Tuesday, June 5, 2012

ப்ரொமீதியஸ் அல்லது பிரம்மாக்களை தேடி


2091, பல்துறை நிபுணர்கள் சிலரை தன்னகத்தே ஏந்திக் கொண்டு பிரபஞ்சத்தின் தொலைதூரச் சந்திரன் ஒன்றை வந்தடைகிறது ப்ரொமீதியஸ் விண்கலம்......

யார் அந்த Space Jockey !? ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தினை இயக்கியபோதே இயக்குனர் ரிட்லி ஸ்காட் தன்னுள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு, ஏலியன் திரைப்பட வரிசையின் எந்தப் பாகமும் விடைகாண முற்பட்டதேயில்லை. ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தில் நொஸ்ட்ரோமோ விண்கலம், ஆபத்துதவி சமிக்ஞை ஒன்றை இடைமறித்துக் கேட்டதன் பின்பாக தன் பயணப் பாதையை மாற்றிக் கொண்டு சமிக்ஞை உருவான இடத்தை நோக்கி செல்லும். அங்கு கேன் எனும் அதிகாரி தலைமையில் நடக்கும் தேடலின்போது வினோதமான ஒரு விண்கலம் அகப்படும். அவ்விண்கலத்தினுள் படிமநிலையில் காட்சியளிக்கும் ஒரு ராட்சதனை கலவோட்டி இருக்கையில் தேடல் குழு கண்டு வியக்கும். இந்த ராட்சதனையே இங்கு இயக்குனர் ரிட்லி ஸ்காட் Space Jockey எனக் குறிப்பிடுகிறார். மனிதனின் உருவ அமைப்பை கொண்ட இந்த ராட்சதன் யார் எனும் இயக்குனரின் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது Prometheus எனும் இத்திரைப்படம்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பறக்கும் தட்டு ஒன்றிலிருந்து இறங்கும் ராட்சதன் ஒருவன் பூமியில் தன்னை அழித்துக் கொள்வதன் மூலம் உயிர்கள் பூமியில் தோன்ற ஆரம்பித்தது என்பது தெளிவாக்கப்படுகிறது. பின், பல நாகரீகங்கள் தோன்றி வாழ்ந்த பகுதிகளில் காணப்பட்ட சுவர் சித்திரங்களில் ராட்சதர்கள், மானுடர்களிற்கு சில நட்சத்திர அமைப்புக்களை சுட்டிக் காட்டுவதும், அதை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பின், ராட்சத மனிதன் சுட்டிக் காட்டிய நட்சத்திரங்களை நோக்கி ப்ரொமீதியஸ் கலத்தில் பயணிப்பதாகவும் கதை நகர்கிறது. இங்கு திரைக்கதையின் பிரதான இழையானது மனிதனை படைத்தவர்களாக இருக்ககூடியவர்களை தேடிச் செல்லுதல் என்பதாகவே பின்னப்பட்டிருக்கிறது. ஆகவே திரைப்படமானது வேற்றுக் கிரக கொடிய ஜந்துக்களான ஏலியன்கள் பற்றி பேசுவதிலிருந்து தன்னை தள்ளி வைத்துக் கொள்ளுகிறது. ஆகவே பிசுபிசுப்பாக மின்னும், அமிலத் திரவம் ஒழுகும், பளபளப்பான கறுப்பில் அட்டகாசம் காட்டி அராஜகம் செய்யும் வேற்றுக்கிரகக் குலக் கொழுந்துகளான ஏலியன்களையும், அவற்றுடனான மோதல்களையும் மனதில் எண்ணிக் கொண்டு இத்திரைப்படத்தினுள் நுழைந்தால் ஏலியன்களிற்கு பதிலாக கொடிய ஏமாற்றம் உங்களிற்காக அங்கு காத்திருக்கும் என்பதுதான் உண்மை.

கெத்தான என் போட்டோவ போட்ட மவராசன் யாருலே
மாறாக மானுட குலமானது எழுப்பக்கூடிய அடிப்படைக் கேள்விகளான நாம் எவ்வாறு உருவாகினோம், எம்மை படைத்தது யார் போன்றவற்றிற்கு ஒரு வேறுபட்ட பார்வையை நீங்கள் கேளிக்கைக்காகவாவது ஏற்றுக் கொள்ளும் இளகிய உள்ளம் கொண்டவரெனில் இத்திரைப்படம் உங்களை ஏமாற்றாது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே திரையில் அவர் விரிக்கும் காட்சிகள் மூலம் ரசிகனைக் கவர ஆரம்பிக்கிறார் இயக்குனர். உயிரிகள் இன்னம் தோன்றா பூமியின் நிர்மலம், இனிய செவ்விசை ஒழுக விண்வெளியில் பயணிக்கும் விண்கலம், அதனுள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமர்த்தான அண்ட்ரொய்ட் என்பன வழியாக கதையின் சூழலிற்குள் மென்மையாக ஒருவரை எளிதாக இழுக்கிறது திரைப்படம்.

எவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட, ஒரு அண்ட்ரொய்ட் மனிதனின் ரசனையை எட்ட முயல்கிறது, அவன் அறிவையும், ஆற்றலையும் எளிதாக தாண்டிச் செல்ல தயங்காது இயங்குகிறது என்பதை ஆரம்பக் காட்சிகளில் சிறப்பாக காட்சிப்படுத்துகிறார் ரிட்லி ஸ்காட். படைத்தவன் திறமையையும், மாட்சிமையும் தாண்டிச் செல்ல விழையும் மனித இயல்பையும், அதைப் பற்றிக் கொள்ள துடிக்கும் ஒரு அண்ட்ரொய்டின் செயற்பாடுகளையும் மெல்லிய ஒரு கோடாக இந்தக் காட்சிகள் உணர்த்தியவாறே நகர்கின்றன.

சந்திரனை நெருங்கிய பின்பாக வழமைபோலவே துயில் கலையும் நிபுணர்கள் குழுவின் அறிமுகம், அவர்களின் திறமைகள், தனித்தன்மைகள், அவர்களிற்கிடையே உள்ள வேறுபாடுகள் என கதையை வழமை மாறாது நகர்த்துகிறார் இயக்குனர். இங்கு நடிகை சார்லைஸ் தெரோன் சுயநலமிக்க ஒரு செல்வந்தனின் வாரிசாக காட்டப்படுகிறார். இறுக்கமான, கண்டிப்பான பாத்திரமாக அவர் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் வீண்டிக்கப்பட்ட ஒரு நடிகையாகவே திரைப்படத்தில் காணப்படக்கூடியவராக இருக்கிறார். அவர் மார்புகளில் ஒன்றையாவது காட்டியிருந்தாலாவது அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என இங்கு என்னால் எழுத முடிந்திருக்கும். ஆனால் என்ன செய்வது. என்னிடம் நல்ல நடிகை எனும் பெயர் வாங்க அவரிற்கு இம்முறை சந்தர்ப்பம் அமையவில்லை.

சிவ்காசி எங்க இருக்குலே...
ப்ரொமீதீயஸ் கலத்திலிருந்து வெளியேறும் நிபுணர்கள், புதிய சந்திரனில் காணப்படும் வினோத கட்டமைப்பு ஒன்றினுள் நுழைந்து தம் தேடல்களை ஆரம்பிக்கின்றனர். இதிலிருந்து கதையின் பெரும்பகுதியானது ப்ரொமீதீயஸ் விண்கலத்தினுள்ளும், ராட்சதர்களின் வினோதக் கட்டமைப்புக்குள்ளும் நிகழும் நிகழ்வுகளையே திரைப்படுத்துகிறது. இந்த இரு அடைப்பட்ட வெளிகளிற்குள்ளும் புறமாக இருக்கும் சந்திரனின் நிலவியலை திரைப்படம் தள்ளி வைத்திருக்கிறது. அது ஒரு சிறு குறையாகவே எனக்கு தெரிகிறது. அடைப்பட்ட இரு வெளிகளினுள் மனிதர்கள் மனதில் உருவாகும் கேள்விகள், தகராறுகள் போன்றவற்றை அவற்றின் அழுத்தத்துடனும்,பதட்டத்துடனும் எடுத்து வருகிறார் ரிட்லி ஸ்காட். இருப்பினும் அவர் இங்கு காட்டியிருக்கும் பதட்டத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. கதையின் நகர்வோடு ராட்சதர்களின் கட்டமைப்பின் மர்மம் குறித்த ஆர்வத்தையும் திரைக்கதை எளிதாக ஏற்றிக் கொண்டே செல்கிறது. அந்தக் கட்டமைப்பு என்ன, எதற்காக அது அங்கு உருவாக்கப்பட்டது, ராட்சதர்கள் அங்கு செய்த காரியங்கள் என்ன, இன்று இந்தக் கட்டமைப்பில் ராட்சதர்களின் உடல்கள் மட்டுமே காணப்படுவதற்கான காரணம் என்ன..... இவ்வகையான கேள்விகளிற்கு விடையை சுவையாக திரைப்படம் தன் நகர்வோடு எடுத்து வருகிறது.

தனக்கு மேலான சக்தி ஒன்றின் மீது மனிதர்கள் கொண்டிருக்ககூடிய நம்பிக்கையையும் திரைப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. மரணத்தை எம்மை படைத்தவர்களால் தள்ளி வைக்க இயலுமா என்பதற்கு வேதனையான கிண்டலை திரைப்படம் பதிலாக தருகிறது. நித்திய வாழ்வு என்பது பிரம்மாக்களிற்கே கூட இல்லாத ஒன்று என அது கேலி செய்கிறது. ராட்சதன், மனிதன், ஆண்ட்ரொய்ட் எனும் படைப்புக்கள் வழியாக படைப்பின் அர்த்தம் என்ன எனும் கேள்வியையும் அது எழுப்புவதிலிருந்து விலகிச் செல்வதில்லை. எந்த ஒரு மேலான படைப்பின் அழிவும் ஒரு சிறு உயிரிலிருந்து உருவாகிவிடக்கூடும் எனும் உண்மையையும் அது திகிலுடன் காட்சிப்படுத்துகிறது.

திரைப்படத்தின் மிகச்சிறந்த பாத்திரம் அன்ட்ரொய்ட் டேவிட். அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் மிக்கேல் ஃபாஸ்பெண்டெர் சிறப்பாக தன் நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரைத் தவிர திரைப்படத்தில் சிறப்பான நடிப்பு என்பதை குகைகளிற்குள் தேடித்தான் அலைய வேண்டும். விண்கலமும், இயந்திர வண்டிகளும் நடிகை நூமி ரப்பாஸை விட அருமையாக நடித்திருக்கின்றன. அவரை வைத்து இப்படத்தின் தொடர் எதையும் உருவாக்கும் எண்ணம் தயாரிப்பாளர்களிற்கு இருப்பின் அதை அவர்கள் எங்காவது தொலைதூரச் சந்திரனில் சென்று தீர்மானித்தால் அது ரசிகப் பெருமக்களிற்கு ஒரு நல்ல சேதியாக அமையும்.

படத்தில் சிறப்பு வரைகலைநுட்பக் காட்சிகள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ராட்சதர்களின் வினோதக் கட்டமைப்பு, அதில் மறைந்திருக்கும் அந்த வாகனம் !! என்பன எல்லாம் அற்புதமான ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குகை போன்ற அந்தக் கட்டமைப்பினுள் மனிதர்கள் நுழையும் போதெல்லாம் சிறப்பான ஒளிப்பதிவு எம்மை திகிலோடு ஒன்றச் செய்கிறது. இதற்காக அதிரடி ஆக்‌ஷன்களை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். கதையில் உள்ள மர்மம்தான் படத்தினை விரைவாக நகர்த்தி செல்கிறது. திரைப்படத்தில் இருக்கும் ஆக்‌ஷனை அதிரடி என வகைப்படுத்த முடியாது. இருப்பினும் உச்சக் கட்டக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. ரத்தம் தெறிக்கும் காட்சிகளின் ரசிகர்கள் சப்புக் கொட்டிக் கொண்டே பார்க்கலாம். போனால் போகிறது என்று கொடிய அராஜக ஜந்துவான ஏலியன் எவ்வாறு தோன்றியது என்பதையும் இயக்குனர் இறுதியில் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பில்லாமல் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார் ரிட்லி ஸ்காட். அழிவிலிருந்தே சில வேளைகளில் சில ஆரம்பங்கள் துவக்கம் பெறுகின்றன. ஆக்குபவனே அழிக்கவும் செய்வான், அதற்கான காரணங்கள் அவனிற்கே வெளிச்சம் என்பதாக திரைப்படம் கேள்வியுடன் நிறைவுறுகிறது. அதிக ஆக்‌ஷன் இல்லாத, கதையம்சத்துடனும், சிந்திக்க வைக்கும் கேள்விகளுடனும் கூடிய மென் அறிபுனை திரைப்படம் இது. மீண்டும் சொல்கிறேன் ஏலியன்களையும், ஆக்‌ஷனையும் எதிர்பார்த்து சென்று ஏமாறாதீர்கள்.

ட்ரெய்லர்













Friday, June 1, 2012

தீராக்காயச் சித்திரங்கள்


ஒர்க்கா திமிலங்களைக் கொண்டு கேளிக்கை காட்சிகளை நடாத்தி வரும் ஸ்டெஃபானிக்கு இரவு விடுதி ஒன்றில் நிகழும் ஒரு அசம்பாவிதத்தின் வழியாக அலி என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. சிறிது காலத்தின் பின்பாக கேளிக்கை காட்சி ஒன்றின்போது ஏற்படும் விபத்தில் தன் இரு கால்களையும் இழந்து தனியாக வாழ்ந்து வரும் ஸ்டெஃபானியுடன் தனது ஒய்வு நேரங்களை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி…..

அலி, அவன் மனைவியை விட்டுப் பிரிந்து தன் மகன் சகிதம் தன் சகோதரியின் வீட்டுப் பட்டறையில் தங்கிக் கொள்பவன். அலி எப்படிப்பட்ட ஒரு மனிதன் என்பதனையும் அவன் சகோதரியான ஆனாவின் குடும்ப மற்றும் தொழில் நிலைமையையும், அவற்றுடன் எவ்விதமாக தன்னை அலி இருத்திக் கொள்கிறான் என்பதையுமே தன் புதிய திரைப்படமான De Rouille Et D’Os ன் ஆரம்ப பக்கங்களில் எழுதுகிறார் இயக்குனர் Jacques Audiard. கனடாவை சேர்ந்த எழுத்தாளரான Craig Davidson எழுதிய Rust and Bone எனும் படைப்பை தழுவியே இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

தன் வாழ்க்கையில் இலட்சியம் என எதையுமே கொண்டிராத அலி, காவல் வேலை மற்றும் பந்தய பணத்திற்காக நிகழும் தெருச்சண்டைகள் போன்றவற்றில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை நகர்த்துபவன். இங்கிதம் என்பது அவனிற்கு புரியாத ஒரு விடயமாகவே இருக்கிறது. கொடும் விலங்குகள் நிறைந்த காட்டில் இரைதேடும் ஒரு விலங்கின் குணத்துடன் அவன் தன் வாழ்நாட்களை முன்கொண்டு செல்கிறான். உறவு, பாசம், கருணை, போன்றவை குறித்த அவன் உணர்வுகள் சாதாரண நிலையிலிருந்து தொலைவில் நிற்பவையாக அவனிடம் அமைந்திருக்கின்றன. பணத்தை தேடிக் கொள்வதற்காக அவன் எந்த வகையான வேலைகளிலும் இறங்கிவிடக் கூடியவன்தான் இருப்பினும் அவனிற்கென அவன் வகுத்துக் கொண்ட சுதந்திரத்திற்கு இடையூறாக யாரும் இருப்பதையும் அவன் விரும்புவதில்லை. பணத்தைக் கொடுப்பதுடன் தன் கடமைகள் யாவும் முடிந்து விடுகின்றன எனும் மனநிலை அவனிடம் உண்டு. தன் மகனைப் பராமரிப்பதுகூட அவனிற்கு சிரமமான ஒரு செயலாகவே இருக்கிறது. ஒரு சிறுவனுடன் பழகும் நுட்பம் அலியிடம் கிடையாது. அவனிடம் இயல்பாகவே ஒட்டி இருக்கும் ரவுத்திரம் திடீரெனப் பொங்கும் ஒரு வன்முறை எரிமலையாக அவனை மாற்றியடிக்க கூடிய தன்மையைக் கொண்டது. பெண்கள் குறித்து அவன் அதிக மதிப்புக்களை கொண்டிருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் உடலை சுகிக்க தயங்காதவனாகவே அவன் இருக்கிறான். அவன் உள்ளிருக்கும் வன்முறை சுகித்தலின்போது பெண்ணுடலில் தன் வன்கவிதைகளை எழுதிக் கொண்டே சென்று மறைகிறது. புதிய உறவுகளை உருவாக்கி கொள்ளும் விருப்பம் அவனிடம் இருப்பதில்லை. தன் உறவுகளையும் எளிதான சில அம்சங்களாகவே அவன் சில கணங்களில் கருதிச் செல்கிறான்…..

இவ்வாறாகவே தன் புதிய படைப்பின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான அலியை இயக்குனர் ஜாக் ஒடியார், அவனிற்குள் வாழ்ந்திருக்கும் அனைத்து இயல்புகளுடனும், குணாதிசயங்களுடனும் தனக்கேயுரிய அதிரவைக்கும் நேர்மையுடன் திரைப்படுத்துகிறார். அலி எனும் பாத்திரத்தின்மீது பார்வையாளன் கொண்டிருக்க வேண்டிய உணர்வை மிகச்சரியாக கொணர்வதற்கு அவர் இயக்கம் தயக்கம் காட்டுவதேயில்லை. தன் படைப்பின் இறுதிக் காட்சிகள்வரை அலியுடன் பார்வையாளன் உணர்வுபூர்வமாக ஒன்றிக் கொள்வதை திறமையாகத் தடுத்தபடியே அலியின் வாழ்வை எதார்த்தத்தின் துடிப்புடன் எடுத்துவர விழைகிறார் ஜாக் ஒடியார். எவ்வாறு முரட்டுக் குணம் கொண்ட ஒரு மனிதனை நாம் விலகியபடியே தாண்டிச் செல்வோமோ, அந்த விலகலின் பாதுகாப்பான தூரத்தில் பார்வையாளனை எச்சரிக்கையுடன் நிறுத்தி வைக்கிறது ஒடியாரின் திறமை.

ஸ்டெஃபானியுடன் அலி அறிமுகமாகிக் கொள்வது ஒரு மோதலின் வழியாகவே. அலியுடன் அவள் அறிமுகமாகிக் கொள்ளும் அந்த முதல் இரவிலேயே ஸ்டெஃபானியின் இயல்பை தெளிவான வரியாக வரைகிறார் ஒடியார். தன்னுடன் வாழ்ந்திருக்கும் ஆணுடன் அலியை நேரிற்கு நேர் சந்திக்க செய்து அவர்கள் ஆண்மையினால் அவர்களிற்கிடையே சவால் விட வைக்கும் தருணங்களை உருவாக்கி, தன் துணை காணும் தோல்வியில் அவனைச் சற்று பரிகசித்து மகிழும் ஸ்டெஃபானிக்கு தன் துணைவனுடான வாழ்க்கை திருப்தியான ஒன்றாக இல்லை. ஒர்க்கா திமிங்கல கேளிக்கை காட்சி விபத்தின் பின்னாக தனித்து விடப்படும் ஸ்டெஃபானி தன் வெறுமையின் வெளியில் நீட்டிய ஒரு கரமாக தொலைபேசியில் அலியை அழைக்கிறாள். அந்த கணத்திலிருந்து ஆரம்பமாகிறது சாத்தியமேயில்லாத ஒரு உறவின் பிறப்பு.

இரு கால்களையுமே இழந்து வாழும் பெண்னொருத்தியின் விரக்தி, வெறுமை, சலிப்பு போன்றவற்றை தன் கருணையான இயல்பால் மனிதர்கள் இல்லாதாக்குவதை நாம் வழமையான கதைகளில் கண்டிருக்கிறோம். ஆனால் அலி இங்கு ஸ்டெஃபானி மேல் கருணை கொண்டவனாக இருப்பதில்லை. ஒரு சிறு தொகைப் பணத்தை வெல்வதற்காக தன் உடலை சகல வழிகளிலும் சிதைக்க தயங்காத ஒரு மனிதனிற்கு முடம் என்பது இன்னுமொரு காயமே. அதில் இரக்கம் கொள்ள அவனிடம் காரணங்கள் ஏதுமில்லை. தன் இயல்புகள் ஏதிலுமிருந்து விடுபடாமலேயே ஸ்டெஃபானியுடன் தன் பொழுதை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி. இவர்கள் இருவரிற்குமிடையில் இருக்கும் உறவு என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்பாமலேயே அவர்கள் கணங்கள் கழிகின்றன. அவனது முரட்டு இயல்பு அவள் வெறுமையை நிரப்ப முயல்கிறது. ஸ்டெஃபானியின் உடல் இச்சைகளை அலி தீர்த்து வைக்கத் தயங்குவதில்லை. அலியை பொறுத்த வரையில் தனக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் ஸ்டெஃபானியின் உடல் இச்சையை தீர்த்து வைப்பது என்பது அவளுடன் உலாச் செல்வது போல ஒரு செயல்தான், அதைத் தாண்டி அவன் அதற்கு அர்த்தங்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் இது குறித்த ஸ்டெஃபானியின் நிலைப்பாடு அப்படியானது அல்ல. அவள் உடல் முடமான ஒன்றான போதும் அவள் தன் உறவுகளை முடமான ஒன்றாக்குவதிலிருந்து விலகி வருகிறாள். அவளைப் பொறுத்த வரையில் உறவு என்பதன் அர்த்தம் புரியாத, புரிந்து கொள்ள விழையாத ஒருவனுடன் தொடர்ந்தும் தன் உடலை பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இல்லை. தன் உடலை ஒரு உறவின் பகிர்தலாகவே காணும் இயல்பைக் கொண்டவள் ஸ்டெஃபானி. இது அலிக்கும் அவளிற்கும் இடையில் ஒரு சிறு விரிசலை உருவாக்க ஆரம்பிக்கிறது.
um7WT


கால்கள் முடமான ஒரு பெண்ணைப் பார்த்து கண்களை கலங்க செய்யும் கதை வழக்கை இங்கு தவிர்க்க முயலும் ஒடியார், தன் ஊனத்துடன் தனித்த நிலையில் வாழ்க்கையோடு பொருதத் துடிக்கும் ஒரு பெண்ணாகவே ஸ்டெஃபானியை திரைப்படுத்துகிறார். இருப்பினும் கால்கள் இரண்டையும் இழந்த பெண் ஒருத்தியின் சங்கடங்களை அவர் திரையில் காட்டுவதிலிருந்து விலகி நிற்கவில்லை. கேளிக்கை காட்சியில் திமிங்கலங்களை தன் கை அசைவிற்கேற்ப அசைய வைப்பது போல அவள் அலியையும் தன் மனதின் அசைவுகளிற்கேற்ப அசைய வைக்க விரும்புகிறாள். ஆனால் அலி அவளிடமிருந்து நழுவிச் செல்பவனாகவே இருக்கிறான். முடமான பெண்ணின் நாட்களின் அசைவை மிகை உணர்வுகள் எதுமின்றி இங்கு காட்சிப்படுத்துகிறார் ஒடியார். இங்கு உரையாடல்களில் உறைந்திருக்கும் எதார்த்தம்தான் மனதை கனக்க செய்கிறது. இவ்வகையான பூச்சலங்காரமற்ற பச்சையான உரையாடல்களில் மிளிரும் நேர்மையை அது பறைசாற்றுகிறது. படிப்படியாக அலியின் வாழ்வில் அவன் உணர்ந்துகொள்ளா விதத்திலேயே ஒரு காயம் போல் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள் ஸ்டெஃபானி. ஆனால் அலி அது குறித்து அறியாத ஒருவனாகவே ஆரம்பத்தில் இருக்கிறான்.

தன் சகோதரி ஆனாவின் வேலை பறிபோகக் காரணமாக அமைவதும் அவனே தான் என்பதையும் அலி அறியாதவனாகவே இருக்கிறான். இங்கு ஒடியார், பெரும் பல்பொருள் அங்காடிகளின் நிர்வாக அதிகாரிகளின் கயமைத்தனத்தையும் அதற்கு துணைபோபவர்களையும் இதன் வழியாக தம் வாழ்க்கையின் அடுத்த நாளை கேள்விக் குறியாக்கி அழும் மனிதர்களையும் காட்சிப்படுத்துகிறார். குப்பையில் எடுத்து வீசப்பட வேண்டிய பொருட்களை தம் வீடு கொண்டு சென்றதற்காக கட்டாயப் பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களின் அவல நிலையையும், அவர்கள் பணியிடத்தில் மறைமுகமாக வேவு பார்க்கப்படும் விதத்தையும் சமூக அக்கறையோடு கதையில் சேர்க்கிறார் ஒடியார். சமூகத்தின் இந்தக் காயத்தை அவர் கதையில் கையாண்டிருக்கும் விதம் சற்று வீர்யம் குறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைக்கதையில் பெரும் திருப்பத்தை கொண்டுவரும் ஒரு காயமாகவே ஒடியார் இதைக் கையாண்டிருக்கிறார்.

மிக உணர்சிகரமாக நகர்த்தி சென்றிருக்கக்கூடிய இக்கதையை அதன் எதார்த்தமான நம்பகத்தன்மைக்காக ஒடியார் அதன் நிஜ சொரூபத்துடன் காட்சிப்படுத்த விழைந்திருக்கிறார். அதுவே பார்வையாளர்களை இப்படைப்பிலிருந்து சற்று விலகி நிற்க வைக்கும் ஒரு காரணியாக செயற்படுகிறது. ஆண், பெண், குடும்ப உறவுகளின் சமகால நிலையை அவர் அன்றாடங்காய்ச்சிகளின் குரலாக திரையில் ஒலிக்க செய்கிறார். தோல்விகளை கண்டு ஓடும் மனிதனையும், தோல்விகளுடன் வாழ்க்கையை நகர்த்தி செல்ல வேண்டிய மனிதனையும் உக்கிரமான பார்வை வழியே ஒடியார் இங்கு காட்டியிருக்கிறார். கலங்க வைக்க வேண்டிய உச்சக்கட்டக் காட்சிகளில் கூட பார்வையாளன் கலங்கி விடாது அவலத்தை சுவைக்க வேண்டும் என அதிர வைக்கும் நிகழ்வுகளை தனக்கேயுரிய லாவகத்துடன் அவர் திரையில் வரைகிறார்.

உடலில் ஏற்படும் காயங்கள் வழியாக மனித வாழ்வின் சிதைவும் சீராக்கமும் சேர்ந்த நகர்வை தன் படைப்பின் வாயிலாக வெளிக்கொணர விழைகிறார் இயக்குனர். திரைப்பபடத்தில் காயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய காயங்கள் உருவாக, முன்னையவை ஆற, ஓயாத மனித வாழ்க்கை தன் அடிகளை முன்வைக்கத் துடிப்பதையே அவர் தன் பாணியில் இங்கு இட்டு வருகிறார். துருப்பிடிப்பதன் வழி தன்னை அழித்து செல்லும் உலோகத்திற்கும், உடைந்து நொருங்கினாலும் மீண்டும் ஒட்டி முன்னை விட பலமாகும் என்பிற்கும் உள்ள இயல்புகளை மனித வாழ்விற்கும், உறவிற்கும் பொருத்தி பார்க்க முனைகிறது ஒடியாரின் இப்படைப்பு.

ஆண் நடிகர்களை தேர்வு செய்வதில் ஓடியார் திறமை வாய்ந்தவர் என்பதை அலி பாத்திரத்திற்காக அவர் பயன்படுத்தி இருக்கும் நடிகரான Matthias Schoenaerts தவறாது நிரூபித்திருக்கிறார். முரட்டு மனிதனாக அவர் நடிப்பு மிக சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. ஸ்டெஃபானியாக வேடமேற்று இருக்கும் நடிகை Marion Cotillard தன் அமைதியான நடிப்பால் பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். உணர்ச்சிபூர்வமாக இப்படைப்பை நெருங்குவது என்பது சிரமமான ஒன்று. ஆனால் வலிகளும், முறிவுகளும், காயங்களும், விபத்துக்களும், பிரிவுகளும், ஒன்றுசேரல்களும் உள்ள மனித வாழ்க்கை என்றும் உணர்வுபூர்வமாக இருந்து விடுவதில்லையே. எம் உணர்வுகளே மரத்துப்போகும் வாழ்வின் கணங்களில் நாம் அடி எடுத்து வைத்து செல்வதும் உண்டல்லவா. காணமுடியாக் காயங்களுடனும், சொல்லவியலா வலிகளுடனும், அரூப முடங்களுடனும் வாழ்க்கையை பந்தயமாக வைத்து மனிதர்கள் மோதிக் கொண்டே செல்கிறார்கள். அவர்கள் தீராக்காயங்கள் வரைந்த சித்திரங்களாக மனித அவலக் காட்சியகங்களின் மெளன அலறலில் தம் குரலை ஒலிக்க விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ட்ரெய்லர்

Sunday, May 27, 2012

சாயம் போன கறுப்பு கோட்டு சூட்டு

தன் சகாவான ஏஜெண்ட் K ன் உயிரைக் காப்பாற்றவும், வேற்றுக்கிரக ஜீவன்களின் கொடுமையான ஆக்கிரமிப்பிலிருந்து இப்புண்ணிய பூமியைக் காப்பாற்றவும் விரும்பும் ஏஜெண்ட் J அதற்காக காலத்தில் பின்னோக்கி பயணிக்க வேண்டி இருக்கிறது......


ஏற்கனவே வந்த இரண்டு பாகங்களிலும் உருப்படியானது என ஒருவர் தெரிந்து எடுக்கக்கூடியது Men in Black ன் முதற் பாகமே. இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்களிடம் துட்டு வாங்கிக் கொண்டபின்பாக சிறப்பானது எனச் சொல்லிக் கொள்ளலாம். தற்போது வெள்ளித்திரைகளை தம் கறுப்பு கோட்டு சூட்டு டை வெள்ளை சட்டை கூல் கண்ணாடி சகிதம் அலங்கரிக்கும் மூன்றாம் பாகம் மரணப்படுக்கையில் கிடந்த டாமி லீ ஜான்ஸை வற்புறுத்தலாக எழுப்பி மராதன் பந்தயத்தில் ஓடவிட்ட உணர்வை அளிக்கிறது. திரைப்படத்தில் டாமி லீ ஜான்ஸிற்கு வழங்கப்பட்டிருக்கும் முக அலங்காரமானது அவர் அழகை ஆறு அடி தூரத்திற்கு ஆழப்படுத்தியிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் ஏஜெண்டு J, 1969 களில் தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார். 1969 களில் கருப்பின மக்கள் மீது இருந்த எள்ளல் கலந்த பார்வையை திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி தன் சாகசங்களை ஆரம்பிக்கும் J , அங்கு தன் சகாவான K ன் இளவடிவ பதிப்பை காண்கிறார். முதுவடிவ பதிப்பிற்கும், இளவடிவ பதிப்பிற்கும் உள்ள வித்தியாசங்களை J ரசித்து வியந்தவாறே தன் சகாவுடன் விசாரணைகளை தொடர்கிறார்... வழமை போலவே சிரிக்க இயலாத, சலிப்பூட்டும் காட்சி அமைப்புகள். அண்டி வொர்கோல் எனும் கலைஞரும் ஏஜெண்டுகளில் ஒருவர் என சிரிக்க வைக்க முயற்சித்து சீரழிவது எப்படி என இனி Barry Sonnenfield பாடம் எடுக்கலாம்.
இதுக்கு மேல நடிக்க முடியுமாலே......


டாமி லீ ஜான்ஸ் மிகவும் அயர்ச்சி அடைந்தவராக திரையில் காணப்படுகிறார். இது பாத்திரத்திற்குரிய குணாம்சமா அல்லது தொடர்ந்து தொடர்ந்து ஏஜென்ட் K ஆக கோட் சூட் அணிந்து சுற்ற வேண்டிய சலிப்பா என்பதுதான் புரியவில்லை. மனிதரிற்கு நல்ல வேளையாக திரைப்படத்தில் அதிக நேரம் அவர் திறமையைக் காட்ட வேண்டிய வாய்ப்பு தரப்படவில்லை என்பது புத்திசாலித்தனமான தீர்மானங்களில் ஒன்று. வழமையாக உற்சாகம் கொப்புளித்து ஒரு இடத்தில் நிற்க இயலாது ஓடி ஆடும் வில் ஸ்மித்திடமும் முன்பு இருந்த அந்த கவர்ச்சி இல்லை. அவரிடமிருந்த அந்த உற்சாகம் ஏதோ சில படிகள் குறைந்துவிட்ட நிலையில் அவர் காலம் விட்டு காலம் தாவித் திரிவதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஏஜெண்டு K ன் இளவடிவ பதிப்பாக வரும் நடிகர் ஜோஸ் ப்ரொலான் அருமையான தேர்வு. திரைப்படத்தின் ஆறுதலான அம்சம் அவரே.


படத்தின் வில்லன்களில் ஒருவர் இயக்குனர் என்றால் இன்னொருவர் பொரிஸ் த அனிமல் எனும் வேற்றுக்கிரக ஜீவன். இப்படி ஒரு சப்பை வில்லனை நகைச்சுவை படங்களில் கூட காண இயலாது. ஆரம்பத்தில் அவரை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் இயக்குனர் உருவாக்கியிருக்கும் பில்ட் அப்பிற்கு தண்டனையாக அவரை ஏதாவது சந்திரனின் சிறையில் ஆயுளிற்கும் அடைத்து வைக்கலாம்.


1960 கள் என்றவுடன் வேற்றுக் கிரக ஜீவன்களும் அக்காலத்திற்குரிய மோஸ்தரிலேயே உலா வருவது, மம்மி பிரெசிடெண்டு, ப்ளீஸ் சொல்லாமலேயே பாலைக் குடிச்சிட்டார் போன்ற வரிகள், தலைமையக திரையில் தோன்றும் லேடி காகா என நுண்ணங்கதங்கள் இருந்தாலும்கூட திரைப்படம் தரும் சலிப்பையும் அயர்ச்சியையும் அவற்றால் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை. உச்சக்கட்டக் காட்சியில் வெளிப்படுத்தப்படும் ஒரு உண்மை மனதை நெகிழச் செய்கிறது என்பதும் உண்மையே. ஆனால் இதை எவற்றை தாண்டியும் கிராபிக்ஸோ, ஸ்டண்டுகளோ, காட்சிப் புதுமைகளோ, நகைச்சுவையோ, நடிகர் திறமையோ என எதுவும் [ ப்ரொலானை தவிர்த்து] சிறப்பான ஒரு அனுபவத்தை வழங்கத் திணறி தோல்வி காண்கின்றன என்பதும் உண்மையே. சாயம் போய் வெளுக்க ஆரம்பித்திருக்கும் இந்தக் கறுப்பு கோட்டு சூட்டை தற்காலிகமாகவாவது ஒதுக்கி வைக்க வேண்டிய தருணமிது என்பதுகூட ஒரு உண்மைதான். [*]


ட்ரெய்லர்

Friday, May 18, 2012

ஒளிரும் நட்சத்திரங்களின் துன்ப வரி

கன்சாஸிலிருக்கும் விச்சிடா எனும் நகரிற்கு வேலை தேடி வருகிறான் இளைஞன் Nate Colton. நகரில் அவன் நுழைகையில் அவனை விசாரிக்கும் விச்சிட்டா நகரின் ஷெரீப்பான Sam Slade  விசாரிப்பின் பின்பாகஅவனிற்கு கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் காவலனாக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுத் தருகிறான்.....

அட்டைப்படத்தில் வீற்றிருக்கும் இளைஞனான நேட் கால்ட்டனிற்கு ஒரு கை இல்லை. ஒற்றைக் கையால் மாத்திரமே துப்பாக்கியை இயக்க இயலுமான ஒரு இளைஞனிற்கு, அதிலும் அவன் குறிபார்த்து சுடும் திறனானது சுமாரான ஒன்று என்பதை சோதித்து தெரிந்து கொண்டபின்பாகவே அவனை கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் பாதுகாவலானக வேலைக்கு அமர்த்த முன்னிற்கும் ஷெரீப் ஸாம் சிலேட்டின் மனதில் ஒரு திட்டம் உண்டு. துப்பாக்கியால் குறி தவறாது சுடும் தன் அபாரமான திறமையை ஷெரீப் ஸாம் சிலேட்டிடமிருந்து மறைத்து அவன் பெற்றுத்தரும் வங்கி காவல் வேலைக்கு செல்லும் நேட் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. நேட்டின் மனதின் ரகசிய சுழிகளில் மறைந்திருக்கும் அத்திட்டம் உருவானதற்கான மூல காரணங்கள் என்ன என்பதை அறிவதற்கு காலத்தில் பதினொரு வருடங்கள் பின்னோக்கி பயணித்து 1868 ன் ஜூலை மாதத்தில் Fort Laramie எனும் நகரிற்கு நாம் சென்றிட வேண்டும். அந்த சிரமத்தை எமக்கு தந்திட விரும்பாத Western கதையின் கதாசிரியரான ஜான் வான் ஹாம், தன் கதையின் முதல் பக்கத்தை ஃபோர்ட் லராமியிலிருந்தே ஆரம்பிக்கிறார்.

wes1வெஸ்டெர்ன் கதையின் கதைகூறியாக அக்கதையின் பிரதான பாத்திரமான நேட் கோல்ட்டனே இருக்கிறான். அவன் குரலிலேயே கதையானது சித்திரப் பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. ஆரம்பம் முதலே நேட்டின் குரலில் கலந்திருக்கும் அந்த ஈரமான வேதனை, வரிகளின் மீதான நகர்வுகளுடன் மனதை ஈரலிப்பாக்க ஆரம்பிக்கின்றது. கதையின் தொனி எவ்வாறானதாக இருக்ககூடும் என்பதை அவன் குரல் ஒரு ஒலி இழந்த கட்டியம்போல் படிப்பவன் மனதில் ஒலிக்கச் செய்கிறது. செவ்விந்தியர்களால் கடத்தி செல்லப்பட்ட தன் சகோதரனின் மகனை மீட்ட ஒரு மனிதனை சந்திப்பதற்காக ஃபோர்ட் லராமி செல்லும் வசதி படைத்த ஒரு பண்ணை உரிமையாளனாக கதையில் அறிமுகமாகிறான் அம்ப்ரோஸியஸ் வான் டீர். அவனுடன் கூடவே பயணிக்கிறாள் அவன் மகளான கேத்தி.

அம்ப்ரோஸியஸ் மனதில் ஒரு திட்டம் உண்டு. அம்ப்ரோஸியஸின் சகோதரனின் மகனை செவ்விந்தியர்களிடமிருந்து மீட்டெடுத்த மனிதன் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. இவ்வாறாக கதையின் ஆரம்பத்திலும் சரி, பதினொரு வருடங்களின் பின்பாக நேட் கோல்ட்டன் விச்சிட்டாவிற்கு வந்து சேர்கையிலும் சரி மனிதர்களின் மனங்களில் புதைந்திருக்கும் திட்டங்களின் ரகசியங்கள் தரும் மர்மத்தின் தடங்களில் தன் கதையை சலிப்பில்லாது நடத்தி செல்கிறார் ஜான் வான் ஹாம்.

1868 ன் கோடையில் ஃபோர்ட் லராமியில் நிகழும் சில எதிர்பாரா நிகழ்வுகளே பதினொரு வருடங்கள் ஓடியபின்பாக நேட் கோல்ட்டனை விச்சிட்டாவிற்கு அழைத்து வருகின்றன. இந்த பதினொரு வருட காலத்தின் விபரிப்பை ஆரம்ப பக்கங்களில் இருந்து எதிர்பாராமை அளிக்கும் வியப்பின் சுவையோடும், ஏமாற்றங்களும், தோல்விகளும், குற்றவுணர்வுகளும் அளிக்கும் மென்சோகத்தின் வலியோடும் கதையில் கொணர்கிறார் கதாசிரியர். இக்கால இடைவெளியில் நேட்டின் வாழ்க்கையை பருவகால மாற்றங்களோடும், அவன் கடந்து வரும் நிலப்பரப்புக்களோடும் சோகத்தின் மூச்சோடு கரைய விட்டிருக்கிறார் வான் ஹாம் எனலாம். தோல்விகளும், ஏமாற்றங்களும், கைவிடப்படுதல்களும் தன் வாழ்க்கையில் சகஜமாகிப் போன அம்சங்கள் என்பதை நேட்டின் குரல் அவன் கடந்து வரும் பெருமேற்கின் பரந்த வெளிகளுனூடு சொல்லிக் கொண்டே தேய்கிறது.

விச்சிட்டாவில் தன் மனதில் உள்ள திட்டத்தை செயற்படுத்தும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறான் நேட் கோல்ட்டன். அந்நாள் வங்கிக் கொள்ளையர் வடிவில் அவனை தேடி வந்து சேர்கிறது. நாள் ஒன்றிற்கு ஐந்து டாலர்களிற்காவும், மூன்று வேளை உணவிற்காகவும் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயங்காத வங்கிக் காவலர்கள் குறித்த ஒரு மெலிதான பார்வையை கதையின் இப்பகுதியில் ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். வங்கிக் கொள்ளை முயற்சியை முறியடித்தால் கிடைக்கக்கூடிய மேலதிக சன்மானம் வங்கிக் காவலர்களின் இன்பக் கனவு. கன்ஸாஸ் வங்கிக் கொள்ளை முயற்சி எதிர்பார்த்திராத ஒரு திருப்பத்தை எட்ட, விச்சிட்டாவில் பிரபலமான ஒருவனாக உருவாகிறான் நேட் கோல்ட்டன். அவன் வங்கிக் கணக்கின் வைப்புத் தொகையானது நீள்கொம்பன்கள்போல் கொழுக்க ஆரம்பிக்கிறது. இருப்பினும் ஷெரீப் சிலேட், அக்கால மேற்கின் யதார்த்தத்தை நேட்டிற்கு விளக்குகிறான். நேட்டை விச்சிட்டா நகரை விட்டு விரைவில் விலகிச் செல்ல கேட்டுக் கொள்கிறான் ஷெரீப் சிலேட். சட்டத்தின் காவலர்கள் சிலர் தமது சுயலாபத்திற்காக சமூகவிரோதிகளுடன் இணைந்து செயற்படுவது என்பது சாகசக் கதைகளில் தீமையின் பக்கத்தின் பலத்தை சட்டத்தின் துணைகொண்டு பலப்படுத்துவது போன்ற ஒரு நிலையை உருவாக்கும் அந்த நிலையை ஜான் வான் ஹாம் இங்கு உருவாக்கி வைக்கிறார்.

சிலேட்டின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால் விச்சிட்டா நகரை விட்டு விலகிச் செல்லும் நேட் கோல்ட்டன், அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் பண்ணை ஒன்றில் கால்நடை பாதுகாவலனாக வேலைக்கு சேர்ந்து கொள்கிறான். கால்நடை பண்ணையில் கால்நடை பாதுகாவலர்கள், கவ்பாய்கள், பண்ணை எடுபிடிகள் எனும் தொழில்ரீதியான அதிகார அடுக்கை ஒரு சில வரிகளில் கதை விளக்குகிறது. கால்நடை பாதுகாவலர்கள் கல்நெஞ்சம் கொண்ட கொலைஞர்கள் எனும் கருத்தே பண்ணையில் பணிபுரிபவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. கடும் குளிரிலும், பனியிலும், இரவு பகல் என வேறுபாடின்றி ஒரு நாள் ஓய்வுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் கால்நடை காவலர்களின் விதி. கால்நடை திருடர்கள் குறித்த சட்டங்கள் எளிதானது. யாராக இருந்தாலும் தயங்காது சுடலாம், கொல்லலாம் என்பதே அது. நேட் கோல்ட்டன் தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய முனைப்பில் வேதனையுடன் சில உயிர்பலிகளை நிகழ்த்துவதாக கதையில் கூறப்படுகிறது. மனிதர்களை கொல்ல அவன் விரும்புவதில்லை என்பதை கதாசிரியர் இங்கு காட்ட விழைகிறார். கதையின் மிக அருமையான கதை சொல்லல் இப்பகுதியில்தான் இடம்பெறுகிறது என்பது என் கருத்து. தக்க தருணம் ஒன்றிற்காக பண்ணையில் காத்திருக்கும் நேட் கோல்ட்டன் அத்தருணம் வாய்க்கையில் தன் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் ஆரம்பிக்கிறான்.

ஆனால் திட்டம் என்பது என்றும் வெற்றியில்தான் நிறைவுற்றிட வேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல என்பதை வான் ஹாம் தன் வழமையான கதைகளில் இருந்து இங்கு வேறுபடுத்திக் காட்ட முனைகிறார். ஆனால் நேட்டின் திட்டம் என்ன என்பது கதையில் புலனாக ஆரம்பிக்கும் தருணங்கள் சிறிய ஏமாற்றத்தை தரக்கூடியதாகவே இருக்கின்றன. இவ்வகையான திட்டங்களை தேர்ந்த வாசகன் ஒருவன் அது இட்டு வரக்கூடிய முடிவுடன் முன்கூட்டியே ஊகித்துவிட முடியும் என்பது இக்கதையின் பலவீனமான ஒரு அம்சமாகும். இருப்பினும் ஜான் வான் ஹாமின் பலவீனத்தை சரியாக்குவதற்கு என உருவாக்கப்பட்டவை போல இருக்கிறது ஒவியக் கலைஞர் ரொஸின்ஸ்கியின் அபாரமான தூரிகைச் சித்திரங்கள். கதைசொல்லலானது தனது ஆன்மாவை இழக்கும் வேளைகளில் எல்லாம் கதையை தாங்கிக் கொண்டு அதற்கு மேலதிக ஆன்மாவாக செயல்படுகின்றன ரொஸின்ஸ்கியின் சித்திரங்கள். இக்கதைக்கு ரொஸின்ஸ்கி தேர்வு செய்திருக்கும் வண்ணத்தேர்வு தனித்துவமான ஒன்று. நேட் கோல்டின் வாழ்கை இலையுதிர்கால காடு ஒன்றின் உதிர்தல் வாசனையை தன்னுள் கொண்டிருப்பதை போலவே ரொஸின்ஸ்கியின் ஓவியங்களும் நேட் கோல்டின் வாழ்க்கையின் வண்ணத்தை சித்திரங்கள் வழி சிறப்பாக உணர வைத்திருக்கின்றன. ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இக்கதையின் அத்தியாயங்களை எல்லைப்படுத்த உபயோகிக்கப்பட்டிருக்கும் ரொஸின்ஸ்கியின் தூரிகை ஓவியங்களின் அழகு அசர வைக்கிறது. ரொஸின்கியின் திறமை இங்கு ஜான் வான் ஹாமை காப்பாற்றியிருக்கிறது என ஒருவர் கூறினால் அது ஒரு மிகையான கூற்றே அல்ல.

கதையில் குறிப்பிட்டு சொல்லியாக வேண்டிய பாத்திரம் ஷெரீப் சிலேட். சிலேட் எவ்வகையான ஒரு கொடூரன் என்பதை அறிய கதையின் இறுதிப்பக்கத்தின் இறுதிக் கட்டம்வரை ஒருவர் சென்றாக வேண்டும். ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாத ஒரு அபாயமான விஷ ஜந்துபோல கதையில் சித்தரிக்கப்படுகிறான் சிலேட். வஞ்சம் என்பதன் அர்த்தம் எத்தகையது என்பதை அவன் வழியாக இங்கு வாசகர்கள் அறிந்து கொள்ளவியலும்.

தான் உண்மையில் அடைய விரும்புவது என்ன என்பதை நேட் கோல்ட்டன் உணர்ந்து கொள்ளும் சமயம், அது குறித்த அவன் உணர்வுகள் கதையில் ஆழமாகப் பதிவுசெய்யப்படவில்லை. இதனாலேயே அது குறித்த அவன் இழப்புக்களும் அதிக பாதிப்புக்களை வாசக மனங்களில் உண்டாக்க தவறிவிடுகிறது. கதையின் நீளம் போதாமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இங்கு இருப்பதை நான் சுட்டிக் காட்டியாக வேண்டும். நேட் கோல்ட்டன் தனக்குரித்தான எதையுமே தனதாக்கி கொள்வதில்லை, அவன் காதலும் சரி பெண்கள் ஸ்பரிசம் மீது அவன் கொண்ட உணர்வும் சரி குதிரைகளின் காலடிகளில் மிதிபட்டுப் போய்விடுகிறது. வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களின் உள்ளத்தில் நேட் கோல்ட்டனின் வாழ்க்கை ஒரு துன்பமிகு வரியாக மறைந்திருக்ககூடும்.


Thursday, May 17, 2012

சிலுவை சுமக்கும் சிறுவர்கள்

தன் பெற்றோர்களின் அகால மரணத்தின் பின்பாக சூவீடனின் கரையோரச் சிற்றூரான Fjallbacka எனும் தன் பிறந்த ஊரிற்கு திரும்பி வருகிறாள் எரிக்கா. பெற்றோர்களின் இழப்பு தந்த வேதனை ஆறாத நிலையில், பனிக்காலத்தின் கடும் குளிரினூடு சுயசரிதை நூல் ஒன்றை எழுத முயற்சித்து கொண்டிருக்கும் எரிக்காவை அவள் முன்னாள் தோழியான அலெக்ஸாண்ட்ராவின் மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது......

ஸ்கண்டினேவிய குற்றப்புனை எழுத்துக்கள், அவை விபரிக்க வரும் குற்றங்களை சற்றுத் தாண்டிச் சென்று அக்குற்றங்கள் நிகழும் சமூகம், சூழல், காலநிலை, கதைமாந்தர்கள், அவர்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள், உளவியல் என மேலும் பல விடயங்களையும் தம் கதைக்களத்தில் ஆழமாக வேர் ஓட விட்டிருக்கும் பண்பை கொண்டவைகளாகவே இருக்கின்றன. சூவீடனைச் சேர்ந்த கதாசிரியையான Camilla Lackberg அவர்களின் Ice Princess எனும் நாவலும் இப்பண்புகளை உள்ளடக்கிய ஒரு படைப்பாகவே இருக்கிறது. கதையின் முதல் மரணமானது அறிமுகமாகும் முன்பாகவே அம்மரணம் நிகழும் ஊர் குறித்த ஒரு சுருக்கமான பார்வையை தன் வரிகளில் கொணர்ந்துவிடுகிறது நாவல்.

மங்கலான சாம்பலங்கி அணிந்த வானம் எங்கே!
சூவீடனின் மேற்கு கரையோர ஊரான Fjallbacka பராம்பரியமாக மீன் பிடித்தலை பிரதான தொழிலாக கொண்டிருந்த ஒரு ஊராகவே இருந்து வந்திருக்கிறது. குளிர் அந்த ஊருடன் இணைந்த ஒரு அம்சம். வானம் மங்கலான சாம்பல் அங்கியை அணிந்து நிற்கும் நாட்கள் அங்கு ஏராளம். இங்கு Eilert Berg எனும் ஓய்வு பெற்ற மீனவன் வழியாக வசதியற்ற மீனவர்களின் வாழ்க்கையின் இன்றைய நிலையை கோடிட்டுக் காட்டுகிறார் கதாசிரியை. காலம் காலமாக கடினமாக உழைத்தாலும்கூட அவர்களிற்கு கிடைக்கும் ஓய்வூதியமானது ஜீவனம் நடத்த போதுமான ஒன்றாக இருப்பதில்லை எனும் சோகத்தை சுட்டிக் காட்டியபடியே, மீனவத் தொழிலை மட்டும் தனியே செய்வதன் மூலம் இன்றைய காலத்தில் வாழ்க்கையை கொண்டு செல்ல இயலாத நிலையில் வருந்தும் ஊரவர்களின் உள்மனத்தையும் கதை தன் வரிகளில் மெலிதாக விபரிக்கிறது. படிப்படியாக மீனவத் தொழில் ஒடுங்கி, மீனவர்களின் பழமை வாய்ந்த இல்லங்கள் வசதி படைத்த நகரத்தவர்கள் வசம் வந்து சேரும் மென்சோகத்தையும், தனது நிஜ அடையாளத்தை மெல்ல மெல்ல இழக்கும் Fjallbacka படிப்படியாக வசதி படைத்தவர்களின் வசந்தகால உல்லாச ஸ்தலமாக புது அடையாளம் பெறுவதையும், காலகாலமாக அங்கு வாழ்ந்திருந்த மீனவக் குடும்பங்கள் வேறிடங்கள் நோக்கி செல்வதையும் எரிக்கா எனும் பிராதன பாத்திரத்தின் ஏக்கம் கலந்த பார்வையுடன் கூறுகிறது நாவலின் ஆரம்ப பக்கங்கள். இங்கு கதாசிரியை கமிலா லாக்பெர்க் அவர்களின் சொந்த ஊரும் Fjallbacka என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். தன் கண்கள் முன் நிகழ்ந்தேறிய மாற்றங்களை கதைமாந்தர்களின் உணர்வுகள் வழி கதையின் வரிகளில் இங்கு நழுவச் செய்கிறார் கமிலா லாக்பெர்க். Fjallbacka ஊரவர்கள் பழமைவாதிகள் என்பதையும், அங்கு நிலவும் வர்க்க வேறுபாடுகளையும், புதிய தலைமுறைக்கும் அதன் முன்னையதற்கும் இடையிலுள்ள இடைவெளியையும், வித்தியாசங்களையும் நாவல் தன் கதையோட்டத்துடன் முன்வைத்திட தவறவில்லை.

எரிக்காவின் முன்னாள் நண்பியான அலெக்ஸ்ஸாண்ட்ராவின் மரணம் முதலில் தற்கொலை என்றே கருதப்படுகிறது. வம்பு பேசுவதில் ஆர்வமுள்ள ஊரவர்கள் இது குறித்து ஆர்வமாக பேசிக் கொள்கிறார்கள். அலெக்ஸின் மரணம் தற்கொலை அல்ல அது ஒரு கொலை என்பது ஊர்ஜிதமாகும் நிலையில் சிறிய குற்றச் செயல்களிற்கு பழக்கப்பட்டிருந்த Fjallbacka ஊர் சற்று பரபரப்பானதாகவே ஆகிவிடுகிறது. ஊர் மட்டுமல்ல அப்பகுதி காவல் நிலையமும் தன் வழமையான வேகத்தை விடுத்து புது வேகம் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. ஒரு சிற்றூரின் காவல்நிலையத்தின் மெத்தனப் போக்கை கிண்டலுடன் கதை வாசகர்களிடம் இங்கு எடுத்து வருகிறது.

அலெக்ஸின் மரணத்தின் பின்பாக, எரிக்கா பல வருடங்களிற்கு முன்பாக அவளுடன் கொண்ட நட்பும், அந்த நட்பின் முறிவால் அவள் அடைந்த வேதனையான அனுபவங்களும் கதையில் இடம்பிடிக்கின்றன. தன் பெற்றோர்களின் மரணத்தை எரிக்கா ஏற்றுக் கொள்ளும் விதம், குறித்த கெடுவிற்குள் சுயசரிதை நூலை எழுதி முடிக்க இயலாமை தரும் அழுத்தங்கள், தன் சகோதரியான ஆனாவுடனான உறவில் ஏற்பட ஆரம்பிக்கும் விரிசல், பிரம்மச்சாரியாக தன் வாழ்கையை தனியே முடிக்க வேண்டுமா என எரிக்கா கொள்ளும் நியாயமான அச்சம் என அவளை சுற்றி கதை தன்னைப் பின்னிக் கொள்கிறது. இவை யாவற்றிலுமிருந்து தப்பிச் செல்லும் வழியாகவே அலெக்ஸின் மரணத்தின் பின்பாகவுள்ள சில ரகசியங்களை அறிந்து கொள்வதற்கு தைரியமாக தேடல்களில் இறங்குகிறாள் எரிக்கா. அலெக்ஸ் குறித்த ஒரு நாவலை எழுத வேண்டும் எனும் ஒரு சுயநலம் இதில் அடங்கியிருந்தாலும் தன் செயல்கள் குறித்து அதிகம் சுயவிசாரணை செய்து இது தவறு, இது நியாயமானது என தீர்வு காணும் ஒரு பாத்திரமாகவே எரிக்கா நாவலில் காணப்படுகிறாள். முப்பதுகளின் மத்தியில் உள்ள ஒரு பிரம்மச்சாரி பெண்ணின் ஏக்கங்களை நாவல் எங்கும் அள்ளி வீசியிருக்கிறார் கமிலா லாக்பெர்க். ஒரு பெண்ணால் அழகாக ஒரு பெண்ணின் ஏக்கங்களையும், அவள் மனக்கோலங்களின் ரகசிய குரலையும் எளிதாக எழுதிவிட முடிகிறது என்பது உண்மைதான்.

ஒருவர் மீது நாம் கொண்டுள்ள அபிப்பிராயமானது நிரூபிக்கப்படும் தகவல்கள் மேல் கட்டப்படும் ஒன்றாகும். அலெக்ஸின் மரணத்தின் பின்பாக விசாரணைகளின் வழியாக வெளிவரும் தகவல்கள் அவள் உறவுகள் உருவாக்கி வைத்திருந்த அலெக்ஸின் அழகான பிம்பத்தை உடைக்க ஆரம்பிக்கின்றன. தனது செயல்கள் வழி சுதந்திரமான ஒரு பெண்ணாக இருந்திட்ட அலெக்ஸ், அச்சுதந்திரத்தின் வழியே தன் அன்பான உறவுகளையும் கண்ணீர் சிந்த வைக்கிறாள். அலெக்ஸின் கணவனான ஹெண்ட்ரிக் சிந்தும் கண்ணீர் உண்மையில் வேதனையானது. மனைவிக்கு துரோகம் இழைக்கும் கணவன், கணவனிற்கு தூரோகம் இழைக்கும் மனைவி என இரு பக்கத்தையும் சமமாக காட்ட கமிலா லாக்பெர்க் முயன்றாலும் கதையின் ஓட்டத்தில் ஆண்கள் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுவதை தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. சில ஆண்களின் பாத்திரத்தை பெண்கள் மெச்சத்தகும் விதமாக கமிலா உருவாக்கினாலும்கூட மொத்த வாசிப்பில் ஆண்கள் மீதே எதிர்மறையான ஒரு நிழல் வந்து வீழ்கிறது. கமிலா லாக்பெர்க் பெண் வாசகிகளை குறி வைத்து எழுதினாரா இல்லை சுவீடிய சமூகத்தில் ஆண்கள் மோசமானவர்களாகவே இருக்கிறார்களா என்பதுதான் இங்கு எழும் கேள்வி. ஆக உலகம் முழுக்க ஆண் சமூகமே மோசமான ஒன்றுதான் என பெண்கள் தீர்மானம் எடுத்தால் அதில் கமிலா லாக்பெர்க்கின் பங்கும் சிறிது உண்டு என்பதை அவரிற்கு நான் நேரடியாக எடுத்து சொல்ல விரும்புகிறேன் [ பார்க்க போட்டோ]

பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைக்கு எடுத்துக்காட்டாக நாவலில் உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரம் எரிக்காவின் தங்கையான ஆனா. தொடர்ச்சியான வன்முறைக்கு அவள் கணவனால் உள்ளாக்கப்படும் ஆனா, அவ்வன்முறையை வலிகொண்ட மெளனத்துடன் சகித்து கொண்டு தன் கணவன் லூக்காஸின் மனம் கோணாதபடி நடந்து கொள்ள சிரத்தையுடன் செயல்படும் ஒரு பெண். மேலும் தன் இரு குழந்தைகள் மற்றும் குடும்பக் கடமைகள் யாவற்றையும் தானே தனியே சுமந்திடும் ஒரு பரிதாபமான மனைவி மற்றும் தாய். பெண்கள் மீதான காரணமற்ற வன்முறையின் மொத்த வடிவமாக லூக்காஸ் பாத்திரம் திகழ்கிறது. அதே போலவே வன்முறை என்பதன் இலக்கு எக்கணத்திலும் எதன்மீதும் தாவலாம் என்பதையும் லூக்காஸ் பாத்திரம் மூலம் வாசகர்களிடம் எடுத்து வருகிறார் கதாசிரியை. வன்முறை செய்யும் ஆண்களுடன் இணைந்து இருக்காதீர்கள் என உரத்த குரலில் கமிலா நாவலில் செய்யும் பிரச்சாரம் சூவீடியப் பெண்களிற்கு மட்டுமல்ல உலகெங்கும் அவர் நாவல் மொழிபெயர்க்கப்பட்ட தேசங்களில் உள்ள பெண்களிடமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது மறுக்க இயலாத ஒன்று.

பெற்றோர்களிற்கும் பிள்ளைகளிற்குமிடையிலான உறவு என்பதும் கமிலா லாக்பெர்க் தன் நாவலில் ஆழமாக சித்தரித்திருக்கும் மற்றுமொரு அம்சமாகும். நாவலில் பெரும்பாலான பாத்திரங்கள் அவர்களின் பெற்றோர்களுடன் சுமூகமான உறவைக் கொண்டிருப்பதில்லை. எரிக்கா, அலெக்ஸின் தங்கையாக அறிமுகமாகும் யூலியா, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போன ஓவியனான நீல்ஸ், Fjallbacka ன் வசதி படைத்த குடும்பத்தில் அங்கம் வகிக்கும் ஜான் ஆகிய பாத்திரங்கள் தம் பெற்றோர்களை வெறுப்பதற்கு தகுந்த காரணங்களை தம் வாழ்க்கையில் கொண்டிருக்கவே செய்கின்றன. இந்த வெறுப்பை இத்தருணத்தில் கமிலா லாக்பெர்க் தன் நாவலின் மிக முக்கியமான ஒரு விடயமாக காட்ட விரும்பிய சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளலாம். எவ்வாறு சில தலைமுறை இடைவெளிக்குள் சிறுவர்கள் மீது ஒழுக்கத்திற்காக பிரயோகிக்கப்பட்ட தண்டனைகள் இன்று சாடிஸமாக கருதப்படக்கூடிய அளவு மனித குலம் தன் கண்களை திறந்திருக்கிறது என்பதை தெளிவாக்குகிறார் கமிலா லாக்பெர்க். எம் பள்ளிகளில் பரீட்சைகளில் புள்ளி குறைந்தால்கூட எம்மைக் கண்டபடி போட்டுத்தாக்கிய ஆசிரியர்கள் சாடிஸ்ட்களா இல்லை குருக்களா எனும் கேள்வி இங்கு எழாமலில்லை. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறார்கள் தம் வாழ்வில் சுமந்து வரும் சிலுவைகளின் பாரம் எத்தகையதாக இருக்ககூடும் என்பதை கதாசிரியை நாவலில் சிறப்பாக கொண்டு வருகிறார். வன்முறைக்குள்ளான சிறுவர்கள் அதே வன்முறையின் வடிவாகவும் அவதாரம் கொள்வதையும் உறைய வைக்கும் விதத்தில் நாவலில் காட்டுகிறார் அவர். தம் குடும்பத்தின் நலன் எனும் பெயரால் தம் குழந்தைகளின் வாழ்க்கையை அழித்துவிடும் பெற்றோர்களையே கமிலா லாக்பெர்க் இங்கு பிரதான குற்றவாளிகளாக காட்ட விழைகிறார். அதனாலேயே நாவலின் மர்ம முடிச்சுக்கள் சிலவற்றை வாசகன் ஒருவனால் முன்னமே ஊகிக்க கூடியதாக இருந்தாலும் கதை சலிப்பில்லாது நகர முடிகிறது. அது மட்டுமல்லாது வாசகனை ஒரு மர்மத்தை சரியாக ஊகிக்க வைப்பதன் மூலம் மிக முக்கியமான ஒரு மர்மத்தை சிறப்பாக நாவலின் இறுதித் தருணம் வரை வாசகர்களிடமிருந்து மறைத்து விடுகிறார் கமிலா.

சில வாசகர்களின் கனிவான பார்வைக்காக
அலெக்ஸின் கொலை விசாரணையை எடுத்து செல்லும் ஒரு காவல் அதிகாரியாக நாவலில் பற்ரிக் இருக்கிறான். எரிக்காவும், பற்ரிக்கும் காதல் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் அவர்கள் வயதிற்குரிய பதட்டங்களுடன் சிறப்பாக சொல்லப்படுகிறது. எரிக்கா தான் அறியும் தகவல்களை பற்ரிக்குடன் பரிமாறிக் கொள்கிறாள். பற்ரிக், தன் பிரியமானவளுடன் கொலை குறித்த தன் விசாரணை விபரங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த ஜோடிகளின் உறவுதான் அலெக்ஸ் கொலை மர்மம் விடுபட முக்கியமான ஒரு காரணியாக கதையில் காணப்படுகிறது. பற்ரிக் பணிபுரியும் காவல் நிலையம் வழியாக சுவீடிய காவல்துறையில் காணப்படும் எதேச்சதிகாரம், சோம்பல்தனம், ஆட்பற்றாக்குறை, போதிய சம்பளமின்மை எனும் விடயங்கள் நகைச்சுவையுடன் அலசப்படுகின்றன. கொலை விசாரணையை விட நாவலில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும், அப்பாத்திரங்களை தன் எழுத்துக்களால் படிப்பவர்களை நெருங்க வைத்துவிடும் திறனும் கமிலா லாக்பெர்க் நாவலின் மிக முக்கியமான அம்சமாகும். கதையில் வரும் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தால்கூட ஒரு ஒரு சில வரிகளில் அப்பாத்திரத்தின் வாழ்க்கையை கூறி வாசகனை நெகிழவோ, அதிரவோ வைத்துவிடுகிறார் கமிலா. ஒரு கொலை ஸ்தலத்தின் குரூரத்தை நம்பவியலா அழகியலுடன் எடுத்து வருவது அவரின் எழுத்துக்களின் சிறப்பம்சம் எனலாம். கதைசொல்லலானது பாத்திரம் விட்டு பாத்திரம் தாவி முன்னகர்ந்து செல்லும் விதமும் இந்நாவலில் நன்றாக வந்திருக்கிறது. Fjallbacka ல் நிலவும் காலநிலையை கதை நெடுகிலும் அழகாக வர்ணித்து கதை நிகழும் ஸ்தலத்தில் இருப்பதுபோல உணரச் செய்கின்றன கமிலாவின் எழுத்துக்கள். காலநிலையுடன் சம்பந்தம் கொண்ட ஒரு விடயமே கதையின் மிக முக்கியமான ஒரு திருப்பத்தை எடுத்து வருவதாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மிக மென்மையான வார்த்தைகளை கோர்த்து, அழகு செறிந்த எளிமையான கதை சொல்லலால் கமிலா லாக்பெர்க் வழங்கியிருக்கும் இந்நாவல் கொலை ஒன்று பரபரப்பான விசாரணையாலும் அதிரடியான நடவடிக்கைகளாலும் நாயகத்தனங்களாலும் அணுகப்படும் வழமையான முறையை வேறுபடுத்திக் காட்டுவதில் அருமையான வெற்றி பெறுகிறது.

Sunday, May 13, 2012

இருண்ட நிழல்கள்

அஞ்செலிக்கா எனும் சூன்யக்காரியின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பார்னபாஸ் காலின்ஸ், சூன்யக்காரியின் சாபத்தினாலும், சதியாலும் ஒரு ரத்தக் காட்டேரியாக மாற்றம் பெற்று ஊர் மக்களால் உயிருடன் புதைக்கப்படுகிறான்.. ஏறக்குறைய இருநூறு வருடங்களிற்கு பின் தன் சிறையிலிருந்து விடுதலை பெறும் பார்னபாஸ், தான் ஒரு புதிய யுகத்தில் இருப்பதையும் தன் சந்ததிகள் அவர்களின் முன்னைய செல்வாக்கை கொடிய சூன்யக்காரியான அஞ்செலிக்காவிடம் இழந்து விட்டிருப்பதையும் கண்டு கொள்கிறான். இழந்த தன் காலின்ஸ் குடும்ப கவுரவத்தையும், செல்வத்தையும் மீட்டெடுக்கும் முடிவிற்கும் பார்னபாஸ் வருகிறான்.....

மீண்டும் பர்ட்டன், டெப் கூட்டணி, நகைச்சுவை அதிகம் இழையோடிய ட்ரெய்லர், போதாக்குறைக்கு காட்டேரி, அதுவும் டெப் காட்டேரி! டிம் பர்ட்டனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Dark Shadows திரைப்படத்திற்கான என் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இந்த வரிகளில் அடங்கிவிட்டது என்றால் அதை யார்தான் நம்பப் போகிறீர்கள். கூடவே அழகான செக்ஸியான திரண்ட பல செளந்தர்ய லாவண்யங்களை கொண்ட சுந்தரி Eva Green ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது என் எதிர்பார்ப்புகள் எல்லாம் இந்த வரிகளிற்குள் அடங்கி விட்டிருக்கும்.

படத்தின் ஆரம்பகாட்சிகள் எவ்வாறு காலின்ஸ் குடும்பம் அமெரிக்காவில் குடியேறி ஒரு செல்வாக்கான நிலையை எட்டியது என்பதையும், அவர்களின் வாரிசான பார்னபாஸ் காலின்ஸ் மேல் காதல் கொண்ட ஒரு சூன்யக்காரி எவ்வாறு அக்குடும்பத்தை நாசம் செய்கிறாள் என்பதையும் சில நிமிடங்களில் திரையில் காட்சிகளாக விரிக்கிறது. வழமை போலவே பர்டனிற்கு இஷ்டமான, இலைகளை தொலைத்த மரங்கள் தங்கள் கிளைகளை சுருள் கரங்களாக சுருட்டிக் கொண்டு இருளான ஒளிப்பதிவில் புகாருடன் ரசிகர்களை மிரட்ட முயற்சிக்க ட்ராகுலா இசை பயத்தை கடல் அலைகளின் நுரைக்குமிழிகளில் கரைக்கிறது. அடடா என்ன ஒரு விருந்துக்கு வந்து விட்டோம் என எம் மனம் உவகையில் புரள ஆரம்பிக்கிறது.

இருநூறு ஆண்டுகள் கழித்து காலின்ஸ் குடும்பம் பார்வையாளர்களிற்கு அறிமுகமாகும் போதும் ஒவ்வொரு பாத்திரங்களினதும் அறிமுகம் அப்பாத்திரங்கள் மீதான ஆர்வத்தை உருக்கொள்ள செய்கிறது. 1972 களில் சற்று வசதியற்ற ஒரு செல்வந்த குடும்பத்தை ஒரு தூசு பிடித்த மாடமாளிகையில் அவர்களின் குடும்ப செருக்கு குறையாத நிலையில் காட்சிப்படுத்துகிறார் டிம் பர்ட்டன். மிக நீண்ட நாட்களிற்கு பின்பாக திரையில் காட்சிக்கு வரும் முன்னாள் பிரபல நடிகை மிச்செல் பெய்ஃபெர் காலின்ஸ் குடும்பத்தின் தலைவியாக அறிமுகமாகிறார். மிகவும் எதிர்பார்க்க செய்த பாத்திரம் அவருடையது. அதற்கேற்ப ஆரம்ப காட்சிகளில் சிறப்பாகவும் செய்திருக்கிறார் நடிகை மிச்செல் பெய்ஃபெர். மர்மமான பின்னணியுடன் காலின்ஸ் வீட்டிற்கு பணிபுரிய வரும் பெண்ணான விக்டோரியா, தன் தாயின் ஆவியுடன் உரையாடுபவன் என்பதால் கிறுக்கனாக கருதப்படும் சிறுவன் டேவிட், அவனை குணமாக்க வந்து பின் காலின்ஸ் மாளிகையிலேயே தங்கிவிடும் மருத்துவரும் மதுப்பிரியருமான ஜூலியா என ஆர்வத்தை மிக கண்டிப்பாக தூண்டும் பாத்திரங்கள் எண்ணிக்கை திரைப்படத்தின் ஆரம்பத்தில் குறைவே இல்லாத அம்சங்கள்.

போஸ்டு போட்டவன போட்டு தள்ளிடனும்!!!
இது போதாது என்று தன் பிரேதப் பெட்டி சிறையிலிருந்து விடுதலை பெற்று புதிய உலகிற்குள் வரும் காட்டேரி பார்னபாஸ்!! விடுதலை பெற்ற வேகத்தில் விடுதலை செய்தவர்களை ஒன்றுவிடாது உறிஞ்சிதள்ளிவிட்டு மனிதர் தன் வழமையான பாணியில் கலக்க ஆரம்பிப்பார். அவரிற்கேயுரிய அந்தச் செல்ல நடையுடன் கையில் கோலுடன் தார் வீதியில் அவர் நடைபழகும் அழகே அழகு. விளம்பரம் செய்ய பணமும் தந்து அதற்கு பதிலாக செம கிண்டலை வாங்கும் நற்குணம் McDonalds க்கு உள்ளது என்பதை பர்ட்டன் நிரூபித்திருக்கிறார். டெப் மக்டோனால்ட்டின் M ஐ பார்த்து சொல்லும் ஒரு சொல் போதும் அது எவ்வகையான நகைச்சுவை என்பதை விளங்கி கொள்ள.

ஒரு புதிய யுகத்தில், தன்னைப் பொருத்திக் கொள்ள இயலா ஒரு சமூகத்தில் தன் குடும்பத்தை மீண்டும் செல்வாக்கான நிலைக்கு இட்டு வரும் போராட்டத்தில் சவாலுடன் குதிக்கும் பார்னாபாஸ் ரசிகர்கள் ஆர்வத்தில் அவல் போடுகிறார். அவர் காலின்ஸ் குடும்பத்தில் வந்து அறிமுகம் செய்து கொள்ளும் காட்சிகளும் அதைப் பின் தொடரும் காட்சிகளும் சிரிக்கவே வைக்கின்றன. பார்னபாஸின் விடுதலையை அறியும் சூன்யக்காரி அஞ்செலிக்காவும் பார்னபாஸை வந்து சந்தித்து மோதலா காதலா என முட்டிப் பார்க்கையிலும் இன்னொரு பிடி அவல் வந்து விழுகிறது. ஆனால், ஆனால்,....... துரதிஷ்ர்ட வசமாக இந்த அவல்களுடன் மட்டுமே எல்லாம் நிறைவு பெற்று விடுகிறது.

மிகையான எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தொடரும் காட்சிகள் வழியே சுக்கு நூறாக்கப்படுகின்றன . ஆரம்பத்தில் சிரிக்க வைத்த காட்சிகளில் சிரித்த ரசிகர்கள் சலிப்பின் எல்லைக்கு செல்லும் வகையில் இருக்கிறது தொடரும் காட்சிகள். பார்னபாஸ் முடங்கிய தன் குடும்ப வியாபாரத்தை ஆரம்பிப்பது ஆகட்டும், மனிதனாக ஆகிட டாக்டர் ஜூலியாவின் துணையுடன் முயற்சிப்பது ஆகட்டும், சூன்யக்காரியுடன் சல்லாபமாடி தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகட்டும் எதுவுமே முன்பு உருவாக்கப்பட்ட ஆர்வத்திற்கு தீனி போடவில்லை. அதுவும் டாக்டர் ஜூலியாவாக வீணடிக்கப்பட்டிருப்பவர் நடிகை ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர். பர்ட்டன் இதிலுமா உங்கள் நகைச்சுவையை நீங்கள் காட்ட வேண்டும். ஆரம்பக் காட்சிகளில் மப்புக் குலையா மயக்கத்துடன் அமைப்பற்ற உடலுடன் ஹெலனா உணவருந்தும் மேசைக்கு வந்தமரும் காட்சியில் இருந்த நளினம் அழகு எல்லாம் பின்னால் பணால் பணால். போதாக் குறைக்கு தொப்பியும் குளிர்கண்ணாடியும் அணிந்த பார்னபாஸ் தூரத்தில் இருந்து பார்க்கையில் மைக்கேல் ஜாக்சன் போல் இருக்கிறார்.

கதை உருவாக்கத்தில் பங்கேற்பு, திரைக்கதை ஆகியன செத் கிராஹாம் க்ரீன் என திரையில் வீழ்ந்தபோது, அடடா இவர் அதற்குள் இப்படி வளர்ந்து விட்டாரே என ஆச்சர்யம் உருவானது. ஆனால் மனிதர் கதையையும், திரைக்கதையையும் சொதப்பி பாத்திரங்களை வீணடித்து அவர்களின் மதிப்புக்களை இழக்க வைத்து அவர்களை ஏறக்குறைய பிணங்கள் போல் ஆக்கி விடுகிறார். தாடி வெச்ச டேஞ்சர் மாமா நாவலை எழுதிய புண்யவான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். பார்னபாஸின் காதல், சவால், குடும்பம் என அனைத்துமே பிச்சைப்பாத்திரத்தில் கடைசியாக வந்து சேரும் தானங்கள் போல் ஒரு நிலையை எட்டி விடுவது பரிதாபமான ஒன்று.

எவா க்ரீனையாவது எதையாவது காட்ட விட்டார்களா என்றால் அதுவும் இல்லை!!! எவா அழகான சூன்யக்காரி, செக்ஸி பேபி ஒத்துக் கொள்கிறேன் அதற்காக திரைப்படம் நெடுகிலும் அவர் கண்களை மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன. அதிலும் காட்டேரிக்கும், சூன்யக்காரிக்கும் இடையில் வரும் சல்லாபக் காட்சியை IKEA உரிமையாளர் மட்டுமே ரசிக்க முடியும். அவ்வளவு தளபாட சேதம். அதில் சிருங்காரமும் இல்லை, நகைச்சுவையும் இல்லை.

வழமையாக தான் இயக்கும் படங்களில் ஒரு சிறப்பான அழகியலை தக்க வைத்துக் கொள்வார் பர்ட்டன். இதில் அதுவும் இல்லை. 1972 களில் இத்திரைப்படம் வெளிவந்திருந்தால் ரசிகர்கள் சுமாராக ரசித்திருக்ககூடிய வகையில் அமைந்திருக்கின்றன இத்திரைப்படத்தின் வரைகலைநுட்ப காட்சிகள். இறுதியில் கதை இயக்கம் நடிப்பு என எல்லாம் போய் வரைகலைக்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றன. டிம் பர்ட்டன் இயக்கியதா இப்படம் எனும் கேள்வி எழுவதை தடுக்கவே இயலவில்லை. போதாக்குறைக்கு படத்தின் இறுதியில் ஒரு தூண்டில் திருப்பம் வேறு. சிக்கல் என்னவெனில் தூண்டில் இரையுடன் வீழ்ந்திருக்க வேண்டிய இடத்தில் பர்ட்டனின் திரைப்படம் வீழ்ந்துவிட்டது என்பதுதான். டிம் பர்டன் மோசமான திரைப்படங்களை தந்திருக்கலாம் இருப்பினும் டெப்பும் அவரும் இணைந்த இத்திரைப்படம் இவ்வளவு மோசமான ஒரு அனுபவமாக அமையும் என எந்த இருளின் நிழலும் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் ஏற்றுக் கொண்டிருக்கவே செய்யாது. திரையரங்கை விட்டு பல இருண்ட நிழல்கள் வெளியேறின என்பது ஒரு மிகையான கூற்றே அல்ல!! [*]

காப்பிரைட்.... இலுமி [ தாடி வெச்ச டேஞ்சர் மாமா]


ட்ரெய்லர்








Thursday, April 12, 2012

மார்சுபிலாமியின் தடத்தில்

V8 தொலைக்காட்சியின் செய்தியாளனான Dan Geraldo [Alain Chabat], பலோம்பியா தேசத்தின் பூர்வகுடிகளான பாயாக்கள் குறித்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக அங்கு பயணமாகிறான். டான் ஜெரால்டோவின் வழிகாட்டியாக பலோம்பியாவை சேர்ந்த Pablito Camaron [Jamel Debbouze] சேவைக்கு அமர்த்தப்படுகிறான்.....

André Franquin எனும் பெல்ஜிய காமிக்ஸ் கலைஞரின் கற்பனையில் உதித்த ஒரு விசித்திர விலங்கே மார்சுபிலாமி. 1952ல் தனது Spirou et Fantasio காமிக்ஸ் தொடரின் கதையான Spirou et les Hèritiers ல் ஆண்ட்ரே பிராங்கான் இவ்விலங்கை அறிமுகம் செய்து வைத்தார். மனிதன், குரங்கு, கங்காரு, சிறுத்தை ஆகியவற்றின் இயல்புகளும், நீண்ட வாலும், அதீத பலமும் கொண்டது இந்த மார்சுபிலாமி. குறும்புகள் செய்வதில் நாட்டம் கொண்ட விலங்கிது. மார்சுபிலாமியின் வாலானது பல காரியங்களை ஆற்றக்கூடிய இயல்பைக் கொண்டது. மீன் பிடிக்க, மரக்கிளைகளில் தொங்கியபடி தாவ, எதிராளிகள் முகத்தில் குத்த, அரிய வகை ஆர்க்கிட்டுகளை கொய்ய, காதலியின் அழகான கன்னத்தை வருட என  மார்சுபிலாமியின் வால் பல செயல்களை ஆற்றிட அவ்விலங்கிற்கு உதவிடும்.

ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோ தொடரில் பணியாற்றுவதை பிராங்கன் நிறுத்திக் கொண்டதன் பின்பாக 1987களில் மார்சுபிலாமியை பிரதான பாத்திரமாக கொண்ட காமிக்ஸ் கதை தொடர்கள் வெளியாக ஆரம்பித்தன. அத்தொடர்களில் மார்சுபிலாமியை வரையும் பொறுப்பை பிராங்கான் தானே ஏற்றுக் கொண்டார். முதல் ஆல்பமான la Queue du Marsupilami வெளியாகி 6 லட்சம் ஆல்பங்கள் விற்று சாதனை படைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மார்சுபிலாமியின் முதலிரு ஆல்பங்களில் பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே அறிமுகமாகிய காமிக்ஸ் கலைஞர் கிரெக் கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார். எந்த காமிக்ஸ் தொடரில் மார்சுபிலாமி அறிமுகமானதோ அந்தக் காமிக்ஸ் தொடரான ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோவில் இன்று மார்சுபிலாமி தலை காட்டாதவாறு அதன் தற்போதைய உரிமையாளர்களான Marsu Prouductions கடினமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காமிக்ஸ் வடிவம் பெற்ற வரவேற்பையடுத்து தொலைக்காட்சியில் அனிமேஷன் தொடராகவும் மார்சுபிலாமி உருவானது. 2005ம் ஆண்டில் பிரெஞ்சு இயக்குனர் ஆலன் ஷபா, மார்சுபிலாமியை மையமாக கொண்ட ஒரு திரைப்படைத்தை உருவாக்க வேண்டும் எனும் தன் திட்டத்தை ஆரம்பித்தார். அத்திட்டம் முழுமையான ஒரு படைப்பாக திரையை எட்ட ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

marsupilami-tome-1-la-queueSpirouEtFantasio4_13082006இத்திரைப்படத்தின் கதைக்காக ஆலன் ஷபா இதுவரை வெளியாகிய மார்சுபிலாமியின் எந்த ஒரு காமிக்ஸ் கதையையும் நாடிச்செல்லாது, ஜெரெமி டொனெர் என்பவருடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். ஆலன் ஷபாவின் அட்டகாசமான அபத்தக் காமெடி திரைப்படம் முழுதும் நிரம்பி இருந்தாலும் அதனை அனைத்து வயதினரும் களிப்புடன் ரசிக்க வைப்பதில் அவர் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். திரையரங்கில் ஒலித்திடும் ஓயாத சிரிப்பலைகள் அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு கிடைத்த கைதட்டல்கள் ஆகும். டான் ஜெரால்டோ வழங்கிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்வதில்லை என்பதினால் தொலைக்காட்சி நிர்வாகம் பலோம்பியா சென்று ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும் இறுதியான வாய்ப்பை அவனிற்கு அளிக்கிறது. எந்த வழியிலாவது பலோம்பியாவில் அந்நிகழ்சியை பதிவு செய்து ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம் டான் ஜெரால்டிற்கு. தொலைக்காட்சி நிர்வாகியின் வார்த்தைகளில் சொல்வதானால் நிகழ்ச்சி பெட்டிக்குள் இல்லையெனில் நீ உன் பெட்டியைக் கட்டவேண்டியிருக்கும் என்பதாக இருக்கிறது. எனவே டான் ஜெரல்டோ பெட்டியுடன் பலோம்பியாவிற்கு கிளம்ப வேண்டியதாகவிருக்கிறது.

பவ்லிட்டோ கமொரொன் ஒரு போலி மிருக வைத்தியன். அனாதைகளாக கைவிடப்பட்ட குழந்தைகளை தன் பராமரிப்பில் எடுத்து வளர்த்து வருபவன். சொல்லிக் கொள்ளும்படியான வசதிகள் ஏதும் அவனிடம் இல்லை. உல்லாசப் பிராயணிகளின் இரக்க குணத்தை பயன்படுத்தி காசு சம்பாதித்து தன் வளர்ப்பு குழந்தைகளின் வயிற்றை நிரப்பிட அவன் தயங்குவதில்லை. அவன் வாங்கிய ஒரு கடனிற்காக குண்டர்கள் குழுவொன்று அவனை ஓயாது மிரட்டி கெடுவையும் விதித்து, ஒரு வண்ணக்கிளியை பணயக்கைதியாகவும் எடுத்து சென்று விடுகிறது. இந்நிலையில் அக்கிளி தன்னைச் சுற்றி நிற்கும் குழந்தைகளையும் பவ்லிட்டோவையும் கழுத்தை தூக்கி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே என்னை ஏன் பாஸ் பிடிக்கிறீங்க என்று குண்டர்களிடம் பரிதாபமாக கேட்கும் பாருங்கள் அதுதான் ஆலன் ஷபா முத்திரை.... ஆகவே குறித்த தொகைப் பணத்தை குண்டர்கள் விதித்த கெடுவிற்குள் தேடியாக வேண்டிய இக்கட்டான நிலை பவ்லிட்டோவிற்கு.

ஆக இரு இக்கட்டான நிலைகளில் உள்ள இரு வேறுபட்ட கலாச்சார அடையாளங்களை கொண்ட இரு மனிதர்களை சந்திக்க செய்வதன் வழி அம்மனிதர்களின் ஆளுமைகளினதும், அடையாளங்களினதும் எதிர்கொள்ளலை தனக்கே உரிய அபத்த நகைச்சுவையைக் கலந்து திரையில் பரிமாறியிருக்கிறார் இயக்குனர். வண்ணக்கிளி உயிருக்கு போராடுவது போல் நடிக்க, அதற்கு சிகிச்சை வழங்கும் ஆரம்பக் காட்சியிலேயே பவ்லிட்டோவாக பாத்திரமேற்றிருக்கும் நடிகரான ஜமெல் டுபுஸ் சிரிக்க வைத்துவிடுகிறார். வழமையாக தன் எல்லைக்கு மீறிய சேஷ்டைகளாலும், கோமாளித்தனங்களாலும் என்னை எரிச்சலின் எல்லைக்கு இட்டு செல்லும் ஜமெலை இவ்வளவு ரசித்தேன் என்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று. தன் வழமையான கூத்துகளை அடக்கிவிட்டு சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். தொலைக்காட்சி செய்தியாளார் டான் ஜெரால்டோவாக வேடமேற்றிருக்கும் இயக்குனர் ஆலன் ஷபா தன் வழமையான சோம்பல் பூத்த நடிப்பாலும் உடல்மொழியாலும் தன் பாத்திரத்தை சிறப்பித்திருக்கிறார்.

sur-la-piste-du-marsupilami-2012-21694-462239602பலோம்பியாவின் பாயா பூர்வகுடிகளை சந்திக்க செல்லும் இருவரும் எவ்வாறு உலகை ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பது மீதிக்கதை. இக்கதைக்குள் விசித்திர விலங்கு மார்சுபிலாமி, பாயா பூர்வகுடிகளின் தீர்க்கதரிசனம், நித்திய இளமைக்கான ஒளடத வேட்டை, பலோமியா நாட்டின் சர்வாதிகார அரசியல் என்பவற்றை கொணர்ந்து திரைப்படத்தின் முழுமையான அனுபவத்தின் வெளிக்காற்று கேளிக்கையும் களிப்புமான ஒன்றாக அமையும்படி திரைப்படம் உருவாக்கப்பட்டிருகிறது.

ஜெரால்டோ, பவ்லிட்டோ ஆகிய இருவருடனும் தொடர்பும், உறவும் கொண்டிருப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. ஜெரால்டோவிற்கும், பவ்லொட்டோவிற்குமிடையிலுமான உறவிலும் நம்பிக்கை இருப்பதில்லை. பாயாக்களின் கட்டுக்கதை என நம்பப்படும் விசித்திர விலங்கான மார்சுபிலாமியின் இருத்தலின் நிரூபணமே இந்த இரு மனிதர்கள் மீதும் உலகம் நம்பிக்கை கொள்ள வழிவகுக்கிறது, அவர்களிருவரிற்குமிடையில் நம்பிக்கை உருவாக துணைநிற்கிறது எனவே மார்சுபிலாமியை நம்பிக்கையின் பிறப்பிடமாக இயக்குனர் இங்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

திரையில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் முழுமையாக ரசிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆலன் ஷபா தன் இயக்கத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரபல பாடகி ஒன்றின் ரசிகராக வரும் பலோம்பியாவின் சர்வாதிகாரி பொஷெரோவாக வேடமேற்றிருக்கும் திறமையான நடிகர் லாம்பெர்ட் வில்சன் படத்தின் இறுதிப்பகுதியில் நிகழ்த்திடும் ஒரு காரியம் அபத்தத்தின் உச்சம் ஆனால் அரங்கம் வெடிச்சிரிப்பால் மூழ்குகிறது. தாவரவியலாளனாக வரும் இளம் நடிகர் ஃப்ரெட் டெட்சோவின் நடன அசைவு கலந்த நடிப்பு அப்பாத்திரத்திற்கு ஒரு புத்துயிர்ப்பை வழங்குகிறது. சாடிஸ்டான ராணுவ அதிகாரியாக வரும் பற்றிக் டிம்சிட்டின் முகபாவனைகள் சிரிக்க வேண்டாம் என இருந்தாலும் கிச்சு கிச்சு காட்டுகின்றன. மனிதர் மார்சுபிலாமியை சித்தரவதை செய்யும் காட்சி வன்முறைக்காமெடி.

sur-la-piste-du-marsupilami-2012-21694-143022500sur-la-piste-du-marsupilami-2012-21694-146796048மார்சுபிலாமி விலங்கை வரைகலை நுட்பம் மூலம் மிகவும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். பிரெஞ்சுக்கார பயபுள்ளைகளா இக்காட்சிகளை உருவாக்கினார்கள் எனும் நியாயமான சந்தேகம் இன்னமும் தீரவில்லை. பாயா பூர்வகுடிகளின் குகைக்குள் நடக்கும் கலாட்டா வண்ணமயம். பவ்லிட்டோவிற்கு பூர்வகுடிகளின் தலைவியின் வளர்ப்பு நாய் செய்திடும் ஒரு அநியாயம் திரையில் வருகையில் சிரிக்க இனொரு முகம் வேண்டியிருக்கிறது. இதேவேளையில் தன் அபத்த நகைச்சுவையால் பார்வையாளனை முட்டாள் என சுட்டுவதை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் இயக்குனர் ஆலன் ஷபா. அபத்தம் என்பது குறித்த பிரங்ஜை கொண்டவனாக பார்வையாளன் தன் நகைச்சுவையில் பங்கேற்கும் வண்ணமாகவே அவர் படைத்திருக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே அபத்தத்தை மேலும் ரசிப்பிற்குரிய ஒன்றாக மாற்றியமைக்கிறது.

அபத்த நகைச்சுவையோடு மட்டும் நின்றிடாது சூழியல் குறித்த சில கருத்துக்களையும் ஆலன் ஷபா திரையில் பேசுகிறார். ஆனால் நகைச்சுவையின் வீர்யத்தில் இவை ஒதுக்கி செல்லப்பட்டு விடுகின்றன. பிரபலமான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், ஸ்மார்ட் போன் என இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளாகிப் போன பொருட்கள் குறித்தும் ஆலன் ஷபா கிண்டல் செய்கிறார். தனது இளமைக்கும், அழகிற்காகவும் ஏனைய இனங்கள் குறித்தோ அல்லது இயற்கை குறித்தோ எந்த சலனமுமற்று மனிதகுலம் இயங்கிச் செல்லும் ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

திரைப்படம் ஆரம்பமானது முதல் பார்வையாளனை களிப்பின் பிடிக்குள் வைத்திருக்கும் அரிதான வகைத் திரைப்படங்களில் இது ஒன்று. அதேபோல் இறுதியில் திரையில் எழுத்துக்கள் ஓட ஆரம்பித்தாலும் ரசிகர்களை இருக்கைகளை விட்டு எழமுடியாது தன் குறும்புத்தனத்தை சில துணுக்கு காட்சிகள் வழி காட்டியிருக்கிறார் ஆலன் ஷபா. ஆலன் ஷபாவின் இப்படைப்பு ஒரு அபத்தக் கேளிக்கை பெட்டகம். அபத்தக் காமெடி ஆர்வலர்கள் திறப்பதற்கு தயக்கம் காட்டவே கூடாது.

பிரெஞ்சு ட்ரெய்லர்

Thursday, April 5, 2012

கோபால்ட் நீலப் பிரார்த்தனை

சான் பிரான்சிஸ்கோ நகரத் துப்பறிவாளன் ஸ்பேட் சாமுவேலை தேடிவரும் அழகிய நங்கையான வொண்டர்லி, நீயூயார்க்கிலிருந்து ப்லாய்ட் தர்ஸ்பி என்பவனுடன் கிளம்பி வந்துவிட்ட தன் தங்கையை அவனிடமிருந்து மீட்டு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறாள். தர்ஸ்பியை பின்தொடரச் செல்லும் ஸ்பேட்டின் சகாவான ஆர்ச்சர் மைல்ஸ் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறான்......

சிறந்த குற்றப்புனைவுகளை வரிசைப்படுத்தி இருக்கும் பட்டியல்களில் பெரும்பாலும் Dashiell Hammett எழுதிய The Maltese Falcon தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். Hard Boiled என வகைப்படுத்தக்கூடிய குற்றப் புனைவுகளின் பண்புகளை அறிமுகமாக்கிய ஆரம்பநிலை புனைவுகளில் ஒன்றாகவும், சிறந்த குற்றப்புனைவு எனவும் பெரிதும் பேசப்பட்டிருக்கும் இந்நாவலின் வாசிப்பனுபவம் பிரம்மிக்கதக்க வைக்கும் ஒன்றல்ல எனினும் நாவலின் பாதிப் பகுதி கடந்தபின் கதை தன்னுள் கொள்ளும் வேகமும், 1930 களில் எழுதப்பட்ட கதை இது என்பதை படிப்பவர் மனதில் கொண்டால் அதில் உருவாகும் வியப்புமே இந்நாவலின் வாசிப்பை மதிப்பிற்குரிய ஒன்றாக்குகிறது.

நாவலின் முதற்பாதியானது துப்பறிவாளன் ஸ்பேட் எனும் பாத்திரம் குறித்த ஆழமான ஒரு பிம்பத்தை படிப்பவர் மனதில் தெளிவாக வரைகிறது. நீதி, அறம், ஒழுக்கம் என்ற சமூக வரையறைகள் என்பவற்றை சற்றே தூக்கி அப்பால் வைத்து விட்டு தனக்கென உருவாக்கி கொண்ட நீதி அறம் ஒழுக்கத்துடன் இயங்குபவன் துப்பறிவாளன் ஸ்பேட். காவல் துறைக்கு அவன் நெருங்கிய நண்பன் அல்ல ஆனால் காவல்துறையை தன் பலன்களிற்கேற்ப அவன் பயன்படுத்திக் கொள்கிறான். தீயவர்கள் அவன் எதிரிகள் அல்ல எனவே அவர்களிடமிருந்தும் அவன் அதிக பலன்களை அடைய முயல்கிறான். அவன் ஆற்றும் செயல்கள் ஒவ்வொன்றிலும் அவன் அடையக்கூடிய பலன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக அவன் அனைத்து தரப்பினர்களிற்கும் நலம்விரும்பியான ஒரு தோற்றத்தை உருவாக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. இது கதையில் வரும் பாத்திரங்களை மட்டுமல்ல கதையை படிக்கும் வாசகனையே தள்ளாட வைத்து விடுகிறது. ஸ்பேட்டின் உண்மையான நகர்வு என்ன என்பதையே ஊகிக்க இயலாதபடி அவன் பாத்திரம் கதையின் இறுதிப்பகுதிவரை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தன் சகாவின் கொலை குறித்த நிஜத்தில்கூட அவன் தன் லாபம் காண்பவனாகவே இருக்கிறான் என்பது ஸ்பேட் பாத்திரத்தின் உருவாக்கத்தில் கதாசிரியர் கடைப்பிடித்திருக்கும் கண்டிப்பான ஒழுங்கிற்கு சான்று. நாவலில் ஸ்பேட்டிற்கும் பெண்களிற்குமிடையிலான உறவு சமூக ஒழுக்க வரையறைகளை மீறியதாகவே இருக்கிறது. தன் சகா ஆர்ச்சர் மைல்ஸின் மனைவியான இவாவுடன் அவன் கொண்டிருக்கும் உறவு அவனை எந்தவிதத்திலும் எந்த சந்தர்பத்திலும் குற்றவுணர்வு கொண்டவன் ஆக்குவதில்லை. பெண்களை சமாளிப்பதில் தனக்கென ஒரு மொழியைக் கையாள்கிறான் ஸ்பேட். இறுதிவரை பெண்களுடான அவன் மொழி தடுமாறுவதில்லை. பெண்களுடான அவன் மொழி மென்மையற்றது ஆனால் அதுவே பெண்களின் உணர்வுகளை மென்மையாக தொட்டுச்செல்லும் ஒன்றாக உருக்காண்கிறது.

பணம் என்பதன் மீது நம்பிக்கை கொண்டவனாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஸ்பேட், தன்னை தேடி வந்த வொன்டர்லி கூறிய தகவல்கள் பொய் என்பதை அறிந்தபின்னும் காவல்துறை, மற்றும் பிற தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுவதற்கு முன்வருகிறான். இதற்காக பணத்தை பெற அவன் தயங்குவதேயில்லை. இவாவிடம் அவன் உறவு கொண்டிருந்தாலும் ஒரு சிறிய தழுவலிற்கு பின்பாக அவளிடம் அவன் ஒரு எல்லையிலிருந்தே பழகிக் கொள்கிறான். அவன் உறவு என்பது தாமரை இலையில் இருக்கும் தண்ணீர் துளியை விட வழுக்கும் தன்மை அதிகம் கொண்டது. அந்தவகையில் தன் காரியதரிசி எஃபி பெரினுடனே அவன் உறவானது சற்றே இயல்பான தன்மை கொண்டதாக உள்ளது எனலாம். இருப்பினும் எஃபியை அவன் தன் காரியங்களிற்கு எல்லாம் நினைத்த வேளைகளில் இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்கிறான். எஃபியும் இது குறித்த எந்த முறைப்பாடுகளுமின்றி ஸ்பேட்டிற்கு காரியங்களை ஆற்றி தருகிறாள். இவா மற்றும் வொன்டர்லி எனப் பொய் நாமம் சூட்டிய பிரிஜிட் ஆகிய பெண்களுடன் ஸ்பேட்டின் உறவு எத்தகையது என்பதை அவள் அறிந்திருந்தும், அவள் இடையில் தவழும் ஸ்பேட்டின் கரங்கள் குறித்து அவள் எதிர்ச்சலனங்கள் கொண்டாளில்லை.

