
அம்ப்ரெல்லா நிறுவனத்தின் தயாரிப்பாகிய டி வைரஸின் கைங்கர்யத்தினால் உலகின் மனிதகுலத்தின் பெரும்பகுதி ரத்தவெறி கொண்ட நடைபிணங்களாக உருமாறிவிடுகிறது. இந்த கொடிய வைரஸின் தாக்குதலிருந்து தப்பிப்பிழைத்த மனிதர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை பாதுகாப்பான இடமொன்றிற்கு அழைத்து செல்லும் தன் பயணத்தை தொடர்கிறாள் அம்ப்ரெல்லா நிறுவனத்தின் பிறிதொரு உற்பத்தியான ஆலிஸ் [Milla Jovovich]. ஆனால் ரத்தவெறி கொண்ட நடைபிணங்களையும், பலம்வாய்ந்த அம்ப்ரெல்லா நிறுவனத்தையும் தன் பயணத்தில் இன்னமும் எதிர்த்துமோத வேண்டிய கட்டாயம் ஆலிஸிற்கு இருக்கிறது…நல்ல கதை வேண்டாம். ஏன் கதையே வேண்டாம். சிறப்பான மோஸ்தருடன் உருவாக்கப்படும் ஆக்ஷன் காட்சிகளும், திறமை வாய்ந்த இயக்குனர் ஒருவர், தன் இயக்கம் மூலம் திரைப்படத்தை நளினமாக நகர்த்திச் செல்லும் வேகமும், பெரும்பாலான சமயங்களில் ஆக்ஷன் திரைப்பட பிரியர்களின் மனங்களை ஒரளவேனும் திருப்தி கொள்ளவைத்து களிப்பூட்டும். Paul W.S. Anderson இயக்கியிருக்கும் Resident Evil: After Life ல் சுவாரஸ்யமான புதிய கதைதான் இல்லை- தொடர்ந்து இதே கதைதானே என்ற உணர்வு எழாமலில்லை- என்றால், ஏனையவைகளும் அங்கு இல்லை. ஆனால் அவதாரில் பயன்படுத்தப்பட்ட 3D Fusion Camera System இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தில் அதன் பயன் என்ன என்பதை புரிந்து கொள்வதில்தான் சிரமமிருக்கிறது.குளிர்பதனப்பெட்டியிலிருந்து அழுகிய தக்காளியை ஒத்த கதை ஒன்றை எடுத்துக்கொண்டு தைரியமாக படத்தை இயக்கியிருக்கிறார் ஆண்டர்சன். இந்த தைரியம் இனிவரும் நாட்களில் பல புதிய இயக்குனர்களிற்கு முன்னுதாரணமாக திகழும் என்றால் அதில் எந்த ஐயமும் எனக்கில்லை.டோக்கியோவில் அமைந்திருக்கும் அம்ப்ரெல்லா நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆரம்பிக்கும் சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பமாகிறது திரைப்படம். அந்த முதல் நிமிடங்கள் முதலே ரத்த வெறி பிடித்து, மனித மாமிசம் தேடி அலையும் நடைபிணங்களைவிட தான் மிகவும் கொடியவன் என்பதை ரசிகர்களிற்கு உணர்த்துவதில் பெரும் வெற்றி காண்கிறார் இயக்குனர் திரு ஆண்டர்சன் அவர்கள். டோக்கியாவில் விழ ஆரம்பித்த அடி, அலாஸ்கா வழியாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரம்வரை தொடர்கிறது. பலமாக. படத்தின் பாதியில் எழுந்து சென்றவர்கள் பாக்யம் செய்த ஆத்மாக்கள்.
கதையும் இல்லை, கதாநாயகியும் அவுட் என்றால் துணைப்பாத்திரங்களின் தெரிவு மகா கொடுமை. அவர்களின் நடிப்பு மெகா கொடுமை. இவர்கள் எல்லாரையும் விட வில்லன் பாத்திரம் அல்டிமேட் கொடுமை. ரெஸிடெண்ட் எவில் திரைப்படம் கொடுமையையே கண்ணீர் வடிக்க செய்யும் ஒரு கொடுமை.
அட படத்தின் முடிவிலாவது ரசிகர்களை நிம்மதியாக வெளியேற விட்டார்களா!!! திரையில் எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தை இடைநிறுத்தி, சனிபகவான் தனக்கு சந்தா கட்ட மறக்காதீர்கள் என மெயில் அனுப்பியதுபோல் ஐந்தாம் பாகத்திற்கு அச்சாரம் போடுகிறார்கள்.
ரெஸிடண்ட் ஈவில் திரைப்பட இயக்குனர், தமிழ் கூறும் நல்லுலகின் எந்த மோசமான இயக்குனருடன் போட்டியிட்டாலும், தமிழ் கூறும் நல்லுலகிற்கே வெள்ளிக் கரடி கிடைக்கும். அதேபோல் ரெஸிடெண்ட் ஈவிலின் நடிப்புத் திறமைகளுடன் தமிழ் சினிமா உலகின் இளைய தளபதி, கேப்டன், பசுநேசன் ஆகியோரின் முழுத்திறமைகளையும் கலந்துகட்டி மோதவிட்டால்கூட தமிழின் மும்மூர்திகளே ஆஸ்கார்களை அள்ளுவார்கள். உலகின் மிக மோசமான திரைப்படங்கள் பட்டியலில் உடனடியாக சேர்ந்து கொள்வதற்கான முழுத்தகுதியும் ரெஸிடெண்ட் ஈவிலிற்கு இருக்கிறது. ரெஸிடென்ட் ஈவில், ஆக்ஷன் சினிமாவினதும், அதன் ரசிகர்களினதும் அதி உச்ச அவமானம்.




தலைப்பு உபயம் பாண்ண்ண்டி மைனர் அவர்கள்.
ட்ரெயிலர்[ ம்க்க்கும்]
