Showing posts with label ஏலகிரியில் சிறுத்தை வேட்டை. Show all posts
Showing posts with label ஏலகிரியில் சிறுத்தை வேட்டை. Show all posts

Sunday, April 18, 2010

ஏலகிரியில் சிறுத்தை வேட்டை


காட்டு விலங்குகளிலேயே மிகவும் திறமையானதும், அபாயகரமானதுமான சிறுத்தையுடன் நீங்கள் பலப் பரீட்சை செய்ய விரும்பினால், அதற்கு காட்டைக் குறித்த நுண்ணறிவும், சிறுத்தையைப் போன்ற உள்ளமும் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பிரபல வேட்டைக்காரரும், காட்டுயிர் ஆர்வலருமான Kenneth Anderson. அவரது அனுபவங்கள் சிலவற்றின் தொகுப்பாகவே ஏலகிரியில் சிறுத்தை வேட்டை எனும் நூல் அமைந்திருக்கிறது.

நீங்கள் ஒரு விலங்கை வேட்டையாடப் போகிறீர்கள் எனில் அதன் பழக்க வழக்கங்கள் குறித்து முதலில் நன்கு அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் ஆண்டர்சன். ஆரம்ப நிலை வேட்டையர்களிற்கு உதவக்கூடிய ஒரு கையேடாக அன்றைய நாட்களில் அவரது அனுபவக் கட்டுரைகள் திகழ்ந்திருக்கக் கூடும்.

விலங்கு இரை தேடக் கிளம்பும் காலம், அது தன் இரையை தேடிச் செல்லக்கூடிய பாதைகள், அது தன் இரைக்காக காத்திருக்கக்கூடிய இடங்கள் போன்றவற்றை கூர்ந்த அவதானிப்பின் வழி கண்டடைவதன் மூலமும், நீண்ட பொறுமையுடன், விலங்கை வேட்டையாடுவதற்குகந்த மறைவிடத்தில் உன்னிப்புடன் காத்திருப்பதன் வழியாகவும் வேட்டையில் வெற்றியை அடையலாம் என்கிறார் ஆண்டர்சன். இங்கு பிரதானமாக புலிகள் மற்றும் சிறுத்தைகளையே விலங்கு எனும் பதத்தால் ஆசிரியர் சுட்டுகிறார்.

புலிகளுடன் ஒப்பிடும்போது சிறுத்தைகள் மனிதர்களை எதிர்க்கும் தன்மையைக் குறைவாகவே தம்மிடம் கொண்டுள்ளன எனும் ஆண்டர்சன், சிறுத்தை மனிதனைத் தாக்குவது என்பது அசாதரணமான சூழ்நிலையின் காரணமாகவே என்பதை விளக்குகிறார். சிறுத்தைக்கு உரிய இரை கிடைக்காமையை இதற்கு முக்கிய காரணமாகக் கூறும் ஆண்டர்சன், சிறுத்தை மனிதர்களை கண்டால் பின்வாங்கிச் செல்லும் தன்மை கொண்டது என்கிறார்.

இருப்பினும் தனது நீண்ட அனுபவத்தில் ஆறறிவு கொண்டவைபோல் நடந்து கொண்ட சிறுத்தைகளையும் தான் சந்திக்க நேர்ந்ததாக கூறும் ஆண்டர்சன், ஒருவர் எண்ணங்களை நன்கு புரிந்து கொண்டவைபோல் அவை நடந்து கொண்டன எனக்கூறி வியப்பை ஏற்படுத்துகிறார்.

புலி, மங்கோலியாவின் குளிர் பிரதேசத்திலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியது ஆனால் சிறுத்தையோ வெப்பம்மிகு இந்தியாவை சேர்ந்தது எனும் ஆண்டர்சன், புலியை விடச் சிறுத்தையே பூனையை பெருமளவில் ஒத்திருக்கிறது என்கிறார். பூனையைப் போலவே மலம் கழித்தபின் புல், பூண்டுகள், மணலால் அதனை மூடும் தன்மை சிறுத்தைக்கு இருக்கிறது ஆனால் புலியோ அதனை அப்படியே விட்டுச் செல்லும் தன்மை கொண்டதாகவிருக்கிறது.

இந்தியக் காடுகளிலுள்ள மிருகங்களில் மிகவும் புத்திக் கூர்மை கொண்ட மிருகமாக காட்டு நாயைக் குறிப்பிடுகிறார் ஆண்டர்சன். கூட்டமாகச் சேர்ந்து அவை தாக்கும்போது புலிகள் கூட அவைகளிடமிருந்து தப்பிவிட முடியாது என்கிறார் அவர். இவ்வாறாக சிறுத்தைகள், புலிகள், இன்னம் சில விலங்குகளின் பழக்க வழக்கங்கள், குட்டி வளர்ப்பு, குரங்கு வேட்டை, என்பன குறித்தும் புத்தகத்தின் முதல் அத்தியாயமான பழக்க வழக்கங்களில் விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர்.

Yellagiri_leopard ஏலகிரியில், காட்டிற்கு அண்மையில் அமைந்திருக்கும் கிராமமொன்றின் கால்நடைகளை தாக்கி உண்ணும் சிறுத்தை எவ்வாறு படிப்படியாக மனிதனை உண்ணும் விலங்காக மாறுகிறது என்பதனையும், அப்பகுதியின் வன இலாகா அதிகாரி அச்சிறுத்தையை கொல்ல எடுத்த முயற்சி தோல்வியுற, தன் சிறிய பண்ணையை சுத்தப்படுத்த வந்த ஆண்டர்சன், இச்சிறுத்தை பற்றிய தகவல்களால் ஆர்வமாகி அதனைத் தானே கொன்று விட முடிவெடுப்பதையும், அதனைத் தொடர்ந்து வரும் அவரின் தோல்விகளும், வெற்றியும் கலந்த சிறப்பான சிறுத்தை வேட்டையனுபவத்தை சுவையாக சொல்லி விரிகிறது புத்தகத்தின் இரண்டாம் பகுதியான ஏலகிரி சிறுத்தை.

இதற்கு அடுத்து வரும் மகடிச் சிறுத்தையும் கிழ முனுசாமியும் எனும் அத்தியாயம், பங்களுரின் மேற்கே அமைந்திருக்கும் மகடிக் குன்று காட்டுப் பகுதியில் தன்னம்பிக்கை அதிகமாகி அட்டகாசம் செய்த ஒரு சிறுத்தை பற்றியது. ஆனால் சிறுத்தையை விட சுவாரஸ்யமான ஒருவரை ஆண்டர்சன் எங்களிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவர்தான் கிழ முனுசாமி. அல்லது போக்கிரி முனுசாமி.

முனுசாமி ஒரு வழிகாட்டி, ஆண்டர்சன் இவனிடம் நான்கு தடவைகள் தான் ஏமாந்துள்ளதாக குறிப்பிடுகிறார். முனுசாமியின் ஜில்மால்களைக் குறித்து அரிதான வகை அங்கதச் சுவையுடன் விவரிக்கிறார் ஆண்டர்சன். சில இடங்களில் வாய் விட்டுச் சிரித்து விடக் கூடியதாக அவரது எழுத்து அமைந்திருக்கிறது. எவ்வாறு போக்கிரி முனுசாமியும், ஆண்டர்சனும் மகடிச் சிறுத்தையை வீழ்த்தினார்கள் என்பதை இந்த அத்தியாயம் சிறப்பாகக் கூறுகிறது. இப்புத்தகத்தின் மிகச் சிறந்த அத்தியாயம் இதுவே என்பேன். சாகஸமும், நகைச்சுவையும் கலந்து வாசகனை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் எழுத்துக்கள் அரிதானவை அல்லவா.

நூலில் அடுத்து வரும் பகுதி சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை என்பதாகும். சிறுத்தை இனத்தில் கருஞ்சிறுத்தை அரிதான ஒரு வகை என்கிறார் ஆசிரியர். தன் வாழ்வில் இரு தடவைகளே இவ்வகை விலங்குகளை தான் கண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

சீவனப்பள்ளி எனுக் குக்கிராமத்தையும், அதனை அண்டிய பகுதிகளிலும் அடாவடித்தனங்களில் ஈடுபட்ட ஒரு கருஞ்சிறுத்தையை அடக்க கிளம்புகிறார் ஆண்டர்சன். ஒர் இரவு காட்டில் அதனை தன் துப்பாக்கியால் சுட்டும் விடுகிறார் ஆனால் குண்டடியைத் தாங்கிக் கொண்டு கருஞ்சிறுத்தை தப்பி ஓடி விடுகிறது. குஷ் எனும் ஒரு சாதாரண நாயின் உதவியுடன் எவ்வாறு அவர் கருஞ்சிறுத்தையின் மறைவிடத்தைக் கண்டுபிடித்து அதன் கதையை முடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது இந்த அத்தியாயம்.

2094338635_685dc264bb காட்டின் அடர்ந்த இருளில் கருஞ்சிறுத்தையை ஆண்டர்சன் தனியாகத் தேடிச் செல்வது அருமையாக விபரிக்கப்பட்டுள்ளது. இரவில் காடு எவ்வாறு உருமாறுகிறது என்பதை ஆண்டர்சன் திகில் கலந்து எழுதியிருக்கிறார். வேட்டையின் முடிவில், நாய் குஷ்ஷின் அசாத்திய திறமையால் கவரப்படும் ஆண்டர்சன் அதனை தனதாக்கி கொள்கிறார் என்பதாக இப்பகுதி நிறைவு பெறுகிறது.

நூலின் இறுதி அத்தியாயமாக பாம்புகளும் இதர காட்டு விலங்குகளும் எனும் பகுதி அமைகிறது. ஆண்டர்சன் காடுகளில் தான் பெற்ற அனுபவங்களையும், அறிந்தவற்றையும் கொண்டு பாம்புகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து தப்புவது குறித்து இதில் பேசுகிறார். படிப்பதற்குச் சுவாரஸ்யமான தகவல்களை அவர் வழங்கியிருந்தாலும், அவர் கூறியிருக்கும் ஆறு அடி உயரத்திற்கு படம் பிடித்து எழுந்த ராஜ நாகம், யானைக்கு வெள்ளை நிறம் ஆகாது போன்ற தகவல்களை நம்புவது சற்றுச் சிரமமாகவிருக்கிறது.

இந்தியக் காடுகளில் வாழும் பாம்புகள் குறித்து சிறிது விரிவாக இந்தப் பகுதியில் ஆண்டர்சன் விளக்குகிறார். சிறு வயதிலிருந்தே பாம்புகள் மீது அவர் ஆர்வம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். பாம்பாட்டி ஆண்டர்சன் எனும் பட்டப் பெயர் சொல்லியும் அவர் அழைக்கப்பட்டிருக்கிறார். தனது பண்ணையில் இருபது நல்ல பாம்புகளைப் பராமரித்து, அவற்றின் விஷத்தைப் பொடி செய்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாக்கி தான் பணம் சம்பாதித்ததையும் பெருமையுடன் விபரிக்கிறார் அவர்.

ஆண்டர்சன் தனது வேட்டை அனுபவங்களில் தனக்கும், விலங்கிற்குமான போராட்டத்தைக் கூறுவதோடு மட்டும் நின்று விடாது, தான் வேட்டையாடும் காடுகளில் வாழும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் குறித்த தகவல்கள், தான் சந்திக்கும் கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்களுடனான தனது உறவு குறித்தும் விபரிக்கிறார். அவர் வேட்டையாடிய காலங்களின் போக்குவரத்து, தபால் துறை, மருத்துவ துறை, காட்டிலாகா போன்றவை குறித்த ஒரு சிறு பார்வையையும் அவர் வாசகனிற்கு வழங்குகிறார்.

14749855 கிழக்கு திசை நாடுகளில் வாழும் மக்கள் மீது அவர் கொண்டிருந்த ஒரு பொதுவான அபிப்பிராயத்துடன் என்னால் உடன்பட முடியாவிடிலும்[அலட்சியமும், அசிரத்தையும் சகஜமாக அம்மக்கள் மத்தியில் நிலவும் விசித்திர இயல்புகள் ஆகும்] ஆண்டர்சன் சிறப்பான ஒரு கதை சொல்லி என்பது மறுக்கவியலாத ஒன்று.

ஆண்டர்சன் தனது வேட்டையனுபவங்களில் தனக்கு ஒரு கதாநாயக பிம்பத்தை வழங்குவதை இலகுவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது. இருப்பினும் தன் தவறுகளையும், தோல்விகளையும், அச்சத்தையும் ஆண்டர்சன் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். சில தகவல்களை அவர் சுவைக்காக மிகைப்படுத்தி எழுதியிருக்கலாம் ஆனால் எந்த வேட்டைக்காரனாவது தன் வேட்டை அனுபவம் குறித்து மிகைப்படுத்தி கூறாமல் இருக்க முடியாது என்பதே என் கருத்து.

இந்தப் புத்தகத்தை சுவாரஸ்யம் கொண்டதாக மாற்றி அடித்ததில் மொழி பெயர்ப்பிற்கு பெரும் பங்கு இருக்கிறது. எஸ். சங்கரன் என்பவர் இந்நூலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். எளிமையான, தெளிவான, சரளமான மொழி பெயர்ப்பு. அவரது மொழி பெயர்ப்பு நடையானது, அமைதியான ஒரு காட்டருவிபோல் நூல் நெடுகிலும் ஓடிச் செல்கிறது. ஆண்டர்சனின் அங்கதத்தை அதன் சுவை கெடாது தமிழில் கொண்டு வந்ததற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கிழ முனுசாமியின் கதையைப் படிப்பவர்கள் இதனை புரிந்து கொள்ளலாம். ஆனால் வழமை போலவே மொழி பெயர்ப்பாளரின் பெயரைத் தவிர வேறு எந்த விபரங்களும் நூலில் வழங்கப்படவில்லை.

இந்நூல் தென்மொழிகள் புக் டிரஸ்ட் உதவியுடன் வள்ளுவர் பண்ணை எனும் பதிப்பகத்தால் 1962ல் முதல் தடவை வெளியிடப்பட்டது. புதிய பதிப்பானது Book For Children ஆல் 2006ல் வெளியிடப்பட்டு இருக்கிறது. குழந்தைகளிற்கான உலக இலக்கிய வரிசை என முன் அட்டையில் போட்டிருக்கிறார்கள். ஆனால் பெரியவர்களிற்கும் சிறப்பான வாசிப்பனுபவத்தை நூல் வழங்குகிறது. அதிகமான எழுத்துப் பிழைகள் உள்ளன என்பதனைத் தவிர புத்தகம் சிறப்பாகவே வெளியிடப்பட்டிருக்கிறது.

கென்னத் ஆண்டர்சன் 1910ல் பங்களூரில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பங்களூரிலேயே கல்வியும் கற்று, பணியும் ஆற்றியிருக்கிறார் ஆண்டர்சன். அவரிற்கு கர்நாடகம், ஹைதராபாத், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருநூறு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்திருக்கிறது. தமிழும், கன்னடமும் பேசத் தெரிந்தவர் என்கிறார்கள். பிரபலமான வேட்டைக்காரராக அவர் இருந்தாலும் தென்னிந்தியாவின் காட்டுயிர் ஆர்வலர்களில் ஒரு பிதா மகனாக அவர் கருதப்படுகிறார். அவரின் எட்டுப் புத்தகங்களும் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. தனது இறுதிக் காலத்தில் துப்பாக்கியை விலக்கி விட்டு கமெரா வழியாக அவர் காட்டுயிர்களை சுட்டு மகிழ்ந்திருக்கிறார். பல வருடங்கள் தாண்டியும் கூட அவர் எழுத்துக்கள் சுவையான வாசிப்பனுபவத்தை தருபவையாகவே உள்ளன. [**]