Friday, July 31, 2009

இம்சைக் கிரகம் இதாக்


nau1 மல்லிகையாய் விண்வெளியில் சிதறிக்கிடக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்களில் நனைந்தவாறே சில்வர் ஸ்டார் லைன்ஸின் விண்வெளி உல்லாசக் கப்பலான வால் நட்சத்திரப் புகார், காண்ட் எனும் கிரகத்தை விட்டு தன் இறுதி தரிப்பான, விண்வெளியின் சொர்க்கம் எனக் கருதப்படும் சுமாக் கிரகத்தை நோக்கி தன் பயணத்தினை ஆரம்பித்தது.

அண்ட மாலுமியான அழகிய இளம் சிட்டு கிரானிட் தன் அறையில் விடாது ஒலிக்கும் அலாரத்தையும் பொருட்படுத்தாது உறங்குகிறாள். ஆனால் அலாரம் அவளை உறங்க விடுவதாக இல்லை. வெறுத்துப் போய் எழும் கிரானிட், கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அலாரத்தை தூக்கி எறிகிறாள்.

மிக வேகமாக தன் ஆடைகளை அணிந்து கொள்ளும் கிரானிட், தன் பணியில், தான் இணைந்து கொள்ள வேண்டிய நேரம் வெகுவாக கடந்து விட்டதை உணர்ந்து பதட்டம் கொள்கிறாள்.

விண்கலத்தின் வீதிகளினூடு ஓட ஆரம்பிக்கும் கிரானிட் மனதில் மேஜர் தாஜோர் தன் மீது எரிந்து விழப்போகிறார் எனும் பயம் முளைவிடுகிறது. வேகமாக ஓடும் அவள், மேஜர் தாஜோர், விண்கப்பலின் காப்டனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறாள். அவர்கள் இருக்கும் பகுதியை நெருங்கும் அவள், கால்கள் தடுக்கி விட, ஓடி வந்த வேகத்தால் சற்று தூக்கி வீசப்பட்டு, மேஜர் தாஜோர் மீது தன் பஞ்சு மேக மார்புகளை அழுத்தியவாறே விழுகிறாள். கிரானிட்டின் மார்புகள் அல்லது மேகப் பொதிகள் தனது முகத்தில் அழுந்தியதால் கோபம் கொள்ளும்!!!! மேஜர் தாஜோர், கிரானிட்டை விண்கப்பலின் மதுபான விடுதி ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரியும் படி தண்டனை வழங்குகிறார். [ரசனை இல்லாத கிழட்டுப் பயலா இருக்கானே]

nau2 அழகான அலங்காரங்களுடன் கூடிய மதுபான விடுதியில், கலிஸ்ரா எனும் உல்லாசப் பிரயாணிக்கு தன் சோகக் கதையை மதுவுடன் சேர்த்து பரிமாறுகிறாள் கிரானிட். கலிஸ்ரா, நான் விசிலடித்து என் ரசனையை வெளிப்படுத்தும் விதமாக ஆடை அணிந்திருக்கிறாள். கவர்ந்திழுக்கும் அழகி அவள். திமிரும், செருக்கும் கலிஸ்ராவுடன் கூடப்பிறந்து வளர்ந்தவை. கிரானிட்டின் கதையை அவள் நம்பத் தயாராக இல்லை.

மதுபான விடுதியில் உள்ள ஐஸ் கட்டி யந்திரம் மக்கர் பண்ணுவதையிட்டு, அதனை சரிபார்க்க அங்கு வந்து சேர்கிறான் இளைஞன் நர்வ்ராத். யந்திரத்தை பரிசோதிக்கும் அவன் அதனை சரிபார்க்க முயல்கையில் பெரிதாக ஆட்டம் காண ஆரம்பிகிறது விண்கப்பல்.

விண்வெளி வரைபடத்தில் காணப்படாத கிரகமொன்றின் ஈர்ப்பு விசை காரணமாக அக்கிரகத்தை நோக்கி இழுக்கப்படுகிறது விண்கப்பல். கிரகத்தின் ஈர்ப்பை தாங்க வலுவற்ற விண்கப்பலின் சில பகுதிகள் தனியே பிரிந்து வர ஆரம்பிக்கின்றன.

விண்கப்பலின் மதுபான விடுதி ஒர் தனிக்கலமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது தாய்க் கப்பலிலிருந்து பிரிந்து, கிரகத்தின் ஈர்ப்பினால் வேகமாக அதை நோக்கி இழுக்கப்படுகிறது. கிரகத்தின் ஆகாய எல்லையைக் கடந்து நுழையும் அச்சிறிய கலம் வேகமாக கடலினுள் சென்று வீழ்கிறது.

nau3 அலைகள் விளையாடும் அக்கடலினுள் சும்மாங்காட்டிக்கும் நீந்திக் கொண்டிருந்த விலாங்கு மீனைப் போன்ற தோற்றம் கொண்ட ராட்சத மீன் ஒன்று, அச்சிறிய கலத்தை உணவென எண்ணி விழுங்கி விடுகிறது. தாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டதை அறிந்து கொள்ளும் கிரானிட் அவசரகால அமைப்பு ஒன்றை பயன்படுத்தி மீனின் நீண்ட குகை போன்ற வயிற்றுனுள் கலத்தை செலுத்த ஆரம்பிக்கிறாள்.

ராட்சத மீனின் வயிற்றின் சுவர்களில் மோதியவாறே விரைவாக பயணிக்கிறது கலம். தன் வயிற்றுனுள் திடிரென துளிர்த்து விட்ட பூகம்பத்திற்கான காரணங்களை அறியாத ராட்சத மீன், தன் வயிற்றுள் உள்ளதை வெளியேற்றும் அசைவுகளை ஆரம்பிக்கிறது.

கலத்தின் வேகமும், மீனின் குடல் சுவர்களின் அசைவும் ஒன்று சேர, மீனின் பின் வாயில் வழியாக கழிவுகளுடன் கடலிற்குள் வெளியேறுகிறது கலம்.

கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்பை அடையும் சிறு கலத்திலிருந்து, தாங்கள் வந்து சேர்ந்துள்ள கிரகம் பூமியின் இயல்புகளைக் கொண்டது என்பதை சோதனைகள் மூலம் தெரிந்து கொள்கிறாள் கிரானிட். அதன்பின் அச்சிறிய கலத்தை கடலின் கரையை நோக்கி செலுத்துகிறாள் கிரானிட். கடற்கரையின் அருகிலிருந்த சில குடியிருப்புக்களை இடித்து சிதைத்தவாறே கரை ஒதுங்கி செயலிழக்கிறது அக்கலம்.

கலத்திலிருந்து அவசர நிலைக்கான உதவிப் பெட்டியை தன்னுடன் எடுத்துக் கொண்டு கிரானிட் கலத்தை விட்டு இறங்க, கலத்திலிருந்த மதுப்புட்டிகள் சிலவற்றை கையில் தூக்கி கொள்கிறாள் மதுப் பிரியை கலிஸ்ரா. இதே வேளை அச்சிறிய கலத்தை நோக்கி ஈட்டி, மற்றும் கோடாரிகளுடன் தம் முகங்களில் கோபம் கொப்பளிக்க வேகமாக ஒடி வருகிறது நீர்க்கீரிகளின் முகத்தோற்றம் கொண்ட ஒர் குழு.

தங்கள் குடியிருப்புக்களை நிர்மூலமாக்கிய அன்னியர்களை தாக்கி, அவர்களை வந்த வழியே விரட்டத் துடிக்கிறது அக்கூட்டம். நிலைமை சூடாகி எல்லை மீறும் தருணத்தில் அங்கு வந்து சேர்கிறார் வன்ஃபூக்கள் எனப்படும் அம்மக்களின் நீதிபதி மாண்ட்பூ.

nau4 தன் மந்திர சக்தியால், கிரானிட் குழுவினரையும், அவர்கள் ஆயுதங்களையும் காற்றில் அந்தரத்தில் மிதக்க செய்யும் நீதிபதி, ஆயுதங்களுடன் அன்னியர்களை தாக்க வந்த வன்ஃபூக்களை கடிந்து கொள்கிறார். நீதிக்கு தலை வணங்கு என்பதே வன்ஃபூக்களின் கொள்கை என்பதை கிரானிட் குழுவினரைத் தாக்க வந்த கூட்டத்திடம் நினைவுபடுத்தும் நீதிபதி, நாளை நீதிமன்றத்தில் அன்னியர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதையும் தெரிவிக்கிறார். அவர்கள் சார்பாக வாதாட வன்ஃபூக்கள் மத்தியிலிருந்தே குருகோர் எனும் வக்கீலையும் அவர் நியமிக்கிறார்.

வன்ஃபூக்கள் கடற்கரை ஓரங்களில் வாழ்பவர்கள், மீன்பிடித்தல், பயிர் செய்கை, நீதி என எளிமையான வாழ்க்கை அவர்களுடையது. வழக்குகள் என்றால் வன்ஃபூக்களிற்கு உயிரினும் மேல். எந்த ஒர் சிறு சச்சரவும் நீதிமன்றத்திலேயே தீர்க்கப்படும் அல்லது தீர்ப்பளிக்கப்படும்.

வன்ஃபூக்களின் குடிலினுள் அந்தரத்தில் தொங்கும் கூண்டு ஒன்றில் கிரானிட் குழுவினரை அடைத்து வைக்கிறார்கள் அவர்கள். அவர்களின் சார்பில் வழக்காட நியமிக்கப்பட்ட வக்கீல் குருகோர், கிரானிட் குழுவினர் தாங்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் ஒத்துக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்குகிறான். விண்கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தினாலேயே அவர்கள் தங்கள் கிரகத்தில் கரை ஒதுங்கினார்கள் என்பதை அவன் ஏற்க மறுக்கிறான்,,

கிரானிட் குழுவினரின் வழக்கு வன்ஃபூக்களின் நீதிமன்றத்தில் ஆரம்பமாகிறது. சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருக்கும் உயர்ந்த கல் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் மர மேடையின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் கிரானிட் குழுவினர். வழக்கின் ஓட்டம் அவர்களிற்கு எதிராக திரும்பும் எனில், அவர்கள் நிறுத்தப்பட்டுள்ள மர மேடை கீழே சரிய அவர்கள் நீருக்குள் வீழ்வார்கள்.

nau5 என்னப்பா இது, இதெல்லாம் ஒர் தண்டனையா, இரண்டு அழகிய ஜிக்லி சிட்டுக்களுடன் நீருக்குள் கெட்ட நீச்சல் போடுவதென்றால் அதற்காக எதுவும் செய்ய நாங்கள் தயார் என மனதினுள் கூறும் நண்பர்களே சற்றுப் பொறுங்கள்.

மரகத நீல நீரிற்குள் தங்கள் அகன்ற வாயை திறந்து, தங்கள் கூரான பற்களின் லாவண்யத்தை நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்தபடியே, சுற்றி சுழன்று நீந்திக் கொண்டிருக்கின்றன சில ராட்சத மீன்கள். வாதமும், எதிர்வாதமும் ஆரம்பமாகிறது. கிரானிட் குழுவினரின் வக்கீல் தன் கட்சிக்காரர்களை எப்படியாவது நீருக்குள் நீந்தும் மீன்களின் வாய்க்குள் வீழ்த்தி விட வேண்டுமென்ற வேகத்தில் வாதாடுகிறார்.

அவர் விரும்பியதைப் போலவே, நடைபெறும் வாதங்களை எடைபோடும் ஜூரிகள், தங்கள் மேசையின் வலது பக்கமாக உள்ள சிறு குழிகளில் இடும் சிறிய கோளக் கற்கள், ஒர் யந்திர அமைப்பை சுழர வைத்து, கிரானிட் குழு நின்று கொண்டிருக்கும் மேடையை சரிக்க ஆரம்பிக்கிறது.

நீதிமன்றத்தில், மேடை நீர்ப்பரப்பை நோக்கிச் சரிய ஆரம்பித்த வேளையில் வன்ஃபூக்களின் கிராமத்தை வந்தடைகிறான் சாவோ எனப்படும் பெங் இனத்தவன். பயணிப்பதும், தங்கள் அனுபவங்களையும், புதிய தகவல்களையும் ஏடுகளில் பதிவதும் பெங் மக்களின் சிறப்பம்சம். பெங்குகள் இளைப்பாறும் விடுதிகளில் மெனுவில் புத்தகங்கள் தான் இருக்கும். பெங்குகள் நல்ல வாசகர்கள். அமைதியான குணம் படைத்தவர்கள்.

வெறிச்சோடிக் கிடக்கும் கிராமத்தினைக் கடந்து, வன்ஃபூக்களின் நீதி மன்றத்தில் நுழையும் சாவோ, அங்கு வழக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் அன்னியர்களின் நிலையைக் கண்டதும் தான் ஒர் சாட்சியாக மாற விரும்புவதை நீதிபதியிடம் தெரிவிக்கிறான். பெரிய விண்கலம் ஒன்று வெடித்து சிதறியது உண்மையே என தெரிவிக்கும் சாவோ, அதன் சிதறல்கள் பிரிட்மொத் எனும் நகரத்தில் காணக்கிடைப்பதாகவும் தெரிவிக்கிறான்.

சாவோவின் சாட்சியத்தை அடுத்து வழக்கின் திசை மாறி விடுகிறது. ஆனால் சரிந்து கொண்டிருந்த மர மேடையை தங்கள் கைகளால் பற்றி தொங்கிக் கொண்டிருந்து கிரானிட் குழுவினரில் கலிஸ்ரா கை வழுகி விழப்பார்க்கிறாள், அவளிற்கு தன் கைகளை தந்துதவ முன்வரும் நர்வ்ராத்தின் கரங்களை கலிஸ்ரா தட்டி விட, பிடி தவறி நீரினுள் விழுகிறான் நர்வ்ராத்.

nau6 நீரில் விழுந்த நர்வ்ராத்தைக் காப்பாற்றப் போராடுகிறாள் கிரானிட், ராட்சத மீன்களுடனான மோதலில் நர்வ்ராத்தின் உயிரை அவள் காப்பாற்றி விடுகிறாள். கிரானிட் குழுவினர் குற்றமற்றவர்கள் என வன்ஃபூக்களின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மேலும் அங்கு தங்கியிருந்தால் புதிய வழக்குகள் ஏதாவது அவர்கள் மீது சுமத்தப்படும் எனும் நியாமான அச்சம் காரணமாக கிரானிட் குழுவினரை கிராமத்திலிருந்து உடனடியாக அழைத்துச் செல்கிறான் சாவோ.

ரம்யமான இரவில், இதாக்கின் நட்சத்திரங்களின் கீழே, கனிகளை தீயில் வாட்டி, அந்நியர்களிற்கு உண்ணத்தருகிறான் சாவோ. மனிதர்களை தான் காண்பது இதுவே முதல் தடவை என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறான். இதே சமயத்தில் இவர்கள் தங்கியிருந்த இடத்தை நோக்கி, தீப்பந்தங்கள் பல அசைந்தபடியே முன்னேறுவதை அவதானித்து விடுகிறாள் கலிஸ்ரா.

கிரானிட் குழுவினரை மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சென்று மறைந்து கொள்ளும்படி கூறும் சாவோ, எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் முன் தனியாக அமர்ந்து ஒர் புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்ய ஆரம்பிக்கிறான்.

டைனோசார்கள் போல் தோற்றமளிக்கும் வினோத மிருகங்களின் மீது பயணித்தவாறே சாவோவை நெருங்குகிறது ஒர் கூலிப்படைக் கூட்டம். அவர்களிற்கு மேலாகப் பறந்து வருகிறது கூரிய அலகுகளையும், கொள்ளிக் கண்களையும் கொண்ட ஓர் வேவு பார்க்கும் பறவை.

nau7 சாவோவின் அருகில் தான் பயணித்த விலங்கை நிறுத்தும் கூலிப்படையின் தலைவன் டோகா, வெடித்து சிதறிய விண்கப்பல், மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றி சாவோவிடம் விசாரிக்கிறான். தான் எதையும் காணவில்லை எனக்கூறி சாமாளிக்கிறான் சாவோ. ஒபிட் எனப்படும் பெண் ஆட்சியாளரின் கொடிய கூலிப்படை இது, இதன் பின் வன்ஃபூக்களின் கிராமம் நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது அக்கூட்டம். ஒபிட் அருகிலிருக்கும் மலைப் பிரதேசங்களில் ஆட்சி செலுத்தி வரும் ஒரு கொடிய பெண் ஆவாள்.

ஒபிட்டின் கூலிப்படை குறிப்பிட்ட தொலைவு நகர்ந்ததும், கிரானிட் குழுவினரை தாம் உடனடியாக பிரிட்மொத் நகரத்திற்கு பயணமாக வேண்டும் என துரிதப்படுத்துகிறான் சாவோ. இரவு முழுதும் பயணம் செய்து பிரிட்மொத்தை அடைகிறார்கள் அவர்கள்.

பிரிட்மொத் நகரத்தை அடையும் அவர்கள், அங்கு ஏற்கனவே ஒபிட் தன் கூலிப்படைகளுடன் வந்து சேர்ந்து விட்டாள் என்பதைக் கண்டு கொள்ளுகிறார்கள். ஒபிட், நகரில் விண்கப்பலிலிருந்து உயிர் தப்பிய நபர்களை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறியும் அவர்கள் தாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதை உணர்கிறார்கள்.

பிரிட்மொத்தில், பெங்குகள் தங்கும் விடுதி ஒன்றிற்கு கிரானிட் குழுவினரை அழைத்துச் செல்கிறான் சாவோ. தன் நண்பனான விடுதிக் காப்பாளனிடம் நகரில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி வினவுகிறான். நகரில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் கலத்தின் ஒரு பகுதி வீழ்ந்தது எனவும் அதில் பயணித்த நபர்களைப் பிடித்து தருபவர்களிற்கு பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறான் விடுதிக் காப்பாளன்.

விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறிய பின், நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலத்தின் பகுதியை சென்று பார்க்க நர்வ்ராத்தையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாள் கிரானிட். அவர்களுடன் தானும் துணைக்கு வருவதாக கூறுகிறான் சாவோ.

நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதியை நெருங்கும் கிரானிட் குழுவினர், அப்பகுதியில் பலத்த காவல் போடப்பட்டுள்ளதை அவதானிக்கிறார்கள். காவலாளி ஒருவனை நயமாக பேசி ஏமாற்றி பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள் அவர்கள். சிறிது தூர நடையின் பின் கலத்தின் ஒர் பகுதி வீழ்ந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி அவர்கள் கண்ணில் தெரிகிறது.

nau8 நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலத்தின் பகுதியை சுற்றி ஒபிட்டும், அவள் கூலிப்படையும் குவிந்திருக்க, கலத்தின் மேற்பரப்பில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சி செய்கிறார்கள் இரும்புத் தச்சர்கள். கலத்தினருகில் நிற்கும் கூலிப்படையைக் காணும் சாவோ, தன்னிடம் இருக்கும் ஒர் நூலின் உதவியுடன், நீர்வீழ்ச்சியின் பாதாளக் கால்வாய்கள் ஊடாக கிரானிட்டையும், நர்வ்ராத்தையும் ரகசியமாக நீர்வீழ்ச்சியின் நீர்த்திரையின் மறுபக்கத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கு தெரியும் கலத்தின் பகுதியில், தன் கைரேகைகளைப் உபயோகித்து கதவொன்றினை திறக்கிறான் நர்வ்ராத். திறக்கப்பட்ட கதவின் வழியாக மூவரும் கலத்தின் உடைந்த பகுதிக்குள் நுழைகிறார்கள்.

தங்கள் பலமனைத்தையும் பிரயோகித்து மல்லுக்கட்டிக் கொண்டிருந்த இரும்பு தச்சர்களிற்கு, அதிர்ஷ்டவசமாக கதவொன்று தானாகவே திறந்து கொள்கிறது. இதனால் உற்சாகமடையும் ஒபிட், தன் கூலிப்படையினரை கலத்தினுள் நுழைந்து தேடுதலை ஆரம்பிக்க சொல்கிறாள். உறுமியவாறே கலத்தினுள் இறங்குகிறது கூலிப்படை. கலத்தினுள் திடிரென ஒலிக்கும் பயங்கரமான குரல்களை கேட்டு திகைத்து நிற்கிறார்கள் கிரானிட் குழுவினர்.

வன்ஃபூக்கள் கிராமத்திலிருந்து தன் குழுவுடன் திரும்பும் கூலிப்படைகள் தலைவன் டோகா, பிரிட்மொத் எல்லையில் செய்யும் விசாரணையில் மூன்று மனிதர்களும், ஒர் பெங்கும் நகரத்தினுள் நுழைந்ததை தெரிந்து கொள்கிறான். தன் கூலிப்படையை இழுத்துக் கொண்டு பிரிட்மொத்தில் பெங்குகள் தங்கும் விடுதி நோக்கி விரைகிறான் டோகா. தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அபாயம் பற்றி அறியாது அவ்விடுதியில் ஜாலியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் கலிஸ்ரா.

nau9 கலத்தில் மாட்டிக் கொண்ட கிரானிட் குழுவின் கதி என்ன? கலிஸ்ரா டோகாவிடம் சிக்கினாளா? கொடியவளான ஓபிட், கலத்தில் வந்த மனிதர்களை ஏன் வலைவீசித் தேடுகிறாள்? ஒபிட்டில் புதைந்திருக்கும் மர்மம் தான் என்ன? இக்கேள்விகளிற்கு அட்டகாசமாக விடை தருகிறது LES NAUFRAGES D’YTHAQ எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பமான TERRA INCOGNITA.

புதியதோர் கிரகம், விந்தையான பிராணிகள், விசித்திரமான பழக்கங்கள் கொண்ட குடிகள், சாகசம், காதல், காமெடி, மந்திரம், சஸ்பென்ஸ் எனும் அற்புதக் கலவையாக பயணிக்கிறது கதை. விறுவிறுப்பான கதை சொல்லலால் முதல் ஆல்பத்தின் அறுபது பக்கங்களும் படு வேகமாக நகர்கின்றன. இறுதியில் வரும் அதிரடித் திருப்பங்கள் அடுத்த பாகத்தை உடனே தேடி ஓடச்செய்கின்றன.

கதையை சிறப்பாக எழுதியிருப்பவர் ARLESTON (CHRISTOPHE PELING) எனும் பிரெஞ்சுக் காமிக்ஸ் எழுத்தாளர் ஆவார். இவ்வகைக் கதைகளை படைப்பதில் இவர் ஒர் நிபுணர். இவை HEROIC FANTASY எனும் கதை வகையை சார்ந்தவை ஆகும். 1963ல் பிரான்ஸில் பிறந்த ஆர்லஸ்டன், தன் சிறு வயதை மடகாஸ்கார் தீவில் கழித்தார். 1992ல் காமிக்ஸ் துறையில் கதைகள் எழுத ஆரம்பித்தார். 1994ல் இவர் படைத்த LANFEUST DE TROY எனும் காமிக்ஸ் தொடர், பிரென்சுக் காமிக்ஸ் உலகில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற தொடராக கருதப்படுகிறது. LANFEUST தொடரின் கிளைக்கதைகளாய் சில கதைகளையும் இவர் உருவாக்கினார். தற்போது லான்ஃபெஸ்ட் காமிக்ஸ் மாத இதழின் ஆசிரியராக செயற்பட்டு வருகிறார்.

கதைக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்திருப்பவர் ADRIEN FLOCH ஆவார். ஒர் கதாசிரியர் படைக்கும் கற்பனை உலகை, சித்திரங்களில் உயிருடன் கொண்டு வருதல் என்பது இலகுவான செயலல்ல. ஆனால் ஆட்ரியன் இக்கதைக்கு வரைந்திருக்கும் ஓவியங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. இதாக் கிரகத்தையும், வினோத விலங்குகளையும், மனிதர்களையும் மனதில் பதியச் செய்து அவற்றை எங்கள் அருகில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் அவர். ஆல்பத்தின் அறுபது பக்கங்களிற்காகவும் அவர் மிகக் கடினமாக உழைத்துள்ளார் என்பது கண்கூடு. சாகசங்களுடன் நகைச்சுவை ரசத்தையும் ஓவியத்தில் அவர் எடுத்து வருவதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறார். 1977ல் பாரிஸில் பிறந்தவரான ஆட்ரியன், பிரான்ஸின் ப்ரத்தான் எனும் பசுமை நிறைந்த பிரதேசத்தில் காமிக்ஸ்களை கனவு கண்டபடியே வாழ்கிறார்.

2005 முதல் 2008 வரை, ஆறு ஆல்பங்கள் வெளியாகியுள்ள இத்தொடர் காமிக்ஸ் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற தொடராகும். கதையை வாசிக்கும் போது இளமை திரும்புவது போல் ஒர் உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நண்பர்கள் தவற விடக் கூடாத தொடர்களில் இதுவும் ஒன்று. இதன் ஆங்கிலப் பதிப்பு மார்வல் காமிக்ஸால் வெளியிடப்படுகிறது.

ஆல்பத்தின் தரம் [****]

ஆர்வலர்களிற்கு

இதாக்

லான்பெஸ்ட்

7 comments:

 1. காதலரே, அண்டசராசகங்களில் சாகசம் செய்யும் சித்திரதொடர் இந்த பதிவு தாக்குதலிலா... அபாரம்.

  கிட்டதட்ட பத்து பக்கங்கள் தமிழ் ஆக்கத்துடன் பதிவு ஜொலிக்கிறது. வார இறுதியில் ஆனந்தமாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன். :)

  ReplyDelete
 2. அன்பு நண்பரே,

  சித்திரங்கள் அருமையாக இருக்கின்றன. கதையின் மொழிபெயர்ப்பு அதைவிட பிரமாதம். ஆறு ஆல்பங்கள் வந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். கதை முடிவடைந்து விட்டதா? ப்ளாஷ் கோர்டன் திரைப்படம் வரும் நேரத்தில் இது போன்ற சித்திரத் தொடரை முன்னதாகவே வெளியிட்டு விட்டீர்கள்.

  ப்ளாஷ் கோர்டன் - தொடர் எனக்கு ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும் பின்னர் சலிக்க ஆரம்பித்து விட்டது. இதுபோன்று வித்தியாசமாக செய்தால்தான் தொடரும் லைவ்லியாக இருக்கும்.

  மீண்டும் ஒரு நல்ல பதிவு!

  ReplyDelete
 3. ஆகா...அருமையாக கொண்டுவந்திருக்கிறீர்கள்...

  என்ன உழைப்பு...!!!!

  டாப் க்ளாஸ் !!!!!!!!!!!

  ReplyDelete
 4. அருமையான நடை.

  வழமை போன்றே சிறப்பான ஒரு பதிவு.

  வாழ்த்துக்கள்.

  புலா சுலாகி,
  கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
  புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

  ReplyDelete
 5. ரஃபிக், இந்த வார இறுதியில் சிட்டுக்களுடன் அண்டவெளியில் உங்களிற்கு ஒர் டூயட் பாட்டு போட்டு விடுவோம். என்ன இருந்தாலும் கலிஸ்ராவை நீங்கள் அப்படி செய்திருக்க கூடாது. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ஜோஸ், இக்கதைத்தொடரின் ஏழாவது ஆல்பம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகிறது. தொடர் இன்னமும் முடிவடையவில்லை. இக்கதையின் அறுபது பக்கங்களும் சலிப்பின்றி படிக்ககூடியதாக உள்ளது. அருமையான கற்பனை வளம், அற்புதமான சித்திரங்கள். உங்கள் கருத்துகளிற்கு நன்றி அன்பு நண்பரே, ப்ளாஷ் கார்டனும், வாழைக்காய் சிப்ஸ்களும் எனும் பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  நண்பர் செந்தழல் ரவி அவர்களே. மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

  நண்பர் புலாசுலாகி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 6. Hi,

  Thanks for this post. 3 month before i had downloaded 1 to 6 parts but i didnt read this. just now i finished first 2 parts after your post. it is different story and graphics also good.

  ReplyDelete
 7. ரமேஷ், இக் கதைத்தொடர் உங்களை மகிழ்வித்திருக்கும் என்று நம்புகிறேன். வருகைக்கும், கருத்துகளிற்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete