாறு தரமான அச்சுடன் காமிக்சுகள் வராமை எங்கள் துரதிஷ்டம்.

    Mr. J இன் பதிவுகளையும் கண்டு மறுமொழி இடுங்கள்.

    ReplyDelete
  5. நண்பர் லிமட், முதன்மைக் கருத்துக்களிற்கும் லிங்குகளிற்கும் முதலில் நன்றிகள். இக்கதையின் கதை சொல்லலும், உரையாடல்களும் மிகச் செறிவான உள்ளடக்கம் கொண்டவையாக உள்ளன. கதையைப் படிக்கும் போது என் மொழி பெயர்ப்பை மீண்டும் ஒர் தடவை பார்த்துக் கொள்ளுங்களேன். காமிக்ஸ் காதலரனா உங்களிற்கு இத் தரமான தொடரை அறிமுகப்படுத்தியதில் நான் மிக்க மகிழ்சியடைகிறேன். இத்தொடரின் முதல் பாகத்தில் எனக்குப் பிடித்த பக்கமே பதிவின் கடைசி ஸ்கேனாக இடம் பிடித்திருக்கிறது, உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ரஃபிக், உங்களிற்கு மிகவும் வேலைப்பளு நிறைந்த வாரம் இது என்று எண்ணுகிறேன் அல்லது காதல் பளு :)) . வார இறுதியில் உங்களிடமிருந்து பதிவுகளை எதிர்பார்க்கலாமா, அருமை நண்பரே.[ லேடி டாக்டரிடம் செக் அப்பிற்கு சென்றீர்களா]

    Mr.J, உங்கள் புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள், உங்கள் பதிவுகள் மூலம் எங்களை மகிழ்வியுங்கள் நண்பரே, தமிழில் தரத்துடன் வராத குறையை நீக்கவே சில பக்கங்களை தமிழில் மொழிபெயர்த்து என் ஆசையை ஆற்றிக் கொள்கிறேன். வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  6. அன்பு நண்பரே

    நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சித்திரத் தொடரின் சித்திரங்கள் அற்புதமாக இருக்கின்றன. வித்தியாசமான பார்வை கொண்டவையாக உள்ளன. மனித உடல், விலங்கு தலை. மனித மனம்.

    தொடரின் இறுதியில் காணப்படும் ஆசிரியர்களின் குறிப்புகளும் அருமை. கடைசி ஸ்கேன் அற்புதமாக இருந்தது.

    நீங்கள் இதுவரை அறிமுகப்படுத்திய சித்திரத் தொடர்களில் ஏதேனும் புதிய வெளியீடுகள் வந்தால் அதையும் மறக்காமல் அப்டேட் செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. ஜோஸ், இத்தொடரில் காணப்படும் சித்திரங்கள், வாசகன் மீது அழுத்தம் தரும் வகையை சேர்ந்தவை.

    அந்தக் கடைசி ஸ்கேன் பக்கத்தை மட்டும் நான் பல முறைகள் பார்த்து ரசித்திருப்பேன். ஃப்ளக்சாட்டின் இடத்தில் நானிருந்தால் என் செயல்களும் இவ்வாறாக இருக்குமா என எண்ணினேன். அவர் படுத்திருக்கும் அந்தக் கோணத்தில் உள்ள ஆசுவாசம் என்னை புழுங்க வைத்தது.

    இரண்டாம் பாகத்தை பதிவாக இட்டாலும், இச்சித்திரத்தை எப்படியாவது பதிவில் இணைத்து விட வேண்டுமென விரும்பினேன், அச்சித்திரம் உங்களையும் கவர்ந்தது என்பதை அறிந்து மகிழ்கிறேன்.

    நான் அறிமுகப்படுத்திய தொடர்களில் புதிய வெளியீடுகள் வந்தால் அதனைப்பற்றி சிறு வரியாவது எழுதிவிடுகிறேன்.

    கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  8. சிறந்த காமிக்ஸ் கதையை றிமுகம் செய்ததற்கு நன்றி. நீங்கள் கூறியது போல சிதிரங்கள் மிஹவும் அருமையாக இருந்தது. I must read it.

    ReplyDelete
  9. இந்த கதையை நான் ஏற்கனவே படித்து உள்ளதால் உங்களுக்கு சிறப்பான நன்றி ஒன்றை கூறுகிறேன்.

    தொடருங்கள்.

    ReplyDelete
  10. டேவிட், உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  11. ஜாலி ஜம்பர் அவர்களே, மீண்டும் உங்களிடம் நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள் ஒன்றுதான், ஏன் நீங்கள் படித்த இவ்வகையான கதைகளை பதிவாக்க தயங்குகிறீர்கள். உங்கள் பதிவுகள் மூலமும் புதிய கதைகளை நண்பர்கள் அறிந்து மகிழ்ச்சிக் கடலில் திளைப்பார்களே. ஆகவே தொடர்ந்தும் தயக்கம் வேண்டாம், உங்களிடமிருந்து புதிய கதை ஒன்றின் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete