Tuesday, April 8, 2014

முக்கோணம் இல்லா முச்சந்தி அல்லது நீதி செத்த நிலம்


வதனமோ சந்த்ரபிம்பமோ - 14

டெக்ஸ் கதைகளின் ரசிகர்களாக இருக்கும் அன்பர்கள் புதியதொரு டெக்ஸ் கதையை படிக்க ஆரம்பிக்கும்போது கடவுளே இது பரட்டை கதையை விட மோசமாக இருக்ககூடாது எனும் வேண்டுதலுடனேயே அதை படிக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் ஒரு தந்திரம் உண்டு. எந்த பரட்டை கதையுமே டெக்ஸ் கதையை விட மொக்கையாக இருப்பது ஒன்று. பரட்டை கதையை விட மொக்கையாக டெக்ஸ் கதை எதுவுமில்லை என்பது இன்னொன்று. இந்த நம்பிக்கையின் துணையுடனும் எவ்ளோ அடிச்சாலும் நாம தாங்குவோம் எனும் டெக்ஸ் கதைகள் தந்த சிந்தாந்த அனுபவ முதிர்ச்சியுடனும் கைகோர்த்து டெக்ஸ் கதைகளை படித்து செல்கையில் கண்களின் ஓரம் வழிந்திடும் கண்ணீர் கூட ஆனந்தப் பன்னீராகவே வாசம் வீசி எம் சுற்றுச் சூழலை கிறங்க வைக்கும் என்பதை அறியாத டெக்ஸ் ரசிகரும் இங்குண்டோ. அந்த ஆனந்த கிறக்கத்திலே ஊறி பெருமேற்கின் எல்லையற்ற வெளிகளின் வன்காற்றாய் உருமாறி வெஸ்டெர்ன் எனும் தேரேறி வந்திடும் தேவர்களன்றி வேறு யாராக டெக்ஸ் ரசிகர்கள் இன்று இருந்திடவோ இனம் கண்டறியப்படவோ கூடும் என்பதை உரைப்பீரோ பார் உறை பாவலரே!!

இவ்வாறாக 1989ம் ஆண்டில் இந்தப் புவியில் மலர்ந்திட்ட சிறப்பு மலராம் TEX SPECIAL n°2 ன் கதையான Terre sans Loi எவ்வாறு டெக்ஸ் ரசிகர்களை களிப்புற வைக்கிறது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம். கதை வெளியாகி வெள்ளிவிழா காணும் காலம் வந்துவிட்ட பின்பும்கூட ஒரு கதையை படிக்க நாம் தைரியமாக தயாராகிறோம் என்றால் உண்மையாக அது ஒரு காலம் கடந்து நிற்கும் படைப்பு அல்லது கரும்பாறை ஒன்றின் புடைப்பு என்பதை அறியாதவர்கள் அல்ல டெக்ஸ் அபிமானிகள். ராட்சத டெக்ஸ் என இத்தாலியில் இதன் ஆரம்ப காலங்களின் செல்லமாகவும் டெக்ஸ் கதைகளிற்கே உரித்தான செருக்குடனும் அழைக்கப்பட்ட இவ்வகை கதைகள் மாத வெளியீடுகளில் இருந்து தம்மை தனித்து அடையாளம் காட்டுபவையாக இருந்தன. கதை மொக்கையாக இருந்தாலும்கூட ராட்சத டெக்ஸ் 2 ஒரு மொக்கை என இலக்கத்துடன் தனித்து அடையாளம் காணப்படக் கூடியவையாகவும் சுட்டிக் காட்டப்படக் கூடியவையாகவும் இவை இருந்தன என்பதும் இவற்றின் தனித்துவங்களில் ஒன்று.

இப்போது நீதியில்லா நிலம் எனும் இக்கதையின் தலைப்புக்கு வருவோம். இந்த உலகில் எங்குதான் நீதி வாழ்கிறது எனும் கேள்வியை எழுப்பாத அவநம்பிக்கையாளர்கள் இங்கு இல்லாமல் இல்லை. அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக அந்த ஊரிற்கு டெக்ஸை அவரின் கூட்டாளிகளுடன் எப்படியாவது ஒரு சாக்கு சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். டெக்ஸ் அந்த ஊரிற்கு போய் ஒரு ஐம்பது பக்கங்களின் பின் அங்கு அதுவரை இல்லாமல் இருந்த நீதி துளிர்விட ஆரம்பித்து டெக்ஸ் அண்ட் கோ குட்பை சொல்லி அந்த ஊரை விட்டு கிளம்பும் நிலையில் ஆயிரமாண்டு விருட்சத்தின் வளர்ச்சியை பெற்றிருக்கும். இப்போது அவநம்பிக்கையாளர்களை ஒரு துச்சப்பார்வை பார்த்து கண்களில் சற்று ஏளனத்தையும் வரவழைத்துக் கொண்டு டேய் போய் சாஃபோர்ட்ல பாருங்கடா நீதி எப்டி கிளை விட்டு நிழல் தருதுங்கிறத என்று சொல்லி விட்டு ஒரு டெக்ஸ் ரசிகன் நிமிர்ந்து நேராக ஒரு நேர்கோட்டு பாதையில் - சூரியன் மறைந்து கொண்டிருக்கும் திசையும் நேரமுமாய் இருந்தால் உசிதம்- கம்பீரமாக நடந்து செல்ல வேண்டும். மனதில் எழும் எந்த வசையும் வெளியில் வந்திடாத ஒரு உறங்கும் எரிமலையாக நடப்பது என்பதை கருவறையிலேயே ஒரு டெக்ஸ் ரசிகன் கற்று விட்டிருக்கிறான்.  ஆக அநீதியின் அந்தப்புரமான சாஃபோர்ட் நகரில் நீதியை தம் காலின் கீழ் போட்டு குத்து பரதம் டிஸ்கோ சல்சா கரகம் டிவிஸ்ட் ஸ்விங் போன்ற இன்னபலவகை நடனங்களை ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு நீசர் கும்பலை அடி பின்னியெடுத்து எவ்வாறு அங்கு நீதி விதையை  டெக்ஸ் அண்ட் கோ விதைக்கிறார்கள் என்பதுதான் டெக்ஸ் ஸ்பெசல் 2 ன் மையக்களம் என்பதை டெக்ஸ் அபிமானிகள் லக்கியின் துப்பாக்கி சுடும் வேகத்தைவிட வேகமாக சுட்டிருக்க வேண்டும்.

க்ராண்ட் கோட்டைக்கு டெக்ஸை அழைத்து யப்பா ஒரு நடை சாஃபோர்ட் வரை போய்ட்டு வாப்பா என காலனல் வெல்ஸ் சொன்னதுதான் தாமதம் டெக்ஸ் உடனடியாக நான் என்ன செய்தாலும் அதை யாரும் எதுவும் கேட்ககூடாது அதற்கு உத்தரவு தாங்கன்னு உறுமும் காட்சியில் டெக்ஸின் ரசிகர்களின் கையில் இருந்த மிக்ஸர் தட்டு கீழே விழுவது உறுதி. தயவுசெய்து மீண்டும் உங்கள் தட்டில் மிக்ஸரை நிரப்பாதீர்கள். ஏனெனில் மிக்ஸர் தட்டு மட்டுமல்ல நீங்களே படித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து தூக்கி எறியப்படும் அளவிற்கு இக்கதையில் ஆக்சன் இருக்கிறது. இந்த ஆக்சன்களை நான்கு கட்டங்களாக இந்தக் கதையில் பிரிக்கலாம்.

1- சாஃபோர்ட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்தபின் வாய்பா க்ரீக்கில் வந்து தங்கியிருக்கும் மாக் கார்மிக்கை தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக சந்திக்க செல்லும் டெக்ஸ் அண்ட் கோ, கானாடோ எனும் அப்பாசேயின் தலைமையின் கீழ் இயங்கும்  அப்பாசே அடியாள் அணியுடன் அதிரடியாக ஆக்சனில் இறங்கும் ஆக்சன். அப்பாசேக்கள் மலையில் இருந்து குதித்து சீறிப்பாயும் ஆற்றில் சிம்பிளாக நீந்தி செல்வதில் வல்லவர்கள் என்பதை கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி உணர்ச்சிகரமாக நிறுவும் அற்புதமான ஒரு சந்தர்ப்பமாக இது கதையில் அமைகிறது. மேலும் தனக்கு சாஃபோர்டில் நிகழும் அநீதிகள் பற்றிய தகவல்கள் அதிகம் ஏதும் தெரியாது என்றுவிட்டு சாஃபோர்டில் நிகழும் அனைத்தையும் மாக் கார்மிக் புட்டு புட்டு வைக்கும் காமெடி உலகத்தரமான காமெடி என்பதையும் நாம் ஒதுக்கி விடலாகாது.

2- பால் மாரிசன் எனும் குதிரை வியாபாரியிடம் தகவல் அறியச் செல்லும் டெக்ஸ் அண்ட் கோ தகவல்களை அறிவதற்காக பால் மாரிசன் காங்குடன் போடும் ஆக்சன். ஐந்தடி தூரத்தில் நின்று சுட்டாலும் தோட்டா உங்கள் உடலில் படாமல் நெளிவது எப்படி எனும் பாலபாடத்தின் அரிச்சுவடி தன் கையெழுத்தை இந்த ஆக்சன்களில் கிறுக்குவதை அபாரமாக காட்டி இருக்கிறார்கள்.

3- ஃபக்கோ சாவேஸ் [ தவறாக உச்சரித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல] பண்டமாற்று நிலையத்தில் வறுத்த இறைச்சி உருளைக்கிழங்கு பொரியல் பீர் என போட்டு தாக்கி செரிமானம் கண்டபின்பாக டெக்ஸ் அண்ட் கோ ஃபக்கோ சாவேஸ் அண்ட் கோவுடன் போடும் ஆக்சன். ஜன்னல்களினூடாக துப்பாக்கிகளை பறிப்பது. ஜன்னல்களிற்கு அப்பால் நிற்பவர்களை சுடுவது. ஜன்னல் அருகே விழுந்து சாவது. ஜன்னல் வழியாக தப்பி ஓடுவது. மூன்றடி தூரத்தில் டெக்ஸ் விழுந்து கிடந்தாலும் டெக்ஸை சுடாமல் டெக்ஸ் பிருஷ்டத்திற்கு அருகே சுட்டு மண் கிளப்புவது என ஆக்சனும் காமெடியும் கலந்து கட்டி நீயா நானா சூப்பர் ஜோடி மேளா நாடாத்தும் ஆக்சன் தருணமாக இது அமைகிறது.

4. அ] ஃபக்கோ சாவேஸ் பண்டமாற்று நிலையத்திலிருந்து செமகாமெடி கெட்டப் ஒன்றில் டெக்ஸ் அண்ட் கோ கிழட்டு நெட்டின் குதிரை வண்டியில் செல்லும் வழியில் இடைமறிக்கும் கேடி கெவின் க்ராஸ்பி காங்குடனான ஆக்சன். மேற்கில் வரட்சி பெண்களை அடையாளம் காண்பதிலும் நிலவுகிறது என்பதை கதாசிரியர் சூசகமாக கோடிட்டு காட்டும் பகுதி இது. பெண்களால்தான் சும்மா இருந்த அமைதிப் பூங்காக்களில் எல்லாம் மோதல் முளைவிடுகிறது எனும் உண்மையை அப்பட்டமாக கன்னத்தில் அறைந்து கூறும் ஆக்சன் இங்கு குதிரைகள் களைக்கும்வரை ஓடி ஓடி காட்சியாக்கப்படுகிறது. டெக்ஸின் இஸ்பானிய மொழிப்புலமையும் அதை அவர் பிரயோகிக்கும்போது அவர் காட்டும் முகபாவனைகளும் தங்கப்பனையும் ஆஸ்கரும் பெர்லின் தங்கக்கரடியும் சேர்த்து தந்தாலும் கிடைக்காத ஒரு திறமை மேற்கின் சொர்ண்மால்யனாக அவரை அடையாளம் காட்டி நிற்கிறது.

ஆ] சாஃபோர்ட் சிறையை கேடி கெவின் க்ராஸ்பியும், மெக்ஸிக்க வெடைக்கோழி லோலா சாவேஸும் இணைந்து தாக்கும் ஆக்சன். கதையின் இறுதி ஆக்சன். சும்மா கோழிக்கூட்டுக்குள் அடைபட்ட சிங்கம்போல் டெக்ஸ் அடிபின்னும் காட்சி இது. இந்த ஆக்சனிற்காகவே லோலா சாவேஸ் இறுக்கமான கால்சட்டை அணிந்து வருகிறார். அப்போது அவர் பின்னிளமைகளின் செழிப்பையும் வனப்பையும் தாராளத்தையும் பிரபல சித்திரக் கலைஞர் அல்ஃபெர்டோ ஜியோலிட்டி உணர்பரவசமாக படைத்து எம்மை கிறங்கடித்து விடுகிறார். ஒரு தருணத்தில் ஆக்சனை பார்ப்பதா லோலாவின் பின் லோலாவை பார்ப்பதா என்பதிலேயே நமக்கு லோல் ஆகி விடுகிறது.

அல்ஃபெர்டோ ஜியோலிட்டி பிரபலமான ஒரு சித்திரக்கலைஞர். சிஸ்கோ கிட், ஸ்டார் ட்ரெக், பிளானட் ஆப் த ஏப்ஸ், லோர்ட் ஜிம், டார்ஸான், ஸோரோ என நிறைய வரைந்து தள்ளி இருக்கிறார்.  காமிக்ஸ் துறையில் வால்ட் டிஸ்னிக்கு பின்பாக எடிசன் விருதை பெற்ற பெருமையும் பெற்றவர். அவர் பாணி தனித்துவமானது, மரபார்ந்தது என்ற போதிலும் அது என்னை அதிகம் கவரவில்லை. அவர் சித்திரங்களை காண்கையில் அது குறித்த ஒரு கிண்டலுணர்வு குளமொன்றின் மேல் அலைந்திடும் துரும்பாக அலைவதை தடுக்க இயல்வதென்பது அடிக்க ஓங்கிய டெக்ஸின் கையை தடுப்பதற்கு சமனாக இருக்கிறது. கார்சனை நடிகர் திலகம் சிவாஜி போலவும் டெக்ஸை ஹிந்திபட டாடி போலவும் வரையும் திறன் அவரின் தனித்துவங்களின் ஒன்று என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

மொத்தத்தில் 25 வருடங்களுக்கு முன்பாக வந்த ஒரு வெஸ்டெர்ன் ஆக்சனை சகிக்கும் மனப்பான்மை நிரந்தரமாக உடைய வாசக உள்ளங்களுக்கு இக்கதை ஒரு வரப்பிரசாதமாகும். டெக்ஸ் இவ்வளவு வன்முறையாளராக இதற்கு முன்பு காட்டப்பட்டிருக்கிறாரா தெரியவில்லை. உணர்ச்சியின் வேகத்தில் கார்சனின் கன்னத்தில் ஒன்று போடவும் தயாராக இருக்கும் டெக்ஸை வாசகர்கள் இக்கதையில் சந்திக்கலாம். அடி அடி அடி என்று போட்டு அடிக்கிறார் டெக்ஸ். குதிரைகள் மாடுகள் வல்லூறுகள் என அந்த வறள்நில வாழ் பிராணிகள் எல்லாம் டெக்ஸின் கையில் மாட்டிக் கொண்டவர்களிற்காக கண்ணீர் சிந்துவதை  ஒரு அனுபவம் கொண்ட வாசகர் கதையின் சட்டகங்களிற்கு பின்னால் உணர்ந்திட முடியும். மாறாக இக்கதையை படிக்கையில் சொர்க்கலோக பூங்காவனம் ஒன்றின் உள்ளே இருப்பதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுமாயின் நீங்கள் உங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொள்ளலாம். உண்மையான டெக்ஸ் ரசிகர் நீங்கள்தான் என்பதற்கான அடையாளம் அதை தவிர்த்து வேறில்லை. இப்பதிவை எழுதி முடிக்கையில் ஆகஸ்டு மாதம் ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வருகிறதாமே என என்னிடம் ஒருவர் சந்தேக கேள்வி எழுப்பினார். யாருக்கு தெரியும். ஈஸ்ட்மென் கலரில் வந்தால் ஜம்பு கூட நன்றாக இருக்ககூடுமோ என்னவோ!!

21 comments:

 1. அன்பின் க.கா,

  இந்த பதிவில் உங்கள் வழமையான ஒருபக்க மாதிரி தமிழாக்க ஸ்கான் ஏன் இடம்பெறவில்லை என்று புஷ்பவள்ளியாகிய பூங்காவனம் கேட்கிறார்.

  உங்கள் தரப்பு பதில் என்ன?

  ReplyDelete
  Replies
  1. இனி வரும் பதிவுகளில் தமிழாக்கம் செய்யப்பட்ட பக்கங்களுக்கு அவசியமில்லை என நான் ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டதால் வந்ததே அது , நண்பர் சாக்ரடிஸ் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்தமைக்கு என் நன்றிகள் விஸ்வா

   Delete
 2. இது தமிழில் வர இருக்கும் "நில்! கவனி! சுடு!" கதையா?

  ReplyDelete
 3. இல்லை சாக்ரடீஸ்.

  நில் கவனி சுடு கதை இந்த இரண்டு கதைகளின் தொகுப்பே:

  601 - The Executioners of Vegas

  602 - Duel at Corral

  இதில் இரண்டாவது ஆக இருக்கும் புத்தகத்தின் அட்டையை நமது ஒவியர் மாலையப்பர் வண்ணக்கலவையுடன் சிறப்பாக வரைந்து இருக்கிறார்.

  ReplyDelete
 4. Literally I am ROFL ... உண்மையிலேயே வெகு நாட்களுக்கு அப்புறம் நான் வாய் விட்டு சிரித்தது இந்தப் பதிவைப் படித்து தான்

  முக்கியமாக இந்தப் பத்தியை படித்துவிட்டு :)

  //..அவர் பின்னிளமைகளின் செழிப்பையும் வனப்பையும் தாராளத்தையும் பிரபல சித்திரக் கலைஞர் அல்ஃபெர்டோ ஜியோலிட்டி உணர்பரவசமாக படைத்து எம்மை கிறங்கடித்து விடுகிறார். ஒரு தருணத்தில் ஆக்சனை பார்ப்பதா லோலாவின் பின் லோலாவை பார்ப்பதா என்பதிலேயே நமக்கு லோல் ஆகி விடுகிறது...//

  முடியல :) :D :P

  //....இப்பதிவை எழுதி முடிக்கையில் ஆகஸ்டு மாதம் ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வருகிறதாமே என என்னிடம் ஒருவர் சந்தேக கேள்வி எழுப்பினார். யாருக்கு தெரியும். ஈஸ்ட்மென் கலரில் வந்தால் ஜம்பு கூட நன்றாக இருக்ககூடுமோ என்னவோ!! ..///

  உண்மையிலேயே ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வரப்போகுதா? சூப்பர் ;)

  தொடரட்டும் புதுப்பதிவுகள் ...

  ReplyDelete
  Replies
  1. என்ன கலர்ல வந்தாலும் டெக்ஸ் கதையை விட்டு கொடுக்க கூடாது :p

   Delete
 5. பதிலுக்கு நன்றி விஷ்வா சார்!

  ஆகஸ்ட் மாதம் ஈஸ்ட்மென் கலரில் வருகிறது என்றால் அது "சட்டம் இல்லா சமவெளி!"

  :-D

  ReplyDelete
 6. Replies
  1. இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி

   Delete
 7. டெக்ஸ் கதையில் இவ்ளோ செக்ஸ் புகுத்த உம்மால் தான் முடியும் :-)

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் மூன்றெழுத்து செக்ஸ் மூன்று எழுத்து காமிக்ஸ் நான்கெழுத்து இவற்றிற்கு பொதுவாக இருப்பது க்ஸ் எனும் இரு எழுத்து அவை மேல் ஒரு எழுத்தை புகுத்த வேண்டும் என்பது என் தலையெழுத்து [ இனி இப்டி கமெண்டு போடுவீர் :p ]

   Delete
 8. அன்பு நண்பரே,

  ஜெய்சங்கர் நடித்த ஜம்பு படம் ஒரு க்ளாஸிக் என்று தெரியாதவர்கள் நிறைய பேர் உலகில் உள்ளனர். நீங்கள் அப்பட்டியலில் இல்லை என்பது ஆறுதலலிக்கிறது. சற்றே உறுதியான கொடியினை பற்றி 40 கிமீ வேகத்தில் ஜம்பு காட்டில் உலவும் காட்சி இன்னும் பசுமையான நினைவில் உள்ளது.
  விரியன் பாம்பு என்ற வார்த்தை இல்லாத டெக்ஸ் கதையினை என்றேனும் ஒருநாள் படிக்கதான் போகிறேன். டெக்ஸ் பதிவில் உள்ள அங்கதத்தை வெகுவாக இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. விரியன் என்பதை விசித்ரவிரியன் என்று மாற்றி விடலாம் :p

   Delete
 9. அட்டகாசம்... டெக்ஸ் கதையை படித்திருந்தால் கூட இவ்வளவு ரசித்திருக்க மாட்டேன்

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது டெக்ஸை மீறி எதையும் ரசிக்க முடியாது ... ஆம்பர் ஹெர்ட் விதிவிலக்கு :p

   Delete
 10. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 11. //மிக்சர் தட்டு கீழே விழுவது உறுதி// :D

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பரட்டை ரசிகராக இருந்தாலும் எங்கள் டெக்ஸ் மனம் கண்ணீர் விடும்படி இப்படியெல்லாம் சிரிக்கப்படாது :p

   Delete
 12. did u reviewed the biggest story of tex ? what is the name of the biggest story of tex ?

  ReplyDelete
  Replies
  1. ராஜகணபதி ராமசுந்தரம் அவர்களே, அந்த மாபெரும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை .... உங்கள் கேள்விக்கான பதில்களை கொண்ட சுட்டியை கீழே தருகிறேன் .... இதுவரை பொனெலி குழுமம் வெளியிட்ட கதைகளிலேயே நீண்ட கதையாக இன்றுவரை இந்த டெக்ஸ் கதையே கருதப்படுகிறது ... இதில் இருக்கும் தகவல்களை இணையவுலவியின் மொழிபெயர்ப்பு வசதியால் உங்களுக்கு பிடித்த மொழியில் மொழிபெயர்த்து தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம் ... ஆறு இதழ்கள் சேர்ந்து உருவாக்கும் இக்கதை மொத்தம் 586 பக்கங்களை உடையதாக இருக்கிறது .... டெக்ஸின் உற்ற நண்பன் மொரிஸ்கோ, அஸ்டெக் தேவன், அஸ்டெக் மறை நூல், சிறுத்தை மனிதர்கள், அரசியல்வாதிகள் கொலை, வினோதமான சகோதரர்கள் என விரியும் இக்கதை அனைத்து டெக்ஸ் ரசிகர்களினதும் ஒரு இன்கனவாகவே இருக்கும் என்றே எண்ணுகிறேன் ... உங்கள் கேள்வியால் நானும் சில தகவல்களை அறிய முடிந்தது நன்றி நண்பரே.

   http://www.ubcfumetti.com/tx/387.htm

   Delete
  2. ஓஹோ .. இது தான் நீண்ட மாபெரும் டெக்ஸ் கதையா? எடி-க்கு ஒரு copy பார்சல்

   லயன் பொங்கல் ஸ்பெஷல் மலர் - ரெடி ;) ....

   Delete