Showing posts with label Edge of Darkness. Show all posts
Showing posts with label Edge of Darkness. Show all posts

Thursday, April 8, 2010

இருளின் விளிம்பில்


போஸ்டன் காவல் துறையில் பணியாற்றும் டாம் கிராவெனின் [Mel Gibson] மகளான எமா, தன் தந்தையுடன் சில நாட்களை அமைதியாகக் கழிப்பதற்காக அவன் நகரிற்கு வருகை தருகிறாள். எமா அணு அறிவியலில் பட்டம் பெற்றவள். நோர்த்மோர் எனும் பெரும் நிறுவனத்தில் அவள் பணியாற்றி வருகிறாள்.

நகரின் பரபரப்பான ரயில் நிலையத்திற்கு சென்று தன் ஒரே ஒரு செல்ல மகளை வரவேற்கும் டாம், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு உணவுக்கடையில் சில பொருட்களை வாங்குவதற்கு செல்லும் டாம், கடையில் தான் வாங்கிய பொருட்களுடன் திரும்புகையில் எமா, காரின் வெளியே வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.

மிகுந்த அக்கறையுடன் தன் மகளை நோக்கி ஓடி வரும் டாம், அவளது வாந்தி குறித்து சந்தேகத்துடன் விசாரிக்கிறான். அழகான புன்னகை ஒன்றை மலர்த்தியவாறே தான் கர்ப்பமாகவில்லை என்று தன் தந்தையிடம் கூறிச் சிரிக்கிறாள் எமா.

தன் மகளுடன் வீடு வந்து சேரும் டாம், இரவு உணவைத் தயாரிக்கும் வேலைகளில் இறங்குகிறான். சமையலிற்கான காரியங்களைச் செய்தபடியே தன் மகளுடன் உரையாடலைத் தொடர்கிறான் டாம். தன் மகள் மீது உள்ளார்ந்த பாசம் கொண்ட தந்தை அவன். நேர்மையான மனிதன். எமாவின் தற்போதைய வாழ்வு குறித்து அவன் அதிகம் அறிந்திருக்கவில்லை எனிலும் அவள் மேல் அவன் கொண்ட அன்பு என்றுமே குறைந்ததில்லை.

இருவருமே மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கையில் எமா மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறாள். அவள் மூக்கிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பிக்கிறது. எமாவின் முகத்தில் பயம் அப்பிக் கொள்கிறது. தான் ஒரு மருத்துவரைப் உடனே பார்க்க வேண்டும் எனக் கதற ஆரம்பிக்கிறாள் எமா. தன் மகளை ஆதரவுடன் அணைத்துக் கொள்ளும் டாம், அவளை ஒரு மருத்துவரைக் காண அழைத்துச் செல்வதற்கு ஆயத்தமாகிறான்.

hors-de-controle-2010-16982-1035159286 தன் தந்தையுடன் வீட்டின் வாசல் கதவு நோக்கி அழுதபடியே செல்லும் எமா, தான் டாமிடம் ஒரு விடயத்தைக் கூற வேண்டுமென சொல்கிறாள். இதனைக் கேட்டபடியே தன் வீட்டின் வாசல் கதவைத் திறக்கிறான் டாம். வீட்டிற்கு வெளியே பலத்த மழை முழு வீச்சுடன் பெய்து கொண்டிருக்கிறது. வீட்டிற்கு வெளியே தரித்து நிற்கும் காரை நோக்கி அவர்கள் செல்ல விழைகையில் கிராவென் எனும் குரல் மழையின் ஓசையைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கிறது.

தன் பெயரைச் சொல்லி அழைத்ததால் திடுக்கிட்டு, குரல் வந்த திசை நோக்கித் திரும்புகிறான் டாம். கொட்டும் மழையில் துப்பாக்கியைக் கைகளில் ஏந்தியபடி, தலையில் குல்லாய் முகமூடி அணிந்த உருவம் ஒன்று அங்கு நிற்பதை அவன் காண்கிறான். அவன் அந்த உருவத்தைக் காணும் அக்கணமே அதன் கைகளில் இருந்த துப்பாக்கி வெடிக்கிறது.

துப்பாக்கியிலிருந்து சிறிது மழையில் நனைந்து பாய்ந்து வந்த குண்டு, கிராவெனிற்கு பதிலாக அவன் மகள் எமாவின் நெஞ்சில் ஆவேசமாக புதைகிறது. அந்தக் குண்டின் ஆவேச உதையில் வீட்டின் வாசல் கதவை நோக்கி தூக்கி எறியப்படுகிறாள் எமா. கீழே விழுந்த தன் அன்பு மகளைக் தன் கைகளில் ஏந்துகிறான் டாம், ஆனால் அவள் உயிர், அவள் உடலை மட்டும் டாமின் கரங்களில் தவழ விட்டுப், பெய்யும் மழையில் கரைந்து ஓடி விடுகிறது.

பொலிஸ் விசாரனைகள் ஆரம்பமாகின்றன. டாமைக் குறி வைத்த கொலைஞன் யாராக இருக்கலாம் எனும் விசாரணை மும்முரமாகிறது. தான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு செல்லும் டாம், தன்னைக் குறிவைத்த கொலைகாரன் குறித்த விசாரனையை தன் கைகளில் எடுத்துக் கொள்கிறான். தன் அன்பு மகளின் இழப்பு, அவனை வெறுமையின் காதலை அனுபவிக்க செய்கிறது. உடைந்த உணர்வுகளுடன் தன் அன்பு மகளின் இறுதிக் காரியங்களை செய்து முடிக்கிறான் டாம். தன் மகளின் அஸ்தியை அவள் சிறுமியாக இருந்தபோது தன்னுடன் விளையாடிக் களித்த கடற்கரையொன்றின் கவலையற்ற அலைகளில் அவளின் சிரிப்புக்களைக் கேட்டவாறே கரைக்கிறான் அவன்.

hors-de-controle-2010-16982-1155037322 மனதில் வேதனையுடன் தன் வீட்டில் எமா விட்டுச் சென்ற பொருட்களை ஆராய்கிறான் டாம். அந்தத் தேடலில் எமாவின் உடமைகளினுள் ஒரு கைத்துப்பாக்கியும் இருப்பதைக் காணும் டாம் மனதில் சந்தேகம் முளைவிட ஆரம்பிக்கிறது. அவன் கண்டெடுத்த கைத்துப்பாக்கி மீதான தேடலில் டாம், எமாவின் நண்பர்களை சந்திக்கிறான். அவர்களை விசாரிக்கிறான். எமா வாழ்ந்த வீட்டிற்கு செல்கிறான் அங்கு அவள் வீட்டில் திருடு போயிருக்கிறது என்பதைக் கண்டு கொள்கிறான். எமா பணிபுரிந்த நோர்த்மோர் நிறுவனத்திலும் தன் விசாரணைகளைத் தொடர்கிறான் அவன். அவன் தேடல்களும், விசாரணைகளும் மழை இரவில் கொலைகாரன் குறிவைத்தது தன்னை அல்ல என்பதை அவனிற்கு அறிவிக்க ஆரம்பிக்கின்றன.

தன் மகள் எமாவின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்பதை அறிந்து கொள்கிறான் டாம். அந்தக் கொலைக்கான காரணம் தன் மகள் தெரிந்து கொண்ட ஒரு பயங்கரமான ரகசியம் என்பதையும் அவன் தெரிந்து கொள்கிறான். தன் மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த வலிமையான சில சக்திகளை எவ்வகையிலாவது வேரறுக்க தயாராகிறான் அவன்..

மெல் கிப்சனை ஹீரோவாக வெள்ளித்திரையில் பார்த்து ஏறக்குறைய ஏழு வருடங்கள் ஓடி விட்டது. தன் மீள் வருகையை Edge of Darkness திரைப்படத்தின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் அவர். 1985களில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, இதே பெயரைக் கொண்ட ஒரு தொலைக்காட்சித் தொடரினைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் Martin Campbell இயக்கியிருக்கிறார்.

அமெரிக்க தேச பாதுகாப்பு, ரகசிய அணு ஆயுத உற்பத்தி, ரகசியங்களை தெரிந்து கொண்டவர்களை பக்காவாக முடித்துக் கட்டும் வலிமையான சக்திகள். ரகசிய ஏஜண்ட், தன் மகளின் மரணத்திற்காக வஞ்சம் தீர்க்க துடிக்கும் உறுதியான ஒரு தந்தை என ஒரு த்ரில்லரிற்குரிய அனைத்து மூலங்களையும் திரைக்கதை கொண்டிருக்கிறது. ஆனால் அதனை விறுவிறுப்பாக பரிமாறத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

hors-de-controle-2010-16982-106004785 படத்தில் ஆரம்பக் காட்சிகளில் ரசிகன் எதிர்பார்க்கும், மர்ம கொழுக்கி, கொலை செய்யப்படும் மகள், உறுதியாக விசாரணையை ஆரம்பிக்கும் தந்தை போன்ற அம்சங்கள் விரைவாக வந்து சேர்கின்றன. தன் மகளின் மரணத்தின் பின் டாம் ஆரம்பிக்கும் அந்த விசாரணை ஜவ்வாக நகர ஆரம்பித்து விடுகிறது.

திரைக்கதை மெல் கிப்சனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கிறது. நாங்களும் அவரைத் தொடர்கிறோம். ஆனால் நாங்கள் ரசிகர்கள், தன் மகளைக் கொன்றவர்களை வஞ்சத்துடன் தேடி அலையும் தந்தையின் பொறுமை எங்களிற்கு இல்லை என்பதை திரைக்கதை ஏனோ மறந்து விடுகிறது. பார்வையாளர்களை அவர்கள் அறியாமலேயே கொட்டாவி உற்பத்தி ஆலைகள் ஆக்குவதில் திரைக்கதை வெற்றி காண்கிறது.

திரைப்படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகளில் தரப்படும் தகவல்களிலிருந்தே ஒரு சாதாரண பார்வையாளன் மர்மம் என்ன என்பதை சற்று ஊகித்து விட முடிகிறது. அம்மர்மமானது பின் பலமான பெரு நிறுவன, அரசியல் சக்திகளுடன் தொடர்பு படுத்தப்படும்போது பரபரப்பாக நகர்வதற்கு பதிலாக நத்தைகளை ஓட்டப் போட்டிக்கு அழைக்கிறது திரைப்படம்.

மெல் கிப்சனை நம்பி, அவரை மட்டுமே நம்பி! திரைப்படத்தினை அவர் மேல் சுமத்தி விட்டிருக்கிறார்கள். அவரும் பாசம் கொண்ட உறுதியான ஒரு தந்தையாக , நேர்மையான அதிகாரியாக, நல்ல மனிதனாக தன்னால் இயன்றதை செய்திருக்கிறார். ஆனால் மெல் கிப்சனை இப்படி நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே அவரின் ஆட்டம், முன்பு பார்த்த ஒரு பாடலை ரீ மிக்ஸ்ஸில் மீண்டும் பார்க்கும் உணர்வைத் தருகிறது. ஆனால் ஆர்ப்பாட்டமில்லாத கிளாசிக் ரீ மிக்ஸ்.

hors-de-controle-2010-16982-1797487588 தன்னை நோக்கி பாய்ந்து வரும் காரை, தைரியமாக நேராக எதிர் கொண்டு, அதன் முன் கண்ணாடிகள், அதன் சாரதி, அதன் முன் சக்கரம் என்பவற்றில் குண்டுகள் பாய்ச்சும் காட்சி இப்படத்திலும் உண்டு. அந்தக் கார் புதர் செடி கொடிகளைத் தாண்டி பாய்ந்து ஏரியில் விழுவதே படத்தின் குறிப்பிடதக்க ஆக்‌ஷன் என்றால் படத்தின் மிகுதி ஆக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

டாம், தன் கற்பனையில் தன் மகளின் சிறு வயது நினைவுகளை மீட்டும் தருணங்கள் மட்டுமே திரைப்படத்தின் மனதில் நிற்கும் காட்சிகளாகின்றன. தன் மகளின் இறப்பின் பின் மெல் கிப்சன் கடுமையாக வருந்தி பூங்கா, கட்டில், என மெளனமாக அமர்ந்திருப்பது தொடர்ந்து வரும் போது சலிப்பைத் தருகிறது.

Edge of Darkness, ரசிகர்களை இருக்கைகளின் விளிம்புகளில் தொங்க வைப்பதற்கு பதிலாக, இந்தப் படம் எப்போது முடியும் எனக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வைக்கும் படமாக அமைந்துவிடுகிறது. [*]


ட்ரெயிலர்