Wednesday, May 18, 2011

யானைக்கு நீரூற்றல்


ஜாக்கோப் ஜான்கோவ்ஸ்கி மிருகவைத்தியத் துறையில் பட்டப்படிப்பை தொடரும் ஒரு மாணவன். தன் பெற்றோரின் அகால மரணத்தின் பின்பாக நடுத்தெருவிற்கு வரும் ஜாக்கோப், புதிய வாழ்வொன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் ஓடும் ரயில் வண்டி ஒன்றில் ஏறுகிறான். அவன் ஏறிய அந்த ரயில் வண்டியில் பென்ஸினி பிரதர்ஸ் எனும் சர்க்கஸ் கம்பனி ஊர் ஊராக பயணம் செய்து வருகிறது. சர்க்கஸ் கம்பனியின் முதலாளியை சந்திக்கும் ஜாக்கோபிற்கு சர்க்கஸில் வித்தை காட்டும் விலங்குகள் நலத்தை பராமரிக்கும் பொறுப்பு தரப்படுகிறது….

கடந்தகாலத்தில் நிகழ்ந்த மறக்கமுடியாத நிகழ்வுகளைப் பேசும் திரைப்படங்கள், அந்த நிகழ்வுகளை மறக்கமுடியாத ஒரு பாத்திரம் சமகாலத்தில் இருந்து அந்நிகழ்வுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. இயக்குனர் Francis Lawrence இயக்கியிருக்கும் Water for Elephants திரைப்படமும் இவ்வழக்கத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ளவில்லை. Sara Gruen எனும் அம்மிணி எழுதிய, திரைபடத்தின் அதே பெயரைக் கொண்ட நாவலைத் தழுவியே இத்திரைப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஓடிக்கொண்டிருக்கும் நேரம், சர்க்கஸ் கம்பனி ஒன்று தன் கதவுகளை மூடிவிட்டு உறங்க ஆரம்பிக்கும் தருணத்தில் அக்கம்பனிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார் ஒரு வயோதிபர். சர்க்கஸ் ஊர்வலத்தை காண ஆவலுடன் இருக்கும் அந்த வயோதிபரை பரிவுடன் உள்ளே அழைத்து செல்கிறான் அந்த சர்க்கஸின் முதலாளி. வயோதிபர் மடத்தில் இருந்து யாரிற்கும் சொல்லிக் கொள்ளாமல் நழுவி வந்திருக்கும் அந்த வயோதிபர் மதுவின் அரவணைப்புடன் தன் கடந்தகாலத்தை அந்த சர்க்கஸ் கம்பனியின் முதலாளியிடம் கூற ஆரம்பிக்கிறார். வயோதிபராக கதையைக் கூற ஆரம்பித்த ஜாக்கோப் பட்டப்படிப்பு மாணவணாக தன் கல்லூரிக்கு செல்ல தன் வீட்டில் ஆயத்தமாகும் காட்சியுடன் கடந்தகால நிகழ்வுகள் திரையில் உருப்பெற ஆரம்பிக்கின்றன.

இளம் வயது ஜாக்கோபாக திரையில் வருபவர் காதல் காட்டேரி Robert Pattinson அவர்கள். அவருடைய வாழ்வே பெற்றோரின் மரணத்தின் பின் முற்றாக மாறிவிட, அவர் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த வீடும் வங்கியால் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட, ரயில்பாதையின் ஓரமாக வாழ்க்கையை தேடிச்செல்லும் ஜாக்கோப் பாத்திரத்தில் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஜாக்கோபின் வாழ்க்கையானது தண்டவாளங்களின் மேல் உருண்டு வருகையில் ஓடிச் சென்று அதில் அவன் ஏறிக்கொள்கிறான். அந்த ரயிலில் பயணம் செய்யும் சர்க்கஸே அவன் புதிய வாழ்வாக மாறிவிடுகிறது.

water-for-elephants-2011-15532-1106891936திரைப்படத்தின் கதை நிகழும் காலம் 1931. அமெரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்ட காலமது. இக்காலத்தில் ஒரு சர்க்கஸ் கம்பனியின் நிலை என்னவாக இருக்கும் என்பதை தொடரும் சம்பவங்கள் திரையில் விரிக்கின்றன. அன்றாட பாட்டிற்கே திண்டாடும் மக்கள் சர்க்கஸை காண வருவது என்பது குறைவாகவே இருக்கிறது. இது சர்க்கஸ் கம்பனியிகளின் வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல சர்க்கஸ் கம்பனி முதலாளிகள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி தப்புகிறார்கள். சர்க்கஸ் ஊழியர்களும், வித்தைக்காரர்களும், விலங்குகளும் கிழிந்த கூடாரங்களுடன் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊழியப் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் ஓடும் ரயிலில் இருந்து ஊழியர்கள் வீசி எறியப்படுகிறார்கள். இவ்வகையான நிகழ்வுகளையும் மீறி சர்க்கஸ் மனிதர்களின் வாழ்வானது வலியும் வேதனையும் இளைப்பாறலும் மகிழ்ச்சியும் கொண்ட பயணமாகவே இருக்கிறது. இவ்வாழ்க்கையினை சிறிதளவில் தொட்டிக் காட்டிச் செல்கிறது திரைப்படம். அவ்வகையில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியின் போது சர்க்கஸ் கம்பனிகள் குறித்த மெலிதான ஒரு வரலாற்றுப் பார்வையாக இத்திரைபடம் அமைகிறது.

சர்க்கஸ் கம்பனி ரயிலில் ஏறும் ஜாக்கோப், அந்த சர்க்கஸ் கம்பனி முதலாளியான ஆகஸ்டினால் விரும்பப்படுபவானாகிறான். ஆகஸ்ட் நிலையற்ற சுபாவம் கொண்டவன், எந்த கணத்திலும் அவன் குணம் சடுதியாக மாறிவிடக்கூடியதாக இருக்கிறது. தேவைக்கு அதிகமானவர்களை தன் குண்டர்களை வைத்து ரயிலி இருந்து தூக்கி எறியும் ஆகஸ்ட், கொலை செய்யக்கூட தயங்காத வெறிநிலையை சிலநொடிகளில் எட்டிவிடக்கூடியவன். அதேவேளையில் தன் தவறை உணரும் சமயங்களில் அவன் தனக்குள் தானே ஒடுங்கிப் போபவனுமாக இருக்கிறான். தன் சர்க்கஸ் கம்பனி நொடிந்து விடக்கூடாதே எனும் எண்ணமும், பார்வையாளார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் நிலையும் அவனை அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவன் ஒரு யானை போல, அவன் பலம் என்ன என்பது அவனிற்கே தெரிவதில்லை. அவன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக இருந்து வந்த குதிரை ஒன்றின் கால் பாதிப்பிற்குள்ளாக அதனை சாகடிக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதன் பின்பாக ரோஸி எனும் யானையை விலைக்கு வாங்கி அதனை தன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக ஆக்கவிரும்பும் ஆகஸ்ட் அதனை பராமரிக்கும் பொறுப்பை ஜாக்கோபிடம் தருகிறான். ஆகஸ்ட் பாத்திரத்தில் தன் பங்கை இயலுமானவரை சிறப்பாக செய்திருப்பவர் நடிகர் Christophe Waltz. படத்தின் மிகச்சிறப்பான திறமை இவரே ஆனால் அவருடைய பாத்திரம் மனதில் ஒட்ட மறுக்கிறது.

de-l-eau-pour-les-elephants-2011-15532-1524809140ரோஸி எனும் யானையை ஜாக்கோப் பராமரிக்க ஆரம்பிக்கும் கணத்தில் இருந்து ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவுடன் அவன் நெருங்க ஆரம்பிக்கிறான். இவர்கள் இருவரினதும் செயல்களையும் மிக அமைதியுடன் அவதானித்து வருகிறான் ஆகஸ்ட். அவன் மனதில் சந்தேகம் மெல்ல மெல்ல உருப்பெற ஆரம்பிக்கிறது. ஆகஸ்டின் முரட்டுத்தனம், ஏறக்குறைய ஒரு அடிமையாக வாழும் நிலை என்பன ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவை மென்மையான ஜாக்கோப்பின் கரங்களினுள் கொண்டு சேர்க்கிறது. ரோஸியின் ரகசியத்தை புரிந்து கொள்ளும் ஜாக்கோப் அதனை பயிற்சி அளிக்கும் முறையை ஆகஸ்டிடம் தெரிவிக்கிறான். மீண்டும் பென்ஸாணி பிரதர்ஸ் சர்க்கஸ் வரவேற்பை பெற ஆரம்பிக்கிறது. தொடரும் சில நிகழ்வுகளால் சர்க்கஸை விட்டு ஓடுகிறார்கள் ஜாக்கோபும், மர்லெனாவும். அவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை மீதி திரைப்படம் கூறுகிறது.

திரைப்படத்தின் போஸ்டரை ஒரு முறை பாருங்கள், கிறங்கி நிற்கும் ஒரு காதல் ஜோடி, அவர்களின் பின்னால் அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் ரோஸி எனும் யானை. இவர்களின் பின்னணியில் மங்கிய பிரகாசத்தில் ஒளிரும் ஒரு சர்க்கஸ். ஒரு போஸ்டரிலேயே கதை அழகாக கூறப்பட்டுவிட்டது இல்லையா. ஆனால் இயக்குனர் பிரான்ஸிஸ் லாரன்ஸால் இக்கதைக்கும், பாத்திரங்களிற்கும் வேண்டிய உணர்வுகளையோ, ஜீவனையோ அதற்குரிய முறையில் வழங்கிட முடியவில்லை என்பதுதான் உண்மை. மிக முக்கியமாக உறவுகளிற்கு இடையில் பரிமாறப்படும் உணர்வுகளில் உயிர்ப்பு என்பது முழுமையானதாக இல்லை. ராபார்ட் பாட்டின்ஸனிற்கும் மர்லெனா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகையான Reese Witherspoon க்குமிடையில் ஜோடிப் பொருத்தம் என்பது ஏணி வைத்தாலும் எட்டிப் பார்க்க மறுக்கிறது. அருமையான ஒரு பாத்திரத்தின் கனம் தாளாமல் ராபார்ட் பாட்டர்ஸன் திணறுகிறார். திறமையான இயக்குனர்களின் கைகளில் அவர் நல்லதொரு கலைஞராக உருவாகும் வாய்ப்புண்டு. ரீஸ் வித்தர்ஸ்பூனிற்கு என்ன நடந்தது, கணவனை தாண்டி வந்து புதிய காதலில் குதிக்கும் ஒரு பெண்ணாக எம்மை கலங்கடிக்க வேண்டிய அவர் எரிச்சலைதான் உருவாக்குகிறார். ஒரே ஒரு ஆறுதல் யானை ரோஸி. நடிகர் கிறிஸ்டோபர் வால்ட்ஸிற்கு நிகராக கூறக்கூடிய பாத்திரம் அதுதான், தேவர் அவர்களின் திரைப்படங்களில் வருவதுபோல ஒரு முக்கிய திருப்பத்தையும் யானை ரோஸி செய்து தணிகிறது.

வழமையாக இவ்வகை காதல் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் மெழுகுவர்த்திகளை உருகச்செய்யும் இசை, அருமையான ஒளிப்பதிவு என்பன திறமையற்ற இயக்கத்தால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. யானைகளிற்கு நீரோ அல்லது விஸ்கியோ வார்த்தால் அது உங்கள் காதலை காப்பாற்றலாம் ஆனால் இந்த திரைப்படத்தை எதுவுமே காப்பாற்றவில்லை. [*]

ட்ரெயிலர்

12 comments:

 1. மிக அருமையான விமர்சனம் நண்பா! நீங்கள் சொன்னமாதிரி படத்தின் போஸ்டரே, கதையை கூறிவிடுகிறது! இப்படத்தின் போஸ்டர்களை la gare களில் பார்த்திருக்கிறேன்! படம்பார்க்கத்தான் நேரமில்லை!!

  ReplyDelete
 2. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
  Share

  ReplyDelete
 3. இந்த படம் இன்னும் இங்கே ரிலீஸ் ஆகவே இல்லை. டிவிடியும் வரலை.

  என்ன வாழ்க்கைடா இது? (வானம் சொம்பு ஸ்டைலில் படிக்கவும்).

  கிங் விஸ்வா

  கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்

  ReplyDelete
 4. வழமையாக இது போன்ற படங்கள் நம்மை மயிலிறகால் மென்மையாக வருடி சென்றதைப்போல ஒரு உணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவை வெற்றியடையும். இந்த படம் (உங்கள் விமர்சனத்தை படித்தவுடன்) அப்படி செய்ய தவறி விட்டதைப்போல தெரிகிறது. காதல் காட்டேரிக்கு பேட் லக் போல.

  ReplyDelete
 5. ம்க்கும். அதிகபட்சமாகவே வழக்கமாக மூணே மார்க்குதான் வரும். இதில், ஒரே ஒரு மார்க் போட்டு வைத்திருக்கிறீர்களே - இதை மனுசன் பார்ப்பானா? :-)

  ReplyDelete
 6. //Christophe Waltz// - இவரது இதற்கு முந்தைய படத்துக்கு முந்தைய படத்துக்கு (பாஸ்டர்ட்ஸ்) நான் ரசிகன் (அப்பாடா.. எப்புடியோ, இவரைத் தெரியும்னு அறிக்கை உட்டாச்சு.. )

  ReplyDelete
 7. //காதல் காட்டேரிக்கு பேட் லக் போல//
  இந்த ஆளை எனக்கு மொதல்லருந்தே புடிக்காது. இவனுக்கு எல்லா படமும் ப்ளாப் ஆனா அதை பாராட்டுற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன் :-)

  ReplyDelete
 8. // யானைகளிற்கு நீரோ அல்லது விஸ்கியோ வார்த்தால் //

  என்னாது...விஸ்கி குடிக்கிற யானையா.....எந்த ஊர்ல தல..இருக்கு...

  அப்பாலிக்க....Facebookல டென்செல் வாஷிங்டனோட சின்ன வயசு படத்த போட்டுட்டு உங்க பேர் போட்டிக்கு...? ஏன் ?

  ReplyDelete
 9. காதல் காட்டேரி சல்வடோர் டாலியாக நடிச்ச படம் இருக்கு....காட்டேரி நடிச்சதால பாக்குறதா வேணாமா ஒரே ரோசன...

  ReplyDelete
 10. நண்பர் நாராயணன், இப்படியான போஸ்டர்களை பார்த்துத்தானே வாலிப பையன்கள் ஏமாந்து ஒரு ஸ்டார் தர வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  விஸ்வா, படமும், டிவிடியிம் வெளிவராதது அதிர்ஷ்டம் எனக்கொள்க :) மயில் இறகால்தான் வருடுகிறார்கள் ஆனால் ரோமம் இழந்த மயிலிறகு :) தங்கள் கருத்துக்களிற்கு நண்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள், மனுஷன் பார்ப்பானா... அப்ப நானு :)).... பாஸ்டர்ஸில் மனிதர் கலக்கி இருப்பார் இதில் கூட அவரைக் குறைகூறவியலாது ஆனால் அவர் பாத்திரம் மனதை நெருங்க மறுக்கிறது. காதல் காட்டேரியின் ரிமம்பெர் மீ நன்றாகவிருக்கும். வாய்புக் கிடைத்தால் பாருங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கொழந்த, இப்படத்தில் யானை ரோஸி விரும்பி மது அருந்துகிறது, பேஸ்புக்கில் என் மனைவி செய்யும் சதிக்கு பலியாகாதீர்கள் என எச்சரித்திருக்கிறேனே :) காதல் காட்டேரி சல்வடோர் டாலியாக நடித்த படத்தை உடனே பார்த்துவிட்டு பதிவொன்றை எழுதி எம் மனங்களை திகில் செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் :)

  ReplyDelete
 11. // காதல் காட்டேரி Robert Pattinson//

  ஹாஹா,என்ன கொடுமை ஓய் இது? :)

  யானைக்கு நீரூத்த சொன்னா நமக்கு பாலூத்திடுவாணுக போல. ;)

  இந்த புத்தகம் குறித்த பேச்சுக்கள் வந்த பொழுதே review பார்த்தேன். இந்தப் புத்தகத்தை தூக்கிப் பிடித்தது முழுதும் பெண்கள். முழுக்க அழுகாச்சி. :)
  அப்பவே இது தேறாது என்று முடிவு செய்துவிட்டேன்.ஆமாம், twilight, water for elephants, eragon என்று இந்த இளம் பிராயத்துப் பெண்களின் புத்தி ஏன் இப்படி முட்டாள்தனமாகவே அலைகிறது? :)

  ReplyDelete
 12. நண்பர் இலுமி, பாம் மட்டுமல்ல சங்கும் ஊதி விடுவார்கள். பெண்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள் என்பது நீர் அறியாததா :) ஒரு சகோதரியை எண்ணி அவர்கள் கண்ணீர் வடிக்கும்போது அணைத்துக் கொள்ள உம் தோள்களை தருவதை விட்டு மீண்டும் கொலைவெறி கொண்டு விட்டீரே. புத்தகத்தை படித்துவிட்டு ஒரு பதிவையும் போடும். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete