Wednesday, September 15, 2010

சிறையறை - 211


ஸ்பெயின் நாட்டு சிறையொன்றில், சிறைக்காவலனாக புதிய வேலையொன்றை தேடிக்கொள்ளும் Juan, தான் பணியை பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டிய நாளிற்கு ஒரு நாள் முன்பாக அவன் பணியாற்றவிருக்கும் சிறையை ஆவல்மிகுதியால் பார்வையிட வருகிறான்.

துரதிர்ஷ்டவசமாக, Malamadre எனும் சிறைக்கைதியின் தலைமையில், கைதிகளின் உக்கிரமான போராட்டம் ஒன்று சிறையில் அன்று வெடிக்கிறது. கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் பகுதியின் முழுக்கட்டுப்பாடும் சிறைக்கைதிகளின் பக்கம் வந்துவிட, அப்பகுதியினுள் அகப்பட்டுக்கொண்ட ஹுவான், தான் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு கைதிபோல், போராடும் சிறைக்கைதிகளிடம் நடிக்க ஆரம்பிக்கிறான்.

நீதி அமைப்புக்களின் தீர்ப்பின் பின்பாக சிறையில் தம் வாழ்க்கையை கழிப்பதற்காக அடைக்கப்படும் மனிதர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து பார்வையாளர்களின் கவனத்தை திருப்ப முற்படுகிறது Celda 211 எனப்படும் இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம். பொதுவாக சிறையில் வாடும் விஐபி அல்லாத கைதிகளின் போராட்டங்கள் பற்றி அதிகம் வெளியே தெரிய வருவதில்லை. அப்படியே வெளியே வந்தாலும் சிறிய, முக்கியத்துவம் இழந்த செய்திகளாக அவை அமுக்கப்பட்டு போகின்றன. அக்கலகங்கள் ஏன் உருவாகின்றன என்ற கேள்விகளும் அதிக எண்ணிக்கையில் உரக்க எழுப்பப்படுவதில்லை. [ நான்கூட இது குறித்து சிந்தித்ததில்லை]

தமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளிற்கு எதிராக, வேறுவழிகளற்ற நிலையில் வன்முறைப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் சிறைக்கைதிகளின் மத்தியில் ஒரு புதிய சிறைக்காவலனை அங்கம் கொள்ளச் செய்வதன் வழியாக, அவன் பார்வை மூலம் அக்கைதிகளின் கோரிக்கைகளில் இருக்ககூடிய நியாயங்களையும், சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களும் மனிதர்களுமே என்பதையும் உணர்த்த முயல்கிறது திரைப்படம்.

சிறைக்கைதிகளின் தற்கொலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித தன்மையற்ற வன்முறைகள், தண்டனை முறைகள், கைதிகளின் நியாயமான கோரிக்கைகளிற்கு காது கொடுக்காது சிறை அதிகாரிகளிற்கு சாதகமாக செயற்படும் நீதி அமைப்பு என்பவற்றினை திரைக்கதையில் விபரித்து தமது வாழ்வை சிறையில் நொருக்கும் மனிதர்கள் குறித்த ஒரு பார்வையை திரைப்படம் வழங்குகிறது.

சிறையில் இடம்பெறும் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளிற்கு தமது சுயலாபத்திற்காக இடம்தரும் சிறை அதிகாரம் குறித்த மெலிதான விமர்சனமும் திரைப்படத்தில் உண்டு. இவ்வகையான கண்மூடல்களால் மட்டுமே சிறையை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் எனச் செயற்படும் சிறை அதிகாரிகளின் கையாலாகத்தனத்தை இது வெட்டவெளிச்சமாக்குகிறது.

Celda-211 சிறைக்கைதிகளின் போராட்டத்தை அடக்க, கட்டுக்குள் கொண்டுவர நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகள், ரகசிய பேரங்கள், பொய்கள், துரோகங்கள் என்பன எந்த ஒரு அதிகாரமும் தமெக்கெதிரான போராட்டங்களை எதிர்கொள்ளும் நரித்தனமான முறைகளிலிருந்து விலகிச் சென்றுவிடவில்லை. சிறை உடைப்புக்கள்போல் சிறையில் நடைபெறும் கலகங்களும் அதன் பின்பான உண்மைகளும் பரபரப்பாக ஊடகப்படுத்தபடுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திரைப்படத்திலும்கூட ஊடகங்கள் உண்மை நிலையை அறிய திணற வேண்டியிருப்பது யாதார்த்த நிலையை சற்று தொட்டுப் பார்க்கிறது. கைதியோ, காவலனோ அதிகாரத்தின் வெற்றி என்பதற்கு முன்பாக எல்லா உயிர்களும் துச்சமே என்பதை கதை தெளிவாக்குகிறது.

கைதிகளோடு இணைந்து போராடுபவனாகவும், சிறை அதிகாரிகளிற்கு போராட்டம் குறித்த தகவல்களை ரகசியமாக வழங்குபவனாகவும் இருக்கும் ஹுவான், தொடரும் அசம்பாவிதங்களினால் கைதிகளின் போராடத்தை தானே முன்னின்று நடத்துபவனாக உருவெடுக்கிறான். ஆனால் அவன் அவ்வாறு மாறுவதற்கு வலி நிறைந்த சம்பவம் ஒன்று காரணமாகிவிடுகிறது. தன்னால் உணரப்படும் வலிகள் மட்டும்தான் இன்னொருவனின் நியாயமான கோரிக்கை குறித்து ஒருவனை சிந்திக்கவைக்க முயலும் என்பது வேதனையான ஒன்றுதான். ஆனால் சிறை அதிகாரிகளின் பக்கம் இருந்து கைதிகளின் பக்கம் வரும் வலிமிகுந்த ஹூவான் பாத்திரத்தை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் முன்பின் அறியாத ஹுவானின் மீது சிறைக்கைதி மலாமாத்ரே கொள்ளும் நம்பிக்கை நம்பக்கூடியதாக இல்லை.

ஆரம்பத்தில் சற்று வேகமாக செல்வது போல் பிரம்மையை தந்தாலும் சிறப்பான ஒரு த்ரில்லராக திகழ்ந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் வீர்யம் இழந்த திருப்பங்களாலும் இயக்குனர் Daniel Monzon ன், விறுவிறுப்பை படிப்படியாக இழக்கும் கதைசொல்லலாலும் தனது உக்கிரத்தை இழந்து நிற்கிறது. பிரதான பாத்திரங்களான ஹூவான், மலாமாத்ரே பாத்திரங்களை ஏற்றிருக்கும் கலைஞர்களான Alberto Ammann மற்றும் Luis Tosar ஆகியோரின் நடிப்பு பார்வையாளனை தூரத்தில் நிற்க வைக்கிறது. உணர்ச்சிகரமான காட்சிகளில் தட்டுப்பாடாக இருக்கும் உணர்ச்சிகள், படத்தின் வேகத்திற்கு தடையாகும் தேவையற்ற, அர்த்தம் குறைந்த பிளாஷ்பேக்குகள் என்பன எல்லாம் சேர்ந்து ஸ்பெயின் நாட்டின் 8 தேசிய விருதுகளை[Goya] வென்ற படைப்பா இது என்ற ஐயத்தை மனதில் பலமாக எழுப்புகின்றன.

சிறை அறைகளின் சுவர்களில் மனிதர்களால் கிறுக்கப்பட்டிருக்கும் சில கிறுக்கல்கள் வெறும் கிறுக்கல்கள் அல்ல, வலிநிறைந்த, சிதைந்து போன மனித வாழ்க்கை சரிதங்களின் உயில்கள் அவை. சிறையறை 211ன் சுவரிலும் உயில்கள் வாழ்கின்றன. (**)

ட்ரெயிலர்

19 comments:

  1. சில சிறைப் படங்கள் நன்றாக இருக்கும் (குறிப்பாக தப்பிக்கும் வகை படங்கள்), சில கொஞ்சம் விறுவிறுப்பில்லாமலே இருக்கின்றன.

    ReplyDelete
  2. ஜஸ்ட்டு மிஸ்ஸு! மீ த செகண்டு!

    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. என்னைப் பொறுத்த வரையில் நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த சிறைப்படம் என்று நான் கருதுவது ஸ்டீவ் மெக் குவீன், டஸ்டின் ஹாஃப்மேன் இனைந்து மிரட்டும் PAPPILON படமேயாகும்!

    இது நாவல் வடிவில் வந்து பின்னர் திரைப்படமாகப் புகழ்பெற்ற உண்மைக்கதையாகும்! தமிழில் குமுதம் வார இதழில் தொடர்கதையாக வந்தது!

    ப்ரியதர்ஷனின் தேசிய விருது பெற்ற சிறைச்சாலை திரைப்படம் இப்படத்தின்/நாவலின்/உண்மைச் சம்பவத்தின் “தழுவலே”யாகும்!

    பால் நியூமேன் நடிப்பில் வந்த COOL HAND LUKEம் எனக்கு மிகவும் பிடிக்கும்! ஆனால் ஏனோ எல்லோரும் போற்றும் SHAWSHANK REDEMPTION படம் எனக்கு படு மொக்கையாகவே படுகிறது! ஒரு வேளை கிங் விஸ்வா சிபாரிசு என்பதாலோ?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. ஜஸ்ட்டு மிஸ்ஸு! மீ த 3rd
    .

    ReplyDelete
  5. சிறை வெளியே இருந்து பார்க்கும்போது அச்சப்படுத்துகிறது. உள்ளே போன பின்னால் நாம் உணர்வது வேறு.நான் சிறை சென்றபோது சாப்பாடு ஒன்றுதான் என்னை பயமுறுத்தியது.உங்கள் பதிவு என் மூன்று நாள் ஜெயில் வாசம் நினைவுபடுத்தியது.

    ReplyDelete
  6. //சிறை அறைகளின் சுவர்களில் மனிதர்களால் கிறுக்கப்பட்டிருக்கும் சில கிறுக்கல்கள் வெறும் கிறுக்கல்கள் அல்ல, வலிநிறைந்த, சிதைந்து போன மனித வாழ்க்கை சரிதங்களின் உயில்கள் அவை. சிறையறை 211ன் சுவரிலும் உயில்கள் வாழ்கின்றன.//

    கலக்கல். :)

    சிறையில் சிக்கும் மனிதர்கள்,அலையில் சிக்கும் துரும்பைப் போன்றவர்கள்.
    எப்போது மிதப்போம்,எப்போது மூழ்குவோம் என்று தெரியாத அவல நிலையோடு சேர்த்து, பிறரின் கண்களுக்கு தெரியாமேலே போகும் அவலத்தையும் இவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

    ReplyDelete
  7. இவ்வளவு நன்றாக எழுதிவிட்டு, ரெண்டே ரெண்டு ஸ்டார்கள் கொடுத்த காதலரை வன்மையாகக் கண்டிக்கும் பொருட்டு, பிரானா படத்தை வரிசையாக பத்து முறை அவர் பார்க்க வேண்டுமாக தீர்ப்பளிக்கிறேன் ;-)

    ReplyDelete
  8. எனக்குப் பொதுவாக சிறைப்படங்கள் என்றால் உயிர்.. ஆனால் அங்கே கிடைக்காது தயிர்.. வயலில் இருக்குது பயிர்.. சலூனுக்குப் போனா, அங்க கிடைக்கும் ..யிர் ;-) ...

    ReplyDelete
  9. /சிதைந்து போன மனித வாழ்க்கை சரிதங்களின் உயில்கள் அவை./
    -superb!

    அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  10. காதலரே,
    படம் இப்போதான் ரிலீஸ் ஆகுதா என்ன? இந்த படத்தோட டிவிடி எங்கிட்ட ரொம்ப மாசமா இருக்கு. வாங்கின கையோட உடனடியாக அதனோட டிரைலர பார்த்துடுவேன். ஆனால் இந்த படத்தோட டிவிடில இருந்த டிரைலர் ரொம்பவும் கவரவில்லை. ஆகையால் இன்னமும் பார்காத படங்களின் போட்டியில் இந்த டிவிடி இப்போ இருக்கு.

    // ஆனால் ஏனோ எல்லோரும் போற்றும் SHAWSHANK REDEMPTION படம் எனக்கு படு மொக்கையாகவே படுகிறது! ஒரு வேளை கிங் விஸ்வா சிபாரிசு என்பதாலோ?!!//

    வாழ்க வளமுடன்.

    //பிரானா படத்தை வரிசையாக பத்து முறை அவர் பார்க்க வேண்டுமாக தீர்ப்பளிக்கிறேன்// அது எப்புடிங்க தண்டனையாகும்? அவரு ஜாலியா டூ பீஸ் காட்சிகளை ரசிப்பாரு. ஒரு காலாத்தில (லீவிங் லாஸ் வேகாஸ் காலத்தில) சூப்பர் பிகரா இருந்த எலிசபெத் ஷூவையும் இப்போ ரசிப்பாரு.

    //எனக்குப் பொதுவாக சிறைப்படங்கள் என்றால் உயிர்.. ஆனால் அங்கே கிடைக்காது தயிர்.. வயலில் இருக்குது பயிர்.. சலூனுக்குப் போனா, அங்க கிடைக்கும் ..யிர் ;//

    இப்படி டி.ஆரை பற்றி கடுப்பில் பேசும் உங்களுக்கு இனிமே கிடைக்காது செல்போன் டவர்.

    ReplyDelete
  11. நண்பர் எஸ். கே, தப்பிப்பது என்றாலே விறுவிறுப்புக்கு ஏது பஞ்சம், அதுவும் அழகிய பெண்களின் கணவன்மார்களிடமிருந்து தப்பிப்பது கூடுதல் விறுவிறுப்பு :) கருத்துக்களிற்கு நன்றி.

    தலைவர் அவர்களே பப்பியோன் திரைப்படம் குறித்து நண்பர் கருந்தேள் அவர்களும் அருமையான பதிவொன்றை வழங்கியிருக்கிறார். அது நல்ல படம் என்பதில் என்ன ஐயம். ஆனால் ஷாஷான்க்கூட அருமையான படம்தான். இரண்டுமே மனித விடுதலையைக் குறித்துதானே பேசுகின்றன. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. விஸ்வா டிவிடி செட் அனுப்பினாரா இல்லையா :)

    நண்பர் சிபி, நன்றி.

    நண்பர் உலக சினிமா ரசிகன், எல்லா சூழல்களும் குறித்த கற்பிதங்களும் சிதைவது அவற்றில் நாம் வாழ்ந்து பார்க்கும் கணத்தில்தான் அல்லவா. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. சிறை குறித்த அச்சம் எனக்குண்டு :)

    நண்பர் இலுமினாட்டி, // சிறையில் சிக்கும் மனிதர்கள்,அலையில் சிக்கும் துரும்பைப் போன்றவர்கள்.
    எப்போது மிதப்போம்,எப்போது மூழ்குவோம் என்று தெரியாத அவல நிலையோடு சேர்த்து, பிறரின் கண்களுக்கு தெரியாமேலே போகும் அவலத்தையும் இவர்கள் சந்திக்க நேரிடுகிறது// திருமணமானவர்களை மையமாக வைத்து இது எழுதப்படவில்லையே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி :)

    நண்பர் கருந்தேள், உங்களை தனியாக ஒரு சிறப்பு கன்னிகள் சிறையில் தயிர் பானையுடன் சிறை வைக்க பகவானை பிரார்திக்கிறேன். பிரானா ஒரு முறையுடன் சலித்து விட்டது... ஆமா :)

    நண்பர் வேல்ஜி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, சென்ற மாதம்தான் இங்கு திரையரங்குகளில் வெளியாகியது. எலிசபெத் சூவிற்கு அதிக வயதாகிவிட்டது இனி ரசிக்க முடியாது[ ஆடைகள் அணிந்த நிலையில்]:) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. //திருமணமானவர்களை மையமாக வைத்து இது எழுதப்படவில்லையே. //

    அட, சிறை வாழ்க்கையும்,மண வாழ்க்கையும் வேறு வேறா?தகவலுக்கு நன்றி. அப்படியே எது மிகக் கொடுமையானது என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள். ;)

    ReplyDelete
  13. ரொம்ப டீட்டெய்லா இருக்கு உங்க விமர்சனம்.இன்னும் நல்ல ஸ்டில்கள் போட்டிருக்கலாம்.உங்கள் எழுத்து நடை அருமை

    ReplyDelete
  14. //என்னைப் பொறுத்த வரையில் நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த சிறைப்படம் என்று நான் கருதுவது ஸ்டீவ் மெக் குவீன், டஸ்டின் ஹாஃப்மேன் இனைந்து மிரட்டும் PAPPILON படமேயாகும்//

    அப்படியே வழிமொழிகிறேன். இதோட எனக்கு பிடிச்ச மற்ற படங்கள் Escape From Alcatraz (Eastwood), The Great Escape (அதே ஸ்டீவ் மெக்குவீன்), The Shawshank Redemption. இதுல Escape From Alcatrazர்க்கும் The Shawshank Redemptionனுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எனக்குப்பட்டது.

    ReplyDelete
  15. நண்பர் இலுமினாட்டி, சிறைக்கு சென்று வந்தபின் அதனைச் சொல்கிறேன் :)

    நண்பர் சி.பி. செந்தில்குமார், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  16. ஒரேடியா குழப்பிட்டீங்களே நண்பரே... படம் நல்லா இருக்கா, இல்லையா? எதுக்கும் இருக்கட்டும்னு டவுன்லோட் போட்டாச்சு... :)

    ReplyDelete
  17. நண்பர் பேபி ஆனந்தன், ஒரு படைப்பை நாம் வெவ்வேறு உணர்வுகளுடனேயே உள்ளெடுக்கிறோம் எனவே நீங்களே பார்த்து இப்படத்தை குறித்து தீர்மானியுங்கள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு காதலரே. எங்கிட்டிருந்துதான் புடிப்பீகளோ நல்ல நல்ல படமா.. :)

    ReplyDelete
  19. நண்பர் மரா, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete