Showing posts with label Jacques Audiard. Show all posts
Showing posts with label Jacques Audiard. Show all posts

Friday, June 1, 2012

தீராக்காயச் சித்திரங்கள்


ஒர்க்கா திமிலங்களைக் கொண்டு கேளிக்கை காட்சிகளை நடாத்தி வரும் ஸ்டெஃபானிக்கு இரவு விடுதி ஒன்றில் நிகழும் ஒரு அசம்பாவிதத்தின் வழியாக அலி என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. சிறிது காலத்தின் பின்பாக கேளிக்கை காட்சி ஒன்றின்போது ஏற்படும் விபத்தில் தன் இரு கால்களையும் இழந்து தனியாக வாழ்ந்து வரும் ஸ்டெஃபானியுடன் தனது ஒய்வு நேரங்களை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி…..

அலி, அவன் மனைவியை விட்டுப் பிரிந்து தன் மகன் சகிதம் தன் சகோதரியின் வீட்டுப் பட்டறையில் தங்கிக் கொள்பவன். அலி எப்படிப்பட்ட ஒரு மனிதன் என்பதனையும் அவன் சகோதரியான ஆனாவின் குடும்ப மற்றும் தொழில் நிலைமையையும், அவற்றுடன் எவ்விதமாக தன்னை அலி இருத்திக் கொள்கிறான் என்பதையுமே தன் புதிய திரைப்படமான De Rouille Et D’Os ன் ஆரம்ப பக்கங்களில் எழுதுகிறார் இயக்குனர் Jacques Audiard. கனடாவை சேர்ந்த எழுத்தாளரான Craig Davidson எழுதிய Rust and Bone எனும் படைப்பை தழுவியே இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

தன் வாழ்க்கையில் இலட்சியம் என எதையுமே கொண்டிராத அலி, காவல் வேலை மற்றும் பந்தய பணத்திற்காக நிகழும் தெருச்சண்டைகள் போன்றவற்றில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை நகர்த்துபவன். இங்கிதம் என்பது அவனிற்கு புரியாத ஒரு விடயமாகவே இருக்கிறது. கொடும் விலங்குகள் நிறைந்த காட்டில் இரைதேடும் ஒரு விலங்கின் குணத்துடன் அவன் தன் வாழ்நாட்களை முன்கொண்டு செல்கிறான். உறவு, பாசம், கருணை, போன்றவை குறித்த அவன் உணர்வுகள் சாதாரண நிலையிலிருந்து தொலைவில் நிற்பவையாக அவனிடம் அமைந்திருக்கின்றன. பணத்தை தேடிக் கொள்வதற்காக அவன் எந்த வகையான வேலைகளிலும் இறங்கிவிடக் கூடியவன்தான் இருப்பினும் அவனிற்கென அவன் வகுத்துக் கொண்ட சுதந்திரத்திற்கு இடையூறாக யாரும் இருப்பதையும் அவன் விரும்புவதில்லை. பணத்தைக் கொடுப்பதுடன் தன் கடமைகள் யாவும் முடிந்து விடுகின்றன எனும் மனநிலை அவனிடம் உண்டு. தன் மகனைப் பராமரிப்பதுகூட அவனிற்கு சிரமமான ஒரு செயலாகவே இருக்கிறது. ஒரு சிறுவனுடன் பழகும் நுட்பம் அலியிடம் கிடையாது. அவனிடம் இயல்பாகவே ஒட்டி இருக்கும் ரவுத்திரம் திடீரெனப் பொங்கும் ஒரு வன்முறை எரிமலையாக அவனை மாற்றியடிக்க கூடிய தன்மையைக் கொண்டது. பெண்கள் குறித்து அவன் அதிக மதிப்புக்களை கொண்டிருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் உடலை சுகிக்க தயங்காதவனாகவே அவன் இருக்கிறான். அவன் உள்ளிருக்கும் வன்முறை சுகித்தலின்போது பெண்ணுடலில் தன் வன்கவிதைகளை எழுதிக் கொண்டே சென்று மறைகிறது. புதிய உறவுகளை உருவாக்கி கொள்ளும் விருப்பம் அவனிடம் இருப்பதில்லை. தன் உறவுகளையும் எளிதான சில அம்சங்களாகவே அவன் சில கணங்களில் கருதிச் செல்கிறான்…..

இவ்வாறாகவே தன் புதிய படைப்பின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான அலியை இயக்குனர் ஜாக் ஒடியார், அவனிற்குள் வாழ்ந்திருக்கும் அனைத்து இயல்புகளுடனும், குணாதிசயங்களுடனும் தனக்கேயுரிய அதிரவைக்கும் நேர்மையுடன் திரைப்படுத்துகிறார். அலி எனும் பாத்திரத்தின்மீது பார்வையாளன் கொண்டிருக்க வேண்டிய உணர்வை மிகச்சரியாக கொணர்வதற்கு அவர் இயக்கம் தயக்கம் காட்டுவதேயில்லை. தன் படைப்பின் இறுதிக் காட்சிகள்வரை அலியுடன் பார்வையாளன் உணர்வுபூர்வமாக ஒன்றிக் கொள்வதை திறமையாகத் தடுத்தபடியே அலியின் வாழ்வை எதார்த்தத்தின் துடிப்புடன் எடுத்துவர விழைகிறார் ஜாக் ஒடியார். எவ்வாறு முரட்டுக் குணம் கொண்ட ஒரு மனிதனை நாம் விலகியபடியே தாண்டிச் செல்வோமோ, அந்த விலகலின் பாதுகாப்பான தூரத்தில் பார்வையாளனை எச்சரிக்கையுடன் நிறுத்தி வைக்கிறது ஒடியாரின் திறமை.

ஸ்டெஃபானியுடன் அலி அறிமுகமாகிக் கொள்வது ஒரு மோதலின் வழியாகவே. அலியுடன் அவள் அறிமுகமாகிக் கொள்ளும் அந்த முதல் இரவிலேயே ஸ்டெஃபானியின் இயல்பை தெளிவான வரியாக வரைகிறார் ஒடியார். தன்னுடன் வாழ்ந்திருக்கும் ஆணுடன் அலியை நேரிற்கு நேர் சந்திக்க செய்து அவர்கள் ஆண்மையினால் அவர்களிற்கிடையே சவால் விட வைக்கும் தருணங்களை உருவாக்கி, தன் துணை காணும் தோல்வியில் அவனைச் சற்று பரிகசித்து மகிழும் ஸ்டெஃபானிக்கு தன் துணைவனுடான வாழ்க்கை திருப்தியான ஒன்றாக இல்லை. ஒர்க்கா திமிங்கல கேளிக்கை காட்சி விபத்தின் பின்னாக தனித்து விடப்படும் ஸ்டெஃபானி தன் வெறுமையின் வெளியில் நீட்டிய ஒரு கரமாக தொலைபேசியில் அலியை அழைக்கிறாள். அந்த கணத்திலிருந்து ஆரம்பமாகிறது சாத்தியமேயில்லாத ஒரு உறவின் பிறப்பு.

இரு கால்களையுமே இழந்து வாழும் பெண்னொருத்தியின் விரக்தி, வெறுமை, சலிப்பு போன்றவற்றை தன் கருணையான இயல்பால் மனிதர்கள் இல்லாதாக்குவதை நாம் வழமையான கதைகளில் கண்டிருக்கிறோம். ஆனால் அலி இங்கு ஸ்டெஃபானி மேல் கருணை கொண்டவனாக இருப்பதில்லை. ஒரு சிறு தொகைப் பணத்தை வெல்வதற்காக தன் உடலை சகல வழிகளிலும் சிதைக்க தயங்காத ஒரு மனிதனிற்கு முடம் என்பது இன்னுமொரு காயமே. அதில் இரக்கம் கொள்ள அவனிடம் காரணங்கள் ஏதுமில்லை. தன் இயல்புகள் ஏதிலுமிருந்து விடுபடாமலேயே ஸ்டெஃபானியுடன் தன் பொழுதை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி. இவர்கள் இருவரிற்குமிடையில் இருக்கும் உறவு என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்பாமலேயே அவர்கள் கணங்கள் கழிகின்றன. அவனது முரட்டு இயல்பு அவள் வெறுமையை நிரப்ப முயல்கிறது. ஸ்டெஃபானியின் உடல் இச்சைகளை அலி தீர்த்து வைக்கத் தயங்குவதில்லை. அலியை பொறுத்த வரையில் தனக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் ஸ்டெஃபானியின் உடல் இச்சையை தீர்த்து வைப்பது என்பது அவளுடன் உலாச் செல்வது போல ஒரு செயல்தான், அதைத் தாண்டி அவன் அதற்கு அர்த்தங்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் இது குறித்த ஸ்டெஃபானியின் நிலைப்பாடு அப்படியானது அல்ல. அவள் உடல் முடமான ஒன்றான போதும் அவள் தன் உறவுகளை முடமான ஒன்றாக்குவதிலிருந்து விலகி வருகிறாள். அவளைப் பொறுத்த வரையில் உறவு என்பதன் அர்த்தம் புரியாத, புரிந்து கொள்ள விழையாத ஒருவனுடன் தொடர்ந்தும் தன் உடலை பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இல்லை. தன் உடலை ஒரு உறவின் பகிர்தலாகவே காணும் இயல்பைக் கொண்டவள் ஸ்டெஃபானி. இது அலிக்கும் அவளிற்கும் இடையில் ஒரு சிறு விரிசலை உருவாக்க ஆரம்பிக்கிறது.
um7WT


கால்கள் முடமான ஒரு பெண்ணைப் பார்த்து கண்களை கலங்க செய்யும் கதை வழக்கை இங்கு தவிர்க்க முயலும் ஒடியார், தன் ஊனத்துடன் தனித்த நிலையில் வாழ்க்கையோடு பொருதத் துடிக்கும் ஒரு பெண்ணாகவே ஸ்டெஃபானியை திரைப்படுத்துகிறார். இருப்பினும் கால்கள் இரண்டையும் இழந்த பெண் ஒருத்தியின் சங்கடங்களை அவர் திரையில் காட்டுவதிலிருந்து விலகி நிற்கவில்லை. கேளிக்கை காட்சியில் திமிங்கலங்களை தன் கை அசைவிற்கேற்ப அசைய வைப்பது போல அவள் அலியையும் தன் மனதின் அசைவுகளிற்கேற்ப அசைய வைக்க விரும்புகிறாள். ஆனால் அலி அவளிடமிருந்து நழுவிச் செல்பவனாகவே இருக்கிறான். முடமான பெண்ணின் நாட்களின் அசைவை மிகை உணர்வுகள் எதுமின்றி இங்கு காட்சிப்படுத்துகிறார் ஒடியார். இங்கு உரையாடல்களில் உறைந்திருக்கும் எதார்த்தம்தான் மனதை கனக்க செய்கிறது. இவ்வகையான பூச்சலங்காரமற்ற பச்சையான உரையாடல்களில் மிளிரும் நேர்மையை அது பறைசாற்றுகிறது. படிப்படியாக அலியின் வாழ்வில் அவன் உணர்ந்துகொள்ளா விதத்திலேயே ஒரு காயம் போல் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள் ஸ்டெஃபானி. ஆனால் அலி அது குறித்து அறியாத ஒருவனாகவே ஆரம்பத்தில் இருக்கிறான்.

தன் சகோதரி ஆனாவின் வேலை பறிபோகக் காரணமாக அமைவதும் அவனே தான் என்பதையும் அலி அறியாதவனாகவே இருக்கிறான். இங்கு ஒடியார், பெரும் பல்பொருள் அங்காடிகளின் நிர்வாக அதிகாரிகளின் கயமைத்தனத்தையும் அதற்கு துணைபோபவர்களையும் இதன் வழியாக தம் வாழ்க்கையின் அடுத்த நாளை கேள்விக் குறியாக்கி அழும் மனிதர்களையும் காட்சிப்படுத்துகிறார். குப்பையில் எடுத்து வீசப்பட வேண்டிய பொருட்களை தம் வீடு கொண்டு சென்றதற்காக கட்டாயப் பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களின் அவல நிலையையும், அவர்கள் பணியிடத்தில் மறைமுகமாக வேவு பார்க்கப்படும் விதத்தையும் சமூக அக்கறையோடு கதையில் சேர்க்கிறார் ஒடியார். சமூகத்தின் இந்தக் காயத்தை அவர் கதையில் கையாண்டிருக்கும் விதம் சற்று வீர்யம் குறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைக்கதையில் பெரும் திருப்பத்தை கொண்டுவரும் ஒரு காயமாகவே ஒடியார் இதைக் கையாண்டிருக்கிறார்.

மிக உணர்சிகரமாக நகர்த்தி சென்றிருக்கக்கூடிய இக்கதையை அதன் எதார்த்தமான நம்பகத்தன்மைக்காக ஒடியார் அதன் நிஜ சொரூபத்துடன் காட்சிப்படுத்த விழைந்திருக்கிறார். அதுவே பார்வையாளர்களை இப்படைப்பிலிருந்து சற்று விலகி நிற்க வைக்கும் ஒரு காரணியாக செயற்படுகிறது. ஆண், பெண், குடும்ப உறவுகளின் சமகால நிலையை அவர் அன்றாடங்காய்ச்சிகளின் குரலாக திரையில் ஒலிக்க செய்கிறார். தோல்விகளை கண்டு ஓடும் மனிதனையும், தோல்விகளுடன் வாழ்க்கையை நகர்த்தி செல்ல வேண்டிய மனிதனையும் உக்கிரமான பார்வை வழியே ஒடியார் இங்கு காட்டியிருக்கிறார். கலங்க வைக்க வேண்டிய உச்சக்கட்டக் காட்சிகளில் கூட பார்வையாளன் கலங்கி விடாது அவலத்தை சுவைக்க வேண்டும் என அதிர வைக்கும் நிகழ்வுகளை தனக்கேயுரிய லாவகத்துடன் அவர் திரையில் வரைகிறார்.

உடலில் ஏற்படும் காயங்கள் வழியாக மனித வாழ்வின் சிதைவும் சீராக்கமும் சேர்ந்த நகர்வை தன் படைப்பின் வாயிலாக வெளிக்கொணர விழைகிறார் இயக்குனர். திரைப்பபடத்தில் காயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய காயங்கள் உருவாக, முன்னையவை ஆற, ஓயாத மனித வாழ்க்கை தன் அடிகளை முன்வைக்கத் துடிப்பதையே அவர் தன் பாணியில் இங்கு இட்டு வருகிறார். துருப்பிடிப்பதன் வழி தன்னை அழித்து செல்லும் உலோகத்திற்கும், உடைந்து நொருங்கினாலும் மீண்டும் ஒட்டி முன்னை விட பலமாகும் என்பிற்கும் உள்ள இயல்புகளை மனித வாழ்விற்கும், உறவிற்கும் பொருத்தி பார்க்க முனைகிறது ஒடியாரின் இப்படைப்பு.

ஆண் நடிகர்களை தேர்வு செய்வதில் ஓடியார் திறமை வாய்ந்தவர் என்பதை அலி பாத்திரத்திற்காக அவர் பயன்படுத்தி இருக்கும் நடிகரான Matthias Schoenaerts தவறாது நிரூபித்திருக்கிறார். முரட்டு மனிதனாக அவர் நடிப்பு மிக சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. ஸ்டெஃபானியாக வேடமேற்று இருக்கும் நடிகை Marion Cotillard தன் அமைதியான நடிப்பால் பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். உணர்ச்சிபூர்வமாக இப்படைப்பை நெருங்குவது என்பது சிரமமான ஒன்று. ஆனால் வலிகளும், முறிவுகளும், காயங்களும், விபத்துக்களும், பிரிவுகளும், ஒன்றுசேரல்களும் உள்ள மனித வாழ்க்கை என்றும் உணர்வுபூர்வமாக இருந்து விடுவதில்லையே. எம் உணர்வுகளே மரத்துப்போகும் வாழ்வின் கணங்களில் நாம் அடி எடுத்து வைத்து செல்வதும் உண்டல்லவா. காணமுடியாக் காயங்களுடனும், சொல்லவியலா வலிகளுடனும், அரூப முடங்களுடனும் வாழ்க்கையை பந்தயமாக வைத்து மனிதர்கள் மோதிக் கொண்டே செல்கிறார்கள். அவர்கள் தீராக்காயங்கள் வரைந்த சித்திரங்களாக மனித அவலக் காட்சியகங்களின் மெளன அலறலில் தம் குரலை ஒலிக்க விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ட்ரெய்லர்

Thursday, September 3, 2009

காலணிக்குள் உறங்கும் கடல் மணல்


ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்ற பத்தொன்பது வயது இளைஞனான மலிக், பிரான்சின் மத்திய சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றப்படுகிறான். மலிக் ஒர் அனாதை. பதினொரு வயது வரை பள்ளி சென்றவன் என்பதால் நன்கு எழுதவோ, படிக்கவோ அறியாதவன். அவன் மதம் இஸ்லாம் எனினும் அதன் நெறிகளை அவன் பின்பற்றுபவனாக இல்லை.

முதன் முதலாக புதியதோர் சிறைக்குள் நுழையும் ஒர் கைதிக்கு ஏற்படும் பய உணர்வும், அடுத்து என்ன என்ற கேள்வியும் துணையாகவிருக்க, மத்திய சிறைக்கு வந்து சேர்கிறான் மலிக். ஒர் சாதரண கைதிக்குரிய அறை அவனிற்கு வழங்கப்படுகிறது. அவ்வறையின் ஜன்னலினூடு வரும் ஒளி, சில சமயங்களில் அவன் முகத்தையும் ஒர் சிறை அறையாக மாற்றிவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

சிறை வாழ்க்கையில் ஐக்கியமாகவிருக்கும் மலிக், சிறையில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதை விசாரிக்கும் சிறை அதிகாரி, மலிக் இஷ்டப்பட்டால் அவன் தன் கல்வியை தொடரலாம் எனவும், சிறையின் தொழிற்சாலையில் வேலைக்கு சேர முடியும் என்பதையும் அவனிற்கு விளக்குகிறார்.

அவர் ஆலோசனையைப் பின்பற்றும் மலிக் சிறைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்கிறான். சிறையில் அமைந்திருக்கும் துணிகளை தைத்துக் கொடுக்கும் தொழிற்சாலையிலும் வேலைக்கு சேர்ந்து கொள்கிறான்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை, காவலுடன் கூடிய திறந்த வெளிப்பகுதியில் இளைப்பாற அனுமதிப்பது வழக்கம். இப்பகுதியில் கைதிகள் ஓய்வாக இருக்கவோ, உடற்பயிற்சியில் ஈடுபடவோ, தங்களிற்குள் உரையாடிக் கொள்ளவோ, போதைப் பொருட்களை வாங்கிக் கொள்ளவோ முடியும்.

சிறை என்பது வன்முறை நிரம்பியது. கைதிகளை விட வன்முறை சிறைக்கு நெருக்கமானது. இந்த வன்முறை மிகவும் தந்திரமானது. சிறையின் சட்டங்களிலிருந்து தப்புவதற்கு பழக்கப்பட்டது. இத்திறந்த வெளிக்கு முதன் முதலாக வரும் மலிக், அவன் காலில் அணிந்திருக்கும் புதிய காலணிகளை கவர்ந்து கொள்ள விரும்பும் இரு கைதிகளால் தாக்கப்படுகிறான். அவனை காப்பாற்ற யாரும் இல்லை. காவலர்கள் கூட இதனைக் கவனிக்காதது போல் இருக்கிறார்கள். சிறையில் ஒன்று வலியவனாக இருக்க வேண்டும் அல்லது வலியவன் ஒருவனது பாதுகாப்பின் கீழே இருக்க வேண்டுமென்பது மலிக்கிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

5-photos-festival-de-cannes-beautes-cachees-de-cannes-Tahar-Rahim-Niels-Un-prophete_articlephoto இந்த திறந்த வெளிப்பகுதியே ஒர் சிறையில் வாழும் கைதிகளின் அரசன் யார் என்பதை எடுத்துக்காட்டும் பகுதியாகவும் உள்ளது. செஸார் எனப்படும் கோர்ஸிக்கா [பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள ஒர் தீவு] தீவைச் சேர்ந்த மாஃபியா தலைவன் ஒருவனின் தலைமையின் கீழ் இருக்கும் கோர்ஸியக் கைதிகள் அச்சிறையில் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள்.

சிறையின் உயர் அதிகாரிகளையும், காவலர்களையும், சிறைக்கு வெளியே உள்ள சில அதிகாரங்களையும் ஊழல் மூலம் தன் கைக்குள் போட்டுக் கொண்டு, சிறைக்குள் ஒர் ராஜாங்கத்தை நடாத்தி வருகிறான் செஸார். அவன் சொன்னதுதான் அங்கு சட்டம். கைதிகள் இளைப்பாறச் செல்லும் திறந்த வெளியில் இருக்கும் ஒர் வாங்கில் செஸாரையும், அவன் சகாக்களையும் தவிர வேறு யாரும் அமர்ந்து விட முடியாது. செஸார் மன்னரின் அரியணை அது.

இதேவேளையில் செஸாரின் கூட்டத்திற்கு எதிரான ஒர் வழக்கில் அவர்களிற்கு எதிராக சாட்சி சொல்வதற்காக அயூப் எனும் கைதியை சிறையின் மற்றொரு பிரிவில் தற்காலிகமாக தங்க வைக்கிறார்கள் சிறை அதிகாரிகள். இத்தகவலுடன் கூடவே அயூப் அச்சிறையை விட்டு உயிருடன் வெளியே வரக்கூடாது எனும் தகவலும் செஸாரை வந்தடைகிறது.

அயூப், சிறையில் அரபு இனக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதியில் உள்ள ஒர் பிரத்தியேக அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறான். அயூப்பின் கதையை எவ்வாறு முடிக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறான் செஸார். தன் சகாக்களை இவ்விவகாரத்தில் சம்பந்தப்படுத்த அவன் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்.

19138477_w434_h_q80 அரபுக் கைதிகள் இருக்கும் பிரிவின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் மலிக்கிடம் ரகசியமாக உரையாடும் அயூப், மலிக் தன் இச்சைகள் சிலவற்றை தீர்த்து வைத்தால் மலிக் புகைப்பதற்கு போதைப்பொருள் தருவதாகக் கூறுகிறான். இதனால் கோபம் கொள்ளும் மலிக், அயூப்பை திட்டி விட்டு சென்று விடுகிறான்.

சிறையில் எப்போதும் திறந்திருக்கும் காதுகள் வழியாக, அயூப் குளியலறையில் மலிக்கை நெருங்கினான் எனும் தகவலை தெரிந்து கொள்ளும் செஸார், சிறையின் திறந்த வெளிப்பகுதியில் மலிக்கை தன் அடியாட்கள் மூலம் இழுத்து வரச் செய்கிறான்.

அயூப்புடன் நெருங்கிப் பழகி, அவன் இச்சைகளை தீர்த்து வைப்பதாக ஆசைகாட்டி, அவன் கிறங்கியிருக்கும் தருணத்தில் அவனை மலிக் கொலை செய்ய வேண்டும் என மலிக்கிடம் மிரட்டலாக கூறுகிறான் செஸார். இல்லையேல் அயூப்பை தாங்கள் கொலை செய்ய முயலும் தகவலை அறிந்த மலிக்கை தான் தீர்த்துக் கட்டி விடுவதாகவும் எச்சரிக்கிறான்.

article_prophete இக்கொலையை மலிக் வெற்றிகரமாக செய்து முடித்தால் சிறையில் அவன் பாதுகாப்பிற்கு தான் பொறுப்பேற்பதாகவும் செஸார் கூறுகிறான். அவர்களிடமிருந்து தப்ப வேறு வழியின்றி கொலையை தான் செய்வதாக கூறிவிடுகிறான் மலிக்.

செஸார் தன்னை நெருக்கடி செய்ததை சிறை உயர் அதிகாரியிடம் தெரிவிக்க விரும்பும் மலிக்கை, அவ்வுயர் அதிகாரியே செஸாரிடம் மாட்டி விடுகிறான். மலிக்கை, அவன் சிறை அறையிலேயே வைத்து பிளாஸ்டிக் பை ஒன்றினால் அவன் தலையை இறுக்க மூடி மூச்சுத் திணற வைக்கிறார்கள் செஸாரின் குண்டர்கள்.

சக கைதிகளுடன் சேர்ந்து இன்னொரு கைதியை தாக்கி சிறப்பு தண்டனைப் பிரிவிற்கு மாற்றலாகி செல்ல முயற்சிக்கும் மலிக்கின் நடவடிக்கையும் தோல்வியில் முடிகிறது. இதனை அறிந்து கொண்ட செஸார் மலிக்கை சிறை வாராந்தாவில் வைத்து நையப் புடைக்கிறான்.

தொடரும் நாட்களில் செஸாரின் அடியாள் ஒருவன், கன்னக் கதுப்புகளில் எப்படி ரகசியமாக பிளேட்டைப் பதுக்குவது என்பது பற்றிய பயிற்சியை மலிக்கிற்கு அளிக்கிறான். அயூப்பை எப்படி வெட்ட வேண்டும் என்பதும் அவனிற்கு கற்றுத்தரப்படுகிறது. தன் நாக்கும், கன்னக் கதுப்புகளும் வெட்டப்பட்டு ரத்தம் ஒழுக, ஒழுக தன் வாய்க்குள் கூரான பிளேட்டை வைத்து பயிற்சி எடுக்கிறான் மலிக். குறித்த ஒர் நாளில் அயூப்பின் அறைக்கு அவனைத் தேடிச்செல்லும் மலிக் அவனைக் கொலை செய்து விடுகிறான்.

கொலையைத் தொடர்ந்து செஸார் கோஷ்டியின் பாதுகாப்பின் கீழ் வந்து விடுகிறான் மலிக். அக்கோஷ்டியின் எடுபிடி வேலைகளை செய்பவனாகவும் அவன் செயல்படுகிறான். சிறையிலிருக்கும் அரபுக் கைதிகள், மலிக் செஸாரின் நாய் எனக்கூறி அவனை வெறுக்கிறார்கள். செஸாரின் இனவெறி கொண்ட கோர்ஸிக்கா முரடர்களோ மலிக் அரபு இனத்தை சேர்ந்தவன் என்பதால் அவனை ஒர் புழுப் போல் நடாத்துகிறார்கள். காலத்தின் ஓட்டத்தில் மலிக் எவ்வாறு செஸாரின் அரியணையைக் கவிழ்த்து, அச்சிறையின் பெரும் பலமாக மாறுகிறான் என்பது மீதிக்கதை.

un-prophete-2009-17386-327198369 ஒர் சாதரண குற்றவாளியாக சிறைக்கு வரும் ஒர் அரபு இளைஞன், சிறையிலிருந்தவாறே வெளியே தனக்கென ஒர் குற்ற சாம்ராஜ்யத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாது சிறையின் பெரும் பலமாக ஆட்சி செய்த மாஃபியா தாதா ஒருவனை எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை எந்த விட்டுக்கொடுத்தலும் இன்றி Un Prophète [தீர்க்கதரிசி] எனும் படமாக அருமையாக திரைப்படுத்தியிருக்கிறார் Jacques Audiard.

சிறையின் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் ஊழல்கள், சிறையில் காணப்படும் இனவெறிப் போக்குகள், கைதிகளின் தில்லு முல்லுகள், சிறையில் ஆயுள் கைதியாக வாழ்ந்து வரும் வன்முறை, சிறையொன்றின் உள் அரசியல், நிபந்தனைக்குட்பட்ட விடுதலையைக் கூட குற்றச் செயல்களின் பேரங்களிற்காக பயன்படுத்திக் கொள்ளும் குற்ற அமைப்புக்கள் என பிரான்சின் தற்கால சிறைச் சூழலொன்றை கூறு போட்டிருக்கிறார் இயக்குனர்.

நிபந்தனையுடன் கூடிய ஒரு நாள் விடுதலையின் பின் சிறைக்கு திரும்பும் மலிக், தன் காலணிகளை கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த கடல் மணலைக் கண்டு அதனைத் தன் கரங்களில் கொட்டி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணம் சிறைக்கு வெளியே இருக்கும் வாழ்வின் மீதான ஏக்கத்தை சத்தமின்றி உரக்கச் சொல்லி செல்கிறது.

தான் தனியே இருப்பதாக உணரும் வேளைகளில் எல்லாம் மலிக், அயூப்பை தன் அருகில் கற்பனையாக உருவாக்கி கொண்டு உரையாடுவதும், சிறை அறையின் சிறிய ஒர் ஜன்னலின் வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் பனியை விரல்களால் அயூப்பும், மலிக்கும் தொட்டுச் சிலிர்ப்பதும் என ஒரு வன்முறை செறிந்த படத்தை சிறு கவிதைகளால் அழகாக்கி பார்வையாளனின் மனதை மெதுவாக தொட்டு விடுகிறார் ஜாக் ஒடியார்.

image-10163 வன்முறைச் செறிவுகளை நகைச்சுவை கலந்தும், கவர்ந்திழுக்கும் வசனங்களைப் புகுத்தியும் பிரம்மாண்டம் எனக் கொண்டாடும் சர்வதேசத் திரையுலகில் ஜாக் ஒடியார்ட் ஒர் எளிமையான கலைஞனாக எனக்குத் தெரிகிறார். 2009ம் ஆண்டின் கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்திற்கு Grand Prix Du Jury ஐ [ஜூரிகளின் சிறப்பு விருது] வழங்கிச் சிறப்பித்தார்கள். தங்கப் பனை விருதிற்கு அடுத்த அங்கீகாரம் வழங்கும் விருது இதுவாகும். ஜாக் ஒடியார், தற்கால பிரெஞ்சு சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பிரெஞ்சு திரையுலகில் அரபு இனக் கலைஞர்களிற்கு தரப்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதில்லை. அவ்வழமையை உடைத்திருக்கிறது மிக வலிமையான மலிக் பாத்திரம். கனமும், உறுதியும் நிறைந்த இப்பாத்திரத்தை ஏற்றிருப்பவர் இளம் நடிகர் Tahar Rahim.

வெள்ளித்திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக் கொண்டு எம்மைப் பிரம்மிக்க வைக்கிறார் ரஹீம். ஓடும் கண்களுடனும், தடுமாற்றத்துடனும் சிறையில் நுழையும் மலிக், படிப் படியாக மாற்றம் பெறுவதை தன் அபாரமான நடிப்பாலும், வித்தியாசம் காட்டும் உடல் பாஷையாலும் ரசிக்கச் செய்திருக்கிறார் அவர்.

செஸார் பாத்திரத்தில் வரும் Niels Arestrup, தான் ஒர் சிறந்த நடிகர் என்பதை தன் இயல்பான நடிப்பின் மூலம் தெளிவுபடுத்தி விடுகிறார். அவரது முக உணர்ச்சிகள் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கின்றன. அமைதியாக இருக்கும் அவர் சீறும் தருணங்களில் பார்வையாளன் கூடக் குறுகிப் போய்விடுகிறான்.

தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் குற்றவாளி ஒருவன், தன் சிறை வாழ்க்கையின் மூலம் திருந்தி, மீண்டும் சாதாரண வாழ்க்கையில் கலந்து கொள்ள முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சமூகத்தையும், சிறை அமைப்புக்களையும் பார்த்து ரகசியப் புன்னகை பூக்கிறான் மலிக் எனும் இத் தீர்க்கதரிசி. [****]

பிரெஞ்சு ட்ரெய்லர்