Showing posts with label Ridley Scott. Show all posts
Showing posts with label Ridley Scott. Show all posts

Tuesday, June 5, 2012

ப்ரொமீதியஸ் அல்லது பிரம்மாக்களை தேடி


2091, பல்துறை நிபுணர்கள் சிலரை தன்னகத்தே ஏந்திக் கொண்டு பிரபஞ்சத்தின் தொலைதூரச் சந்திரன் ஒன்றை வந்தடைகிறது ப்ரொமீதியஸ் விண்கலம்......

யார் அந்த Space Jockey !? ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தினை இயக்கியபோதே இயக்குனர் ரிட்லி ஸ்காட் தன்னுள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு, ஏலியன் திரைப்பட வரிசையின் எந்தப் பாகமும் விடைகாண முற்பட்டதேயில்லை. ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தில் நொஸ்ட்ரோமோ விண்கலம், ஆபத்துதவி சமிக்ஞை ஒன்றை இடைமறித்துக் கேட்டதன் பின்பாக தன் பயணப் பாதையை மாற்றிக் கொண்டு சமிக்ஞை உருவான இடத்தை நோக்கி செல்லும். அங்கு கேன் எனும் அதிகாரி தலைமையில் நடக்கும் தேடலின்போது வினோதமான ஒரு விண்கலம் அகப்படும். அவ்விண்கலத்தினுள் படிமநிலையில் காட்சியளிக்கும் ஒரு ராட்சதனை கலவோட்டி இருக்கையில் தேடல் குழு கண்டு வியக்கும். இந்த ராட்சதனையே இங்கு இயக்குனர் ரிட்லி ஸ்காட் Space Jockey எனக் குறிப்பிடுகிறார். மனிதனின் உருவ அமைப்பை கொண்ட இந்த ராட்சதன் யார் எனும் இயக்குனரின் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது Prometheus எனும் இத்திரைப்படம்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பறக்கும் தட்டு ஒன்றிலிருந்து இறங்கும் ராட்சதன் ஒருவன் பூமியில் தன்னை அழித்துக் கொள்வதன் மூலம் உயிர்கள் பூமியில் தோன்ற ஆரம்பித்தது என்பது தெளிவாக்கப்படுகிறது. பின், பல நாகரீகங்கள் தோன்றி வாழ்ந்த பகுதிகளில் காணப்பட்ட சுவர் சித்திரங்களில் ராட்சதர்கள், மானுடர்களிற்கு சில நட்சத்திர அமைப்புக்களை சுட்டிக் காட்டுவதும், அதை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பின், ராட்சத மனிதன் சுட்டிக் காட்டிய நட்சத்திரங்களை நோக்கி ப்ரொமீதியஸ் கலத்தில் பயணிப்பதாகவும் கதை நகர்கிறது. இங்கு திரைக்கதையின் பிரதான இழையானது மனிதனை படைத்தவர்களாக இருக்ககூடியவர்களை தேடிச் செல்லுதல் என்பதாகவே பின்னப்பட்டிருக்கிறது. ஆகவே திரைப்படமானது வேற்றுக் கிரக கொடிய ஜந்துக்களான ஏலியன்கள் பற்றி பேசுவதிலிருந்து தன்னை தள்ளி வைத்துக் கொள்ளுகிறது. ஆகவே பிசுபிசுப்பாக மின்னும், அமிலத் திரவம் ஒழுகும், பளபளப்பான கறுப்பில் அட்டகாசம் காட்டி அராஜகம் செய்யும் வேற்றுக்கிரகக் குலக் கொழுந்துகளான ஏலியன்களையும், அவற்றுடனான மோதல்களையும் மனதில் எண்ணிக் கொண்டு இத்திரைப்படத்தினுள் நுழைந்தால் ஏலியன்களிற்கு பதிலாக கொடிய ஏமாற்றம் உங்களிற்காக அங்கு காத்திருக்கும் என்பதுதான் உண்மை.

கெத்தான என் போட்டோவ போட்ட மவராசன் யாருலே
மாறாக மானுட குலமானது எழுப்பக்கூடிய அடிப்படைக் கேள்விகளான நாம் எவ்வாறு உருவாகினோம், எம்மை படைத்தது யார் போன்றவற்றிற்கு ஒரு வேறுபட்ட பார்வையை நீங்கள் கேளிக்கைக்காகவாவது ஏற்றுக் கொள்ளும் இளகிய உள்ளம் கொண்டவரெனில் இத்திரைப்படம் உங்களை ஏமாற்றாது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே திரையில் அவர் விரிக்கும் காட்சிகள் மூலம் ரசிகனைக் கவர ஆரம்பிக்கிறார் இயக்குனர். உயிரிகள் இன்னம் தோன்றா பூமியின் நிர்மலம், இனிய செவ்விசை ஒழுக விண்வெளியில் பயணிக்கும் விண்கலம், அதனுள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமர்த்தான அண்ட்ரொய்ட் என்பன வழியாக கதையின் சூழலிற்குள் மென்மையாக ஒருவரை எளிதாக இழுக்கிறது திரைப்படம்.

எவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட, ஒரு அண்ட்ரொய்ட் மனிதனின் ரசனையை எட்ட முயல்கிறது, அவன் அறிவையும், ஆற்றலையும் எளிதாக தாண்டிச் செல்ல தயங்காது இயங்குகிறது என்பதை ஆரம்பக் காட்சிகளில் சிறப்பாக காட்சிப்படுத்துகிறார் ரிட்லி ஸ்காட். படைத்தவன் திறமையையும், மாட்சிமையும் தாண்டிச் செல்ல விழையும் மனித இயல்பையும், அதைப் பற்றிக் கொள்ள துடிக்கும் ஒரு அண்ட்ரொய்டின் செயற்பாடுகளையும் மெல்லிய ஒரு கோடாக இந்தக் காட்சிகள் உணர்த்தியவாறே நகர்கின்றன.

சந்திரனை நெருங்கிய பின்பாக வழமைபோலவே துயில் கலையும் நிபுணர்கள் குழுவின் அறிமுகம், அவர்களின் திறமைகள், தனித்தன்மைகள், அவர்களிற்கிடையே உள்ள வேறுபாடுகள் என கதையை வழமை மாறாது நகர்த்துகிறார் இயக்குனர். இங்கு நடிகை சார்லைஸ் தெரோன் சுயநலமிக்க ஒரு செல்வந்தனின் வாரிசாக காட்டப்படுகிறார். இறுக்கமான, கண்டிப்பான பாத்திரமாக அவர் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் வீண்டிக்கப்பட்ட ஒரு நடிகையாகவே திரைப்படத்தில் காணப்படக்கூடியவராக இருக்கிறார். அவர் மார்புகளில் ஒன்றையாவது காட்டியிருந்தாலாவது அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என இங்கு என்னால் எழுத முடிந்திருக்கும். ஆனால் என்ன செய்வது. என்னிடம் நல்ல நடிகை எனும் பெயர் வாங்க அவரிற்கு இம்முறை சந்தர்ப்பம் அமையவில்லை.

சிவ்காசி எங்க இருக்குலே...
ப்ரொமீதீயஸ் கலத்திலிருந்து வெளியேறும் நிபுணர்கள், புதிய சந்திரனில் காணப்படும் வினோத கட்டமைப்பு ஒன்றினுள் நுழைந்து தம் தேடல்களை ஆரம்பிக்கின்றனர். இதிலிருந்து கதையின் பெரும்பகுதியானது ப்ரொமீதீயஸ் விண்கலத்தினுள்ளும், ராட்சதர்களின் வினோதக் கட்டமைப்புக்குள்ளும் நிகழும் நிகழ்வுகளையே திரைப்படுத்துகிறது. இந்த இரு அடைப்பட்ட வெளிகளிற்குள்ளும் புறமாக இருக்கும் சந்திரனின் நிலவியலை திரைப்படம் தள்ளி வைத்திருக்கிறது. அது ஒரு சிறு குறையாகவே எனக்கு தெரிகிறது. அடைப்பட்ட இரு வெளிகளினுள் மனிதர்கள் மனதில் உருவாகும் கேள்விகள், தகராறுகள் போன்றவற்றை அவற்றின் அழுத்தத்துடனும்,பதட்டத்துடனும் எடுத்து வருகிறார் ரிட்லி ஸ்காட். இருப்பினும் அவர் இங்கு காட்டியிருக்கும் பதட்டத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. கதையின் நகர்வோடு ராட்சதர்களின் கட்டமைப்பின் மர்மம் குறித்த ஆர்வத்தையும் திரைக்கதை எளிதாக ஏற்றிக் கொண்டே செல்கிறது. அந்தக் கட்டமைப்பு என்ன, எதற்காக அது அங்கு உருவாக்கப்பட்டது, ராட்சதர்கள் அங்கு செய்த காரியங்கள் என்ன, இன்று இந்தக் கட்டமைப்பில் ராட்சதர்களின் உடல்கள் மட்டுமே காணப்படுவதற்கான காரணம் என்ன..... இவ்வகையான கேள்விகளிற்கு விடையை சுவையாக திரைப்படம் தன் நகர்வோடு எடுத்து வருகிறது.

தனக்கு மேலான சக்தி ஒன்றின் மீது மனிதர்கள் கொண்டிருக்ககூடிய நம்பிக்கையையும் திரைப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. மரணத்தை எம்மை படைத்தவர்களால் தள்ளி வைக்க இயலுமா என்பதற்கு வேதனையான கிண்டலை திரைப்படம் பதிலாக தருகிறது. நித்திய வாழ்வு என்பது பிரம்மாக்களிற்கே கூட இல்லாத ஒன்று என அது கேலி செய்கிறது. ராட்சதன், மனிதன், ஆண்ட்ரொய்ட் எனும் படைப்புக்கள் வழியாக படைப்பின் அர்த்தம் என்ன எனும் கேள்வியையும் அது எழுப்புவதிலிருந்து விலகிச் செல்வதில்லை. எந்த ஒரு மேலான படைப்பின் அழிவும் ஒரு சிறு உயிரிலிருந்து உருவாகிவிடக்கூடும் எனும் உண்மையையும் அது திகிலுடன் காட்சிப்படுத்துகிறது.

திரைப்படத்தின் மிகச்சிறந்த பாத்திரம் அன்ட்ரொய்ட் டேவிட். அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் மிக்கேல் ஃபாஸ்பெண்டெர் சிறப்பாக தன் நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரைத் தவிர திரைப்படத்தில் சிறப்பான நடிப்பு என்பதை குகைகளிற்குள் தேடித்தான் அலைய வேண்டும். விண்கலமும், இயந்திர வண்டிகளும் நடிகை நூமி ரப்பாஸை விட அருமையாக நடித்திருக்கின்றன. அவரை வைத்து இப்படத்தின் தொடர் எதையும் உருவாக்கும் எண்ணம் தயாரிப்பாளர்களிற்கு இருப்பின் அதை அவர்கள் எங்காவது தொலைதூரச் சந்திரனில் சென்று தீர்மானித்தால் அது ரசிகப் பெருமக்களிற்கு ஒரு நல்ல சேதியாக அமையும்.

படத்தில் சிறப்பு வரைகலைநுட்பக் காட்சிகள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ராட்சதர்களின் வினோதக் கட்டமைப்பு, அதில் மறைந்திருக்கும் அந்த வாகனம் !! என்பன எல்லாம் அற்புதமான ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குகை போன்ற அந்தக் கட்டமைப்பினுள் மனிதர்கள் நுழையும் போதெல்லாம் சிறப்பான ஒளிப்பதிவு எம்மை திகிலோடு ஒன்றச் செய்கிறது. இதற்காக அதிரடி ஆக்‌ஷன்களை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். கதையில் உள்ள மர்மம்தான் படத்தினை விரைவாக நகர்த்தி செல்கிறது. திரைப்படத்தில் இருக்கும் ஆக்‌ஷனை அதிரடி என வகைப்படுத்த முடியாது. இருப்பினும் உச்சக் கட்டக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. ரத்தம் தெறிக்கும் காட்சிகளின் ரசிகர்கள் சப்புக் கொட்டிக் கொண்டே பார்க்கலாம். போனால் போகிறது என்று கொடிய அராஜக ஜந்துவான ஏலியன் எவ்வாறு தோன்றியது என்பதையும் இயக்குனர் இறுதியில் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பில்லாமல் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார் ரிட்லி ஸ்காட். அழிவிலிருந்தே சில வேளைகளில் சில ஆரம்பங்கள் துவக்கம் பெறுகின்றன. ஆக்குபவனே அழிக்கவும் செய்வான், அதற்கான காரணங்கள் அவனிற்கே வெளிச்சம் என்பதாக திரைப்படம் கேள்வியுடன் நிறைவுறுகிறது. அதிக ஆக்‌ஷன் இல்லாத, கதையம்சத்துடனும், சிந்திக்க வைக்கும் கேள்விகளுடனும் கூடிய மென் அறிபுனை திரைப்படம் இது. மீண்டும் சொல்கிறேன் ஏலியன்களையும், ஆக்‌ஷனையும் எதிர்பார்த்து சென்று ஏமாறாதீர்கள்.

