Thursday, August 4, 2011

கோளியா கொக்கா


கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர் வினை.

cockraj1கடந்த சில தினங்களாக மிகுந்த மனவுளைச்சலிற்கு உள்ளான ஒருவனாக நான் மாறியிருக்கிறேன். நம் லோக்கல் வைரம் கோயாவி, லோக்கல் கோமேதகம் வவ்வாலான் சாகசக் கதைகளின் சூப்பர் ஹிட் வெற்றி என்பது என் மனதிற்கு பெருமகிழ்ச்சியை தந்தாலும், சமகாலத்தின் சாபமும் வரமுமான இணைய தொழில்நுட்பத்தின் துணையுடன் சில விஷமிகள் கோளிக் காமிக்ஸ் குறித்து அரங்கேற்றும் மலிவு நாடகமும், ஒரு லோக்கல் காமிக்ஸ் இதழ் மீது குறிவைத்து கண்மூடித்தனமாக வீசப்படும் ஈனத்தனமான பல்தேசிய அதிகாரங்களின் அடக்குமுறை கணைகளும் என்னை சீறத் தயாராகிவிட்ட ஒரு எரிமலையாக உருவாக்கிவிட்டிருக்கிறது.

எமது முகவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் ஆனந்தத்தையும், வேதனையும் எமக்கு ஒருங்கே அளிப்பவையாகவே உள்ளன. காமிக்ஸ் இதழ்கள் தீர்ந்து போனதன் பின்பாக முகவர்களை தேடி வரும் அன்பு வாசகர்கள், இதழ்கள் தீர்ந்துபோன ஏமாற்றத்தினை தாங்கிக் கொள்ளவியலாத நிலையில் முகவர்களின் மீதான கட்டற்ற வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள்.

இவ்வன்முறையானது உலகின் பல மூலைகளிலும் ஒரு பொல்லாத தொற்றுநோய் போல பரவியிருப்பதையே மருத்துவமனைகளில் இருந்து தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பாடல் வழியாக வலியுடன் ஒலிக்கும் எம் முகவர்களின் குரல்கள் தெளிவான ஒரு காமிக்ஸ் பக்கம் போல் எமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. வன்முறையால் மட்டுமே சிக்கல்களிற்கு உடனடித் தீர்வு கண்டடையப்படக்கூடும் எனும் இன்றைய காலகட்டத்தின் மோசமான புரையேறி கருத்தாக்கம் எம் சமூகத்தை வெகுவாக பாதித்திருப்பதை நாம் இன்னமும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது.

kcom 1எமது காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும் தருணங்களில் தவறாமல் அதற்கான அறிவிப்புக்களை நாம் முன்கூட்டியே வழங்கி வருகிறோம். ஒரு லோக்கல் காமிக்ஸ் என்ற வகையில் அதன் ஆசிரியன் என்ற நிலையில் இதையிட்டு நான் பெருமைபட்டுக் கொள்வதில் நாணப்படப் போவதில்லை. ஆனால் உங்கள் செயல்வேகமே நீங்கள் கோளிக் காமிக்ஸை கையகப்படுத்துவதை தீர்மானிக்கும் முக்கிய காரணி என்பதை தீட்சண்யமாக நீங்கள் உங்கள் நினைவில் இருத்திக் கொள்ளல் வேண்டும். வேகமற்ற வேங்கை வேங்கையாக இருக்க முடியாது வேண்டுமானால் அது ஒரு கொங்கையாக நீடித்திடலாம். கடந்தவாரம் எம் முகவர்களின் மீது ஜமைக்காவில் இடம்பெற்ற வன்முறையில் இறங்கிய ஒருவரின் பெயர் உசைன் போல்ட் என்பதை இங்கு எழுதி செல்ல விரும்புகிறேன்.

எம் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இதழ்கள் அவர்கள் கைக்கு கிட்டாமல் போகும் ஏமாற்றத்தின் வலியை வன்முறை அலையாக உருமாற்ற கூடாது என்று அவர்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உள்ளத்தில் வன்முறை கொப்புளிக்க ஆரம்பிக்கும் தருணங்களில் நீங்கள் காந்தி, மார்ட்டின் லூதர் கிங், டொமினிக் ஸ்ட்ராஸ்கான் போன்றவர்களை உங்கள் மனத்திரையில் ஒரு அழகான கறையாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என உங்களை நான் அன்புடன் வேண்டி நிற்கிறேன். முகவர்களை தாக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள். நீங்களே ஒரு முகவராகி விடுங்கள். நீங்கள் விரும்பும் இதழ்கள் உங்களிற்கு தவறாமல் கிடைக்க இதைவிட வேறு என்ன சிறப்பான வழி இருக்க முடியும். ஆனால் எதற்கும் ஜூடோ பழகிக் கொள்ளுங்கள். நீங்களும் முகவராகலாம் எனும் தலைப்பில் இதற்கான விபரங்கள் அடுத்த இதழின் 69ம் பக்கத்தில் வெளியாக உள்ளது என்பதை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

vavalanவானதுர்கா பதிப்பகத்தின் ஓயாத பெருங்குரல் கோளிக் காமிக்ஸ் வெளியீடுகள் வருங்காலத்தில் சர்வதேச சந்தையில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களின் முன்சங்கொலியாகவே என் காதுகளில் ஒலிக்கிறது. பல போலிப் பெயர்களிலும், அடையாளங்களிலும் அந்த ஐரோப்பிய பதிப்பகம் ஒரு குடிசைத் தொழிலிற்கு ஒப்பிடக்கூடிய நிலையில் இன்று இருக்கும் கோளிக் காமிக்ஸ் மீது நடாத்தும் அபாண்டமான தாக்குதல்களும், எந்தவிதமான ஆதாரங்களுமற்ற பிரச்சாரங்களும், வழங்கும் மூலக்கதையின் விபரங்களும், இணையத்தில் அவற்றைக் கண்டடையக்கூடிய முகவரிகளும் எம் வெளியீடுகள் மீது அவர்கள் கொண்டுள்ள அச்சத்தையே காட்டுகிறது. வானதுர்கா பதிப்பகம் சில ஐரோப்பிய காமிக்ஸ்களுடன் என்னை பிராங்ஃபர்ட் விமானநிலையத்தில் வைத்து கைது செய்ய மேற்கொண்ட முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது அவர்கள் அடிவயிற்றில் விழுந்த ஒரு பலமான உதையாகவே இன்று அவர்களால் உணரப்படும். இருப்பினும் பெருநிறுவனமான வானதுர்காவின் லாபியிங் காரணமாக ஐரோப்பாவில் கோளிக் காமிக்ஸ் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான ஒரு செய்தியே.

ஆனாலும் இவ்வகையான தடைகளையும் மீறி ஐரோப்பிய கறுப்பு சந்தையில் கோளிக் காமிக்ஸ் தங்கு தடையின்றிப் புழங்குவதற்கு நான் தக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். இதனால் கோளிக் காமிக்ஸிற்கு கிடைக்ககூடிய அவப்பெயரை வாசகர்களின் அபாரமான வரவேற்பு சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும் என நான் எண்ணுகிறேன். கள்ளக் காமிக்ஸ் கொக்ராஜ் என சரித்திரம் அதன் வரிகளில் என்னை நினைவுகூரட்டும்.

pvppநோர்வே உளவுத்துறையில் இருந்து என்னை வந்து சந்தித்த அதிகாரி ஒருவர், தலைகீழாக ஒரு தம் பீடி கதையில் இடம்பெற்றதைப் போலவே அண்மையில் தம் நாட்டை ஒரு நிகழ்ச்சி கலக்கிப் போட்டதை சுட்டிக் காட்டி நோர்வேயைச் சேர்ந்த சில ரகசிய அமைப்புக்களுடன் எனக்கு தொடர்பிருக்கிறதா என அறிய முயன்றார். ஆர்ஜெண்டினாவில் இரு பிரெஞ்சு பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக [ பாலியல் வன்கலவிக்கு பின்பாக] கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சு அசலாக பாலைவனத்தில் பத்மா! பத்மா! கதையில் வரும் காட்சியை ஒத்திருப்பதாக கூறி பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஒரு நாள் முழுதாக என்னை வறுத்தெடுத்தார்கள். பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதையில் தனக்கு பீடியை கடன் தர மறுக்கும் பொட்டிக்கடை பாஸை பார்த்து கோயாவி சீற்றத்துடன் கூறும் வரிகளான “ஆனானப்பட்ட அமெரிக்காவே கடனில் நொடிந்து போகும் நாள் தொலைவில் இல்லை” என்பது குறித்த ஒரு நீண்ட விளக்கத்தை நான் அமெரிக்க அதிகாரத்திற்கு அளிக்க வேண்டியிருந்தது. வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகள் மேட் இன் சைனா என தெரிய வந்ததிலிருந்து சீனாவில் கோளிக் காமிக்ஸ் தடை செய்யப்பட்ட இதழாகியிருக்கிறது. ஆனால் வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகளின் ஏற்றுமதியை அந்நாடு தடை செய்யவில்லை!

இவ்வாறான பல்முகசிக்கல்களிற்கு முகம் கொடுக்கும் ஒரு ஏழைக் காமிக்ஸ் எடிட்டரின் தொழில் வாழ்க்கையின் ஒரு நாளை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். சில வேளைகளில் காமிக்ஸ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு போர்னோ துறையில் இறங்கிவிடலாமா என்றுகூட பயங்கரமான சிந்தனைக் குட்டைகளிற்குள் நான் வீழ்ந்து போயிருக்கிறேன். இருப்பினும் உலகெங்கும் உங்கள் கைகளில் கோளிக் காமிக்ஸ் எனும் என் இலட்சிய தாகம் தீரும்வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறேன். புரட்சியின் விதை நிலத்தில் விழும்போது அது புரட்சியின் விதை என்பது யாரிற்கும் தெரிந்திருப்பதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

palivankumarkidஇவ்வகையான சர்வதேச அழுத்தங்களின் கொடூரப்பிடியில் நெருக்கப்பட்டிருக்கும் எனக்கு கோளிக் காமிக்ஸ் வெளியீடான பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டின் முன் அட்டை ஸ்கேன், கோளிக் காமிக்ஸின் கோமேதகம் வவ்வாலனின் பெயர் போன்றவற்றை என் அனுமதி இன்றி பிரசுரித்ததோடு மட்டுமில்லாது சர்வதேச பரிசு வழங்கி விடுவார்கள் என என் வெளியீட்டைக் கிண்டலும் அடித்து கொக்ராஜ் செய்வதை செய்து கொள்ளட்டும் என சவடால் விட்டிருக்கும் அந்தப் பாஸிசப் பதிவரை நினைத்தால் பரிதாபமாகவே இருக்கிறது. வானதுர்கா பதிப்பகத்திற்கு மிக நெருங்கிய அப்பாஸிசப் பதிவரிடமிருந்து இதைவிட நான் வேறு எந்த தரத்திலும் ரசனையிலும் கருத்துக்களை எதிர்பார்த்திட முடியும். அந்த வானதுர்கா பாஸிச சொம்பர் கால்விரல்களால் பதிவெழுதி சாதனை படைக்கும் நாள் வெகு அருகிலேயே உள்ளது என்பதை இக்கணத்தில் அவரிற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மிகத் தந்திரமாக அப்பாஸிசப் பதிவர் சொல்லாமல் சென்ற விடயம் என்னவெனில் பழிவாங்கும் ஆர்க்கிட் எனும் வரவிருக்கும் எம் கதையின் தலைப்பை சீனக் கணணி வல்லுனர்களின் உதவியுடன் தெரிந்து கொண்டு அதனை தன் சமீபத்திய பதிவின் தலைப்பாக இட்டிருக்கிறார் என்பதுதான். சாகஸ மங்கை செக்ஸி குயின் சக்கி, தன் கணவன் மரணத்திற்கு காரணமானவர்களை நவீன முறைகளில் பழிவாங்கிடும் கதைதான் பழிவாங்கும் ஆர்க்கிட். கோளிக் காமிக்ஸ் ரசிகர்களை பல கோணங்களில் இக்கதை திருப்திப்படுத்தும் என்பதை இப்போதே என்னால் உறுதியாக கூறமுடியும். இதேவேளையில் என்னை மீண்டும் மீண்டும் சீண்டும் மிகையதிகாரங்களிற்கும், வான்துர்காவின் வாய்தா பதிவரிற்கும் நான் கூறிக்கொள்வது இது ஒன்றுதான், உலைமூடியை வைத்து எரிமலையை மூட முடியாது. ஐ வில் வி பேக்.

பி.கு: நாளை பேஸ்புக்கின் தமிழ் காமிக்ஸ் குழும முகவரியில் சூடாக வெளியாக இருக்கும் கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா மேன்மைதகு கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர்வினை இன்றே சீன கணனி வல்லுனர்கள் உதவியால் வானதுர்கா பாஸிச சொம்பரால் இங்கு பிரசுரமாகி உள்ளது. இந்த முயற்சியில் உதவிட்ட குத்து டைம்ஸுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

6 comments:

  1. யோவ் கொக்ராஜ்,

    அய்யம்பேட்டையில் ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் எனக்கு காமிக்ஸ் முகவராக ஆசை தோன்றியது ஒரு துரதிர்ஷ்டமான ஒரு கணத்தில். அதிலும், நீர் நடத்தும் காமிக்ஸூக்கு முகவராக வேண்டுமென்று தோன்றியது, என் முற்பிறவியில் ஒரு கண்டத்தையே கொளுத்திய பாவத்திற்கு நான் ஆளாகி இருக்க வேண்டும்.

    நேர் காணலுக்கு வரும்போது, டையும் சூட்டும் அணிந்து வர வேண்டுமென்று நீர் கூறியதால் தெரு நாய்கள் துரத்தி வர வேகாத வெயிலில் சூட் அணிந்து மாடஸ்டி பவன் என நீர் பெயரிட்டிருக்கும் ஒரு குடிசைக்கு உம்மை சந்திக்க வந்தேன். லுங்கி அணிந்து சட்டை இல்லாமல் லிப்ஸ்டிக் அணிந்திருக்கும் உம்மை பார்த்து கொக்ராஜ் சார் இருக்காரா என்று வினவியது நானல்ல என் நாவில் அமர்ந்த சனி பகவான்.

    என் காமிக்ஸ் உலக அளவில் விற்பனையாகின்றன என கூறி உலக உருண்டையை வேகமாக சுற்றி காட்டினாய், என் மொழி பெயர்ப்பில் தமிழகமே என் படுக்கையின் கீழ் என்றும் சொன்னீர், ஆனால் உம் படுக்கையின் கீழே என்ன இருந்தது என சொல்ல போவதில்லை.

    ஒரு இலட்ச ரூபாய் என்னிடம் வாங்கிக் கொண்டு ஜனவரி மாதத்தில் சூடச் சூட புத்தகம் வந்துவிடும் என வாக்குறுதியும் அளித்தீரே, வந்தது ஜனவரி தான். உம் புத்தகம் எதுவும் வந்த மாதிரி தெரியவில்லை. தொலைபேசியில் பேசினால் உன்னிடம் வேலை பார்க்கும் வயதான செவிட்டு ஆள்தான் பேசுகிறார். அவரிடம் ஒரு மணி நேரம் பேசியும், அவரது பேத்தியை கருவேப்பிலங்குறிச்சியில் கல்யாணம் செய்து கொடுத்திருகிறார் என்ற தகவலை தவிர வேறெந்த தகவலையும் பெற இயலவில்லை. குறைந்த பட்சம் அவரது பேத்தியின் தொலைபேசி எண்ணை கூட.

    இனியும் நான் பொறுக்கபோவதில்லை. மரியாதையா என் காசை திருப்பி கொடுய்யா

    கொதிப்புடன்

    ஏஜெண்ட் சுடலை

    ReplyDelete
  2. செம நக்கலா இருக்கு...............பதிவுல எதுவும் உள்ளர்த்தம் இருக்கா ????

    ReplyDelete
  3. குலேபகாவலி குலேபகவலின்னு உங்களுக்கு நெறைய லிங்க் அனுப்புனா...........ஒண்ணும் பதில் இல்ல.....ரொம்ப வேலையா..........

    ReplyDelete
  4. டியர் ஏஜண்ட் சுடலை, வை ஸோ சீரியஸ்! நீங்கள் சந்தித்த அந்த லிப்ஸ்டிக் பேர்வழி நான் இல்லை. எனவே உங்களிற்கு ஒரு அப்பாயின்ட்மெண்ட் தர நான் எண்ணியிருக்கிறேன். நாளை பேஸ்புக்கில் தமிழ் காமிக்ஸ் குழுவில் எனக்காக காத்திருங்கள். ஆச்சர்யங்கள் உங்களிற்காக காத்திருக்கின்றன.

    நேசத்துடன்

    கொக்ராஜ்.. எடிட்டர் கோளி காமிக்ஸ்.

    நண்பர் கொழந்த, உள்ளர்த்தம் என்றால் என்ன :) அது என்ன வண்ணத்தில் இருக்கும்! குலேபகாவலியின் அறிமுக பதிவையும், வாசகர் கடிதத்தினையும் படித்தேன். இலுமினாட்டியும், நீங்களும் இணைந்து காலத்தின் கதவுகள்- எ டைம் ட்ரவலிங் கைட் எனும் தொடரை அங்கு எழுதிட வேண்டுமென நானும் ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட உள்ளேன். வியாபார நோக்கின்றி நடாத்தப்படும் கோளி காமிக்ஸ் விளம்பரங்களை குலேபகாவலி கட்டணங்கள் ஏதுமின்றி வெளியிட்டு உதவும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  5. செம குத்து போல இருக்கு... சரி சரி.. facebook இல் பார்க்கலாம்...

    ReplyDelete
  6. நண்பர் ரமேஷ், பேஸ்புக்கில் இன்னமும் மோசமாகவே குத்தலாம் :) கருத்துகளிற்கு நன்றி.

    ReplyDelete