Saturday, January 29, 2011

மரணம் எழுதும் வாழ்க்கை


பிரெஞ்சு தொலைக்காட்சியில் பணிபுரியும் மரி, சுனாமி அனர்த்தம் ஒன்றில் அகப்பட்டு இறப்பை கண்டு மீள்கிறாள். இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் சிறுவனான மார்க்கஸ் தன் அன்பிற்குரிய ஒரு உயிரை இழந்து அதன் துயரிலிருந்து மீளமுடியாது வாடுகிறான். அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜிற்கு இறந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய அபூர்வ சக்தி வாய்த்திருக்கிறது…..

வருடத்திற்கு ஒரு திரைப்படம் எனும் வகையில் வேகமாக இயங்கி கொண்டிருக்கும் இயக்குனர் க்ளிண்டிஸ்ட்வூட்டின் சமீபத்திய திரைப்படமான Hereafter மரணத்தின் பின்பான வாழ்வுகள் குறித்து நீண்டு நிதானமாக பேசுகிறது. மரணமடைந்தவர்களிற்கு மரணத்தின் பின்பாக காத்திருக்கக்ககூடிய ஒரு வாழ்வு, மரணத்தால் தம் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் வாழ்வு, மரணமடைந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்களின் வாழ்வு, மரணத்தை சந்திந்து மீண்டவர்களின் வாழ்வு என திரைப்படத்தின் மூன்று பிரதான பாத்திரங்கள் வழி மரணம் குறித்த, அதற்கு பின்பாக உள்ள வாழ்க்கைகள் குறித்த ஒரு பார்வையை தனக்கேயுரிய பாணியில் முன்வைத்திருக்கிறார் இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்ட்வூட். படத்திற்கு இசையையும் க்ளிண்ட்டே வழங்கியிருக்கிறார்.

சுனாமியில் அகப்பட்டு, ஒரு கணம் தன்னுயிரை இழந்து மீளும் மரி, அக்கண நேரத்தில் தான் கொண்ட அனுபவம் காரணமாக இறந்தவர்கள் வாழும் உலகம் குறித்த கேள்விகளை எழுப்ப ஆரம்பிக்கிறாள். இறந்தவர்களின் உலகம் என்பது குறித்து நிலவும் அசட்டைத்தனத்தை எதிர்த்து தன் அனுபவங்களையும், இறந்தவர்கள் உலகம் குறித்து இதுவரை நிகழ்த்தப்பட்ட ஆதாரபூர்வமான ஆராய்ச்சிகளையும் கொண்டு தன் கருத்துக்களை முன்வைக்கும் அவள், தன் புகழையையும், மதிப்பையும் தொலைக்க ஆரம்பிக்கிறாள். அவள் நம்பியிருந்த உறவும், நட்பும் அவளை இலகுவாக கைகழுவிவிடுகின்றன. ஆனால் மரணத்தின் பின்பான வாழ்வு குறித்த அவள் எண்ணங்களை அவள் விட்டுத் தருவதாக இல்லை. மரி தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் வழி இறப்பின் பின்பாக இருக்க கூடிய இறந்த ஆன்மாக்களின் உலகு குறித்த பெரும்பான்மையானவர்களின் கருத்தும் அதற்கு எதிரான போராட்டங்களும் சித்தரிக்கப்படுகின்றன. மரியாக பாத்திரமேற்றிருக்கும் நடிகை Cécile de France இறந்தவர் போலவே நடிப்பை வழங்கியிருக்கிறார். மிகவும் அனுபவம் கொண்ட க்ளிண்ட் எவ்வாறு இந்த நடிகையின் திறமையை ஏற்றுக்கொண்டார் என்பது வியப்படைய வைக்கும் ஒன்றாகும்.

தன் அன்பிற்குரிய உறவை இழந்த சிறுவன் மார்க்கஸ், மரணத்தின் பின்பான வாழ்க்கை குறித்து தேடல்களை நிகழ்த்துகிறான். தான் இழந்த அன்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள ஓயாது விழைகிறான். இதற்காக இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடியவர்களை அவன் நாடிச் செல்கிறான். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவன் தாயிடமிருந்து விலக்கப்பட்டு, பிறிதொரு குடும்பத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்படும் மார்க்கஸின் வாழ்க்கை அவன் இழந்த உறவுடன், அதன் இறப்பின் பின்னும் இணைந்திருக்கவே விரும்புகிறது. சிறுவன் மார்க்கஸ் பாத்திரம் வழி உறவுகளின் மதிப்பையும், அதன் இழப்பு வழங்கும் வலியையும், அதனால் முடக்கப்படும் வாழ்வையும் இயக்குனர் திரைப்படுத்தினார் எனில் அதன் இன்னொரு புறமாக இறந்தவர்களுடன் தொடர்பு கொள்கிறேன் என்றுகூறி அப்பாவிகளை ஏமாற்றி காசு பார்க்கும் கூட்டத்தை பற்றியும் அவர் திரைப்படுத்தியிருக்கிறார். சிறுவன் மார்க்கஸாக வரும் Frankie Mclaren தனது வலிநிறைந்த பார்வை ஒன்றினாலேயே மனங்களை நெகிழ வைத்து விடுகிறார்.

au-dela-2010-19333-129731086 இறந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஜார்ஜ்ஜின் வாழ்க்கையோ சிறப்பானதாக இல்லை. சாதாரண வாழ்க்கை ஒன்றை வாழவோ, நிலையான உறவு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவோ முடியாத நிலை அவனிற்கு. இதனால் அவன் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்தி விடுகிறான். தனக்கிருக்கும் சக்தி, ஒரு சாபம் என்று கருதியவாறே அவன் தன் வாழ்க்கையை நகர்த்துகிறான். ஜார்ஜ் பாத்திரம் விசேட சக்தி ஒன்றிற்கு ஒரு மனிதன் சில வேளைகளில் வழங்ககூடிய விலை குறித்து பேசுகிறது. நல்லிதயம் கொண்ட மீடியம் ஒருவனின் வாழ்க்கை குறித்த ஒரு மெலிதான பார்வையையும் முன்னிறுத்துகிறது. இங்கு ஜார்ஜ் ஒரு கட்டத்தின்பின்பாக பணம் தந்தாலும்கூட இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள மறுப்பவனாக, அவ்வாறு தொடர்பு கொள்ளும் ஒரு சமயத்தில் அவன் வெளிப்படுத்தும் உண்மைகள் அவன் உருவாக்கி கொள்ளவிருந்த ஒரு உறவை முறித்துவிட அதனை மெளனமான வலியுடன் தாங்கிக் கொள்பவனாக, மிகவும் மென்மையானவனாக சித்தரிக்கப்படுகிறான். உள்ளே இருக்கும் வலியுடன் அமைதியான வாழ்வை தேடும் இந்தப் பாத்திரத்தை நடிகர் மேட் டாமொன் சிறப்பாக செய்திருக்கிறார், ஆனால் இது அவரின் சிறந்த பாத்திரம் என்று கூறவியலாது.

மூன்று தளங்களில் நகரும் கதையின் பிரதான பாத்திரங்களை திரைப்படத்தின் உச்சக்கட்டத்தில் ஒரு இடத்திற்கு இட்டுவருகிறது திரைக்கதை. இறப்பின் பின்பாக உள்ள வாழ்வு குறித்த மனிதர்களின் நம்பிக்கைகளும், அனுபவங்களும் எவ்வாறாக இருப்பினும் இவ்வுலக வாழ்க்கையானது அதன் சுக துக்கங்களுடன் அனுபவித்து வாழப்படவேண்டியது முக்கியமானதே என்பதை உணர்த்தி படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர் க்ளிண்ட். ஒவ்வொரு தடவையும் தன் படைப்பால் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் க்ளிண்ட் இம்முறை கூடவே ஏமாற்றத்தையும் ஆச்சர்யமாக தந்து விடுகிறார்.

மெலானி எனும் தன் தோழிக்காக ஜார்ஜ் இறந்தவர்களுடன் உரையாடி அதன் பின் அவன் உறவு உடையும் தருணம், சிறுவன் மார்க்கஸிற்காக ஜார்ஜ் இறந்த ஒரு உயிரை தொடர்பு கொள்ளும் தருணம் போன்ற மனதை நெகிழவைக்கும் காட்சிகளில் க்ளிண்டின் தேர்ந்த அனுபவம் பளிச்சிடுகிறது. தான் இழந்துபோன அன்புறவுடன் சிறுவன் மார்க்கஸ் உரையாடும் அந்தக் கட்டம் திரைப்படத்திலேயே மிகவும் கனமான, மென்மையான உணர்வுகளைக் கலங்க வைக்கும் கட்டமாகும். ஆனாலும் இரு மணிநேரம் நீண்டு செல்லும் படத்தில் இவ்வகையான நெகிழ்வான காட்சிகளின் துணையிருந்தும் அதனுடன் ஒன்றிப்போக முடியாமல் போய்விடுகிறது. வேகமற்ற மிகவும் நிதானமான காட்சி நகர்வு மிகவும் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இறந்தவர்கள் உலகம் என்பது மிகவும் அன்னியமான ஒன்றாக உணரப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உச்சக்கட்டக் காட்சி பலமான ஏமாற்றத்தையே வழங்குகிறது. க்ளிண்ட் மட்டும் படத்தை இயக்கியிராவிடில் பாதி படத்திலேயே பல இருக்கைகளாவது காலியாகி இருக்கும். க்ளிண்டின் படமொன்றில் கிடைக்கும் உபரியான ஒரு மனத்திருப்தி இத்திரைப்படத்தில் கிடைக்காமல் போய்விடுகிறது என்பது வேதனையானதே. மரணம் எனும் விடயம் கையாள இலகுவான ஒன்றல்ல, தன் தேர்ந்த திறமையால் க்ளிண்ட் வழங்கியிருக்கும் இப்படைப்புக்கும் உயிர் குறைவாகவே இருக்கிறது. [*]

ட்ரெயிலர்

Friday, January 21, 2011

ஆன்மா பாதி


தொலைமேற்கின் பெருவெளிகளை புகையை கக்கியவாறே ஊடறுத்து செல்கிறது ஒரு புகையிரதம். காவல்துறையால் கைது செய்யப்பட்ட, Mat Riders எனும் பிரபல கேடிக் குழுவின் தலைவனை பலத்த பாதுகாப்புடன் அந்த பயணிகள் ரயிலில் அழைத்து செல்கின்றனர் காவல் அதிகாரிகள். சட்டத்தின் மரணப் பிடிக்குள் சிக்கியிருக்கும் தங்கள் தலைவனை மீட்பதற்காக அந்தப் பயணிகள் ரயிலை யாரும் எதிர்பார்த்திராத வகையில் அதிரடியாக தாக்குகிறார்கள் மட் ரைடர்ஸ் கேடிக் குழுவினர். அந்த மோதலில் வெடித்துச் சிந்தும் ரத்தம், அதன் வாடை, அதே புகையிரதத்தில் ரகசியமாக பெட்டிகளிற்குள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிக்கும் சிலவற்றை ரத்த வெறி கொண்டெழ வைக்கின்றன.

pr2 காவல் அதிகாரிகள், பயணிகள், மட் ரைடர்ஸ் கேடிக் குழுவினர் என யாவரும் இந்த ரத்தவெறி பிடித்த கோரப் படைப்புக்களின் வெறிக்கு இரையாகி அழிய, அந்த புகையிரதத்தில் பயணிக்கும் ஒருவன் மட்டும் அந்த ரத்த வெறி கொண்ட குரூரங்களை தன் துப்பாக்கியாலும், நீண்ட கத்தியாலும், சல்லடையாக்கியும், கூறுகளாக்கியும் வழியும் குருதியில் அவன் கிண்ணத்தை நிரப்பி தன் ஆண்டகையின் பாதை செல்கிறான்.

அவன், ஏற்கனவே இறந்து போனவன். நரகத்தின் இருண்ட ஆழத்தில் தன் ஆன்மாவின் பாதியை தீமையின் ஆண்டகையிடம் தந்து மறுபிறப்பு கண்டவன். அவனில் ஊற்றெடுத்துப் பெருகும் வஞ்சம் எனும் தாகத்தை தணிக்க தன் எதிரிகளின் குருதி தேடி வெற்றுக் கிண்ணமான மனத்துடன் பயணிப்பவன். அவன் பெயர் இவான். இவான் இசாக்….




pr1 ஜப்பானிய காமிக்ஸ்களை மங்கா எனும் பெயர் கொண்டு அழைப்பது போல கொரிய காமிக்ஸ்களை Manhwa என அழைக்கிறார்கள். மேன்ஹ்வா என்பது கொரிய மொழியில் காமிக்ஸ், கேலிச்சித்திர வகைகள் மற்றும் அசைவூட்டம் என்பவற்றை குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக இருக்கிறது. Priest ஒரு கொரிய காமிக்ஸ் ஆகும். இக்கதையை எழுதி அதற்கு அசத்தலான சித்திரங்களையும் வரைந்திருக்கிறார் Hyung Min-Woo. ஜப்பானிய மங்காக்களை போல் அல்லாது மேன்ஹ்வா காமிக்ஸ்கள் இடமிருந்து வலமாக எமக்கு பழக்கமான வாசிப்பு முறையில் படிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. [ ப்ரீஸ்ட் கதையினை ஒரு மங்காவிலிருந்து அதிகம் வேறுபடுத்திக் காண என்னால் இயலவில்லை, சித்திர பிரயோகங்களும், கதை நகரும் பாணியும் மங்காவையே நினைவூட்டுகின்றன- நான் படிக்கும் முதல் கொரிய காமிக்ஸ் இதுதான், பதிவில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் யாவும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் இருந்து எடுத்து கையாளப்படுகிறது.]

pr3 கதையின் இருளான ஆரம்ப பக்கங்களில், நரகத்தின் ஆழத்தில் துன்புற்றிருக்கும் இவான், வஞ்சத்திற்காக தன் ஆன்மாவின் ஒரு பாதியை தீமையின் ஆண்டகை ஒருவனிடம் தந்து, நரகத்திலிருந்து வெளியேறி தன் எதிரிகளை தேடி பயணத்தை ஆரம்பிக்கிறான். Xavilon எனும் குருவையும், அந்தக் குருவின் விசுவாசிகளான ஸோம்பிகளையும் [zombie] கொன்றழிப்பது அவன் பயணத்தின் முதல் படியாகும். இவானின் இந்தப் பயணம் மேட் ரைடர்ஸ் கேடிக்குழு அதிரடியாகத் தாக்கும் அந்த புகையிரதத்திலேயே ஆரம்பமாகிறது.

இவான் அவன் கொன்றொழிக்க விரும்பும் கோரங்களை போன்ற ஒரு படைப்புத்தான். ஆனால் அவனில் எஞ்சியிருக்கும் பாதி ஆன்மாவில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிது மனிதம் அவனை அந்த கோரங்களை விட அபாயகரமானவனாக மாற்றி அடிக்கிறது. இவான் பாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் கதையில் உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் மின் வூ. வஞ்சமும், கொலைவெறியும் அவனை ஆக்கிரமிக்க அவனுள் ஒடுங்கியிருக்கும் ஒரு குற்றவுணர்வு அவனைக் கொல்வதை கதாசிரியர் அழகாக சொல்லியிருக்கிறார். மோனநிலையில் அவன் உடலும், ஆன்மாவும் தீமையின் ஆண்டைகையான Vessiel ன் பிடியில் ஒரு கொலை எந்திரமாக மாறிவிட, இந்த உக்கிரமான போர்க்களத்தில் அவன் தொலைத்த காதல் அவனுள் அவனிடம் இல்லாத உயிராக எட்டிப்பார்த்து மண்டியிடுகிறது.

pr4 இவான் எவ்வாறு இறந்தான்? Xavilon எனும் குருவையும் அவன் விசுவாசிகளையும் ஏன் இவான் அழிக்க விழைகிறான்? தீமையின் ஆண்டகை Vessiel க்கும் Xavilon வழிபடும் ஆண்டவனான Temosare க்குமிடையில் நிலவும் வன்மத்திற்கான காரணம் என்ன ? அபரிமிதமான சக்திகளை தம்மகத்தே கொண்ட Vessiel, Temosare என்பவர்கள் யார் ? இவானின் காதலியான Zena விற்கு அவன் இழைத்த துரோகம் என்ன? முதல் பாகம் எழுப்பும் இவ்வகையான கேள்விகளிற்கு தொடரும் பாகங்கள் விடையை தரலாம். இக்காமிக்ஸ் தொடர் மொத்தம் 16 பாகங்களாக வெளியாகியிருக்கிறது. கதாசிரியர் மின் வூ வின் பிரபலமான தொடராக ப்ரீஸ்டே இன்றுவரை அறியப்படுகிறது.

pr5 ஆரம்பம் முதலே கதை மிக வேகமாக நகர்கிறது. காமிக்ஸ் வாசகர்களிற்கு மிகவும் பிடித்தமான தொலைமேற்கிலே கதை இடம்பெறுகிறது. மாடுகளை காணவில்லை ஆனால் ஸோம்பிகள் அதிகளவில் தென்படுகின்றன. ஆக்‌ஷன் பகுதிகள் கதையின் பக்கங்களை ஆரவாரமாக ஆக்கிரமிப்பு செய்ய குருதியும், வன்முறையும், இருளும் சித்திரங்களை போட்டி போட்டுக் கொண்டு நிரப்புகின்றன. கதையில் இடம்பிடித்திருக்கும் சித்திரத்தின் பாணி அபாரமாக இருக்கிறது. கதைக்கே அது ஓர் கூரிய தன்மையை வழங்கிவிடுகிறது. மட் ரைடர்ஸ் குழுவினர் புகையிரதத்தில் காவல் அதிகாரிகளுடன் ஆரம்பிக்கும் மோதல், இவான் கொடூரப் படைப்புக்களுடன் நிகழ்த்திச் செல்லும் உச்சக் கட்ட மோதல் வரை தொடர்ந்து அதிரடி செய்கிறது. பயங்கர திகில் ஆக்‌ஷன் ப்ரிய்ர்களிற்கு இக்கதை ஒரு அருமையான விருந்து என்பதில் சந்தேகம் இல்லை.

இக்காமிக்ஸ் தொடர் பெற்ற வரவேற்பையடுத்து இதனை திரைப்படமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. Evil Dead புகழ் பிரபல இயக்குனர் Sam Raimi படத்தை தயாரிக்க 300 புகழ் ஹீரோ Gerad Butler பிரதான வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த முடிவை அறிந்த ப்ரீஸ்ட் மேன்ஹ்வா ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். கொரிய குட்டைப் பிள்ளையாரிற்கு தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் விதி வலியது! 3D தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த வருடம் திரைக்கு வருகிறது ப்ரீஸ்ட். காமிக்ஸ் கதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான தகவல். ப்ரீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் உண்மையிலேயே ஆர்வத்தை தூண்டுகிறது. அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் ட்ரெயிலர்கள் மட்டுமே அட்டகாசமாக இருக்கும் திரைப்படங்கள் வரிசையில் ப்ரீஸ்டும் இடம் பிடித்திடாது இருக்க அந்த ஹாலிவூட் கருமாரி அம்மன் ப்ரீஸ்டிற்கு அருள் பாலிக்கட்டும். [***]

அசத்தல் ட்ரெய்லர்

Sunday, January 16, 2011

சின்னஞ் சிறு கிளியே


arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-1342677962 இதய நோயால் வருந்தும் சிறுவன் Sho, அவனிற்கு நடக்க இருக்கும் சத்திரசிகிச்சையின் முன்பாக சில நாட்களை அமைதியாக கழிக்க தன் தாயின் பிறந்த வீட்டிற்கு வருகிறான். அங்கு அவன், வீடுகளின் கீழ் மனிதர்களின் கண்களில் படாது ஒளிந்து வாழும் வினோதமான சின்னஞ் சிறிய அளவுடைய இனமான இரவலர்கள் குடும்பம் ஒன்றின் மகளான அரியெட்டியை கண்டுகொள்கிறான். ஒரு புதிய நட்பு அவர்கள் இருவரிற்கிடையிலும் பிறக்க, தம் இருப்பை மனிதர்கள் அறிந்து கொண்டார்கள் எனும் அச்சத்தில் ஷோ தங்கியிருக்கும் வீட்டின் அடியிலிருந்து வேறு இடம் தேட ஆரம்பிக்கிறார்கள் அரியெட்டியின் பெற்றோர்….

கிப்லி ஸ்டுடியோவின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தரத்திலும்கூட அவற்றை எட்டிவிடுவது என்பது சிரமமானதே. அசைவூட்ட சினிமா நுட்பங்கள் இன்று பல எல்லைகளை தொட்டு விட்ட போதிலும்கூட தம் படைப்புக்களில் இருக்கும் மரபுத்தன்மையை கிப்லி படைப்புக்கள் தொழில்நுட்பங்களிற்காக விட்டுத் தருவதில்லை.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-627926656 கிப்லியின் படைப்புக்கள் சாந்தமான நிழல் வழங்கும் உயர்ந்த மரமொன்றின் கீழே பாட்டியின் அருகமர்ந்து தன்னை மறந்து கதை கேட்கும் அனுபவத்திற்கு எம்மை அழைத்துச் செல்லக் கூடிய தன்மையை கொண்டவை. கிப்லியின் புதிய வெளியீடான Karigurashi no Arietti [The Borrower Arrietty] அசைவூட்ட திரைப்படத்திற்கு திரைக்கதையை எழுதித் தருவதுடன் திருப்தி கொண்டிருக்கிறார் கிப்லியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான Hayao Miyazaki. படத்தை அழகாக இயக்கியிருப்பவர் அவரது சிஷ்ய பிள்ளையான Hiromasa Yonebayashi. திரைக்கதை Mary Norton எழுதிய The Borrowers எனும் மிகுபுனைவுக் கதையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-838387803 திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளுமே ஒரு வீட்டினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. அழகான பெரிய வீடு, அதனை சுற்றியிருக்கும் வனப்பான பூந்தோட்டம், வீட்டின் அடியில் ரகசியமாக ஒளிந்து வாழும் சின்னஞ் சிறு மனிதர்களின் ரசனையான வீடு, இவற்றினை சார்ந்து வாழ்ந்திருக்ககூடிய உயிரிகள் என்பனவே பிரதான பாத்திரங்கள். குருநாதர் மியாசகி இயற்கையில் வாழும் தேவர்களை உருவாக்காமல் விட்டுவிட்டார் போலும்.

வீட்டையும், அதனைச் சுற்றியிருக்கும் பூந்தோட்டத்தையும், மரங்களையும் அற்புதமாக அசைவூட்டமாக்கியிருக்கிறார்கள். அங்கு உலவும் காற்று உங்கள் காதோரம் கிசுகிசுப்பதை நீங்கள் உணர முடியும். சிறுவன் ஷோ, தன் பூனையுடன் அந்த தோட்டத்தில் படுத்திருக்கும் காட்சியின் அழகு ரசிகர்களை கலங்கடிக்க வைக்கும் அழகை கொண்டிருக்கிறது. அதே போல் வீட்டின் அடியில் ஒளிந்து வாழும் இரவலர்கள் உலகில் தன் கற்பனையை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹிரோமசா யொன்பயாசி.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-270827527 மனித வீட்டிற்கு அடியில் இருக்கும் அந்த இரவலர்களின் வீட்டின் அலங்காரம் அற்புதமான ரசனையை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சிறுமி அரியெட்டியின் அறை ஒரு அழகுக் காக்டெயில். மனிதர்களின் வீடுகளினுள் புகுந்து சில பொருட்களை இரவலாக எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களிற்கு. அதற்காக அவர்கள் செய்யும் ஒவ்வொரு பயணமும் ஒரு சாகசமே. ஆணியில் உருவான படிகள், அவர்களை அச்சுறுத்தும் எலிகள், கரப்புகள், சினேகம் கொண்ட தத்துவெட்டிகள், பிரம்மாண்டாமாக அவர்கள் முன் விரியும் மனித இருப்பிடத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களிற்காக அவர்கள் உருவாக்கியிருக்கும் தந்திரங்கள் என அந்த உலகின் வாழ்க்கை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-83652363 சிறுவன் ஷோ தானாகவே முன் வந்து அரியெட்டியுடன் நட்பை உருவாக்க விழையும் முயற்ச்சிகள் எல்லாம் நெகிழ்வானவை. முதன் முதலாக ஷோவிற்கு தன் முகத்தை அரியெட்டி காட்டும்போது அவள் முகத்தில் வரும் அழகு,,, ஆகா.. ஆகா. குறும்பும், தைரியமும் நிறைந்த சிறுமியான அரியெட்டி, அழிந்து போகும் நிலையிலிருக்கும் இனங்கள் குறித்து மனித குலம் காட்டும் உதாசீனத்தை கோபமான ஒரு கேள்வியாக ஷோ முன் நிறுத்துகிறாள். மனிதர்களால் இனங்கள் தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பரிதாபமாக வாழ்ந்து அழிந்தொழிவது புதியது அல்லவே. மேலும் அரியெட்டியின் குடும்பத்தை போலவே இரந்து வாழும் மனிதர்களை நாம் நாள்தோறும் காண்கிறோமே. ஏன் இங்குகூட குப்பைதொட்டிகளில் உணவை எடுத்து உண்டு வாழும் மனிதர்கள் இருக்கிறார்களே. அவ்வகையில் அதிகாரமும், வசதியும் நிறைந்த மனித குலத்தினை நோக்கிய ஒரு பார்வையாகவும் இப்படைப்பு அமைகிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-169728777 திரைப்படத்தின் இசை உங்களை மயக்கிவிடும் சக்தியை கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரெஞ்சுப் பாடகியான Cécile Corbel பாடும் பாடலான Arrietty Song மனதை காற்று வெளியில் காலாற வைக்கிறது. செல்டிக் இசை கலந்து திரைப்படம் முழுதும் உறுத்தாத தென்றலாக தடவிக் கொடுக்கிறது இசை. இப்படம் வெளியாகியிராவிடில் சிசில் கொர்பெலின் திறமை அப்படியே பிரெத்தான் அலைகளுடனும், காற்றுடனும் மட்டுமே இசைத்து மகிழ்ந்திருக்கும். ஜப்பானியர்களின் கண்டிப்பான ரசனைக்கு மற்றுமொரு சான்று சிசில் கொர்பெல்.

இசை, அசைவூட்டம் என அசர வைத்திருந்தாலும் கதையின் பின்பகுதி அதிக எதிர்பார்ப்புகளிற்கு ஏமாற்றத்தையே பரிசாக அளிக்கிறது. மியாசாகியின் சீடர் குருவை விஞ்சவில்லை என்பது ரசிகர்களிற்கு சற்று கவலையான ஒன்றுதான். ஆனால் மனதை நெகிழ வைக்கும் ஒரு உச்சக்கட்டக் காட்சியை வழங்கி மனங்களை எல்லாம் அள்ளி எடுத்து விடுகிறார் இயக்குனர் யொன்பயாசி. அரியெட்டி தன் பையில் பாதுகாத்து வைத்திருக்கப் போகும் ஒரு சக்கரைக் கட்டியைப் போலவே அரியெட்டியும், ஷோவும் ரசிகர்கள் மனதில் கரையாமல் இருப்பார்கள். [***]

ட்ரெயிலர்

Saturday, January 8, 2011

இகார் ஓசன் பாரன்ஹைட் 451

கிரேக்க புராணக் கதைகளில் இகாரஸ் என்பவன் தன் தந்தை உருவாக்கிய சிறகு போன்ற அமைப்புக்களை தன் முதுகின் மீது பொருத்திக் கொண்டு கிரெட்டின் அரச மாளிகையிலிருந்து தப்பி வானில் உயரப் பறக்கையில், சூரியனின் வெப்பத்தால், அந்த சிறகு போன்ற அமைப்புக்களில் இருந்த மெழுகு உருகியதால் தொடர்ந்து பறக்க முடியாது கடலில் வீழ்ந்தவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் கதாசிரியர் மற்றும் ஓவியரான Moebius – ப்ளுபெர்ரி புகழ் ஜான் ஜிரோ- அவர்கள் உருவாக்கியிருக்கும் கதையின் நாயகனான இகாரோ பறக்கும் சக்தியை பிறக்கும்போதே ஒரு இயல்பாக தன்னுள் கொண்டிருக்கும் ஒருவனாக உருவாக்கப்பட்டிருக்கிறான்.

மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு பிறக்கும் ஆண் சிசுவானது காற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. இந்த தகவலை அறியும் ஜப்பானிய ராணுவ அதிகாரம் அச்சிசுவை தன் பாதுகாப்பிற்குள் எடுத்துக் கொள்கிறது. வெளியுலகம் என்னவென்று தெரியாது கூண்டுப் பறவை போல் வளர்க்கப்படும் இகார் எனும் அந்த குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். அவன் பறக்கும் சக்தி குறித்து எண்ணற்ற ஆய்வுகளை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பெண் ஒருத்தி மீது காதல் வயப்படுகிறான் இகார். இது அவனை சுதந்திரத்தையும், விடுதலையையும் நோக்கி பறக்கச் செய்கிறது. ராணுவக் கட்டுப்பாடுகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி இகார் தன் காதலில் வெற்றி கண்டானா, சுதந்திரமாக வானில் பறந்தானா என்பதை நீண்ட கதை விபரிக்கிறது.

ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி ஆரம்பமாகும் கதை பின் தன் சுவையையும், சுவாரஸ்யத்தையும் இழக்கிறது. ஜப்பானிய அதிகாரத்திற்கு எதிராக செயற்படும் புரட்சிக் குழுக்கள், இவ்வகையான குழுக்களை அடக்குவதற்கான நிகரற்ற ஆயுதமாக உருவாக்கப்படும் இகார், Sadomaso சிருங்காரம், இரு உள்ளங்களிற்கிடையில் மெல்ல மலரும் காதல் என மிகவும் சுவாரஸ்யமாகவும், சூடாகவும் சென்றிருக்க வேண்டிய கதை, விஞ்ஞான ஆய்வுகளிலும், இகாரின் கவிதை போன்ற பறத்தல்களிலும், சலிப்பை தரும் கதை நகர்விலும் தன்னை தொலைத்து விடுகிறது.


ic1 ic2 மாபியஸ் அவர்கள் உருவாக்கிய கதை, ஜப்பானிய ஆசிரியர் குழுவால் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, புத்தகத்தின் அட்டையில் அவரின் பெயரும், ராயல்டியில் பங்கும் அவரிற்கு உண்டு என்பதால் கதை சுமாரிற்கும் கீழாக உள்ளது என்பதற்கும் அவரே பொறுப்பு ஆகிறார். ஜப்பானிய மங்கா வார சஞ்சிகை ஒன்றில் இக்கதை தொடராக வெளியான போது வாசகர்களின் ஆதரவு இத்தொடரிற்கு கிடைக்காததால் கதை முழுமை பெறாமலேயே நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பை நாவலில் வாசகன் உணர முடியும். விருந்து சுமார்தான் எனினும் அதனையும் பாதியில் முறித்தால் என்ன உணர்வு வருமோ அதே உணர்வு கதையின் முடிவிலும் வருகிறது. இதற்குப் போய் இவ்வளவு பெரும் கூச்சலா எனும் கேள்வி மனதில் இறக்கை கட்டி பறக்கிறது.

இந்த மங்காவிற்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல மங்கா கலைஞர் Jiro Taniguchi. அற்புதமாக வரைந்து தள்ளியிருக்கிறார். பறத்தல் காட்சிகள், சிருங்காரக் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என எதிலும் குறை வைக்கவிலை டேனிகுச்சி. சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. மென்மையான உள்ளம் கொண்ட வாசக அன்பர்களிற்காக அப்பக்கங்களை இங்கு தரமால் விட்டிருக்கிறேன். இது என் கடமை. என்னை நீங்கள் பாராட்டக்கூடாது. ஆங்கில மொழியில் Icaro எனும் தலைப்பில் இச்சித்திர நாவல் வெளியாகி இருக்கிறது.

மிக எளிதாக வாசகர்களால் மறந்து விடப்படக்கூடிய இக்கதை புத்தக வடிவில் வெளிவரக் காரணம் ஜிரோ டேனிகுச்சி இன்று பெற்றிருக்கும் பிரபலம் ஒன்றுதான். நல்ல சித்திரங்கள் இருந்தாலும் கதை எனும் முக்கிய அம்சம் இறகை ஒடித்து விட்டதில் நாவல் சப்பென்று இருக்கிறது. கிழக்கும் மேற்கும் இணைகிறது என நடாத்தப்பட்ட விளம்பரங்களும், காமிக்ஸ் துறையின் இரு ஜாம்பவான்கள் கை கோர்க்கிறார்கள் என்ற வியப்பும் தரையில் வீழ்ந்து கிடக்கும் இகாரை பறக்க வைக்கப்போவதேயில்லை. [ * ]

ocean_10 இகாரைப் போலவே Ocean ம் சுமாரான ஒரு கதைதான். இன்று அமெரிக்க காமிக்ஸ் உலகின் பிரபல காதாசிரியர்களில் ஒருவரான Warren Ellis ஆல் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்வெளிப் பயணங்கள் ரயில் பயணங்கள் போல் ஆகி விட்ட ஒரு எதிர்காலத்தில் இக்கதை கூறப்படுகிறது. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Chris Sprouse.

numérisation0003 ஜூபிடர் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Europa சமுத்திரப் பரப்பால் சூழப்பட்டிருக்கிறது. இச்சமுத்திரத்தினுள் ஆய்வுகளை நிகழ்த்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு அங்கு விசித்திரமான மிதக்கும் தாழிகளை கண்டுபிடிக்கிறது. தொடரும் ஆய்வுகள் தரும் முடிவுகள், ஐநா இன்ஸ்பெக்டர் நேதன் கேனை இயுரோப்பாவிற்கு இட்டுச்செல்கின்றன. பலம் பொருந்திய பல்தேசிய நிறுவனம் ஒன்றின் எதிர்ப்புக்களை முறியடித்து விசித்திரமான தாழிகளினுள் உறங்கியிருக்கும் மர்மத்தையும், அதன் மூலம் பூமிக்கு உருவாகவிருக்கும் அபாயத்தையும் நேதன் கேனும் ஐநா ஆய்வுக்குழுவினரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இக்கதை விபரிக்கிறது. கதையில் கூறப்படும் ஆரம்பகால விண்வெளிப் பிரயாணங்கள் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவையாக உள்ளன.

வில் ஸ்மித்தை நாயகனாக கொண்டு இக்கதையை ஹாலிவூட்டில் இயக்கினால்கூட அப்படம் கதையால் அல்ல அதில் இடம்பெறும் அதிரடி ஆக்சன் மூலமே ரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடும். சினிமாத்தனமான திருப்பங்களின் துணையுடன் பயணிக்கும் கதையின் இறுதிப்பகுதி விறுவிறுப்பை சிறிதளவில் வழங்கினாலும், அழிந்து போன உலகம், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்கள் கலாச்சாரம், அதன் நீட்சி என புதுமையற்ற கதைதான் நாவலை ஆக்கிரமிக்கிறது. அமெரிக்க காமிஸ்களிற்கேயுரிய சித்திரப்பாணியில் சித்திரங்கள் கதைக்கு துணையாக நிற்கின்றன. இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. [ * ]

Ray Bradbury என்றால் அறிவியல் புனைகதை ஆர்வலர்களிற்கு Fahrenheit 451 எனும் தலைப்பு நினைவுகளில் தீப்பிடிக்கும். நாவலாசிரியர் ரே ப்ராட்பரியின் ஒத்துழைப்புடன் அந்த நாவலை சித்திர நாவலாக மாற்றியிருக்கிறார் Tim Hamilton. இந்த வேள்வித்தீயின் விளைவு அற்புதமான ஒரு சித்திர நாவலாக மலர்ந்திருக்கிறது.

fce34b7aec478f00b3bcf1b71c470adc96a8b6cc புத்தகங்கள் படித்தலும், சிந்திப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகிவிட்ட எதிர்காலம். வீடுகள், கட்டிடங்கள் தீப்பிடிக்க இயலாதவைகளாக உருவாக்கப்படுகின்றன. எனவே தீயணைப்பு வீரர்கள் புத்தகங்களை கொளுத்துகிறார்கள். புத்தகங்களை வைத்திருப்பவர்களை, படிப்பவர்களை கைது செய்கிறார்கள். இந்த தீயணைப்பு படை!! வீரர்களில் ஒருவனே Guy Montag.

தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் ஒரு அமைதியான மாலை வேளையில் வினோதமான இளம் பெண்னான Clarisse McClellan ஐ சந்திக்கிறான் கய் மொண்டாக். கிளாரிசுடன் தொடரும் அவன் சந்திப்புக்கள் அவனை தன் வாழ்க்கை குறித்த கேள்விகளை உருவாக்க வைக்கின்றன. கேள்விகள் அவனை புத்தகங்களை நாட வைக்கின்றன. புத்தகங்கள் அவனை அதிகாரத்திற்கு எதிரானான ஒருவனாக மாற்றியமைக்கின்றன…

என்ன ஒரு கதை! என்னே ஒரு சித்திர நாவல்! இகாரினால் சோர்ந்து போயிருந்த என்னை உற்சாகமூட்டி எழுப்பியது டிம் ஹாமில்டனின் இந்த அற்புதமான படைப்பு. அசர வைக்கும் ஹாமில்டனின் ஒவியப்பாணி கதைக்கு மென்மேலும் இருளை சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. பிரகாசமான பக்கம் என்பது தீயானது புத்தகங்களை கபளீகரம் செய்யும் தருணத்தின்போதே காணக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. ஒளி நிறைந்த ஒரு எதிர்காலம் எனும் கனவை தன் சித்திரங்களில் கலந்திருக்கும் இருள்தன்மையால் இல்லாத ஒன்றாக்கி திகிலடிக்கிறார் டிம் ஹாமில்டன்.

f451 ஹாமில்டன், தற்காலத்திற்கேற்ப மூலக்கதையில் சிறிது மாற்றங்களை செய்திருப்பார் என்றே நம்புகிறேன் [ நான் நாவலைப் படிக்கவில்லை]. நாவலில் முன் வைக்கப்பட்டிருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த பார்வைகள் ஆச்சர்யப்பட வைப்பவை. இச்சித்திர நாவலை படித்து முடித்தவுடன், தான் படிக்கும் புத்தகங்கள் மோசமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை தீயிலிட்டுக் கொளுத்தி மகிழும் என் நண்பரிற்கு நான் ஒரு மடலை அனுப்பினேன். உங்கள் அகத்தில் ரே ப்ராட்பரியின் கற்பனைகளின் ஒரு கூறு மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என!

எதிர்காலம் குறித்த ஒரு அச்சமான தரிசனத்தை வாசகன் மனதில் தீ போல் பரவச்செய்து கனவுகளினதும், கற்பனைகளினதும், எதார்த்தங்களினதும் அரூப வெளிகளில் அவன் முன்வைக்ககூடிய எண்ணற்ற புதிர் வினாக்களை விருட்சமொன்றின் உதிரும் இலைகள்போல் அவன் மனவெளியில் நிரப்புகிறது கதை. எதிர்வரும் நாட்களில் புத்தகங்களை எரிக்க தீயணைப்பு படை தேவையில்லை மக்களே விரும்பி புத்தகங்களை விட்டு விலகி வந்துவிடுவார்கள் எனக்கூறப்படும் கருத்து அதிரவைப்பது. மிகையான கேளிக்கை கொண்டாட்டங்களாக இருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் காட்சி ஊடகங்களும் மனிதர்களை சிந்திக்கவிடாதும், கேள்விகளை எழுப்ப விடாதும் செய்துவிடுகின்றன எனும் பார்வை அன்றே முன்வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைத்தது. சித்திர நாவலின் கதை சொல்லலிலும், உரையாடல்களிலும் டிம் ஹாமில்டன் பின்னி எடுத்திருக்கிறார். திகில்தன்மையை இறுதிப்பக்கம் வரை அவர் சிறப்பாக எடுத்து செல்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் இச்சித்திர நாவல் காமிக்ஸ் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து. மழை அடித்து பெய்யும் தருணம் ஒன்றில் கிளாரிசை சந்திப்பான் மொண்டாக், கிளாரிஸ் உளவியல் மருத்துவரைக் காணச் சென்று கொண்டிருப்பாள், மழையின் துளிகள் தனக்கு திராட்சை மதுவைப்போல சுவை தருகின்றன நீ எப்போதேனும் மழைத்துளிகளை சுவைக்க முயன்று பார்த்திருக்கிறாயா என வினவும் கிளாரிஸை கடிந்து கொள்ளும் மொண்டாக், அவள் தன்னை விட்டு விலகியபின் மழையினூடு நடந்து செல்வான், சித்திரப்பக்கத்தை க்ளிக்கி அத்தருணத்தை ரசியுங்கள்.

[ **** ]

Sunday, January 2, 2011

காதலும் இன்னும் பிற மாத்திரைகளும்


மருந்து வகைகளை தயாரிக்கும் பெருநிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் Jamie [Jack Gyllenhaal], மருத்துவ நிலையமொன்றில் Maggie [Anne Hathaway] எனும் பெண்ணுடன் அறிமுகமாகிக் கொள்கிறான். அவர்களிருவரினதும் முதல் சந்திப்பு ஏனைய சந்திப்புக்களிற்கு வாய்ப்பளிக்க, மகி மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறான் ஜமி….

தன் கவர்ச்சியால் பெண்களை இலகுவாக கவர்ந்து அவர்களை படுக்கையில் வீழ்த்தி விடுவது என்பது ஜமியின் பலமான இயல்பாக இருக்கிறது. பெண்களுடன் நிலையான உறவொன்றை ஏற்படுத்திக் கொள்ளுவதில் அவனிற்கு ஆர்வம் இருப்பதில்லை. தொலைக்காட்சி, வானொலி, கைத்தொலைபேசி என்பவற்றை விற்பனை செய்ந்து கொண்டிருந்த ஜமியின் வேலை அவன் பலமான இயல்பினால் பறிபோக மருந்து வகைகளை விற்பதற்கான பயிற்சியில் இணைந்து Pfizer எனும் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து கொள்ளுகிறான் ஜமி.

ஜமியின் குடும்ப உறுப்பினர்கள் சாமர்த்தியம் போதாத ஒருவனாகவே அவனை மதிப்பிடுகிறார்கள். ஜமியும் பிறரைக் குறித்து அதிக அக்கறை கொள்ளாத ஒருவனாகவே இருந்து வருகிறான். விற்பனை பிரதிநிதியாக பதவியில் இணைந்து கொண்ட பின்பாக, அப்பணியில் அதிக பணம் சம்பாதிப்பதும், நல்ல ஒரு நகரத்தில் பணிமாற்றத்தை பெற்றுக் கொள்வது என்பதும் அவனிற்கு முக்கிய குறிக்கோள்களாக இருக்கின்றன.

ஆனால் விற்பனை பிரதிநிதி வேலை என்பது இலகுவானது அல்ல. தன் நிறுவனத்தின் தயாரிப்புக்களை முன்னிறுத்துவதற்காக அவன் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. டாக்டர்களை சந்திப்பதும், அவர்களிடம் நைச்சியமாக பேசி தன் நிறுவன மருந்துகளை அவர்கள் தம் நோயாளிகளிடம் பரிந்துரைக்க வேண்டி வாதிடுவதும், அவர்களின் மறுப்புக்களை ஏமாற்றத்துடன் தாங்கிக் கொள்வதும், தன் போட்டியாளர்களுடன் ஓயாது போட்டியிடுவதுமாக அந்தப் பணி ஜமியை சக்கையாக பிழிகிறது.

மருத்துவ நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பு பெண்கள், காரியதரிசிகளை தன் கவர்ச்சியாலும், பரிசுகள் தந்தும் கவிழ்த்தல், தன் போட்டியாளர்களின் மருந்து வகைகளை கவர்ந்து சென்று குப்பையினுள் வீசுதல் போன்ற அனைத்துவகை தந்திரங்களையும் தன் வெற்றிக்காக பயன்படுத்த ஜமி தயங்குவதேயில்லை. இவ்வகையான போராட்டம் நிறைந்த ஒரு பணிநாளிலேயே மகியின் அறிமுகம் ஜமிக்கு கிடைக்கிறது.

மகி ஒரு கலைஞி. போட்டோக்கள் பிடிப்பதும், ஓவியங்கள் வரைவதும் அவளிற்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால் மகி, பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டவள். அந்நோயின் ஆரம்ப கட்டத்தின் பிடிக்குள் இருக்கும் மகி, அந்தப் பிடியினூடே சளைக்காமல் தன் வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு பெண்ணாக இருக்கிறாள். தன் மீது இரக்கம் கொள்பவர்களை அவளிற்கு பிடிப்பதில்லை. தன்னால் பிறர் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனாலேயே ஆழமான, நீடிக்கும் உறவுகளை அவள் விரும்புவதில்லை. இரு மனிதர்களிற்கிடையில் இயல்பாக எழும் காமத்தை மட்டும் ஆற்றிக் கொள்ளல் எனும் நிபந்தனையிலேயே மகியினதும், ஜமியினதும் சந்திப்புகள் ஆரம்பத்தில் நிகழ்கின்றன.

இவ்வாறான வேறுபட்ட ஆளுமைகளிற்கிடையில் உருவாகும் ஒரு அன்பு நிறைந்த உறவைப்பற்றி அல்லது காதலைப்பற்றியே இயக்குனர் Edward Zwick இயக்கியிருக்கும் Love and Other Drugs திரைப்படம் பேசவிழைகிறது. இந்த இருவரினதும் உறவைக் குறித்து பேசுவதோடு மட்டும் நின்று விடாது, மருந்து விற்பனை பிரதிநிதிகளின் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், அமெரிக்க மருத்துவர்கள் தம் தொழிலில் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்பன குறித்தும் குறிப்பிடத்தக்கதான ஒரு பார்வையை திரைப்படம் வழங்குகிறது.

love-et-autres-drogues-2010-18882-649515796 தன் உடல் வேட்கையை தீர்த்துக் கொள்வதில் மட்டும் குறியாக இருந்த ஜமி பின் படிப்படியாக மகி மீது அக்கறை காட்ட ஆரம்பிக்கிறான். மகிக்கு இது பிடிக்காதபோதும் அவளுடன் இணைந்திருக்கவே ஜமி விரும்புகிறான். தன் பணியில் வெற்றிக்காக அவன் ஓயாது உழைத்தபோதும் மகியின் அருகாமையை அவன் வெறுப்பதில்லை. அழுத்தங்களும், தொடர் ஏமாற்றங்களும் நிறைந்த அவன் பணி, Pfizer நிறுவனம் வயகாரா மாத்திரைகளை சந்தைப்படுத்தும்போது வெற்றியின் உச்சத்திற்கு செல்கிறது. ஆனால் மகிதான் அவனை பிரிந்து விடுகிறாள்…

அன்பையும், அக்கறையையும் உடல் கொள்ளும் உறவுகள் மட்டும் எப்போதும் தீர்மானித்து விடுவதில்லை. மகியும், ஜமியும் ஒருவரையொருவர் சந்திக்கும் முன்பான காலத்திலும், பிரிந்த பின்னும் வேறு துணைகளுடன் உடல் உறவு வைத்துக் கொள்ளுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பிரிவுதான் எங்களிற்கு இழந்ததின் தேவையை சரியாக உணர்த்தும் ஒன்றாக அமைகிறது. மகியும், ஜமியும் தமக்கு வாழ்வில் மிகவும் தேவையானவைகளை பெற்றுக் கொண்டார்களா என்பதை மீதிப்படம் நெகிழ்வாக கூறிச்செல்கிறது. எந்த ஒரு மனிதனிலும் உறங்கியழியும் உன்னதங்களை விழித்து எழச்செய்து அவனை அழகாக்குவதில்தானே உண்மையான அன்பின் பரிமாற்றம் சாந்தம் கொள்கிறது.

வழமையான ஹாலிவூட் காதல் திரைப்படங்களிற்குரிய மோதலில் சந்திப்பு, சேர்ந்து வாழ்தல், பிரிவு, ஒரு தருணத்தில் தனக்கு வாழ்வில் தேவையானது இதுவே என நாயகன் உணரல், உச்சக்கட்டக் காட்சியில் காதலியை தேடி ஓடி கண்கள் கலங்க அவள்முன் வசனம் பேசல், பின்னணியில் ஒலிக்கும் இனிமையான பாடல்கள் என்பன படத்தில் இருந்தாலும் மெலிதான தீவிரத்தன்மையும் படத்தில் ஒட்டியிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு மருந்துகளை வாங்கச் செல்லும் முதியவர்களை காணும்போது விழிகள் வியப்பால் உயர்கிறது. பார்க்கின்சன் நோயாளியுடனான வாழ்வு என்பது வாழ்வல்ல அது ஒரு ரஷ்ய நாவல் என வரும் வரிகள் அங்கதமானவை எனினும் மனதை தொடுபவை. எனினும் சற்றே நீளமான படம் எனும் உணர்வும் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது.

திரைப்படத்தில் ஜேக் ஜிலென்ஹால், ஆன் ஹாத்தவே ஜோடியை நன்றாக ரசிக்க முடிகிறது. இயல்பாக நடித்து சென்றிருக்கிறார்கள் இருவரும். சில உணர்ச்சிகரமான தருணங்களில் மிகையான நடிப்பு உண்டு. எந்தவித வெட்கமுமின்றி ஆடைகளை விலக்கி காதல் காட்சிகளில் இருவரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். ஆண், பெண் ரசிக, ரசிகைகளிற்கு அற்புதமான விருந்து உண்டு. ஆன் ஹாத்தவேயின் மார்புகள் மிக மிக அழகாக இருக்கின்றன. வயக்கரா மருந்து ஏற்படுத்திய புரட்சி அங்கத சுவையுடன் கூறப்படுகிறது. ஆண்களைவிட பெண்களே வயக்கரா குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்ததாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. Jamie Reidy எனும் விற்பனை பிரதிநிதி எழுதிய The Evolution of a Viagra Salesman எனும் நூலை தழுவியே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜமியின் சகோதரன் ஜோஸாக! வேடம் ஏற்றிருக்கும் நடிகர் Josh Gad அடிக்கும் லூட்டிகள் வயிறு குலுங்கி சிரிக்க வைக்கின்றன. திரைப்படத்தில் நகைச்சுவையின் பங்கு கணிசமான ஒன்றாக இருப்பது ஒரு இதம். தன் சகோதரனின் திறமைகளை குறித்து அவர் புலம்புவது Aட்டகாசம். தன் ஆண்குறியை சொரொனின் கண்களை [லார்ட் ஆஃப் த ரிங்ஸ்] பார்ப்பது போலவே தன் காதலி பார்க்கிறாள் என அவர் ஜமியிடம் விசும்பும் கட்டத்தில் திரையரங்கம் சிரிப்பால் வெடிக்கிறது. ஜமியின் மேலதிகாரியான புருஸ் பாத்திரமும், டாக்டர் ஸ்டான் நைட்டும் மனதைக் கவர்கிறார்கள்.

நகைச்சுவை, நெகிழ்ச்சி, நல்லுணர்வு இவற்றை மனதில் கிளர்ந்தெழச் செய்யும் மாத்திரைகளை ரசிகர்கள் உள்ளெடுத்தால் அவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை அவர்களிடம் எடுத்து வருவதில் Love and Other Drugs திரைப்படம் வெற்றி காணவே செய்கிறது. [**]

ட்ரெயிலர்

Monday, December 27, 2010

காட்டேரிக் கும்மி


நீயூயார்க்கின் JFK விமானநிலையத்தில் பயணிகளுடன் தரையிறங்கும் போயிங் விமானம் ஒன்று, தரையிறங்கலின் பின்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழக்கிறது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள், அந்த விமானத்தில் பயணித்த மனிதர்கள் யாவரும் இறந்து போயிருக்கும் அதிர்ச்சியான தகவலை அவர்களிற்கு வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க மண்ணில் பேரழிவை உருவாக்கக்கூடிய தொற்று நோயொன்றின் ஆரம்பமாக இது இருக்ககூடும் என ஊகிக்கும் அதிகாரிகள், டாக்டர் Ephraim Goodweather தலைமையிலான ஒரு குழுவை இந்த துயர சம்பவத்தின் பின்னிருக்கும் காரணிகளை கண்டறியுமாறு பணிக்கிறது….

நல்லதொரு திகில் நாவலிற்குரிய ஆரம்பத்துடன் தொடங்கும் The Strain எனும் காட்டேரி நாவலானது, தொடரும் அதன் பக்கங்களில் காணக்கிடைக்கும் கதை சொல்லலில் அயர்ச்சியையும், ஏமாற்றங்களையும் காட்டேரிக்குள் உள்ளேறும் குருதிபோல் வாசகனிடம் ஏற்றிவிடுவதில் வெற்றி காண்கிறது.

நாவலின் ஆரம்பம் பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலாவை கவுரவித்தாலும், நாவலின் சில பகுதிகளில் கதாசிரியர்கள் பிராம் ஸ்டோக்கர் ட்ராகுயூலாவில் இயற்றிய மிகைப்படுத்தல்கள் குறித்த சில விமர்சனங்களையும் முன்வைக்க தவறவில்லை. ரத்தக்காட்டேரிகளிற்கு முன்பாக ஆசிர்வதிக்கப்பட்ட நீர், குருசு போன்றவற்றின் செயற்படா தன்மையையும், ரத்தக்காட்டேரிகள் பிற விலங்குகளாக உருமாறுவது குறித்த மூடத்தனமான அபிப்பிராயங்களையும் அவ்விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் திகில் இலக்கியத்திற்கு பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலா ஆற்றிய சேவையை Hell Boy, Pan’s Labyrinth ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Guillermo Del Toro வும் பிரபல நாவலாசிரியர் Chuck Hogan ம் இணைந்து படைத்திருக்கும் The Strain ஆற்றுமா எனும் கேள்விக்கு எனது விடை இல்லை என்பதே ஆகும். பிரிவின் விளிம்பில் அல்லல்பட்டு அழுதுவடியும் ஒரு குடும்பத்தின் கதையை உள்ளடக்கிய ஒரு தொலைக்காட்சி நாடகத்துடன், ஒரு காட்டேரிக் கொலை வீடியோ கேமை சேர்த்து உருவாக்கி அதை புத்தக வடிவிற்கு மாற்ற முடியுமானால் அதற்கு The Strain எனப் பெயரிடலாம்.

பல நூற்றாண்டுகளாக இந்தப் பாரில் வாசம் செய்துவரும், பலம் பொருந்திய ஒரு ரத்தக் காட்டேரி, காலங்களை கடந்து, தன் இருப்பை நிலைநாட்டி, மனிதன் ஒருவனின் உதவியுடன் அமெரிக்க மண்ணில் நுழைந்து, அங்கு தன் ராஜ்ஜியத்தை உருவாக்க விழைகிறது. விடுவார்களா அமெரிக்க மண்ணின் மைந்தர்கள்?! ரத்தக்காட்டேரிகளிற்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகிறது.[ அமெரிக்க மண்ணிலும், உலகிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமல்லவா]

விமானம் ஒன்றின் அனைத்து செயற்பாடுகளும் இறந்துவிட்டநிலையில், அதிகாரிகளால் ஆராயப்படும் அந்த விமானத்தில் அனைத்துப் பயணிகளும் உயிரிழந்திருப்பதும், இந்த புதிரான சம்பவத்திற்கு பின்னாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து கண்டறிய டாக்டர் எப்ராய்ம் தன் குழுவுடன் வந்து சேருவதும், பயணிகளில் நான்குபேர் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடிப்பதும், பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் இறந்த பயணிகளின் உடல்கள் காணாமல் போவதும், உயிர் பிழைத்த நான்கு பயணிகளினது உடல்கள் மாற்றங்களிற்கு உள்ளாவதும், டாக்டர் எப்ராய்மை சந்திக்கும் முதியவரான Abraham Setrakian, விமானத்தில் பயணம் செய்த அனைவரும் ரத்தக்காட்டேரிகளாக உருமாறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதும், இவற்றிற்கு எல்லாம் காரணமான தீமையின் மாபெரும் சக்தியான காட்டேரித்தலைவனை அவர்கள் அழிக்க கிளம்புவதாகவும் கூறப்படும் கதையின் ஆரம்ப பகுதியை ஓரளவு தாங்கிக் கொள்ள முடிகிறது.

the_strain முதிய புரபசரான ஏப்ரகாமிற்கு காட்டேரித் தலைவன் குறித்த அறிவும், அனுபவமும் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது இடைச்செருகல் வடிவில் நாவலில் விபரிக்கப்படுகிறது. யூத இன அழிப்பு முகாம் ஒன்று கதையில் இடம்பிடித்திருக்கும் என்பதையும், அந்த முகாமில் ஏப்ரகாம் இளம்வயதில் அனுபவித்த வேதனைகளையும், கண்ட கொடூரங்களையும், நாவலைப் படிக்காமலே நண்பர்கள் ஊகித்திடலாம். நாசிகளைவிட காட்டேரித்தலைவன் மீது ஏப்ரகாம் பெரும் வஞ்சம் கொண்டுள்ளதற்கான வலிய காரணம் நாவலின் இப்பாகத்தில் இல்லை. எனவே ஏப்ரகாம் பாத்திரம் பலமற்ற ஒன்றாகவே உணரப்படக் கூடியதாகவிருக்கிறது. நாவலின் எந்தப் பாத்திரங்களும் ஆழமான தடம் எதனையும் வாசகன் மனதில் பதிக்க தவறிவிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மேற்கூறியவற்றை அறிந்து கொள்வதற்கு வாசகன் புரட்ட வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கை அநாவசியமான ஒன்றாகும். விமானத்தில் உயிர்தப்பிய நான்கு பயணிகளிலும் உருவாகும் மாற்றங்களும், அதன் விளைவுகளும் தனித்தனியே விரிவாக விளக்கப்பட வேண்டியதின் அவசியம்தான் என்ன? நாவலின் முடிவில் இவர்கள் யாவரும் ஏனையவர்களைப் போலவே ரத்தக்காட்டேரிகளாக மாறி ரத்தம் உறிஞ்சுவதை தவிர கதையில் சிறப்பாக என்ன செய்துவிடுகிறார்கள். தேவைக்கதிகமான திகிலையும், அதன் வழியே பக்கங்களையும் அதிகரிப்பதை தவிர நாவலில் இப்பாத்திரங்கள் வேறு எதனையும் செய்துவிடவில்லை.

சொல்லப்பட்ட கதையிலாவது புதுமை இருக்கிறதா! மிகவும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்து சேரும் சூரியகிரகணம் குறித்த அத்தியாயம் ஏன் என்பது எனக்கு புரியவேயில்லை. இதற்குரிய காரணங்கள் எதிர்வரும் பாகங்களில் விளக்கப்படலாம் [ படுமா! ]. வழமையான காட்டேரி படைப்புகள் வழியே அறிந்ததைவிட இக்கதையில் அப்படி என்ன புதுமையாக இருக்கிறது என்பது என்னைப் பொறுத்த வரையில் புதிர்தான். வினோதமான வைரஸ் தொற்று, ரத்தம் உறிஞ்சல், ரத்தம் உறிஞ்சப்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகி காட்டேரிகள் ஆகல் [ 28 Days ], சூரிய ஒளி ஒவ்வாமை, வேறுபட்ட ஆதி காட்டேரி குலங்கள், இவற்றிற்கிடையே மதிக்கப்பட்டு வரும் ஒப்பந்தங்கள் [ Underworld ] என எதுவுமே புதிதாய் தோன்றவில்லை. இந்நாவலில் மனித உடல் கொள்ளும் மாற்றம் விபரமாக கூறப்பட்டுள்ளது என்றால் 1986ல் வெளியாகிய The Fly எனும் திரைப்படத்தில் மனித உடல் கொள்ளும் மாற்றம் இந்நாவலில் உள்ளதைவிட சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பேன். நிச்சயமாக இந்நாவல் வரிசையானது திரைப்படங்களாக உருவாகும் என்பதில் எனக்கு சந்தேகங்கள் இல்லை. எனவே திரையிலும் ஏமாற்றங்கள் தொடரும்.

நாவலாசிரியை Anne Rice அவர்கள் எழுதிய The Tale Of The Body Thief நாவலின் ஆரம்ப பக்கங்களிலேயே சூரிய ஒளியுடன் பொருதி தற்கொலை!! முயற்சியில் இறங்கும் காட்டேரியாக லெஸ்டாவை [Lestat] நாம் காணமுடியும். இங்கு லெஸ்டா உயிர்பிழைத்துக் கொள்கிறான். எனவே சூரிய ஒளியை தாங்கிக்கொள்ளக்கூடிய காட்டேரி என்பது எனக்கு புதிதான ஒன்றல்ல. வெள்ளி ஆயுதங்களும், முன்னொரு காலத்தில் பிரபலமான க்ரைம் நாவலாசிரியையான Patricia Cornwell கதைகளின் மூலம் வாசகன் அறிந்திருக்ககூடிய புற ஊதாக்கதிர், கறுப்புக்கதிர் பிரயோக பயன்களும்கூட புதியவை அல்ல.

டாக்டர் எப்ராய்ம் குழுவினர் காட்டேரித்தலைவனை எதிர் கொள்ளும் இறுதித் தருணம்வரை கதையை இழுஇழுவென்று இழுத்திருக்கிறார்கள். டாக்டர் எப்ராய்மின் சொந்தக்கதை சோகக்கதை கடுப்பைக் கிளப்புகிறது. மிக மோசமான ஒரு அமெச்சூர் நாடகத்தை அதனுடன் ஒப்பிடலாம். காட்டேரிகள் மற்றும் ஸோம்பிகளை பாத்திரங்களாக கொண்டு வெளியாகிய திரைப்படங்களில் சகட்டுமேனிக்கு அவர்களை போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். திரையில் இவற்றை கடந்து வந்துவிடலாம் ஆனால் நாவலில் இவ்வகையான மோதல்கள் திகட்டுமளவிற்கு தொடர்ச்சியாக விபரிக்கப்படும் போது கதையை சீக்கிரம் முடிங்கப்பா எனக் கதறுவதைத் தவிர வேறு வழியில்லை. [ முடிப்பார்கள் என நம்புகிறீர்களா ]

கதையின் இறுதிவரை சூரியனிற்கு தலை காட்டாது மறைந்திருந்த காட்டேரித் தலைவன் இறுதியில் அதே சூரியனிற்கு சவால் விடுவாராம், டாக்டர் எப்ராய்ம் க்ரூப்புடன் ஓடியாடி கண்ணாமூச்சி விளையாடுவாராம். மறைந்த தமிழ் நாவலாசிரியர் ராஜேந்திரகுமார் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதனை விட விறுவிறுப்புடன் ஒரு கதையை எழுதியிருப்பார்.

சந்தைப்படுத்தல் உத்திகள், விளம்பர தந்திரங்கள், நகைச்சுவையுடன் ரசிக்ககூடிய ட்ரெயிலர்கள், பிரபல இயக்குனரின் பெயர் என கும்மு கும்மு எனக் கும்மி சுமாரான இந்த நாவலை ஒரு International Bestseller ஆக்கியிருக்கிறார்கள். இந்நாவலின் வாசிப்பு அனுபவத்தை விட ரத்தக் காட்டேரி ஒன்றிடம் கடி வாங்கும் அனுபவம் மோசமான ஒன்றாக இருக்கமுடியாது.

பிரான்சு திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட ட்ரெயிலர் கீழே… [ யூ ட்யூப்பில் பிற ட்ரெயிலர்களும் கிடைக்கின்றன அதில் ஒரு ட்ரெயிலரில் டிப்டாப் உடைகள் மற்றும் மேக்கப்புடன் காட்டேரி வேட்டையாட வரும் டாக்டர் ஏப்ராய்ம் குழுவை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது]

புதுவருடத் தீர்மானம் ஒன்று: The Hobbit நாவலை திரைப்படம் வெளியாகும் முன்பாக படித்துவிடுவது.

Sunday, December 26, 2010

வெனிஸ் காதலன்


நிதி மோசடிக்காக ஸ்காட்லாண்ட்யார்ட் பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் நபரான ஆண்ட்ரே பியர்ஸின் காதலியான எலிஸ் [Angelina Jolie] , இரு வருட கால பிரிவின் பின்பாக அவனை சந்திப்பதற்காக வெனிஸ் நகரை நோக்கி ரயிலில் பயணிக்கிறாள். தன்னை நிழல்போல் தொடரும் காவல்துறையினரின் கவனத்தை திசைதிருப்ப விரும்பும் எலிஸ், வெனிஸ் நகர் நோக்கி அதே ரயிலில் பயணம் செய்யும் அமெரிக்க உல்லாசப் பிரயாணியான பிராங்கை [Jhonny Depp] தன் காதலன் ஆண்ட்ரே பியர்ஸாக காட்டிக் கொள்ள ஆரம்பிக்கிறாள்..

Anthony Zimmer எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் மீது ஹாலிவூட் தயாரிப்பாளர்களின் கடைக்கண் பார்வை தவறி விழுந்ததன் விளைவு, ஹாலிவூட்டின் உச்ச நட்சத்திரங்களாகிய ஜானி டெப், ஏஞ்சலினா ஜொலி ஆகியோரை ஜோடியாகக் கொண்டு F.H.Donnersmarck இயக்கத்தில் டூர் செய்ய ஆரம்பித்திருக்கிறது. இந்த டூர், செம டர்ராக போகாததிற்கு பிரதான காரணம் பாண்டிச்சேரி ரசிகர் மன்றம் நடாத்திய யாகமாகவே இருக்ககூடும்.

பாரிஸ் நகரில் ரசிகர்களிற்கு தன் முகம் காட்டும் தருணம் முதல் அம்மணி ஏஞ்சலினா ஜொலி அவர்களின் உடைகள், ஆபரணங்கள், அலங்காரங்கள் என யாவும் மிகையான டாம்பீகத்தையும், ரசனையையும் ரசிகர்களிற்கு விருந்தாக பரிமாறுகின்றன. பாரிஸ், வெனிஸ் போன்ற உல்லாசபுரிகளிலும், காப்பியகம், ரயில் வண்டி, தங்கு விடுதி, நடன விருந்து மாளிகை என அவர் தன் பிரசன்னத்தால் அருள்பாலிக்கும் இடங்கள் யாவற்றிலும் மக்கள் அவரின் டாம்பீக அழகை வாயைப் பிளந்து அமுதமாக பருகுகிறார்கள். தன்னால் பொறிக்குள் மாட்டி கொண்டவனிடம் மனதை இழக்கும் நல்லிதயம் கொண்ட நங்கை வேடத்தில் ஏஞ்சலினா நடிப்பதை யார் அவதானிக்கப் போகிறார்கள்!!

ஒரு நகரின் மிகவும் அழகான, ஆடம்பரமான இடங்களை அஞ்சல் அட்டைகளில் காட்டுவது போலவே, படம் நெடுகிலும் மனதை அள்ளி எடுக்கும் அழகு கொண்ட இடங்களாக படம் பிடித்து தள்ளியிருக்கிறார்கள். உல்லாசப் பிரயாணி ஒருவனின் மனநிலையுடன் அக்காட்சிகளை திருப்தியுடன் உள்ளெடுக்க கூடியதாக இருக்கிறது.

அழகான பெண்ணொருத்தியுடன் ஏற்படும் திடீர் அறிமுகம், அவள்மேல் உருவாகும் காதல், அதன் பின்பான விளைவுகள், இவற்றை எதிர்கொள்ளும் வேடத்தில் ஜானி டெப். ஸ்காட்லாண்ட்யார்டால் மட்டுமல்லாது மிக மோசமான ஒரு முரடர் குழுவாலும் தேடப்பட்டுவரும் ஒரு நபராக மாறி விடும் சாதாரண உல்லாசப் பிரயாணியாக ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி அமைதியாக அவர் நடித்து செல்கிறார். ஏஞ்சலினா ஜொலி பாத்திரத்தின் பகட்டிற்கு எதிர்மாறாக அவர் பாத்திரம் அமைந்திருக்கிறது.

the-tourist-2010-15607-1144853302 பைஜாமா அணிந்த நிலையில் வெனிஸ் நகரின் கூரைகள் மீது முரடர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் ஓடும்போதும், வெனிஸ் பொலிஸ் நிலைய தடுப்பு காவல் அறையில் முரட்டுக் கைதியைக் கண்டு அஞ்சும் போதும், நவநாகரீக உடையணிந்து ஏஞ்சலினா ஜொலியை தேடி நடன விருந்து மாளிகைக்கு அவர் வரும்போதும் அவர் நடிப்பை ரசிக்கமால் இருப்பதென்பது முடியாத ஒன்று. ஆனால் திரைப்படத்தில் தன் முழுத்திறமைகளையும் ஜானி டெப் ஜொலிக்க விடவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

திரைப்படத்தில் டெப், ஜொலி ஜோடிக்கிற்கிடையில் பெரிதாக ஏதும் மந்திரமோ அல்லது ரசாயனமோ ஏன்...பெளதிகமோ வேலை செய்துவிடவில்லை. ஜொலி, டெப்பிற்கு ஏற்ற ஜோடி அல்ல என்பது தெளிவு [ யாரிற்குதான் அவர் பொருத்தமான ஒரு ஜோடியாக அமைய முடியும் என்பது ஒரு கேள்வியே! ] . உண்மையில், உருகி வழிந்த இத்தாலிய ஐஸ்க்ரீம் போன்ற அழகையே திரையில் ஏஞ்சலினா ஜொலி வழங்குகிறார். விரைவில் இன்னொரு வரிசை அழகியல் சத்திர சிகிச்சைகள் அவரிற்கு தேவையாக இருக்கலாம் என்பதாக நான் உணர்கிறேன் [ பஞ்சவர்ணப் பைங்கிளி ஏஞ்சலினா ஜொலி பாண்டிச்சேரி ரசிகர் மன்ற மிரட்டல்களிற்கு எல்லாம் நான் மிரள்பவன் அல்ல!]. ஏஞ்சலினா ஜொலி செல்லுமிடமெல்லாம் அவரின் அழகையும், கால் ஒடிந்த அன்னம் போன்ற அவரின் நடையையும் பார்த்து விழிகளை உயர்த்தி ரசிக்கும் நபர்கள் குறித்த காட்சிகள் சிரிப்பையே வரவழைக்கின்றன.

டெப்பும், ஜொலியும் திரைப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன்களில் நேரடியாக இறங்காதது ஒரு நிம்மதி. ஸ்காட்லாண்ட்யார்ட், காவல்துறை, முரடர் குழு ஆகியோரை மட்டும் ஏமாளிகளாக்கி விடாது ரசிகர்களையும் அவர்கள் அனைவரையும் விட ஏமாளிகளாக கருதிக்கொள்ளும் வகையிலேயே படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் இருக்கும் மென்மையான நகைச்சுவை, ஒரளவு விறுவிறுப்புடன் கதையை நகர்த்திச் சென்ற விதம் போன்றவையே படத்தை சலிப்பின்றி ரசிக்க துணைக்கு வருகின்றன. திரைப்படத்தின் முக்கியமான மர்மத்தை முன்கூட்டியே ஊகிக்ககூடிய வகையில் திரைக்கதை இருப்பதால் உச்சக்கட்டக் காட்சிகள் பெரிதாக களேபரப்படுத்த தவறுகின்றன.

ஏஞ்சலினா ஜொலியின் கவர்ச்சியையும் தாண்டி இத்திரைப்படத்தை அந்தோ பரிதாப நிலைக்கு இட்டுச் சென்று விடாமல் காத்து இருக்கும் காரணம் ஜானி டெப்தான் என்பது என் தாழ்மையான கருத்து. இருப்பினும் ஜானி டெப் தன் தீவிர ரசிகர்களை இத்திரைப்படத்தில் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்பதை இங்கு மீண்டும் கூறியாக வேண்டும். திரைக்கதையின் ஓட்டைகளையும், காதில் பூச்சுற்றல்களையும், ஏஞ்சலினா ஜொலியின் களைத்துப்போன கவர்ச்சியையும் பெரிய மனதுடன் தாண்டி வந்து, டெப்பையும், நகைச்சுவையையும் ரசிக்ககூடியவர்களிற்கு மட்டும் டூரிஸ்டுடனான இந்தப் பயணம் ஜாலியான அனுபவமே. [**]

ட்ரெயிலர்

Saturday, December 18, 2010

சூரியக் கூந்தலாள்


இளவரசி Rapunzel, அவள் கூந்தலில் பொதிந்திருக்கும் ஆபூர்வ சக்தியின் காரணமாக குழந்தையாக இருக்கும்போதே Gothel எனும் சூன்யக்காரியினால் கடத்தி செல்லப்படுகிறாள். நித்திய இளமையை எப்போதும் வேண்டும் கோத்தல், அதனை இளவரசி ரப்புன்ஸலின் கூந்தலில் பொதிந்திருக்கும் சக்தியின் வழியாகவே தான் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் அவளை காட்டினுள் ரகசியமான ஒரிடத்தில் அமைந்திருக்கும் உயரமான கோபுரமொன்றினுள் வெளியுலகிற்கு தெரியாது வளர்த்து வருகிறாள்.

அந்த உயர்ந்த கோபுரத்திலிருந்து இளவரசி ரப்புன்ஸல் வெளியே செல்லாத வண்ணம், வெளியுலகை குறித்த அச்சம் தரும் தகவல்களை அவளிற்கு தொடர்ந்து கூறிவருகிறாள் கோத்தல். குழந்தையாக கோத்தல் கவர்ந்து வந்த ரப்புன்ஸல் வாலைக்குமரியாக வளர்ந்து நிற்கிறாள். வெளியுலகின் மீதான ஆர்வம் அவளிற்குள் வளர்ந்து நிற்கிறது.

தனது பிறந்த தினத்தன்று மட்டும் ஆகாயத்தில் பறந்து செல்லும் வண்ண வெளிச்சக்கூடுகளை பற்றிய வியப்பும் அவற்றை ஒரு முறையேனும் நேரில் சென்று பார்த்திட வேண்டும் எனும் ஆசையும் ரப்புன்ஸல் மனதில் பூக்கிறது. தன் ஆசையை தன் வளர்ப்புத் தாயான கோத்தலிடம் கூறுகிறாள் ரப்புன்ஸல், ஆனால் கோத்தலோ இளவரசியின் வேண்டுகோளை நிராகாரித்து விடுகிறாள்.

இந்நிலையில் ராஜகாவலர்களால் துரத்தி வரப்படும் திருடனான Flynn Rider, காவலர்களிடமிருந்து தப்புவதற்காக ரப்புன்ஸல் வாழ்ந்திருக்கும் உயரமான கோபுரத்தினுள் நுழைகிறான். ஃப்ளின் ரைடரை சமயோசிதமாக மடக்கும் இளவரசி ரப்புன்ஸல் அவன் திருடி வந்த பொருளை மறைத்து வைத்து விடுகிறாள். ப்ளின் ரைடர் தன்னை வெளிச்சக்கூடுகள் பறக்கும் விழாவிற்கு அழைத்துச் சென்றால் அவன் திருடிய பொருளை அவனிடம் திருப்பி தந்து விடுவதாகவும் அவனிடம் ரப்புன்ஸல் வாக்கு தருகிறாள். வேறுவழிகள் அற்ற நிலையில் ரப்புன்ஸலை கோபுரத்தைவிட்டு வெளியே உலகை காட்ட அழைத்து செல்ல சம்மதிக்கிறான் ஃப்ளின் ரைடர். இளவரசியின் கண்களின் வழியாக அவள் இதயக்கோபுரத்தில் தான் மெல்ல மெல்ல நுழைவதை ஃப்ளின் உணர்ந்தான் இல்லை…..

தேவதைக் கதைகளில் உள்ள மந்திரம் என்னெவெனில், அவைகளைக் கேட்டோ படித்தோ காலங்கள் பல கடந்து சென்றிருந்தாலும்கூட அவை மீண்டும் புதிதாய் சொல்லப்படும் விதத்தில் உங்களை அவை மீண்டும் தற்காலிக கணங்கள் சிலவற்றிலேனும் குழந்தைகள் ஆக்கி விடுவதுதான். கிரிம் சகோதரர்களால் தொகுக்கப்பட்ட தேவதைக் கதைகளின் தொகுப்பில் இளவரசி ரப்புன்ஸலின் கதை இடம்பெற்றிருக்கிறது. அக்கதையில் பொருத்தமான மாற்றங்களை செய்து வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஐம்பதாவது அசைவூட்ட திரைப்படமாக வெளிவந்திருக்கும் Tangled திரைப்படமானது அதன் ஆரம்பம் முதல் நிறைவுவரை உங்களை குழந்தைகளாக்கி அழகு பார்க்கும் மந்திரத்தை தன்னுள் தாராளமாகக் கொண்டிருக்கிறது. Nathan Greno, Byron Howard ஆகிய இரு இயக்குனர்களின் திறமையும் படத்தில் அற்புதமாக வெளிவந்திருக்கிறது.

raiponce-2010-16872-23480533 சூரியனில் இருந்து விழும் ஒரு துளியானது அபூர்வ சக்தி கொண்ட அழகான மலராக உருவெடுத்து, அம்மமலரின் சக்திகள் அம்மலரைவிட அழகான குழந்தையின் கூந்தலில் சென்று பொதிந்துவிடும் ஆரம்ப கணங்கள் முதல் கொண்டே திரையில் தன் வித்தையை காட்ட ஆரம்பித்து விடுகிறது திரைப்படம். சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், திரைக்கதை, அருமையான நகைச்சுவை, பாடல்கள், இசை, அட்டகாசமான அசைவூட்டத் தரம் என களிப்பான கொண்டாட்டம் ஒன்றின் ஆனந்தக் குவியலாய் இருக்கிறது திரைப்படம். திரைப்படம் முடிவடைந்த பின் இக்கொண்டாட்ட மனநிலை உங்களிற்குள் கூடுகட்டி விட்டதை உங்களால் உணரமுடியும். பெற்றோரின் கவனமான பராமரிப்பிலிருந்து விடுபட்டு, வெளியுலகினை துணிவுடன் தனியே எதிர் கொள்ளல் என்பதை இவ்ளவு சந்துஷ்டியான ஒரு படைப்பாக உருவாக்க முடியுமா எனும் வியப்பை திரைப்படம் தொடர்ந்து அளிக்கிறது.

படத்தின் முக்கிய பாத்திரமான இளவரசி ரப்புன்ஸலின் மரகத விழிகள் அழகா இல்லை அவள் கூந்தல் அழகா என ஒரு பட்டி மன்றமே வைக்கலாம். இளவரசியின் மிக நீண்ட கூந்தலின் அழகிலும், பொன்னிற அலைபோல் அது அசைந்து அவளை பின்தொடர்வதிலும் அசைவூட்ட கலைஞர்களின் அருமையான உழைப்பைக் காணமுடிகிறது. இவ்வளவு அழகான கூந்தலை நான் இதுவரை பார்த்ததில்லை [ என் மனைவியின் கூந்தலை தவிர்த்து ]. டிஸ்னி உருவாக்கியிருக்கும் இளவரசிகளில் என் மனதை ரப்புன்ஸல் போன்று கொள்ளை கொண்ட வேறு இளவரசிகள் இல்லை [ நல்ல வேளையாக என் மனைவி இளவரசி இல்லை ].

திருடனாக அறிமுகமாகும் ஃப்ளின் ரைடர் கூட அருமையான பாத்திரப் படைப்பே. அவரின் முகபாவனைகள் ரப்புன்ஸலை அவர் மடக்க நினைக்கும் தருணங்களில் மாற்றம் கொள்வது அருமை. துருதுருவென சக்தி நிறைந்த ஒரு இளம் திருடனாக ப்ளின் ரைடர், இளவரசி ரப்புன்ஸலிற்கு ஜாடிக்கேத்த சூப்பர் மூடி. இருவரினதும் ஜோடிப் பொருத்தம் போல் அண்மைக்கால அசைவூட்ட படைப்புக்களில் பொருத்தமான ஜோடியை நான் பார்த்ததில்லை.

அசைவூட்டத் திரைப்படங்களில் வழமையாக பிரதான பாத்திரத்திற்கு அருகில் துணைப்பாத்திரங்களாக பிராணிகள் இடம்பிடிக்கும். இங்கு Pascal எனும் பச்சோந்தி இளவரசி ரப்புன்ஸலின் கோபுரத்தனிமையை சிறிதளவேனும் போக்கிடும் தோழனாக இருக்கிறது. இளவரசியுடன் பாஸ்கல் நடாத்தும் பச்சோந்தி சேஷ்டைகளை புன்னகையுடன் ரசிக்க முடிகிறது. பாஸ்கலிற்கு பெண்களின் ஆடை அணிந்து அழகுபார்க்கும் தருணம் அருமை. ஆனால் மனிதர்களை பிரதான பாத்திரங்களாக கொண்ட திரைப்படத்தில் ஒரு பிராணியை அதேயளவு முக்கியத்துவத்துடன் முன்னிறுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள். அந்தப் பிராணி ஒரு குதிரை! அதன் பெயர் Maximus.

மக்ஸிமஸை குதிரைகளில் வால்டர் வெற்றிவேல் என்று அழைத்தால் தப்பில்லை. அவ்வளவு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த ராஜகாவல் குதிரை அது. திருடப்பட்ட உணவுகளை அது உண்பதில்லை எனும் ஒரு உதாரணமே அதன் கடமையுணர்வை பறைசாற்றிடும். திருடனான ப்ளின் ரைடரை பிடிப்பதற்காக மக்ஸிமஸ் நிகழ்த்தும் சாகஸங்கள் விசிலடிக்க வைப்பவை. அதனது உடல்மொழி, முகபாவனைகள், கம்பீரமான சேஷ்டைகள் என சில சமயங்களில் பிராதான பாத்திரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு இக்குதிரையானது உருவாக்கப் பட்டிருக்கிறது. ஜொலிஜம்பர் பார்த்தால் நிச்சயம் பொறாமைப்பட்டு லக்கியை கடித்து வைக்கும்.

raiponce-2010-16872-1024484832 டிஸ்னியின் அசைவூட்டங்களில் மனதை அள்ளிச் செல்லும் ஒரு தருணம் எப்போதும் இடம்பெறும். Tangled திரைப்படத்தில் அக்காட்சியானது வண்ண வெளிச்சக்கூடுகள் பறக்கவிடப்படும் சமயத்தில் வந்து சேர்கிறது. பளிங்குபோல் நீரைக் கொண்ட ஆற்றில், ஒரு அழகான சிறு தோணியில் இளவரசி ரப்புன்ஸல் தன் மரகதக் கண்களை ஆற்றின் ஆழத்துடன் மோதவிட்டிருக்க, அவளிடம் மெல்ல மெல்ல தன்னை அமிழ்த்திக் கொண்டிருக்கும் ப்ளின் ரைடர் அவள் அருகில் இருக்க, இரவின் மங்கிய ஒளி போர்வையாக அவர்கள் மேல் விழ, எண்ணற்ற வெளிச்சப் பறவைகளாக வெளிச்சக்கூடுகள் வானில் பறந்து செல்ல ஆரம்பிக்கும் தருணத்தில் மனதை பறிகொடுக்காமல் இருப்பதென்பது சிரமமான ஒன்று. அந்த தருணத்திற்கேற்ப ஒலிக்கும் பாடலும், இசையும் மனதை குழைத்து விடுகின்றன.

ஜப்பானிய இயக்குனர் மியாசகியின் படைப்புக்களுடன் போட்டி போடுவது என்பது டிஸ்னி ஸ்டுடியோவின் ரகசிய விருப்பமாக இருந்தே ஆகவேண்டும். அந்த ஆசையின் ஏக்க வெளிப்பாடாய் அசத்தி எடுக்கிறது திரைப்படம். சில திரைப்படங்கள் மட்டுமே அதன் ஒவ்வொரு கணத்தையும் ரசிகனிடம் சுவைக்க தரும் தாராள மனம் கொண்டவையாக இருக்கும் Tangled அவ்வகையான படங்களில் ஒன்று. இளவரசி ரப்புன்ஸலின் விழிகளிலும், கூந்தலிலும் மட்டுமல்லாது டிஸ்னியின் அரிய முத்துக்களில் ஒன்றான Tangled ல் முழுமையாக சிக்கிக் கொள்கிறான் ரசிகன். [****]

ட்ரெயிலர்

Friday, December 17, 2010

மனைவியே மணாளனின் பாக்யம்


affiche ஜான், லாரா தம்பதிகளின் இல்லற வாழ்க்கையானது அவர்களின் செல்ல மகன் லூக்குடன் இனிதே கழிந்து கொண்டிருக்கும் வேளையில் கொலைக் குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்படுகிறாள் லாரா. லாரா ஒரு நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கு சட்டரீதியாக ஜான் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியுறுகின்றன. வேறு வழிகள் ஏதும் அற்ற நிலையில் சிறையிலிருக்கும் தன் மனைவியை தானே சிறை மீட்பது எனும் முடிவிற்கு வருகிறான் ஜான்….

Paul Haggis, Crash திரைப்படத்தை இயக்கியவர், Million Dollar Baby க்கு திரைக்கதை அமைத்தவர். இந்த இரு திரைப்படங்களையும் காணும் வாய்ப்புக் கிடைத்த நண்பர்கள் அத்திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த உணர்ச்சிகரமான காட்சிகளை இன்றும் மெலிதாக நினைவுகூற முடியும்.

உணர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்குவதில் தேர்ந்த நிபுணரின் கைகளில் மனைவியை காப்பாற்றப் போராடும் கணவன் ஒருவனின் கதையைக் கொண்ட Pour Elle எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் ஆங்கில வடிவத்தை உருவாக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும். The Next Three Days எனும் திரைப்படம் வழியாக கணவன், மனைவி, குழந்தை என குடும்பமொன்றின் பாசமான உணர்வுகளையும், சஸ்பென்ஸையும் கலந்து சுத்தமான ஒரு த்ரில்லரை திரையில் வழங்கியிருக்கிறார் பால் ஹாஹிஸ்.

மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று நாட்கள் என மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டிருக்கும் கதையில், தன் மனைவியின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட சாதாரண ஆசிரியனான ஜான், அவளை சிறையிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், அதில் அவன் காணும் தோல்விகளையும், இந்த தோல்விகள் வழங்கும் நிராதரவான நிலையினால் அவன் சட்டத்திற்கு எதிரான ஒருவனாக மாறுவதையும் படிப்படியாக காட்டிச் செல்கிறார் இயக்குனர் ஹாஹிஸ்.

திரைப்படம் நெடுகிலும் மனதை உருக்கும் காட்சிகளிற்கு பஞ்சமே இல்லை. மனைவி கைது செய்யப்பட்ட பின் வரும் மூன்று வருடங்களில் தன் மகனை வளர்க்கும் பொறுப்பான ஒரு தந்தையாக, தன் மனைவிக்காக சட்டத்துடன் போராடும் ஒரு பாசம் மிகுந்த கணவனாக, தன் முயற்சிகள் யாவும் பயனற்றுப் போகையில் நொருங்கிப் போகும் ஒரு மனிதனாக ஜானைக் காணமுடிகிறது. அதன் பின் வரும் மூன்று மாதங்களில், தன் மனைவியை சிறையிலிருந்து மீட்க திட்டமிடும், சட்டத்திற்கு இன்னும் அஞ்சும், தவறுகள் இழைத்தால் தடுமாறி திணறும் ஒரு ஜானைக் காண முடிகிறது. அதற்கு அடுத்து வரும் மூன்று நாட்களிலும் எதிர்பாராத ஒரு திருப்பத்தால் அதிரடியான ஒரு மனிதனாக ஜான் மாறுவது காட்டப்படுகிறது.

les-trois-prochains-jours-2010-18859-50613082 எவ்வாறு ஒரு ஆசிரியன் தன் மனைவிமீது கொண்ட அன்பால் சட்டத்தின் முன்பாகவும் சமூகத்தின் பார்வையிலும் ஒரு குற்றவாளியாக உருவெடுக்க முடியும் என்பதை படத்தின் முதலிரு பகுதிகளும் மிக நிதானமான வேகத்தில் கூறுகின்றன. இணையம் ஒன்றின் உதவியுடன் சாதாரணன் ஒருவன் கூட குற்றத்தின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்திட முடியும் என்பதற்கு சான்றாக ஜான் பாத்திரம் இருக்கிறது. ஆசிரியன் ஒருவன் குற்றங்களை கற்கும் மாணவன் ஆகும் சூழ்நிலையின் வினோதம் ஆச்சர்யமான ஒன்றுதான்.

நிதானமான வேகம் கொண்ட திரைப்படத்தின் விறுவிறுப்பான பகுதி இறுதி மூன்று நாட்களிலும் வந்து சேர்கிறது. தனது திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகும் ஜானுடன் கூடவே வேகமும், பரபரப்பும் திரைக்கதையில் தொத்திக் கொள்கின்றன. மூன்று நாட்களினுள் தன் மனைவியை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தின் அழுத்தம் தன்னுள் பொதிந்திருக்க, அதனை வெளியுலகிற்கு காட்டாது திறமையாக தன் திட்டங்களை ஜான் முன்னெடுத்து செல்லும் காட்சிகளில் விறுவிறுப்பு தன் முகவரியை தெளிவாக எழுதியிருக்கிறது.

ரஸல் க்ரோவிற்கு உணர்ச்சிகரமாக நடிக்க வராது என்ற என் கருத்தை இப்படத்தின் அனுபவத்தின் பின்பாக நான் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடிகர் திலகம்போல் … அம்மாஆஆஆ, இந்த வாழ்கை உன் வாழ்க்கை இல்லேம்மாஆஆஆஆஆ என வசனங்களை மேலதிகமாக இழுத்து பேசாவிடிலும் கூட, சிறையில் மனைவியை சந்திந்து உரையாடும் தருணங்களில் ரஸல் கணேசன் ஆகியிருக்கிறார் ரஸல் க்ரோ. திரைப்படத்தில் லியம் நீசன் தோன்றும் தருணத்தில் ஏற்படும் எதிர்பார்ப்பு அவர் மதுவகத்தை விட்டு நீங்கும்போதே இறங்கிவிடுகிறது. சிறையிலிருந்து தப்புவதற்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு திரைப்படத்தை விட்டு தப்பி ஓடி விடுகிறார் நீசன்.

திரைப்படத்தின் இறுதி முப்பது நிமிடங்களும் சஸ்பென்ஸ் நிமிடங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து திரையை விட்டு விழிகள் நகர மறுக்கின்றன. வழமைபோலவே காவல்துறையினரை ஏமாளிகள் ஆக்கும் எளிமையான தந்திரங்களால் அந்த நிமிடங்கள் நிறைந்திருந்தாலும் அவற்றை ரசிக்க முடிகிறது. இந்த முப்பது நிமிடங்களிற்காகவேனும் இப்படத்தை பார்த்து ரசிக்கலாம். ஆனால் படத்தை பார்த்து முடித்ததும் மனதில் எழும் ஒரு கேள்வி ஒன்று உண்டு. எத்தனை கணவர்கள் ஜான் போல் தம் மனைவியை காப்பாற்ற இவ்விதமாக தீவிரமாக போராடுவார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. The Next Three Days கலங்க, அதிர, உங்கள் அன்பு மனைவிமேல் நீங்கள் கொண்டுள்ள ப்ரியத்திற்காக நீங்கள் செல்லக்கூடிய எல்லைகள் எவை என கேள்வியெழுப்ப வைக்கும் ஒரு படைப்பு. ஆனால் உலக மனைவிமாரிற்கு ஜான் ஒரு உதாரணக் கணவன் என்பதில் ஐயமே இல்லை. [**]

ட்ரெயிலர்

Wednesday, December 15, 2010

பிரசவ தினம்


பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்ட தன் மனைவிக்கு அருகில் துணையாக இருக்க விரும்பும் பீட்டர் [Robert Downey Jr], எதிர்பாராத சில நிகழ்வுகளால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அட்லாண்டாவில் முடக்கப்படுகிறான். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நோக்கி காரில் பயணத்தை ஆரம்பிக்கும் ஏதன் [Zach Galifianakis], தன்னுடன் கூடவே பயணம் செய்யுமாறு பீட்டரிற்கு அழைப்பு விடுக்கிறான்….

சுயமைதுனம் செய்யும் நாயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?! இயக்குனர் Todd Phillips ஐத் தவிர வேறு எவராலும் கார் ஒன்றினுள் சுயமைதுனம் செய்யும் ஒரு நாயை இவ்வளவு அப்பாவித்தனத்தோடும், நகைச்சுவையோடும் திரைப்படுத்த இயலுமா என்பது சந்தேகமே. அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Due Date திரைப்படமானது நம்ப முடியாத சூழ்நிலைகளினுள் ஒருமித்து மாட்டிக் கொள்ளும் இரு அந்நியர்களின் அசாத்தியமான பயணத்தை நகைச்சுவையுடன் திரைக்கு எடுத்து வந்திருக்கிறது.

பீட்டரும், ஏதனும் முதன் முதாலக சந்தித்துக் கொள்ளும் தருணமே அபசகுனமான ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்தக் கணம் முதலே ஏதனை தன் முழு மனதுடனும் வெறுக்க ஆரம்பித்து விடுகிறான் பீட்டர். ஆனால் தொடரும் சம்பவங்கள் பீட்டரை ஏதனுடனும் அவன் நாயான Sonny யுடனும் ஒரே காரில் பயணிக்கும் நிர்பந்தத்திற்குள்ளாக்குகிறது.

மிக இலகுவாக கோபத்தை எட்டி விடும் இயல்புடைய பீட்டர், ஒரு சில நாட்களில் தந்தை எனும் ஸ்தானத்தை அடையப் போபவன். முதிர்ச்சியடையாத குழந்தை ஒன்றின் குணத்தையும், அறிவையும் கொண்ட ஏதன், தன் தந்தையை பறிகொடுத்துவிட்டு, ஒரு காப்பி டப்பாவினுள் அவருடைய சாம்பலுடன் பயணிப்பவன். இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் பீட்டர் ஏறக்குறைய ஏதனிற்கு ஒரு தற்காலிக தந்தையாகி விடுகிறான். கட்டுப்படுத்தவியாலாத பையன் ஒருவனை தன்னுடன் கொண்டு பயணிக்கும் தந்தை படக்கூடிய அவஸ்தைகளிற்கு மேலாக வேதனைகளை பீட்டர், ஏதன் வழியாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதன் வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளும் பீட்டர், பொறுப்பான ஒரு தந்தையின் நிலைக்கு தன்னை சீராக்கி கொள்கிறான். இதேவேளையில் தன் தந்தையின் பிரிவின் பின் யாருமே தனக்கில்லை என எண்ணி மனதினுள் உடையும் ஏதன், படிப்படியாக பீட்டரின் மனதில் ஒரு சிறிய இடத்தை தேடிக் கொள்கிறான்.

ஏதன் செய்யும் ஒவ்வொரு தகிடுதத்தமும் பீட்டரை கொலைவெறி கொள்ளத் தூண்டுகிறது. ஏதன், பீட்டரை இட்டுச் செல்லும் அசாத்திய சந்தர்ப்பங்களும், அவற்றினுள் மாட்டிக் கொண்டு பீட்டர் படும் அவஸ்தைகளும், இந்த தருணங்களை கஞ்சா உறிஞ்சும் இலகுடன் ஏதன் கடந்துவரும் பாணியும் இந்த இரு நடிகர்களினதும் நடிப்புத்திறனை திரையில் அருமையாக சிறைப்படுத்தி அசரவைக்கும் நகைச்சுவையாக மிளிரச் செய்துவிடுகிறது.

date-limite-2010-19017-1679640818 கஞ்சா விற்கும் வீட்டு சிறுவனைக் குத்துவதாகட்டும், ஏதனின் நாயின் முகத்தில் காறி உமிழ்வதாகட்டும், கொலைவெறி கொண்டு ஏதனை தாக்குவதாகட்டும், அதே ஏதன் மேல் நெகிழ்வாகி அவனை அணைப்பதாகட்டும் பரவசப்படுத்தியிருக்கிறார் நடிகர் ராபர்ட் டவ்னி ஜீனியர். அவரின் நகைச்சுவை நடிப்பும் அட்டகாசம்தான். ஏதனை நடிக்க சொல்லி பரிசோதிப்பதும், தன் மனைவிமீது சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பதும், வெஸ்டர்ன் யூனியன் ஊழியரிடம் மரண அடி வாங்குவதும் என [நான் என் பிள்ளை பிறந்தபோது எங்கிருந்தேன் தெரியுமா என வெஸ்டர்ன் யூனியன் ஊழியர் வினவ, மக்சில்லிஸிலா என டவுனி அடிக்கும் அந்த ஒரு சொல் டைமிங் டயலாக் அதகளம்] ஒரு சூப்பர் ஹீரோ நாயகன் எனும் நிலையிலிருந்து மிகவும் கீழிறங்கி வந்தது மட்டுமலாது, வழமையான தன் ஸ்டைலிலிருந்து அடக்கி வாசித்து தன் ரசிகர்களை வியக்க வைக்கிறார் டவுனி.

ஆனால் ஏதன் வேடமேற்றிருக்கும் நடிகரான ஸாக் கலிபையானாகிஸ், டவுனியையும் மிஞ்சி விடுகிறார் என்பதே உண்மை. இவ்வளவு இயல்பாக அவரால் எப்படி தகிடுதித்தங்களை திரையில் ஆற்ற முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அது அவரின் கூடப்பிறந்த இயல்பா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் திறன் அவரது. விமான நிலையத்தில் அவர் ரசிகர்களிற்கு அறிமுகமாகும் தருணம் முதல் கொண்டே அவரின் உடல்மொழியும், நடிப்பும் சிரிப்பு அலைகளிற்கு வலை போடுகிறது.

நடிகராக ஆகவிரும்பும் ஏதன், மார்லன் பிராண்டோ போல் காட்ஃபாதர் காட்சி ஒன்றை நடித்துக் காட்டுவதாகட்டும் [ அவர் அதை நடித்துக் காட்டி முடித்ததும் இந்த வசனங்கள் எல்லாம் நீயே எழுதியதா என சீரியஸாக ஒருவர் கேட்பார் பாருங்கள் ], பீட்டர் அருகில் தூங்குவதை சட்டை செய்யாது சுயமைதுனம் செய்வதாகட்டும், காமாண்டோ போல் மெக்ஸிகோவில் பீட்டரை மீட்பதாகட்டும் வழங்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் மரண அடி அடித்திருக்கிறார் அவர். அதே வேளை தன் தந்தையின் பிரிவால் வாடும்போதும், பீட்டர் தன்னை விட்டு பிரியப் போகிறான் என்பதை அறியும்போதும் நெகிழவும் வைக்கிறார். பீட்டர் காரில் தனியாக ஓட்டம் எடுத்தபின், ஒய்வெடுக்கும் இடத்தில் சூட்கேஸ் மீது அவர் அப்பாவியாக அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி மனதை பிசையும்.

திரைக்கதையை சலிப்பின்றி இவ்வளவு நகைச்சுவையுடன் எடுத்து வந்த இயக்குனர் டாட் பிலிப்ஸ், சந்தேகமின்றி திறமையான நகைச்சுவை திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை மீண்டும் முன்னிறுத்தியிருக்கிறார். அவரின் சிறப்பான இயக்கத்தில் நகைச்சுவையும், மென்மையான உணர்வுகளும் நிரம்பி வெளியாகியிருக்கும் இப்படைப்பு குதூகலமான சுகப்பிரசவம். [**]

ட்ரெயிலர்