ட்ரெய்லர்













Thursday, May 13, 2010

விருட்சங்களின் வில்லாளி


புனித மண்ணில், சிலுவைப் போரில் பங்கு பற்றிய பின், தன் நாடு திரும்பும் இங்கிலாந்து மன்னனான ரிச்சர்ட், பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கோட்டை, கொத்தளங்களை தன் துருப்புக்கள் சகிதம் முற்றுகையிட்டு அழிக்கிறான்.

மன்னன் ரிச்சர்ட்டின் துருப்புக்களில் அங்கம் வகிக்கும் வில் வீரர்களில் மிகவும் சிறந்த வில்லாளியாக திகழ்ந்து வருகிறான் Robin Longstride [Russell Crowe]. ராபினின் சிறு வயதிலேயே அவன் தந்தை அவனை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறும் ராபின், தந்தையின் நெருக்கமும், அன்பும் கிடைக்காத ஒருவனாகவே தன்னை உருவகித்துக் கொள்கிறான்.

கோட்டைகள் மீதான தாக்குதல்கள் ஓய்வு பெற்றிருந்த இரவு நேரமொன்றில், மன்னன் ரிச்சர்ட் தன்னிடம் கேட்கும் கேள்விகளிற்கு நேர்மையாகப் பதிலளிக்கிறான் ராபின். இந்த நேர்மைக்கு பரிசாக ராபினையும், அவன் நண்பர்களையும் தளைகளில் பூட்டி வைக்குமாறு தண்டனை வழங்குகிறார் மன்னன் ரிச்சர்ட்.

தன் மண்ணில் அட்டூழியங்களை துணிவுடன் நிகழ்த்தி வரும் இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டை எவ்வகையிலாவது தீர்த்துக் கட்ட வேண்டுமென்று விரும்புகிறான் பிரான்ஸ் மன்னனாகிய பிலிப். இதற்காக Godfrey [Mark Strong] எனும் ஆங்கிலேயனின் உதவியை அவன் நாடுகிறான்.

கோட்ஃப்ரேய், மன்னன் ரிச்சர்ட்டின் பொறுப்பற்ற சகோதரன் ஜானிற்கு மிகவும் நெருக்கமானவன். மன்னன் ரிச்சர்ட்டை ஒழித்துக் கட்டினால் அதன் பின் மன்னனாக பதவியேற்கும் ஜானின் திறமையற்ற ஆட்சியின்போது இங்கிலாந்து நாட்டை எளிதாக வெற்றி கொள்ளலாம் எனும் பேராசை பிரான்ஸ் நாட்டு மன்னன் பிலிப்பிற்கு இருக்கிறது. பிரான்ஸ் நாட்டு மன்னன் தனக்கு வழங்குவதாக ஆசைகாட்டும் செல்வத்திற்காக மன்னன் ரிச்சர்ட்டை தீர்த்துக் கட்டுவதற்கு உடன்படுகிறான் கோட்ஃப்ரேய்.

robin-des-bois-2010-14633-1741134152 இந்த சமயத்தில் கோட்டை ஒன்றின் முற்றுகையின் போது, அம்பு ஒன்று கழுத்தில் பாய்ந்து பிரான்ஸ் மண்ணிலேயே தன் உயிரை துறக்கிறார் இங்கிலாந்து மன்னரான ரிச்சர்ட். மன்னன் ரிச்சர்ட்டின் மரணச் செய்தியை அறிந்து கொள்ளும் ராபினும் அவனது நண்பர்களும் அவர்களது நண்பன் ஒருவனின் உதவியால் தளைகளிருந்து விடுவிக்கப்பட்டு, மோதல் நடந்த இடத்திலிருந்து தப்பிச் செல்கிறார்கள். வெகு விரைவாக இங்கிலாந்திற்கு சென்று விட வேண்டுமென்பதே அவர்கள் நோக்கமாகவிருக்கிறது.

இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட், களத்தில் வீர மரணம் அடைந்த செய்தியை இங்கிலாந்து நாட்டிற்கு தெரிவிக்க ஒரு வீரர் குழுவுடன் கிளம்பிச் செல்கிறான் ரிச்சர்ட்டின் நம்பிக்கைக்குரிய வீரனான Robert Loxley. இறந்த மன்னனின் முடியையும் அவன் தன்னுடன் கூடவே எடுத்துச் செல்கிறான்.

ராபர்ட் லொக்ஸ்லியின் குழுவை, இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டும் அவன் வீரர்களுமென நினைத்து அவர்கள் செல்லும் வழியில் எதிர் கொண்டு தாக்குகிறது கோட்ஃப்ரேயின் கூலிப்படை. தாக்குதலின் முடிவில் குற்றுயிராக நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் ராபர்ட் லொக்ஸ்லியிடமிருந்து மன்னன் ரிச்சர்ட் மரணமான செய்தியைக் கேட்டு ஆச்சர்யமும், மகிழ்வும் கொள்கிறான் கோட்ஃப்ரேய்.

ராபர்ட் லொக்ஸ்லி தன்னுடன் எடுத்து வந்த மன்னன் ரிச்சர்ட்டின் முடியை தன்னகப்படுத்த விரும்புகிறான் கோட்ஃப்ரேய் ஆனால் மோதலில் ஏற்பட்ட அச்சத்தால் மன்னனின் முடியிருந்த பையை சுமந்து வந்த குதிரை வெருண்டு தறி கெட்டு ஓட ஆரம்பிக்கிறது.

robin-des-bois-2010-14633-1709390665 முடியைக் கைப்பற்றும் பொருட்டு வேகமாக ஓடிச் செல்லும் குதிரையை துரத்த ஆரம்பிகிறார்கள் கோட்ஃப்ரேயின் கூலிப்படையினர். மரங்களடர்ந்த பாதையினுடாக ஓடும் குதிரை, ராபினும் அவன் நண்பர்களும் தப்பிச் சென்று கொண்டிருக்கும் பாதைக்கு வந்து விடுகிறது. தனியாக ஓடி வரும் குதிரையை மடக்க எத்தனிக்கிறான் ராபின். ஆனால் குதிரையை துரத்தி வந்த கோட்ஃப்ரேயின் கூலிப்படையினர் ராபினையும் அவன் நண்பர்களையும் தாக்க ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் மோதலில் கோட்ஃப்ரேயையும் அவன் கூலிப்படையையும் விரட்டி அடிக்கிறார்கள் ராபின் குழுவினர். ராபின் எய்யும் அம்பிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைக்கிறான் கோட்ஃப்ரேய்.

கூலிப்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி குற்றுயிராக நிலத்தில் கிடக்கும் ராபர்ட் லொக்ஸ்லியின் உதவிக் குரல் கேட்டு அவனை நெருங்குகிறான் ராபின். தன்னிடமிருக்கும் தன் தந்தையின் வாளை அவரிடம் திருப்பி ஒப்படைக்கும்படி ராபினிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டு தன்னுயிர் நீங்குகிறான் ராபர்ட் லொக்ஸ்லி.

லொக்ஸ்லியும் அவனது வீரர்களையும் இங்கிலாந்திற்கு ஏற்றிச் செல்வதற்காக அவர்களிற்காக காத்திருக்கும் ஒரு கப்பலை நோக்கியே அவர்கள் பயணம் அமைந்திருந்தது என்பதை ஒரு வரைபடம் மூலம் அறிந்து கொள்ளும் ராபினும் அவனது நண்பர்களும் கூலிப்படையுடனான மோதலில் உயிர் நீத்த வீரர்களின் உடைகளை அணிந்து கொண்டு, மன்னன் ரிச்சர்ட்டின் முடியையும் எடுத்துக் கொண்டு கப்பல் நிற்கும் இடத்தை அடைந்து இங்கிலாந்து பயணமாகிறார்கள்.

இங்கிலாந்து நோக்கிய கப்பல் பயணத்தின்போது லொக்ஸ்லியின் வாளின் கைபிடியை ஆராயும் ராபின், அதில் எழுதியிருக்கும் சில வார்த்தைகள் தனக்கு முன்பே பரிச்சயமாக உள்ள மாதிரியான ஒரு உணர்வை அவனிற்கு வழங்குவதை எண்ணி குழம்புகிறான். கடல் பயணத்தின் முடிவாகக் கப்பலும் இங்கிலாந்தை வந்தடைகிறது.

இங்கிலாந்து அரச மாளிகையில் ரிச்சர்ட்டின் தாயிடம் அவன் அணிந்திருந்த முடியை வழங்குகிறான் ராபின். தன் அன்பு மகனின் மரணச் செய்தியால் வருந்தும் அந்தத் தாய் தனது இளைய மகன் ஜானிற்கு அந்த இடத்திலேயே முடியைச் சூட்டி அவனை இங்கிலாந்தின் மன்னன் ஆக்கி விடுகிறாள். இந்தவேளை அரண்மனையை வந்தடையும் மன்னன் ஜானின் நண்பனான கோட்ஃப்ரேய் அங்கு ராபினைக் கண்டு கொள்கிறான். தன்னைப்பற்றிய உண்மையை அறிந்த ராபினை தீர்த்துக் கட்டுவது என்ற தீர்மானத்திற்கும் அவன் வருகிறான்.

robin-des-bois-2010-14633-815822688 அரண்மனையில் முடியைக் கையளித்த கையோடு அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் செல்லும் ராபின், ராபர்ட் லொக்ஸ்லிக்கு தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவன் தந்தை வாழ்ந்து வரும் கிராமத்தை நோக்கி தன் நண்பர்களுடனும், லொக்ஸி தந்த வாளுடனும் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான்.

நோட்டிங்ஹாம் எனும் பகுதியில் அமைந்திருக்கும் அச்சிறு கிராமத்தின் மக்கள், மன்னன் விதித்த வரிகளாலும், கிறிஸ்தவ மதத்தின் மனித நேயமற்ற பேராசையாலும் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அங்கு லொக்ஸ்லியின் மனைவியான Marion னிடம் [Cate Blanchett] தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் ராபின்.

தன் மகன் ராபர்ட் லொக்ஸியின் வரவை பல வருடங்களாக ஆசையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வால்ட்டர் லொக்ஸ்லி, தன் வீட்டில் அவனுடைய மரணச் செய்தியை வரவேற்கிறார். வாளை தன்னிடம் அக்கறையாக எடுத்து வந்த ராபினின் குடும்பப் பெயரை கேட்டு அறியும் கண் பார்வையற்ற வால்ட்டரின் முகத்தில் ஆச்சர்யத்தின் அறிகுறிகள் புலனாகின்றன. ராபின் தனது வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து தன் மகனைப் போல கிராமத்தவர்களிடம் நடித்தால் ராபின் குறித்த சில விடயங்களை அவனிற்கு தான் தெரிவிப்பதாக அவனிடம் கூறுகிறார் பெரியவர் வால்ட்டர். வாளின் கைப்பிடியில் எழுதியிருந்த வார்த்தைகள் தந்த உணர்வால் உந்தப்படும் ராபின் இதற்கு உடன்படுகிறான்.

இங்கிலாந்தின் மன்னனாக புதிதாகப் பதவியேற்ற ஜான், தன் கஜானாவை நிரப்பும் பொருட்டு மேலதிகமான வரிகளை விதிக்க ஆரம்பிக்கிறான். வரிகளை தராது இழுத்தடிக்கும் மக்களையும், ஆட்சியாளர்களையும் தகுந்த முறையில் கவனித்து அவர்களிடமிருந்து வரிப் பணத்தை சேகரித்து வரும் பொறுப்பை மன்னன் ஜான், தனக்கு நெருக்கமான கோட்ஃப்ரேய்க்கு வழங்குகிறான்.

பிரான்சில் இருந்து இங்கிலாந்து மண்ணிற்கு ரகசியமாக வந்திறங்கிய பிரெஞ்சு வீரர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, மன்னன் ஜான் பெயரால் இங்கிலாந்துக் கிராமங்களைச் சூறையாட ஆரம்பிக்கிறான் கோட்ஃப்ரேய். இதனால் பாதிப்புற்ற கிராம மக்களும், ஆட்சியாளர்களும் இங்கிலாந்து மன்னன் ஜானிற்கு எதிராக கிளர்ந்தெழுகிறார்கள்.

robin-des-bois-2010-14633-496198866 இதற்காகவே காத்திருந்த கோட்ஃப்ரேய், பிரான்ஸ் நாட்டு மன்னன் பிலிப்பை இங்கிலாந்திற்கு தன் படைகளுடன் கிளம்பி வருமாறு தகவல் சொல்லியனுப்புகிறான். மேலும் தன் ஒற்றன் ஒருவன் வழியாக தான் தீர்த்துக் கட்ட விரும்பும் ராபின் சிறு கிராமமொன்றில் ராபர்ட் லொக்ஸ்லி எனும் பெயரில் வாழ்ந்து வருவதையும் அவன் அறிந்து கொள்கிறான். ராபின் வாழ்ந்து வரும் அந்த சிறு கிராமத்தை நோக்கி தன் படைகளுடன் விரைந்து செல்கிறான் கோட்ஃப்ரேய்…..

வால்டரிடமிருந்து ராபின் அறிந்து கொண்ட விடயங்கள் என்ன? மன்னன் ஜானிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்களின் நிலை என்னவாயிற்று? கோட்ஃப்ரேய் தான் பழி தீர்க்க விரும்பிய ராபினை தீர்த்துக்கட்ட முடிந்ததா? இங்கிலாந்தை கைப்பற்ற வேண்டும் என ஆசை கொண்டிருந்த பிரான்ஸ் மன்னன் பிலிப்பின் கனவுகள் நனவாகியதா? படத்தைப் பார்த்து விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

இங்கிலாந்து நாட்டார் இலக்கியத்தின் புகழ் பெற்ற நாயகர்களில் ஒருவன் ராபின் கூட். செல்வம் படைத்தவர்களிடமிருந்து எடுத்து வழியற்றவர்களிற்கு வழங்குபவனாகவும், அதிகாரத்தை எதிர்த்து மோதுபவனாகவும் அவன் சித்தரிக்கப்படுகிறான். ராபினிற்கு பின்னால் கூட் எனும் பெயர் வந்து ஒட்டிக் கொண்டு விடுவதற்கு முன்னாகவுள்ள அந்த நாயகனின் வாழ்வை திரைக்கு எடுத்து வருகிறது பிரபல இயக்குனர் Ridley Scott இயக்கியிருக்கும் Robin Hood எனும் இத்திரைப்படம்.

ரிட்லி ஸ்காட்டின் படங்களிலிருக்கும் வழமையான பிரம்மாண்டத்தின் அளவு இப்படைப்பில் ஒரு படி குறைவாகவே இருந்தாலும், ரிட்லி ஸ்காட்டின் கைகளில் ராபின் கூட் பாத்திரம் எவ்வாறு உருவாகி வரப் போகிறது என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களை அவர் அதிகம் ஏமாற்றி விடவில்லை. தன் திறமையான இயக்கத்தால் படத்தின் கதையையும் தொய்வற்ற வகையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

சிலுவைப் போர் தந்த அனுபவங்களினால் போரை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவனாக இருக்கும் ராபின், நேர்மையான ஒரு மனிதனாக சித்தரிக்கப்படுகிறான். தான் தந்த வாக்குறுதியை காப்பாற்றுவதை முதன்மையானதாகக் கருதுகிறான். மனித நேயமற்ற மதத்தின் பிடிகளிலிருக்கும் மனிதர்களிற்கு வாழ்வை இலகுவாக்கவும் அவன் தயங்குவதில்லை. இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டின் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் எந்த சுதந்திரமுமின்றி ஒடுக்கப்படுவதை அவன் எதிர்க்கிறான். இதே ஜான் மன்னனிற்காக பிரெஞ்சு நாட்டுப் படைகளுடன் அவன் மோதுகிறான்.

robin-des-bois-2010-14633-1121125798 கனமான இந்தப் பாத்திரத்தை எந்தவித அலட்டலுமில்லாது, இயல்பாக, ரசித்து செய்திருக்கிறார் நடிகர் ரஸ்ஸல் குரோவ். ராபின் பாத்திரத்தில் மிளிரும் அவரின் மிகையற்ற நடிப்பு அந்தப் பாத்திரத்தை ரசிகர்கள் மனதில் மிக இலகுவாக ஒன்ற வைத்து விடுகிறது. ரஸ்ஸலிற்கும் கண்பார்வையிழந்த வால்ட்டர் லொக்ஸிக்கும் இடையிலான சில தருணங்கள் மனதை நெகிழ வைக்கும். நடிகர் ரஸ்ஸலிற்கும் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டிற்குமிடையில் மந்திரம் வேலை பார்த்திருக்கிறது.

ரஸ்ஸலிற்கும், மரியானாக வரும் நடிகை கேட் பிளாஞ்சட்டிற்குமிடையில் ஜோடிப் பொருத்தம் அபாரம். அவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல மென்மையாக மலரும் உறவில் புதிதாய் பூத்த பூவின் அழகு கலந்திருக்கிறது. அதிகாரத்தினதும், மதத்தினதும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் ஒரு கடின உழைப்பாளியாக மரியான் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிது காலமே தன்னுடன் வாழ்ந்த கணவனின் இறப்பை தன் விழிகளில் வேதனையுடன் விழுங்கிக் கொள்கையில் நடிகை கேட் பிளாஞ்சட் அசத்துகிறார். தனது பாத்திரத்தை அதற்குரிய அழகுடனும் கண்ணியத்துடனும் செய்து காட்டியிருக்கிறார் அவர். இன்னும் கொஞ்சம் கனிவாகக் கேள் என்று ரஸ்ஸல், கேட்டை மடக்கும் தருணங்கள் இரண்டும் அருமை.

படத்தில் அடுத்து குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாத்திரங்கள் மார்சல் வில்லியமாக வரும் நடிகர் வில்லியம் ஹர்ட் மற்றும் குரூரமான வில்லன் கோட்ஃப்ரேயாக தோன்றும் நடிகர் மார்க் ஸ்ட்ராங். வில்லியம் ஹர்ட் தனது கம்பீரமான நடிப்பில் அசத்துகிறார் எனில் எரிச்சல் கொள்ள வைக்கும் வில்லனாக அடக்கமாக நடித்திருக்கிறார் நடிகர் மார்க் ஸ்ட்ராங். மார்க் ஸ்ட்ராங்கின் திறமைக்கேற்ற வகையில் அவர் பாத்திரம் உருவாக்கப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம் தருகிறது.

robin-des-bois-2010-14633-459631032 திரைப்படத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, அழகான இயற்கைக் காட்சிகள், காடுகள், யுத்தக் காட்சிகள் என புகுந்து விளையாடி இருக்கிறது கமெரா. மத்திய காலப் பகுதிக்குரிய அலங்காரங்களையும், செட்டுக்களையும் அமைத்து அசத்தியிருக்கிறது கலை இயக்கத்திற்கு பொறுப்பான அணி. ரிட்லி ஸ்காட்டின் படங்களில் வழமையாகக் கேட்டு ரசிக்க கூடிய இசையும் உண்டு.

இருப்பினும் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. ஆக்‌ஷன் விருந்தை எதிர்பார்த்து சென்றவர்களிற்கு பாதி விருந்துதான் கிடைக்கிறது. ஆரம்பத்தில் வரும் கோட்டைத் தாக்குதல் காட்சி தந்த ஆசை படத்தில் முழுமையாகவில்லை. இங்கிலாந்தின் தென்பகுதிக் கடற்கரையில் இடம்பெறும் இறுதிச் சண்டைக்காட்சி கூட சற்று ஏமாற்றியே விடுகிறது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் உள்ள கொதிப்பையும், கொந்தளிப்பையும், வன்னதிர்வையும் திரை வழியே ரசிகர்களிடம் எடுத்து வருவதில் தான் ஒரு மன்னன் என்பதை ரிட்லி ஸ்காட் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

ராபின் லாங்ஸ்டிரைட் எந்தக் காரணத்தால் ராபின் கூட்டாக மாறினான், மரங்கள் அடர்ந்த காடுகளில் ஒரு சட்ட விரோதியாக ஏன் அவன் வாழ வேண்டியிருந்தது என்பதோடு படம் நிறைவடைந்து விடுகிறது. பாதிக் கதையுடன் திரைப்படம் முடிவடைந்து விட்டதே என மனதில் எழும் நிறைவற்ற உணர்வை விலத்த முடியாதிருக்கிறது. தன் திறமையான இயக்கத்தால் கதையை அருமையாக நகர்த்திச் சென்று அதன் வழி ரசிகர்களின் மனதில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர் திரைப்படத்திற்கு வழங்கும் முடிவு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நசுக்கி விடுகிறது. இந்த முடிவிற்குதானா இவ்வளவும் என்ற கேள்வி திடமாக எழுகிறது. ஒரு வெறுமை அந்த முடிவை சூழ்ந்திருக்கிறது.

ரிட்லி எய்த இந்த அம்பு அதன் இலக்கை தொட்டிருக்கிறது ஆனால் அதன் இதயத்தை எட்டவில்லை! [***]

ட்ரெயிலர்