Friday, August 5, 2011

டீச்சரம்மா


வசதிபடைத்த ஆசாமி ஒருவனுடன் திருமண நிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்ட சிறுவர் பள்ளி ஆசிரியையான எலிசபெத் [Cameron Diaz], அவள் வகித்து வரும் ஆசிரியை பதவியை திருமணத்திற்காக ராஜினாமா செய்கிறாள். ஆனால் வசதி படைத்த அந்த ஆசாமியோ தன் பணத்தையே எலிசபெத் அன்பு செய்கிறாள் என்பதை கண்டு கொண்டு அவளுடனான தன் திருமண நிச்சயத்தை முறித்துக் கொள்கிறான்.

இந்த நிச்சய முறிவால், இன்னுமொரு வசதிபடைத்த ஆண் கிடைக்கும் வரையில் மீண்டும் தன் ஆசிரியைத் தொழிலை செய்யும் நிர்பந்தத்திற்குள்ளாகிறாள் எலிசபெத். தன் மார்புகளை பெரிதாக்கி கொள்வதும், பசையுள்ள பார்ட்டி ஒன்றை விரைவில் மடக்கி விடுவதும் அவள் மனதில் இருக்கும் மிக முக்கிய குறிக்கோள்கள் ஆகும். இவற்றிற்காக எந்த வழிமுறைகளிலும் இறங்க எலிசபெத் தயாராக இருக்கிறாள். ஆனால் எலிசபெத்தின் இந்த குறிக்கோள்கள் நிறைவேறுதற்கு ஒரு தடையாக வந்து சேர்கிறாள் அவளுடன் பணிபுரியும் சக ஆசிரியையான அமி…..

சற்றுக் கவர்ச்சியாக உடையணிந்து வரும் ஒரு ஆசிரியை. தன் வகுப்பு மாணவர்களிற்கு பாடங்களை நடாத்த விருப்பமின்றி அவர்களை வகுப்பறையில் திரைப்படங்களை பார்க்க செய்யும் ஒரு ஆசிரியை. வகுப்பறையில் தூக்கம் போடும் ஒரு ஆசிரியை. மது, போதைப் பொருள் போன்றவற்றை தன் வகுப்பறையிலேயே ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் ஒரு ஆசிரியை. தன் மார்க்கச்சையை தன் மாணக்கனிடம் கழட்டி அன்பளிப்பாக தரும் ஒரு ஆசிரியை [ இதில் வக்கிரம் ஏதும் இல்லை என்றாலும்].

இப்படியான, சற்றே வயதான ஒரு கவர்ச்சி ஆசிரியையை ஒரு சிறுவர் பள்ளி நிர்வாகம் ஆசிரியப் பணியில் தொடர்ந்து நீடித்திருக்க அனுமதிக்குமா என எழும் கேள்வியை, கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் விமலா டீச்சர் + கணேசன் = டாய்லெட்டில் கிச்கிச் எனும் வரிகளை பிரின்ஸிபால் கணேசன் வேகமாக துடைத்துப் போடுவதைப்போல் நீங்கள் துடைத்துப் போட முடிந்தால் Jake Kasdan இயக்கியிருக்கும் Bad Teacher எனும் இப்படத்தை நீங்கள் தாராளமாக ரசித்திடலாம்.

bad-teacher-2011-17974-1875525872ஃபரெலி சகோதரர்கள் இயக்கிய There’s Something about Mary திரைப்படத்திற்கு பின்பாக இவ்வளவு மோசமான குணங்கள் கொண்ட ஆனால் ரசிக்க வைக்கும் ஒரு பாத்திரமாக பெரியம்மா கமரூன் டயஸை திரையில் காண்பதே அலாதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் க்ளோஸப் காட்சிகளை தவிர்த்தல் அவரிற்கும், அவர் ரசிகர்களிற்கும் எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றே நான் கருதுகிறேன். வாய் நிறையப் பொய், அண்டப் புளுகு, கெட்ட வார்த்தை, தன் மனதில் நினைப்பதை கன்னத்தில் அறைவதுபோல் சொல்லும் பண்பு என திரையில் அவரின் வயது உறுத்தலாக இருந்தாலும் ரசிகர்களை தான் ஏற்றிருக்கும் ஆசிரியை பாத்திரத்தை விரும்ப செய்து விடுவதில் உற்சாகாமான வெற்றி கமரூன் டயஸிற்கு வந்து சேர்கிறது. மிகவும் கொண்டாட்டமான உணர்வுடன் படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார் பெரியம்மா.

தன் மார்புகளை பெரிதாக்க தேவைப்படும் பணத்திற்காக அவர் செய்யும் தில்லுமுல்லுகள், சக ஆசிரியனான ஸ்காட்டை தன் கவர்ச்சி வலையில் வீழ்த்த அவர் நிகழ்த்தும் சதிகள், வகுப்பறையில் தன் மாணக்கர்களிற்கு அவர் செய்யும் கொடுமைகள் என அவர் செய்திடும் எல்லாவற்றையும் சலிப்பின்றி ரசிக்க கூடியதாகவே இருக்கிறது. தன் மார்புகளை பெரிதாக்க விரும்பி சத்திர சிகிச்சை நிபுணரிடம் செல்லும் கமரூன் அங்கு ஒரு நங்கையின் ஒரு ஜோடி சத்திர சிகிச்சை மார்புகளை வருடி சாம்பிள் பார்ப்பது அவரின் ஜாலியான கெட்ட குணத்திற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாயகிக்கு ஏற்ற எதிர் நாயகியாக, கமரூன் டயஸிற்கு இத்திரைப்படத்தில் அருமையான ஒரு எதிர்பாத்திரமாக அமைகிறார் அமி எனும் சக ஆசிரியை வேடமேற்றிருக்கும் நடிகையான Lucy Punch. கமரூன் எவ்வளவிற்கு ஒரு கெட்ட ஆசிரியையாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு ஒரு முன்மாதிரியான நல்லாசிரியையாக இருக்கிறார் அமி. அந்தப் பாத்திரம் வரும் காட்சிகளில் எல்லாம் கமரூனின் ரசிகர்கள் மனதில் கிளர்ந்தெழும் அந்த மெலிதான எரிச்சலே போதும் நடிகை லுசி பன்ச்சின் திறமையை சொல்ல. கமரூனின் தில்லுமுல்லகள் குறித்து பிரின்ஸிபால் கணேசனிடம் போட்டுக் கொடுத்து கமரூனின் சீட்டைக் கிழித்து வீட்டிற்கு அனுப்ப அவர் முயலும் போதெல்லாம் அவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கமரூன் மடக்க விரும்பிய ஸ்காட்டை தான் மடக்கிய பின் லுசி அடிக்கும் காதல் கூத்துக்களும், கமரூனிற்கும் அவரிற்குமிடையில் நிகழும் குளிரான மோதல்களும் வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை. லுசியின் நடிப்பு கமரூனை மேலும் ரசிக்க செய்கிறது என்றால் அது மிகையல்ல. மாறாக ஸ்காட் வேடத்தில் வரும் நடிகர் Justin Timberlake ன் பாத்திரம் ரசிகர்களிற்கு ஏமாற்றத்தை வழங்கும் ஒரு பாத்திரமாக அமைகிறது.

படம் நெடுகிலும் நன்றாக வாய்விட்டு சிரிக்ககூடிய காட்சிகள் கொண்ட, சலிப்பை தராத ஒரு திரைப்படமாகவே Bad Teacher அமைந்திருக்கிறது. இருப்பினும் பயங்கரமான ராவடிகளில் ஈடுபட்டு பின் தனக்கென ஒரு பொருத்தமான பாதையை கமரூன் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக படத்தை நிறைவு செய்வது அப்பாத்திரத்தைக் குலைப்பது போல் உள்ளதாக நான் உணர்கிறேன். இத்திரைப்படம் ஒரு தரமான காமெடியா…இல்லை. புத்திசாலித்தனமான காமெடியா…. இல்லை. இத்திரைப்படம் உலகிலுள்ள அக்மார்க் ஜொள்ளு ஜமீந்தார்களிற்கு என அளவு எடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. Bad Teacher கையில் சிக்கிய ஜொள்ளு ஜமீந்தார்கள் ஏமாற வாய்ப்பில்லை. [**]

ட்ரெய்லர்

6 comments:

  1. நண்பரே!
    கேமரூன் டயசின் தோற்றத்தை வைத்து பெரியம்மா என்று அழைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  2. என்னைய மாதிரி சின்ன பசங்க பார்க்கத் தகுந்ததா இந்த படம்............


    அப்பறம், படு பயங்கர துள்ளலோட ஒரு சினிமா விமர்சனம், ஹாரி பாட்டர்க்கு அப்பறம் இப்பத்தான சினிமா விமர்சனம் வருது ....................

    ReplyDelete
  3. // ஒரு நங்கையின் ஒரு ஜோடி சத்திர சிகிச்சை //

    தயவு செஞ்சு இதுக்கு அர்த்தம தெரியனும்...

    ReplyDelete
  4. உலக சினிமா ரசிகரே, உங்கள் கண்டனங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, சின்னப் பசங்களிற்கான படம்தான் இது... தமிழ் சினிமா உலகில் சத்திர சிகிச்சை மார்புகள் உள்ள நடிகைகளை உங்களால் வரிசைப்படுத்த முடியுமா.. :)) கருத்துகளிற்கு நன்றி.

    ReplyDelete
  5. நேற்று தான் இப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது, இங்கே சுட சுட பதிவே ரெடியாகி இருக்கிறது. கேமரூன் அம்மையாருக்கு வயது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது இப்படத்தில்.. ரோஸ் பவுடர் பூச்சு வேறு ஏகம்.... மொத்தத்தில் அந்த டாக்டர் அப்பாயின்ட்மென்ட் காட்சி தான் டாப் டக்கர்.... கூடவே I will be Back என்று முடிக்கும் இடம் டக்கருங்கோ...

    பி.கு.: நான் ஜொள்ளு ஜமீன்தார் இல்லை ;)

    ReplyDelete
  6. ரஃபிக், அந்தக் காட்சி எதையும் நன்கு ஆராய்ந்து பார்த்தே ஒரு முடிவிற்கு வர வேண்டும் என்பதை இந்த பூவுலகிற்கு எடுத்துக் காட்டுகிறது :) அக்காட்சியை டாப் டக்கர் என்று விட்டு, அதன் கீழ் எழுதிய வரிகளில் மறுப்பா :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete