Friday, August 7, 2009

பறக்கும் வீடு


மென்னிருளில் ஆழ்ந்திருக்கும் திரையரங்கின் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளை காணும் சிறுவன் கார்லின் கண்கள் வியப்பால் விரிகின்றன. அவன் தலையில் சாகசவீரர்கள் அணியும் தொப்பி, நெற்றியில் தூக்கிவிடப்பட்டுள்ள விமானிகள் அணியும் கண்ணாடி. திரையில் ஓடும் சாகசப் பயணம் சம்பந்தமான ஆவணப்படத்தில் மூழ்கிக் கிடக்கிறான் அவன். உயர்ந்த நீர்வீழ்ச்சிகள், புதிய நிலப்பரப்புக்கள் , விந்தை மிருகங்கள். அவன் மனதில் தானும் ஒர் நாள் இவ்வாறு சாகசப்பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இன்னும் ஆழமாக வேர்விடுகிறது.

திரையரங்கை விட்டு வெளியேறி வீடு செல்லும் கார்லிற்கு, தெருவில் கிடக்கும் கற்கள் மலைக்குன்றுகள் ஆகின்றன, பிளவுகள் பள்ளத்தாக்குகள் ஆகின்றன. வெட்டப்பட்டுள்ள மரத்தின் அடிக்கட்டை ஒன்று இமய மலையாக தெரிகின்றது. இவற்றையெல்லாம் வெற்றி கண்ட சாகச வீரனாக தன் மனதில் மிதக்கிறான் சிறுவன் கார்ல்.

தெருவின் அருகில் இருக்கும் வீடொன்றில் இருந்து விசித்திரமான ஒர் குரல் கேட்க, சாகச வீரன் கார்ல் அது என்னவாக இருக்கும் என்று காணும் ஆவலில் அந்த வீட்டிற்குள் நுழைகிறான். அங்கே அவனிற்கு எலி என்ற சிறுமியின் அறிமுகம் கிடைக்கிறது. சிறுமி எலியும் சாகசப் பயணங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள். தான் வரைந்து வைத்துள்ள ஒர் சித்திரத்தை கார்லிற்கு காட்டுகிறாள் எலி.

வண்ணக் கட்டிகளில் சிறு வயதின் மாயக் கனவுகள் கலந்து வரையப்பட்டுள்ள அச்சித்திரத்தில், மிக உயர்ந்த மலையொன்றிலிருந்து கீழே வீழ்கிறது ஒர் நீர்வீழ்ச்சி. அம்மலையில் நிமிர்ந்து நிற்கிறது ஒர் வீடு. தன் வீட்டை தான் சொர்க்க நீர்வீழ்ச்சியின் மேல் அமைக்கப்போவதாக கூறுகிறாள் எலி. சொர்க்க நீர்வீழ்ச்சி தென் அமெரிக்க காடுகளில் இருக்கிறது என்பதையும் கார்லிற்கு அவள் தெரிவிக்கிறாள். கார்ல் சொர்க்க நீர்வீழ்ச்சிக்கு தன்னை என்றாவது ஒர் நாள் அழைத்து செல்வதாக வாக்குத்தரும்படியும் அவனிடம் கேட்கிறாள். தன் இதயத்தின் மேலாக அடையாளமிட்டு அவளை சொர்க்க நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக வாக்குத்தருகிறான் சிறுவன் கார்ல்.

இவர்கள் இருவரிற்குமிடையிலான நட்பு திருமணத்தில் இனிதே இணைகிறது. இனிமையான வாழ்க்கை அது, மரங்களின் கீழ் படுத்திருந்து மேகங்களின் உருவங்களை படித்தலும், குழந்தைப் பாக்கியம் அவர்களிற்கு இல்லை என்பதை அறியும் போது மெளனமாக உடைதலும், தங்கள் சாகசப் பயணத்திற்காக சேமிக்கும் பணம் வேறு தேவைகளில் கரைந்து போவதை புன்னகையுடன் வரவேற்பதும், இறுதியாக அவர்களின் முதுமைக் காலத்தில் கார்ல் தென் அமெரிக்காவிற்கு பயண டிக்கட்டுகளை வாங்கி வந்து அவளை ஆச்சர்யப்படுத்த விரும்பும் தருணத்தில் எலியின் உடல்நலம் கெட்டுவிடுவதும் என திருமணம் தொடங்கி எலியின் இறப்பு வரை, வார்த்தைகளின்றி இனிமையான இசையுடன் திரையில் ஒடும் அந்த சில நிமிடங்கள் வார்த்தையில்லாக் கவிதையாகும்.

upfinal17 எலியின் பிரிவு கார்லை தனிமைக்கு அறிமுகம் செய்து வைத்து விடுகிறது. தன் வீட்டில் தனிமையுடன் குடித்தனம் செய்கிறான் கார்ல். அவனை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தனிமை சிரித்தபடியே அணைத்துக் கொள்கிறது. இருவர் உட்கார்ந்து உணவு உண்ட மேசையில் தனிமையும், கார்லும் எதிர் எதிராக இருந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

கார்லின் உடலின் பாகங்கள் முதுமையின் பாடலைப் பாடுகின்றன. அவன் நடப்பதற்கு ஒர் ஊன்று கோல். மாடியிலிருந்து படிகளில் இறங்க ஒர் தானியங்கி ஆசனம். தன் வீட்டின் வாசலில் உள்ள கதிரை ஒன்றில் அமர்ந்து, இன்னொரு நாள் கடந்து போவதை, ஒர் சாதாரண முதியவனின் வாழ்கையில் சொல்லாமலே வந்து ஒட்டிக்கொள்ளும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் கார்ல். அவன் வீட்டில் அருகில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிடங்களைக் கட்டும் நபர் கார்லின் வீட்டை வாங்க முயல்கிறான் ஆனால் கார்ல் தன் வீட்டை விற்க முடியாது என மறுத்து விடுகிறான்.

ஒர் நாள் காலை கார்லின் வீட்டுக் கதவை தட்டுகிறான் சாரணர் அமைப்பிலிருக்கும் சிறுவன் ரஸ்ஸல். அவன் பதக்கப் பட்டியலில் ஒரே ஒர் பதக்கம் மட்டும் குறைகிறது. முதியோர்களிற்கு உதவி செய்வதால் கிடைக்கும் பதக்கம் அது. ரஸ்ஸல், கார்லிடம் அவனிற்கு தான் உதவ விரும்புவதாக தெரிவிக்கிறான். தொடர்ந்து தொல்லை தரும் ரஸ்ஸலினை வீட்டை விட்டுக் கிளப்ப விரும்பும் கார்ல், தன் தோட்டத்தில் பூக்களை நாசம் செய்யும் பறவை ஒன்றை ரஸ்ஸலால் பிடித்து தர முடியுமா எனக் கேட்கிறான். அப்பறவையை நிச்சயம் தான் பிடித்து வருவதாகக் கூறி கிளம்பிச்செல்கிறான் குண்டன் ரஸ்ஸல்.

தன் வீட்டிற்கருகில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒர் தொழிலாளி, தவறுதலாக தன் வீட்டின் தபால் பெட்டியை உடைத்து விடுவதை கார்லால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. அத்தபால் பெட்டியில் தன் அன்பு எலியின் கைவிரல்கள் வண்ணக்குழம்பில் நனைத்து, பதித்து சென்ற தடம் இருப்பது அவன் கோபம் கொள்ள முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக அந்த தொழிலாளியை தாக்கி காயப்படுத்தி விடுகிறான் கார்ல். நீதிமன்றம் அவனை முதியோர் இல்லத்தில் சென்று தங்கும் படி உத்தரவு பிறப்பிக்கிறது.

la haut முதியோர் இல்லத்திற்கு செல்லவேண்டிய நாளிற்கு முன்னைய இரவில், நாற்காலியில் அமர்ந்தபடியே எலியின் பழைய ஆல்பமொன்றைப் புரட்டிப் பார்க்கின்றான் கார்ல். எலி சிறுமியாக இருந்த போது வரைந்த அந்த சித்திரம் ஆல்பத்திலிருந்து கார்லை பார்க்கிறது. எலி ஆல்பத்தின் பக்கமொன்றில் எழுதியிருக்கும் சில சொற்களின் மீது கார்லின் எண்ணம் நிலைக்கிறது.

மறுநாள் காலை கார்லை அழைத்து செல்வதற்காக முதியோர் இல்லத்திலிருந்து வண்டி வருகிறது. தன்னை அழைத்து செல்ல வந்தவர்களிடம் ஒர் பெட்டியொன்றை தந்து சிறிது நேரம் தன்னை வீட்டில் தனியே விடச்சொல்கிறான் கார்ல். அவர்களும் வண்டியின் அருகில் சென்று காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள்.

திடிரென ஒர் சத்தம். பல்லாயிரக்கணக்கான வண்ண பலூன்கள் வீட்டின் மேலாக எழுகின்றன. அப்பலூன்களில் கார்லின் வீடு இணைக்கப்பட்டிருக்கிறது. பலூன்கள் மேலே எழ எழ வீடு தரையிலிருந்து பிரிந்து மேலே எழும்புகிறது. வானவில்களின் கூட்டமொன்று தூண்டிலிட்டுப் பிடித்த பறவையாய் வானத்தில் பறக்கிறது கார்லின் வீடு, கீழே நிற்கும் முதியோர் இல்லப் பணியாளர்களை நோக்கி தன் நாக்கைக் காட்டி பரிகாசம் செய்கிறான் கார்ல்.

la-haut-44638 வண்ண பலூன்களின் ஊடு பாயும் சூரியக்கதிர்கள், நகரின் கட்டிடச்சுவர்களில் வண்ண மழையை வழுகி ஓடச்செய்கின்றன. பறத்தலின் மகிழ்ச்சி இவ்வளவு வண்ணமயமானதா? வீட்டின் அருகே பறந்து செல்லும் பறவைகள் புதிதாக நாணம் கொள்கின்றன. உயரே பறக்கும் வீட்டில் சாய்வு நாற்காலியில் நிம்மதியாக சாய்ந்து உட்காருகிறான் கார்ல்.தென் அமெரிக்காவின் காட்டிலிருக்கும் சொர்க்க நீர் வீழ்ச்சியை இலக்காக கொண்ட அவன் சாகசப் பயணம் ஆரம்பமாகி விட்டது. அவன் கனவின் குறுக்கே இனி எதுவும் வரமுடியாது. மெதுவாக அவன் தன் கண்களை மூட ஆரம்பித்த வேளையில் டொக் டொக் எனும் ஒர் சத்தம். யாரோ அவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். கதவை திறந்து வெளியே பார்க்கிறான் கார்ல். உங்கள் தோட்டத்தில் பூக்களை நாசம் செய்த பறவையை நான் பிடித்து விட்டேன், நான் உங்கள் வீட்டின் உள்ளே வரலாமா என்றபடியே வாசல் சுவரோரமாய் பயத்தில் ஒட்டிப்போய் நிற்கிறான் சிறுவன் ரஸ்ஸல்.

பின்பு கார்லும், ரஸ்ஸலும் சந்திக்கும் பாத்திரங்களும், அனுபவங்களும் அவர்களை மட்டுமல்ல எங்களையும் ஒர் விந்தையான சாகசப் பயணத்திற்கு அழைத்து செல்பவை ஆகும். மனிதர்களை நடித்துக் காட்டும் ஒர் அரிய இனப் பறவை, இப் பறவையை பிடிக்க வலை விரிக்கும் பேசும் நாய்களின் கூட்டம், கொடிய நெஞ்சம் கொண்ட பேசும் நாய்களின் எஜமான் என பிக்ஸார் ஸ்டூடியோவின் அற்புதமான கற்பனை வளம் கொண்ட கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரப் படைப்பு மயக்குகிறது.

சிறுவன் ரஸ்ஸலின் குறும்புகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கிழவனிடம் அவன் அடிக்கும் லூட்டிகள் வழி, பிரிவொன்றினால் தனிமையில் சிக்கியிருக்கும் முதியவனிற்கும், தந்தையின் நெருக்கம் வேண்டி மருகும் சிறுவனிற்குமிடையில் மலரும் ஒர் உறவை நுண்ணிய இழைகளால் அழகாகப் பிண்ணியிருக்கிறார்கள்.

la-haut-44612 பேசும் நாய்களின் எஜமானின் இருப்பிடத்திற்கு வரும் ரஸ்ஸலும், கார்லும் தன் விருந்தினர்கள் என்று எஜமான் கூறியதும், நாய்கள் அவர்களிற்கு தரும் ராஜ உபசாரம் உங்களை சிரிக்க சிரிக்க சிரிக்க வைக்கும். நாய்களின் ஆகாய ஸ்டண்ட் காட்சிகள் இருக்கையின் நுனிப்பகுதியின் அவசியத்தை உணரச் செய்யும்.

டிஸ்னி, பிக்ஸார் கூட்டணியில் உருவாகியிருக்கும் UP எனும் இத்திரைப்படத்தை திறம்பட இயக்கியிருப்பவர் PETE DOCTER ஆவார். ஒர் இழப்பின் வேதனையில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை புதிதாய் வாழ்தலின் அவசியத்தையும், உங்கள் கனவுகளிற்காக இறுதிவரை முயல வேண்டியதன் முக்கியத்தையும், எம் வாழ்வின் சாதாரண தருணங்களில் கூட சாகசங்கள் எமக்குத் தெரியாமல் ஒளிந்து இருக்கின்றன என்ற உண்மையையும் உணர்த்த முயற்சிக்கிறது திரைப்படம்.

கண்களில் ஈரத்தையும், எங்கள் இதழ்களின் கோடியில் ஒர் மென்புன்னகை மொட்டையும் மலரச்செய்து முடிவடைகிறது படம். சொர்க்க நீர்வீழ்ச்சியை கார்லின் வீடு சென்றடைந்ததோ இல்லையோ, எங்கள் உள்ளங்களின் உயரமான கிளையொன்றில் தன் மெல்லிய இறகால் இதமாக வருடிவிட்டபடியே உட்கார்ந்து விடுகிறது அவனுடைய பறக்கும் வீடு. (****)

ட்ரெய்லர்

10 comments:

 1. காதலரே,

  சிறப்பான பதிவுக்கு நன்றி. படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது உங்கள் நடை.

  பிக்ஸார் என்றாலே அருமை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றுதானே?

  தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
  தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

  ReplyDelete
 2. நண்பரே,

  படம் இன்னமும் இங்கு வரவில்லை. ஆகையால் இன்னமும் பார்க்க வில்லை.

  ஆனால் பார்க்க தூண்டி விட்டீர்கள். உங்களின் எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கின்றன. வாழ்த்துக்கள்.

  காமிக்ஸ் பிரியன்.
  இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
  காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

  ReplyDelete
 3. எனக்கொரு சந்தேகம். நீங்கள் எந்த மொழியில் இந்த படத்தை பார்த்தீர்கள்?

  படங்கள் பிரென்ச்சு மொழியை காட்டுகின்றன.

  ReplyDelete
 4. அன்பு நண்பரே,

  பிக்ஸர் டிஸ்னியுடன் இணைந்து செய்த படங்கள் (அல்லது டிஸ்னி பிக்ஸரை தன்னுடன் இணைத்து செய்தது) எல்லாமே மற்ற டிஸ்னி சித்திர திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது பிரமாதமாக இருக்கும்.

  இதனாலேயே பிக்ஸர் பெயருடன் வரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கும். இத்தனை படங்களுக்கு பிறகும் இரசிகர்களை அவர்கள் ஏமாற்றவில்லை என தெரிகின்ற போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள படங்கள் அனைத்தும் அருமை. அந்த அருவி படம் ...வாவ்.

  ஒரு சிறப்பான சித்திரத் திரைப்படத்திற்கு ஏற்ற சிறந்த விமர்சனம்.

  ReplyDelete
 5. நண்பரே இந்த திரைப்படம் வழமைபோல இலங்கையில் வெளியாகவில்லை. உங்களின் அருமையான விமர்சனத்தை வாசித்த பின்னர் திரைப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா??

  டொடன்ட் தளத்தில் நல்ல கொப்பிகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றேன்.

  விமர்சனத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்

  Mr. J Comics

  ReplyDelete
 6. காதலரே, இன்னொரு அருமையான அனிமேஷன் படத்திற்கான விமர்சனம் உங்கள் துள்ளல் நடையில் அருமையாக வெளிவந்திருக்கிறது.

