Sunday, March 6, 2011

காத்திருந்த பாறை


மலையேறுவதில் அதிக விருப்பம் கொண்ட இளைஞனான Aron Ralston, வார இறுதி ஒன்றை மலைக்குன்றுகளும், கணவாய்களும் பெருகிய இயற்கைப் பூங்கா ஒன்றில் கழிக்க செல்கிறான். அப்பிரதேசத்தில் மிகுந்த உற்சாகத்துடன் மலையேறி மகிழ்ந்து கொண்டிருக்கும் ஏரோன், இரு குன்றுகளிற்கிடையிலுள்ள பிளவொன்றினுள் முன்னேற முயலும்போது ஒரு பாறை சரிந்து அவன் கரத்தின் மீது வீழ்ந்து இறுகிக்கொள்கிறது. ஏரோன் எங்கு சென்றான் என்பதை அவனிற்கு நெருங்கியவர்கள் யாரும் அறிந்திராத நிலையில், அவன் உதவிக்கு வர எவருமே இல்லை எனும் இக்கட்டான சூழலில், பாறையில் அகப்பட்ட தன் கரத்தை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறான் ஏரோன்….

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், சர்ச்சையையும் உருவாக்குவதில் வெற்றி கண்ட Slumdog Millionaire திரைப்படத்தின் இயக்குனரான Danny Boyle அவர்களின் சமீபத்திய படைப்புதான் 127 Hours. 2003ல் ஏரோன் ரால்ஸ்டன் எனும் மலையேறியின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு நூலைத் தழுவி இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்லாம்டாக் மில்லியனெர் திரைப்படத்தில், புதிர்க் கேள்விகளுடன் நாயகன் ஜமால் மலிக் நிகழ்த்திடும் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் களித்திட, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் ஒரு தேசமும், அரங்கொன்றில் நாயகனை சூழ அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டமும் உன்னிப்புடன் தயாராக இருக்கும். அவனது ஒவ்வொரு பதிலுக்கும் கிடைக்கும் கரகோஷங்களும், ஆரவாரங்களும் அவனை உற்சாகப்படுத்தும். 127 Hours நாயகன் ஏரோனின் நிலையோ இதற்கு முற்றிலும் எதிர்மாறானது.

சிக்கிக் கொண்ட பிளவையே அரங்கமாக கொண்டு, தன் கரத்தை பாறையிலிருந்து விடுவிப்பதற்காக தனியனாக அவன் அரங்கேற்றும் அவல நாடகத்தை கைதட்டி ரசிக்கவோ, உற்சாகப்படுத்தவோ, விசிலடிக்கவோ அங்கு யாருமில்லை. அவன் இருத்தல் குறித்த எந்த அக்கறையும் இன்றி உலகம் தன் பாட்டிற்கு இயங்கிச் செல்வதுபோல் ஒரு காகம் அவன் மாட்டிக் கொண்ட பிளவின் மேலாக பறந்து செல்கிறது. தன் அவல நாடகத்தின் அறிவிப்பாளனாக, நாயகனாக, பார்வையாளனாக, ஒளிப்-பதிவாளனாக அவனே இருந்தாக வேண்டிய நிலை. திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் ஏரோன் இதனை நிகழ்த்தியே காட்டுகிறான். மனதைக் கலங்க வைக்கும் தருணங்களில் ஒன்றாக அது திரைப்படத்தில் இடம்பிடிக்கிறது. ஐந்து நாளிற்கு மேலாக பிளவினுள் இடம்பெறும் ஏரோனின் வாழ்வா சாவா எனும் போராட்டத்தையே எம்மை பார்வையாளர்களாக்கி திரையில் வடிக்கிறார் இயக்குனர் டேனி பாய்ல்.

ஒரு பிளவிற்குள், ஒரு மனிதனை மட்டுமே வைத்து ஐந்து நாட்களிற்கு ஒரு கதையை நகர்த்துவது என்பது எளிதான ஒன்றல்ல. திரைப்படத்தின் ஆரம்பத்தில் மலைக்குன்றுகளை நோக்கி ஏரோன் பயணப்படும் போதும், மலைக்குன்றுகள், கணவாய்கள், ரகசிய நீர்நிலைகள் என்று அவன் அலைந்து மகிழும் கணங்களிலும் திரைப்படத்தில் இளமையின் தீவிரமான உற்சாகம் வேகமாக பீறிட்டு ஓடுகிறது. அதேபோல் ஒரு முக்கிய முடிவை எடுத்துக் கொண்டு பாறையிலிருந்து தன் கரத்தை விடுவிக்க ஏரோன் முனையும் உச்சக்கட்டக் காட்சிகளில் எம் கரத்திலேயே கத்தி புகுந்து அறுக்கும் உணர்வின் தாக்கத்தை எம்மால் எட்டிவிட முடிகிறது. அக்காட்சிகளின் அப்பட்டமான குரூரம் அரங்க இருக்கைகளில் ரசிகனை அசெளகரியத்துடன் நெளிய வைக்கிறது.

127-heures-2011-19393-667242516ஆரம்பக் காட்சிகளின் உற்சாகம், உச்சக்கட்ட அதிர்ச்சி எனும் இரு புள்ளிகளிற்கிடையில் ஏரோன் பிளவிற்குள் கழிக்கும் மணித்துளிகளை அவன் கடந்த காலம் குறித்த நினைவலைகள் மூலமும், விடுதலையை வேண்டும் மனம் இயற்றும் இனிய கனவுகள் வழியேயும் நிரப்புகிறார் இயக்குனர். தன் குடும்பம், தன் நண்பர்கள், தன் காதலி என ஏரோனின் மனம் கடந்த காலத்தை அசைபோட்டு மீள்கிறது. சிறைப்பட்ட மனிதனின் ஏக்கம்போல் இச்சைகள் குறித்த கனவுகள் அவனை மூழ்கடிக்கின்றன. தன் உறவுகள் தன் மீது காட்டும் அன்பையும், அக்கறையையும் தன் அதீதமான தன்னம்பிக்கையால் உதாசீனப்படுத்தும் ஒருவனாகவே இங்கு ஏரோன் உருப்பெறுகிறான். பிறரின் உதவிகள் இன்றி தன்னால் தனித்து எதையும் சாதிக்க முடியும் என்ற அவன் மனப்பான்மையையும், அவன் அதீத தன்னம்பிக்கையையும் காலம் முதல் அவனிற்காக காத்திருந்து அவன் கரத்தின் மேல் விழும் அப்பாறை சப்பளித்து விடுகிறது.

தான் வாழும் உலகின் உறவுகளை தவிர்த்து தனியனாக வாழ விரும்பும் ஏரோன், மலைகள் உள்ள பூங்காவில் வழி தவறி விட்ட பெண்களிற்கு தானே முன் சென்று வழிகாட்டுகிறான். அங்கு அவன் கழிக்கும் பொழுதுகளில் அவன் வேறு மனிதனாக இருக்கிறான். மலையும் மலை சார்ந்த இடமும் அவன் இறுக்கத்தை கட்டவிழ்க்கிறது. அவனை பிறிதொரு இனிதான மனநிலைக்கு தள்ளுகிறது. அவனை விடுவிக்கிறது. அவனை சிறைப்பிடிக்கிறது.

ஏரோனின் நினைவலைகளும், கனவுகளும் பார்வையாளனை கட்டிப்போட வைப்பதில் தகுந்த விதத்தில் செயலாற்றாது போக இப்பகுதியில் தன் இயக்கத்தில் இறங்கிவிடுகிறார் இயக்குனர் டேனி பாய்ல். ஏரோனின் கடந்தகால மீட்டல்கள் சலிப்பை பிளவினூடு மெதுவாக கடத்தி வருகின்றன. அவ்வகையில் பாதிப் படத்தினையே இயக்குனாரால் திறமையாக பரிமாறக் கூடியிருக்கிறது.

உற்சாகாமான ஆரம்பக் காட்சிகளில் ரகுமானின் இசை அதிரடிக்கிறது. குறிப்பாக மலைக் குன்றுகளிற்கு ஏரோன் கிளம்பிச் செல்லும் வேளையில் ஒலிக்கும் பாடலும் இசையும் உணர்வுகளை அதிர வைக்கின்றன. ஆனால் பாறையில் தன் கரத்தை மாட்டிக்கொண்டு ஒரு மனிதன் போராடிச் சோர்ந்து கிடக்கிறான், ஒரு நாளில் குறுகிய நேரத்திற்கு மட்டுமே அவன் மாட்டியிருக்கும் பிளவிற்குள் சூரியன் தன் கதிர்களால் வருடிச் செல்லும். அந்த வேளை வருகிறது. சூரியக் கதிர்கள் மென் விரல்களென அவன் மேல் வீழ்கிறது. அந்த ஸ்பரிசம் அந்த மனிதனின் பால்ய கால நினைவுகளைத் தூண்டுகிறது. தன் தந்தையுடன் அவன் பார்த்து ரசித்த சூரிய உதயங்களை அவன் மனம் மீட்டெடுக்கிறது. இந்த தருணத்தில் பின்னனி இசை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாது அந்தக் காட்சிகள் தரும் உணர்வுகளிலிருந்து பார்வையாளனை விலத்தி எடுத்து செல்வதாகவே ரகுமானின் இசை இருக்கிறது. ரகுமானின் இசை மிகச் சிறப்பாக செயற்பட்ட திரைப்படமாக இது இல்லை என்பதுதான் என் கருத்து.

படத்தின் மிகச் சிறந்த திறமை எதுவெனில், அது ஏரோன் வேடத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் James Franco தான். எதிர்பார்த்திராத வகையில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் சிலந்தி மனிதனின் வைரி. வீடியோ கமெராவில் தானே நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி பதிவு செய்யும் காட்சி, உச்சக்கட்டக் காட்சி என்பவற்றில் மனங்களை இளக வைத்து விடுகிறார் ஜேம்ஸ் பிராங்கோ. அவர் திறமையைக் காட்ட கிடைத்த வாய்பை தவறாமல் உபயோகித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளம் நடிகர்.

ஏரோன் அகப்பட்ட பிளவினுள் பார்வையாளனை இறக்கி, அவனை ஏரோன் இடத்தில் நிறுத்துவதே என் நோக்கம் என்றிருக்கிறார் டேனி பாய்ல். இந்த நோக்கத்தில் அவரிற்கு கிடைத்திருப்பது முழுமையான ஒரு வெற்றியல்ல. விலங்குகளிற்கு பொறி வைக்கப்படும் சமயங்களில் அவற்றில் மாட்டிக் கொள்ளும் விலங்குகள் அதிலிருந்து தம்மை விடுவிக்க பொறியில் மாட்டிய தம் அவயவங்களை அறுத்துக்கொண்டு தப்புவதுண்டு. பொறிகளில் வாலோ, ஒரு காலோ மட்டும் எஞ்சியிருக்கும். அவ்விலங்குகளின் விடுதலையின் விலையாக, தழும்பாக அந்த அவயவங்கள் மாறிப்போகும். ஏரோனின் கரம் அவனை பிரபலமாக்கியது, அந்தக் கரம் இன்றும்கூட அவன் விடுதலையினதும், தொடரும் வாழ்வினதும் அடையாளமாக, மலையும் மலை சார்ந்த இடங்களிற்கும் அவனுடன் சலிக்காது துணை சென்று கொண்டேயிருக்கிறது. அவன் மறைவின் பின்பாகக்கூட அந்தக் கரத்திற்காகவே அவன் பெரிதும் நினைவுகூறப்படுவனாக இருப்பான். [**]

ட்ரெய்லர்

15 comments:

  1. இப்படம் குறித்து ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.குறிப்பாக,trailer பார்த்த பின்னர்..
    இவ்வகைப் படங்களின் முதல் எதிரி,நேரம்.இவ்வகைக் கதைகளில் சலிப்பு ஏற்படாத வகையில் படத்தை கொண்டு சொல்ல மிகப்பெரிய திறமை வேண்டும்.
    slum dog millionaire குறித்து..
    அந்தப்படம்,அதன் மூல நாவலில் நூற்றில் ஒரு பங்கு கூட வராது என்பது என் கருத்து.அந்த நாவல்,சில நேரங்களில் செண்டிமெண்ட் நிறைந்தாக இருந்தாலும் கூட...
    நாவலில்,ஒரு ஏழை அனாதையின் வாழ்க்கை நம்பகத்தன்மையோடு கண் முன் விரியும்.அதன் அவலம் நம்மை அழுத்தும்.படம் அப்படியல்ல.அந்த ஷோ மீது காட்டிய தீவிரத்தை படம் முழுதும் காட்டி இருந்தால் நம்பகத்தன்மை இருந்திருக்கலாம்.மேலும்,நாவலின் நாயகன் நாயகி ரொமான்ஸ் கதையே வேறு.அதன் நம்பகத்தன்மையும்,வலியும், அழகும் என்னை ஈர்க்கும் அளவுக்கு படத்தின் செயற்கை காதல் ஈர்க்கவில்லை.நாவலின் இன்னொரு பெரிய பலம்,அதன் கிளைமாக்ஸ்.நாவலில் நாயகன் அந்த போட்டிக்கு செல்வதற்கான காரணமே வேறு.நேரம் கிடைத்தால் அந்த நாவலை படியும்.உமக்கு பிடிக்கும்,படத்தை விட...

    ReplyDelete
  2. ஏனென்று தெரியவில்லை இந்தப் படத்தை பாதிக்கு மேல் ennaal பார்க்க முடியவில்லை..

    ReplyDelete
  3. ஏனோ இதுவரை பார்க்க தோன வில்லை!!! கண்டிப்பா சீக்கிரம் பாக்கிறேன்!

    ReplyDelete
  4. very good movie. i really enjoyed it

    ReplyDelete
  5. நண்பர் இலுமினாட்டி, சில கதைகள் திரைக்கு மாற்றப்படும்போது அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது என்பது அவசியமாகிறது. கேளிக்கை என்பதற்கு தரப்படும் விலையாக அதை நான் கருதிக் கொள்கிறேன். மேலும் களிமண் மனிதர்களைப் படிக்காமல் வேறு புத்தகங்களை நான் தொட்டுப் பார்க்கப் போவதில்லை. அதற்குள் ஜம்போவிலிருந்து ஓட்டிய மை அகன்றுவிடும் என்று நம்புகிறேன். வெள்ளையாய் ஒரு வேதாளத்தை மொக்கை என்று கூறிய தீய சக்திகளை ஒழிக்க ஒருவன் பிறந்து வராமலா போய் விடப்போகிறான் :) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் மைதீன், உச்சக்கட்டக் காட்சிகள் நன்றாக இருந்தனவே :) தவற விட்டு விட்டீர்களே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிவா, நேரம் கிடைக்கையில் பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் மதன், திரைப்படம் உங்களை திருப்திபடுத்தியது மகிழ்ச்சியே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  6. நண்பரே,
    கதையினை கேளிக்கைகாக மாற்றும் போது சில நேரம் அது ஒரிஜினலைக் கூட மிஞ்சி விடும்.உதாரணம்:அனைத்து Tom Clancy நாவல்கள்.ஆனால்,பல முறை,கேளிக்கைக்காக மாற்றப்படுவது கேலிக்குரியதாகி விடுகிறது.இது போல.. :)

    ReplyDelete
  7. படத்தின் கதை உண்மையில் நிகழ்ந்தது.எனவே சுவைக்காக பொய் அதிகம் கலக்க முடியாது.இந்த விதிகளுக்குள் டேனிபாயல் இப்படத்தை முடிந்த அளவு சுவாரஸ்யப்படுத்தியுள்ளார்.இப்படத்தின் டிவிடி வாங்க நம் மக்கள் அலட்சியம் காட்டியது என்னை ஆச்சரியப்படுத்தியது.ஸ்லம்டாக் மில்லியனர் டிவிடியை நாயும் பேயும் வாங்கியது அருவறுக்கத்தக்க உண்மை.ஜெயித்தவன் பின்னால்தான் இந்த உலகம் வெறி பிடித்து ஒடும்.

    ReplyDelete
  8. நண்பர் இலுமினாட்டி, கிளான்சியின் நாவல்கள் முன்னொரு காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றவையாகும். பட்ரியோட் கேம்ஸை விட எந்த திரைப்படமும் அதிக வெற்றியை பெறவில்லை என்றே கருதுகிறேன்.

    உலக சினிமா ரசிகரே, மக்களின் ரசனை என்பது ஆச்சர்யமான ஒன்றே, க்ரீன் ஹார்னெட் திரைப்படம் அமெரிக்காவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகியிருப்பது ஒரு உதாரணம். 127 hours க்கு ஊடகங்களில் அதிக விளம்பரங்கள் இல்லை என்பதும், மில்லியனர் இந்தியாவை களமாகக் கொண்டது என்பதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய ஒன்றாகும். 127 Hours அதற்குரிய ரசிகர்களை சென்றடையும் என்றே நம்புகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. wow great review....

    சிலந்தி மனிதனின் வைரி!!! nice phrase.
    Since I have not yet watched this movie, your review helps me to understand the pain and pleasure narrated in this movie.
    Regards,
    Mahesh

    ReplyDelete
  10. படத்தில் ஒரு இடத்தில் ராவணனின் உசுரே போகுதே வாசம் மெலிதாக அடிக்கும்... நான் மிகவும் ரசித்த இடம் அது... படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்... Imagination. ஏன் என்றால் எனக்கு அதுபோன்ற imagination என்பது மிகவும் இயல்பானது... மாட்டி கொண்டிருக்கும் சூழலில் விடுவிக்கபட்டால்... ... ...

    விமர்சனம் இன்னம் படிக்கவில்லை... படித்துவிட்டு திரும்ப எழுதுகிறேன்...

    ReplyDelete
  11. நண்பர் மகேஷ் குமார், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பரிதி, நன்றி.

    ReplyDelete
  12. காதலரே . . இப்படம் எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், ஒரே முறைதான் பார்க்க இயலும். இப்படத்தின் இசையில், இந்திய வாசம் கொஞ்சம் தூக்கலாகவே அடித்தது. குறிப்பாக இறுதிக்காட்சிகளில்.

    உங்கள் பதிவுகளில் எதாவது ஒரு படம் நான்கு ஸ்டார்களையோ அல்லது ஐந்தையோ வாங்கிவிட்டால், எனது வேலையை விட்டுவிட்டு சீரியல் கில்லர் (கவனிக்கவும்: கிஸ்ஸர் அல்ல) ஆகிவிடலாம் என்ற யோசனையில் இருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? :-)

    ReplyDelete
  13. நண்பர் கருந்தேள், நீங்கள் சீரியர் கில்லராக நான் விடப்போவதில்லை :)) சுறா எனும் காவியத்திற்கு நான் அள்ளி வழங்கிய நட்சத்திரங்களை நீங்கள் மறந்தது ஏனோ :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  14. அன்பு காதலரே,

    வெகு நாள் கழித்து உங்கள் தளத்தில் ஒரு பட விமர்சனத்தை முழுவதும் படிக்கும் வாய்ப்பு இன்று தான் கிட்டியது. சமீபத்தில் ரசித்த ஆங்கில படங்களில் ஒன்றாக அது இருந்து விட்டது இன்னும் மகிழ்ச்சி.

    127 மணி நேரம் படத்தை உண்மையிலேயே லயித்து பார்க்க ஏதுவாக திரைக்கதை அமைந்திருந்தது என்பது என் எண்ணமும் கூட. அப்பாறையில் சிக்கி தவிக்கும் அக்கட்ங்களில்
    அவன் வாழ்நாளில் தான் உதாசீனபடுத்திய பல விஷயங்கள் மீது நினைவலைகள் எழுந்து,
    குற்ற உணர்ச்சியை நெஞ்சில் நிரப்பும் அக்கட்ங்கள் நன்றாகவே உருவாக்கபட்டிருந்தன. ஆனாலும், அதை அதிகமாக காட்டுகிறேன் பேர்வழி என்று தொடர்ந்து காட்சிகளை அடுக்கி இருப்பது அலுப்பையும் சேர்த்து விடுகிறது.

    நடு நடுவே, சில ஸ்லாப்ஸ்டிக் காமடிகள் அருமையாக கலந்திருந்தது, கதையின் சீரியஸ்
    ஓட்டத்தை சற்றே நிதானமாக கிரகிக்க ஒரு நல்ல விடயமாக தெரிந்தது. அந்த சைனா மல்டி
    கத்தி உபகரணத்தை பற்றிய கமெண்ட் ஏ1. கூடவே தன்னுடைய நிலையை தானே நேரடியாக தொலைகாட்சியில் நேர்காணும் அந்த கட்டங்களில், நடிகரின் பல்முறை நடிப்பு தேர்வு அட்டகாசமாக வெளிபட்டிருக்கிறது. ஸ்பைடர்மேன் படத்தில் க்ரீன் கோப்ளின் என்ற கதாபாத்திரத்தில் ஸ்டீரியோடைப் நடிப்பை வெளிபடுத்தியவரா இவர், என்று பிரமிக்க செய்கிறார், ஜேம்ஸ் ப்ரான்கோ. நபருக்கு வளமையான எதிர்காலம் ஹாலிவுட்டில் நிச்சயம் என்பதில் ஐயமில்லை.

    ரகுமானின் இசை ஏனோ சற்று தொத்தலாகவே படம் முழுவதும் இருப்பதை நானும் உணர்ந்தேன். நீங்கள் கூறியபடி உற்சாக காட்சிகளில் பீறிட்டு அட்டகாசமாக உயரும் இசையோட்டம், மனதை வருட வேண்டிய தருணங்களில், திருவிழாவில் காணாமல் போன ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார் ரகுமான். சற்று அதிகமாக மெனக்கெட்டு சொதப்பி விட்டது போலவே தெரிகிறது.

    ஸ்லம்டாக் மில்லியனர் டானி போயிலின் மற்ற படங்களின் மீது இந்திய ரசிகர்களின் பார்வையை ஒட்டு மொத்தமாக திருப்பி விட்டிருக்கும் என்றாலும், அவர்கள் எதிர்பார்த்த ஒரு கதை இப்படத்தில் இல்லாமல் போனது தான் ஒருவேளை இந்தியாவில் இதன் மந்தக நடைக்கு அர்த்தமாக இருக்கலாம். இந்திய ரசிகர்களுக்கு எப்போதுமே தங்கள் நிலையுடன் ஒட்டிய கதைகளம் மட்டுமே மிகவும் பிடிக்கும், இதில் அவர்கள் நொந்து என்ன பயன்.

    ஒவ்வொருவருக்கும் அவர்கள் ரசனையை பின்பற்றும் அதிகாரம் உண்டு என்பதால், அதை எள்ளி நகையாட மனம் ஒப்பவில்லை.

    127 ஹவர்ஸ், சிறந்த படம் என்ற அடைமொழி கிடைக்க பெறெவில்லையென்றாலும், நல்லதொரு முயற்சி என்பதில் சந்தேகமில்லை. டேனி போயலனி அடுத்து எந்நாவலும் தழுவாத ஒரு படத்தை எடுத்து தன்னை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு சென்று விட்டார் என்பது பட்டவர்த்தனம்.

    2 ஸ்டார்கள் சற்றே குறைவோ....? என் கணிப்பில் 3 கட்டாயம் கொடுக்கலாம். உள்ளம்புரிந்த விமர்சனம், தொடருங்கள் உங்கள் அதிர்வேட்டை.

    ReplyDelete
  15. அன்பு ரஃபிக், வெகுநாட்களிற்கு பின்பாக உங்கள் வரிகளை இங்கு காண்பதில் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது.சிறைப்படுகையில்தான் ஏரோன் மனதில் அவன் உதாசீனம் விரிய ஆரம்பிக்கிறது. அதுவரையில் அவன் சுதந்திரனாகவே உணர்கிறான், பிறரை அவன் புறக்கணித்தது அவனிற்கு குற்றவுணர்வை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. அவன் வார இறுதி, அவன் ஓய்வு என்பதாக தன்னலம் கொண்டவனாகவே அவன் என்னால் காணப்படுகிறான். எனவே அவர் வருந்தும் நிலைகளில் அதிக பாதிப்பை அக்காட்சிகள் என்னிடம் உருவாக்கவில்லை. நீங்கள் கூறியபடியே அவரவர் ரசனைக்கேற்ப காட்சிகள் தாக்கத்தை உருவாக்கியபடியே இருக்கும். இரு ஸ்டார்களிற்கு மேல் தர மனம் ஒப்பவில்லை :) தங்கள் விரிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete