Sunday, March 25, 2012

விடைபெற நேரமில்லை விழியே!

1225261
இந்நாவலின் அட்டையின் அதன் தலைப்பின் மேலாகவுள்ள மூன்று வரிகளே போதும் நாவலின் கதைச் சுருக்கத்திற்கு. தன் பெற்றோருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தின் பின்பாக மிகையான போதையின் பீடிப்பில் உறங்க செல்லும் பதினான்கு வயதான சிந்தியா, மறுநாள் காலை அவள் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்த பின்பாக அவள் வீட்டில் இருந்து அவள் பெற்றோரும், சகோதரனும் எந்த தகவலுமில்லாது மறைந்து போய்விட்டதை அந்நாளின் ஓட்டத்தில் அறிந்து கொள்கிறாள். அவர்கள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள், அவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் அறிந்து கொள்ளவியலா நிலையில் தன் வாழ்க்கையை தன் அன்னையின் சகோதரியுடனான டெஸ்ஸுடன் தொடர்கிறாள் சிந்தியா. வாசகனை நாவலின் மையமர்மத்தினுள் இழுக்கும் முதல் அத்தியாயத்துடன் ஆரம்பமாகும் No Time for Goodbye எனும் இந்நாவல் அதன் அடுத்த அத்தியாயங்களில் இருபத்தைந்து வருடங்களிற்கு பின்பாக சிந்தியாவின் வாழ்க்கையின் ஒரு முக்கியகணத்தை அவனிற்கு அறிமுகப்படுத்துகிறது.
காணாமல் போன மனிதர்களை குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் சிந்தியாவை அப்பக்கங்களில் வாசகன் கண்டுகொள்ள முடியும். இத்தருணத்திலிருந்து கதையானது சிந்தியாவின் கணவனால் கூறப்படுகிறது. சிந்தியாவுடன் நெருங்கி வாழ்பவன் எனும் வகையிலும், அவள் குடும்பம் காணாமல்போன விவகாரம் அவளை எவ்வாறு பாதித்தது, அது குறித்த அவள் உணர்வுகள் என்ன என்பதை அவன் அறிந்தவன் என்ற வகையிலும், அவன் மூலம் கதைசொல்லும் உத்தியானது உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றம் கொள்கிறது. குற்றப்புனைவுகளின் வன்மையான நிகழ்வுகளிலிருந்து சற்று விடுபட்டு ஒரு குடும்பம் இவ்வகையான நிகழ்வு ஒன்றினால் எதிர் கொள்ளக்கூடிய சம்பவங்களை உணர்ச்சிகரமான நாடகமாக வாசகனிற்கு அளிக்கிறது Linwood Barclay ன் கதை.

இன்று ஒரு பரபரப்பான நிகழ்வானது காட்சி ஊடகங்களாலும் சரி, எழுத்து ஊடகங்களாலும் சரி, ஒரு கேளிக்கை பண்டமாக்கப்பட்டு, அதனை நுகர்வோரிடம் தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகிறது. இவ்வகையான ஆக்கங்களிற்கும், படைப்புக்களிற்கும் அளிக்கப்படும் ரசிக ஆதரவே அவற்றின் வெற்றிக்கு சான்று. சிந்தியாவின் இருபத்தைந்து வருட வேதனையும் இவ்வாறான ஒரு பண்டமாகவே உருவாக்கப்படுகிறது. அதை சிந்தியா அறிந்திருந்தாலும் அந்நிகழ்ச்சியின் வழியாக தன் குடும்பம் குறித்த ஏதோ ஒரு தகவலேனும் கிடைத்து விடாதா எனும் ஒரு நம்பிக்கை அவளை கேளிக்கை பண்டமாக்க வைத்து விடுகிறது. காணாமல்போன குடும்பத்தில் சிந்தியா மட்டும் எஞ்சியது எவ்வாறு எனும் கேள்வி எழும்போது உருவாகும் சந்தேக வீச்சில் சிந்தியா பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதன் வழியாக அவள் மனதில் எழும் குற்றவுணர்வு அவளை விடாது தொடரும் ஒன்றாகவே இருக்கிறது. அவள் குடும்பம் குறித்த அவள் தேடலை குற்றவுணர்வும், சிந்தியாவும் இடைவிடாது நிகழ்த்த வேண்டியதாகவிருக்கிறது.

கதாசிரியர் லின்வூட் பார்க்லே நாவலின் இப்பகுதியில் இவ்வகையான நிகழ்வொன்றை எதிர்கொள்ளும் ஒரு நபரை குறிவைத்து லாபம் பார்க்க விரும்பும் மனிதர்களை கோடிட்டு காட்டுகிறார். அது தொலைக்காட்சி தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அல்லது ஆவியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உடைய பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் குறிக்கோள் என்பது சிந்தியாவினுடையதிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறது என்பதை சிந்தியா கொள்ளும் பதற்றங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள் வழி பார்க்லே எழுதிச் செல்கிறார். இவ்வாறான நிகழ்வுகள் அவள் உளத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எவ்வாறானைவை என்பதையும் அவர் விபரிக்க தவறவில்லை.

உளவியல் ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை பெறும் சிந்தியா, அவள் மனதை அவரிடம் திறக்கிறாள். ஆனால் சிந்தியாவின் கணவர் டெர்ரியோ இவ்வகையான ஆலோசனைகள் எந்தப் பலனையும் வழங்கிவிடப்போவதில்லை எனும் எண்ணம் கொண்டவனாக இருக்கிறான். அவன் வீட்டில் இருந்து மறைந்து போகும், வந்து சேரும் சில பொருட்களும் அதனைச் சூழ்ந்த சில சமபவங்களும் அவனை சிந்தியாமேல் சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இவ்வகையான சிக்கலை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம் எவ்வாறு கண்ணிற்கு புலனாக காரணிகளால் சிதைய ஆரம்பிக்கிறது என்பதை தெளிவாக்குகிறது கதாசிரியரின் வரிகள். சிந்தியாவும், டெர்ரியும் தம் வாக்குவாதங்கள் தம் குழந்தையான கிரேஸ் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். குழந்தை ஒன்றின் உளநலத்தின் மீது பெற்றோர் செலுத்தவேண்டிய கண்டிப்பான அக்கறையானது நாவலின் பல தருணங்களிலும் முன்னிலைப்படுத்தபடுகிறது.

சிந்தியாவும், டெர்ரியும் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஒரு துப்பறிவாளனை அமர்த்திக் கொள்ளக்கூட இல்லத்தின் செலவுகளை கணக்குப் பார்க்கவேண்டிய நிலையிலுள்ள குடும்பம் அவர்களது. நிதிவசதிகள் அதிகம் கொண்டிராத ஒரு குடும்பம் எவ்வாறு இவ்வகையான செலவுகளை எதிர்கொள்ளவியலும் எனும் எதார்த்தமான கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் நாவலின் உணர்ச்சிகரத்தை அதிகரிப்பதில் பங்கேற்பதுடன், உண்மைகளை கண்டடைவதற்கும் ஒரு விலையுண்டு என்பதை சொல்லிவிடுகின்றன. அதேபோல் பொலிஸ் இலாகா கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இவ்வகையான விவகாரங்களில் கடைப்பிடிக்கும் மந்தமான போக்கையும் தெளிவாக்குகின்றன. மத்தியதரவர்க்க குடும்பம் ஒன்றின் நாளாந்த வாழ்க்கையை பார்க்லே நாவலின் ஓட்டத்தினூடு மிகவும் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார்.

மிகவும் எளிமையான கதை சொல்லலால் சிந்தியாவின் வாழ்க்கையை எம்முன் கொண்டுவரும் பார்க்லே, அதே சமயத்தில் சிறு சிறு சம்பவங்களால் கதையின் மர்மத்தையும் அதிகரித்து செல்கிறார். அவர் நாவலின் மையம் என்பது அன்பான குடும்பம் ஒன்றிற்கான தேடலும் அது ஏற்படுத்தக்கூடிய சில எதிரான விளைவுகளுமே. நாவலில் வரும் பிரதான பாத்திரங்களில் பெரும்பாலானோர் தம் குடும்பங்கள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக போராடுபவர்களாகவே இருக்கிறார்கள். பொய்யில் கட்டப்படும் வாழ்விலிருந்து விடுபட விரும்பும் மனிதர்கள் சில சமயங்களில் தரவேண்டிய தொகை வலியாலும் பிரிவாலும் உயிராலும் கண்ணீராலும் வழங்கப்பட்டுவிடுகிறது. வஞ்சம் என்பது என்றுமே தீராத தாகமென மனித உள்ளத்தில் ஊற்றெடுத்து வருவது, அதன் தீர்தல் என்பது அழிவின் முடிவில்தான் அல்லவா.

நாவலின் பாத்திரப்படைப்புகள் சில குறிப்பிடப்பட வேண்டியவை. கிரேஸ் எனும் சிறுமி பாத்திரம் மிக இயல்பான ஒன்றாக படிக்கப்பட முடிகிறது. சிந்தியாவின் ஆண்டியான டெஸ் கூட சிறப்பான ஒரு பாத்திரப்படைப்பே. கதையை டெர்ரி கூறிச்செல்வதன் மூலம் அவன் தன் குடும்பத்தைக் காப்பாற்ற போராடுவதும், சிந்தியாவைக் காப்பாற்ற போராடுவதும் வாசகனை உணர்ச்சிகரமான விதத்தில் நெருங்கி வருகின்றன. சிந்தியா பாத்திரத்தை வாசகர்கள் நம்புவார்களா இல்லையா என்பதன் விடை கதாசிரியரின் திறமையை சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்! தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு மனிதன் எவ்வாறு போராடுகிறான் என்பதை ஆண்வாசகர்கள் சில சமயங்களில் குற்றவுணர்வுடனும், பெண் வாசகிகள் குற்றம்சாட்டும் உணர்வுடனும் படித்து செல்லலாம்! என்னதான் இருந்தாலும் இந்நாவல் பெண் வாசகிகளை குறிவைத்து எழுதப்பட்ட ஒன்றாகும் என எழும் உணர்வை வாசிப்பின்போது என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. நாவல் நெடுகிலும் அப்படி உருக வைக்கும் தருணங்கள் பல இருக்கின்றன. நாவலின் இறுதிப்பகுதி விறுவிறு என்றாலும் உச்சக்கட்டம் சென்டிமெண்ட் சுனாமியாக இருக்கிறது. எளிமையான சம்பவங்களை வைத்து , அதிக வன்முறை கலக்காது, குடும்பத்தை முன்னிறுத்தி, உணர்ச்சிகளை கரைத்து லின்வூட் பார்க்லே வழங்கியிருக்கும் இந்நாவல் இலகுவான வாசிப்பிற்குரியது. அவ்வளவே.

19 comments:

 1. எப்படி புத்தகம் புத்தகமா வாசித்துத் தள்ளுறீங்க? எனக்கு அந்த Game of Thrones சீரீஸ்ல முதல் புத்தகம் படித்து முடிக்கவே மூச்சு முட்டுது. சிலவேளை நான் ஈரீடரில் வாசிப்பதால் வேகமாக போகமுடியவில்லையோ?

  ReplyDelete
 2. இந்தப் புத்தகம் எல்லாம் எனக்கு வாசிக்கக் கிடைக்குமோ தெரியாது. நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டி இருக்கு.

  உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் சொல்லிடுறேன். GoodReads.com தளத்திற்கு சென்றால் நீங்க வாசிக்க இன்னும் நிறைய நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஹாலிவூட் ரசிகரே, சிறுவயதிலிருந்து புத்தகம் படிப்பது ஒரு பிடித்தமான செயலாகிவிட்டது, அதற்காக வாசித்து தள்ளுகிறேன் என்று சொல்ல மாட்டேன், முன்பைவிட குறைவான அளவிலேயே வாசிக்க முடிகிறது, அதிகம் வாசிக்க விரும்பினாலும் முடிவதில்லை, நேரமும் இல்லை. ஈரீடரிற்கும் படிக்கும் வேகத்திற்கும் சம்பந்தமிருக்காது என்றே எண்ணுகிறேன். ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் எனும் எல்லையை நியமித்துக் கொண்டு படியுங்கள். அதை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். நாவலை முடித்து விடலாம். எல்லாவற்றிக்கும் மேலாக வாசிப்பு என்பதை உங்களிற்கு மிக பிடித்தமான ஒன்றாக ஆக்கினாலே போதும் எல்லாம் சுகமானதாகி விடும் :) ஆம் நீங்கள் சொல்லியிருக்கும் தளம் என் விருப்ப பக்கங்களில் ஒன்று. நன்றி.

   Delete
 3. வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதுமானது. அதுவே உங்களுக்கு நேரத்தை எப்படியேனும் தேடித் தரும். இன்று இவ்வளவு படிக்க வேண்டும் என்று அறுதி செய்து கொள்வதும் பல நேரங்களில் பலன் தராது. ஒரு புத்தகத்தை அதன் போக்கிலேயே விட்டு விட்டு வேண்டும். உங்களுக்கு அதைப் பிடித்தால் அது வேகமாக நகரும். இல்லையேல், அதைப் படிக்க சிறிது காலம் அதிகம் ஆகும். அதனால் என்ன?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வதும் சரி தான். ஆனால் என்னிடம் இருந்த Dan Brown, Harry Potter, Percy Jackson bookset கலெக்சனில் உள்ள நிஜமான ஒரு புத்தகத்தை வாசிக்க 2 - 5 நாட்கள் மட்டுமே ஆகியது. இப்பொழுது புத்தகம் வாங்கும் சூழ்நிலையில் இல்லாததால் Sony eReader பாவிக்கிறேன். ஆனால் அதில் ஒரு நாளைக்கு 15-20 பக்கங்களுக்கு மேல் போக முடியவில்லை. நிஜமான ஒரு புத்தகத்தை தொட்டு திருப்பி வாசிப்பது போன்ற அந்த சுவாரஸ்யமான உணர்வு இல்லாதது தான் காரணமோ?

   Delete
  2. @ஹாலிவுட்ரசிகன்: நீங்க சொல்றது ரொம்ப சரி.. புத்தகங்களை தொட்டு வாசிக்கும் சுகம் ஈ புக்கில் கிடைப்பது இல்லை..

   Delete
 4. பாஸ்சு சில நாட்களாகவே உங்களின் பதிவுகளை நோட்டம் விட்டு கொண்டு தான் இருக்கிறேன்.. உங்கள் ப்ளாக்ல் நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைகின்றன.. காமிக், திரைப்படம், நாவல் என கலந்து கட்டி அடிகிரீர்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இது ஏதோ ஒரு 'பிரபல பதிவர்' பிரஜைகளை வாழ்த்தும் ஸ்டைலில் இருக்கிறதே :-) [ஏதோ என்னால முடிஞ்சுது ]

   Delete
 5. Hi i need ur review of ONEDAY English movie i thought u heard abt that movie
  kindly u have give is possible
  gm_dinesh@yahoo.com

  ReplyDelete
  Replies
  1. தினேஷ், இத்திரைப்படத்தை நான் பார்க்கவில்லை என்பதால் அது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்..

   Delete
  2. Thanks for ur reply .i thought abt that good film .i saw ur profile very nice good review .thts y iam say Thank u

   Delete
 6. அழகிய விமர்சனம்! எப்படி பக்கம் பக்கமாக எழுதி தீர்கிறீர்கள்??!

  ஸ்டெனோவைத்திருக்கிறீர்களோ? ( இதை எப்படி வேணாலும் சேர்த்து படிக்கலாம் ;)

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஸ்டெல்லாதான் டைப்பு அடிக்கிறது, ப்ரியாணி தயாரிப்பது, கிச்சுபிச்சா பண்ணுவது... காரியதரிசினி ச்டெல்லா வாழ்க வாழ்க....:))

   Delete
  2. ஸ்டெல்லாவை நீங்கள் வைத்திருகிறீர்கள் (வேலைக்குதான்!) என்றால் ஜானியை இப்போது யார் வைத்திருகிறார்கள்? :)

   Delete
 7. அட, இது சும்மா ஒரு விளம்பரதுக்குதான்! கோச்சுகாதபா :)

  காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் ஒன்று!

  btw, there seem to be some issue with blogger comments module - after posting comments just disappear!

  ReplyDelete
 8. வெளம்பரம்னா துட்ட வெட்டனும் இல்ல சிக்காக்கோ சிறுத்தையை வெச்சு கிச்சு கிச்சு காட்டுவேன்... சத்யமா கூகிள் ப்லாக்கர் மற்றவங்க நல்லா இருக்கனும்கறதுக்காக செய்ற சதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கெடையாது... நம்புங்க

  ReplyDelete