  பிக்சர் படங்கள் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்றை மிஞ்சும் வகையில் எடுக்கபடுவது மிகவும் ஆச்சர்யமான ஒன்று. அவர்கள் கற்பனா திறனுக்கு முடிவே இல்லையா என்று கேள்விகள் கேட்க தோன்றுவது இயல்பாக மாறி விட்டது. அப் படத்திலும் அவர்கள் அதே சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள் போல.

  // தங்கள் சாகசப் பயணத்திற்காக சேமிக்கும் பணம் வேறு தேவைகளில் கரைந்து போவதை புன்னகையுடன் வரவேற்பதும், //
  இது கதாநாயகன் கதாநாயகிக்கு மட்டும் அல்ல, நம் ஒவ்வொருவருக்கும் பெரும்பாலும் நடக்கும் விடயம் தானே... :) எனவே, அவர்கள் புன்னகையின் பின்னகை புரிகிறது.

  அந்த அரிய இன பறவைக்கு தான் எத்தனை வண்ணங்கள், கூடவே விமானத்தை செலுத்தும் போது அந்த முதிய வயதிலும் கார்லின் முகத்தில் தெரியும் குழந்தைதனமான சிரிப்பு, மலைஉச்சியில் இருந்து கொட்டும் நீர்விழ்ச்சி, அது கூடவே நான் தனித்து பிறந்தவன் என்ற மமதையில் தனியாக நிற்கும் ஒற்றை நெக்குத்தல் மலை, என்று ஒவ்வொரு படங்களும் கண்களை கொள்ளை கொள்கிறது. படம் பார்க்கும் ஆவலையும் தூண்டி விட்டது.

  ஆமாம் நண்பரே, அது என்ன எலி என்ற பெயர்... ஒரு வேளை அது எல்லியா ?

  நண்பர் ஜே: கடைசியாக டாரன்ட் தளங்களில் நான் பார்த்த பிரதி காமிரா கோணத்தில் தான் இருந்தது. இப்படிபட்ட அற்புத படத்தை அதில் பார்த்து நொந்து போக விரும்பவில்லை. இந்த படத்தின் டிவிடி பிரதி இன்னும் வெளியாகவில்லை என்பதால் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் போல. காதலர் குடுத்து வைத்தவர், வேறு என்ன சொல்ல :)

  ReplyDelete
 7. ஜாலி ஜம்ப்பர் அவர்களே, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  காமிக்ஸ் பிரியரே உங்கள் கனிவான வாழ்த்துக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே. படத்தை பிரெஞ்சு மொழியில் தான் கண்டு இன்புற்றேன்.

  ஜோஸ், படங்கள் உங்களிற்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. திரைப்படம் உங்களை எங்கோ எடுத்துச் செல்லும் என்றே எண்ணுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ஜே, கருத்துக்களிற்கு நன்றி. சிறப்பான பிரதி உங்களிற்கு விரைவில் கிடைக்க வேண்டுகிறேன்.

  ரஃபிக், நீங்கள் கூறுவது உண்மையே, பிக்ஸார் அணியின் எல்லை என்னவாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியும்.

  Elly என்ற பெயரின் மோசமான தமிழாக்கம்தான் எலி, சரி டிஸ்னியின் படம்தானே என்று நானும் ஒர் எலியை சேர்த்துக் கொண்டேன்:))

  நான் குடுத்து வைத்தவனா, எங்கள் ஆசான் திரைப்படத்தில் புரட்சிக் கலைஞரின் அட்டகாசமான நடிப்பை முதலில் பார்க்கும் வாய்ப்புள்ள நீங்களும் குடுத்து வைத்தவர்தான்:) அமெரிக்காவில் வெளியாகிய பின்பே பெரும்பாலான படங்கள் இங்கு வெளியாகும். ஆனால் GI JOE இங்கு முன்பே வெளியாகி என் உயிரை வாங்கிய பெருமை பெற்றிருக்கிறது. உங்கள் அருமையான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 8. காதலரே,
  இன்னும் இப்படத்தை பார்க்க முடியவில்லை . நானும் நல்ல DVD காக தேடிக்கொண்டிருக்கிறேன். Pixar படைப்புகள் என்றும் சோடை போனதில்லை என்பது உண்மை . விமர்சனத்திற்கு நன்றி

  ReplyDelete
 9. நண்பர் லிமட் அவர்களே, உங்கள் டிவிடி தேடல் வெற்றியில் நிறைவடைய வேண்டுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete