Sunday, May 8, 2011

சுத்தியடி சுந்Thor


வீரத்திற்குரிய மமதையும், அகம்பாவ குணமும், அவசர புத்தியும் கொண்ட தேவனான தோர் அவன் செய்த ஒரு தவறுக்காக தந்தை ஒடானால் சபிக்கப்பட்டு தேவனிற்குரிய சக்திகளை இழந்து மானுடர்கள் வாழ்விடமான பூமிக்கு வந்து சேர்கிறான்….

பழைய புராணக்கதைகளில் கூட தேவர்களோ அல்லது முனி பங்கர்களோ ஏதேனும் அறத்தை மீறிய காரணத்திற்காக—அழகிய சிட்டுக்களை நோக்கி கண்சிமிட்டல் போன்ற அற்ப நிகழ்வுகள் -- அவர்கள் கொண்டிருந்த சக்திகளை இழந்து சாதாரணர்களாக தண்டனை காலத்தை அனுபவித்ததை நாங்கள் படித்திருக்கிறோம். இத்தண்டனை காலத்தில் அவர்களின் நன்னடத்தைகள் அவர்கள் இழந்த பதவி, அதிகாரம், கவுரவம் மற்றும் சக்திகளை அவர்களிற்கு மீட்டுத்தரும் வல்லமையை கொண்டதாக இருக்கும். இயக்குனர் மற்றும் நடிகரான Kenneth Branagh இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படமான Thor ன் கதைகூட அப்படியான ஒன்றுதான்.

மேற்குகடல் புராண தேவர்களில் ஒருவனான தோர், மானுடர்களையும், உலகுகளையும், தேவர்களையும் தன் மாவீரத்தால் காப்பாற்றும் ஒரு தேவனாகவே சித்தரிக்கப்படுகிறான். கந்தல் ஹல்க், கேடயத்தான், இரும்பன் போன்ற மார்வல் மச்சான்களின் வரிசையில் தோரிற்கும் இடமுண்டு. 2012ல் வெளியாகவிருக்கும் The Avengers எனும் வீரகாவியத்தின் விளைவுகளிற்கு ரசிகர்களை இப்போதே தயார்படுத்தும் ஒரு முன்னோடியாக வெள்ளோட்டம் ஆகியிருக்கிறது Thor எனும் இத்திரைப்படம். இன்னமும் இரு மாதங்களினுள் கேடயத்தானின் சாகசங்களை நண்பர்கள் திரையில் கண்டு களிக்கலாம். கேடயத்தானின் ட்ரெயிலரைப் பார்த்த நண்பர்கள் அதனைப் போல் ஒரு காமெடி இல்லை என்று கிண்டலடித்தார்கள் ஆனால் தோரின் ட்ரெய்லரைப் பார்த்தபோது எனக்கு தோன்றிய கிண்டல் எண்ணங்கள் அதனை திரைப்படமாக திரையில் தரிசித்தபோது மறைந்து போனது. ஆகவே கேடயத்தான் ட்ரெய்லரை கிண்டலடிப்பவர்கள் ஜாக்ரதையாக அவர்கள் சக்கரங்களில் சுழல எச்சரிக்கப்படுகிறார்கள்.

கண்டிப்பான ஒரு தந்தைக்கும், மகன்களிற்கும் இடையில் நிகழும் பாசத்திற்கான, அங்கீகாரத்திற்கான போராட்டங்கள், பொறாமை கொண்ட ஒரு சகோதரன், அவன் கொண்ட பொறாமை உருவாக்கும் விபரீதங்கள் என உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையானது ஷேக்ஸ்பியரின் ஆர்வலரான இயக்குனர் கென்னத் பிரான்னாக்கிற்கு அல்வா சாப்பிடுவது போல, ஒரு ராஜ நாடகம் கொண்டிருக்கும் கம்பீரத்துடன் திரையில் ஜொலிக்கிறது தேவர்களின் உலகான ஆஸ்கார்டில் நிகழும் காட்சிகள். ஆஸ்கார்டின் பிரம்மாண்டத்தை அழகாக உருவாக்கியிருக்கும் கலைஞர்களை பாராட்டியே ஆகவேண்டும். திரையில் அகன்ற சட்டகங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆஸ்கார்டின் காட்சிகள் அந்த ராஜ்யத்தின் பிரம்மாண்டமான இயல்பை மனதில் தக்க வைக்கின்றன.

thor-2011-13219-98527752தோர் பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகரான Chris Hemsworth, முதலில் சற்று எரிச்சலைத் தந்தாலும் மமதையும், பெருமையும் கொண்ட தேவன் பாத்திரத்தில் பின்பு அட்டகாசமாக பொருந்திப் போய்விடுகிறார். அற்புதமான நடிகர் தேர்வு என்றால் அது மிகையாகது. அவரின் கட்டுடலை காட்டியே சிட்டுக்களை அவர் வசீகரித்து விடுகிறார். தன் சக்திகளை இழந்து, பூமியில் வந்து விழும் அவர் தன்னை இன்னமும் ஒரு தேவனாகவே கருதிக் கொண்டு நிகழ்த்தும் செயல்கள் நகைச்சுவையாக கூறப்பட்டிருக்கின்றன. ஓடானாக பிரபல நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ் தன் பாந்தமான நடிப்பால் தன் பங்கை நிறைவேற்ற, மாவீரன் பின்னால் ஓடி அவன் மேல் காதல்வயப்படும் நாயகியாக நத்தாலி போர்ட்மேன் ஹாலிவூட் இலக்கணத்தை பிசகாது கடைப்பிடித்திருக்கிறார்.

ஆனால் தோரின் நண்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு பேரும் இத்திரைப்படத்திற்கு திருஷ்டி கழிப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து. அவர்களை கண்டாலே சுத்தியடி சுந்Thorன் சுத்தியலை இரவல் வாங்கி அவர்களை அடிக்கும் அளவிற்கு அவர்கள் பாத்திரங்கள் இருக்கின்றன. உதவி செய்ய வந்து அடிவாங்கும் அவர்களிற்கு பதிலாக நான்கு அழகிய சிட்டுக்களை படத்தில் போட்டு தொலைத்திருக்கலாம். 3டியில் கண்ணிற்கு கிடைத்த குளிர்ச்சியாகவாவது அது இருந்திருக்கும்.

ஆஸ்கார்ட் ராஜ்யத்தின் எதிரிகளான உறைராட்சசர்களுடன் நிகழும் மோதல்கள் சிறப்பாக இருக்கின்றன. மியோல்னீர் எனும் அபூர்வ சுத்தியலால் தோர் அடிக்கும் அடி மரண அடியாக இறங்குகிறது, அந்தச் சுத்தியினை ரசிக்க வைத்து விட்டார்கள் படுபாவிகள். அந்த மோதல்கள் உருவாக்கும் எதிர்பார்ப்புகளை எல்லாம் படத்தின் இறுதிப் பகுதி தீர்க்கவில்லை. மிகுந்த அட்டகாசமான ஆக்‌ஷன்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாந்து போவது தவிர்க்கவியலாது. படமும் சட்டென முடிந்து விட்ட ஒரு உணர்வை இறுதிப் பகுதி வழங்குகிறது. ஆனால் தோர் 2012ல் The Avengers ல் திரும்புவார் எனக்கூறி திரைப்படத்தை முடிக்கிறார்கள். அவெஞ்செர்ஸ் திரைப்படத்திற்கான முதல் கொழுக்கி சிறப்பான முறையில் இரைகளை கொழுக்கியிருக்கிறது. அடுத்த கொழுக்கியும் சிறப்பாக தன் பங்கை நிறைவேற்றினால் 2012 மே மாதம் மார்வலின் கல்லா இருக்கும் ஃபுல்லா. கென்னெத்தின் சுத்தியடி சுந்Thor பாதி நெத்தியடி. [**]

ட்ரெயிலர்

9 comments:

 1. மிக அழகாக விமர்சனம் செய்திருக்கீங்க நண்பா! இங்கு எல்லா ல காரிலும் ( la gare ) போஸ்டர் பார்த்தேன்! ஆனால் படம் இன்னும் பார்க்கவில்லை! கொம்பெத்தாவில ஓடுது பார்க்கணும்!!!

  ReplyDelete
 2. நண்பா நானும் ஒரு சினிமா தொடர்பான விமர்சனம் போட்டிருக்கேன்! வந்துபாருங்க! ( கடுப்பாவீங்க! )

  ReplyDelete
 3. காதலரே, சுத்தியடி சுந்தரை பார்த்து விட்டீர்களா.... இன்னும் பார்ப்பதற்கு இங்கு நேரம் அமையவில்லை.

  அஸ்கார்டின் பிரம்மாண்டத்தை அழகாக செதுக்கி இருக்கிறார்கள். படத்தை பார்த்தத தோர் ரசிகர்கள் சூடத்தை சுத்தியலால் அடித்து சத்தியம் செய்யும் அளவு படம் அவர்களை லயிக்க வைத்திருக்கிறது. 3டியில் சம்மட்டி அடி வாங்க நான் ரெடி....

  // அவர்களை கண்டாலே சுத்தியடி சுந்Thorன் சுத்தியலை இரவல் வாங்கி அவர்களை அடிக்கும் அளவிற்கு அவர்கள் பாத்திரங்கள் இருக்கின்றன. //

  சிரிப்பு பட்டாசு :)

  ReplyDelete
 4. காதலரே . .வெகு நாட்கள் முன்னர், எங்கள் வீட்டின் பக்கலில் இருக்கும் ஒரு திரையரங்கில், தோர் ட்ரைலர் பார்த்ததில் இருந்தே, படம் பார்க்க வேண்டுமாய் நினைத்துக் கொண்டிருந்தேன். டூம்ப் ரைடர் அண்டர் வேர்ல்டிலும், தோர் கதாபாத்திரம் பேசப்படும். கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 5. //கல்லா இருக்கும் ஃபுல்லா//

  எங்களுக்கு வாயெல்லாம் பல்லா.. தல நடிக்கிற படத்துக்குப் பேரு பில்லா . .அரபிக் கதைல வருவாரு முல்லா . கன்மோகன் தலைல குல்லா . .

  ReplyDelete
 6. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
  Share

  ReplyDelete
 7. //உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்//

  ஆமாமாமா......கொஞ்சம் நல்ல தண்ணிவுட்டு மண்ண கிளறி பதிங்க.......

  ReplyDelete
 8. இதெல்லாத்தையும் தமிழகத்தின் தோர் - இளைய தளபதி விஜய் பல படங்களில் செஞ்சுட்டார்....நம்ப ஊர்காரணா யாரும் மதிக்காதீங்க....

  ReplyDelete
 9. நண்பர் நாராயாணன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ரஃபிக், உண்மையிலேயே கிராபிக்ஸ் ஆஸ்கார்ட் நன்றாக இருக்கிறது. நேரம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.. ஜூலை மாதம் கேப்டன் அமெரிக்காவிற்கு தயாராகுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் கருந்தேள், வாய்ப்புக்கிடைத்தால் பாருங்கள், ரசிக்ககூடிய படைப்பே. அடுக்குமொழியில் அடுக்கியிருக்கிறீர்களே விரைவில் கவிதைகளை எதிர்பார்க்கலாமா :))தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கொழந்த, சுறா எனும் காவியத்தை ஆஸ்காரிற்கு பரிந்துரைக்க போராடிய எங்களைப் பார்த்தா இப்படி ஒரு குற்றச்சாட்டு. கண்ணீர் வழிகிறது. இளையதளபதி செய்வதை எந்த சூப்பர் ஹீரோவாலும் செய்ய முடியாது என்பதை உங்களிடம் உறுதியாக கூறிக்கொள்கிறேன். தங்களின் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete