Wednesday, October 14, 2009

ஒன்று, இரண்டு...XIII- மூன்று வெள்ளிக் கடிகாரங்கள்


trois1 கோஸ்டா வெர்டின் இருள் அந்த வீட்டைச் சலனமின்றி சூழ்ந்து கொண்டிருந்தது. வீட்டின் வாராந்தாவில் சிவப்பு ஒயினை அருந்தியவாறே ஷோன் முல்வே, சூழ்ந்து கொண்டிருக்கும் இருளில் தன் பார்வையை ஆழ்த்துகிறான். சில கணங்களிற்குள் நிகழ்காலத்திற்கு திரும்பும் அவன், கதிரையொன்றில் சாய்ந்திருக்கும், தன் கடந்த காலத்தை மறந்து தொலைத்த ஏஜண்ட் XIII க்கு தன் குடும்ப வரலாற்றைக் கூற ஆரம்பிக்கிறான்.

1898 - லியாம் மக்லேன், ஜோர்ஜ் முல்வே, ஜாக் கலகான் ஆகிய மூன்று இளைஞர்களும் தங்கள் தாய் மண்ணான அயர்லாந்தை நீங்கி அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள். சந்தைகளில் உருளைக்கிழங்கு விற்று தங்கள் ஜீவனத்தை நடத்தும் அவர்களிற்கு ஜெனி எனும் இளம் பெண்ணின் வழியாக அவள் தந்தையான ஹென்ரி டாடி ஒ கெஃபின் அறிமுகம் கிடைக்கிறது.

டாடி ஒ கெஃபிற்கு சொந்தமாக ஒர் கயலான் கடை இருக்கிறது. அக்கடையின் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வருவதால் மேலும் பல கிளைகளை ஆரம்பிக்க விரும்புகிறான் டாடி. இக்காரணத்தினால் அந்த மூன்று அயர்லாந்து இளைஞர்களையும் தன்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறான் அவன்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடைகளின் வியாபாரமும் சூடு பிடிக்க, பணம் கொட்டுகிறது. மூன்று இளைஞர்களையும் டாடிக்கும் அவன் குடும்பத்திற்கும் நன்கு பிடித்துப் போகவே தன் மூன்று மகள்களையும் அந்த அயர்லாந்து இளைஞர்களிற்கே மணம் முடித்து வைக்கிறான் டாடி. திருமணப் பரிசாக தன் மாப்பிள்ளைகளிற்கு, அவர்களதும் அவர்கள்தம் மனைவியரினதும் பெயர் பொறித்த மூன்று வெள்ளிக் கடிகாரங்களையும் வழங்குகிறான்.

வாழ்க்கை, அமைதியான அலைகள் தழுவ தன் படகை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதுவே நிரந்தரமில்லை அல்லவா. மாஃபியா வடிவில் டாடி ஒகெஃபின் வாழ்வில் நீந்த ஆரம்பிக்கிறது சிக்கல். டான் விட்டால் எனும் மாஃபியா தலைவன் ஒருவனின் மிரட்டல் பேரத்திற்கு அடி பணிய மறுக்கிறான் டாடி. தொடரும் மோதல்களின் விளைவாக மாஃபியா குண்டர்கள் டாடியின் கடைக்கு தீ வைக்கிறார்கள். இந்த தீ விபத்தில் டாடியும் அவன் மனைவியும் உயிரிழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அன்றிரவு தன் தாத்தா வீட்டில் தங்க வந்திருந்த ஜாக் கலகானின் நான்கு வயது மகன் டாமும் அவர்கள் கூடவே கருகிப் போகிறான்.

trois2 தங்கள் குடும்ப பெருமையை நிலைநாட்டவும், வஞ்சம் எனும் அனலை அணைக்கவும் விரும்பும் மூன்று நண்பர்களும், மாஃபியா தலைவன் டான் விட்டாலை ஒர் விடுதியில் வைத்து தீர்த்துக் கட்டுகிறார்கள். கொலை நடந்ததைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் பல இருந்ததால், நிலைமை மறக்கடிக்கப்பட்ட பின்னர் திரும்பி வருவதாக தங்கள் மனைவிகளிடம் வாக்களித்து விட்டு அமெரிக்காவை விட்டு அந்த மூன்று நண்பர்களும் நீங்கிச் செல்கிறார்கள். அவர்கள் மனைவியர் விழிகளில் மீண்டும் அவர்கள் உயிர் பெறவேயில்லை.

மாஃபியா தலைவன் டான் விட்டாலின் மரணத்தின் பின் அவன் மருமகன் பஸ்குவால் ஜியோர்டினோ, டாடியின் மகள்களிடம் மிரட்டல் பேரம் பேசி, எந்தவித குழப்பங்களுமின்றி அவர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர பாதுகாப்பு வழங்குகிறான்.

1929ல் அமெரிக்கா மாபெரும் பொருளாதார சரிவை சந்திக்கிறது. வியாபாரங்கள் இழுத்து மூடப்படுகின்றன. டாடி ஒ கெஃபின் மகள்களிடம் இந்நிலையைப் பயன்படுத்தி புதிய பேரம் பேசுகிறான் பஸ்குவால். அப்பேரத்தின் படி பஸ்குவாலிற்கு முதலீட்டில் பங்கு கிடைக்க, பஸ்குவாலின் இளைய சகோதரனான ஜியம்பட்டிஸ்டா ஜியோர்டினோவிற்கு ஜாக் கலகானின் மகளான டெபோரா மனைவியாக வாய்க்கிறாள்.

இதன் பின் வரும் வருடங்களில் ஐரோப்பாவில் யுத்தம் வெடிக்கிறது. ஜோர்ஜ் முல்வேயின் மகனான பிரான்சிஸ்ஸும், லியாம் மக்லேனின் மகனான டாமும் அமெரிக்க நாட்டிற்காக யுத்தத்தில் பங்கு கொள்ள கிளம்பிச் செல்கிறார்கள். யுத்தத்தின் போது ஏற்படும் விமான விபத்தொன்றின் பின், ஜப்பானிய படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு குவாய் நதியில் பாலம் கட்டும் சிரமமான பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியில் இறந்து போனவர்களில் தானும் ஒருவனாகக் கலந்து விடுகிறான் டாம் மக்லேன்.

1945ல் பிரித்தானிய துருப்புக்களினால் ஜப்பானியர்களிடமிருந்து பிரான்சிஸ் மீட்கப்பட்டு தன் நாட்டிற்கு திரும்பி வருகிறான். நாடு திரும்பிய அவனை துக்ககரமான செய்திகள் trois3 தழுவி வரவேற்கின்றன. ஒன்று அவன் மனைவியின் மரணம். மற்றது மாஃபியாக்களின் சதியில் குடும்ப வியாபாரம் பறி போன விபரம்.

வேறு வழி ஏதுமற்ற நிலையில் பொலிஸ் வேலைக்கு சேர்ந்து கொள்கிறான் பிரான்சிஸ். தங்கள் குடும்பம் வாழ்வதற்கு புதிய வீடொன்றை வாங்குகிறான். விதவையாகவிருக்கும் டாம் மக்லேனின் மனைவியை மறுமணம் செய்து கொள்கிறான். சில வருடங்களின் பின் டாமின் ஒரே மகனான ஜோனதன் பத்திரிகைத் துறைப் படிப்பிற்காக மான்ஹாட்டன் சென்று விடுகிறான். ஜோனதனின் பிரிவு பிரான்சிஸின் மகனான ஷோனை தனிமையால் மெல்ல மெல்ல வருத்துகிறது.

ஷோன் பொறுப்பற்று அலையத் தொடங்குகிறான். அவன் சகோதரி மார்கரெத் செவிலிப் படிப்பில் சிறந்து விளங்குகிறாள். இதே வேளையில் தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் உயிரற்ற வாழ்வின் சலிப்பால், மெல்ல மெல்ல குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான் பிரான்சிஸ் முல்வே. இதனால் அவன் வேலை பறிபோக, பிரான்சிஸ் தற்கொலை செய்து கொள்கிறான்.

பிரான்சிஸ் முல்வே இறந்து ஒரு வாரத்தின் பின் டாம் மக்லேனின் பெயரிற்கு கோஸ்டா வெர்ட்டிலிருந்து ஒர் தடித்த கடிதம் வருகிறது. ஷோன் அதனைப் பெற்றுக் கொள்கிறான். தபால் உறையில் அனுப்பியவரின் பெயர் லியாம் மக்லேன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இந்த தருணத்தில் ராணுவ வீரன் ஒருவனின் குறுக்கீட்டால் ஏஜண்ட் XIIIக்கு தான் கூறிக் கொண்டிருந்த கதையை பாதியில் நிறுத்துகிறான் ஷோன். அப்போது விடியல் தன் முதல் கவிதைக் கீற்றை எழுத ஆரம்பித்திருந்தது. கோஸ்டா வெர்டின் புதிய ஜனாதிபதியான மரியாவின் அழைப்பை ஏற்று அவளைச் சந்திப்பதற்காக உடனே கிளம்புகிறார்கள் ஷோனும், ஏஜண்ட் XIIIம்.

trois4 ஜனாதிபதி மரியாவின் அலுவலகத்தை அடையும் அவர்கள் இருவரிற்கும், கோஸ்டா வெர்டின் புரட்சியின் போது நாட்டின் மேற்குப் பகுதிக்கு தப்பி ஓடிய ராணுவ அதிகாரி பெரல்டா, முன்னைய ஜனாதிபதி ஒர்டிஸிக்கு விசுவாசமான துருப்புக்களுடன் இணைந்து, கடல் மற்றும் தரை மார்க்கமாக PEURTO PILAR நகரை தாக்கப் போவதையும், இரு வழியில் நடக்கப் போகும் இந்தத் தாக்குதலை தங்களால் சாமாளிக்க முடியாது என்பதையும் அவர்களிற்கு விளக்குகிறான் XIIIன் முன்னாள் தோழரான பாதிரியார் ஜெசெண்டோ.

இந்த தாக்குதலை தடுக்க ஒரே வழி பெரல்டாவின் தாங்கிகள் வரவிருக்கும் பாதையொன்றில் இருக்கும் பாலமொன்றை தகர்த்து நிர்மூலமாக்குவதே என்பதையும், அதற்கு XIII ஐ விட்டால் இந்தக் கதையில் வேறு ஆளே கிடையாது என்பதையும் ஜெசெண்டோ எடுத்துக் கூறுகிறான்.

பாதிரியார், ஷோன், மற்றும் மூன்று ராணுவ வீரர்களுடன் பாலத்தை தகர்க்க கிளம்புகிறான் XIII. அழகிய ஜனாதிபதி மரியா, உயிருடன் திரும்பி வா என் அன்பே என XIIIடம் தன் இதயத்தின் குரலால் கேட்டுக் கொள்கிறாள். சீறிக் கொண்டு ட்ரக் கிளம்ப, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தன் குடும்பக் கதையை தொடர ஆரம்பிக்கிறான் ஷோன்….

லியாம் மக்லேனின் கடிதங்கள் கொண்டு வந்த தகவல்கள் என்ன? மூன்று வெள்ளிக் கடிகாரங்களில் ஒளிந்திருக்கும் ரகசியம்தான் என்ன? பாலத்தை தகர்த்து கொஸ்டா வெர்ட்டை சர்வாதிகாரிகள் பிடியிலிருந்த்து காப்பாற்றினானா XIII?

trois5 Trois Montres d’Argent எனப்படும் XIII காமிக்ஸ் தொடரின் பதினோராவது ஆல்பம், ஏஜண்ட் XIIIன் பரம்பரை வரலாற்றைக் கூறுகிறது. ஆல்பத்தின் இறுதிப் பக்கங்களின் அருகாமை வரை ஓடும் குடும்பக் கதையின் ஊடு, கோஸ்டா வெர்டில் சர்வதிகார ஆட்சி மீண்டும் உருவாகிவிடக் கூடிய அபாயத்தை ஏஜண்ட் XIII முறியடிக்க முயல்வதும், கூடவே ஒர் காதலின் சோகமான முடிவும் கூறப்படுகிறது.

XIIIன் தந்தை என அறியப்படும் ஷோன் முல்வே, தன் பரம்பரையின் வரலாற்றினை XIIIடம் கூறுகிறார். XIIIன் பிறப்பு ரகசியம் இவ்வால்பத்தில் உறுதியாக்கப்படுகிறது. மாஃபியா தலைவன் டான் விட்டாலைக் கொன்றபின் தப்பி ஓடிய மூன்று நண்பர்களின் கதை, ஷோன் தன் தந்தை பிரான்சிஸ் இறந்தபின் பெற்றுக் கொள்ளும் கடிதம் வழி கூறப்படுகிறது.

மெக்ஸிக்கோவிற்கு சென்ற மூன்று நண்பர்களினதும் சோகமான சாகசங்கள் சிறப்பாக இருக்கிறது. மூன்று வெள்ளிக் கடிகாரங்களில் மர்மம் ஒளிந்து கொள்வது இந்தப் பகுதியில்தான். ஷோன், கோஸ்டா வெர்டில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான ஒரு காரணமும் வெள்ளிக் கடிகாரங்களின் மர்மத்திலேயே அடங்கியுள்ளது.

பரம்பரை வரலாறு ஒன்றினுள், காதல், அதிரடி ஆக்‌ஷன், மர்மம் என்பவற்றை கலந்து அலுக்காத வகையில் கதையை தந்துள்ளார் வான் ஹாம். சில தருணங்களில் அவரின் வசனங்கள் மனதை நெகிழச் செய்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பின்பு சூடு பிடிக்கிறது. இறுதிப் பக்கங்கள் திக் திக் திக் ரகம். வான்சின் ஓவியங்கள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக மழைபெய்யும் தருணங்களில் காட்டிற்குள் நடைபெறும் காட்சிகள் அருமை. XIIIன் பதினோராவது ஆல்பம் அதன் ரசிகர்களை அதிகம் ஏமாற்றாத ஆல்பம். (***)

நண்பர்களிற்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்…

16 comments:

  1. கனவுகளின் காதலரே,

    லியாம் மக்லேனின் கடிதம் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்! அதனைப் படித்த எவரும் ஒரு கணம் அதிர்ந்து போகாமல் இருக்க முடியாது!

    அதிலும் அவர் வாழ்க்கையின் எல்லைக்கே சென்று பணமில்லை, வாழ்வில்லை, ஒன்றுமில்லை என்று கூறும் கட்டம் மனதை பிசையும்!

    நான்கு தலைமுறை வரலாற்றை ஒரு ஆல்பத்தினுள் அடக்கிய வான் ஹாம்மெக்கும் அதியற்புத ஓவியங்கள் மூலம் நம்மை பரவசப் படுத்திய வான்சுக்கும் இத்தருணத்தில் நாம் நன்றி கூற கடமை பட்டிருக்கிறோம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. தீபாவளிக்கு ஜம்போ ஸ்பெஷலை எதிர்பார்த்து காத்திருக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் உங்கள் பதிவை படித்த பிறகு அவர்களது ஆவல் இன்னும் கூடுமே தவிர குறையாது!

    சரியான நேரத்தில் சஸ்பென்ஸ் வைத்து பதிவை முடித்து விட்டீர்களே?!!

    தை பிறந்தாலாவது XIII-க்கு வழி பிறக்கிறதா என்று பார்ப்போம்!

    அதற்கிடையே தொடர்ந்து மற்ற பாகங்களுக்கும் இது போல் பதிவுகள் இட்டு XIII காய்ச்சல் உச்சத்தில் பரவ வழி வகை செய்யுமாறு தலைமையகம் உம்மை பணிக்கிறது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. நண்பரே,

    சித்திரத் தொடர்களின் வரலாற்றில் மிகச் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது இத்தொடர். வணிக அளவிலும் பெரு வெற்றி அடைந்துள்ளது. அதுவே சாபமும் கூட என எண்ணுகிறேன்.

    இந்த பணம் கறக்கும் தொடரை விடாமல் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றார்கள். இதில் மங்கூஸ் போன்ற கிளைக் கதைகள் நிறைய முளைக்கவே வாய்ப்புள்ளது. அடுத்தது XIII தன் மூலத்தை தேடி அண்டார்ட்டிகாவிற்கு செல்லும் சாகசம் வராமல் இருந்தால் சரி. :)

    மிகச் சிறப்பான பதிவு. மொழி பெயர்ப்பு பக்கங்கள் அற்புதமாக இருந்தன.

    அழகி மரியா மற்றும் ஜோன்ஸ் படங்களை வேண்டுமென்றே போடாமல் விட்டதற்காக என் கண்டனங்களை பதிவு செய்யும் அதே நேரத்தில் தீபாவளி வாழ்த்துகளை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். (சமீபத்தில் ஒரு அரசியல்வாதி பேசிக் கொண்டிருந்ததை கேட்டதிலிருந்து இந்த பாதிப்பு)

    ReplyDelete
  4. long waiting comics.... i am happy to read this fantastic XIII story. I am waiting for read this in tamil version. hope we will get soon. Thanks for this little tamil translation.

    ReplyDelete
  5. அருமையாக விவரமாக எழுதியிருக்கிறீர்கள்.

    லயன் X111 க்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  6. தலைவர் அவர்களே, என் பதிவை விட நீங்கள் லியாம் மக்லேன் பற்றி தந்த பின்னூட்டம் ஒன்று போதும் XIII ஜூரம் பரவ. அந்தக் கடிதம் மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட வேண்டும், ஒர் தகப்பனின் வேதனைகளை சொற்களாக மாற்றி உணரச் செய்யும் அவ்வரிகள் படிப்பவர்களை நெகிழ வைக்கும். கோஸ்டா வேர்ட்டின் விடுதிகளில் கண்ணீருடன் மட்டுமே இரவுகளை கழுவிய மக்லேன் விரைவில் தமிழ் ரசிகர்களையும் கலங்கடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.


    ஜோஸ், பணம் பண்ணாது போனால் இத்தொடர் தொடரவே வாய்ப்பில்லை. XIIIன் வெற்றி காமிக்ஸ் துறையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. விளம்பர உத்திகள், மார்க்கெட்டிங் மயப்படுத்தல் என அது காமிக்ஸ்களைக் கூட பளாபளா ஆக்கிவிட்டது. இம்மாதம் XIII மிஸ்டரி தொடரின் இரண்டாவது ஆல்பமாகிய இரினா வெளியாகிறது. அடுத்த தடவை நிச்சயமாக அழகிகளின் அட்டகாசாமான பக்கங்களைத் தருகிறேன்:) மொழிபெயர்ப்பு குறித்த உங்கள் பாராட்டுக்களிற்கு நன்றி நண்பரே. அரசியல் கூட்டத்தில் ஒர் இளம் பெண்ணை நீங்கள் கண்டால்ஃப் மனோவசிய முறையில் மயக்கி விட்டீர்களாமே இது உண்மையா?

    நண்பர் ரமேஷ், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பின்னோக்கி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. XIII இன் 11 வது பாகத்தை பற்றி எழுதி XIII முழு தமிழ் பதிப்புக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டீர்கள் காதலரே, இதே போல் அனைத்து பாகங்களையும் உங்கள் காதல் நடையில் விமர்சித்தால் படிப்பவர்கள் முன்பதிவி செய்ய அதிக வாய்ப்புண்டு நண்பரே .

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே

    அன்புடன் ,
    லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

    ReplyDelete
  9. காமிக்ஸ் காதலரே வாழ்த்துக்களிற்கு நன்றி நண்பரே.

    லக்கி லிமட், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே, தயங்காது தொடருங்கள் உங்கள் மொழிபெயர்ப்புகளை. வாழ்த்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  10. eventhough i have read this in english, like so many other fans, iam waiting to read it in tamil language.

    wonderful post.

    happy diwali to you & Your family/friends circle.

    ReplyDelete
  11. அருமையான பதிவு நண்பரே,
    பதிவு முழுவதும்
    ஒவ்வொரு வரியையும் ஆர்வத்துடன்
    படித்தேன். தொடருங்கள்.

    ReplyDelete
  12. வேதா அவர்களே உங்கள் வாழ்த்துக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    நண்பர் வேல்கண்ணன் அவர்களே நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. இரத்தபடலத்திலும் கெளபாய் அத்தியாயம் வருகிறது போலிருக்கிறது. சுவாரஸ்யம் தான்..
    சிக்கிரம் லயனில் இரத்தபடலம் வர வேண்டும்...

    ReplyDelete
  14. நண்பர் சிவ், XIII சிறப்பு வெளியீடு தை மாதம் வெளியாகிவிடும் என டாக்டர் செவன் தகவல் தந்துள்ளார்,உங்கள் ஆசை நிறைவேறும் நாள் அதிக தூரத்தில் இல்லை, வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  15. காதலரே,

    உங்கள் பதிவுகளை வரிசையாக படிக்க எத்தனித்த போது தான் கவனித்தேன். இந்த XIII விமரிசன தொடர் பதிவின் ஆரம்பம், உங்களின் 50 வது பொன் விழா பதிவென்று. மற்றவர்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம், ஆனால் நானும் தவறலாகாது... பிடியுங்கள் பாராட்டை.

    சோம்பேறிதனமாக மாதம் இரண்டு ஒரு பதிவுகள் இட்டு விட்டு, 50 வது பதிவிடும் போது நான் செய்த ஆர்பாட்டத்திற்கு நடுவே, கவனம் சிதறாமல் உங்கள் விமர்சன மழைகளை கொட்டி பிரபலபடுத்தாமல் கொண்டாடும் உங்கள் பாணி அலாது.

    உங்கள் பதிவு வேகத்தில் 100வது பதிவு விரைவில் எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன். அடித்து பட்டையை கிளப்புங்கள்.

    பி.கு.: XIII பதிவை முழுவதும் படித்து விட்டு பதிவு சார்ந்த கருத்தை மீண்டும் வந்து இடுகிறேன்.

    ReplyDelete
  16. ரஃபிக், உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே, உங்கள் பாராட்டில் நியாயப் படை ஆசிரியரிற்கும் பங்குண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete