Sunday, March 18, 2012

டாய்லெட்டிலிருந்து டிவிலைட்வரை: போன் பீரோ, ஓவியம் வரைந்த கலைஞன்!

bee-on-yellow-flowerகண்ணீரும் கம்பலையுமாக எழுதியவர் ஜோஸ்ஷான்.

இன்று வழமைபோலவே என் சொம்பாருயிர்களிற்கு போட வேண்டிய பதிவை எழுதிடலாம் என முகட்டைப் பார்த்து என் எண்ணங்களை சாரைப்பாம்பின் லாவகத்துடன் ஊர விட்ட தருணத்தின்போதுதான் பிரான்சிலிருந்து என் நண்பர் எனக்கு அந்த மின்மடலை அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் நிறுத்திவிடாது தொலைபேசிமூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு “ தல எனக்கு என்ன செய்றது ஏது செய்றதுன்னே தெர்ல, இப்படி ஒரு துக்கமான செய்திய கேட்க நான் ஏன் உயிரோட இருக்கணும், ஆனா ஒன்னு தல, நீங்க தமிழ்ல எழுதுற வரைக்காச்சும் நான் உசிரோட இருக்கனும், உங்க தமிழ் பதிவுகளப் பார்த்தப்புறம்தான் நான் என் தமிழ் வாத்திய நன்றியோட நெனைச்சுக்கிறேன், அப்டி சூப்பரா டோட்டல் லிட்டர்ரேச்சரா எழுதுறீங்க தல, அதுவும் லேட்டஸ்ட் நாஸ்டாலியா பதிவு, அழ வெச்சிட்டீங்க, இப்ப பாருங்க இந்த சேதி, எல்லாத்துக்கும் அழுறதுக்கு கண்ணீரிற்கு எங்கே போறதுன்னே தெரியல தல, சரி தல, நீங்க செய்திய பார்த்திட்டு போஸ்ட போடுங்க, தகவலைப் படிச்சிட்டு உடைஞ்சிடாதீங்க, அப்புறமா பேசலாம், பை தல” என்றான். அப்படி என்னதான் உயிர் போகும் செய்தி அதில் இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என என் மின்னஞ்சல் பெட்டியை திறந்தேன். மடலின் மேல் சுண்டினேன். திரையில் விரிந்த மடலில், தல Bone Biraud எனும் Beer எம்மை விட்டு போய்ட்டார் தல… என்னும் ஒரு வரித் தகவல். அந்த இருள் தருணத்தின் மரணவிநாடியின் துடிப்பை என் இருதயம் சொல்லவியலாக் கவிதையொன்றின் லத்தீனமெரிக்க மொழிபெயர்ப்பாய் துடிக்க வைத்தது.

வண்டு மலர்களில் அமர்கிறது, ஈ மலங்களில் அமர்கிறது, அவரவர் அவரவர்க்கு இஷ்டமான இடங்களில் அமர்வதென்பது அவரவர் இஷ்டம்- போன் பீரோ

போன் பீரோ, சிறுவனாக இருந்த காலத்தில் கவ்பாய் கதைகள் மீது பிரியம் கொண்டவனாக இருந்தான். அவனிற்கு அப்பிரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவன் தந்தை. ஏனெனில் படிக்க வேண்டிய சிறுவனை கழுத்தில் மணிகட்டிய மாடுகளை பராமரிக்க வைத்த பெருமை அவரையே சாரும், இருப்பினும் கவ்பாய் கதைகள்மீது போன் பீரோ கொண்ட மோகம் அவனைப் படிக்க வைத்தது. அவனது பள்ளி ஆசிரியையான மேரி அவனைப் பற்றி நினைவுகூர்கையில் ரொம்பக் கட்டையா காற்சட்டை போட்டுக்கினு வருவான், ஏன்னு கேட்டா மாடுகள கலைச்சுப் பிடிக்க அதுதான் வசதிம்பான், ஏன்யா மாடுகள பிடிக்கப் போற, படி ராசான்னா, டீச்சரு பள்ளிக்கூடத்தில நீங்க பாடம் கற்று தாரீங்க ஆனா மாடுக எனக்கு ஒலகத்த கற்று தருதுங்கன்னு முத்தின பேச்சு பேசுவான், ஆனா ஒன்னு கரும்பலகைன்னா அவனிற்கு உசிரு, சாக்கை கைல எடுத்தான்னா வகுப்பறை ஒவியகூடம் ஆகிடும், அப்டி ஒரு தெறம….என கண்ணீருடன் நினைவுகளை மீட்கிறார். ஆனால் கரும்பலகையில் தன் திறமையின் உதயத்தை வரைந்த அந்தக் கலைஞனை ஒரு டாய்லெட் புரட்டிப் போட்டது.

redchassingcowபோன் பீரோ வசித்து வந்த கிராமம் நகரிற்கு சற்று தள்ளியே அமைந்திருந்தது. அக்கிராமத்திற்கு இரு பெருமைகளும் தேசிய மட்டத்தில் இருந்தது. ஊரை விட்டு ஓடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ள கிராமம் என அது புகழ் பெற்றிருந்தது. இந்த தகவலே பின்னாளில் பீரோ படைத்திட்ட ஊரை விட்டு ஓடிய பெண் காமிக்ஸ் கதை வரிசைக்கு மூலமாக இருந்தது. ஊரை விட்டு ஓடிய பெண் கதை வரிசை உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்படவில்லை எனினும் கணிசமான நாடுகளில் தடைக்குள்ளானது. பீரோவின் சொந்தக் கிராமத்தில் அப்புத்தகத்தை ஊரைவிட்டு ஓட இருந்த பெண்கள் தீயீட்டுக் கொளுத்தி விட்டு ஓடினார்கள். பீரோவின் கிராமத்தில் இன்றும் வசித்து வரும் முதியவரான ழான் ழார் ழாக், உண்மையை அதன் உணர்வுகளுடன் எடுத்து வந்து ஓவியங்களாக பரிமாறிய அக்கதையை இக்கிராம பள்ளியில் பாடப் புத்தகமாக வைக்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தன்னை தனியே விட்டு விட்டு ஓடிய தன் குடும்ப பெண்மணிகள் தனக்கு அதனால் நன்மையே செய்திருப்பதாக ழான் ழார் ழாக் தெரிவித்தார். ழான் ழார் ழாக் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையில் மறுமணம் செய்தவர் எனும் சாதனைக்குரியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ழான் ழார் ழாக்கிற்கு ஒரு புத்தகத்தை வாங்கி வருவதற்காக அருகிலிருந்த நகரிற்கு சென்ற சமயத்தில்தான் போன் பீரோவிற்கு அது நிகழ்ந்தது.

போன் பீரோ நகரிற்கு சென்று புத்தகத்தை வாங்கி விட்டு தன் கிராமம் திரும்புவதற்காக பஸ்தரிப்பில் தனியாக நின்றான். பெண்கள் விட்டு விட்டு ஓடும் கிராமத்திற்கு செல்ல பஸ்கூட விரும்பவில்லை போலும். அன்று குறித்த நேரத்திற்கு வரவேண்டிய பஸ், நடுவழியில் ஒரு பயணி மாயாவியும் மன்மதன் மாக்னோவும் கதையைப் படித்தநிலையில் மாரடைப்புக்குள்ளாகியதால் தாமதத்திற்குள்ளாகியது. பஸ் வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரம் ஆகலாம் என்பதை அறிந்த பீரோ, பஸ்நிலையத்தை சுற்றி வரலாம் என நினைத்தான். அருகில் இருந்த ஒரு பழக்கடையில் ஆப்பிள் ஒன்றை வாங்கிக் கடித்தபடியே சுற்ற ஆரம்பித்த பீரோவின் மனதில் அவனை சுற்றி விழுந்த காட்சிகள் இனம்புரியா ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன.

மிக உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்த பீரோ அருகில் திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே! சம்போகம் என்பதன் முதல் சித்திரம் தன் வரிகளை ஜன்னல் வழியாக பீரோவின் விழிகளிற்குள் ஏற்றியது. தன் கையிலிருந்த புத்தகத்தில் பீரோவின் விரல்கள் கோலமிட ஆரம்பித்தன. விரல்களின் வேகமும் சம்போகத்தின் வேகமும் கலை வேகம் கொண்டன. பஸ்நிலைய டாய்லெட்டை நோக்கி விரைவாக ஓடினான் பீரோ. அங்கிருந்த ஒரு கழிவறையில் உள்ளே நுழைந்து கதவை மூடினான். அவன் கண்கள் அந்தக் கழிவறையின் சுவரில் பார்வையை தெறிக்கவிட்டன. சற்று நேரத்திற்குமுன்பாக அவன் கண்ட காட்சியும், கழிவறை சுவரில் கிறுக்கப்பட்டிருந்த கலைக் கிறுக்கல்களும் வார்த்தைகளும் அவனை ஒரு மோன நிலையின் உன்மத்த உச்சத்திற்கு எடுத்து சென்றன. டாய்லெட்டில் கிடந்த சில கரித்துண்டங்களை கொண்டு தன் உணர்வுகளை அங்கிருந்த சுவர்களில் பதிக்க ஆரம்பித்தான் பீரோ. டாய்லெட்டை உபயோகிக்க வந்தவர்கள் பீரோவின் திறமையில் தம்மை தொலைத்தார்கள். அவன் விரல்களின் வேகம், அவன் கிறுக்கல்களில் ஒளிந்திருந்த உண்மை, அவன் கிறுக்கல்களில் புலப்பட்ட தனித்தன்மை என்பன அவர்களை ஆக்கிரமித்தன. தாம் செய்ய வந்த காரியத்தை அவர்களை மறக்கடிக்க வைத்தன பீரோவின் ஆரம்ப கிறுக்கல்கள். பின்னாட்களில் கழிவறை சுவர்களிலிருந்து பீரோவின் கிறுக்கல்களை துப்பரவு செய்து நீக்கியமைக்காக போக்குவரத்துதுறை பெரும்வருத்தம் தெரிவித்தது. போன் பீரோவை தம் பஸ்நிலைய கழிவறை சுவர்களில் கிறுக்கித்தரும்படியும் வேண்டுகோள் விடுத்தது. பெருந்தன்மையாக தன் ரசிகர் படையை அங்கு போய் கிறுக்க சொனனார் பீரோ. மீ த பஸ்டு, படித்து விட்டு வருகிறேன், பின்னிட்டீங்க தல, போன்ற பல வாசகங்கள் இன்றும் கழிவறைகளின் சுவர்களை கலைக்கூடங்களாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

thalaஇந்நிகழ்வின் பின்பாக கழிவறை சுவர்கள் எல்லாம் பீரோவின் சித்திரவாங்கிகளாகின. கிராமத்தின் ஒரு கழிவறைவிடாது கிறுக்கினான் பீரோ. கிராம மதகுருவின் கழிவறையில் சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள் என சில சித்திரங்களுடன் அவன் கிறுக்கிய கிறுக்கல்தான் அவர் கைதுக்கு காரணம் என்பதையும் கிராம முதியவர் ழான் ழார் ழாக் ஒரு மென்புன்னகையுடன் கசிய விட்டார். மேலும் பீரோ முன்னொருநாளில் அவரிற்காக வாங்கி வந்த புத்தகத்தில் பதிந்திருந்த விரல் கீறல்களை உலகின் பார்வைக்கு வைத்த அந்த முதியவர், கலையின் முதல் விரலடிப் படிமம் இந்நூல் என்றார். தல வங்கி கெரங்கு எனும் அந்த காமிக்ஸ் கதை இன்றும் மறுபதிப்புக்களை கண்டு கொண்டிருக்கிறது. விரைவில் கலைத்தாளில் கறுப்பு வெள்ளையில் பீரோவின் விரல் படிமங்களோடு வெளிவரவிருக்கும் அக்காமிக்ஸ் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளாரிற்கு பீரோவின் மரணம் இன்னம் இரு மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது என்பதோடு மட்டுமல்லாது வழமையாக அவர் இடவேண்டிய முகட்டை நோக்கும் பதிவையும் கண்ணீர் அஞ்சலிப் பதிவாக்கி காலம் ஓட்டிட உதவியது. செத்தும் கொடுத்தான் பீரோ எனும் வார்த்தை இவ்வாறாக நிறைவேறிற்று.

சுவர்களில் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருந்த பீரோ, இறுதிவரை சுவர்களிலே மட்டுமே கிறுக்கினார். பிரபலம் பெற்ற பல காமிக்ஸ் தொடர்களை அவர் தன் நினைவாக இந்தப் பாழுமுலகில் விட்டுச் சென்றிருக்கிறார். தனது அலுவலகத்தை டாய்லெட்போல் வடிவமைத்து அதன் சுவர்களில் கிறுக்குவதன் மூலமே தன் தொடர்களிற்கு சித்திரங்களை உருவாக்கினார் பீரோ. ஒரு முறை தன் அலுவலகத்தில் ஒரு கதையின் ஓட்டத்திற்கு இடம் போதாது போக அலுவலகம் இருந்த கட்டிடத்திலிருந்த கழிப்பறைகளின் சுவர்களில் எல்லாம் கிறுக்கி அக்கதையை முடித்து வைத்த பெருமை பீரோவிற்குண்டு. இருப்பினும் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று அவர் வரைந்த கிறுக்கல்கள் தங்களிற்கு சொந்தமானவை என கழிவறை உரிமையாளர்கள் முறையிட்டது அவரிற்கு ஒரு பெருத்த அடியாக அமைந்தது. புயல் தேடிய புற்று எனும் அக்கதையினை முழுமையாக பிரசுரிக்க பீரோ மிகவும் சிரமப்பட்டார். பிற கழிவறை உரிமையாளர்களிற்கு காப்பிரைட்டில் ஒரு கணிசமான தொகையை அவர் தர வேண்டியிருந்தது. இருப்பினும் புயல் தேடிய புற்றின் இறுதிப்பக்கம் இன்றுவரை வெளிவரவேயில்லை. அதற்கு காரணம் கலைக்குஞ்சாமணி Kickasso.

கிக்காசோவிற்கும் போன் பீரோவிற்கும் நிகழ்ந்து வந்த போட்டி சூரியனிற்கும் சூரியனிற்கும் இடையில் நிகழ்ந்த மோதல் ஒன்றிற்கு ஒப்பானதாகவே உதாரணம் காட்டப்படக்கூடும். கிக்காசோ மெழுவர்த்தியின் சுடரில் விரல்களை வைத்தால் மாயாமாகும் ஒரு நாயகனை உருவாக்கினால், பீரோ பசுக்களின் பிறப்புறுப்பில் உடலின் எந்தப் பாகங்களை நுழைத்தாலும் மாயாமாகும் ஒரு ஹீரோவை உருவாக்கினார். மேலும் அந்நாயகனின் கதை ஒன்றில் பசு ஒன்று சுடர் கொண்ட மெழுகுவர்த்திமீது சிறுநீர் கழிப்பது போல ஒரு கட்டத்தை வரைந்து மாபெரும் சர்ச்சையை உருவாக்கவும் பீரோ தவறவில்லை. இதுவே ஒளிரும் சிறுநீர் சர்ச்சை என இன்றும் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் கிக்காசோ சளைத்தவரல்ல ஒரு பசுவின் வடிவில் மெழுகுவர்த்தியை உருவாக்கிய அவர் அதன் பிறப்புறுப்பில் திரியை அமைத்தார், இன்றும் அவர் அலுவலக காட்சியறையில் அவ் அல்குல்திரிமெழுகுப்பசு பார்வைக்கு கிடைக்கும். தன் கதையின் நாயகனின் அபிமான துணைக்கருவியாக கிக்காசோ அம்மெழுகுப் பசுவை உருவாக்கினார். கிக்காசோவின் ரசிகர்கள் அம்மெழுகுப் பசுவின் மாதிரிகளை சளைக்காது வாங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே இருந்து வந்த தொழில் போட்டி எல்லை மீறியதற்கு முக்கிய காரணம், படைப்பூக்கத்தின் உன்மத்த நிலையில் தன்னை மறந்து கிக்காசோவின் அலுவலக கழிவறையில் புயல் தேடிய புற்றின் இறுதிப் பக்கத்தை பீரோ கிறுக்கியதுதான். கிக்காசோ எந்த சமரசத்திற்கும் உடன்படவில்லை. தன் கழிவறை சுவரில் பீரோ வரைந்த பக்கங்களை வெளியிட அவர் கண்டிப்பாக மறுத்தார். வெறுத்துப் போன பீரோ இறுதிப்பக்கம் இல்லாத நிலையிலேயே புயல் தேடிய புற்று கதையை வெளியிட்டார். புயல் தான் தேடிய புற்றைக் கண்டடைந்ததா, புற்றின் உள்ளே நுழைந்ததா என்பது இன்று சிலர் மட்டும் அறிந்த ரகசியமே. போனால் போகிறது இன்னொரு சுவரில் கிறுக்கி கதையை முடியுங்கள் என பதிப்பகத்தார் அவரை சற்று கடுமையுடன் கேட்டுக் கொண்டபோது, ஒரு குழந்தையைப் போல் என்னால் இன்னொரு குழந்தையை உருவாக்க முடியாது இது படைப்பு, அச்சிடுவது அல்ல என கண்டிப்பாக மறுத்து விட்டார் பீரோ. ஆனால் இறுதிப்பக்கம் இல்லாத பீரோவின் கதையான புயல் தேடிய புற்றுதான் இன்றும் வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைவிட சிறப்பான ஒரு முடிவை எந்தக் கிக்காசோவாலும் வழங்கிவிட முடியாது என்கிறார்கள் கதையைப் படித்தவர்கள்.

Munich_crash_tribut_431575aஎவ்வளவு புகழ் பெற்றாலும் பொதுக் கழிவறைச்சுவர்களில் கிறுக்குவதை போன் பீரோ நிறுத்தவேயில்லை. அவ்வகையான கிறுக்கல்கள் வாய்க்கபெற்ற கழிவறைகள் இன்று நல்ல பார்வையாளர்களை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் டிவிலைட் திரைப்படம் காண்பிக்கப்பட்ட ஒரு திரையரங்கின் கழிவறையில் அவர் விரல்கள் கிறுக்கியவையே அவரின் அந்திக் கிறுக்கல்களாக அமைந்து விட்டன. டிவிலைட் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது படைப்பாக்க உன்மத்தம் தன்னுள் குடிகொண்ட நிலையில் திரையரங்க கழிவறையை நோக்கி சென்ற போன் பீரோ உன்மத்தநிலை கலையாது சுவர்களில் கிறுக்க ஆரம்பித்தார். ஆனால் அவரின் திறமை மீது பொறாமை கொண்ட ஒரு ரத்தக் காட்டேரி அவர் உயிரை அன்று எடுத்து சென்றது. அவர் கழுத்தில் இருந்த துளைகளும் மேலும் உடலின் பல பாகங்களில் காணக்கிடைத்த அறிகுறிகளும் அவரை தாக்கியது ஒரு ரத்தக் காட்டேரியாகவே இருக்க வேண்டும் என்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. திரையரங்கின் வாகனங்கள் தரிப்பிடக் காவலர் நடிகர் ராபார்ட் பேட்டின்சன் இந்த சந்தால் ஓடினார் எனத் தெரிவித்த தகவலை அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்று எவருமே பொருட்படுத்தவில்லை. பல கலைஞர்களின் மரணத்தின் மீது நீடிக்கும் மர்மம் போலவே பீரோவின் மரணத்தின் பின்பாகவும் ஒரு மர்மம் நீடிக்கும். பீரோவின் முற்றுப்பெறா இறுதிக் கிறுக்கல்களை பார்வையிட்ட கிக்காசோ வாழ்க்கை என்பது ஒரு முற்றுப்பெறா கிறுக்கல், பீரோ அதன் உண்மை ரூபத்தை தன் கிறுக்கல்கள் வழி உணர்வின்றி விட்டுச் சென்றிருக்கிறார் என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் இந்நிலையில் சீனர்கள், ஜப்பானியர்கள் போலிருக்கிறார்கள் எனப் பீரோ கூறியதற்காக பீரோவின் நூல்களை பிரான்சு தடை செய்தது ஏன் எனும் கேள்வி ஏன் இப்போது என் நினைவில் வந்து சுடருகிறது என்றும் அவர் வருந்தினார். டாய்லெட்டில் தன் கலையை ஆரம்பித்த ஒரு கலைஞன் இன்று டிவிலைட்டில் அதனை நிறுத்திக் கொண்டான். அவன் உடல் அழிந்தாலும் ஆன்மாவான அவன் கலை அழியாது. பீரோ ஓவியங்களை வரைந்த கலைஞன் அல்ல ஓவியங்கள் வரைந்த கலைஞன் அவன். உலகெங்கிலும் இருக்கும் கழிவறைகளின் சுவர்கள் இன்று வழமையை விட ஈரலிப்பாக இருக்ககூடும். சுவர்களின் கண்ணீரை உணர்ந்த கலைஞன் நினைவுகள் ரசிகர்கள் மனதிலும் ஈரமாக இருக்கட்டும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என் கைகள் பதறின, உதடுகள் துடித்தன, கால்கள் டங்கு டங்கு என்று ஆடியது, என் உயிரே போய்விடும் போலிருக்கிறது. இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. பீரோவின் கிறுக்கல்களோடு நான் ஆழ்ந்திடப் போகிறேன். போன் பீரோவின் மறைவிற்காக உங்கள் உணர்ச்சிகரமான கண்ணீர் அஞ்சலிகளை நீங்கள் கீழே இருக்கும் கருத்துக் களத்தில் ஆற்றலாம். தமிழில் டைப் அடிக்க விரும்புவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பது நல்லது. இது ஒரு காட்சிப் பதிவே ஒரு மெகா கண்ணீர் அஞ்சலிப் பதிவை பீரோவின் மறைவு தந்த பாதிப்பு நீங்கிய பின்பாக எழுதி வெளியிடுகிறேன் அன்பு காமிக்ரேட்ஸ்சுகளே. பீரோவின் ஆன்மா சாந்தியடைவதாக. RIP BONE BIRAUD :( –!:/_!

13 comments:

  1. He's my dearest one. RIP, Biroud. (sic)

    ReplyDelete
    Replies
    1. இப்படி சில வார்த்தைகளில் உங்கள் வேதனையை விரிவாக விளக்க உங்களால்தான் முடியும் J, நீங்கள் அனுப்பிய CD கிடைத்தது அதில் சில கதைகள் மிஸ்ஸாகிறது. புதிய CD அனுப்பி வைக்க இயலுமா.

      திருட்டு காமிக்ஸ் சிடி ரசிகன்.
      (SL)

      Delete
  2. பார் இல்லா வாழ்க்கை வாழ்வதெனினும் பீரில்லா வாழ்க்கை வாழ்வதரிது

    - சொம்புகளின் தங்கம்.

    RIP Bone Fraud ச்சே.. Biraud.

    ReplyDelete
    Replies
    1. என்னால் கண்களை மூடவே இயலவில்லை இந்நேரத்தில் இப்படி ஒரு கமெண்டு!

      செண்டிமெண்டு செம்மல்.

      பீரோவின் ஆத்மா சாந்தியடைவதாக.

      Delete
  3. மீனாவை மீட்டெடுக்க மின்னலாய் ஓடும் வேங்கையைக் கண்டால் உள்ளம் உதிரம் உதிர்கிறது.
    - தத்தக்க பித்தக்க தவக்களை.

    ReplyDelete
  4. // மீ த பஸ்டு, படித்து விட்டு வருகிறேன், பின்னிட்டீங்க தல, போன்ற பல வாசகங்கள் இன்றும் கழிவறைகளின் சுவர்களை கலைக்கூடங்களாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.//

    அந்த அன்புக் கும்பல் சொம்பை கையில் எடுத்துக் கொண்டு எந்நேரமும் திரிவது பீரின் மேல் உள்ள அன்பினாலேயே என்றும் இங்கே சொல்லிப் பெருமை கொள்கிறேன். - கொசுவா.

    ReplyDelete
  5. //செத்தும் கொடுத்தான் பீரோ எனும் வார்த்தை இவ்வாறாக நிறைவேறிற்று.// ராயல்டி இல்லாமல் ராவாக ராவடி செய்யவும் இது வழி வகுத்தது என்றால் அது மிகையல்ல. - சிங்கத்தின் சில்லறை.

    ReplyDelete
  6. மலையைப் பெயர்த்து எடுத்துச் செல்வது போல, அன்னாரின் சித்திரங்களை சுவற்றை பெயர்த்து எடுத்தே கலக்சனுக்கு கவர்ந்தோம் என்று இந்தத் தருணத்தில் கண்ணீரோடும் காவாளித்தனத்தோடும் சொல்லிக் கொள்கிறோம் - மங்குனி மொக்கை மாமா.

    ReplyDelete
  7. புயல் தேடிய புற்று கதை பல சிரமங்களுக்கு பின்னால் வெளியானதற்கு பின்னால், அவர் வரைந்த "வாய்ச்ச இடமெல்லாம் வாய்க்கால்" மிகப் பெரும் வெற்றி பெற்றது என்பதனை கண்ணீரோடு நினைவு கூர்கிறோம்.

    ReplyDelete
  8. அவர் ஒரு கலை உலகின் கக்கூசோ - சந்துல புகும் சவுண்ட் கொடுக்கும் ராஜா.

    ReplyDelete
  9. கக்கூசுக்கு போகும் போதெல்லாம் களிப்பை ஏற்படுத்திய பீரை பதிப்பகத்தார் மறக்கலாம். ஆனால் சொமபோடு செல்லும் செல்ல ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். உலகின் அத்தனை கழிவறையும் இன்று பீரின் மறைவால் ஈரமாக இருக்கிறதென்றால் அது சொம்புகளுக்கு அவர் மேல் இருக்கும் பாசத்தைக் காட்டுகிறது. சொம்புள்ளவரை, சுவர் உள்ளவரை, அவரது நினைவு அவர்கள் மனதில் எப்போதும் "மணக்கும்".

    ReplyDelete
  10. இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே மனம் துடித்தது, கால் தடுமாறியது, வாய் பொங்கியது, மணம் இழுத்தது. என் உயிரோ பொங்கி வெடித்தது.

    ReplyDelete
  11. பிராட் மறைந்த செய்தியை கேட்ட நொடி முதல் ஊண் உண் உறக்கம் எதுவும் இல்லாமல் விட்டத்தை பார்த்தபடி கிடக்கிறேன். வீட்டில் என்னை கீழ்ப்பாக்கத்திற்கு நகர்த்துவது பற்றி பேச ஆரம்பித்தும் விட்டார்கள். அவர் மறைவிற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் விதமாக இணையத்தில் இருந்து இன்னும் சரியாக 10 நாட்கள் 22 மணி நேரங்கள், 32 நிமிடங்கள் விலகி இருக்க போகிறேன் (என்று நினைக்கிறேன்). அது வரை பொறுமையாக எனது மொக்கை பதிவுகளை தேடி துலாவி படியுங்கள். நான் வரும் போது சிறப்பு பதிவு ஒன்று கண்டிப்பாக உண்டு.

    உங்களுக்காவது வெறும் கடிதம் தான். அதற்கு சுமாரா 2 மணி நேரம் 3 வினாடிகள் முன்பே பிரான்ஸில் இருந்து எனது நண்பர் சர்கோஸி எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து விட்டார். அதிலும் நான் தான் பஸ்ட், அத தெரிஞ்சுக்கோங்க... உங்களுக்கு எங்கும் விளக்க வேண்டிய தேவை இல்லை... ஆனால் பதிவில் கண்டிப்பாக விளக்குவேன், அங்கு வந்து படிச்சுக்கோங்கோ.... லிங்க் போட கண்டிப்பாக வருவேன், விரைவில்.

    ReplyDelete