பிரிஜிட் எனும் உண்மைப் பெயரை செங்கூந்தல் அழகியிடமிருந்து அறிந்தபின்பாக அவளைக் குறிவைக்கும் தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற நடவடிக்கைகளில் இறங்குகிறான் ஸ்பேட். ஆனால் இங்கு நடவடிக்கை என்பது அதிரடியான சண்டைகளோ, துப்பாக்கி மோதல்களோ இல்லை. பிரிஜிட்டிற்கு எதிரானவர்கள் ஸ்பேட்டை சந்திக்கிறார்கள். உரையாடல்கள் வழி தீர்வுகாண இரு தரப்பினரும் முயல்கிறார்கள். உரையாடல்கள் தந்திரங்களாகவும், ஸ்பேட்டிற்கு பிடிக்காத அவனிற்கு எதிரான செயல்களாகவும் மாறும்போது வன்முறை கதையில் இடம்பிடித்துக் கொள்கிறது. சமகால குற்றப்புனைவுகளில் இடம்பிடிக்கும் வன்முறை அலகிற்கு மிகவும் குறைவான வன்முறையையே கதையில் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதை நெடுகத் தேடினாலும் F சொல் கிடைக்காது. வில்மர் எனும் பாத்திரம் அதை உபயோகப்படுத்தினாலும் கதாசிரியர் அதை ஒரு சொல்லாக நாவலில் எழுதியிருக்கமாட்டார் மாறாக ஒரு வர்ணனையாக வாசகனிற்கு அச்சொல்லை அளிப்பார்.

ஆக பிரிஜிட் மறைக்கும் உண்மை ரகசியம்தான் என்ன? தர்ஸ்பியின் கொலை, ஆர்ச்சர் மைல்ஸின் கொலைக்கான காரணங்கள்தான் என்ன அவர்களை கொன்றது யார்? காவல்துறை இதை அறிய விழைகிறது, நகர சட்டத்தரணி இதை அறிய விழைகிறார், வாசகனும் இவர்கள் கூடவே மர்மத்தினுள் கட்டியிழுக்கப்படுகிறான். யாவரையும் வேறுபாடின்றி எள்ளி நகையாடியபடியே சுவரை நோக்கி உந்தித் தள்ளுகிறான் ஸ்பேட். இந்தக் கணத்தில் கதையில் வந்து சேர்கிறது ஒரு பறவை. செல்லமாக மால்டா ராஜாளி.

அப்பறவையையும், அப்பறவையின் பின்புள்ள மர்மங்களையும் ஸ்பேட் கண்டு கொள்வானா? கொலைக்கான காரணங்களையும் அதை ஆற்றியவர்களையும் அதை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதையும் அவன் அறிந்து கொள்வானா? ..என்பதை நாவலின் பின்பாதி தொய்வின்றி நகர்த்தி செல்கிறது. மாறாக முதற்பாதியின் வேகம், குறைவான ஒன்றே. ஹோட்டல் துப்பறிவாளர்களுடன் உரையாடல், ஹோட்டல் அறைகளிற்குள் ரகசியமாக உள்நுழைதல், கதை மாந்தர்களுடன் உரையாடல் என பாத்திரங்களின் இயல்புகளை முதற்பாதி மெதுவான ஓட்டத்தில் எழுதுகிறது. பிங்கர்ட்டன் துப்பறியும் நிறுவனத்தில் டாஷியல் ஹாமெட் பணிபுரிந்த அனுபவம் இயல்பான ஒரு துப்பறிவாளன், காவல்துறை, நீதித்துறை பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் நலன்களிற்கு கேடு விளைவிப்பவர்கள், சக துப்பறிவாளர்கள் என தம் தொழில்வாழ்க்கையுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் தொழிலை ஆற்ற வேண்டிய சூழல் குறித்த தகவல்களை எளிதாக எழுதிட உதவியிருக்கலாம். இருப்பினும் சமகால வாசிப்பிற்கும் இந்நாவலிற்குமிடையிலுள்ள காலவெளியை இல்லாதாக்குவது ஹாமெட்டின் குழப்பமான முடிச்சுக்களற்ற கதைசொல்லலே.

நூறு பக்கங்கள் தாண்டியபின் கதையின் வேகம் நிறுத்தப்பட முடியாத ஒன்று. குறிப்பாக ஸ்பேட்டின் சகா ஆர்ச்சர் மைல்ஸ் கொலை குறித்த மர்மத்தை ஆசிரியர் நழுவவிடாது இறுதிப்பக்கவரை இறுக்கமாக கொண்டு சென்று விடுகிறார். ஸ்பேட் யார் பக்கம் சாய்கிறான் என்றே ஊகிக்க முடியாதபடி படு திறமையாக ஆனால் எளிமையாக கதையை சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். கதாசிரியர் பாத்திரங்களை ஓயாது வர்ணிக்கும் முறைதான் நாவலில் சிறிது எரிச்சலை உருவாக்கும் ஒன்றாகும். கதைமாந்தர்களின் விழிகளையும், தலைமுடியையும், தாடைகளையும், நாசிகளையும் சலிக்காது ஆனால் இன்றைய வாசகனிற்கு சலிப்பூட்டும் வகையில் உறுதியுடன் எழுதுகிறார் ஹாமெட். மேலும் 1930கள் குறித்து பெரிதாக எதையும் நாவல் பேசிடவில்லை மாறாக மனிதர்களின் மனங்களில் விளையும் ஆசையின் விபரீதமான ஓவியங்களும் அவை உருவாக்கும் விளைவுகளும் காலகாலத்திற்கும் மாறிடுவதில்லை என்பதை வாசகன் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள இயலும். கதையில் வரும் உப பாத்திரங்களான மிஸ்டர் G எனும் கட்மேன், ஜோவெல் கைரோ ஆகியவர்கள் மிகவும் ரசிக்கப்படக்கூடியவர்கள். குறிப்பாக ஜோவெல் கைரோ பாத்திரத்தை நகைச்சுவை ததும்ப செதுக்கியிருப்பார் ஹாமெட். 1930களில் அமெரிக்காவில் ஒரினச்சேர்க்கை குறித்து எழுதப்பட்ட நாவலாகவும் இதை ஒருவர் கண்டு கொள்ளலாம். நாவலில் வரும் எவரையும் நல்லவர்கள் என சுட்டிக்காட்ட இயலாதபடி நல்லவர்களற்ற நிஜ மனிதர்களுடன் வாசகனை உலவ விட்டு அவனை தன் அறம் குறித்த நிலைப்பாடுகளுடன் மோதச் செய்கிறார் கதாசிரியர். இதுவே இந்நாவலின் மிகச் சிறப்பான ஒரு அம்சமாக என்னால் உணரப்படுகிறது.

கதையின் இன்னுமொரு முக்கிய பாத்திரம் வொண்டர்லி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரிஜிட். அழகான ஆபத்து என்பார்களே அதுதான் பிரிஜிட். நாவல் முழுதும் இப்பெண்மீது இரக்கத்தை தவிர வாசகர்கள் என்ன உணர்வை உருவாக்கி கொண்டுவிட முடியும். அப்படியாக அப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் டாஷியல் ஹாமெட். நாவலின் உச்சக்கட்டம் நம்ப இயலாவகை எதார்த்தம், நாவலின் கடைசி நான்கு பக்கங்கள் ஸ்பேட்டை என்றும் எவரும் நம்பவே இயலாது எனும் எதார்த்தம். இவை இரண்டுமே நாவலின் மிக முக்கியமான திருப்பங்கள். நாவலின் மதிப்பையும், உணர்ச்சிகரமான வாசகனின் மனதில் நாவலை சிறப்பான ஒன்றாக உயர்த்துபவையும் இவைதான்.உங்கள் பிரார்த்தனைகள் கோபால்ட் நீல நிறத்தில் இருக்கலாம் ஆனால் ஸ்பேட் எனும் கடவுளிடம் இரக்கம் ததும்பும் செவிகள் இருப்பது இல்லை. இணையத்தில் உலவும் மிகையான எதிர்பார்ப்புகளை உற்பத்தியாக்கும் காரணிகளை உதறிவிட்டு படித்தால் சிறப்பான வாசிப்பனுபவத்தை வழங்கும் ஒரு நாவல் இது. எதிர்பார்ப்புகளை உதறாமல் படித்தால்கூட ஏமாற்றிடாத நாவல் இது.



Sunday, April 1, 2012

செம்மனிதர் நிலம்

 
நவாஹோ ஒல்ட் மாங் தளபதி டாக்டர் டெக்ஸு வில்லரு அட்வென்ச்சரு!!!!


தனக்கென ஒரு சிறிதளவு நிலத்தையேனும் சொந்தமாக்கி கொண்டுவிட வேண்டும் என ஆசை கொண்டிராத வசதியற்றவர்களின் எண்ணிக்கை உலகில் எவ்வளவாக இருக்கும்! வசதியற்றவர்கள் மட்டும்தானா நிலம் என்பதனை தம் சொந்தமாக்கி கொள்ளும் ஆசை கொண்டவர்களாக இவ்வுலகில் இருக்கிறார்கள். என் நிலத்தில் பயிர் செய்கிறேன் என்பதும் என் நிலத்தில் கட்டிய வீடு என்பதும் இந்த நிலம் எல்லாம் எனக்கு பின்பாக என் சந்ததியினர்க்குதான் என்பதையும் நாம் எம் தாய்க் கலாச்சாரத்தில் கேட்டு வளர்ந்ததில்லையா! வாழும் போது நிலத்திற்காக தன்னை பலவழிகளிலும் புதைத்துக் கொள்ளும் மனிதன் தன் இருத்தலின் முடிவின் பின்பாக அந்த நிலத்துடனேயே கலந்து விடுவதும் அழகான உறவொன்றின் நீட்சியல்லவா. இவ்வாறு மனிதனின் காலடிகளில் ஓய்வின்றி நீண்டு செல்லும் நிலம்தனை தமக்கு சொந்தமாக்கி கொள்ள பந்தயம் ஒன்றில் கலந்து கொண்ட பலதரப்பட்ட மனிதர்கள் குறித்தே TEX Maxi ன் முதல் கதையான OKLAHOMA வாசகர்களிடம் உணர்ச்சிகரமாக எடுத்து வருகிறது.
tw1


டெக்ஸ் மாக்ஸி என்பது 264 லிருந்து 300 க்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட டெக்ஸ் வில்லர் சாகசங்கள் ஆகும். பிரெஞ்சு மொழியில் இவ்வரிசையை 2008 லிருந்து Claire du Lune பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸி மட்டுமல்லாது, டெக்ஸ் ஸ்பெஷல், டெக்ஸ் பிரெஸ்டிஜ் போன்ற வரிசைகளிலும் இப்பதிப்பகம் டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களை வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸியின் சிறப்பம்சம் 15X21 எனும் அளவில் வெளியாகும் அதன் இதழ்கள் ஆகும். இந்த அளவில் 300 பக்கங்கள் கொண்ட ஒரு காமிக்ஸ் ஏறக்குறைய ஒரு சாதாரண நாவலின் தடிப்பை எட்டிவிடுகிறது. எந்தக் காமிக்ஸ் ரசிகனுக்கும் மிகவும் பிடித்துப்போகும் இந்த அளவு டெக்ஸ் கதைகளின் சித்திரங்களினை காமிக்ஸின் பக்கங்களில் மிகப் பொருத்தமான அளவு கொண்ட சட்டகங்களினுள் அழகாக பொருத்திடவும் வழிவகுக்கிறது. க்லேய்ர் டு லூன் பதிப்பக வெளீயிடுகளான அனைத்து டெக்ஸ் கதைகளும் கறுப்பு வெள்ளையிலேயே சிறப்பான முறையில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. பளபளா என வழுக்கும் கலைத்தாளை உபயோகிக்காது சொர சொரவென இருக்கும் ஆனால் கறுப்பு வெள்ளை சித்திரங்களை அதன் உயிரோட்டத்துடன் எடுத்துவரும் தாளையே இப்பதிப்பகத்தார் தம் டெக்ஸ் வில்லர் கதைகளிற்கு பயன்படுத்தி வருகிறார்கள். வதனமோ சந்த்ர பிம்பமோ எனும் இப்பதிவு வரிசை டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களினூடாக என் அனுபவத்தினை உங்களுடன் பகிர்வதாக இருக்கும்.


அந்தி நெருங்கும் வேளையில் தம் இரவுணவிற்காக முயல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் டெக்ஸும், கார்சனும் தொலைவில் ஒலிக்கும் துப்பாக்கி வேட்டு சத்தங்களை கேட்டு அச்சத்தம் வந்த திக்கில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக விரைகிறார்கள். கன்சாஸ் பகுதியினூடாக ஒக்லாஹொமா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலிருந்து இந்த விரைவான ஓட்டத்தால் அவர்கள் காப்பாற்ற முடிகிறது. அந்த அப்பாவிக் குடும்பத்தை தாக்கிய வழிப்பறி திருடர் குழுவின் தலைவன் மட்டும் தன் முகத்தை காட்டாது உயிருடன் தப்பி ஓடிவிடுகிறான். இம்மோதலில் அக்குடும்பத்தின் தலைவனான ஹார்வி பிலாக்ஸ்டன் ஸ்தலத்திலேயே குண்டடிபட்டு உயிரிழக்கிறான். அவனது மனைவியும், ரோஸ் எனும் அழகான புதல்வியும் பிராட் எனும் மகனும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் கதையைக் கேட்கும் டெக்ஸும், கார்சனும் அவர்களிற்கு உதவி செய்திடுவது எனும் முடிவிற்கு வருகிறார்கள்.

ok1கதையின் ஆரம்பத்தில் கன்சாஸின் நிலப்பகுதி சித்திரங்களாக விரியும் அழகே தனி. அதுவும் நீள் சதுர சட்டகங்களில் விரியும் சித்திரங்கள் சினிமாஸ்கோப் திரைப்படம் ஒன்றை பார்ப்பது போன்ற உணர்வை வழங்கிடுகின்றன. ஒவியர் Guglielmo Letteri ன் ஓவியங்களில் புதுமைகள் இல்லை இருப்பினும் ஆரம்பமாகும் கதையினுள்ளே பக்குவமாக வாசகனை அழைத்து செல்லும் திறமை ஒளிந்திருக்கிறது. நீண்ட இந்த சாகசத்தினூடு தன் சித்திரங்களில் அவர் காட்டும் இந்த அடக்கத்தின் வழியே தொடரும் கதையை முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாது அதனுடன் ஒன்றிப்போன வாசகனோடு நெருங்கி கொள்ளும் சித்திரங்களையும் அவர் படைத்திருக்கிறார். டெக்ஸுக்கும் கார்சனிற்குமிடையில் இடம்பெறும் கிண்டலுடன் அவர்கள் கதையில் ரசிகர்களிடம் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். குண்டடிபட்டு மரணமாகிய ஹார்வியை உரிய மரியாதைகளுடன் புதைத்தபின்பாக, ஹார்வியின் மனைவி தங்கள் கதையை அவர்களிடம் கூறுகிறாள்.

டென்னிஸி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் எவ்வாறு தங்களை வசதியற்ற நிலைக்கு தள்ளியது என்பதையும், சீர்கெட்டிருக்கும் தன் உடல் நலம் ஈரலிப்பற்ற சீதோஷ்ண நிலை நிலவக்கூடிய பகுதியிலேயே சீராகிடலாம் என்பதையும் அவள் கூறுகிறாள். அமெரிந்திய பூர்வகுடிகளை அவர்களின் உரித்தான நிலங்களிலிருந்து வெளியேற செய்து அவர்களிற்கென்ற பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வலயங்களில் அவர்களை குடியமர்த்தியதன் பின்பாக ஒக்லாஹொமா பகுதியிலிருக்கும் பூர்வகுடிகளின் நிலங்களை புதிய குடியேற்றங்களிற்கு பகிர்ந்தளிக்க அதிகாரம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் வழியே பயன்பெறவே தாம் ஒக்லாஹொமாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாகவும் கதையை தொடர்கிறாள் அவள்.

சோகம் நிறைந்த அந்தக் கதையின் வழியாக டெக்ஸ் & கார்சன் மட்டுமல்ல கதையைப் படிப்பவர்களும் ஹார்வியின் அனாதரவான குடும்பத்தின் மேல் இரக்கம் கொண்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் தடைப்பட்ட பயணத்தை தொடர விரும்புகிறான் இளைஞன் பிராட். தமக்கென ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் எனும் ஹார்வியின் கனவை நிறைவேற்ற விரும்பிடும் அக்குடும்பத்திற்கு துணைபோவதை விட வேறு என்ன முக்கிய விவகாராம் இக்கதையில் டெக்ஸ் வில்லரிற்கு இருந்திடக்கூடும்.

கதையின் இப்பகுதியில் இரவு விடியும் பொழுதில் ஹார்வியின் மனைவி தங்கள் கதையைக் கூற ஆரம்பிப்பாள். நெருப்பு ஒன்றை சுற்றி இருந்தவாறே டெக்ஸும் அவர் சகாவும் கதை கேட்கும் காட்சியினை அந்த இரவுப் பொழுதினதும், மென்சோகம் போல் புகையும் தீயினதும் உணர்வுகளுடன் கறுப்பு வெள்ளையில் எம் மனதினுள் உணரச் செய்திட்ட சித்திரக் கலைஞனின் திறமையை என்னவென்பது. இந்த சோகத்தின் வழியே பூர்வகுடிகளின் நிலமானது புதிய குடியேற்றங்களிற்காக பறிபோன சம்பவத்தை குறித்து வாசகனை உணர்விழக்க வைப்பதாக கதை உருக்கொள்கிறது. பூர்வகுடிகளின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியானது ஹார்வி குடும்பம் கொண்டிருக்கும் துன்பங்களால் மேல்பூச்சிடப்படுகிறது என்பதை அறிந்தவாறே தொடரும் பக்கங்களை நோக்கி ஒருவர் நகர்ந்திட வேண்டும். ஒன்றின் அழிவில்தான் பிறிதொன்று உருவாகிறது. ஒரு வாழ்வின் முடிவில்தான் இன்னொரு வாழ்க்கை சில சமயங்களில் தன்னை பிறப்பித்துக் கொள்கிறது. ஒரு இனத்தின் அழிவில்தான் இன்னொரு இனம் தன்னை மேன்மையானதாக சித்தரித்துக் கொள்ள முடிகிறது.

அனாதரவான ஹார்வி குடும்பத்தினருடன் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் நம் நாயகர்கள். மேற்கின் இயற்கையானது இரக்கமற்ற தன் இயல்பால் அவர்களை சோதிக்கிறது. அத்தடைகளை கடந்து செல்கிறார்கள் அவர்கள். வழியில் கொலையுண்டு கிடக்கும் ஒரு குடும்பத்தை காணும் டெக்ஸ், வழிப்பறிக் கொள்ளையர்கள் இக்காரியத்தை செய்திருக்கலாமா என சந்தேகிக்கிறார். வாழ்வு தேடி பாதையில் சென்ற மனிதர்களிடம் இருப்பது ஏதுமே இல்லை எனும்போது அவர்களை கொள்ளைக்காக தாக்க எந்தப் புத்தியுள்ள கொள்ளையனும் முன்வரமாட்டான் எனும் எதார்த்தம் டெக்ஸின் மனதில் எழுகிறது. மனதில் கேள்விகளுடன் பயணத்தை தொடரும் டெக்ஸ், ஹார்வி குடும்பத்தினரை ஒக்லாஹொமாவிற்கு இட்டு வருகிறான். அங்கு அவர்களைப் போலவே நிலத்தை உரிமையாக்க வேண்டி வசதியற்ற மனிதர்கள் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிறார்கள் என்பதை அறியும் அவர்கள் மனதில் நிலம் ஒன்றை பந்தயத்தில் தாம் வென்றிட முடியுமா எனும் ஐயம் எழ ஆரம்பிக்கிறது.

கதையின் இப்பகுதியில் கதாசிரியர், இவ்வகையான முகாம் ஒன்றில் அதிகாரமும், நிலத்தினை சொந்தப்படுத்த அங்கு வந்து குழுமியிருக்கும் ஏராளமான மனிதர்களும் எதிர் கொள்ளும் சிக்கல்களை சுவையாக விபரித்து செல்கிறார். ஆறு மில்லியன் ஏக்கர் நிலத்தை பாதுகாப்பதற்கு போதிய வீரர்கள் அற்றிருக்கும் அதிகாரம், முகாமில் உருவாகும் மோதல்கள், சர்ச்சைகள் இவற்றையும் தீர்த்து வைக்க வேண்டிய கூடுதல் சுமை என்பன ஆறாம் குதிரைப்படைப் பிரிவின் கட்டளை தளபதியான ஆல்ஃபிரட் பைரனிற்கு உற்சாகம் தருவதாக இல்லை. இவற்றை அவர் வெளிப்படையாகவே டெக்ஸுடன் பேசுகிறார். டெக்ஸ் தான் வரும் வழியில் கண்ட கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து சொல்ல அதுபோன்று மேலும் நான்கு கொலைகள் அப்பிரதேசத்தில் நிகழ்ந்திருப்பதை பைரன் அவரிற்கு அறியத் தருகிறார்.

ok2முகாமில் இருக்கும் அட்சிஸன், டாபீக்கா, சாண்டா பே ரயில் பாதையின் பிரதிநிதியான கம்மிங்ஸின் வேலையாட்கள் முகாமில் தங்கியிருக்கும் மக்களுடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை டெக்ஸ் அவதானிக்கிறார். அவரின் அந்த அவதானமே ஹார்வி குடும்பத்தை தாக்கிய வழிப்பறி கொள்ளை குழுவின் தலைவனை அவரால் இனம் கண்டு கொள்ள உதவுகிறது. இங்கு அந்தக் கொள்ளையனை துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல் கண்டு பிடிப்பார் டெக்ஸ். இக்கதையில் இருக்கும் எண்ணற்ற விசில் அடிக்க வைக்கும் தருணங்களில் அதுவும் ஒன்று. முகாமில் சிகரெட் புகைத்தல், தீக்குச்சியை உரசி பற்ற வைத்தல் என டெக்ஸு மாமூ காட்டும் ச்டைல்களை ரசிப்பதா அல்லது சொல்லி சொல்லி கம்மிங்ஸின் வேலையாட்களை அவர் உருட்டி உருட்டி அடித்து எடுக்கும் அழகை ரசிப்பதா என வாசகனின் அப்பாவி மனம் இங்கு போட்டி போடுகிறது. இவ்விவகாரங்கள் வழியாக கம்மிங்ஸின் மீது டெக்ஸ் சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறார்.

ஏதுமற்ற மனிதர்கள் கூடுமிடத்தில்தானே மோசடிகாரர்களிற்கும் வாய்ப்பு தன் கம்பளத்தை விரிக்கிறது என்பதைப் போல வசதியற்ற மக்களிடம் இருக்கும் பணம் வெல்லும் ஆசையை தமக்கு சாதகமாக்கி கொள்ளும் ஒரு மோசடிகார சூதாட்ட கும்பல் எவ்வாறு ஹார்வியின் மகன் பிராட்டை தன் கவர்ச்சிக்குள் இழுக்கிறது என்பது இங்கு சிறப்பாக சொல்லப்படுகிறது. அது போலவே செவ்விந்திய பெண்ணிற்கும் வெள்ளை இன ஆணிற்கும் பிறந்த கழுகு ஆண்டர்சனிற்கும், ரோஸிற்கும் இடையில் மலரும் காதலும் இங்கே பக்குவமாக இடம் பிடித்துக் கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வளமான ஒரு நிலத்தை பந்தயத்தில் உரிமையாக்கி கொள்ள வேண்டும் எனும் போட்டி மனப்பான்மை அங்கு குழுமியிருக்கும் மனிதர்கள் மத்தியில் ஒரு அரூப ஆசையாய் மேற்கின் காற்றை அணைத்துக் கிடக்கிறது. இந்நிலையில் பந்தயத்தில் தனக்கு நிலங்களை பிடித்து தர பணம் தந்து ஆட்களை சேர்க்க ஆரம்பிக்கிறான் கம்மிங்ஸ். பிராட்டின் மனதில் இருக்கும் எந்தக் காரணமுமற்ற பூர்வகுடியின வெறுப்பை கதையில் இங்கு வாசகன் காணமுடியும். அவனின் இந்தப் போக்கை டெக்ஸ் சில பதிலடிகளால் தவறென புரிய வைப்பார், கழுகு ஆண்டர்சனும் சளைத்தவனல்ல எங்கு பதிலடி தர வேண்டுமோ அங்கு சரியாக அவன் பிராட்டிற்கு பதிலடி தருவான். கதையை நீங்கள் படித்தால் அத்தருணத்தின் காரத்தை உணர்வீர்கள்.

இவ்வாறாக நிலத்தை உரிமையாக்கி கொள்ளும் அப்பெரும் பந்தயம் ஆரம்பமாகிறது, கழுதை, குதிரை வண்டில்கள், துவிச்சக்கர வண்டிகளில் வசதியற்றவர்கள் செல்ல, மதிப்பிற்குரிய பிரஜைகள் இரும்புக் குதிரையில் பயணித்து நிலம் பிடிக்க செல்லும் அநீதியை ஆசிரியர் டெக்ஸின் பார்வையில் வாசகனிடம் எடுத்து வருகிறார். உலகம் நியாயமான ஒன்றல்ல என்று சித்தாந்தம் பேசும் அந்த டெக்ஸை கட்டி அணைத்திட கரங்கள் துடிக்கின்றன. மேற்கு என்பது பணம், அதிகாரம், வன்முறை என்பவற்றால் ஆளப்படும் ஒன்று என்பதை டெக்ஸ் உணர்ந்தே இருக்கிறார். அவர் ஓய்வற்ற போராட்டம் இவ்வகையான அநீதிகளை தட்டிக் கேட்டு நீதியை வாங்குவதாகவே இருக்கிறது. இங்கு வெள்ளை இனத்தவர்கள் மட்டும் என்றல்லாமல் பல்வேறுபட்ட இனத்தவர்களும் நிலத்தை தமதாக்கி கொள்ளும் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிற்கும் நிலம் என்பதன் முக்கியத்துவம் இனங்களை கடந்த ஒன்றாக இங்கு உருப்பெறுகிறது. இவ்வாறாக குடியேறிகளிற்கு நிலங்களை வழங்க பந்தயப் போட்டி வைத்த இந்த உலகம் இன்று குடிவரவை ஒரு குற்றமாக பார்க்க ஆரம்பித்திருப்பது காலம் வரைந்த சித்திரமல்லவா. ஐரோப்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், வந்திறங்கிய குடியேறிகளை ஏறக்குறைய ஒரு குற்றவாளிபோல் ரகசியமாக பார்க்க ஆரம்பித்திருக்கும், ஆவணப்படுத்திடும் மனிதவுரிமை சித்தாந்தங்களின் மனங்களை இத்தருணத்தின்போது எண்ணாமல் இருக்க இயலவில்லை. வாழ வேண்டும் என்பதற்கான பந்தயங்கள் இந்த உலகில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு இதனை நாம் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! இருப்பினும் கழுகு ஆண்டர்சனின் தாய் பிறந்த அந்தப் பூமியில் அவள் மகன் ஒரு துண்டு நிலத்திற்காக ஓடும் அவலத்தை காணாது வாசகன் கண்மூடியாக இருந்திட முடியுமா என்ன.

பந்தயத்தை விபரிக்கும் கதைப்பகுதியானது, அனுபவமற்ற வண்டியோட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கம்மிங்ஸின் சதி போன்றவற்றுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. டெக்ஸ் மாமூ குதிரை வண்டில் விட்டு பாய்ந்து பாய்ந்து போடும் ஆக்‌ஷன் அருமையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் தலைக்கு மேல் டெக்ஸ் விழப் போகிறார் என நினைத்த ஒரு குதிரை தலையைக் குனிந்தவாறே ஒடுவது பாராட்டிற்குரியது. இங்கு பந்தயத்தில் கலந்து கொள்ளும் மனித மனங்களின் விசித்திரமான இயல்புகளை கதாசிரியர் தொட்டுச் செல்வார். மனித உயிரோ, மனித நேயமோ தூக்கி எறியப்பட்ட வேகத்திலேயே நிலம் எனும் ஆசை ஒடும் பந்தயமாகவே அப்பந்தயத்தை காமிக்ஸ் வாசகன் காணக்கூடியதாக இருக்கிறது.

ok3வாக்களிக்கப்பட்ட நிலம் எனும் கதையின் அடுத்த பகுதியில் நிலங்களை பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுகின்றன. கம்மிங்ஸின் அடியாட்களுடன் அப்பாவி மக்கள் மோத வேண்டியிருக்கிறது. எவ்வகையிலும் குறித்த ஒரு பகுதியில் நிலத்தினை கைப்பற்றிட கம்மிங்கஸ் எல்லா வழிகளையும் பிரயோகிக்கிறான். இவ்வகையான தாக்குதல்கள் அயலவர்களிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்குகிறது, தம் சொந்தமென அவர்கள் நம்பும் நிலத்தில் வீடுகளை நிர்மாணிக்க ஒருவரிற்கு ஒருவர் அவர்கள் ஒத்தாசையாக செயற்பட ஆரம்பிக்கிறார்கள். தாம் வரித்துக் கொண்ட நிலத்தை பாதுகாக்க போராடும் மனிதர்களிற்காக கம்மிஙஸின் அடியாட்களுடன் ஒரு நண்டைப்போல தன் குதிரையின் நடுவுடலை இரு கால்களால் கவ்வியும், குதிரையின் கழுத்தை தன் ஒரு கரத்தால் பற்றியவாறும், தன் மறுகரத்தால் பிஸ்டலை இயக்கியும் டெக்ஸ் போடும் அந்தச் சண்டைக்காட்சி இருக்கிறதே. அடடா! அடடா! [ பார்க்க படம் ]

ஒருபுறம் ஹார்வி குடும்பம், அயலவர்கள் என கதை நகர, மறுபுறம் ஹத்ரி எனும் Boom Town ன் தோற்றம் பரபரப்பாக காட்டப்படுகிறது. எவ்வாறு கம்மிங்ஸ் அந்நகரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயல்கிறான் என்பதை கதாசிரியர் சுவையாக கூறுகிறார். ஒரு நாளிற்குள் இந்நகரம் கட்டியெழுப்பபடும் வேகம் மிகவும் அருமையாக இங்கு கூறப்படுகிறது. வெறும் மேசையை வைத்தே உருவாக்கப்படும் மது விடுதி, கூடாராத்தில் இயங்கும் சூதாட்ட விடுதி என நகரின் கேந்திர மையங்கள் குறித்த பார்வை படு அட்டகாசமாக இங்கு அலசப்படும். கம்மிங்ஸின் நுட்பமான சதிகளை எல்லாம் டெக்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக உடைக்க வேண்டியிருக்கிறது. ஐந்து குடும்பங்களின் கொலைகளின் பின்ணணியில் இருக்கும் உண்மை டெக்ஸை கொதிக்க வைக்கிறது. கம்மிங்ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பது டெக்ஸை ஒரு பீர் குடிக்க வைக்கிறது. அதன் பின் என்ன அதிரடிதான்.

ஹத்ரி நகரில் இடம்பெறும் 60 பக்க நான் ஸ்டாப் ஆக்‌ஷன் இருக்கிறதே, பரபர பரபரவென பற்ற வைத்த டைனமைட்டு திரி போல் எரிகிறது பக்கங்கள். அடி பின்னி எடுத்திருக்கிறார்கள் கதாசிரியரும், சித்திரக்காரரும். ஒவ்வொரு தடவையும் அப்பாவிகளை கயவர்கள் கையில் சிக்க வைத்து, அய்யோ இப்ப டெக்ஸு இங்க வரணுமே என வாசகர்கள் ஏங்கும் தருணத்தில் காகத்தின் நேரத்துல்லியத்துடன் அங்கு வரும் டெக்ஸ் மாமூவின் கடமை உணர்சியை என்னவென்பது. அப்படியாக சிறப்பாக காட்சிகளை உருவாக்கிய கதாசிரியர் Giancarlo Letteri ன் திறமையை என்னவென்பது. அந்தக் கால திரைப்படங்களில் நாயகனை வீழ்த்த முடியாத எதிரிகள் வெளியூர்களிலிருந்து பலவான்களை நாயகனை வீழ்த்துவதற்காக வரவழைப்பார்கள் அதுபோல் இக்கதையிலும் உண்டு. கன்சாஸிலிருந்து இரண்டு துப்பாக்கி வீரர்கள் வருவார்கள். அவர்களிற்கும் டெக்ஸிற்குமிடையில் நிகழும் உச்சக்கட்ட ஸ்டண்டு காட்சி மாண்டவனையும் மண்ணைப் பிறாண்ட வைக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமா கம்மிங்ஸின் சதியை எவ்வாறு தான் கண்டுபிடித்தார் என்பதை கார்சனிற்கு விளக்கி சொன்ன பின்பாக கார்சனிடம் இது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என வினவுவார் டெக்ஸ் அதுக்கு கார்சன் தரும் பதில், It’s elementary!

340 பக்கங்கள் கொண்ட இக்கதையில் ஒரு பக்கமேனும் சலிப்போ, தொய்வோ இல்லை. ஒரு நாவலைப் படித்த நிறைவை இக்காமிக்ஸ் கதை வழங்கியது என்றாலும் அது மிகையல்ல. ஒரு பக்கா வெஸ்டெர்ன் மசாலாவிற்கு என்ன வேண்டுமோ அவை யாவும் சரியான அளவில் கலக்கப்பட்ட கதை இது. இறுதியில் டெக்ஸும் கார்சனும் ஹார்வி குடும்பத்திடமிருந்து விடைபெறும்போதும் என் மனதிலும் ஒரு வேதனையின் மென்வரி. ட்ராகன் பப்படம் கதையை [ டெக்ஸ் மாக்ஸி 10 ] படிக்கலாம் என இருந்த என்னை இக்கதையை தேர்ந்தெடுக்க வைத்த அந்த மாபெரும் மதுசலேத்தை மனதில் நன்றியுடன் வேண்டுகிறேன் நான். டெக்ஸை கப்பு மாமா என கிண்டல் அடிக்கும் கயவர்களைகூட மயக்கும் கதையிது. [அட்டைப்படத்தை வரைந்தவர் கலெப் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.]

தொடர்புடைய வரலாறு..
   http://en.wikipedia.org/wiki/Land_Run_of_1889